தங்கக் கூண்டு

This entry is part 4 of 4 in the series காப்பிரைட் கதைகள்

படைப்புச் சுதந்திரத்தின் விலை 

பதினெழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய  இசைக் கலைஞர்களுக்கு இரண்டு தொழில்முறை வாய்ப்புகள் இருந்தன.

ஒன்று, ஒரு புரவலரின் தயவில் இருப்பது. ஒரு அரசன், பிரபு, தேவாலயம் என்று ஏதோ ஒரு புரவலர் தயவில் இருத்தல். அரண்மனையிலோ, தேவாலய வளாகத்திலோ அவருக்கு வீடு கொடுக்கப்படும்.  விருந்துகளில் கலந்து கொள்ளலாம். அழைத்த குரலுக்கு இசைக் கலைஞர்கள் வந்து வாசிப்பார்கள். நல்ல சமூக அந்தஸ்து கிடைக்கும். சுற்றுப் பயணங்கள் செய்யலாம். குறிப்பாக வறுமையில் இருந்து விடுதலை கிடைக்கும். இந்த விடுதலை ஒரு புரவலர் இன்றி சாத்தியமாகாது.

இரண்டாவது, சுதந்திரமான வழி. எதை இசைக்க வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். எதையும் இசையாக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது. யாரிடமும் எதற்கும் அனுமதி பெற வேண்டியதில்லை. தான் விரும்பிய இசையைப் படைக்கலாம். காலத்தை வென்று புகழ் பெறலாம். ஆனால்,துரத்தும் வறுமையில் இருந்து தப்பிப் பிழைப்பது எளிதல்ல.

மேற்கத்திய இசையுலகம் கொண்டாடும் “பரோக்” (Baroque) இசை காலகட்டம் இப்படித்தான் இருந்தது.

முக்கியமான மேலை நாட்டு இசைக் கலைஞர்களான யோஹான் செபாஸ்டின் பாக், ஜார்ஜ் பிரெட்ரிக் ஹாண்டேல், அண்டானியோ விவால்டி போன்றோர் புரவலர் தயவில் இருந்தனர். அந்தத் தயவில் இருந்தே காலத்தை  வென்ற இசைக் கோவைகளைப் படைத்தனர். அவர்கள் என்ன இசை படைக்கவேண்டும் என்பது சொல்லப்படும். ஊதியம் கொடுக்கப்படும். வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதற்குப் பதிலாக, இசைக் கலைஞனின் படைப்பு புரவலரின் உரிமையாகும்.

ஒரு இசைக் கலைஞனுக்கு, புரவலருடனான உறவு, மனைவி மக்கள், நண்பர்கள், சுற்றத்தார் இவர்களுடனான உறவை விட முக்கியமானது. அந்த உறவு ஒரு கலைஞனை புகழின் உச்சிக்கு கொண்டு போகலாம், குழியிலும்  தள்ளலாம்.

நல்ல இசையறிவும், இசைக் கலைஞர்கள் பால் நன் மதிப்பும் கொண்ட புரவலர் ஒரு கலைஞனுக்கு வரம். இல்லையென்றால்…

யோஹான் செபாஸ்டின் பாக்

செபாஸ்டின் பாக் 1685 ல் ஜெர்மனியில் பிறந்தார். அவரது குடுப்பத்திற்கு இசை ஒரு தொழில் மட்டுமல்ல, மரபு.  பாக் குடும்பத்தினர் தேவாலயங்களில் ஆர்கன் இசைத்தனர். அரசவைகளை அலங்கரித்தனர். “பாக்” குடும்பம் என்றாலே இசைக் குடும்பம். இதுவே அன்றைய ஜெர்மனியின் பொதுப் பார்வை.

செபாஸ்டின் பாக் இன் இளம் வயது நினைவுகள்  உறவினர் வீடுகளில் கண்ட இசைக் கருவிகள், அடிக்கடி வந்து போகும் இசைக் கலைஞர்கள், விருந்துகளின் போது நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள்இவற்றால் நிறைந்திருந்தது. தனது குடும்பப் பாரம்பரியத்தின் வழியில் தானும் ஒரு இசைக் கலைஞனாக முடிவெடுத்தார்.

