- கொலம்பஸ்
- கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்
- பிழைகளும் கொலைமுயற்சியும்!
- டியரா டியரா!
- கன்னித்தீவு
- மாயமான நாட்குறிப்பு
- கொலம்பஸும் கொலம்பியாவும்!
- திரும்பும் பயணம்
- இரண்டாம் பயணம் – பயணத்திட்டமிடல்
- புதிய தீவுகளும் பெயரிடலும் படுகொலைகளும்
- புது நகர நிர்மாணமும் இரண்டாம் பயணத்தின் முடிவும்!
- கொலம்பஸின் வீழ்ச்சி!
இரண்டாம் பயணத்தைப் பர்கோஸ் அரசவையில் முடித்தோம். ஆனால் அந்த மூன்றாண்டுகளில் ஹிஸ்பானியோலா மண்ணில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இன்னும் விரிவாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. குறிப்பாக, புதிய குடியேற்றத்தின் உணவுகள், தைனோக்களின் பயிர்கள் எப்படி ஸ்பானியர்களின் உணவாக மாறியது, அதே காலத்தில் அவர்களுக்கும் தைனோக்களுக்கும் இடையே எவ்வாறு மோதல் தீவிரமடைந்தது என்பதையெல்லாம் பார்த்துவிட்டுப் பிறகு மூன்றாம் பயணத்துக்குச் செல்லலாம்.

1494 செப்டம்பரில் சுயநினைவின்றி லா இஸபெலாவுக்குக் கொண்டுவரப்பட்ட கொலம்பஸ், சில மாதங்கள் படுக்கையிலிருந்துதான் மெல்ல மெல்ல மீண்டார். பார்வையும் நினைவாற்றலும் திரும்ப பல நாட்கள் ஆயின. அவர் கியூபா, ஜமைக்கா ஆய்வில் இருந்தபோதே, 1494 நடுவில் அவரது தம்பி பார்த்தலோமியோ ஸ்பெயினிலிருந்து உணவுக் கப்பல்களுடன் வந்து சேர்ந்திருந்தார். அண்ணன் படுக்கையில் கிடந்த நாட்களில் நிர்வாகம் அவர் கையில்தான் இருந்தது.
1495 தொடக்கத்தில் கொலம்பஸ் உடல் தேறி எழுந்தபோது கண்டது, வயிற்றுப் பசியாலும் அதிருப்தியாலும் கொதித்துக்கொண்டிருந்த குடியேற்றத்தைத்தான்.
ஸ்பெயினிலிருந்தும் கேனரித் தீவுகளிலிருந்தும் கொண்டுவந்த பயிர்களைப் புதிய சூழலில் வளர்க்கும் முயற்சி அங்கே தொடங்கியிருந்தது. ஆனால் எல்லாப் பயிர்களும் நினைத்தபடி கைகொடுக்கவில்லை. முள்ளங்கி, கீரை போன்ற குறுகியகாலப் பயிர்கள் நன்கு வளர்ந்து சில வாரங்களிலேயே அறுவடைக்கு வந்தன. ஆனால் கோதுமையும், திராட்சையும் ஏமாற்றின. வெப்பமண்டலத்தின் ஒளிக்காலமும் ஈரப்பதமும் அவற்றின் மலர்தல், கதிர்மணிபிடித்தல் போன்ற இயற்கைச் சுழற்சிகளைக் குலைத்தன.
மேலும், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களும் வழியிலேயே கெட்டுப்போயிருந்தன. எனவே கோதுமை ரொட்டிக்கு வழியில்லமல் ஏங்கிய ஸ்பானியர்கள் இறுதியில் வேறு வழியில்லாமல் தைனோக்களின் உணவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதில் இன்னொரு சிக்கலும் இருந்தது. தங்களை உயர்குடியினராகக் கருதிய ஸ்பானியப் பிரபுக்கள் மண்ணில் கை வைக்க மறுத்தனர். விவசாயம் செய்யவும் உடல் உழைப்பில் ஈடுபடவும் கொலம்பஸ் கட்டாயப்படுத்தியதை அவர்கள் வெறுத்தனர். குடியேற்றத்தில் உருவான அதிருப்திக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.
