- கொலம்பஸ்
- கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்
- பிழைகளும் கொலைமுயற்சியும்!
- டியரா டியரா!
- கன்னித்தீவு
செப்டம்பர் 6 -அக்டோபர் 12, 1492

மூன்று கப்பல்களில் இருந்த மாலுமிகளும், பயணிகளும், கேனரி தீவுகளிலிருந்து புறப்பட்டதிலிருந்தே பெரும் மனஅழுத்தத்தில் இருந்தார்கள். அவர்களில் யாரும், அதுநாள் வரை நிலத்தைக் காணாமலேயே வாரக்கணக்கில் நீர்ப்பரப்பில் இருந்ததில்லை என்பதால் அந்த பயணம் அவர்களுக்கு மிக அசாதாரணமானதாக, நிச்சயமற்றதாக இருந்தது. கையிருப்பில் இருந்த உணவுப்பொருட்கள் குறைந்து கொண்டிருந்ததாலும், நிலமே கண்ணுக்கு தெரியாததாலும் கப்பல்களில் இருந்தவர்களிடம் சொல்ல முடியாத மன அழுத்தமும், பெரும் அச்சமும் நிலவியது.
கப்பல்கள் மிதமான வேகத்தில் தான் சென்று கொண்டிருந்தன, கடற்காற்றும் அவர்களுக்கு மிகவும் சாதகமாகவே இருந்தது. தெற்கிலிருந்து மேற்குதிசை நோக்கிச்சென்ற கப்பல்களுக்கு, மிதமான வேகத்தில், கிழக்கிலிருந்து மேற்கு திசை நோக்கி வர்த்தகக் காற்று என்று அழைக்கப்பட்ட கடற்காற்று தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு சில பயணிகள் தொடர்ந்து ஒரே திசையில் காற்று வீசிக்கொண்டிருந்தால் ஒருவேளை நிலத்தைக் கண்டுகொண்ட பின்னர் ஊர் திரும்புவது எப்படி சாத்தியமாகும் என்று கவலைப்பட்டு, அந்தக் கவலையும் கப்பல் முழுக்க வேகமாகப் பரவியது.
கொலம்பஸுக்கு கப்பற்பயணிகள் பொறுமையிழந்துவிட்டார்கள் என்று தெரிந்திருந்தது, எனவே மானசீகமாக அவர்கள் தளர்ந்து விடாமல் இருக்க கப்பல்கள் கடந்து வந்திருக்கும் தூரத்தை எழுதி வைத்திருக்கும் அவரது கணக்குக் குறிப்பேட்டை இரண்டு விதமாக தயாரித்தார். உண்மையாக கடந்து வந்த தூரத்தை ரகசியமாக எழுதி வைத்துக்கொண்டு, கடந்து வந்த தூரத்தை குறைத்துக் கணக்கிட்டு அதை மாலுமிகளுக்குக் காண்பித்து இன்னும் செல்லவேண்டிய தூரம் கொஞ்சம்தான் என்று அவர்கள் நம்புமாறு செய்தார்.
அவர்களை ஏமாற்றுவதாக நினைத்த கொலம்பஸ் தானும் பூமியின் சுற்றளவைக் கணக்கிடுவதில் பெரும் பிழை செய்திருந்தார். அவரது பிழையான கணக்கீட்டினால் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்த ஆசியா மிக அருகில் இருப்பதாக அவர் நம்பினார்.
கடல் தேடற்பயண வரலாற்றில் கொலம்பஸ் செய்த இந்த கணிதப் பிழை இந்த 33 நாட்களின் பதற்றத்தையும் ஆபத்தையும் அதிகரித்திருந்தது.
ஆசியப் பகுதியின் அசலான பரப்பளவைக் கொலம்பஸ் குறைத்துக் கணக்கிட்டிருந்ததோடு, பூமியும் மிகச் சிறிது என அவர் நம்பினார். தனது இந்தக் கணக்கீடுகளை ஸ்பானிஷ் அரச குடும்பம் நம்புவதற்காக, 9-ம் நூற்றாண்டின் புவியியலாளரான அல்ஃப்ராகேனஸ் (Alfraganus-Ahmad ibn Muhammad ibn Kathir al-Farghani) என்பவரின் கருதுக்கோள்களை அரச குடும்பத்தினரிடம் உதாரணமாகக் காண்பித்திருந்தார்.
