- கொலம்பஸ்
- கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்
- பிழைகளும் கொலைமுயற்சியும்!
- டியரா டியரா!
- கன்னித்தீவு
- மாயமான நாட்குறிப்பு
- கொலம்பஸும் கொலம்பியாவும்!
1492 அக்டோபர் 12-ல் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் கரீபியனில் கால் பதித்த நிகழ்வு, அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் மெல்ல மெல்ல ஒரு தேசியப் புராணமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் ஒரே நாளில், ஒரே நபரால் நிகழவில்லை. மாறாக அடுக்கடுக்காக, முதலில் நிகழ்ந்த வரலாற்று உண்மை, பின்னர் அதன் மீது படிப்படியாகச் சேர்க்கப்பட்ட கற்பனைக் கூறுகள், அதன் பின் அவற்றை உறுதிப்படுத்திய ஓவியங்களும் தேசியக் கொண்டாட்டங்களும் என தொடர்ந்து நடந்தது.
இந்த அத்தியாயத்தில், கொலம்பஸ் எப்படி அவரது மறைவுக்குப் பின்னர் ஒரு “வீர சாகசக்காரனாக’’ உருவாக்கப்பட்டார், அவரது பெயரிலிருந்து “கொலம்பியா” எனும் அடையாளம் எப்படித் தோன்றியது, ஆகியவற்றை காலவரிசைப்படி பார்க்கலாம்.
கொலம்பஸ் 1506-ல் இறந்தார். அவர் உயிரோடிருந்தபோது “வீர சாகசக்காரன்” என்றோ “தேசிய தந்தை” என்றோ அறியப்படவில்லை. உண்மையில், தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியில் ஸ்பானிய அரசவையில் செல்வாக்கை இழந்து, சர்ச்சைகளுக்குள்ளாகி, ஏமாற்றமடைந்த நிலையிலேயே அவர் இறந்தார். இந்த வீரப் புராணம் கட்டமைக்கப்பட்டது அவர் இறந்த பின்னர், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, படிப்படியாக, வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு நோக்கங்களுக்காக.
’நிலம் நோக்கித் தாழ்த்திய வாள்’ என்னும் ஓர் அரசியல் புனைவு

நவீன வரலாற்றுப் புத்தகங்களிலும் ஓவியங்களிலும், கொலம்பஸ் அமெரிக்க மண்ணில் கால் பதிக்கும்போது, ஒரு கையில் ஸ்பெயின் நாட்டின் கொடியையும், மறு கையில் தன் உடைவாளின் நுனியை நிலத்தை நோக்கித் தாழ்த்தி வைத்திருப்பது போலவும் அவரது தொப்பி அல்லது தலைகவசம் நிலத்தில் இருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அமெரிக்கா மற்றும் ஸ்பெயினின் தேசியச் சின்னமாகவே கொலம்பஸ் மாறிவிட்டிருந்த 1800-களில், அவரது தலைக்கவசமில்லாத தலையுடன் வாளை நிலத்தை நோக்கித் தாழ்த்தியிருக்கும் இச்சித்திரம் கலாச்சார ரீதியாக மிகப்பெரிய குறியீடாக மாறியது. இது பிற்காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் புனைவு. காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்:
- சமாதான(ம்) மற்றும் நாகரிகத்தின் குறியீடு: வாளை நிலம் நோக்கித் தாழ்த்திப் பிடிப்பதன் மூலம், கொலம்பஸ் பூர்வகுடி மக்களுக்குச் “சமாதானத்தையும்”, ஐரோப்பிய “நாகரிகத்தையும்” கொண்டு சென்ற ஒரு தூதுவர் எனக் காட்டப்பட்டார். (அவர் இனப்படுகொலையாளர் என்னும் உண்மை அதனடியில் எங்கோ ஆழத்தில் மறைந்திருந்தது)
- சட்டபூர்வ சடங்கு: வாளின் நுனியால் நிலத்தைத் தொட்டு, அந்நிலம் ஸ்பெயின் அரச குடும்பத்திற்குச் சட்டபூர்வமாகச் சொந்தம் எனப் பிரகடனப்படுத்துவதைக் கம்பீரமாகக் காட்ட இந்தச்சித்திரம் பயன்படுத்தப்பட்டது.
- மதப் பரப்புரையின் குறியீடு: கொலம்பஸ் பிடித்துள்ள வாள் தலைகீழான சிலுவையின் வடிவத்தை ஒத்திருக்கும்படியும் சில ஓவியங்களில் வரையப்பட்டு, அவர் ஒரு கிறித்தவ மதப் புனிதப் பயணி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.
