பாட்டுத் தொழிற்சாலை

This entry is part 10 of 10 in the series காப்பிரைட் கதைகள்

டின் பான் ஆலி

பண்டிகை நேரங்களில் துணிமணி வாங்க ரங்கநாதன் தெரு, காய்கறிகள் வாங்கக் கோயம்பேடு என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. கோயம்பேட்டின் சூழல், ஆரவாரம், ஆட்கள், மணம்  என ஒவ்வொன்றும் காய்கறிச் சந்தையைப் படம்பிடித்துக் காட்டும். பாட்டுக்கள் வந்து சேர்ந்து பல இடங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் ஒரு சந்தையைக் கற்பனை செய்து பாருங்கள். அதுவே நியூயார்க் நகரின் வெஸ்ட் 28 ஆம் தெரு.

நியூயார்க் 1903. மன்றோ அந்தக் கட்டிடத்தின் குறுகலான படிகளில் ஏறிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்தார் பெர்ன்ஸ்டைன். அந்தக் கட்டிடத்தில் இருந்து பலவிதமான சத்தங்கள் வந்து கொண்டிருந்தன.

மன்றோ, அவ்வப்போது பாடல்கள் எழுதும் ஒரு பத்திரிகையாளர். அல்லது, அவ்வப்போது செய்திதாள்களுக்குக் கட்டுரைகள் எழுதும் ஒரு இசைக்கலைஞர். அமெரிக்காவிற்கான இசை உருவாகும் தொழிற்சாலைகள் குறித்து செய்தித்தாள் கட்டுரை எழுத நினைத்தார். பெர்ன்ஸ்டைன் அவருக்கு உதவ ஒப்புக் கொண்டார். பெர்ன்ஸ்டைன் அங்கே அலுவலகம் நடத்திவரும் ஒரு பதிப்பாளர்.

West 28th Street, NewYork: Public domain, via Wikimedia Commons

பெர்ன்ஸ்டைனின் அலுவலகம் அந்தத் தெருவில் இருந்த மற்ற எந்த ஒரு கட்டிடம் போலவே காட்சியளித்தது, மன்றோ உள்ளே நுழையும் வரை. உள்ளே நுழைந்த மன்றோ கேட்ட ஒலியை அதுவரை கேட்டதில்லை.

அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு அறையிலும் ஒரு பியானோ இருந்தது. விலை மலிவான, சிறிய வகைப் பியானோக்கள். வாசித்து வாசித்து பியானோவின் கட்டைகள் தேய்ந்தும் தளர்ந்தும் இருந்தன. ஒரு அறையில் இருந்து நடன இசை. மற்றொரு அறையிலிருந்து வேறுவகை இசை. ஒரே இடத்தில் பல கலைஞர்கள் தங்கள் முன் இருந்த பியானோவில் பாடல் மெட்டுக்களைத் தேடிக்கொண்டிருந்தனர்.

“பாத்திரங்களைப் போட்டு உருட்டுவதைப் போல் இருந்தது” என்று எழுதினார் மன்றோ. (Like tin pans banging together). பெர்ன்ஸ்டைன் அதைக் கேட்டுச் சிரித்தார். ஆனால், அந்தப் பெயர் வரலாற்றில் நிலைத்தது. ‘டின் பான் ஆலி’ என்பது அந்தப் பகுதியின் பெயராகவே மாறியது பின்னாட்களில். அந்தப் பகுதிக்கான பெயர் மட்டுமல்ல, அமெரிக்கப் பாப் இசைத் துறையின் பெயராகவும் மாறியது.

பெர்ன்ஸ்டைன் தனது அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் மன்றோவை அழைத்துச் சென்றார்.

ஒரு அறையின் கதவைத் திறந்தார். அங்கு அமர்ந்திருந்த இளைஞன் மனதில் தோன்றிய மெட்டு மறைவதற்குள் அதைக் குறித்துக் கொள்ளவேண்டும் என்ற வேகத்தில் எதையோ பாடிப்பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். மற்றொரு அறையில் ஒரு கவிஞன் வெற்றுக் காகிதத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான், எதுகை மோனையுடன் சண்டையிட்டபடி. மற்றொரு அறையில் இருந்த இளம்பெண் ஒருவள், பாடிய ஒரே வரியை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்தாள். இசையமைப்பாளர் ஒருவர் அங்குமிங்குமாக மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடலை அவளது குரலுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தார்.