ஆனால் பூமத்திய ரேகையில் ஒரு பாகை தீர்க்கரேகையின் நீளம் சுமார் 56.67 மைல்கள் என அல்ஃப்ராகானஸ் துல்லியமாகக் கணக்கிட்டிருந்தார். அவர் கணக்கிட்டது அரேபிய மைல்களின் கணக்கீட்டில். ஒரு அரேபிய மைல் என்பது 1,973 மீட்டர்கள் (கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர்கள்).
கொலம்பஸ் குழம்பியது இங்குதான். கொலம்பஸ் பழகிய மைல் அளவான ரோமானிய/இத்தாலிய மைல் அளவென்பது வெறும் 1,480 மீட்டர்கள் மட்டுமே. இரண்டு வெவ்வேறு ‘மைல்’ அளவுகளைக் கொலம்பஸ் ஒன்று என நினைத்துக் கொண்டதுதான் அடிப்படையில் மிகப்பெரிய பிழையாக அமைந்தது.
அதாவது, ஒரு மைலுக்கு சுமார் 500 மீட்டர்களை (அரை கிலோமீட்டரை) கணக்கில் சேர்க்காமல் விட்டுவிட்டார். இந்தப் பிழையினால் ஒட்டுமொத்த பூமியின் சுற்றளவில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதால், பூமி மிகச் சிறியது என்றும், ஆசியா கண்டம் மிக அருகில் இருக்கிறது என்றும் அவர் தவறாகக் கணக்கிட்டார்.
எனவே சுமார் 40,075 கிலோ மீட்டர் பயண வழியைக் கொலம்பஸ் தவறாக வெறும் 24,000 கிலோமீட்டர்கள் என கணக்கிட்டிருந்தார்.
கேனரி தீவுகளிலிருந்து புறப்பட்ட போது ஜப்பான் அங்கிருந்து வெறும் 3,700 கிமீ தொலைவில் இருப்பதாக மாலுமிகளிடம் மிக நம்பிக்கையாகச் சொல்லிப் பயணத்தைத் துவங்கினார் கொலம்பஸ்.
அப்போது சிபாங்கோ (Cipango- ஜப்பான்) என்ற ஒரு நாடு ஆசியக் கரையில் இருப்பது ஐரோப்பியர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அது உலக வரைபடத்தில் எங்கு இருக்கிறது, எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதில் அவர்களுக்கு பெரும் குழப்பங்கள் இருந்தன.
கொலம்பஸ் வாழ்ந்த காலத்திற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே (13-ம் நூற்றாண்டில்) இத்தாலியப் பயணியான மார்கோ போலோ, சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்குத் தரைவழியாகப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியிருந்தார். அவர் தனது பயணக் குறிப்புகளில், சீனாவிற்கு கிழக்கே கடலில் “சிபாங்கு” என்றொரு தீவு நாடு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ‘சிபாங்கு’ தான் ஜப்பான்.
மார்கோ போலோ தனது புத்தகத்தில்:
“சிபாங்கு (ஜப்பான்) தீவில் தங்கம் கொட்டிக்கிடக்கிறது. அங்குள்ள அரசரின் அரண்மனை முழுவதும் சுத்தமான தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. அங்கு கணக்கற்ற முத்துக்களும் விலைமதிப்பற்ற ரத்தினங்களும் கிடைக்கின்றன” என்று எழுதியிருந்தார். இதை அறிந்தபின்னரே கொலம்பஸுக்கு ஜப்பான் மீது தீராத மோகம் ஏற்பட்டது.
The Travels of Marco Polo என்னும் மார்கோ போலோவின் பயணக்குறிப்பின் 1485-ல் வெளியான லத்தீன மொழிப்பிரதியை கொலம்பஸ் பல முறை வாசித்து அடிக்கோடிட்டும் குறிப்பெடுத்தும் வைத்திருந்தார். அவர் அதை கடற்பயணத்தின் போது எடுத்துச்செல்லாததால் இன்னுமே அந்தப் பிரதி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் பெஹைம் (Martin Behaim) என்ற புவியியலாளர் (1940-1942-ல்) உருவாக்கிய ‘எர்த் ஆப்பிள்’ (Erdapfel) எனப்படும் காகிதம் மற்றும் ஜிப்ஸம் கொண்டு உருவாக்கப்பட்ட மாபெரும் உலக உருண்டையையும், தொஸ்கநெல்லி (Toscanelli) என்ற வரைபடக் கலைஞர் 1747-ல் வரைந்த உலக வரைபடத்தையும் கொலம்பஸ் தீவிரமாக நம்பினார்.
