மரமேந்தும் மழைத்துளி

This entry is part 20 of 18 in the series ஹைக்கூ

月はやし
梢は雨を
持ちながら

ட்சுகி ஹயாஷி
கோசுயே வா ஆமெ வொ
மோச்சினகரா

நிலவு விரைகிறது
கிளைகள்
மழையைச் சுமந்தபடி

கவிஞர் மட்சுவோ பாஷோ (1644-1694)

சித்திரம் வர்த்தமான்

நகரமாக இருப்பினும் கிராமமாக இருப்பினும், மழை ஓர் அனுபவம்.

பள்ளி மாணவர்களாக நாங்கள் இருந்தபோது மழை பொழிந்து ஓய்ந்த பின் தெருவுக்கு வருவோம். சாலையோரத்து மரங்களின் இலைகளில் மழை நீர் தங்கியிருக்கும். யாராவது ஒரு மாணவனுடன் உரையாடி அவனுடைய கவனத்தைத் திருப்பி, பேச்சு சுவாரசியத்தில் அவன் தன்னையும் அறியாமல் நடந்து வரும் அவன் மரத்தின் கீழே வந்ததும், சட்டென அனைவரும் அவனை விட்டு விலகித் துள்ளியோடி, ஓடும் வேகத்தில் அவனுக்கு மேலே இருக்கும் கிளையை இழுத்துவிட்டுச் செல்வோம். எங்களுக்கும் ஆடை சிறிது நனையுமென்றாலும், பேச்சு சுவாரசியத்தில் சில நொடிகள் நடுவில் நின்ற நண்பனின் ஆடை முழுதும் இலையிலிருந்து விழும் மழை நீரால் நனையும். ஒரு நொடி கொல்லெனச் சிரித்துப் பின் கோபமும் முறைப்புமாக அவன் தன்னுடைய வாய்ப்பிற்குக் காத்திருப்பான். 

இந்த விளையாட்டின்போது, எங்களுக்கு பாஷோவின் மரங்கள் மழைத்துளியை ஏந்தியதும் தெரியாது, வைரமுத்துவின் இலைகள் சிந்தும் துளிகளின் அழகும் தெரியாது. கவிதைகளை அறியாத வயதில் மழையில் ஆடியது கவிதைகளாக மனதில் தங்கிவிட்டது. 

மழையும் மழை பொழியும் நாளில் மரங்களும் கவிஞர்க்கு இரட்டைக்குழல், ஒன்றுடன் ஒன்று இணைந்தும் இருக்கும், தனித்தனியாகவும் இயங்கும். மழையுடன் இன்னொன்றை இணைத்து ஓவியமாகக் கவிதை தன்னைத் தான் வரைந்து கண் முன்னே விரியும். 

மழை ஓய்ந்த முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்

அப்துல் ரகுமான்

ஒரு மரம் அப்போது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

வைரமுத்து

மழை பெய்யாத நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
திலகவதி டீச்சர்

நா. முத்துக்குமார்

பாஷோவின் இந்த ஹைக்கூவுக்கு நெருக்கமாக,

‘மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு’ – வைரமுத்து.

மழைத்துளிகள் தெறிக்காமல் எந்தக் கவிஞரும் கவிதைகள் எழுதுவதில்லை. காகிதத்தை ஒருமுறை நனைத்து, வாசிக்கும்போதெல்லாம் நனைத்துக்கொண்டே இருக்கும் கவிதைகள் உள்ளன. மழையை ரசிக்கும் கவிதைகளுடன் சேர்த்து, ‘கூரையும் சுவரும் எனக்கிருந்தால் நானும் மழையை ரசிப்பேன்’ என்னும் ஓர் உருதுக் கவிதையும் மழைத்துளியுடன் கண்ணீரைக் கலக்கின்றது.

கவிஞர்களின் பார்வைகள் மழையை வெவேறாகக் காட்டுகின்றன. ஒரே மழை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாகப் பொழிகிறது. அப்துல் ரகுமானுக்கு விட்டில்கள் நினைவுக்கு வருகின்றன, வைரமுத்துவுக்கு மழை மரமனுப்பும் தண்ணீர் விழுதாகத் தெரிகிறது, நா. முத்துக்குமாருக்கு மழையில்லா நாள்களிலும் குடையுடன் வரும் டீச்சர்.

