பைரஸி

This entry is part 6 of 6 in the series காப்பிரைட் கதைகள்

இசைக்கருவிகளை விற்பனை செய்துவந்த  ஜான் வால்ஷ், இசைக் கருவிகள் விற்பனை செய்வதை விட பைரஸி பதிப்புத் தொழில் லாபகரமானது என்பதைக் கண்டுகொண்டார்.

முறையாக அனுமதி பெற்று, உரிமம் பெற்றுப் பதிப்புகளை வெளியிடும் பதிப்பாளர்கள் சந்தித்த சவால்கள் அதிகம். வெளியிடும் பதிப்பு விற்பனையில் வெற்றிபெற விற்பனை திட்டமிடல் அவசியம். இசையமைப்பாளருடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல், அச்சுக் கோர்ப்பு, அச்சு இவைகளின் தரங்களை உறுதி செய்தல் மற்றும் இவற்றுக்கு முதலீடு செய்தல் என அவர்களது சுமைகள் அதிகம்.

பைரஸி பதிப்புகளை வெளியிடும் ஒருவருக்கு இந்தச் சுமைகள் எதுவும் இருக்காது. ஒரு இசை அரங்கேற்றம் செய்யப்பட்டு வெற்றி பெறும்வரை காத்திருந்து, வெற்றிப் படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் வெளியிடலாம். லாபம் பெறுவதற்கு ஏற்ப என்ன விலை நிர்ணயம் செய்யலாம் என்று முக்கூட்டியே முடிவு செய்யலாம்.

முறையான உரிமம் பெற்று இசைக்குறிப்புகளை வெளியிடும் பதிப்பாளர் ஒருவர், ஒரு பைரஸி பதிப்பாளருடன் போட்டியில் ஈடுபடுவது எளிதல்ல. விலையைக் குறைத்தால் ஒருவேளை அது கையைக் கடிக்கலாம். உரிமம் இல்லாமல் வெளியிடும் பதிப்பாளர் மீது வழக்குத் தொடுப்பது எளிதாக இருக்காது. இறுதியில் அவர் தானே மற்றொரு பைரஸி பதிப்பாளாராக மாறலாம். நேர்மைக்கு விலை கிடைக்காத லண்டனின் பதிப்பாளர்கள் பலர் அப்படி மாறவும் செய்தனர்.

அப்படி மாறியவர்களில் பெரும் வெற்றி பெற்ற பதிப்பாளர், இசைக்கருவிகள் விற்பனை செய்துவந்த  ஜான் வால்ஷ்.


வால்ஷ் மற்றும் ஹேண்டல்

வால்ஷின் அலுவலகம் லண்டனின் கேதரின் தெருவில் இருந்து இயங்கிவந்தது.

லண்டனின் இசை அரங்குகள் வால்ஷின் கட்டுப்பாட்டில் இருந்தன. வால்ஷிற்கு வேண்டியவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். ஒரு இசையமைப்பாளர் தனது புதிய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி முடிக்கும்போது அதன் இசைக்குறிப்புகள் வால்ஷ் கைகளுக்குப் போய்ச்சேர்ந்திருக்கும்.

உதாரணமாக, 1725 ல், இசையமைப்பாளர் ஹேண்டல் தனது ‘ரோடாலிண்டா’ ஆபராவை (Opera) அரங்கேற்றினார். ‘ரோடாலிண்டா’ பெரும் வெற்றி பெற்றது. அப்போது ஹேண்டேல் புகழின் உச்சத்தில் இருந்தார். அவரது செல்வாக்கு மிகுந்திருந்தது. அவர் அரசர் மூன்றாம் ஜார்ஜிடம் இருந்து தனது படைப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும் சிறப்புச் சலுகை பெற்றிருந்தார். ஆனால்  இவை எதுவுமே, ரோடாலிண்டாவை வால்ஷ் பைரஸி செய்வதைத் தடுக்கவில்லை.

வால்ஷ் மீது ஹேண்டல் வழக்குத் தொடுக்கலாம். ஆனால், நீதிமன்றம் வழக்குகள் செலவு பிடிக்கும். மேலும் வழக்கு வெற்றிபெறும் என்பது  நிச்சயமில்லை. பைரஸியை நிரூபிக்கும் சுமை வழக்குத் தொடுப்பவரைச் சார்ந்தது.

ஹேண்டல் வால்ஷுக்கு எதிராகத் தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார். வால்ஷ் மீது புகார்கள் கொடுத்தார். சட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்தார். பைரஸி பதிப்புகள் பிழையானைவை என்று விளம்பரம் கூடச் செய்து பார்த்தார். ஆனால், மலிவு விலைப் பைரஸி பதிப்புகளின் வெற்றிகரமாக விற்பனை ஆகின.

