முந்தைய பதிவைப் படிக்க
ஸ்பெயினின் பலோஸ் துறைமுகத்திலிருந்து அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சாண்டா மரியா, பிண்டா மற்றும் நினா ஆகிய மூன்று கப்பல்களும் 1492-ம் ஆண்டு, ஆகஸ்ட் 3-ம் தேதி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு அரைமணி நேரம் முன்பாகப் புறப்பட்டன. திட்டமிட்ட திசையில் பயணிப்பதற்கு முன்பு, சிலநாட்களிலேயே நடுக்கடலில் பிண்டா கப்பலின் சுக்கான் உடைந்ததால் மூன்று கப்பல்களும் அருகிலிருந்த, ஸ்பேனிஷ் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவுகளுக்கு மெல்ல நகர்ந்து சென்றன.
கடலுக்குள் சென்ற பின்னர் பிண்டா கப்பலில் இருந்தவர்களுக்கு புதிய நிலத்திற்கான அப்பயணம் கொடுத்த அச்சத்தினால் அவர்களே ஸ்பெயினுக்கு திரும்பிச்செல்ல வேண்டுமென்று சுக்கானை உடைத்ததாக கொலம்பஸ் நம்பினார். அதில் மிகுந்த மனக்கசப்பும் கொண்டார். கடற்பயணம் கப்பலில் இருந்தவர்களுக்கு மிகப்புதிது. மேலும் எப்போதும் கொந்தளித்துக்கொண்டிருந்த கடலும், கப்பலில் மோதிப் பேரோசையை எழுப்பிக்கொண்டிருந்த அலைகளும் அவர்களுக்கு அச்சமூட்டின என்பதால் அதில் உண்மையும் இருந்திருக்கலாம்.

கேனரி தீவுகளில் ஒரு மாத காலம் தங்கி இருந்து உடைந்த பிண்டாவின் சுக்கானை மாற்றி, நினாவின் முக்கோண வடிவ பாய்மரத்தையும் சதுரவடிவில் மாற்றி கூடுதலாகக் குடிநீர், உணவு ஆகியவற்றையும் ஏற்றிகொண்டு மூன்று கப்பல்களும் செப்டம்பர் 6-ம் தேதி பயணத்துக்கு மீண்டும் தயாராகின.
காற்று சாதகமாக இல்லாததால் கேனரித்தீவுகளிலிருந்து மெல்ல விலகிச் சென்று கொண்டிருந்த கப்பல்கள் மறுநாள் சாதகமான காற்றடித்ததால் விரைந்து சென்றன. கப்பற்பயணிகளின் பார்வையிலிருந்து கேனரித் தீவுகள் முழுவதுமாக விரைவில் மறைந்தன.
கப்பல்கள் புறப்படு முன்பு கேனரி தீவுகளில் (இன்றும் இருக்கும்) குடிநீர்க்கிணற்றிலிருந்து குடிநீரும், ஏராளமான பாலாடைக்கட்டிகளும் கப்பல்களில் ஏற்றப்பட்டன.
கொலம்பஸ் அவரது தொடர்ந்த அனைத்துப் பயணங்களிலுமே அந்தத் தீவில் நின்று அந்தக்கிணற்றில் இருந்து நன்னீரை எடுத்துக்கொண்டு சென்றார். அவருக்குப்பிறகு அட்லாண்டிக் பெருங்கடற்பயணம் செய்த அனைவருமே அதையே செய்தார்கள். எனவே ஸ்பேனிஷ் கடற்பயண வரலாற்றுக்கதைகளில் (உண்மையைக் கொஞ்சம் மிகைப்படுத்தி) அந்தக்கிணற்று நீர்தான் மொத்த அமெரிக்காவையே ஞானஸ்னானம் செய்வித்தது என்று குறிப்பிடப்பட்டது.
கூடவே உப்பிலிட்டு உலர்த்திய இறைச்சி, மீன், உலர்பழங்கள் ஆகியவையும் கப்பல்களில் ஏற்றபட்டன.