ஆனால் அது அவர் நினைத்தது போல் எளிதாக அமையவில்லை. பத்து வயதிற்குள் தாய் தந்தையரை இழந்து அநாதை ஆனார். இளம்பருவ நினைவுகளில் இருந்த குடும்பம் சிதைந்து போனது. பாக் மற்றும் அவரது உடன்பிறந்தவர்கள்  உறவினர்களால் ஆளுக்கொருவராய் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டனர். 

இசை ஒன்றே பாக்-கின் பற்றுக் கோடானது. அவர் அதை இறுக்கப் பற்றிக் கொண்டார். இசை பயில்வதில் மூழ்கிப் போனார். இசையை இளம் பாக்-கின் வெறுமையை விரட்டியது. நீண்ட நேரப் பயிற்சி, விளக்கொளியில் பிறரின் இசைக்-குறிப்புகளைப் படியெடுத்தல், கைக்குக் கிடைக்கும் இசைக் குறிப்பு ஒவ்வொன்றையும் பயிற்சி செய்தல், என அவர் இளம் பருவம் கழிந்தது.

இசையில் மெலடி என்ற ஆங்கிலச் சொல் ஒரு குறிப்பிட்ட பொருள் கொண்டது. ஒன்றை இழை அல்லது  ஒற்றைக் குரல், என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு புல்லாங்குழல் மட்டும் வாசிக்கப்பட்டால் அது மெலடி. அதனுடன் ஒரு வயலினும் சேர்த்து வாசிக்கப்பட்டால்? அவை இரண்டும் ஒன்று போல இல்லாமல் தன்னிச்சையாக இருந்தால்?  அவை இரண்டும் ஒன்றோடொன்று முரண்படாமல், ஒன்றை ஒன்று மெருகேற்ற வேண்டும்.

இப்போது, ஒரே நேரத்தில் வாசிக்கும்  நான்கு அல்லது ஐந்து இசைக்கருவிகளைக் கற்பனை செய்து பாருங்கள். அவைகளை ஒன்றை ஒன்று ஒத்திசைந்து இருக்குமாறும், அவை ஒன்றை ஒன்று மெருகேற்றுமாறும் இசையமைப்பது எவ்வளவு சவாலானது என்பதை நீங்கள் யூகிக்கலாம். இத்தகைய இசைக்குறிப்புகளை எழுதும் உத்தி counter point என்று அழைக்கப்படுகிறது. செபாஸ்டின் பாக் இந்த உத்தியில் ஆர்வமும், திறமையும் கொண்டவர். counter point உத்தியை அவருக்கு முன் யாரும் அவரைப் போல் திறம்படப் பயன்படுத்தியதில்லை. அவருக்குப் பின்னும் கூட யாரும் பயன்படுத்தவில்லை என்றே நிபுணர்களால் கருதப்படுகிறது.

ஆனால், இத்தகைய பயிற்சிக்கு உழைப்பும், காலமும் தேவை. அத்தனை காலம் பயிற்சி செய்ய, வாழ்வாதாரம் தேவை. எனவே புரவலர்கள் தேவை.

தனக்குத் தகுதியான புரவாளரை 1717 ஆம் ஆண்டு பாக் சந்தித்தார்.

Bach : Image credit – Library of Congress

லீயபோல்ட்

அன்ஹால்ட்-கோடன் பகுதியின் இளவரசர்  லீயபோல்ட்  தனது இருபத்து மூன்றாவது வயதில் பாக்- ஐ முதன் முதலில் சந்தித்தார். லீயபோல்ட் கலாச்சார ஈடுபாடு கொண்டவர். அவர் அன்றைய நாளின் வழக்கமான ஐரோப்பியப்  பிரபுக்கள் போல் அல்லாமல், தீவிர இசையார்வம் கொண்டவராக இருந்தார்.

