பயம், பிரமை, பசி, ஆச்சரியம், கலவர முயற்சி, நம்பிக்கை இழப்பு என மனித உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தப் போராட்டமாக இருந்த அந்த 33 நாட்கள், கொலம்பஸின் முதல் கடற்பயணத்தை உலக வரலாற்றில் மிக முக்கியமானதாக மாற்றியது.
கப்பலில் இருந்த இளம் ஊழியர்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் கடந்து வந்த தொலைவைக்கணக்கிடும் மணல் கடிகாரத்தைத் தலைகீழாகத் திருப்ப வேண்டும். நடுக்கடலில் பயத்திலும் சோர்விலும் இருந்த ஊழியர்கள், சில நேரங்களில் மணல் முழுமையாகக் கீழே விழுவதற்கு முன்பே அவசரமாகத் திருப்பிவிட்டனர், அல்லது தூங்கி வழிந்துவிட்டுத் தாமதமாகத் திருப்பினர். இதனால், கொலம்பஸ் கணக்கிட்ட கப்பலின் வேகம் மற்றும் தூரம் அவரது பொய்க்கணக்கையும் தாண்டி இன்னும் மோசமாகியது.
அக்டோபர் முதல் வாரத்தில் மாதக்கணக்கில் நிலமே பார்ர்க்காமல் இருந்த மாலுமிகளின் கோபம் எல்லை மீறியபோது, கப்பலைச் சுற்றி ஒரு புதிய விசித்திரத்தைப் பார்த்தார்கள். வானத்தில் Frigatebirds என்னும் கப்பற் பறவைகளும் Boobies எனப்படும் கடல் பறவைகளும் கூட்டம் கூட்டமாகத் தோன்றின.
ஆனால், அவை சும்மா பறக்கவில்லை; கடலின் மேற்பரப்பில் துள்ளிக் குதித்த பறக்கும் மீன்களை காத்திருந்து, காற்றில் வைத்தே வேட்டையாடிக் கொண்டிருந்தன. இந்த வான்வழி வேட்டையைக் கப்பல் தளத்தில் இருந்து மாலுமிகள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
விண்கல் விழுந்தபோது “சாபம்” என்று பயந்த அதே மாலுமிகள், இந்தப்பறவைகளின் வேட்டையைப் பார்த்தபின், “நிலம் மிக அருகில் இருக்கிறது” என்று மனமாற்றம் அடைந்தனர். இது கொலம்பஸின் மீதான கொலைவெறியைக் கணிசமாகக் குறைத்தது. ஆனால் அந்தப்பறவைகள் கரைக்குச் செல்லாமல் வாரக்கணக்கில் கடற்பரப்பில் வாழ்பவை; அவை திடீரெனத் தென்படுவது கரை அருகில் இருப்பதன் அறிகுறியல்ல என்று கொலம்பஸுக்குத் தெரிந்திருந்தது. அதை அவர் யாரிடமும் அப்போது சொல்லவில்லை.
பயணத்தின் கடைசி ஒரு வாரம் கொலம்பஸ் கிட்டத்தட்ட தூங்கவே இல்லை. மாலுமிகள் எந்த நேரத்திலும் தன் கழுத்தை அறுத்துவிட்டு கப்பலைத் திருப்பலாம் என்ற பயம் அவருக்குள் இருந்தது.

கொலம்பஸ் கப்பலின் மேல் தளத்தில் நின்றுகொண்டு, இரவு முழுவதும் இருண்ட கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். மாலுமிகள் அவரிடம் வந்து, “திரும்பிப் போய்விடலாம்” என்று கெஞ்சியபோதும், வற்புறுத்தியபோதும் அவர் ஒற்றைக் காலில் நின்றார். அவரது இந்த அசாத்தியமான பிடிவாதமும், “இன்னும் சில நாட்களில் நாம் நிலத்தையும் தங்கப் புதையலையும் அடைவோம்” என்று அவர் மாலுமிகளுக்குக் கொடுத்த பேராசையும்தான் அந்த 33 நாட்களைக் கடக்க உதவியது. ஆனால் கப்பலில் பதற்றம் நொடிக்கு நொடிக்கு அதிகரித்து அனைவரும் கொந்தளிப்பும் அச்சமுமாக வன்முறையில் இறங்கத் தயாராக இருந்தனர்.