அவற்றை அவர் கையோடு கொண்டு செல்லவில்லை எனினும் தொஸ்கனெல்லி போர்சுக்கல் அரசகுடும்பத்துக்கு 1474-ல் இண்டீஸ் தீவுகளுக்கு கடல் மார்க்கமாகச் செல்ல மேற்கு நோக்கிய பயணமே உகந்தது என்று எழுதிய கடிதம் மற்றும் அவர் உருவாக்கிய வரைபடத்தின் பிரதிகளை அவர் வைத்திருந்தார்.
அந்த வரைபடங்களில் ஒரு மிகப்பெரிய தவறு இருந்தது:
அமெரிக்கா என்ற கண்டமே அதில் இல்லை! அட்லாண்டிக் கடலுக்கு நேர் அக்கரையில் ஆசியாவும் ஜப்பானும் இருப்பதாக அவர்கள் வரைந்திருந்தனர்.
மார்கோ போலோவின் குறிப்புகளை வைத்து, ஆசியா கண்டம் , நினைப்பதை விடக் கிழக்கு நோக்கி மிக நீளமாக நீண்டு பரவியிருக்கிறது என்றும், ஜப்பான் தீவு சீனாவிலிருந்து இன்னும் கொஞ்சம் தள்ளி ஐரோப்பாவிற்கு மிக அருகில் (அட்லாண்டிக் கடலின் மறுபுறம்) இருக்கிறது என்றும் அதில் தவறாகக் கணக்கிடப்பட்டிருந்தது.
பூமியின் அளவை கொலம்பஸ் தவறாகக் கணக்கிட்டது ஒருபுறமிருக்க, கடலில் பயணம் செய்த அந்த 33 நாட்களில் உணவிலும், மனநிலையிலும், இயற்கையிலும் ஏராளமான விசித்திரங்கள் நடந்தன.
செப்டம்பர் 13 லிருந்து 17ம் தேதி வரையில், அட்லாண்டிக் கடலின் மத்தியில் கப்பல்கள் இருந்தபோது, மாலுமிகளின் காம்பஸ் ஒவ்வொரு நாள் மாலையிலும் நேராக வடக்குத் திசையைக் காண்பிக்காமல் சற்றே விலகி வடமேற்கைக் காண்பித்தது. அக்காலத்தில் காம்பஸ் எனும் திசைகாட்டும் கருவி கடவுளின் அருளால் செயல்படும் ஒரு மந்திரக் கருவியாகவே மாலுமிகளால் நம்பப்பட்டது. அது திசையை மாற்றிக் காண்பித்ததால், கப்பல்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்படாத, கடவுளின் ஆளுகைக்கு அப்பாற்பட்ட, மனிதர்கள் வசிக்க முடியாத ஒரு பிரதேசத்தை நோக்கிச் செல்வதாக அனைவரும் அச்சமுற்றனர்.
உண்மையில் அட்லாண்டிக் கடலின் மத்தியில் காந்தப்புலத்தின் உண்டான மாறுபாட்டினால் காம்பஸ் அப்படித் திசையைச் சற்றே மாற்றிக் காட்டியது என்பதை அவர்களால் அச்சமயத்தில் புரிந்துகொள்ள முடியவில்லை.
கொலம்பஸ் அதற்கும் தந்திரமாகக் ஒரு திட்டம் தீட்டி, காலையில் காம்பஸ் சரியாகத் திசையைக் காட்டுவதைச் சுட்டிக்காட்டி, இரவில் வடவிண்மீன்கள்தான் சற்று விலகின, காம்பஸ் சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டினார்.