பல ஜெர்மானிய இளவரசர்கள் இசைக்கலைஞர்களை அலங்காரப் பொருட்கள் போன்றே கருதினர்.  விருந்துகள், விழாக்கள் போன்ற தருணங்களை அலங்கரிக்க இனிமையான இசை தேவை. அந்த இசையைக் கொடுத்த கலைஞர்கள் ஒருவகை வேலையாட்கள் என்றே கருதப்பட்டனர்.

ஆனால் லீயபோல்ட் வேறுபட்டவராக இருந்தார்.

லீயபோல்ட் தன் இளம் வயதில்,  இசை நிகழ்ச்சிகளைக் காண ஐரோப்பா முழுதும் பயணம் செய்தார். இத்தாலியில் ஆபரா நிகழ்ச்சிகள், வியன்னாவிலும் ஆம்ஸ்டர்டாமிலும் இசை நிகழ்ச்சிகள் என்று லீயபோல்ட் தேடித் தேடிச் சென்றார். இசையைக் கற்றுக்கொள்ளவும் செய்தார்.  திறமையாக வயலின் வாசித்தார். வயோலா- ட- கம்பா என்ற இசைக் கருவியைத் தொழில்முறைத் தேர்ச்சியுடன் கையாண்டார். இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் செய்தார்.

தனது அரண்மனையில் ஆஸ்தான இசைக்கலைஞர் பதவி காலியானபோது, திறமையான இசையமைப்பாளர் ஒருவரைத் தேடினார். பாக்-ன் திறமை பற்றித் தெரிந்து கொண்டிருந்த லீயபோல்ட், அவரை தனது அரசவைக் கலைஞராக நியமித்தார்.

தாராளமான ஊதியம், வீடு, தேவையான இசைக் கருவிகள், இசைக் கலைஞர்கள் என, பாக் விரும்பிய அனைத்தும் அவருக்குக் இந்தப் புதிய பதவி கொடுக்கத் தயாராக இருந்தது. ஆனால் அப்போது  பாக், வெய்மர் பகுதியின்  டியூக் வில்ஹெம் எர்னஸ்ட் என்பவரிடம் பணிபுரிந்து வந்தார்.  டியூக் வில்ஹெம் தனது அவையில் இருக்கும் இசைக் கலைஞர்களைத்  தன் உடைமை போலப் பார்ப்பவர். பாக் தனது புதிய பணி பற்றித் தெரிவித்தபோது வில்ஹெம் கோபம் கொண்டார். பாக் மீது நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சுமத்திக் கைதும் செய்தார். பாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த சிறைவாசம், ஒரு புரவலரின் தயவு என்னவெல்லாம் செய்யும் என பாக்கிற்கு உணர்த்தியது. இறுதியில் வில்ஹெம் பாக்கை விடுவித்தார்.

அதன் பின்னர் லீயபோல்ட்டின் அவையில் பணியாற்றிய நாட்களே பாக்கின் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள்.

நட்பு

பாக் மற்றும் லீயபோல்ட் இவர்களுக்கு இடையிலான உறவு இசைக் கலைஞன், புரவலர் என்ற எல்லையைக் கடந்து நெருக்கமானது.

மற்ற பிரபுக்கள் போல, இசையமைக்கும் பணியில் இருந்து விலகி இருக்கவில்லை லீயபோல்ட். அவர் பாக்-உடன்  சேர்ந்து இசையின் சாத்தியங்களை விவாதித்தார். உடனிருந்து  பணியாற்றினார். லீயபோல்ட் இசையமைப்பதில் பாக் இற்கு இணையானவர் அல்ல. ஏன், வேறு யாருமே பாக் இற்கு இணையாக இருக்கவில்லை.