தைனோ மக்களின் வேளாண்மையின் அச்சாணி மரவள்ளிக்கிழங்குச் சாகுபடிதான்..

தைனோக்கள் அதை “கோனுக்கோ” என்னும் உயர்த்தப்பட்ட மேடைப் பாத்திகளில் பயிரிட்டனர். மண்ணைக் குவித்து உயர்த்திய இந்த மேடைகள் மழைக்காலத்தில் நீர் தேங்காமலும் மண் அரிக்கப்படாமலும் காத்தன. சர்க்கரைவள்ளிக் கிழங்கும் நிலக்கடலையும் அந்தப் பாத்திகளிலேயே வளர்ந்தன.
மரவள்ளியின் மிகப்பெரிய பலம் அதன் வறட்சியைத் தாங்கும் தன்மையும், கிழங்குகளை நிலத்திலேயே பல மாதங்கள் வைத்திருக்க முடிவதும்தான். புயலும் பஞ்சமும் நிறைந்த புதிய குடியேற்றத்துக்கு அது ஒரு வகையில் உணவுத்தேவையை உறுதி செய்வதாக இருந்தது.
ஆனால் கசப்பு மரவள்ளியில் ஒரு ஆபத்து இருக்கிறது.
மரவள்ளிக் கிழங்கில் “லினாமரின்” என்னும் சயனோஜெனிக் கிளைக்கோசைடு உள்ளது. அதைச் சிதைக்கும் லினமரேஸ் என்னும் நொதியும் கிழங்கில் உள்ளது; ஆனால் இவை செல்களுக்குள் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. கிழங்கைத் துருவும்போதோ நசுக்கும்போதோ செல்கள் சேதமடைந்து, லினாமரினும் லினமரேஸும் கலக்கின்றன. அப்போது லினாமரின் சிதைந்து, இறுதியில் ஹைட்ரஜன் சயனைடு (HCN) என்னும் நச்சுப்பொருள் உருவாகிறது. தன்னைத் தின்ன வரும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க மரவள்ளி வைத்திருக்கும் இயற்கைப் பாதுகாப்பு இது.
வேகவைத்தால் மட்டும் கசப்பு மரவள்ளியின் இந்த நச்சு முழுமையாக நீங்காது. ஆனால் தைனோக்கள் வேதியியலை அறியாமலேயே அதை பாதுகாப்பாக உணவாக்கும் முறையை உருவாக்கியிருந்தனர்.
- முதலில் கிழங்குத் தோலுரித்துக் கூர்மையான கற்கள் பதித்த பலகையில் துருவப்படும்
- துருவிய மாவை “செபுகான்” என்னும் நீண்ட நெய்த குழாயில் அடைத்து, அதைத் தொங்கவிட்டு இழுத்துப் பிழிந்து. நச்சுச் சாறு வெளியேற்றப்படும்..
- பின்னர் மாவு உலர்த்தப்பட்டு, சூடான களிமண் தட்டில் “கசாபே” என்னும் தட்டை ரொட்டியாகச் சுடப்படும். சுடப்படும் வெப்பம் எஞ்சிய நச்சையும் நீக்க உதவும்.
- பிழிந்த நச்சுச் சாற்றை நீண்ட நேரம் கொதிக்க வைத்தால் நச்சு நீங்கி, “காசரீப்” என்னும் சுவையான கருமைநிறக் கூழ் கிடைக்கிறது.
- சாற்றின் அடியில் தங்கும் வெண்மையான மாவுச்சத்தும் தனியாகப் பயன்படுத்தப்பட்டது. (அதிலிருந்துதான் நமது ஜவ்வரிசி உருவாகிறது.)
அரைகுறையாகத் தயாரிக்கப்பட்ட, சமைக்கப்பட்ட கசப்பு மரவள்ளியை உண்டால் “கோன்சோ” என்னும் நரம்புச் சீர்கேடு ஏற்படலாம்; இன்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இது காணப்படுகிறது. கசாபே ரொட்டி மாதக் கணக்கில் கெடாமல் இருப்பதால் கப்பல் பயணங்களுக்கும் படை முகாம்களுக்கும் மிகவும் ஏற்றதாக இருந்தது. ஸ்பானியர்கள் வேறு வழியில்லாமல் வெறுப்போடு உண்ணத் தொடங்கிய கிழங்குணவு, பின்னர் போர்த்துக்கீசியர் வழியாக ஆப்பிரிக்காவுக்கும் அங்கிருந்து ஆசியாவுக்கும் பரவியது.
