கொலம்பஸ் -1

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த கிரனாடா (Granada) நகரின் சாண்டா ஃபே ராணுவ முகாமில் கிறிஸ்டோஃபர் கொலம்பஸும் அரசப் பிரதிநிதிகளும் கூடியிருந்தார்கள். பல மாதங்களாக முன்னேற்பாடுகள் நடந்து, அன்றுதான் கடற்பயணம் முடிவாகிச் சட்டபூர்வமான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவிருந்தது. ஏப்ரல் 17, 1492 என்று தேதி குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டிருந்த ஒப்பந்தக் காகிதங்கள், அரச மெழுகு முத்திரையுடன் தயாராக இருந்தன. கடற்பயணத்திற்கான மொத்தச் செலவு 20 லட்சம் மாராவிடிகள் என முடிவு செய்யப்பட்டு, அதுவும் காகிதத்தில் குறிப்பிடப்பட்டது.

மாராவிடி என்பது ஸ்பெயினின் நாணயமுறை. கொலம்பஸ், இத்தாலியராக இருந்தாலும், ஸ்பெயின் நாட்டு அரச குடும்பத்திற்காக அவர் அந்தப் பயணத்தை மேற்கொள்வதால், இத்தாலிய நாணயங்களான Florin மற்றும் Ducat ஆகியவற்றிற்குப் பதிலாக ஸ்பெயினின் மாராவிடி கணக்கிலேயே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அரச கருவூலத்திலிருந்தும், இத்தாலிய வங்கிகளிடமிருந்து பெற்ற கடனிலிருந்தும், கொலம்பஸ் திரட்டிய நன்கொடைகளிலிருந்தும் இந்த மொத்தப் பணமும் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது தயாராக வைக்கப்பட்டிருந்தது.

மூன்று கப்பல்களில் செல்வதாக அந்தப் பயண ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. சாண்டா மரியா (Santa María) என்கிற 150 டன் எடையுள்ள, நீருக்கு அடியில் இருக்கும் பகுதி உருண்டையாக இருக்கும்படி கட்டமைக்கப்பட்ட, மிக மெதுவாக நகரக்கூடிய மாபெரும் வணிகக் கப்பல் ஒன்றும்,  நீனா (Niña) மற்றும்  பிண்டா (Pinta) ஆகிய 50 முதல் 70 டன் எடையுள்ள இரண்டு சிறிய வேவுக் கப்பல்களுமாக (Caravels) மொத்தம் மூன்று கப்பல்களில் பயணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

கொலம்பஸுக்குச் சாண்டா மரியா போன்ற மாபெரும், மிக மெதுவாகச் செல்லும் கப்பலில் பயணம் செய்ய விருப்பமில்லை. அதுபோன்ற கப்பல் தனது பயணத்திற்கு ஏற்றதல்ல என்று அவர் கருதினார். இருந்தும் இறுதி நேரத்தில் அதைத் தெரிவிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தார். மேலும், அதுவரை அறியப்படாத நிலங்களை நோக்கிய பயணம் என்பதால், வலுவான கட்டமைப்பும், 90 பயணிகளும் அவர்களுக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான உணவு, குடிநீர், உப்பிலிட்ட இறைச்சி, பிஸ்கட்டுகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் மது வகைகளைக் கொண்டு செல்லும் அளவுக்குப் பெரிய இடவசதியும் கொண்ட ஒரே கப்பலாகச் சாண்டா மரியா மட்டுமே அப்போது இருந்தது.

சாண்டா மரியா கப்பலின் கேப்டனாகக் கொலம்பஸும், மாஸ்டராக  அக்கப்பலின் உரிமையாளர் ஹூவான் டி லா கோஸா (Juan de la Cosa)-வும் இருந்தார்கள். பிண்டா கப்பலில் கேப்டனாக  மார்டின் (Martín Alonso Pinzón) என்னும் மிகத் திறமையான மாலுமியும், நீனா கப்பலில் மார்டினின் தம்பியும் கொலம்பஸின் விசுவாசியுமான  வின்செண்ட்டும் (Vicente Yáñez Pinzón)  இருந்தார்கள்.

அவர்கள் அனைவருக்கும் தலைவராக அட்மிரல் கொலம்பஸ் இருந்தார். அவருக்கெனச் சாண்டா மரியா கப்பலின் முதல் தளத்தில் தனியறை அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து மூன்று கப்பல்களையும் வழிநடத்தும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நான்கு சிறைக் கைதிகள் உள்ளிட்ட மொத்தம் 90 பேர் இப்பயணத்தில் இணைந்தார்கள்; அவர்களில் பலர் அனுபவம் வாய்ந்த சிறந்த மாலுமிகளாகவும் இருந்தார்கள்.

கடற்பயணத்தில் பண்டமாற்றுப் பொருட்களாக ஆயிரக்கணக்கான பறவை மணிகள் (Hawks’ bells – பறவைகளின் கால்களில் கட்டப்படும் சிறு உலோக மணிகள்), வண்ணமயமான தொப்பிகள் மற்றும் கண்ணாடி மணிகள் கொண்டு செல்லப்பட்டன.