ஆரம்பகால புகழுரைகள் (16-ம் நூற்றாண்டு)
கொலம்பஸின் சொந்த (இரண்டாவது) மகன் பெர்னான்டோ கொலோன் (Fernando Colón) எழுதிய Historia del Almirante என்ற வாழ்க்கை வரலாறு, தந்தையை மகிமைப்படுத்தும் நோக்கில் பல கற்பனைகளை சேர்த்து எழுதப்பட்டது. இதுவே பிற்கால எழுத்தாளர்களுக்கு (இர்விங் உட்பட) முதன்மை ஆதாரமாக இருந்தது. சில அறிஞர்கள் இந்த நூலின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகின்றனர். (பெர்நான்டோ கொலோன் ஸ்பெயினின் மிகபெரிய மிக அரிய நூல்கள் ஏராளமாக இருந்த தனிநபர் நூலகத்தை உருவாக்கியவர்.)
இந்த புனைவுருவாக்கத்தில் முரண்பாடான பங்காற்றியவர் நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்த பார்தலோமே தெ லாஸ் காசாஸ்தான். ஸ்பானியர்களின் கொடூரங்களை ஆவணப்படுத்திய முதல் நபர் இவர்தான் எனினும், கொலம்பஸை தனிப்பட்ட முறையில் புகழ்ந்து கற்பனையாக பலவற்றை எழுதி, அவரது “இனிமை மற்றும் நல்லெண்ணம்” பற்றியும், தன்னுடனிருந்தவர்களை பூர்வகுடிகளை அன்பாக நடத்தசொன்னார் என்றும் விதந்தோதி எழுதினார்.
“கொலம்பஸும் முட்டையும்” என்ற பிரபலமான கதையை முதன்முதலில் பதிவுசெய்தவர் ஜிரோலமோ பென்சோனி (Girolamo Benzoni, 1565). தன் கடற்பயணச் சாதனையைச் சிறுமைப்படுத்திய பிரபுக்களுக்கு முன், கொலம்பஸ் ஒரு முட்டையை நிமிர்த்தி நிற்க வையுங்கள் எனச் சவால் விட்டு, அனைவரும் தோற்றபின், முனையை மெதுவாக தட்டி உடைத்து முட்டையை நிமிர்த்தி வைத்துக் காட்டி “ஒருமுறை வழி தெரிந்தபின் எதுவும் எளிதுதான்” எனும் செய்தியை உணர்த்தினார் என்பதே கதை. ஆனால் இது ஒரு “பயணிக்கும் கட்டுக்கதை” அதாவது, (traveling legend) ஒரு பொதுவான கதைக்கரு, வெவ்வேறு பிரபலமான நபர்களின் பெயரில் மீண்டும் மீண்டும் இணைக்கப்படுவது.
1565-ல் பென்சோனி இதை கொலம்பஸின் பெயரில் பதிவு செய்வதற்கு 15 ஆண்டுகள் முன்பே, 1550-ல், ஜியோர்ஜியோ வசாரி இதே கட்டுக்கதையை கட்டிடக் கலைஞர் புருனெல்லெஸ்கி குவிமையம் அமைப்பது தொடர்பாக இதைச்செய்தார் என்று சொல்லியிருந்தார்.
வாஷிங்டன் இர்விங் — திருப்புமுனை

நாவலாசிரியர் வாஷிங்டன் இர்விங், 1828-ல் ஆங்கிலத்தில் முதல் முழுமையான கொலம்பஸ் வாழ்க்கை வரலாற்றை (A History of the Life and Voyages of Christopher Columbus) எழுதினார். ஆவணங்களில் இடைவெளிகள் இருந்த இடங்களில் இர்விங் தன் நாவலாசிரியத் திறமையால் கற்பனைக்காட்சிகளை உருவாக்கினார். எனவேதான் இது “வாழ்க்கை வரலாற்றுப் புனைவு” (fictional biography) என அழைக்கப்படுகிறது.
இர்விங்கின் நாவலில் சலமங்கா கற்பனைக் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது:
சலமங்கா என்பது ஸ்பெயின் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முக்கிய நகரமாகும். இங்கு அமைந்துள்ள ‘சலமங்கா பல்கலைக்கழகம்’ (University of Salamanca), ஐரோப்பாவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று..