மரவள்ளியுடன் தைனோக்களின் வேளாண்மையில் இடம்பெற்றிருந்த பல தாவரங்களும் ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்தன.
அதில் முக்கியமானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு என்னும் “படாடா”
இது மரவள்ளியுடன் அதே மேடைப் பாத்திகளில் வளர்க்கப்பட்டது. வேகவைத்தும் சுட்டும் உண்ணப்பட்டது. கொலம்பஸ் முதல் பயணத்திலேயே இதை ஸ்பெயினுக்குக் கொண்டுசென்றார். “படாடா” என்ற சொல் பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளில் potato என்ற சொல்லாக மாறியது. உருளைக்கிழங்கு அப்போது ஐரோப்பாவுக்கு வந்திருக்கவில்லை; பின்னர் அது வந்தபோது அதே பெயர் அதற்கும் பயன்படுத்தப்பட்டது.
தைனோக்கள் நிலக்கடலையை “மனி” என்று அழைத்தனர். தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்தப் பயிர், கொலம்பஸுக்கு முன்பே கரிபியத் தீவுகளை அடைந்திருந்தது. அதுவும் மேட்டுப்பாத்திகளில் வளர்ந்து பயனளித்தது.
வேகவைத்தும், சுட்டும், அரைத்தும் உண்ணப்பட்ட“மஹிஸ்” எனப்பட்ட மக்காச்சோளத்தின் மாதிரிகள் அங்கிருந்து ஸ்பெயினுக்குச் சென்றன.
அஜி என அழைக்கப்பட்ட மிளகாய்களும் அங்கு விளைந்தன. ஹிஸ்பானியோலாவில் தைனோக்கள் மிளகாயை ஏராளமாக வளர்த்திப் பயன்படுதினார்கள். ஸ்பானியோலாவின் தைனோக்கள் ஏற்கெனவே பயிரிட்டு, உணவுக்குக் காரச்சுவை தரப் பயன்படுத்திய Capsicum மிளகாயை கொலம்பஸ் 1492-ம் ஆண்டிலேயே கண்டார். மருத்துவர் சான்கா, தைனோக்கள் இதை மசாலாவாகப் பயன்படுத்தியதைப் பதிவு செய்தார். மிளகைத் தேடி வந்த கொலம்பஸ், இதையும் “மிளகு” என்றே கருதினார். பின்னர் pepper என்ற பெயரில் ஏற்பட்ட குழப்பத்துக்கும் இதுவே ஒரு காரணமாக அமைந்தது.
இரண்டாம் பயணத்தில் அந்தத் தீவில் ஐரோப்பியர்கள் முதன்முதலில் கண்ட பழங்களில் அன்னாசியும் ஒன்று.
அங்கே பருத்தி நன்றாக விளைந்தது.தைனோக்கள் பருத்தியால் நெய்த “ஹமாகா” என்னும் தொங்கு படுக்கை ஸ்பானிய மாலுமிகளைக் கவர்ந்தது. பின்னர் அது கப்பல்களில் hammock ஆனது. பிற்பாடு அவர்களிடமிருந்து கொலம்பஸ் கப்பமாகக் கோரிய பொருட்களில் பருத்தியும் இடம்பெற்றது.
கொலம்பியன் பரிமாற்றத்தில் தாவரங்கள் மட்டுமல்ல; அவற்றோடு தொடர்புடைய சொற்களும் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தன.
canoe, hammock, hurricane, barbecue, maize போன்ற ஆங்கிலச் சொற்கள் தைனோ மொழியிலிருந்து வந்தவை என்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.. “tobacco” என்ற சொல்லும் தைனோ மூலம் வந்ததாகப் பலர் கருதுகின்றனர்; அதன் சொற்பிறப்பு ஆப்பிரிக்காவிலிருந்து என்று வேறு கருத்துகளும் உள்ளன.