அரசுச் செயலர்  ஹுவான் டி கோலோமா (Juan de Coloma) தன் கைப்பட அந்தப் பயண ஒப்பந்தத்தை அழகான கையெழுத்தில் எழுதினார். முதலில் அரசர் ஃபெர்டினாண்டும், பின்னர் அரசி இசபெல்லாவும் அதில் தங்கள் பெயரைக் குறிப்பிடாமல், அக்கால வழக்கப்படி “Yo el Rey” (நானே அரசன்) மற்றும் “Yo la Reina” (நானே அரசி) என்று கையெழுத்திட்டனர்.

அரச முத்திரையுடனான அவர்களின் கையெழுத்துக்கள், கொலம்பஸை புதிய நிலப்பரப்புக்களை  ‘கனவு காண்பவர்’ என்ற நிலையிலிருந்து, ஸ்பானிய பேரரசின் உயரிய அதிகாரியான ‘அட்மிரல் மற்றும் வைஸ்ராய்’  ஆக உயர்த்தியது.

கொலம்பஸ் தனது மிக அழகிய, சித்திர வடிவத்திலான கையெழுத்தை இட்டார். அவரதுகையெழுத்து  ஒரு மர்மமான குறியீட்டு வடிவம் (Cryptic Signature). அவரது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய இந்தக் கையெழுத்து S, S A S, X M Y ஆகிய எழுத்து வரிசைகளையும், அதைத் தொடர்ந்து “Xpo FERENS” (கிறிஸ்துவைத் தாங்குபவர் என்று பொருள்) என்ற பெயரையும் கொண்டிருந்தது.

பிரமிட் வடிவில் அமைந்த இந்தக் கையெழுத்து முறையைத் தனது வாரிசுகளும் அப்படியே பயன்படுத்த வேண்டும் என்று கொலம்பஸ் தனது உயிலிலும் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக ஒப்பந்தங்களில் சாட்சி கையெழுத்து இருக்கும்; ஆனால், இந்தக் கடற்பயண ஒப்பந்தத்தில் சாட்சி கையெழுத்து எதுவும் இடப்படவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான உடனே அது அரசாங்க ஆவணத்தில்  இணைக்கப்பட்டது.

கொலம்பஸிற்கு வைஸ்ராய், அட்மிரல் மற்றும் கவர்னர் போன்ற பட்டங்களும், அதற்கான அதிகாரங்களும் அளிக்கப்படுமென்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புதிய நிலப்பரப்புகளில் கிடைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அவற்றின் மதிப்பில் 10% கொலம்பஸிற்கு வழங்கப்படுமென்றும், எதிர்காலத்தில் அவர் கண்டுபிடித்த நிலப்பரப்புகளிலிருந்து கிளம்பும் எந்த வணிகக் கப்பலின் செலவிலும் எட்டில் ஒரு பங்கு (1/8th) அளிக்கும் பட்சத்தில், அதில் கிடைக்கும் லாபத்திலும் எட்டில் ஒரு பங்கு அவருக்கு அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. புதிய நிலங்களின் பொருளாதாரத்தை முழுமையாகக் கொலம்பஸின் கைகளில் அளித்தது அந்த ஒப்பந்தம். பிற்பாடு, இந்த ஒப்பந்தத்தினாலேயே அரசாங்கம் பல இன்னல்களைச் சந்தித்தது.

புதிய நிலப்பரப்புகளில் அரசாங்க அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் கொலம்பஸிற்கு அந்த ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்பட்டது. கொலம்பஸ் பரிந்துரைக்கும் மூன்று பெயர்களில் ஒருவரை அரசரும் அரசியும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது.

ஆனால், அந்தப் பயணம் எப்போது முடியும் என்றோ, இத்தனை கால அவகாசத்திற்குப் பின்னர் கப்பல் திரும்ப வரும் என்றோ ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில், “இண்டீஸ்” (Indies) என்று குறிப்பிடப்பட்ட அந்த நிலம் எங்கு இருக்கிறது என்பது அப்போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. கடல் பயணத்தில் கொலம்பஸ் “Spices” (நறுமணப் பொருட்கள்), “Merchandise” (வணிகப் பொருட்கள்) மற்றும் “Other Objects of Whatever Kind” (வேறு எந்த வகையான பொருட்களாக இருப்பினும்) ஆகியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவதே முதன்மையான நோக்கம் என்று குறிப்பிடப்பட்டது

ஏப்ரல் 17, 1492 அன்று ஒப்பந்தம் கையெழுத்தான நொடியிலிருந்து, புதிய நிலப்பரப்புகளுக்குச் செல்லும் மூன்று கப்பல்களின் மிக ஆபத்தான பயணம் தொடங்கியிருந்தது. ஏப்ரல் 30 அன்று, கிறிஸ்டோஃபர் கொலம்பஸிற்குத் தேவையான அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் கப்பல்கள் தயாராக வேண்டும் என்றும் அரசாணை  வெளியிடப்பட்டது.