பயணத்தின் ஆரம்ப நாட்களிலேயே, செப்டம்பர் 15 அன்று நடுக்கடலில் அவர்கள் ஒரு விசித்திரமான இயற்கை நிகழ்வைக் கண்டனர். வானத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான விண்கல் கப்பலுக்குச் சற்றுத் தொலைவில் கடலில் விழுந்தது.

ஏற்கனவே பயத்தில் இருந்த மாலுமிகள், “இது கடவுள் நமக்குக் கொடுக்கும் எச்சரிக்கை! நாம் எல்லையைத் தாண்டிச் செல்வதால் வானமே இடிந்து விழுகிறது” என்று அலறினார்கள். ஆனால் கொலம்பஸ், அது ஒரு சாதாரண வானியல் நிகழ்வுதான் என்று கூறி அவர்களை அமைதிப்படுத்தினார்.
செப்டம்பர் மாதத்தின் 3 வது வாரத்தில் (செப்டம்பர் 16-லிருந்து) மூன்று கப்பல்களும் வடக்கு அட்லாண்டிக்கின் மாபெரும் கடல்வெளியான சார்கோஸாவுக்குள் நுழைந்தது. பெரும் விசைகளோடு மோதும் அலைகளையே எல்லைகளாகக் கொண்ட சார்கோஸா கடல்வெளியெங்கும், மாபெரும் பாய்களாக பச்சையும் மஞ்சளுமாக பழுப்பு நிற சர்காஸம் கடற்பாசிகள் அடர்த்தியாகப் காடுபோலப் பரவியிருந்தது. இதைப் பார்த்த பயணியர் முதலில் மகிழ்ந்து கூச்சலிட்டு ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு கூத்தாடினார்கள்.
ஏனெனில் கடற்பாசிகள் தென்படுவது பொதுவாக அருகில் நிலமிருப்பதன் அடையாளம் என நம்பப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல தொடுவான் வரையிலுமே வெறும் பாசிப்படலமே தெரிந்து நிலம் இருப்பதற்கான அறிகுறியே தென்படாதபோது அவர்கள் மீண்டும் மனச்சோர்வுக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளானார்கள்.
பலருக்கு அந்தப் பாசிப்படலத்தில் கப்பல்கள் நிரந்தரமாகச் சிக்கிக்கொள்ளும், குடிநீரும் தீர்ந்து அங்கேயே இறக்கப் போகிறோம் என்னும் அச்சமும் பீடித்தது.
பல மாலுமிகளுக்கு ஒரு பயங்கரமான சந்தேகம் வந்தது. கடலின் அடியில் ஏதோ பெரிய மலை அல்லது மணல் திட்டு இருப்பதால்தான் இவ்வளவு பாசிகள் வளர்கின்றன என்று நினைத்தார்கள். கப்பலின் அடிப்பகுதி இந்த மணல் திட்டில் மோதி உடைந்துவிட்டால், நடுக்கடலில் மூழ்கிவிடுவோம் என்று பயந்தனர்.
கொலம்பஸ் ஒரு நீண்ட கயிற்றில் எடையைக் கட்டி கடலின் ஆழத்தைச் சோதித்துப் பார்த்தார். கயிறு அடியில் எதையுமே தொடவில்லை. அது ஒரு மிக ஆழமான பெருங்கடல் பகுதி என்பதை உறுதி செய்து, மாலுமிகளின் பயத்தைப் போக்கினார்.
ஆனாலும் கடல்நீரைத் தவிர வேறெதையும் காணாத நாட்கள் அவர்களுக்குள் பெரும் பதட்டத்தை உருவாக்கி இருந்தது. செப்டம்பர் மாத இறுதியில் கொலம்பஸின் குறைத்துக் காட்டப்பட்ட கணக்குமே அவர் பயணிகளுக்கு சத்தியம் செய்துகொடுத்த நாட்களை விட அதிகமாக இருந்தது.