கொலம்பஸ் தனது முதல் பயணத்திற்காக ஸ்பெயினிலிருந்து புறப்பட்டபோது, வெறும் நிலப்பரப்பைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், அங்கு ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கத் தேவையான அடிப்படைத் தயாரிப்புகளுடனும் சென்றார்.
ஸ்பெயின் துறைமுகத்திலிருந்து கிளம்பியபோதே சந்தையிலிருந்து மூட்டை மூட்டையாக வெங்காயமும் பூண்டும் ஏற்றப்பட்டன. கோதுமைமாவு, கோதுமை தானியம் (கப்பலில் ரொட்டி செய்ய), பார்லி, மற்றும் உலர் திராட்சை (திராட்சை ரசத்திற்கும் உணவிற்கும்) பட்டாணி, கொண்டைக்கடலை. அவரை விதைகள் ஆகியவையும் ஏற்றப்பட்டிருந்தன.
மத்திய தரைக்கடல் நாடான ஸ்பெயினில் ஆலிவ் எண்ணெய் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது. எனவே ஸ்பெயினிலிருந்து சமையலுக்காகவும், விளக்கு எரிப்பதற்காகவும் ஆலிவ் எண்ணெயும் கூடவே பன்றியின் கொழுத்த வயிற்றுப்பகுதியுடன் சேர்ந்திருந்த பன்றிக்கொழுப்பும் மர பீப்பாய்களில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
மாலுமிகள் பயன்படுத்திய விளக்குகளில் எரிபொருளாகவும் ஆலிவ் எண்ணெயே பயன்படுத்தப்பட்டது. தோலில் ஏற்படும் அரிப்பு அல்லது புண்களுக்கு மருந்தாகவும், கப்பலில் உள்ள கயிறுகள் மற்றும் சில மரப்பகுதிகள் வறண்டு போகாமல் இருக்கவும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.
சமைக்க முடியாமல் போன மழை நாட்களில் பயணிகள் வெறும் பிஸ்கட்டுடன் (Hardtack) சிறிது ஆலிவ் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள். கப்பற்பயணத்தில் எல்லா நாட்களிலும் சமையல் செய்வதும் நெருப்பு மூட்டுவதும் சாதாரண விஷயமல்ல. கொலம்பஸ் காலத்தில் தீக்குச்சிகள் கண்டுபிடிக்கப்படவில்லை, அவை 19-ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.
கப்பலின் மேல் தளம் (Deck) மணல் அல்லது செங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மேல் ஒரு மரப்பெட்டிக்குள் மணல் நிரப்பப்பட்டு, அதன் மீதுதான் நெருப்பு மூட்டப்பட்டது. இந்த அடுப்பு ‘Fogón’ எனப்பட்டது.
கடினமான சிக்கிமுக்கி கற்களையும் சிறிய இரும்புத் துண்டுகளையும் நெருப்பை உருவாக்க அவர்கள் பயன்படுத்தினார்கள். இரும்பை சிக்கிமுக்கி கல்லின் மீது வேகமாகத் தேய்க்கும்போது தீப்பொறிகள் உருவாகும். இந்தத் தீப்பொறிகளை ஒரு சிறிய பெட்டியில் உள்ள, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் மேல் விழச் செய்வார்கள். பொதுவாக உலர்ந்த துணித் துண்டுகள், காய்ந்த பாசி அல்லது மரத்தூள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
தீயை உருவாக்குவது கடினம் என்பதால், ஒருமுறை நெருப்பு மூட்டப்பட்டால் பல நாட்களுக்கு அதை அணையாமல் பார்த்துக்கொள்வதும் சமையல்காரர்களின் வேலையாக இருந்தது.
கப்பலின் மேல்தளத்தில் மணல் நிரப்பப்பட்ட அடுப்பில் ஒருமுறை நெருப்பு மூட்டப்பட்டால், அது நாள் முழுவதும் கனன்று கொண்டே இருக்குமாறு சிறிய அளவில் எரித்துக்கொண்டிருப்பார்கள்.
சேமிப்பில் இருக்கும் ஆலிவ் எண்ணெய் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட்டது. இரவு நேரத்தில் சமிக்ஞை செய்வதற்காக எரிக்கப்படும் எண்ணெய் விளக்குகளிலிருந்தும் அவர்கள் தீயை எடுத்துக்கொள்வார்கள்.