கொலம்பஸ் மிகவும் ஆபத்தான, வெடிக்கக் காத்திருந்த அந்தப் பதற்றமான சூழ்நிலையை சாமர்த்தியமாக கையாண்டு அமைதிப்படுத்த்தினார். அவர்களுடன் ஒரு பேரத்தை முன்வைத்தார். ’’மூன்றே மூன்று நாட்கள் எனக்கு அவகாசம் தாருங்கள் அதற்குள் நாம் நிலத்தைக் காணவில்லையெனில் நாம் ஸ்பெயினுக்கு உறுதியாக திரும்பிச்செல்லலாம், எனக்கு தேவன் மூன்று நாட்களில் நிலத்தை காண்பிப்பதாகச் சொல்லி இருக்கிறார்’’ என்று கொலம்பஸ் மாலுமிகளிடம் வாக்களித்தார் .
இந்த இடத்தில் நாம் கொலம்பஸின் மத நம்பிக்கையைப் பார்க்கவேண்டும். கிறிஸ்டோஃபர்’ (Christopher) என்ற கிரேக்கப் பெயரின் நேரடிப்பொருள் “கிறிஸ்துவைத் தாங்கிச் செல்பவர்” (Christ-bearer) என்பதுதான்.
கொலம்பஸ் தன் வாழ்நாளின் பிற்பகுதியில் தன் பெயரின் இந்த அர்த்தத்தை மிகவும் தீவிரமாக நம்பத் தொடங்கினார். தான் வெறும் ஒரு கடலோடி மட்டுமல்ல, கத்தோலிக்கக் கிறித்தவ மதத்தைப் பரப்பவும், ஆசியாவில் உள்ள மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு “தூதுவர்” என்றே தன்னை அவர் கருதினார். கடிதங்கள் எழுதுகையில் தனது பெயரைக் குறிப்பிடாமல் “Christo_Ferens”-Christ-bearer என்றே கையெழுத்திட்டார்.
கொலம்பஸின் கிறிஸ்தவ நம்பிக்கை ஒரு கட்டத்தில் தீவிரமான மதவெறியாக மாறியது. தான் இந்தத் தேடலின் மூலம் ஈட்டும் தங்கம் மற்றும் செல்வத்தைக் கொண்டு, முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த புனித நகரமான ஜெருசலேமை மீண்டும் கிறித்தவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒரு மாபெரும் சிலுவைப் போரை நடத்த வேண்டும் என்று ஸ்பானிஷ் அரச குடும்பத்திற்கு அவர் தொடர்ந்து கடிதங்கள் எழுதினார்.
தனது இறுதிக்காலத்தில் அவர் எழுதிய ’தீர்க்கதரிசனங்களின் நூல்’ என்னும் புத்தகத்தில், (The Book of Prophecies) விவிலியத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றவே கடவுள் தன்னை உலகத்தை வலம் வரச் செய்தார் என்றும், உலகம் அழியப்போகும் முன் கிறிஸ்தவம் உலகம் முழுவதும் பரவத் தான் ஒரு கருவி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப்பயணத்திலும் சாண்டா மரியா உள்ளிட்ட மூன்று கப்பல்களிலும், அவர் பிரார்த்தனைகளை ஒரு கத்தோலிக்க தேவாலயத்திற்கு இணையாகவே அன்றாடம் நிகழ்த்தினார். விடியற்காலையின் இளங்கதிர் கண்ணுக்குத் தெரிந்ததும், மணல் கடிகாரத்தைக் கண்காணிக்கும் இளம்பயணிகள், கத்தோலிக்கத் திருச்சபையில் 12-ம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் இருந்த, கன்னி மரியாளைப் போற்றிப் பாடும் மிகப்புகழ்பெற்ற “Hail, Holy Queen” என்னும் பாடலை உரக்கப் பாட வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். அதன்படியே பாடப்பட்டது. அந்தி சாயும் வேளையில் கப்பலின் அனைத்துப் பயணிகளும் மேல் தளத்திற்கு வந்து கூடி நின்று “The Hail Mary” எனும் மரியாளுக்கான ஜெபத்தைச் செய்ய வேண்டும். பின்னர் அதைத் தொடர்ந்து “The Lord’s Prayer” என்னும் பிதாவுக்கான ஜெபமும், தொடர்ந்து பல கீர்த்தனைகளும் பாடப்படும்.