“இப்படித்தான் பாடல்கள் தயாராகின்றன” என்றார் பெர்ன்ஸ்டைன், மன்றோவைப் பார்த்தபடி. அப்படித்தான் அந்தப் பகுதியில் இருந்த பல பதிப்பகங்களும் இயங்கிவந்தன. இசைக்கலைஞர்கள் காலை பணிக்கு வருவார்கள். தங்கள் பியானோக்கள் முன் அமர்ந்து, கொடுக்கப்பட்ட பாடல் பணியை முடிப்பார்கள். என்ன பாடல் வேண்டும், அவை எப்படி இருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். திடீரென்று ஒரு பதிப்பாளர் வருவார். “நாளை மாலைக்குள் எனக்கு ஒரு நடனப் பாடல் வேண்டும்” என்று சொல்லிச் செல்வார். மற்றொருவர் “வரும் சனிக்கிழமைக்கு முன், ஓரு பெண் பாடும் வலி நிறைந்த காதல் பாடல் ஒன்று வேண்டும்” என்பார். இசைக்கலைஞர்கள் இந்தப் பாடல்களைத் தயார் செய்வார்கள். பதிப்பாளருக்குப் பிடித்திருந்தால் சரி, இல்லையென்றால் மறுநாள் மீண்டும் முயற்சி செய்வார்கள்.

மன்றோ அந்தத் தொழிற்சாலையை சட்டெனப் புரிந்து கொண்டார்.  நமது கோவில் திருவிழா ஒன்றிற்குப் பாட்டுக்கட்ட பல கலைஞர்கள் ஒரு இடத்தில் கூடியிருந்தால் எப்படி இருக்கும்? கவிஞர், இசையமைப்பாளர் அவர்கள்தாம் அலுவலகம் என்ற சூழலில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக இருக்கும் அந்தப் பட்டறை. ஏறத்தாழ இதுவே டின் பான் ஆலி. கோவில் திருவிழாவிற்கும் டின் பான் ஆலிக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். டின் பான் ஆலி வருடம் முழுதும் இயங்கும்.

1880 ல் உருவான இந்தப் பாட்டுப் பட்டறை 1890 ல் முழுமையாக வளர்ந்திருந்தது. இசைக்கலைஞர்கள் தனிமையில் பாடல் எழுதி, மெட்டுக்கட்டி ஒரு பதிப்பாளரிடம் கொண்டுவந்து கொடுப்பதைவிட, அனைவரும் ஓரிடத்தில் இருந்து விவாதித்து, பாடல்களை உருவாக்குவது எளிமையாக இருந்தது. ஜெயமோகன் அவரது  வீட்டில் தனிமையில் இருந்து எழுதினால் அது நாவல். சென்னைக்கு வந்து திரைக் குழுவினருடன் கூடி விவாதித்து, நீட்டியும் குறைத்தும் எழுதினால் அது திரைக்கதை வசனம். டின் பான் ஆலி இரண்டாவது வகை. வியாபாரம்.  வேகம், கூடிச்செய்தல், உதிரிப் பாகங்களைக் கொண்டு உருவாக்குதல், கழற்றி மாட்டுதல், ஒன்றைத் தேர்ந்தெடுத்தல், மற்றொன்றைக் கைவிடுதல் என ஒவ்வொன்றிலும் வேகம் அவசியம்.

“நாங்கள் கற்பனைக்காகக் காத்திருப்பதில்லை. கலைஞனின் உள்ளுணர்வு நிச்சயமற்றது. கால அட்டவணை ஒன்றே எங்களுக்கு முக்கியம்” என்று விளக்கினார் பெர்ன்ஸ்டைன்.

~o0o~

மன்றோ கட்டிடத்தின் இரண்டாம் தளத்திற்குச் சென்றார் பெர்ன்ஸ்டைனுடன். அங்கு அவர்கள் கண்டது பாடல்களை விளம்பரம் செய்யவும், பிரபலமாக்கவும் பணியாற்றிய சிலரைக் கண்டனர். அவர்கள் song pluggers -சாங் ப்ளக்கர்ஸ் என அழைக்கப்பட்டனர். நாம் இந்தப் பெயரை மொழிமாற்றம் செய்யப் போவதில்லை. அப்படிச் செய்தால் அது “போஸ்ட் மார்டனிஸம்”,  ‘பின் நவீனத்துவம்’ என்றானது போல் ஆகிவிடும். எனவே மொழிமாற்றம் செய்வதற்கு பதிலாக பதிலாக, சாங் ப்ளக்கர் என்பவர் யார் என்பதைப் புரிந்து கொள்வோம்.