செப்டம்பர் 21ம் தேதியிலிருந்து, கப்பல்களைச் சுற்றி பல திமிங்கிலங்கள் நீந்தத் துவங்கின. இதைப் பார்த்த மாலுமிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஏனெனில், ஐரோப்பிய மாலுமிகளின் நம்பிக்கையில், திமிங்கிலங்கள் எப்போதும் ஆழமில்லாத, கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில்தான் வாழும். “திமிங்கிலங்கள் வந்துவிட்டன, எனவே நிலம் மிக அருகில் இருக்கிறது” என்று அவர்கள் மகிழ்ந்தனர். ஆனால், அவை திறந்த பெருங்கடலில் வாழும் திமிங்கிலங்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. மீண்டும் நிலம் தட்டுப்படாதபோது அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த ஏமாற்றமும் அவர்களின் கோபத்தை அதிகமாக்கியது.
செப்டம்பர் மாத இறுதியில், மாலுமிகள் திடீரென்று, “அதோ நிலம்! அதோ மலைத்தொடர் தெரிகிறது!” என்று கத்துவார்கள். எல்லாரும் ஓடிவந்து பார்ப்பார்கள். தூரத்தில் ஒரு தீவு இருப்பது போல அச்சு அசலாகத் தெரியும்.
ஆனால், கப்பல் நெருங்கிச் செல்லச் செல்ல அது மறைந்துவிடும். உண்மையில் அவை நிலமே அல்ல, வெறும் மேகக் கூட்டங்களின் நிழல்கள் அல்லது கடலின் உஷ்ணத்தால் காற்றில் ஏற்படும் கானல் நீர் போன்ற தோற்றங்கள்.
ஒரே வாரத்தில் மூன்று முறை இப்படி “பொய் நிலம்” பார்த்து ஏமாந்ததால், மாலுமிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதனால் “இனிமேல் யாராவது நிலம் பார்த்துவிட்டதாகப் பொய் சொன்னால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசரின் பரிசுத்தொகை ரத்து செய்யப்படும்!” என்னும்புதிய உத்தரவை கொலம்பஸ் பிறப்பித்தார்.
அக்டோபர் 4 அன்று அதிகாலையில், மாலுமிகள் கப்பலின் மேல் தளத்தில் நூற்றுக்கணக்கான விசித்திரமான மீன்கள் விழுந்து துடிப்பதைக் கண்டனர். அவை பறக்கும் மீன்கள்.
கடலில் கொன்று தின்னிப்பறவைகளிடமிருந்து தப்பிக்க இவை காற்றில் சில நூறு மீட்டர்கள் பறக்கும் தன்மை கொண்டவை. அவை பறக்கும்போது எதிர்பாராமல் கொலம்பஸின் கப்பல் தளத்தில் வந்து விழுந்துவிட்டன. பசி மற்றும் சலித்துப்போன ஒரே வகையான உணவால் வாடிக்கொண்டிருந்தவர்களுக்கு, இந்த மீன்கள் ஒரு சுவையான விருந்தாக அமைந்தன. மாலுமிகள் தற்காலிகமாக மகிழ்ச்சியடைந்தனர்.
மீண்டும் கடல்நீரை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததில் அக்டோபர் முதல் வாரத்தில் (அக்டோபர் 9-10) பயணியர்களின் அச்சம் கொந்தளிப்பாக மாறி உச்சம் தொட்டது. குழுக்களாக அமர்ந்து ரகசியமாக தங்களுக்குள் விவாதித்துக்கொண்ட அவர்கள் அப்போது திரும்பினால் கூட நாடுபோய்ச் சேரும் வரை அவர்கள் உயிரோடு இருக்க அந்த உணவுகள் கைகொடுக்கும், மாறாக நிலத்தைக் காண நிச்சயமற்ற அந்தப்பயணம் தொடர்ந்தால் பட்டினியில் சாகவேண்டியதுதான் என்று உறுதியாக நம்பினார்கள். திரும்பும் பயணத்துக்கு கொலம்பஸ் ஒத்துக்கொள்ளாவிட்டால் கலகம் உண்டாக்கலாம் என்றும் திட்டம் தீட்டப்பட்டது.
நாட்கள் செல்லச்செல்ல மாலுமிகளின் மிகப்பெரிய கவலை நன்னீர் தீர்ந்துவிடுமோ என்பதாக ஆனது.. மரப்பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் நாட்கள் செல்லச் செல்ல, வெயிலின் உஷ்ணத்தால் பாசி பிடித்து, ஒருவித வழுவழுப்புத் தன்மையோடு நாற்றமடிக்கத் துவங்கியது.