15-ம் நூற்றாண்டில், வானியல், புவியியல், கணிதம் மற்றும் கத்தோலிக்க மதக் கோட்பாடுகள் ஆகியவற்றில் சிறந்த அறிஞர்களும் மதகுருமார்களும் நிறைந்த மையமாகச் சலமங்கா விளங்கியது.
1486-ம் ஆண்டில், கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா மற்றும் மன்னர் பெர்டினாண்ட் ஆகியோரைச் சந்தித்து, அட்லாண்டிக் பெருங்கடல் வழியே ஆசியாவிற்குச் செல்லத் தனக்கு நிதியுதவி மற்றும் கப்பல்களைத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். மன்னரும் அரசியும் கொலம்பஸின் திட்டம் சாத்தியமானதா என்பதை ஆராய, சலமங்கா பல்கலைக்கழகத்தில் இருந்த அறிஞர்கள், புவியியலாளர்கள் மற்றும் மதகுருமார்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்தனர்.
1486-ன் இறுதியில், சலமங்காவில் இருந்த ‘சான் எஸ்டெபன்’ என்ற மடாலயத்தில் கொலம்பஸ், தனது பயணத்திற்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்பதற்காக ஸ்பெயின் அறிஞர்கள் குழுவிடம் தன் திட்டத்தைச் சமர்ப்பித்தார்.
அந்த அறிஞர்கள் குழுவின் முன் நின்று தனது திட்டத்தையும் அவர் விளக்கினார். கொலம்பஸ் பூமியின் அளவை மிகச் சிறியதாகக் கணக்கிட்டிருந்தார் (ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே உள்ள தூரம் மிகக் குறைவு என்று தவறாக நினைத்தார்). சலமங்கா அறிஞர்கள் கொலம்பஸின் கணக்கீடு தவறு என்றும், பூமி கொலம்பஸ் நினைப்பதை விட மிகப்பெரியது; அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ஆசியாவை அடைய மாதக்கணக்கில் ஆகும்; அவ்வளவு தூரம் பயணிக்க எந்தக் கப்பலிலும் உணவோ தண்ணீரோ சேமித்து வைக்க முடியாது என்றும் சரியாகக் கணித்தனர். எனவே, கொலம்பஸின் திட்டம் ஆபத்தானது மற்றும் சாத்தியமில்லாதது என்று கூறி, சலமங்கா குழு கொலம்பஸின் வேண்டுகோளை நிராகரித்தது.
இதன் பிறகு பல ஆண்டுகள் காத்திருந்து, இறுதியாக 1492-ல் தான் ஸ்பெயின் அரச குடும்பம் அவருக்கு அனுமதி அளித்தது; அதன் பிறகே அவர் தனது பயணத்தைத் தொடங்கினார்!
1486-ல் சலமங்கா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த மோதல் 19-ம் நூற்றாண்டில் வாஷிங்டன் இர்விங் எழுதிய நாவல் பாணி வரலாற்று நூலில், வெகுவாக மிகைப்படுத்தப்பட்டது. சலமங்காவில் இருந்த முட்டாள்தனமான மதகுருமார்கள் “பூமி தட்டையானது; அதனால் கொலம்பஸின் கப்பல் கடலின் முனையில் கீழே விழுந்துவிடும்” என்று வாதிட்டதாகவும், புத்திசாலியான கொலம்பஸ் “பூமி உருண்டையானது” என்று அவர்களிடம் போராடி நிரூபிக்க முயன்றதாகவும் இர்விங் ஒரு கற்பனைக் கதையை உருவாக்கினார். (இன்றும் பலர் இதை உண்மை என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்).
வரலாற்றாசிரியர் மோரிசன் இதை “தவறாக வழிநடத்தும் அபத்தம்” என்று அழைத்தார். இதுவே, நடுக்காலத்தில் மக்கள் பூமி தட்டையானது என்று நினைத்தனர் என்ற பிரபலமான தவறான கருத்தை உருவாக்கியது.
மேலும் கொலம்பஸ் தீவில் கால்பதித்த நிகழ்வையும் இர்விங் கண்ணீரும் விசுவாசமும் கலந்த, அரசுக்கு அடிபணிந்த ஒரு சாகசக்காரரின் வெற்றியாக உணர்ச்சிப்பூர்வமாகவும், நாடகத்தனமான அழகியலுடனும் இப்படி விவரித்திருந்தார்.