கன்னிமரியாளுக்கான அந்தப்பாடல் புயல் வீசிய, கடல்கொந்தளித்த பல நாட்களில் கப்பலில் அமைதியையும் நம்பிக்கையையும் மீட்டுக்கொண்டு வந்தது என கொலம்பஸ் பிற்படு எழுதியிருந்தார்.
எனவே, மாலுமிகளின் கிளர்ச்சியைத் தடுக்க மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு அவர் தற்காலிகமாக அடக்கியது, ‘மூன்று’ என்ற எண் கிறித்தவக் கோட்பாட்டில் மிக முக்கியமானது என்பதால்தான் எனப் பிற்பாடு வரலாற்றாய்வாளர்கள் கருதினார்கள் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் திரித்துவம் மற்றும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது). கடவுள் தன்னை நிச்சயம் கைவிட மாட்டார், இந்த மூன்று நாட்களுக்குள் அற்புதத்தைக் காட்டுவார் என்று கொலம்பஸ் நம்பினார். அவருக்கும், உயிர் பயத்தில் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்த மாலுமிகளுக்கும் இடையில் இந்தக் கிறிஸ்தவ நம்பிக்கை மட்டுமே ஒரு கவசமாக இருந்து கொலம்பஸை காப்பாற்றியது.

அந்த நாட்களில் கொலம்பஸ் ஒரு கப்பல் தலைவராக இல்லாமல், கிறிஸ்தவ மதப்போதகராகவே இருந்தார். பதற்றத்தில் இருந்த பயணிகளிடமும் மாலுமிகளிடமும், “ஒருபோதும் தேவன் தன்னை நம்பினோரைக் கைவிட மாட்டார்; நாம் யாரும் கடலில் உயிரிழக்கப் போவதில்லை; இந்தக்கடற்பயணமே தேவனால் ஒருங்கிணைக்கப்பட்டது” என மீள மீளச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அந்த 3 நாள் பேரம் முன்வைக்கப்பட்ட பின்னர் நம்பமுடியாத அளவுக்கு இயற்கையும் அவர்களுக்கு சாதகமாகவே நடந்துகொண்டது.
கொலம்பஸின் கப்பற்படை நேராக மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த அக்டோபர் 7-ம் தேதி மாலை, ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. வானில் பெரிய பறவைக் கூட்டங்கள் தென்மேற்கு திசையை நோக்கிப் பறந்து செல்வதைக் கொலம்பஸ் கவனித்தார்.
அந்தப் பறவைகள் குளிர்கால இடப்பெயர்வுக்காகப் பறக்கின்றன என்பதையும், அவை நிச்சயம் நிலத்தை நோக்கித்தான் செல்கின்றன என்பதையும் யூகித்த கொலம்பஸ், உடனே தனது பயண திசையை மேற்கிலிருந்து, தென்மேற்கு நோக்கி மாற்றினார்.
நிச்சயமாக நிலம் இருக்கும் திசை நோக்கித் தங்களை வழிநடத்தவே தேவன் அந்தப் பறவைக்கூட்டத்தை அனுப்பியிருப்பதாக அவர் நம்பினார். அதை மூன்று கப்பல்களில் இருந்தவர்களுக்கும் அறிவித்தார்.
வரலாற்றாசிரியர்கள், ஒருவேளை கொலம்பஸ் அன்று தனது திசையை மாற்றாமல் நேராகவே மேற்கு நோக்கிச் சென்றிருந்தால், அவர் முதலில் அமெரிக்காவின் மிக ஆபத்தான, பலமான எதிர்க்காற்றும் கொந்தளிக்கும் கடலலைகளும் கொண்ட புளோரிடா கரையை அடைந்திருப்பார் எனக் கருதுகின்றனர். அப்படிச்சென்றிருந்தால் அவரது கப்பல்கள் அங்கு உடைந்திருக்கலாம் அல்லது காற்றின் கட்டற்ற விசையினால் அறியாத திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். ஆனால், பறவைகளைப் பின்தொடர்ந்ததால் அவர் பாதுகாப்பான பகாமாஸ் தீவுகளுக்குச் சென்றடைந்தார்.