கொலம்பஸ் அந்தத் தண்ணீரையும் மிகக் குறைவாகவே மாலுமிகளுக்குப் பங்கீடு செய்தார்.
மாலுமிகளுக்குக் கொடுக்கப்பட்ட உப்பிலிட்ட இறைச்சியும் காய்ந்த பிஸ்கட்டுகளும் அவர்களின் தாகத்தை இன்னும் அதிகமாக்கின. “தண்ணீர் தீர்ந்துவிட்டால் நடுக் கடலில் தாகத்தால் சாக வேண்டியதுதான்” என்ற பயம் அக்டோபர் 5 வாக்கில் உச்சத்தை அடைந்தது.
பயணம் 25 நாட்களைத் தாண்டியபோது, தண்ணீர் கெட்டுப்போனது போலவே, கப்பலில் பீப்பாய்களில் இருந்த வைனும் கடுமையான வெயிலால் புளிக்கத் தொடங்கியது.
மாலுமிகளுக்குக் கொடுக்கப்பட்ட வைனில் வண்டல்களும், மரப்பீப்பாயின் துகள்களும் கலந்து குடிக்க முடியாத அளவுக்கு மாறியது. இதனால் கப்பலின் சமையல்காரர்கள் தடிமனான துணிகளைக் கொண்டு வைனை வடிகட்டி, அதில் லேசாகக் கடல் நீரைக் கலந்து மாலுமிகளுக்குக் கொடுத்தனர். இந்த விசித்திரமான பானத்தைக் குடித்த மாலுமிகள், போதை மற்றும் சோர்வினால் பகலில் அதிக நேரம் தூங்கத் தொடங்கினர். இதுவும் அவர்கள் கப்பலில் புரட்சி செய்வதைத் தள்ளிப்போட ஒரு மறைமுகக் காரணமாக அமைந்தது!
காற்று பலமாக வீசிய நள்ளிரவுகளில், பாய்மரக் கம்புகளில் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தடிமனான கயிறுகள் காற்றில் உராய்ந்து ஒரு விசித்திரமான ஓசையை எழுப்பின. இருண்ட நடுக்கடலில், அது ஏதோ ஆவிகள் அலறுவது போலவோ அல்லது கடல் அரக்கர்கள் கத்துவது போலவோ மாலுமிகளுக்குக் கேட்டது.
மூடநம்பிக்கைகள் நிறைந்த 15-ம் நூற்றாண்டு மனிதர்களான அந்த மாலுமிகள், இரவு நேரத்தில் பயத்தால் அழுதுகொண்டே கடவுளை வேண்டத் தொடங்கினர். இந்த பயம் அவர்களை மனரீதியாக ஒடுக்கியதால், அவர்களால் ஒருங்கிணைந்து கொலம்பஸை எதிர்க்கும் தைரியம் இல்லாமல் போனது.
சில நாட்களில் காற்று முற்றிலும் நின்று போய், கடல் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போல அசைவற்று நின்றது. பாய்மரக் கப்பல்கள் நகர்ந்துசெல்ல காற்று இன்றியமையாதது. காற்று நின்றதால், கப்பல்கள் ஒரே இடத்தில் பல நாட்கள் தேங்கி நின்றன.
சுற்றிலும் எல்லையற்ற கடல், குடிக்கப் பழுதான தண்ணீர், நகர மறுக்கும் கப்பல், இந்த ‘அமைதி’ மாலுமிகளை அதிகம் பைத்தியமாக்கியது. “நாம் ஏதோ சாபக்கேடான பகுதிக்குள் வந்துவிட்டோம், இனி இங்கிருந்து நகரவே முடியாது” என்று அவர்கள் அலறினார்கள்.
சில நாட்களில் கொலம்பஸ் என்னும் இத்தாலியப் பைத்தியக்காரர், ஸ்பேனிஷ் அரசகுடும்பத்தை ஏமாற்றி, தங்களையும் அந்தத் திரும்பாப் பயணதில் ஈடுபடச்செய்திருப்பதாக பலரும் பேசிக்கொண்டனர். உயிரச்சத்தில் இருந்த அவர்களில் பலர் மிக வெளிப்படையாகவே கொலம்பஸுக்கு எதிரான கலகத்துக்கு அடித்தளமிட்டார்கள்.