கொலம்பஸ் இல்லாத சமயத்தில் உள்நாட்டுப் படையை நடத்தும் பொறுப்பிலிருந்த பெத்ரோ மார்கரிட், தம் பணியைக் கைவிட்டு, துறவி பெர்னால் புயிலுடன் கிடைத்த கப்பல்களில் ஏறி 1494 இறுதியில் ஸ்பெயினுக்குத் திரும்பினார். இந்த இருவரும்தான் அரசவையில் கொலம்பஸைப் பற்றிப் புகார் கூறியவர்கள். அதை நாம் சென்ற பகுதியிலேயே விரிவாகப்பார்த்தோம்.
கொலம்பஸ் நோயிலிருந்து மீண்டுகொண்டிருந்த காலத்தில், தீவின் உள்பகுதியில் நிலைமை மேலும் மோசமடைந்தது. சிபாவோவின் தங்கம் நிறைந்த பகுதிகளில் ஸ்பானியப் படைவீரர்கள் தைனோ கிராமங்களுக்குள் புகுந்து உணவையும் தங்கத்தையும் பறித்தனர்; பெண்களைத் துன்புறுத்தினர்; ஆண்களை கட்டாய உழைப்புக்கு உட்படுத்தினர். கவோனபோ ஏற்கெனவே ஒஜெடோவால் ஏமாற்றிப் பிடிக்கப்பட்டிருந்தார். ஸ்பானியர்களின் இந்தத் தொடர் அத்துமீறல்கள் தைனோ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதுவரை தங்களுக்குள் இருந்த பழைய பகைகளை மறந்த தைனோ தலைவர்களான காசீக்குகள், இப்போது ஸ்பானியர்களுக்கு எதிராக ஒன்றுபடத் தொடங்கினர். அவர்களின் எதிர்ப்பும் படிப்படியாகப் பெரிதாகி, இறுதியில் நேரடியான போருக்குத் தள்ளியது.

இந்த மோதலுக்கான முக்கியக் களம் வேகா ரியல். ஸ்பானிய மொழியில் இதற்கு “அரச சமவெளி” என்று பொருள். தைனோக்களின் வளமான கோனுக்கோ வயல்கள் நிறைந்த இச்சமவெளி, அவர்களின் முக்கிய உணவுக் களஞ்சியமாகவும் இருந்தது. 1495 மார்ச் 27 அன்று இரு தரப்பினரும் இங்கு நேருக்கு நேர் மோதினர். ஸ்பானியப் படையில் சுமார் இருநூறு காலாட்படையினரும், இருபது குதிரை வீரர்களும், இருபது வேட்டை நாய்களும் இருந்தனர். அவர்களுடன் கவோனபோவின் பகைவரான குவாகனகாரியின் தைனோ வீரர்களும் இணைந்திருந்தனர். மறுபுறம் ஆயிரக்கணக்கான தைனோக்கள் திரண்டிருந்தனர். குதிரைகளையும் வேட்டை நாய்களையும் தைனோக்கள் இதற்கு முன் போரில் எதிர்கொண்டதில்லை; இரும்புக் கவசமும் அவர்களிடம் இல்லை. இதனால் மோதலின் முடிவு ஸ்பானியர்களுக்குச் சாதகமாக அமைந்தது
போரில் ஸ்பானியர்களே வெற்றி பெற்றனர். குதிரைகள், வேட்டை நாய்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் தைனோ படைகள் சிதறின; அவர்களின் எதிர்ப்பு தற்காலிகமாக ஒடுக்கப்பட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு கொலம்பஸ் தீவின் பல பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தி, தைனோ காசீக்குகளை அடிபணியச் செய்தார். பின்னர் தங்கம் கிடைக்கும் பகுதிகளில் வாழ்ந்த பதினான்கு வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை வரியாகச் செலுத்த வேண்டும் என்றும், மற்ற பகுதிகளில் பருத்தியை அளிக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதனால் தைனோக்களின் வாழ்க்கை வெகுவாக மாறியது. வயல்களில் உணவு பயிரிடுவதற்குப் பதிலாக தங்கம் தேடவும், ஸ்பானியர்களுக்காக உழைக்கவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அத்தீவில் தங்கம் அவ்வளவு இல்லை என்பதால் பலரால் இந்தக் கப்பத்தை செழுத்த முடியவில்லை. தப்பித்து மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். பசி, கட்டாய உழைப்பு, வன்முறை ஆகியவை தைனோ மக்களின் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கின.