//நிலத்தில் கால் வைத்ததும் உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்ட கொலம்பஸ், உடனடியாக கண்ணீருடன் முழங்காலிட்டு, மண்ணை முத்தமிட்டு, இறைவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்தார். அதுவரை கொலம்பஸை எதிர்த்து, அவரைப் பைத்தியக்காரன் என்றும் கொடூரமானவன் என்றும் தூற்றிய மாலுமிகள் அனைவரும், அவர் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அவரை ஒரு தீர்க்கதரிசியாகவும் சாகசக்காரராகவும் பார்த்தனர்//.
வாஷிங்டன் இர்விங் அந்த கால் பதித்த நிகழ்வை ஒரு வரலாற்று ஆவணமாக மட்டுமின்றி, கொலம்பஸை ஒரு காவிய நாயகனாகவும், இந்த நிகழ்வை ஒரு பெரும் சாகசத்தின் உச்சகட்டமாகவும் சித்தரித்துள்ளார்.
இர்விங் இந்த நூல் மூலமே கொலம்பஸை “பக்திமிகு அரசப்பணியாளன்”, “இயற்கையான மேதைமை கொண்ட, தடைகளை எதிர்கொண்டு தன்னைத்தானே வடிவமைத்துக்கொண்ட மனிதன்” என்ற வீர உருவகமாக நிலைநிறுத்தினார் — இதுவே பின்வரும் அனைத்துப் புராணப்படுத்தல்களுக்கும் அடித்தளமானது.
புனையப்பட்ட ஓவியங்கள்
ஜான் வாண்டர்லின் (John Vanderlyn, 1847)- அமெரிக்க கேபிட்டல் கட்டிடத்தின் ரொடுண்டாவுக்காக நியமிக்கப்பட்ட Landing of Columbus ஓவியம். இர்விங்கின் நூலை முதன்மை ஆதாரமாகக் கொண்டு வரையப்பட்டது. ஆனால் இதில் இர்விங்கின் உரையில் இல்லாத ஒரு கற்பனைக் கூறு சேர்க்கப்பட்டது — கொலம்பஸ் தலைக்கவசமின்றி, தன் இறகுத் தொப்பியைக் காலடியில் வைத்து, பணிவின் அடையாளமாக நிற்பது. இது வாண்டர்லினின் சொந்தக் கற்பனை.

இவான் ஐவசோவ்ஸ்கி (Ivan Aivazovsky, 1892)-“The Disembarkation of Christopher Columbus” ஓவியத்தில் இதே பக்திமிகு, வீரத் தோற்றக் காட்சியைத் தொடர்ந்தார்.
இந்த ஓவியங்கள் இர்விங்கின் இலக்கியப் புராணத்தை காட்சி வடிவில் நிரந்தரமாக்கின. பள்ளிப் புத்தகங்கள், அஞ்சல் தலைகள், பொது இடங்களிலெல்லாம் இந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, தலைமுறை தலைமுறையாகப் பரவின.
19-ம் நூற்றாண்டில் வளர்ந்து வந்த அமெரிக்க அரசு, தனது வரலாற்று உருவாக்கத்திற்கு அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ தேசம்” என்ற பிம்பத்தை உருவாக்க ஒரு புனிதத் தொடக்கத்தைத் தேடியது. கொலம்பஸ் நிலத்தில் கால் பதித்துச் சிலுவையை நடும் சித்திரங்கள், “அமெரிக்க மண் பிறப்பிலேயே கிறிஸ்தவ இறைநம்பிக்கையோடு ஆசீர்வதிக்கப்பட்ட நிலம்” என்ற கதையாடல் அமெரிக்கப் பள்ளிகளிலும், ஞாயிறு பள்ளிகளிலும் (Sunday Schools) பாடப் புத்தகங்கள் வழி பரப்பப் பயன்பட்டன.
19-ம் நூற்றாண்டில் அமெரிக்கா மேற்கத்திய நிலப்பரப்புகளை நோக்கித் தனது எல்லையை விரிவுபடுத்தியபோது (பூர்வீக அமெரிக்கப் பழங்குடியினரை வெளியேற்றி), “கடவுள் அமெரிக்கர்களுக்குக் கொடுத்த கட்டளை இது” என்ற Manifest Destiny கோட்பாடு உருவானது
கொலம்பஸ் பூர்வீக மக்களை ‘மதமாற்றம் செய்ய வந்த புனிதர்’ போல சித்திரங்களில் காட்டப்பட்டதன் மூலம், வெள்ளைச் சமூகத்தினர் பூர்வீக மக்களின் நிலங்களைக் கைப்பற்றுவதும், அவர்களைக் கலாச்சார ரீதியாக மாற்ற முயல்வதும் “கடவுளின் சித்தமே” என நியாயப்படுத்தப்பட்டது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கும், புதிதாக குடியேறிய இத்தாலிய/அயர்லாந்து கத்தோலிக்கர்களுக்கும் இடையே கடும் சமூக மோதல் இருந்தது. கத்தோலிக்கர்கள் “அமெரிக்கர்கள் அல்ல” என்று ஒதுக்கப்பட்டனர்.