ஒரு சாங் ப்ளக்கரின் பணி ஒரு பாடலை பிரபலம் ஆக்குதல். ஒலிப்பதிவு, ரேடியோ என்று எதுவும் தோன்றி இருக்காத காலம் இது என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோம். இசை நிகழ்ச்சி ஒன்றே பாடல் கேட்க இருந்த ஒரே வழி. அமெரிக்கர்கள் பாடல் கேட்க எங்கெல்லாம் செல்வார்களோ, எங்கெல்லாம் கூடுவார்களோ, அங்கெல்லாம் செல்வார்கள் சாங் ப்ளக்கர்ஸ். தீடீரெனப்  பலர் சேர்ந்து ஒரு பாடலைப் பாடி, அதை மக்கள் கேட்கும்படி செய்வார்கள். மீண்டும் மீண்டும் மக்களைக் கேட்கச் செய்தால் பாடலும், பிரச்சாரமும்  வெற்றி பெறும் என்பதால் இந்த சாங் ப்ளக்கர் பணி முக்கியமானதாக இருந்தது. 

மன்றோ கண்ட அந்த சாங் ப்ளக்கர் ஒரு இளைஞன். நன்றாக உடையணிந்து தயாராக இருந்தான். அவன் கைகளில் இருந்த தோல் பையில், சில இசைக்குறிப்புப் பிரதிகளும், அன்று இசை நிகழ்ச்சி நடக்கப்போகும் அரங்குகள் மற்றும் சில பெயர்கள் கொண்ட காகிதமும் இருந்தன. அவர்களில் சிலரைப் புகழ வேண்டியிருக்கும், சிலருக்கு அன்பளிப்பாகப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். சிலருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப பட்டியலில் இருந்த பெயர்களைப் பிரித்து வகைப்படுத்திக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

சாங் ப்ளக்கர் ஒருவர் பின்பற்றும் வழிமுறைகள் பல்வேறு வகையாக இருக்கும். பாடலின் இசைக்குறிப்பும், பணமும் சேர்த்து சுருட்டி இசைக்குழுவில் உள்ள ஒரு கலைஞனின் கைகளில் சேர்க்கப்படும். சிலநேரங்களில், முக்கியப் பாடகி அணுகப்படுவாள். பொது மக்கள் போல் தோற்றமளிக்கும் ஒருவர் எழுந்து ஒரு குறிப்பிட்ட பாடலைத் தனது விருப்பமாகக் கேட்பார். சில நேரங்களில் நான்கு பேர் தங்களுக்குள் ஒரு பாடலை புகழ்ந்து பேசிக்கொள்வார்கள் அருகில் இருப்பவர்கள் கேட்கும்படி. சாங் ப்ளக்கர் ஒருவர்க்கு எங்கு எதைச் செய்யவேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருக்கும்.

“மற்றவர்கள் எந்தப் பாடலை விரும்புவார்களோ, அந்தப் பாடலைக் கேட்கவே ஒவ்வொருவரும் விரும்புவார்” என்றும் மாறாத, ஒரு ஹிட் பாடல் உருவாகும் ரகசியத்தைச் மன்றோவிடம் சிரித்தபடி சொன்னார் பெர்ன்ஸ்டைன். மன்றோ குறிப்பெடுத்துக் கொண்டார்.

~o0o~

மூன்றாம் தளத்தில் பெர்ன்ஸ்டைனின் முகமும் தொனியும் மாறியிருந்தன.

அறைகள் சிறிதாக இருந்தன. பியானோக்கள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. இளைஞர்களில் சில இளம் பெண்களும் இருந்தனர்.  அவர்கள் இசைக்கலைஞர் ஆகும் கனவுகளுடன் நியூயார்க் வந்திருந்தவர்கள். உதவி இசைக்கலைஞர்களாக அங்கு பணியாற்றி வந்தனர்.  குறை சம்பளம், தொடர் வேலை. ஒரு பாடல் வெற்றி பெற்றால் அது பதிப்பாளர் பெர்ன்ஸ்டைனுக்குப் பெரும் பொருள் ஈட்ட உதவும். 

“ஒரு பாடல் வெற்றியடைந்தால் இந்தக் கலைஞர்கள் என்ன பலன் பெறுவார்கள்?” இது மன்றோவின் கேள்வி.