கப்பல் மரத்தால் ஆனது என்பதால், தீப்பொறிகள், பாய்களில் அல்லது கயிறுகளில் விழுந்துவிடாமல் இருக்க ஒருவர் எப்போதும் அடுப்பைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்.
உப்புநீரில் சமைப்பது உணவின் சுவையைக் கெடுக்கும் என்பதால், சேமிப்பிலிருந்த குடிநீர் (நன்னீர்) சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பயணம் நீடிக்க நீடிக்க, குடிநீரில் பாசி படிந்து நாற்றமடித்தது. ஆனாலும், காய்கறிகள் மற்றும் இறைச்சியை வேகவைக்க இந்த ‘மோசமான’ நீரையே பயன்படுத்தினர். கெட்டுப்போன நீரின் வாடையை பூண்டு மற்றும் வெங்காயத்தின் நெடியினால் மறைக்க முயன்றார்கள்.
கடல் சீற்றமாக இருக்கும்போது அல்லது மழை பெய்யும்போது நெருப்பு மூட்ட முடியாது. அந்த நாட்களில் மாலுமிகள் சமைக்காத உணவுகளான காய்ந்த மீன், சீஸ் மற்றும் கல் போன்ற ‘ஹார்ட்டாக்’ பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிடுவார்கள்.
Biscuit என்னும் சொல் இருமுறை சுடப்பட்டு (bis-cuit) உருவாக்கப்பட்ட ரொட்டி என்பதைக் குறிக்கிறது, சாதாரண ரொட்டியின் மிருதுத்தன்மை கப்பல் பயணத்தில் சிலநாட்களிலேயே அதைக் கெட்டுப்போகச் செய்யுமாதலால் ரொட்டியை இரண்டு பக்கமும் நன்கு சுட்டு கடினமாகத் தயாரித்த பிஸ்கட்டுகள் அவை. வெறும் கோதுமை மாவும் நீரும், உப்புமிட்டு உருவாக்கப்பட்ட அவற்றில் ஈஸ்டோ, வெண்ணையோ, சர்க்கரையோ இருந்தால் அவை எளிதில் பூஞ்சைத்தொற்றுக்காளாகும் என்பதால் அவை அப்படித் தயாரிக்கப்பட்டன.
உண்மையில் அவற்றை உண்பது என்பது மிகக்கொடுமையான ஒன்று, கப்பற்பயணிகள் அந்தக் கடினமான பிஸ்கட்டை ’’பல்லுடைப்பான்’’ என்றே குறிப்பிடுவார்கள். அதை அவர்களுக்கு சிறிதளவே வழங்கப்படும் வைன் அல்லது குடிநீரில் உடைத்துப்போட்டு ஊறவைத்துச் சாப்பிடுவார்கள் அல்லது பிஸ்கட்டுகளை நொறுக்கி, அடுப்பு நெருப்பில் அந்தப் பொடியை லேசாக வறுத்துச் சாப்பிடுவதும் உண்டு.
எத்தனை கடினமானதாக இருந்தாலும் நீண்ட நாள் சேமித்து வைத்த பிஸ்கட்டுக்களில் ‘வீவில்ஸ்’ (Weevils) எனப்படும் சிறு வண்டுகள் மற்றும் புழுக்கள் வந்துவிடும்.
வண்டுகள் இருக்கும் பிஸ்கட்டுகளை பயணிகள் கப்பலின் விளிம்பில் தட்டித்தட்டி வண்டுகளை உதிர்த்துவிட்டு சாப்பிடுவார்கள், அல்லது பசி தாங்க முடியாமல் போகும் போது கண்களை மூடிக்கொண்டு வண்டுகளுடனேயே சாப்பிடுவதும் உண்டு. சில பயணிகள் இருட்டும் வரை காத்திருந்து வண்டுகளை இருட்டில் பார்க்க முடியாமல் போனபின்பு கடித்துச் சாப்பிடுவார்கள்.