அக்டோபர் 11 அன்று பிண்டோ கப்பலிலிருந்து வீசப்பட்ட வலையில் உள்ளீடற்ற, கணுக்கள் கொண்ட கரையோரம் வளரும் நாணலின் தண்டைப்போன்ற ஒரு நீளமான குச்சியும் மனிதர்களால் செதுக்கப் பட்டது போன்ற ஒரு மரக்கட்டையும் கிடைத்தது. அதே நாளில் நினா கப்பலில் இருந்தவர்கள் காட்டுப்பழங்கள் செறிந்த ஒரு கொடியால் சூழப்பட்டு மிதந்து வந்த ஒரு கட்டையை தூரத்தில் பார்த்தார்கள். மரங்கள் அருகிலிருக்கின்றன நிலத்தை அணுகிக்கொண்டிருக்கிறோம் என்று அனைவருக்கும் நம்பிக்கை உண்டானது.

(பிற்பாடு அந்த கொடிகள், கனிகள் சூழ மிதந்த கட்டை Coccoloba uvifera என்னும் கடற்கரைகளில் வளரும் கடல்திராட்சை மரத்தினுடையதாக இருக்கலாம் என்று தாவரவியலாளர்கள் கருதினர்.)
பசி, தாகம், மர்ம ஓசைகள், பறவைகளின் வேட்டை, மற்றும் கெட்டுப்போன நீர் என எல்லாமே ஏதோ ஒரு வகையில் கப்பல்களை சூழ்ந்திருந்தாலும், அத்தனை இக்கட்டுகளையும் தாண்டி எதோ ஒரு சக்தி கொலம்பஸை அக்டோபர் 12-ம் தேதி வரலாற்றுப் பக்கங்களில் கொண்டு போய் சேர்த்தது!
வானியல், இயற்பியல், கடல்சார் உயிரியல் என அனைத்தும் சேர்ந்து கொலம்பஸையும் அவரது மாலுமிகளையும் மாறி மாறிச் சோதித்தன. ஒரு சாதாரண மனிதனாக இருந்திருந்தால் இந்த விசித்திரங்களின் பயத்தாலேயே கப்பலைத் திருப்பியிருப்பான். ஆனால், கொலம்பஸின் அசாத்தியமான பிடிவாதமும், சாமர்த்தியமான பொய்களும்தான் வரலாற்றை மாற்றியமைத்தன!
அக்டோபர் 11 அன்று இரவு 10 மணிக்கு (நிலம் பார்ப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு), கொலம்பஸ் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு விசித்திரமான ஒளியைக் கண்டார். அது ஒரு சிறிய மெழுகுவர்த்தி அல்லது தீப்பந்தந்தின் ஒளி அலை அலையாக ஏறி இறங்குவது போலத் தெரிந்தது.
அவர் உடனே தன் அருகில் இருந்த பெட்ரோ குட்டிரெஸ் (Pedro Gutiérrez) என்பவரைக் கூப்பிட்டுக் காட்டினார். அவரும் அதை ஆமோதித்தார்.
இது பிற்காலத்தில் பெரிய விவாதப் பொருளானது. பகாமாஸ் தீவில் இருந்த பூர்வகுடிகள் யாராவது கரையில் பந்தம் ஏந்தியிருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால், கப்பல் அப்போது இருந்த தூரத்திற்கு அங்கிருந்து அக்காட்சி தெரியவரச் சாத்தியமில்லை என்றும், அது கடலில் ஒளிரும் ஒருவகை உயிரொளிரும் மிதவை உயிரிகளாக இருந்திருக்கலாம் (Bioluminescent plankton) அல்லது மாலுமிகளின் பிரம்மையாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அக்டோபர் 11 அன்று இரவு நிலவு வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக ஒளிர்ந்தது. கடைசி இரவாதலால் அன்றைய இரவுப் பிரார்த்தனை மிக உணர்ச்சிகரமாகக் கண்ணீருடன் நடந்தது. மற்ற இரு கப்பல்களுக்கும் முன்பாக வேகமாகச் சென்றுகொண்டிருந்தது ‘பிண்டா’ கப்பல். ஒவ்வொரு நாளும் இரவிலும் பகலிலும் அக்கப்பலில் சுழற்சி முறையில் தூரத்தில் நிலம் தெரிகிறதா எனப் பார்க்க ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அக்டோபர் 12 அதிகாலை 2 மணிக்கு பிண்டா கப்பலின் உயரமான பகுதியில் நின்று நிலம் கண்ணுக்கு தெரிகிறதா என்று சுழற்சி முறையில் அன்று கவனிக்க வேண்டியவரான டிரையானா (Rodrigo de Triana) கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த இருட்டிலும் வெகுதூரத்தில் நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்த மணற்குன்றுகளைக் கொண்டிருந்த தீவைக்கண்டு அடிவயிற்றிலிருந்து உரக்க “¡Tierra! ¡Tierra!” என்று கூவினார்.