பெர்ன்ஸ்டைன் தயங்காமல் சொன்னார், “இவர்கள் பெரும் ஊதியம் அவர்கள் வாழ்வாதாரத்திற்குப் போதுமானது. பாடல்கள் பதிப்பாளருக்குச் சொந்தம். வெற்றி பெரும்  பாடல் பதிப்புகள் விற்பனை லாபம் பதிப்பாளருக்கே உரியது.”

பதிப்பாளர்கள் இசைக் கலைஞர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் கறாரானவை. அதற்கு ஒப்புக்கொள்ளாத ஒரு கலைஞன் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும்.  அந்த வேறு வேலைக்கும் இதே ஒப்பந்தம்தான். பாடல் புனைவது அவர்களுக்கு அன்றாட அலுவலக வேலை.

டின் பான் ஆலி பாடல்களை உதிரிப் பாகங்களைப் பொருத்தி, விற்பனைக்குத் தயார்செய்தபடி இருந்தது. பாத்திரங்களை உருட்டுவது போன்ற பியானோ ஒலியே அந்த பாடல் ஆலையின் ஒலி.

சில இசைக்கலைஞர்கள் விதிவிலக்காக இருந்தார்கள். தாங்களே பாடல்களை உருவாக்கித் தாங்களே வியாபாரம் செய்தனர்.  சார்ல்ஸ் ஹாரிஸ் போன்றவர்கள். நாம் முந்தய அத்தியாயத்தில் பார்த்த அதே சார்ல்ஸ் ஹாரிஸ்.

“இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு வெற்றிகரமான அமைப்பு இருந்ததில்லை” என்றார் பெர்ன்ஸ்டைன்.

~o0o~

ஜன்னலின் அருகில் நின்றிந்தார்கள் பெர்ன்ஸ்டைனும் மன்றோவும். குதிரை வண்டி ஒன்று கடந்து செல்லும் ஒலியும், செய்தித்தாள் விற்கும் சிறுவன் ஒருவனின் குரலும் சாலையில் இருந்து கேட்டது. எதிரே சிறிது தொலைவில் தெரிந்த கட்டிடங்களைப் பார்த்தபடி சொன்னார் பெர்ன்ஸ்டைன் “ அந்த இசை அரங்குகளில் நாங்கள் வெளியிடும் பாடல்களை தினமும் இசைக்கிறார்கள். உணவு விடுதிகளில் பியானோ கலைஞர்கள் எங்கள் பாடல்களை இசைக்கிறார்கள். மக்கள் அதை ரசிக்கின்றனர். விடுதி உரிமையாளர்கள் பயன் பெறுகிறார்கள். பியானோ கலைஞர் வருவாய் பெறுகிறார். நாங்கள் வெளியிடும் பாடல் மூலம் அதிகம் சம்பாதிப்பது அவர்கள்தான்.”

“அதில் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை”, பெருமூச்சுடன் முடித்தார்.

பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் இசைப்பதால், பாடல் கலைஞர் மற்றும் பதிப்பாளர்களுக்கு எந்த லாபமும் இருக்கவில்லை. இசை நிகழ்ச்சிகள், பாடலுக்குக் கிடைக்கும் இலவச விளம்பரம் என்றே அமெரிக்கச்  சட்டம் பார்த்தது. ஒருவகையில் இது உண்மையே. ஒரு இசை நிகழ்ச்சியில் கேட்ட பாடலை பியானோவில் பழக விரும்பும் ஒரு ரசிகர், மறுநாளே அந்தப் பாடலின் பதிப்பை விலை கொடுத்து வாங்குவார்.