1495 ஜூனில் ஒரு கொடிய சூறாவளி இஸபெலா துறைமுகத்தைத் தாக்கியது. நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்கள் மூழ்கின; நினோ மட்டுமே தப்பியது. அந்தக் கப்பலின் சிதைவுகளைக் கொண்டுதான் பின்னர் “லா இந்தியா” கப்பல் கட்டப்பட்டது.
இந்த இருண்ட பின்னணியிலும் தாவர வரலாற்றுக்கு மிக முக்கியமான ஒரு ஆவணம் கிடைத்தது.
கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தை அடைந்தபோது, அங்கே வாழ்ந்த பூர்வகுடி மக்களின் வாழ்க்கை முறைகளும் நம்பிக்கைகளும் ஐரோப்பியர்களுக்கு முற்றிலும் புதியதாகவும் விசித்திரமானதாகவும் இருந்தன. அந்தப் பண்பாட்டைப் பதிவு செய்யும் பணியை ஸ்பானிய மன்னர் பெர்டினாண்ட் ஜெரோமைட் (Hieronymite) சபையைச் சேர்ந்த ஃப்ரையர் ராமோன் பானே (Friar Ramón Pané). என்னும் துறவியிடம் ஒப்படைத்தார்.
தைனோ (Taino) மக்களின் மொழியைக் கற்றுக்கொண்டு, அவர்களின் குடில்களிலேயே தங்கி, அவர்களின் பழக்கவழக்கங்களை நேரில் கண்டறிந்து ஆவணப்படுத்திய முதல் ஐரோப்பியர் இவரே. அவர் எழுதிய “அமெரிக்காவின் தொன்மங்கள் பற்றிய குறிப்புகள்” (Relación acerca de las antigüiedades de los indios) என்ற நூல்தான், இன்று அழிந்துபோன தைனோ பண்பாட்டின் வரலாற்றை அறியும் மிக முக்கியமான மூலமாகும்.

அந்த வரலாற்றுப் பின்னணியில், ராமோன் பானே பதிவு செய்த தைனோக்களின் மிக முக்கியமான சடங்குதான் “கோஹோபா” (Cohoba).
இயற்கையின் சக்திகளையும் மூதாதையர்களின் ஆன்மாக்களையும் குறிக்கும் புனிதப் பொருட்களையும் சிலைகளையும் தைனோ மக்கள் “செமி” (Zemi) என்று அழைத்தனர். இந்தத் தெய்வங்களுடன் தொடர்புகொள்ளவும், எதிர்காலத்தைக் கணிக்கவும் அவர்கள் கோஹோபா சடங்கை நிகழ்த்தினர்.
இந்தச் சடங்கின்போது, குறிப்பிட்ட ஒரு மரத்தின் விதைகளை அரைத்துத் தூளாக்கி, அதனை ஒரு குழாய் வழியே மூக்கால் உள்ளிழுப்பார்கள். அந்தப் போதையில் அவர்களின் மூளையில் ஏற்படும் தீவிரமான கற்பனைகளும் மயக்க நிலையும் தெய்வங்களின் நேரடித் தரிசனமாகப் பார்க்கப்பட்டது. அந்தப் போதை நிலையில் தங்களின் தெய்வங்களான “செமி”களின் குரலைக் கேட்பதாகவும், அவை தங்களுக்கு வழிகாட்டுவதாகவும் அவர்கள் முழுமையாக நம்பினர்.
ஃப்ரையர் ராமோன் பானே தனது குறிப்புகளில் அந்தத் தாவரத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
தைனோ மக்கள் அந்தத் தாவரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கும் போதைப்பொடியையும், அந்தச் சடங்கையுமே “கோஹோபா” (Cohoba) என்று அழைத்தனர். தாவரவியல் ரீதியாக அது அனாடெனாந்தரா பெரெகிரினா (Anadenanthera peregrina) என்று அறியப்படும் மரமாகும்.