இந்த ஹைக்கூவில் பாஷோ, நிற்கும் மழைத்துளிகளைத் தந்த மழை நிலவினை நகரவைப்பதைப் பார்க்கிறார். நிலவு நகர்வது அறிவியல் உண்மை, ஆனால் நிலவு பரபரப்பாக நகர்வதைக் காண ஒரே வழி இரவு முழுதும் நிலவை அசைபடமெடுத்துப் பின்னர் வேகமாக ஓடவிடுவதுதான். பாஷோவின் காலகட்டத்தில் பரபரப்பாக நிலவு நகர்வதைப் பார்த்திருக்க முடியுமா? அவர் கவிஞர், பார்க்கிறார்.

‘விரையும் நிலவு’

இரவில் தெளிந்த வானத்தில் தெரியும் நிலவு நகர்வதில்லை. அறிவியலின் அடிப்படையில் நிலவு நகர்வதைச் சொல்வதாக ஏற்பினும், கவிஞன் தெளிந்த வானத்தில் நிலவைப் பார்க்கையில் அதன் நகர்வுடன் தொடர்புள்ள வேறொன்றைக் கவிதையில் சொல்லாமல் நிலவு நகர்வதை மட்டும் அறிவியலைத் துணைக்கழைத்துச் சொல்ல வாய்ப்பில்லை. விரையும் நிலவெனச் சொன்ன பின் மழைக்குச் செல்கிறார். நகர்தலையும், நகராமல் இருப்பதையும் அடுத்தடுத்து காட்சிப்படுத்தும் இந்த ஹைக்கூவில், நிலவு நகர்வதாக பாஷோ சொல்வது, வரிகளில் இல்லாத இன்னொன்றையும் காட்சிப்படுத்துகிறது.

அது மேகம்.

மழை பொழிந்த பின்னர் வானத்தில் மேகங்கள் கலைகின்றன, நகர்கின்றன. அதன் பின்னால் இருக்கும் நிலவு விரைவது போன்ற தோற்றத்தை மேகங்கள் உண்டாக்குகின்றன. அதைக் கவிஞர் காட்சிப்படுத்தினார் என்பது ஒரு பார்வை.

அறிவியல் பார்வையில், நிலவும் விரைவதுதான்.

பாஷோ, நகரும் நிலவையும் நகராமல் மரத்தில் தங்கிவிட்ட மழைநீரையும் அடுத்தடுத்துக் குறிப்பிட்டது அவற்றுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைக் காட்சிபடுத்துகிறது.

அதே மழை, அதே பார்வை, அதில் நகரும் மேகத்தால் நகர்வது போல் தோன்றும் நிலவு, நகராமல் மரத்தில் தங்கிவிட்ட மழைத்துளிகள். இந்த வேறுபாட்டை வலியுறுத்திக் காட்டுவதற்கு மரங்கள் ஏந்தியிருக்கும் ஜப்பானியச் சொல்லுடன் காலத்தைக் காட்டும் ‘நகர’ என்னும் சொல்லையும் இணைக்கிறார். நகர என்னும் ஜப்பானியச் சொல் ‘போது’, ‘ஆக’ ‘நேரத்தில்’ போன்ற பொருளைக் குறிக்கும்.

மலரைக் காண்பது, நிலவைக் காண்பது இவை ஜப்பானிய மரபுகள். பாஷோ நிலவைக் காண்பதற்காக மேற்கொண்ட ‘கஷிமா’ பயணத்தில் இந்த ஹைக்கூவை எழுதினார். பாஷோ சென்ற காலகட்டத்தில் அது ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற நகரம்.