அப்போது உருவான ‘நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ்’ (Knights of Columbus) என்ற கத்தோலிக்க அமெரிக்கக் கிறிஸ்தவ அமைப்பு, இந்த ஓவியங்களையும் இர்விங்கின் கதையாடலையும் கையில் எடுத்தது.
“அமெரிக்காவைக் கண்டுபிடித்ததே ஒரு கத்தோலிக்கப் புனிதர்தான் (கொலம்பஸ்)! எனவே அமெரிக்க வரலாற்றின் முதல் நாயகர்கள் நாங்கள்தான்” என்று தங்களை அமெரிக்கச் சமூகத்தில் பாதுகாத்துக் கொள்ள இந்த சித்திரங்களைப் பயன்படுத்தினர்.
கொலம்பஸைக் சித்தரிக்கும் ஓவியங்களில் இடம்பெற்ற காட்சி அமைப்புகளுக்குப் பின்னால் ஆழமான அரசியல் மற்றும் மத பின்னணி நோக்கங்களும் இருந்தன.
சில சித்திரங்களில் கொலம்பஸ் தனது கைகளில் சிலுவையையும் அரசக் கொடியையும் ஏந்தி நிற்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டதன் நோக்கம், கத்தோலிக்க மதமும் பேரரசின் அதிகாரமும் இணைந்துதான் ‘புதிய உலகத்தை’ நாகரிகப்படுத்த முடியும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான்.
அதேபோல, அவருக்கு மேல் வானத்திலிருந்து ஒளி வட்டம் (Halo Effect) விழுவது போன்ற சில ஓவியங்களில் இருந்தது. அது கொலம்பஸைச் சாதாரண மாலுமியாகக் காட்டாமல், கடவுளின் விருப்பத்தைச் செயல்படுத்த வந்த ஒரு புனிதத் தூதராகப் பிம்பப்படுத்தப் பயன்பட்டது.
மேலும், அந்த ஓவியங்களின் பின்னணியில் பூர்வீக பழங்குடி மக்கள் அரையிருட்டில் நிழலாக நிற்பது போல வரையப்பட்டதன் மூலம், ஐரோப்பியர்கள் ‘நாகரிக ஒளி மற்றும் இறைநம்பிக்கையைக்’ கொண்டு வருகிறார்கள்; பூர்வீக மக்கள் ‘இருளடைந்த அறியாமையில்’ இருக்கிறார்கள் என்ற இனமேலாதிக்கக் கருத்தாக்கம் நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டது.
1892 சிகாகோ கொலம்பியன் எக்ஸ்போசிஷன் நிகழ்வு ஒரு தேசியக் கொண்டாட்டமாக மாற்றமடைந்ததும் பல மறைமுகக் காரணங்களால்தான்.
கொலம்பஸின் வருகையின் 400-வது ஆண்டு நினைவாக சிகாகோவில் நடத்தப்பட்ட இந்தப் பெரு நிகழ்வு, இர்விங் உருவாக்கிய “வீர தீர சாகசக்காரன்” உருவத்தை அமெரிக்க தேசிய அடையாளத்துடன் முழுமையாக இணைத்தது. இந்த கண்காட்சியில் மட்டும் 71 கொலம்பஸ் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன . அனைத்தும் அவர் இறந்த பிறகு வரையப்பட்டவை, அதாவது முழுக்க முழுக்க கற்பனையிலிருந்தே.
இந்தப் புள்ளியில், கொலம்பஸ் என்னும் தனிமனித புராணப்படுத்தல் ஒரு தேசியப் புராணமாக மாறியது.
இர்விங்கின் “தியாகி/பணிவான அரசப்பணியாளன்” என்கிற கொலம்பஸின் சித்திரம் தற்செயலானது அல்ல — அது ஒரே நேரத்தில் பல தேவைகளை நிறைவேற்றியது:
அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு, பிரிட்டிஷ் காலனித்துவத்துடன் தொடர்பில்லாத ஒரு “தேசிய தந்தை”யின் தோற்றக் கதை தேவைப்பட்டது; ஸ்பெயினுக்காகப் பயணித்த இத்தாலியரான கொலம்பஸ் இதற்கு ஏற்றவராக இருந்தார்.