கொலம்பஸின் முதல் பயணத்தில் சுகாதாரம் மற்றும் உணவுத் தயாரிப்பு முறைகள் நாம் இன்று நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் சவாலானவை.
மாலுமிகளும், மற்ற பயணிகளும் கப்பலின் முன்பக்கத்தில் (Bow) கடலை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் பலகைகளில் அமர்ந்து கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடியை உயிரைப் பணயம் வைத்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு இயற்கை உபாதைகளைக் கழிப்பார்கள். இந்தப்பலகைக்கு ‘Beakhead’ என்று பெயர். அலைகள் மோதும்போது உடல் தானாகவே சுத்தமாகும்.
கப்பலின் கேப்டன் என்ற முறையில், கொலம்பஸிற்கு அவரது அறைக்கு அருகே ஒரு சிறிய ‘கழிவறைப் பெட்டி’ இருந்தது. இது துளைகொண்ட ஒரு மர நாற்காலி போன்றது, அதன் அடியில் ஒரு பீங்கான் அல்லது செப்புப் பாத்திரம் இருக்கும். இது நிறைந்தவுடன், எடுத்துச் சென்று கடலில் கொட்டப்பட்டது.
புதிய காய்கறிகள் பழங்கள் மற்றும் வைட்டமின்-சி இல்லாததால், மாலுமிகளின் ஈறுகளில் ரத்தம் வடிந்து பற்கள் விழும் ‘ஸ்கர்வி’ நோய் ஏற்படும் அபாயம் எப்போதும் இருந்தது. தண்ணீர் கெட்டுவிடும் என்பதால், தாகத்திற்கு பெரும்பாலும் ‘ஒயின்’ அல்லது பீர் பயன்படுத்தப்பட்டது. இது தண்ணீரை விட நீண்ட நாட்கள் கெடாமல் இருந்தது.
குடிநீர்த்தட்டுப்பாடு இருந்ததால் பயணிகள் நன்னீரில் குளிப்பதே கிடையாது. உடல் அழுக்கை நீக்க கடல் நீரைப்பயன்படுத்தினால் உப்புப் படிந்து அரிப்பு ஏற்படும் என்பதால், பெரும்பாலானோர் பயணம் முழுவதும் குளிக்காமலேயே இருந்தனர்.
பயணிகள் அரிதாகவே அவர்களின் கம்பளி அல்லது லினன் உடைகளை மாற்றினார்கள். துவைக்க முடியாது என்பதால் அழுக்கு உடைகளை ஒரு கயிற்றில் கட்டி கடலில் தொங்கவிடுவார்கள். கப்பல் செல்லும்போது கடல் நீரின் வேகத்தில் அழுக்குகள் நீங்கும்.
கேப்டன் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே சிறிய அறைகள் இருந்தன. சாதாரண மாலுமிகளுக்கும் மற்ற பயணிகளுக்கும் தனி இடம் கிடையாது. அவர்கள் கப்பலின் தரைத்தளத்தில் (Deck) ஆங்காங்கே குளிரோ, கடுங்காற்றோ, பனியோ, உப்பு நீர் அறைதலோ எதுவானாலும் அங்கேயே படுத்துக்கொள்வார்கள். மழையின் போது மட்டுமே சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒடுங்கிக்கொள்வார்கள்,
மாலுமிகள் 24 மணிநேரமும் ஷிப்ட் முறையில் வேலை செய்தார்கள். பாய்களைக் கட்டுவது, கயிறுகளைச் சரி செய்வது, கப்பலின் அடியில் கசியும் நீரை வெளியேற்றுவது போன்றவை அவர்களின் முக்கிய வேலைகள். நேரத்தைக் கணக்கிட மணல் கடிகாரங்களைப் பயன்படுத்தினார்கள்.
கப்பலில் சிறிய இரும்பு பீரங்கிகளும், நீளமான துப்பாக்கிகளும் இருந்தன. கடற்கொள்ளையகளிடமிருந்து பாதுகாக்கவும் புதிய நிலத்தில் ஏதேனும் எதிர்ப்புகள் உண்டானால் சமாளிக்கவும் அவை கொண்டு செல்லப்பட்டன. துப்பாக்கிகள் நனைந்துவிட்டால் உபயோகிக்கவென்று பலவகையான வில்லும் அம்புகளும் கொண்டு செல்லப்பட்டன.