இதன் முதல் அடியில் உள்ள காஞ்சி வரி வடிவம் 月 ட்சுகி, இதனை விரித்து ஹிராகனா வடிவில் எழுதினால் つ ட்சு, きகி. இது நிலவைக் குறிக்கும். ஹைக்கூவின் இலக்கணத்துக்கான ஒலிப்பில் ட்சு つ என்பது ட் + சு என இரண்டு எழுத்துகளின் கூட்டொலியாக இருப்பினும் அரிச்சுவடியின்படி இது ஓர் எழுத்தாகவே கணக்கிடப்படும். அடுத்த சொல் はやし ஹயாஷி, は ஹ, や யா, し ஷி. இது இக்கால மொழி வழக்கில் வனம், குடும்பப் பெயர், ஓர் இசைக்கருவி எனப் பலவற்றைக் குறிப்பிட்டாலும், அன்றைய இலக்கிய மொழி வழக்கில் இயக்கத்தைக் குறிப்பிடும் சொல்லாக இருந்தது. பாஷோவும் ஹயாஷியை இன்னொரு ஹைக்கூவிலும் பயன்படுத்தியுள்ளார். ‘மழைத்துளிகளை ஏந்திக்கொள்ளும் மோகாமி நதி’ என்னும் ஹைக்கூவில் ஹயாஷி இதே, ‘விரையும்’ என்னும் பொருளைக் குறிப்பிடும்.

月 – つき – ட்சுகி, はやし – ஹயாஷி. நிலவு விரையும்.

ஹைக்கூவின் இரண்டாவது அடியில் 梢は雨を இரண்டு காஞ்சி வரிவடிவங்கள் உள்ளன. 梢 கோசுயே. இதனை விரித்து ஹிராகனாவில் எழுதினால் こ கோ, ず சு(z), え (ஏ). மரவுச்சி அல்லது கிளையின் நுனி. は ஹா, வா என இடத்துக்கு ஏற்றாற்போல ஒலிக்கும். இது இங்கு இடைச்சொல்லாக ‘வா’ என ஒலிக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘நான் ஆசாத்’ என்பதை ஜப்பானிய மொழியில் ‘வாதஷி வா ஆசாதோ’ எனச் சொல்வர். வாதாஷி – நான், வா – இடைச்சொல். போலவே இந்த ஹைக்கூவில் கோசுயே வா = மரவுச்சி, மரக்கிளை. 雨 – あ ஆ, め மெ. ஆமெ – மழை. を வோ – ‘ஐ (யை).

梢は雨を – こずえはあめを – கோசுயேவா ஆமெவோ – மரவுச்சியில் மழையை.

மூன்றாவது அடியில், 持ちながら, இதுவும் இரண்டு சொற்களைக் கொண்ட அடி. மோச்சி + நகரா. நகராவுக்கும் காஞ்சி உண்டெனினும் இங்கு அது முழுதும் ஹிராகனாவால் எழுதப்படுகிறது. 持 – も மோ ちச்சி – மோச்சி, இது காஞ்சியும் ஹிராகனாவும் இணைந்தே ஒலிக்கும் சொல். மோச்சியின் பொருள் கொள்தல், பெறுதல், வைத்திருத்தல், உரிமையுள்ளவர் இப்படியாக. நகரா な ந, が க (ga), ら ரா. நகரா – இருப்பினும், ஆனாலும், போது இப்படியாகப் பொருள்படும். இங்கு போது எனும் பொருளில் ஒலிக்கிறது.

持ちながら – もちながら – மோச்சினகரா – வைத்திருந்தபோது.

வார்த்தைக்கு வார்த்தை மொழி மாற்றினால்,

நிலவு விரையும்
மரக்கிளையில் மழையை
வைத்திருந்தபோது

ஹைக்கூவை உள்வாங்கி மொழிமாற்றினால்,

நிலவு விரைகிறது
கிளைகள்
மழையைச் சுமந்தபடி

மழையால் பரபரப்பான வானம், மழை முடிந்த பின் அமைதியாக மரம் ஏந்தி நிற்கும் மழைத்துளிகள் இவை இரண்டுக்கும் இடையேயுள்ள நேரெதிர்த் தன்மைச் சுட்டி, நகர்தலையும் தேக்கத்தையும் அருகருகில் வைத்து இயற்கையைக் காட்சிப்படுத்திய ஹைக்கூ.

ஹைக்கூ

தும்பியின் பிம்பம்

Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.