ஆனால், கப்பலோட்டிகளையும் மாலுமிகளையும் ஒருங்கிணைக்க கொலம்பஸ் முயன்றபோது, யாருமே அவரது கடற்பயணத்தில் இணைய விரும்பவில்லை. கொலம்பஸ், திரும்பி வர முடியாத நிலவுக்குக் கப்பலில் செல்லும் பயணத்திற்கு ஆள் சேர்க்கிறார் என்று மக்கள் கேலி பேசினர். இக்கட்டான இந்தச் சூழலில், மார்டின்( Martín Alonso Pinzón) என்னும் புகழ்பெற்ற கடலோடி தனது சொந்தச் செலவில் கடற்பயணத்தில் இணைவதாக ஒப்புக்கொண்டபோது, நிலைமை சட்டென மாறியது.

மார்ட்டின் தெருத்தெருவாகச் சென்று, “நண்பர்களே!  நாங்கள் சகோதரர்கள் இந்தப்பயணத்தில் இணைந்திருக்கிறோம், இந்த அற்புதமான சாகசம் நிறைந்த பயணம், வறுமையிலுள்ள உங்கள் வாழ்வைப் பொன்னால் நிரப்பப் போகிறது. உங்களை இந்தப் பயணத்திற்கு அழைக்கிறேன்!” என்று கூறினார். அவர் சொன்ன சில நாட்களிலேயே கப்பலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.

டிண்டோ  நதியில் வைத்து கப்பல்கள் பழுதுபார்க்கப்பட்டன. நீனா கப்பலின் முக்கோண வடிவப் பாய்மரம், அட்லாண்டிக் பெருங்கடலின் வலிமையான காற்றிற்கு ஈடுகொடுக்கும்படி கொலம்பஸின் ஆணையால் சதுர வடிவாக மாற்றியமைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2, 1492 அன்று இரவு மூன்று கப்பல்களும் முழுமையாகப் பயணத்திற்குத் தயாராகின. அன்றிரவே பயணிகள் அனைவரும் கப்பலில் ஏறினர். சாண்டா மரியா கப்பலில் 40 பயணிகளும், பிண்டா கப்பலில் 26 நபர்களும், நீனா கப்பலில் 24 பயணிகளுமாக மொத்தம் 90 பேர் இருந்தனர்.

புதிய நிலங்களின் கண்டுபிடிப்புகளை அரசின் சொத்துகளாக ஆவணப்படுத்தவும், அரசரின் கண்களாகச் செயல்படவும் Rodrigo de Escobedo என்னும் அரசாங்கச் செயலர் உடனிருந்தார். கொலம்பஸ் எங்குத் தரையிறங்கினாலும், அவரும் உடன் இறங்கி மை மற்றும் எழுதுகோலுடன் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அவர் புதிய நிலங்களைக் கண்டுபிடிக்கும் அந்த விநாடியே அவற்றை ஆவணப்படுத்தி, அப்போதே அரசாங்க முத்திரை வைத்துவிட வேண்டும். இல்லையெனில், பிற்பாடு வரும் கண்டுபிடிப்பாளர்கள் அந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாடிவிடுவார்கள் என்பதால், அவரது இருப்பு இந்தக் கடற்பயணத்தில் மிக இன்றியமையாததாக இருந்தது.

லூயிஸ் டி டோரெஸ் (Luis de Torres_ என்னும் பல மொழிகளில் புலமை பெற்ற ஒருவர் இப்பயணத்தில் இணைந்திருந்தார். புதிய நிலப்பகுதிகளில் உள்ள மக்களுடன் உரையாட அவர் உதவக்கூடும் என்று நம்பப்பட்டது. மேலும், இரண்டு மருத்துவர்களும், கப்பலின் உட்சேதங்களைச் சரிபார்க்க சில தச்சர்களும் இருந்தனர். ஆச்சரியப்படும்படி, அந்தக் கப்பலில் பாதிரியார்கள் யாருமே செல்லவில்லை; பெண்களும், ராணுவ வீரர்களும் அந்தக் கப்பலில் இல்லை. கப்பல் பணிகளுக்கு உதவுவதற்காக 20 பணியாளர்களும் (Apprentices) உடனிருந்தனர்.

அது ஒரு மிகச்சிறிய நகர் என்பதால், கப்பலில் செல்லவிருந்த ஒவ்வொருவரும் அங்கிருந்த அனைவருக்கும் உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருந்தனர்.  அது ஒரு திரும்பாப்பயணமாக இருக்கலாம் என்பதால், அன்னையர்களும், மனைவி மக்களும் கண்ணீருடன் விடையளித்த அந்தத் தருணம் உருக்கமாக இருந்தது. மிக உயரமான குன்றின் மேல் இருந்த கிறிஸ்தவத் துறவிகள் அங்கிருந்தே அமைதியாக  ஆசி வழங்கினர். 

மறுநாள் ஆகஸ்ட் 3 காலை 8 மணிக்கு, அலையின் வேகம் பயணத்திற்குச் சாதகமாக இருந்தபோது, கொலம்பஸ் கொடியசைக்க மூன்று கப்பல்களும் பாலோஸ்  துறைமுக நகரிலுள்ள ரியோ டிண்டோ நதி வழியாக மெதுவாக நகரத் தொடங்கி, அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கித் தங்கள் வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்தன.


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.