Tierra! என்றால் ஸ்பெனிஷ் மொழியில் நிலம் என்று பொருள். 33 நாட்களாக நிலத்தைக் காணாமல் அவநம்பிக்கையுடன் உயிரச்சத்தில் இருந்த கப்பல்பயணியர்களுக்கு அவரது அந்தக் கூச்சல் மயிர்கூச்செரியச்செய்தது. உலக வரலாற்றை மாற்றியமைத்த கூச்சல் அது. (அன்று அவர் கண்டது இன்றைய பஹாமா தீவின் ஒரு பகுதியைத்தான்)
உடனே பிண்டாவிலிருந்து மற்ற இருகப்பல்களுக்கும் நிலம் தென்பட்டதையும் வெற்றியையும் அறிவிக்கும் பீரங்கி இயக்கப்பட்டு அந்த முழக்கம் அனைவரின் வயிற்றிலும் பாலை வார்த்தது.
இப்படி பசி, தாகம், திசைகாட்டி காட்டிய பொய், விண்கல் பயம், முட்டாள்தனமான கணக்குத் தப்பு என எல்லாவற்றையும் தாண்டி, அக்டோபர் 12 அதிகாலை 2 மணிக்குக் கிடைத்த அந்த ஒற்றைக் குரல்—”Tierra, Tierra!”—அவர்களை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டது! கொலம்பஸ் முழந்தாளிட்டு உடனே ஒரு பிரார்த்தனையைச் செய்தார்
முதன்முதலாக நிலத்தைக் கண்ணில் பார்த்த டிரையானாவுக்கு (Rodrigo de Triana) பெர்டினாண்ட் அரசரும் அரசி இஸபெல்லாவும் அதற்குப் பரிசாக வருடத்திற்கு 10 ஆயிரம் மரவேடிகள் (Maravedis – ஸ்பானிய நாணயம்) அவருக்கு வாழ்நாள் முழுவதும் அளிக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். அக்காலத்தில் உயிரைப் பணயம் வைத்து கடல் பயணம் செய்யும் மாலுமிகளுக்குக்கூடவருடத்திற்கு 12 ஆயிரம் மரவேடிகள் மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கையில், டிரையானாவின் இந்தப் பரிசு அவருக்கு மாபெரும் பொருளாதாரப் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. டிரையானாவுக்கு ஒரு சல்லிக்காசுகூடப் பரிசாக அளிக்கப்படவில்லை.
ஏனெனில் முந்தின நாள் இரவு 10 மணிக்கே தான் மிக மெலிதாகக் கண்ட அந்தத் தீபந்தத்தின் ஒளிதான் நிலத்தைக் கண்டதற்கான முதல் அறிகுறி என்று வாதிட்ட கொலம்பஸ், அந்த உதவித்தொகையைத் தனக்கே பெற்றுக்கொண்டார். கொலம்பஸ் யார் என்பதை உலகிற்கு அவரது முதல் பயணத்திலேயே சுட்டிக்காட்டிய நிகழ்வு இது.
கடல் பயணங்களால் மிகுந்த செல்வந்தராகிவிட்ட கொலம்பஸின் பேராசைக்கு உதாரணமாக இது வரலாற்றாய்வாளர்களால் பலவாறாகக் கண்டிக்கப்பட்டுக் குறிப்பிடப்பட்டது.
வரலாற்றில் இவர் ‘ரொட்ரிகோ டி ட்ரியானா’ என்று அறியப்பட்டாலும், இவரது உண்மையான பெயர் ஜுவான் ரோட்ரிக்ஸ் பெர்மெஜோ (Juan Rodríguez Bermejo). செவில்லி நகரின் ‘ட்ரியானா’ என்ற கடலோரப் பகுதியில் வசித்ததால், கப்பல் குறிப்பேடுகளில் இவர் “ட்ரியானாவைச் சேர்ந்த ரொட்ரிகோ” என்று குறிப்பிடப்பட்டார்.