இசைக்கலைஞர் ஒருவரிடமிருந்து ஒரு தொகை கொடுத்தோ, டின் பான் ஆலி கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்தோ ஒரு பாடலின் பதிப்பு உரிமை பெற்ற பதிப்பாளர்கள், பதிப்புகளை விற்பனை செய்து பொருளீட்டினர். இசைக்கலைஞர்கள் தாங்கள் சுரண்டப்படுவதாகக் கருதினர். அப்படி விற்பனை செய்யப்பட்ட பதிப்புகள் மூலம் பாடல்களைப் பழகிப் பயின்று அவற்றை அரங்கேற்றினர் கலைஞர்கள். அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பெற்ற வருவாயில், பதிப்பாளருக்குப் பங்கில்லை. ஒரு முறை மட்டுமே அவர்கள் லாபம் பெற்றனர். விற்பனையின் போது மட்டும். பின்னாட்களில் உருவான ‘காற்றடித்தால் ஆளில்லாமல் வாசிக்கும் பியானோ’,  போனோகிராப் போன்ற கருவிகள் இதே பாடல்களை இசைக்கலைஞர் ஒருவர் இல்லாமலேயே இசைத்தன. அப்போது இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்தனர். இத்தகைய குறைகள் இன்றைய அமெரிக்காவில் இல்லை என்று சொல்லலாம். இந்தியாவில் இன்றும்  இளையராஜா பாடல்கள் வரை நீடிக்கின்றன.  நாம் எதைப் புரிந்து கொள்ளவில்லை? ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கூட நம்மில் பலரும் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. யூடுப் சென்று பாருங்கள். எத்தனை அறிஞர்கள் ! எத்தனை கருத்துக்கள் !!  அதிகம் கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் சிறிதும் புரிந்து கொள்ளாதவர்களே. சில நேரங்களில் இவர்களில் இசைக்கலைஞர்களும் கூட அடங்குவர் என்பது ஒரு கசப்பான உண்மை.

சரி, இப்போது மீண்டும் பெர்ன்ஸ்டைன் அலுவலகத்திற்கு வருவோம்.

பெர்ன்ஸ்டைன் அனுபவம் மிக்க பதிப்பாளர். “நாங்கள் வெளியிடும் பாடல், ஒவ்வொரு முறை இசைக்கப்படும் போதும் பொருளீட்டும் என்றால், நாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதுதானே பொருள்?” என்றார்.

மன்றோ அந்தக் கேள்வியைக் குறித்துக் கொண்டார், ஆழமாகச் சிந்தித்தபடி.

~o0o~

ஐரோப்பியர்கள் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது பெர்ன்ஸ்டைனுக்குத் தெரியும். ஃப்ரான்ஸில் இசையமைப்பாளர்களும், பதிப்பாளர்களும் கூடி ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தனர். 

பாரிஸில் ஒரு உணவு விடுதியில், ஒரு பாடல் பியானோ கலைஞர் ஒருவரால் இசைக்கப்பட்டால், அந்த உணவு விடுதியிடம் இருந்து, அதற்கான கட்டணம் ஒன்றை வசூல் செய்வது இந்த அமைப்பின் பணி. இசையமைப்பாளரோ, பதிப்பாளரோ நேரடியாக ஒரு விடுதியிடம் சென்று கட்டணம் கோரவேண்டியதில்லை. யாருடைய பாடல், எங்கு, எப்போது, யாரால் இசைக்கப்பட்டது, அதற்கான கட்டணம் என்ன, அதனை வசூலித்து யாருக்குக் கொடுக்க வேண்டும் போன்றவற்றை இந்த அமைப்பு பார்த்துக் கொண்டது. 

ஃப்ரான்ஸைத் தொடர்ந்து அத்தகைய அமைப்பு ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் உருவானது.

“பாரிஸில் இசை நிகழ்ச்சிகளின் வருவாயில் ஒரு பங்கு பதிப்பாளருக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்கா இன்னமும் ஐரோப்பா அளவிற்குத் தயாராகவில்லை.” என்றார் பெர்ன்ஸ்டைன் மன்றோவிடம்.

அமெரிக்கா 1914 ல் தயாராகப் போகிறதென்று 1903 இல் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பெர்ன்ஸ்டைனுக்கு அது தெரியாது.

~o0o~

அன்று பெர்ன்ஸ்டைன் மற்றும் மன்றோ இருவரும் நேரில் கண்ட ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொள்ளவில்லை. அந்தக் கட்டிடத்தில் உருவான ஆப்ரிக்க அமெரிக்கர்களின் இசை. பின்னாட்களில் ஜாஸ், ப்ளூஸ் மட்டுமல்ல பெரும்பாலான அமெரிக்க பாப் பாடல்களுக்கு அடிப்படையாக அமைந்த உத்திகளைக் கொடுத்ததே  ஆப்ரிக்க அமெரிக்கர்களின் இசைதான். ஆப்ரிக்க இசையின் கூறுகள் அமெரிக்க இசையில் கலந்து டின் பான் ஆலி-யால் அல்ல. அதற்கு ஒரு வரலாறு இருந்தது.