உயரதிகாரிகளின் அதிகாரத்தின் அடையாளமாக இருபக்கக் கூரான எஃகுவாள்கள் மற்றும் கூரான கத்திகள் கொண்டு செல்லபட்டன. எஃகு வாட்களை கொலம்பஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் எப்போதும் இடுப்பில் அணிந்திருந்தார்கள்.
குறைந்த இடப்பரப்பில் கப்பலின் கயிறுகளுக்கிடையே சண்டையிட ஏற்ற வளைந்த வாட்களும் அதிகம் இருந்தன. பெரும்பாலும் அனைவரிடமும் கயிற்றை அறுக்கவும், உணவை வெட்டவும் தற்காப்பிற்கெனவும் குத்துக்கத்திகள் இருந்தன.
கொள்ளைக் கப்பல்களிலிருந்து எதிரிகள் கப்பலுக்குள் நுழைய முயன்றால், அவர்களைத் தூரத்திலிருந்தே தடுப்பதற்காக நீண்ட மரக் கம்புகளையுடைய ஈட்டி போன்ற ஆயுதங்களும் கப்ப்பலில் இருந்தன.
எஃக்கில் செய்யப்பட்ட தலை மற்றும் மார்புக்கவசங்களும், லகுவான இரும்பில் செய்யப்பட்ட உடலைமூடும் கவசங்களும் போதுமான எண்ணிக்கையில் கப்பலில் இருந்தன
90 பயணிகளுக்குத் தேவையான உணவுப்பொருட்களுடன் புதிய நிலத்தில் சந்திக்கவிருக்கும் சாதாரண மக்களுக்காகவும் இனக்குழுத் தலைவர்களுடன் நட்புறவை உருவாக்கவும், பண்ட மாற்றுக்கெனவும் பல வகையான பரிசுப்பொருட்களையும் கொலம்பஸ் கொண்டு சென்றார்.

கேஸ்கபெல்ஸ் எனப்படும் வேட்டைப்பறவைகளின் கால்களில் கட்டிவிடபப்டும் மணிகள் (Hawk’s Bells – Cascabeles) ஏராளமாகக் கொண்டு செல்லப்பட்டன. இவை தேவாலய மணிகளைப்போல அடிப்பகுதி திறந்தவை அல்ல, ஒரு உருண்டையான வெண்கல அல்லது செம்பு- துத்தநாகக் கலவையில் செய்யபட்ட மணியினுள்ளே சிறு கல்லோ அல்லது உலோக உருண்டையோ வைக்கப்பட்ட, சிறு பிளவைக்கொண்ட, மூடிய பளபளப்பான மணி வடிவம் கொண்டவை அவை. இம்மணிகள் ஜெர்மனியிலும் வடக்கு இத்தாலியிலும் மிக அதிகமாக உருவாக்கப்பட்டன. வேட்டைக்கு பழக்கும் பறவைகளின், குறிப்பாக ராஜளியைப் போன்ற பறவைகளின் கால்களில் கட்டிவிடப்படுபவை இவை.
கயிற்றில் கோர்த்து பலவகையான ஆபரணங்களை உருவாக்கிக்கொள்ள சிவப்பு பச்சை மற்றும் நீல நிறங்களில் கண்ணாடி மணிகள் அதிகம் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த மணிகள் வெனிஸின் முரானோ தீவில் மட்டுமே உருவாக்கப்பட்டன. பழங்குடியினர் வான் மற்றும் நீரைக்குறிக்கும் நீல நிறத்தை விரும்புவார்கள் என்பதால், நீலக்கண்ணாடி மணிகளை கொலம்பஸ் மிக அதிகமாக எடுத்துக்கொண்டார்.