உலக வரலாற்றை இரண்டாகப் பிரித்த அந்தப் புகழுக்கு உரியவரான டிரையானா, கொலம்பஸின் இந்தத் துரோகத்தால் மனமுடைந்து ஐரோப்பாவிலிருந்து முற்றிலுமாக வெளியேறி, வடக்கு ஆப்பிரிக்காவில் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்து மறைந்தார். அந்தக் கணத்திலிருந்து அவர் கிறித்துவின் மீது இருந்த நம்பிக்கையையும் இழந்திருந்தார். உலகெங்கிலும் ட்ரியானா கப்பலிலிருந்து கை நீட்டி ‘நிலம் நிலம்’ என்று கூவும் வடிவிலான சிலைகள் பல இடங்களில் அவர் புகழைச்சொல்லிக்கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன.
கூகுள் மேப்பையும் ஜிபிஎஸ்ஸையும் கையில் வைத்துக் கொண்டு பயணிக்கும் நாம் இப்போது யோசித்துப் பார்த்தால், அது வெறும் 33 நாள் வரலாற்றுக் கடற்பயணம் போலத் தோன்றும். ஆனால், 1492-ல் மரப் பலகைகளால் ஆன ஒரு சிறிய கப்பலில், சுற்றிலும் எல்லையற்ற கருக்கிருட்டு, குடிக்கப் புழுப்பிடித்த தண்ணீர், திசைகாட்டாத காம்பஸ், வானில் இருந்து விழும் விண்கற்கள், அமானுஷ்ய ஒலிகள் என எப்போது சாவு வரும் என்று தெரியாத அச்சம் நிரம்பிய அந்தச் சூழலில், 33 நாட்கள் வாழ்ந்திருப்பது என்பது நினைத்துப் பார்க்கவே நெஞ்சை உலுக்குகிறது!
அந்த மாலுமிகளின் பயமும், தன் உயிர் போகப்போகிறது என்று தெரிந்தும் “இன்னும் மூன்று நாட்கள்” என்று கொலம்பஸ் ஆடிய அந்தச் சூதாட்டமும், மனித மனதின் உச்சக்கட்ட பிடிவாதத்திற்கும் துணிச்சலுக்கும் ஒரு சான்று.
கொலம்பஸின் மிகப்பெரிய அறிவியல் தவறு, பூமியின் அளவை அவர் மிகச் சிறியதாகக் கணித்ததுதான். ஆனால் அந்தத் “தவறான கணக்கீடுதான்” அமெரிக்காவைக் கண்டுபிடித்தது!
நடுக்கடலில் காம்பஸ் ஊசி சரியான திசையயைக் காட்டாமல் விலகிச் சென்றது கருவியின் தவறோ அல்லது மந்திர மாயமோ அல்ல. பூமிக்கு என்று ஒரு காந்தப்புலம் இருப்பதையும், புவியியல் வடமுனை வேறு, காந்த வடமுனை வேறு என்பதையும் உலகம் அறிவதற்கு அந்த 33 நாட்கள் தான் அடித்தளமிட்டன. பின்னாளில் கடல்சார் அறிவியலில் ‘Magnetic Variation’ என்று அழைக்கப்படும் இந்த விதியைக் கண்டறிய இதுதான் உதவியது.
அறிவியல் ரீதியாக கொலம்பஸ் ஒரு தோல்வியுற்ற, தவறுகள் நிறைந்த இரக்கமற்ற மனிதர். ஆனால், அந்தத் தவறுகளும் இரக்கமின்மையும் பிடிவாதமும்தான் உலக வரைபடத்தையே மாற்றி அமைத்தது.
33 நாட்கள் கடலில் தத்தளித்த மூன்று கப்பல்களும் அக்டோபர் 12 அன்று அதிகாலை தீவுக்கு அருகில் நங்கூரமிட்டு நின்றன, கப்பல்களின் பாய்கள் கயிறுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு தாழ்த்தி வைக்கப்பட்டன. மூன்று கப்பலிலும் இருந்தவர்கள் ஒன்று கூடி’தேவனே உம்மை போற்றுகிறோம் ’ என்னும் பாடலை ஆனந்தக்கண்ணீருடன் பாடினார்கள் (Thee, O God, We Praise). காலை வெளிச்சம் வந்ததும் அந்தப்புதிய நிலத்தில் கால்பதிக்க அனைவரும் காத்திருந்தனர்.
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.

படிக்க படிக்க விறுவிறுப்பு, அருமையான வரலாற்றுப் பதிவு. நன்றி. மேலும் கொலம்பஸ் பற்றிய புதிய தொடரை எதிர்பார்க்கிறேன்.