ஆனால், லீயபோல்ட், பாக் இன் இசையை நுட்பமாகப் புரிந்து ரசிக்கும் அளவு இசைத் திறம் பெற்றவராக இருந்தார். லீயபோல்ட் அவையில், பாக்கின் பணி எளிதாக இருந்தது. தேவாலய வழிபாடு, பிற நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு இசையமைத்தது போக, தனிப்பட்ட முறையில் இசை படைக்க பாக் இற்கு வாய்ப்பு இருந்தது. லீயபோல்ட் அந்த வாய்ப்பை பாக் இற்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்தக் காலகட்டத்தில் பாக் மிக முக்கியமாகக் கருதபப்டும் பல இசைக் கோவைகளைப் படைத்தார். அவை அசாதாரணமானவை. பாக் இந்த “பிரான்டன்பர்க் கன்செர்டோக்கள்” பரோக் கால இசை நுட்பத்தை முழுமையாக வெளிப்படுத்தின. பாக்கின் புகழ்பெற்ற “வெல்-டெம்பர்ட் க்ளாவியர்”,  வயலின் சொனாட்டாக்கள் என்று மூன்று நூற்றாண்டுகளுக்கு பிறகும் இசைஞர்கள் சவாலாக இருக்கும் படைப்புகள் இந்தக் காலகட்டத்தில் உருவாகின.

பாக் மற்றும் லியபோல்ட் இவர்களுக்கு இடையிலான பிணைப்பு இசைத் தொழிலைக் கடந்து குடும்ப அளவில் இருந்தது. பாக்கின் திறமை முழுமை பெற்ற நாட்கள் அவை. லீயபோல்ட் பாக்கிற்கு வழங்கிய சுதந்திரம், பாதுகாப்பு, நட்புணர்வு இவையே பாக் இன் முக்கியமான படைப்புகள் பிறக்கும் சூழலை உருவாக்கியது.

ஆனால், அந்தச் சூழல் நீடிக்கவில்லை.

பிரிவு

ஒரு இளவரசராக, லீயபோல்டிற்கு அரசியல் கடமைகளும் இருந்தன.

அவரது அரசு சிறியது. பெரிய அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணுவது, அவர்களுக்குத் தேவைப்படும்போது படையுதவி செய்வது போன்றவை தவிர்க்க முடியாதவை. லீயபோல்ட் ப்ருஷ்யப் படைக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியபோது, பொருளாதார நெருக்கடி உருவானது. இசை பின்னுக்குச் சென்றது. அவர் பாக் ஐ முன் போல் கவனித்துக்கு கொள்வதும் சவாலாகிப் போனது.

பின்னர், லீயபோல்ட் ஒரு திருமணமும் செய்து கொண்டார்.

அவரது மனைவி, இளவரசி ஃபிரீடெரிகா ஹென்ரியெட்டா. இவர் கணவரைப் போன்று இசை ஆர்வம் கொண்டவர் அல்ல. தனது கணவர் இசைக்கலைஞர்களுக் செலவழிக்கும் தொகை வீணானது என்று கருதினார் ஹென்ரியெட்டா. அவர் ‘இசையறிவு இல்லாதவர்’ என்று பாக் ஆல் பின்னாளில் விமர்சிக்கப்பட்டார். அரண்மனையில் ஹென்ரியெட்டாவின் செல்வாக்கு வளர்ந்தது. ஏற்கனவே நிதிச் சுமையால் குறைந்திருந்த அரண்மனையின் இசைப் பணிகள் மேலும் குறைந்தன.

1723 ல், பாக் லீயபோல்டின் அவைப் பணியில் இருந்து விடுபட முடிவெடுத்தார்.

அதன் பின் லீப்சிக் நகரின் செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் பதிவியேற்றார். அதுவம் மதிப்பு வாய்ந்த பதவியே. ப்ராட்டஸ்டண்ட் ஜெர்மனியின் மரியாதை பெற்ற தேவாலயப் பதவிகளில் ஒன்று பாக் பெற்ற பதவி.  ஆனால், அந்தப் பதவி நிர்வாகச் சுமைகள் கொண்டிருந்தது. தனது மேதமையை அங்கீகரிக்காத அதிகாரிகளுடன் பாக் போராட வேண்டி இருந்தது. அந்தப் பணி, லீயபோல்ட்டின் அவைப் பணியைப் போன்று பாக் இன் மனதிற்கு  விருப்பமானதாக இருக்கவில்லை.