இனக்குழுத் தலைவர்களை சந்தித்தால் கொடுக்கவென அடர் சிவப்புச் சாயமிடப்பட்ட கம்பளித்தொப்பிகளையும் கொலம்பஸ் எடுத்துச்சென்றார். ஐரோப்பாவில் தலையணி என்பது நேரடியாக சமூக அந்தஸ்தின் உயரத்தைக் குறித்தது, எனவே அப்படியான தொப்பிகளை தலைவர்களுக்கு அளித்து அவர்களுக்கு ஐரோப்பிய பாணியில் மரியாதை செய்து அவர்களின் நட்பைப் பெறலாம் என கொலம்பஸ் கணக்கிட்டார்.
விலை அதிகமில்லாத ஆனால் பளிச்சிடும் வண்ணமேற்றப்பட்ட கண்ணாடி வளையங்கள். சிறு மோதிரங்களையும் அவர் எடுத்துச் சென்றார்
ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட, தங்கம் போலவே மின்னும், மெருகேற்றப்பட்ட வெண்கல வளையங்கள், உடைகளில் தைத்துக் கொள்ளும் ஊசிகள் மற்றும் Aglets எனப்படும் ஷூ நாடாக்களின் முனையில் இருக்கும் உலோக உறைகளையும், உயர்தரத் துணிகளில் சில வகைகளையும் கொலம்பஸ் ஏராளமாகக்கொண்டு சென்றார்.

கண்ணாடி மற்றும் பீங்கானில் செப்யப்பட்ட மதுக்குடுவைகள் கிண்ணங்கள் ஆகியவற்றை ஸ்பெயினிலிருந்து எடுத்துச் சென்ற கொலம்பஸ் கடற்பயணத்தில் உடைந்திருந்த அவற்றின் சிலதுண்டுகளை கேனரித் தீவுகளில் வீசியெறிந்த போது மற்பாண்டங்களை மட்டுமே பார்த்திருந்த கேனரித் தீவுவாசிகள் அவற்றை மிக ஆர்வமாகப் பொறுக்கி எடுத்துச் சேகரித்துக் கொண்டதைப் பார்த்தார். எனவே உடைந்த அந்தத்துண்டுகளையும் பரிசளிக்கலாம் என்று கண்டுகொண்டு, மீதமுளள உடைந்தவற்றை வீசியெறியாமல் அவற்றையும் பாதுகாத்து வைத்துக்கொண்டார்.
வெறும் 60 அடி நீளமிருந்த சாண்டா மரியா மற்றும் அதைக் காட்டிலும் சிறிய, 50 அடி நீளமேயிருந்த பிண்டா, நீனா கப்பல்கள் மூன்றுமே மனிதர்களுக்கான பயணக்கப்பல்கள் அல்ல. அவை மூன்றுமே பொருட்களை வைப்பதற்கான பெரிய இடங்கள் இருந்த, மனிதர்களுக்கான அறைகள் மிகச்சிலவே இருந்த சரக்குக் கப்பல்கள். அதில் ஒரு கப்பலுக்கு 30 பயணிகளும் ஏராளமான குடிநீர் மற்றும் பானங்களுக்கான பீப்பாய்களும், உணவுப்பொருட்களும், பரிசுப்பொருட்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் மிக நெரிசலாகத்தான் பயணிகள் அதில் இருந்தார்கள்.
பயணிகள் உண்பது, உறங்குவது, வேலை செய்வது, இயற்கை உபாதைகளைக் கழிப்பது என அனைத்துமே பிறர் கண்முன்பாகத்தான் செய்யவேண்டி இருந்தது. உடைகளை மாற்றாமல் ஒவ்வொருவரும் அழுக்கு நாற்றமடித்தார்கள்.
கப்பலின் அடித்தளத்தில் கடலின் கசிவுநீர், கழிவு நீர், எலிகளின் எச்சம், உணவுமிச்சம் ஆகியவை சேர்ந்து தேங்கி நின்று அடித்த வீச்சம், இவற்றோடு ’’புதியநிலத்தை காண்பது’’ என்பதிலிருந்த நிச்சயமற்ற தன்மையும் சேர்ந்து கொண்டு பயணிகளும் மாலுமிகளும் கடும் உளவியல் சிக்கல்களில் இருந்தார்கள்.