ஐரோப்பியர்களுக்குப் பழக்கமில்லாத புதிய தாவர வகையாகவும், அதன் மூலம் மனதை மாற்றும் போதைப்பொருளைப் பூர்வகுடிகள் பயன்படுத்தி ஆன்மீகச் சடங்குகளைச் செய்வதையும் ராமோன் பானே தனது நூலில் ஆச்சரியத்துடன் ஆவணப்படுத்தியுள்ளார்.
இது தென்னமெரிக்காவிலும் கரீபியன் தீவுகளிலும் வளரும் ஒரு வகைப் பெரிய மரம். இந்த மரத்தின் விதைகளில் இயற்கையாகவே சக்திவாய்ந்த மனதை மாற்றும் (Psychedelic) வேதிப்பொருட்களான DMT (Dimethyltryptamine) மற்றும் பியூஃபோடெனின் (Bufotenine) ஆகியவை நிறைந்துள்ளன.
முதிர்ந்த விதைகளைச் சேகரித்து, நன்றாக வறுத்து, பொடியாக்கி, சில மரப்பட்டைகளின் சாம்பல் அல்லது பிற மூலிகைகளுடன் சேர்த்து இந்தத் தூளை அவர்கள் தயாரித்தனர். இதனை உறிஞ்ச பிரத்யேகமான பறவையின் எலும்புகளால் ஆன Y வடிவ குழாய்களைப் பயன்படுத்தினர்.
ராமோன் பானே தனது குறிப்புகளில் இந்தச் சடங்கையும் தாவரத்தையும் பற்றிக் குறிப்பிட்டது பிற்காலத் தாவரவியலாளர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. நவீன காலத் தொல்லியல் மற்றும் தாவரவியல் ஆய்வுகள், புவேர்ட்டோ ரிக்கோ போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த எச்சங்கள் மூலம் இந்தத் தாவரத்தின் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
ஒரு புதிய கலாச்சாரத்தை எந்தவித முன் முடிவுமின்றி புரிந்து கொள்ள முயன்ற ராமோன் பானே போன்றவர்களின் குறிப்புகளால்தான், தைனோ மக்களின் இத்தகைய சடங்கு முறைகளும் ஆன்மீக நம்பிக்கைகளும் இன்றளவும் வரலாற்றில் நிலைத்துள்ளன
புகையிலையைப் புகைக்கும் வழக்கமும் ஐரோப்பியர்களின் கவனத்துக்கு முதன்முதலில் இப்பகுதியில்தான் வந்தது.
அக்டோபர் 1492 -ல் கொலம்பஸ் சான் சால்வடார் தீவுகளில் காலடி வைத்தபோது, பூர்வகுடி மக்கள் அவருக்கு வரவேற்பளிக்கும் விதமாகப் பழங்களையும், சில விசித்திரமான காய்ந்த இலைகளையும் பரிசாக அளித்தனர். அந்த இலைகள் ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டிருந்தன. ஆனால், அப்போது அதன் பயன் என்னவென்று அறியாமல் கொலம்பஸும் அவரது குழுவினரும் அவற்றை எளிதாகக் கடந்துவிட்டனர்.
கியூபா தீவில் பயணம் செய்தபோதுதான் கொலம்பஸின் குழுவைச் சேர்ந்த ரோட்ரிகோ டி ஹெரெஸ் (Rodrigo de Jerez) மற்றும் லூயிஸ் டி டோரஸ் (Luis de Torres) ஆகிய இரு மாலுமிகள், தைனோ மக்கள் அந்த உலர்ந்த இலைகளைப் பயன்படுத்துவதை நேரில் கண்டனர். தைனோ மக்கள் மக்காச்சோள இலைகளிலோ அல்லது பனை ஓலைகளிலோ புகையிலையைச் சுருட்டி, ஒரு முனையில் தீமூட்டி, மறுமுனையில் வரும் புகையை மூக்கின் வழியாகவும் வாயின் வழியாகவும் உள்ளிழுத்து “குடிப்பதை” (Drinking the smoke) பார்த்து வியந்தனர்.