லீப்சிக் வந்த பின்னரும், லீயபோல்ட்டுடனான பாக் இன் நட்பு நீடித்தது. லீயபோல்டைச் சந்திக்க அவ்வப்போது அவரது அரண்மைக்குச் சென்று வந்தார் பாக்.

அவர் கடைசியாகச் சென்றது லீயபோல்டின் இறுதிச் சடங்கில் இசை நிகழ்ச்சி செய்வதற்காக.

அந்த இசை அவர்கள் நட்பைப் போல வரலாற்றில் நிலைபெறவில்லை.

இளம் மேதை

அரை நூற்றாண்டுப் பிறகு, மற்றொரு இசைக் கலைஞன் பாக் போலவே புரவலரை நாடினான். ஆனால் அவனது அனுபவம் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது.

அமெடியஸ் மொஸார்ட், 1756 ல் ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் ஆர்ச்பிஷப் அவையில் வயலின் கலைஞராக இருந்த லியோபோல்ட் மொஸார்டின் மகனாகப் பிறந்தான். (பாக் இன் புரவலர் லீயபோல்ட்டிற்கும் இவருக்கும் தொடர்பில்லை). மொஸார்ட் இளம் வயதில் இருந்தே பெரும் இசைத்திறமை கொண்டவனாக இருந்தான்.

மொஸார்ட் தன் மூன்றாம் வயதில் இசைக்கருவிகளை வாசித்தான். ஐந்தாம் வயதில் இசையமைத்தான். ஆறாம் வயதில் தன் தந்தையுடன் அவர் பணியாற்றும் அரசவைக்குச் சென்றான், அவையோரை வியப்பில் ஆழ்த்தினான். இளம் இசைமேதை மொஸார்ட்டின் புகழ் ஐரோப்பியப் பிரபுக்கள் மத்தியில் பரவியது.

மொஸார்ட் இளம் வயதிலேயே இசைத் தொழிலின் சாத்தியங்களை அறிந்து கொண்டான். அவன் தந்தை அவனை ஐரோப்பிய அரசவைகள் அனைத்திற்கும் அழைத்துச் சென்றார். வியன்னா, லண்டன், பாரிஸ், மியூனிக், ஆம்ஸ்டர்டாம் என எங்கெல்லாம் முடிந்ததோ அந்த அவைகளில் எல்லாம் இசை நிகழ்ச்சியை நடத்தினான்.

அரசர்கள், பிரபுக்கள் இவர்களை எடைபோடவும், புகழவும் கற்றுக்கொண்டான். இசை நிகழ்ச்சிகளின்போது பார்வையாளர்களின் விருப்பத்தைப் புரிந்து கொள்ளவும், அவர்களது கைதட்டைப் பெறவும் கற்றுக் கொண்டான். ஆனால், அவன் வளரவளர, இப்படிக் கற்றுக் கொண்டவற்றை வெறுக்கவும் தொடங்கினான்.

அவன் வளர்த்துக் கொண்ட திறமைகளே அவனது சிறைக் கம்பிகளாக மாறின.

தங்கக் கூண்டு

1781 ஆம் ஆண்டு வாக்கில், மொஸார்டின் வயது இருபத்தைந்து. அப்போது அவன் சால்ஸ்பர்க்கின் இளவரசர் மற்றும் பேராயர் கொல்லோரேடோவிடம் அரண்மனைக் கலைஞனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தான்.  அந்தப் பதவி மரியாதையானது. மொஸார்ட்டின் தங்கக் கூண்டு. மொஸார்ட்டிற்கு பாக்-இற்கு கிடைத்தது  போல ஒரு லீயபோல்ட் கிடைக்கவில்லை.