இந்த மூன்று கப்பல்களும் எப்போதும் மிக அருகருகே இணையாகப் பயணிக்கவில்லை, அவை “காணக்கூடிய தூரத்தில்” இருக்குமாறு ஒரு குழுவாகப் பயணித்தன. சிறிய கப்பலான ‘பிண்டா’ மற்ற இரு கப்பல்களை விட வேகமாக முன்னால் செல்லும். இது புதிய நிலத்துக்கான அடையாளங்களையோ, ஆபத்தான பாறைகளையோ முதலில் கண்டறிய உதவியது. எனவே முன்னோடிக்கப்பலாக எப்போதும் பிண்டா இருந்தது.
கொலம்பஸ் இருந்த ‘சாண்டா மரியா’ தான் தலைமைக்கப்பல். இது மையப்பகுதியில் அல்லது சற்றே பக்கவாட்டில் செல்லும். மற்ற இரண்டு கப்பல்களும் இதைப் பின்பற்றியே திசையை அமைத்துக்கொண்டன.
இரவில் விபத்துகளைத் தவிர்க்கவும், வழிதவறிப் போகாமல் இருக்கவும் கப்பல்கள் தங்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்துக்கொண்டு மிக மெதுவாகச் சென்றன, பகல் நேரத்தில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் கொண்ட கொடிகளை அசைப்பதன் மூலம் கப்பல்களுக்கிடையே செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இரவு நேரத்தில் பெரிய விளக்குகளை உயர்த்துவதன் மூலமோ அல்லது மறைப்பதன் மூலமோ சமிக்ஞைகள் கொடுக்கப்பட்டன. ஏதாவது அவசர நிலை என்றால் துப்பாக்கி அல்லது பீரங்கியை வெடிக்கச் செய்து சத்தம் எழுப்பப்பட்டது.
கப்பல்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில் வரும்போது குறிப்பாகக் கடல் அமைதியாக இருக்கும்போது, மாலுமிகள் சத்தமாக மெகாபோன் போன்ற வாயகன்ற ஒரு குழாய் வழியாக தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
குறிப்பிட்ட கால இடைவெளியில், மாலை நேரங்களில் மற்ற இரண்டு கப்பல்களின் கேப்டன்களும் கொலம்பஸின் ‘சாண்டா மரியா’ கப்பலுக்கு அருகே வருவார்கள். சிறிய படகுகள் (Skiffs) மூலம் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாலுமிகள் சென்று அடுத்த கட்டபயணத் திட்டத்தைப் பற்றிப் பேசிவிட்டுத் திரும்புவார்கள்.
ஒவ்வொரு கப்பலும் அது கடந்த தூரத்தைக் கணக்கிட்டிருக்கும். மாலை நேரச் சந்திப்பின்போது, கொலம்பஸ் மற்ற இரண்டு கேப்டன்களிடமும் (பின்சோன் சகோதரர்கள்) அவர்கள் கணக்கிட்ட தூரத்தைக் கேட்டு, தனது நாட்குறிப்புடன் சரிபார்த்துக்கொள்வார்.
கொலம்பஸ் தனது குழுவை எப்போதும் ஒன்றாக வைத்திருக்கவே விரும்பினார். ஏனெனில் ஒரு கப்பல் உடைந்தால் மற்றொன்று உதவி செய்ய முடியும். யாராவது கலகம் செய்தால், மற்ற கப்பல்களின் துணையுடன் அதை அடக்க முடியும். உணவு அல்லது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் பகிர்ந்து கொள்ள முடியும்.
இருப்பினும், கொலம்பஸின் தலைமையையும் கட்டளையையும் மீறி ‘பிண்டா’ அவ்வப்போது வேகமாக முன்னால் சென்று நிலத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டது
தொடர்ந்த 33 நாட்களும், கொலம்பஸைக் கொல்லச் செய்யப்பட்ட சதிகளும், புதிய நிலத்தை காணமுடியாத மாலுமிகள் செய்த கிளர்ச்சிகளும், கொலம்பஸ் அவர்களுடன் செய்த அவசரகால ஒப்பந்தமுமாக மிகச் சவாலானதாக இருந்தன
தொடரும்…..
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