கொலம்பஸ் பற்றி விரிவான வரலாற்று உண்மைகள் அதிகம் தெரியாததால், அவர் ஒரு “வெற்று ப்பலகை” (blank slate) ஆக இருந்தார் . எனவே யாரும் தாங்கள் விரும்பிய குணங்களை அவர் மீது எளிதில் ஏற்ற முடிந்தது.
மேற்குநோக்கிய அமெரிக்க விரிவாக்கத்திற்கு ஒரு “தெய்வீக அனுமதி” கதை தேவைப்பட்டது.
இந்தப் புராணப்படுத்தலை பிற்காலத்தில் Progressive Era வரலாற்றாசிரியர்கள், வரலாற்றாய்வாளர்கள், பாடநூல் விமர்சகர்கள், மற்றும் முதன்மையாக பூர்வகுடி இயக்கங்கள் (1960-70களின் Red Power இயக்கம் தொடங்கி 2020-ன் நினைவுச் சின்ன அகற்றல் இயக்கம் வரை) கேள்விக்குள்ளாக்கினர்.
கொலம்பியா என்னும் பெண் தெய்வம்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் தெய்வ வடிவமாக (Female Personification) அல்லது உருவகக் குறியீடாகப் புனையப்பட்ட தேவதைக்கு கொலம்பியா எனப் பெயர் வந்ததும்கொலம்பஸ் என்னும் பெயரிலிருந்து இப்படி பலவேறு காரணங் களின் பொருட்டுத்தான்.
1570 ல் ஆர்டிலியஸின் வரைபடத் தொகுப்பில், “அமெரிக்கா” எனும் புதிய கண்டம் ஏற்கெனவே ஒரு பெண் உருவமாக, வில்/அம்பு ஏந்திய “இந்திய ராணியாக”த்தான் சித்தரிக்கப்பட்டிருந்தது.
1697 ல் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் தலைமை நீதிபதி சாமுவேல் சூவால் எழுதிய ஒரு கவிதையில், புதிய உலகக் காலனிகளுக்கு “கொலம்பினா” (Columbina), ’கொலம்பஸின் பெயரின் பெண்பால் வடிவம்’ எனப் பெயரிடலாம் எனப் பரிந்துரைத்தார். இதுவே கொலம்பஸின் பெயரை நாட்டிற்குப் பெயராகப் பயன்படுத்தலாம் என்னும் கோரிக்கையின் முதல் பதிவு.
1738 ல் தான் “கொலம்பியா” என்ற எழுத்து வடிவம் முதன்முறையாக அச்சில் தோன்றியது. லண்டனில் வெளிவந்த The Gentleman’s Magazine இதழில், பிரிட்டிஷ் பார்லிமென்ட் விவாதங்களை மறைமுகமாக அறிவிப்பு செய்யும் பகுதியில் காலனிகளைக் குறிக்க இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.
1775–76 ல் முன்னாள் அடிமையாக இருந்த கவிஞர் பிலிஸ் வீட்லி , ஜார்ஜ் வாஷிங்டனுக்கு எழுதிய ஒரு புகழுரைக் கவிதையில் “கொலம்பியா”வை முதன்முறையாக ஒரு கவிதைப் பாத்திரமாக, ஒரு வீராங்கனையாகச் சித்தரித்தார். இங்குதான் பெயரும் பெண் உருவமும் முதன்முதலில் ஒன்றிணைந்தன. வீட்லி இதற்கான தோற்றத்தை பூர்வகுடி அடையாளத்திலிருந்து அல்ல கிரேக்க-ரோமானிய தேவதைகளிடமிருந்தே வடிவமைத்தார்: அப்பல்லோவிடமிருந்து ( மருத்துவம்/கவிதைக் கடவுள்) பொன்னிற முடியையும், ஏதீனா/மினர்வாவிடமிருந்து (போர்த் தேவதை) படைக்கலம் மற்றும் தீரத்தன்மையையும் இணைத்தார். கொலம்பஸ் இதில் எங்கும் இல்லை வெறும் பெயரைத் தவிர.
1784 ல் நியூயார்க்கின் King’s College, புரட்சிக்குப் பின் அரசப் பெயரைத் துறந்து, Columbia College என மறுபெயரிடப்பட்டது (இன்றைய Columbia University).