மொஸார்டின் இயற்றிய ஆபரா நிகழ்ச்சிகளில் அவனது புரவலருக்கு எந்த ஆர்வமும் இல்லை. இரவு விருந்துகளுக்கு, கூட்டங்களுக்கும் இனிமையான பின்னணி இசை மட்டுமே அவரது தேவையாக இருந்தது. மொஸார்ட் அவரது அனுமதியில்லாமல் வேறு இசை நிகழ்ச்சிகள் செய்ய முடியாது.

மொஸார்ட்டின் பொறுமையின்மை சிறிது சிறிதாக வளர்ந்து வந்தது. தன் திறமை வீணாகி வருவது குறித்துத் தன்  தந்தைக்குக் கடிதங்கள் எழுதினான்.  அவன் தந்தையோ, பொறுமையும், சகிப்புத்தன்மையும் எவ்வளவு முக்கியம் என்று விளக்கிப் பதில் எழுதினார். ஆனால் மொஸார்ட், தந்தையின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்கவில்லை.

1781 ம் ஆண்டு மொஸார்ட் தன் பொறுமையை முற்றுலுமாக இழந்திருந்தான்.

புரவலருடன் ஏற்பட்ட மோதலின் பின், பதவியில் இருந்து நீக்கப்பட்டான்.

“என் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்கள்” என்று மொஸார்ட் தன் தந்தைக்கு எழுதினான்.

கழுத்தைப் பிடித்தது உண்மையோ இல்லையையோ, மொஸார்ட் அனுபவித்த அவமானம் உண்மையானது.

அது அவன் வாழ்வின் மிக முக்கியமான அனுபவம்.

Mozart : Image credit – Library of Congress

சுதந்திரத்தின் விலை

மொஸார்ட் தன் கனவுகளைத் தேடி, வியன்னா நகர் சென்றான். அங்கு புதிய வாழ்க்கைமுறையை முயற்சி செய்தான். புரவலர் எவரும் இன்றி, தன்னிச்சையான இசையமைப்பாளனாக வாழ முயன்றான்.

தொடக்கத்தில் அது ஒரு சூதாட்டமாகவே இருந்தது. பின்னர் செல்வந்தர்களின் பிள்ளைகள் இசை கற்றுக்கொள்ள அவனைத் தேடி வந்தனர். அவனது சந்தா இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. அவன் இயற்றிய ஆபராக்கள் புகழ் பெற்றன.

ஆனால் அந்தத் சுதந்திரத்திற்கு ஒரு விலை இருந்தது.

புரவலர் ஒருவர் இன்றி, அவன் வாழ்க்கை சிரமமாக ஆனது. வாடகை கட்டுப்படி ஆகாமல் தொடர்ந்து வீடுகள் மாறினான். ஒவ்வொரு வீடும் முந்தய வீட்டைவிடச் சிறியதாகிக் கொண்டே போனது. அடிக்கடி நண்பர்களிடம் கடன் வாங்கினான். பெரும்பாலும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

அவன் தந்தை இதனைப் பார்த்து வேதனை அடைந்தார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான கடிதங்கள் இவற்றைச் சொல்கின்றன. தந்தை குறை சொன்னார். மகன் தன்னை  நியாயப் படுத்தினான்.

வெகுமக்கள் ரசிக்கும்படியாக இசையமைக்க அறிவுரை சொன்ன தந்தைக்கு, “என்னால் எல்லோரும் ரசிக்கும்படி இசை படைக்க முடியாது” மொஸார்ட் பதில் எழுதினான். இந்தப் பதில் ஒரு கலைஞனின் குரல் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் குரலே அவனது பொருளாதார நிலையைப் பாதித்தது என்பதிலும் சந்தேகமில்லை.

இறுதி நாட்கள்

1787ல், பேரரசர் இரண்டாம் ஜோசப், மொஸார்டிற்கு அதிகாரப்பூர்வ அரண்மனைப் பதவி வழங்கினார். வருடத்திற்கு எண்ணூறு ஃப்ளோரின்கள் ஊதியம்.