பல காலங்களுக்கு அமெரிக்காவின் பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்தவை மின்ஸ்ட்ரல் நிகழ்ச்சிகள். (minstrel show). வெள்ளைக் கலைஞர்கள் முகங்களில் கறுப்புச் சாயம் பூசிக்கொண்டு நடிப்பார்கள் (கறுப்பினக் கலைஞர்களும் கூட – முகத்தில் கறுப்புச் சாயம் பூசிக்கொண்டு) . ஆடுவார்கள், பாடுவார்கள். அந்த நிகழ்ச்சிகள் அமெரிக்க கறுப்பின மக்களை நையாண்டி செய்பவையாக இருக்கும்.

வறுமையில் இறந்த அமெரிக்க பாப் இசையின் தந்தை ஃபாஸ்டரின் கதையை நாம் இதற்கு முன் பார்த்தோம். அவரது புகழ்பெற்ற “ஓ சுஸானா” மின்ஸ்ட்ரல் இசை நிகழ்ச்சிக்கு என்று எழுதப்பட்ட பாடல்தான்.  பின்னாட்களில் ஃபாஸ்டர் தனது மின்ஸ்ட்ரல் வகைப் பாடல்களைக் கைவிட்டார் என்றும், ஹாரியட் பீச்சர் ஸ்டோ எழுதிய, “அங்கிள் டாம்ஸ் கேபின்’  நாவலும் அவர் மனமாற்றத்திற்கு ஒரு காரணம் என்றும் , பின்னாளில் கறுப்பின மக்களின் உணர்வுகளைச் சித்திரிக்கும் வகையில் அவர் எழுதிய பாடலை பிரெட்ரிக் டக்ளஸ் என்ற அடிமை முறைக்கு எதிரான செயற்பாட்டாளர் பாராட்டினார் என்றெல்லாம் குறிப்புகள் சொல்கின்றன. இது இந்த அத்தியாயத்தின் அடிக்குறிப்பல்ல. அமெரிக்கப் பாப் இசை வரலாற்றின் அடிநாதம். டின் பான் ஆலி இசையமைப்பாளர்களைச் சுரண்டியது என்று கருதினால், அது கறுப்பினக் கலைஞர்களைக் கடுமையாகச் சுரண்டியது என்று சொல்லலாம்.

அன்று பெர்ன்ஸ்டைனும், மன்றோவும் தங்களது பணியை முடிக்கும்போது சூரியன் மறையத் தொடங்கி இருந்தது. பெரும்பாலான பியானோக்கள் ஓய்ந்திருந்தன. சில கலைஞர்கள் பணி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கால நெருக்கடி. சாங் ப்ளக்கர்கள் வெளியேறி, விடுதிகள் மற்றும்  அரங்குகளை அடைந்திருந்தார்கள்.

பெர்ன்ஸ்டைன் மன்றோவை வழியனுப்ப வந்தார் வாசல் வரை. மன்றோவிற்குத் தான்  வேறு உலகம் ஒன்றில் இருந்து மீண்டு வந்தது போல் தோன்றியது சாலையைப் பார்த்தவுடன். அமெரிக்காவின் பாப் இசை உருவாகும் விதத்தை அன்றுதான் அவர் பார்த்திருந்தார்.

“ஏதேனும் நன்றாக எழுதுங்கள்” என்றார் பெர்ன்ஸ்டைன்.

மன்றோ எழுதினார். அதுவும் நியூயார்க் ஹெரால்ட் செய்தித்தாளில் எழுதினார். அந்தத் தெருவிற்குப் பெயரும் வைத்தார் “டின் பான் ஆலி” என்று. அந்தப் பெயர் வரலாற்றில் நிலைத்தது.

ஆனால் அவரது கட்டுரை சில கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. அவற்றில் முக்கியமான கேள்வி, ஒரு பாடல் யாருக்குச் சொந்தம்?

Ben Sutherland; CC BY 2.0  via Wikimedia Commons

விக்டர் ஹெர்பர்ட்  ஃப்ரான்ஸ் போன்று ஒரு அமெரிக்க அமைப்பை உருவாக்கியபோது, அது பெர்ன்ஸ்டைன் கவலை கொண்டிருந்த பிரச்சினையைத் தீர்த்தது. அது முழுமையான தீர்வல்ல என்றாலும் கூட, வரலாற்றில் முக்கியமானது.

அந்த அமைப்பு பிறந்த கதையை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

காப்பிரைட் கதைகள்

அமெரிக்க பாப் இசையின் தந்தை

Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.