இந்தப் பழக்கத்தால் ஈர்க்கப்பட்ட மாலுமி ரோட்ரிகோ டி ஹெரெஸ், அங்கேயே புகைப்பிடிக்கப் பழகி, ஸ்பெயினுக்குத் திரும்பும்போது அந்தப் புகையிலைத் துகள்களையும் விதைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். இவரே வரலாற்றில் புகையிலைப்பிடிக்கப் பழகிய முதல் ஐரோப்பியர் ஆவார்.
ரோட்ரிகோ டி ஹெரெஸ் ஸ்பெயினுக்குத் திரும்பிச் சென்று, தன் அயாமுண்டே (Ayamonte) நகரின் வீட்டு வராந்தாவில் அமர்ந்து வாய் வழியாகவும் மூக்கின் வழியாகவும் புகையை வெளியே விட்டதைக் கண்டு அவரது குடும்பத்தினரும் அக்கம்பக்கதினரும் கடும் பீதியடைந்தனர். “மனிதனின் வாயிலிருந்து புகை வருவது சாத்தானின் செயல்” என்று அஞ்சி, சிலர் அவரைக்குறித்து ஸ்பானிஷ் மத விசாரணை மன்றத்திடம் புகார்கூட செய்தனர். ஆனால் விரைவில் அந்தப் புகையிலை மோகம் மக்களிடையே பரவிவிட்டது.
ஹிஸ்பானியோலா தீவில் (இன்றைய ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு) ஸ்பானியர்களால் உருவாக்கப்பட்ட புதிய குடியேற்றப் பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்கள், உணவுத் தட்டுப்பாடு மற்றும் பூர்வகுடி தைனோ மக்களுடனான மோதல்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பிறகு, கொலம்பஸ் மார்ச் 10, 1496 அன்று இரண்டாம் கடற்பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பெயினை நோக்கிப் புறப்பட்டார்.
அட்லாண்டிக் பெருங்கடலில் பல வாரங்கள் நீடித்த கடினமான பயணத்திற்குப் பிறகு, ஜூன் 11, 1496 அன்று அவரது கப்பல்கள் ஸ்பெயினின் காடிஸ் துறைமுகத்தை வந்தடைந்தன.
முதல் பயணத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பு இரண்டாவது பயணத்தின் முடிவில் கிடைக்கவில்லை. தீவுகளில் ஏராளமான தங்கம் கிடைக்கும் என்று அவர் அரசரிடம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், எதிர்பார்த்த அளவுக்குத் தங்கம் கிடைக்காதது ஸ்பானிய அரச குடும்பத்திற்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
பெருமளவு செல்வம் கொண்டுவரப்படவில்லை என்றாலும், ஸ்பானிய மன்னர் பெர்டினாண்ட் மற்றும் ராணி இஸபெல்லா கொலம்பஸ் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்தனர். இதன் விளைவாகவே, எதிர்காலத்தில் மேலும் பல புதிய பகுதிகளைக் கண்டறியும் அவரது மூன்றாவது பயணத்திற்கு (1498) அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.
எனினும் அரசவையின் ஆர்வம் குறைந்திருந்தது. செலவு கூடியது; எதிர்பார்த்த அளவு தங்கம் கிடைக்கவில்லை. ஆகிய காரணங்களால் இரண்டாம் பயணத்திற்குப் பிறகு மூன்றாம் பயணம் உடனே தொடங்கவில்லை.
இதற்கிடையில் ஐரோப்பாவில் கடற்பயணத்துக்கான போட்டியும் தீவிரமடைந்தது. 1497-ல் ஜான் காபட் இங்கிலாந்தின் சார்பில் மேற்கே சென்றார். அதே ஆண்டில் வாஸ்கோ ட காமா இந்தியாவை நோக்கி கிழக்குவழிக் கடற்பாதையில் புறப்பட்டார்.
இறுதியில் மூன்றாம் பயணத்துக்கான அனுமதி கொலம்பஸுக்குக் கிடைத்தது.1498 மே 30 அன்று ஆறு கப்பல்களுடன் கொலம்பஸ் மீண்டும் புறப்பட்டார்.
அவர் இம்முறை எந்தப் பாதையில் சென்றார்? எதைக் கண்டார்?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
தொடரும்…
Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