இந்த ஊதியம் மொஸார்ட்டின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. அவன் முன்பு பெற்ற ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு. ஆனால் மொஸார்ட் வேறு வழியின்றி அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டான். எண்ணூறு ஃப்ளோரின்கள்  அவன் கடன்களை அடைக்க உதவவில்லை. அவன் நன்றாக வாழ்ந்த காலத்தில் பழகி இருந்த வாழ்க்கை முறையைத் தரவில்லை.

அவன் உடல்நலம் குன்றத் தொடங்கியது. வேலைப்பளு, வறுமை, நோய். இந்த நாட்களில் அவன் எழுதிய கடிதங்கள் மேலும் நம்பிக்கையிழந்த கலைஞனைக் காட்டுகின்றன.

வியன்னாவிற்கு கனவுகளைத் தேடி வந்த அமெடியஸ் மொஸார்ட்,  1791 டிசம்பரில், அந்த வியன்னாவிலேயே இறந்து போனான். அப்போது அவனது வயது  முப்பத்தைந்து.

மொஸார்ட்டின் மனைவியிடம் அவன் இறுதிச் சடங்கிற்காண பணம் இருக்கவில்லை.

எளிய மனிதர்கள் அடக்கம் செய்யப்படும் ஒரு பொதுக் கல்லறையில் அந்த இசை மேதை அடக்கம் செய்யப்பட்டான்.

மொஸார்ட்டை உலகம் அங்கீகரித்தபோது, அது அவன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை முற்றிலுமாக மறந்து போயிருந்தது.

 Image credit – Library of Congress

இரண்டு விதிகள்

செபாஸ்டியன் பாக், பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பணி, புரவலர், தேவாலயம் என்று சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். தனது குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார். அவரது வாழ்க்கை, பொருளாதார நெருக்கடிகள் இல்லாமல் இருந்தது. அதற்கேற்ற ஒரு புரவலரும் அவருக்குக் கிடைத்தார்.

மொஸார்ட், சுதந்திரத்தை விரும்பினான். புரவலர்கள் மற்றும் கட்டுப்பாடுகளைத் துறந்தான். வறுமையில் இறந்தான். மனைவியிடம் தன் கடன்சுமையை விட்டுச் சென்றான்.

இந்த இரண்டு கலைஞர்களின் வாழ்வும், சில விஷயங்களை நமக்கு உணரத்தக் கூடியவை. ஆனால் அவற்றில் இருந்து முழுமையான படிப்பினை ஒன்றைப் பெற முடியாது.

ஏன் ?

பாக்,  லீயபோல்ட் போன்ற விதிவிலக்கான புரவலரைக் கண்டடைந்தார். லியபோல்ட் போன்ற புரவலர்கள் அரிது. பெரும்பாலான புரவலர்கள்  ஏறத்தாழ மொஸார்ட்டின் புரவலர் போன்றே இருந்தனர்.

மொஸார்டின் தோல்வி ஒரு வேளை தவிர்க்கப் பட்டிருக்கலாம். அது அவன் வாழ்ந்த காலம், இடம் ஆகிய சூழ்நிலைகளால் உருவானது.  அவன் படைப்புகளிலிருந்து தொடர்ந்து வருமானம் பெற்றிருக்கக்கூடிய சட்டப் பாதுகாப்புகள் இருக்கவில்லை.

சரி,  பாக், மொஸார்ட் இவர்கள் பற்றிக் கொண்ட இந்த இரண்டு வழிகள் தவிர மூன்றாவது வழி ஒன்று சாத்தியமாகி இருந்தால்?

பாக் இன் மகன் கிறிஸ்டியன் பாக் இற்கு அது சாத்தியமானது. அதனை சாத்தியப் படுத்திய நகரம் லண்டன்.

லண்டன் அத்தகைய வல்லமை கொண்ட சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. 

காப்பிரைட் கதைகள்

ஸ்டேஷனர்ஸ் கம்பெனி

Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.