அச்சத்தின் உச்சியில் இருந்த சாண்டா மரியாவின் மாலுமிகள் சிலர் கொலம்பஸை கப்பலிலேயே கொன்று அவரது உடலை கடலில் வீசிவிட்டு நாடு திரும்பலாம் என்று தீவிரமாக திட்டம் தீட்டினார்கள்.
புதியநிலத்தை கண்டுவிட்டு ஸ்பெயின் திரும்பிய மாலுமிகளையும் கொலம்பஸையும் பேட்டிஎடுத்த வரலாற்றுப்பதிவாளர் பீட்டர் (Peter Martyr d’Anghiera) அவர்கள் கொலம்பஸைக் கொன்று கடலில் வீசப் போட்ட திட்டங்களை தன்னிடம் மிக வெளிப்படையாக சொன்னதை பதிவு செய்திருக்கிறார்.
இருட்டில் கொலம்பஸை கடலில் தள்ளி விட்டுவிட்டு பிற்பாடு ஸ்பானிஷ் அரசவையில், கப்பலின் விளிம்பில் நின்று கொண்டு விண்மீன்களை அவதானித்து திசையை கணித்துக் கொண்டிருக்கையில் திடீரென கப்பல் தள்ளாடி கொலம்பஸ் கடலில் வீழ்ந்து விட்டார் எனச்சொல்லலாம் என்று தாங்கள் முடிவு செய்திருந்ததையும் அவர்கள் சொன்னார்கள்.
மாலுமிகள் இந்த திட்டத்தையும் கொலம்பஸுக்கு எதிராக கலவரம் செய்யவிருப்பதையும் மார்டின் பின்ஸோனிடம் தெரிவித்தபோது அவர் அதைக் கடுமையாக எதிர்த்து, கலவரம் செய்பவர்களை தூக்கிலிட முன்பே கொலம்பஸ் முடிவு செய்திருப்பதாகச் சொல்லி அவர்களை அச்சமூட்டி தற்காலிகமாக அமைதிப்படுத்தினார். மேலும், நம்பிக்கை இழக்கவேண்டாம் கொலம்பஸ் நிச்சயம் ஒரு புதிய நிலப்பரப்பை கண்டடைவார் என அவரும் திரும்பத்திரும்ப மாலுமிகளிடம் சொன்னார்.
பின்ஸோன் சகோதரர்கள் மீது அனைவரும் நல்ல மரியாதையும் அன்பும் கொண்டிருந்ததால் அந்த கலவரமுயற்சியும் கொலைமுயற்சியும் அப்போதைக்கு கைவிடப்பட்டது.
கொலம்பஸ் பயணம் செய்த சாண்டா மரியா ஒரு கனமான சரக்குக் கப்பல் ஆனால், மற்ற இரு கப்பல்களான நினா மற்றும் பிண்டா ஆகியவை ‘காரவெல்’ வகைச் சிறிய, அதிவேகக் கப்பல்கள்.
நடுக்கடலில் பல நாட்கள் பலத்த காற்று வீசியபோது, பிண்டா கப்பல் மிக வேகமாக முன்னேறிச் சென்றது. சாண்டா மரியா பின் தங்கியது. கொலம்பஸ் தன் நாட்குறிப்பில், “என் கப்பல் மிக மெதுவாகச் செல்கிறது, பிண்டாவின் கேப்டன் மார்ட்டின் பின்சோன் என்னை மதிக்காமல் வேகமாக முன்னேறிச் செல்கிறான்” என்று ஆத்திரத்துடன் எழுதியிருந்தார்.
மாலுமிகளின் கிளர்ச்சி குறித்த பயம் ஒருபுறமிருக்க, தன் சக கேப்டன்களே தனக்குக் கட்டுப்படாமல் நிலத்தைத் தேடி முந்திக்கொண்டு ஓடுகிறார்களோ என்ற பயமும், சந்தேகமும் கொலம்பஸுக்குள் அந்த 33 நாட்களும் ஓடிக்கொண்டே இருந்தது.
அதன் பிறகு நடந்தவைகள் தான் உலக வரலாற்றை மாற்றியமைத்தன.
தொடரும்……..
Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.