1791ல் அமெரிக்க தலைநகர் பகுதிக்கு “District of Columbia” (Territory of Columbia) எனப் பெயரிடப்பட்டது.
1798 ல் “Hail, Columbia” எனும் தேசபக்திப் பாடல் இயற்றப்பட்டு, 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் அதிகாரபூர்வமற்ற தேசிய கீதமாக விளங்கியது.
இவ்வாறு, 1570-ல் தொடங்கிய பெண் உருவகப் பாரம்பரியமும், 1697-1738-ல் தோன்றிய “கொலம்பியா” எனும் பெயரும், 1775-76-ல் வீட்லியின் கவிதையில் ஒன்றிணைந்து, 1780-களில் நிறுவனங்களுக்கும் இடங்களுக்கும் நகர்களுக்கும் பெயராக நிலைபெற்றன.
கொலம்பியா (Columbia) என்பது கொலம்பஸின் “மறு உருவம்” அல்ல , பெயர் மட்டுமே அவரிடமிருந்து கடன் வாங்கப்பட்டது; அவரது தோற்றமோ, கதையோ, பயணமோ, குணாதிசயங்களோ கொலம்பியாவின் காட்சி வடிவமைப்பில் நேரடியாக இடம்பெறவில்லை.
காலப்போக்கில் கொலம்பியாவின் உருவம் மேலும் மறுவடிவமைக்கப்பட்டது. ஆனால் இதற்குக் காரணம் கொலம்பஸ் அல்ல, இன அரசியல்தான். வெள்ளை அமெரிக்கர்கள், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடமிருந்தும் பூர்வகுடி இனங்களிடமிருந்தும் தங்களை உருவ ரீதியாக வேறுபடுத்திக் காட்ட விரும்பியதால், 18-ம் நூற்றாண்டு முடிவடையும் நேரத்திற்குள் தோலும் முடியும் படிப்படியாக வெளுத்து, ஐரோப்பிய அரசவைப் பெண்ணைப் போலவே கொலம்பியா தோன்றத் தொடங்கினார்.
அமெரிக்க கலாச்சாரத்திற்குத் தேவைப்பட்டது கொலம்பஸ் என்ற மனிதன் அல்ல , “கொலம்பஸ்” என்ற பெயர்/கருத்தியல் மட்டுமே.
கொலம்பஸை ஒரு புனிதராகவும், நாகரிகத்தைக் கொண்டு வந்த காவிய நாயகனாகவும் சித்தரித்த ஐரோப்பிய-அமெரிக்கப் புனைவுகளை எதிர்த்து, 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21-ம் நூற்றாண்டிலும் மிகப்பெரிய எதிர்ப்புகளும், வரலாற்று மறுஆய்வுகளும் (Historical Re-evaluations) வெடித்தன.
அந்தப் புனைவுகளை உடைக்க நிகழ்ந்த முக்கிய எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் வருமாறு:
- பூர்வீக மக்களின் எதிர்ப்புக் குரல்கள்.
கொலம்பஸின் வருகை என்பது “கண்டுபிடிப்பு” அல்ல; அது ஒரு இனப்படுகொலை, அடிமைத்தனம் மற்றும் நிலஅபகரிப்பின் தொடக்கம் என்பதைப் பூர்வீக அமெரிக்க அமைப்புகள் உரக்கச் சொன்னன.
1968- ல் ‘அமெரிக்கப் பூர்வீகக் குடியினர் இயக்கம்’ (American Indian Movement – AIM) தொடங்கப்பட்டு, கொலம்பஸ் பற்றிய தவறான வரலாற்றுப் பாடங்களுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டன.
கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வந்ததன் 500-வது ஆண்டை (1492–1992) 1992-ல் அமெரிக்க அரசு பெரும் விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டது. ஆனால், பூர்வீக அமைப்புகள் அதை “500 ஆண்டுகாலப் படையெடுப்பு மற்றும் எதிர்ப்பு தினம்” என அறிவித்துப் பெருந்திரள் போராட்டங்களை நடத்தின.
- ‘கொலம்பஸ் தினத்திற்கு’ எதிரான மாற்று விழா (Indigenous Peoples’ Day)
அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையான ‘கொலம்பஸ் தினத்திற்கு’ (Columbus Day) கடும் எதிர்ப்பு கிளம்பியது.
1992-ல் கலிபோர்னியாவின் பெர்க்லி நகரம் முதன்முதலாகக் கொலம்பஸ் தினத்தைப் புறக்கணித்து, அதை ‘பூர்வீக மக்கள் தினம்’ (Indigenous Peoples’ Day) ஆக அறிவித்தது.
இன்று அமெரிக்காவின் பல மாநிலங்களும், நூற்றுக்கணக்கான நகரங்களும் கொலம்பஸ் தினத்தைக் கைவிட்டு, பூர்வீக மக்களின் தியாகத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் தினமாகவே அதைக் கொண்டாடுகின்றன.
- சிலைகள் அகற்றுதலும் வீழ்க்கப்படுதலும்.
கொலம்பஸின் புனைவுப் பிம்பத்தை எதிர்த்து நடந்த மிகத்தீவிரமான காட்சிப் போராட்டம் அவருடைய சிலைகள் மீது நடந்த் தாக்குதல்தான்.
2020-ல் பிளாக் லைவ்ஸ் மேட்டர் (BLM) இயக்கத்தின் இனவெறிக்கு எதிரான போராட்டங்களின் போது, பாஸ்டன், ரிக்போர்ட், சிகாகோ, செயின்ட் பால் போன்ற பல முக்கிய அமெரிக்க நகரங்களில் இருந்த கொலம்பஸின் சிலைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தலை துண்டிக்கப்பட்டும், சாயம் பூசப்பட்டும், ஏரிகளில் வீசப்பட்டும் வீழ்த்தப்பட்டன.
பல நகர நிர்வாகங்களே சட்டரீதியாகக் கொலம்பஸ் சிலைகளை அகற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றின.
- மாற்று வரலாற்று நூல்களும் கல்விப்புல மாற்றமும்
இர்விங் போன்றவர்கள் கட்டமைப்பு செய்த காவியப் புனைவை உடைக்க, ஆதாரப்பூர்வமான வரலாற்று ஆய்வுகள் வெளிவந்தன:
’ஹாவர்ட் ஜின்’ னின் (Howard Zinn) ‘ஏ பீப்பிள்ஸ் ஹிஸ்டரி ஆஃப் தி யுனைடெட் ஸ்டேட்ஸ்’ (A People’s History of the United States) என்ற நூல், கொலம்பஸின் சொந்தக் குறிப்புகளிலிருந்தே அவர் தைனோ மக்களுக்குச் செய்த கொடூரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
அமெரிக்கப் பள்ளிகளில் “கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்” என்ற ஒற்றைப் பரிமாணக் கற்பித்தல் மாற்றப்பட்டு, அவரது வருகையால் பூர்வீக மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் நோய்கள் பற்றிய நிஜ வரலாறு பாடங்களில் சேர்க்கப்பட்டது.
- கத்தோலிக்கத் திருச்சபையின் பின்வாங்கல்
கத்தோலிக்கத் திருச்சபையும் போப் ஆண்டவரும் கொலம்பஸின் ஆக்கிரமிப்புகளுக்கு வழங்கிய “மதரீதியான அங்கீகாரத்தை” (Doctrine of Discovery) வாடிகன் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
பல தசாப்த காலப் போராட்டத்திற்குப் பிறகு, 2023-ல் வாடிகன் ‘கண்டுபிடிப்புக் கோட்பாட்டை’ (Doctrine of Discovery) அதிகாரப்பூர்வமாக நிராகரிப்பதாக அறிவித்தது.
ஐரோப்பியர்கள் புதிய நிலங்களைக் கைப்பற்றுவதற்குக் கத்தோலிக்க மதம் சட்டப்பூர்வ அனுமதி அளித்தது தவறு என்பதைத் திருச்சபை ஒப்புக்கொண்டது.
கொலம்பஸின் “புனித இறைத்தூதர்/காவிய நாயகன்” என்ற புனைவு, பூர்வீக மக்களின் தொடர் போராட்டங்கள், கல்விப்புல மறுஆய்வுகள், சிலைகள் வீழ்ச்சி மற்றும் திருச்சபையின் ஒப்புதல் ஆகியவற்றின் மூலம் உடைக்கப்பட்டு; இன்று அவர் ஒரு மாலுமியாக மட்டும் அங்கீகரிக்கப்படும் அதே வேளையில், ஐரோப்பியச் சுரண்டலின் தொடக்கப்புள்ளியாகவும் பார்க்கப்படுகிறார்.
இனி கொலம்பஸின் திரும்பும் பயணத்தை அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப்பார்க்கலாம்
தொடரும்……
Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