பல ஆண்டுகள் முயற்சி செய்தபின் இறுதியில் ஹேண்டல், 1731 ல் வால்ஷிடமே சரணடைந்தார். வால்ஷையே தனது அதிகாரப் பூர்வப் பதிப்பாளராக நியமித்தார். இதனால், தனது இசை விற்பனையில் தனக்கும் ஒரு பங்கு கிடைப்பதை உறுதி செய்து கொண்டார்.

வால்ஷ் பைரஸி பதிப்புகள் மூலம் ஈட்டிய பொருளில் பெரும்பங்கு, சிறந்த ஐரோப்பிய இசையமைப்பாளர்களின் படைப்புகளில் இருந்து கிடைத்ததே. ஹேண்டல் அவர்களில் ஒருவர்.

1736 ல் வால்ஷ் மரணமடையும்போது அவர் தனது மகனுக்கு பெரும் செல்வத்தையையும், செல்வங்கொழிக்கும் தொழில் ஒன்றையும் விட்டுச் சென்றார்.

Image : George Frideric Handel, Public domain, via Wikimedia Commons

முதல் காப்பிரைட் வழக்கு

ஃப்ரான்செஸ்கோ ஜெமினியானி, இத்தாலிய வயலின் கலைஞர், இசையமைப்பாளர். இவர்  1714 ல் லண்டனுக்குப் புலம்பெயர்ந்திருந்தார். ஜெமினியானி எழுதி வெளியிடாமல் வைத்திருந்த சொனாட்டா (sonata) சில வால்ஷின் கைகளுக்குப் போய்ச்சேர்ந்தது. வழக்கம் போல் எப்படியென்று தெரியவில்லை.

அதன் பிறகு வால்ஷ் செய்ததுதான் கவனிக்க வேண்டியது.

தன்னிடம் இருக்கும் சொனாட்டா பிரதிகளை பிழைதிருத்திக் கொடுக்க வேண்டும் என்று ஜெமினியானியிடமே கேட்டார் வால்ஷ். அப்படி பிழை திருத்தம் செய்யத் தவறினால், அவை பிழையுடனேயே வெளியிடப்படும் என்றும், அதனால் ஜெமினியானியின் புகழுக்கே களங்கம் உண்டாகும் என்று மிரட்டினார் வால்ஷ்.

ஜெமினியானி ஹேண்டல் போன்று சரணடைய விரும்பவில்லை.

தன்னுடைய சொனாட்டாக்களை வால்ஷ் வெளியிடத் தடைவிதிக்கக் கோரி, ஜெமினியானி நீதிமன்றத்தை நாடினார்.

இவர் தொடுத்த வழக்கே வரலாற்றில் முதல் காப்பிரைட் வழக்கு.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு குறித்த விபரங்கள் பதிவு செய்யப்படவில்லை.


கிறிஸ்டியன் பாக்

1762 ல் யோஹான் கிறிஸ்டியன் பாக் லண்டன் வந்து சேர்ந்தார். அப்போது அவரது வயது இருபத்தேழு. கிறிஸ்டியன் பாக், புகழ் பெற்ற ப்ரோக் இசையமைப்பாளர் யோஹான் செபாஸ்டியன் பாக்கின் இளைய மகன். கிறிஸ்டியனுக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது தந்தை செபாஸ்டியன் பாக் மரணமடைந்தார். அதனால் அவரது இசைக் கல்வி தடைபட்டது.

தன் தந்தையின் மரணத்திற்குப்பின் இத்தாலிக்குச் சென்றார் கிறிஸ்டியன் பாக். தொடர்ந்து இசை பயின்றார். ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவராக இருந்த அவர் கத்தோலிக்கராக மாறினார். இத்தாலிய பாணி ஆபரா நிகழ்ச்சிகளை நடத்தினார். மிலன் நகரில் புகழ் பெற்றார். அன்றைய இத்தாலி அவரைப் போன்ற பல திறமையான இசைக் கலைஞர்களைப் பெற்றிருந்தது. தேவாலயங்கள், அரசவைகளில் இசைக்கலைஞர் பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவியது. கிறிஸ்டியன் பாக், லண்டன் நகரம் வழங்கும் புதிய வாய்ப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.

தனது அதிர்ஷ்டத்தை லண்டனில் சோதித்துப் பார்க்க முடிவு செய்தார். லண்டனுக்குப் புலம் பெயர்ந்தார்.

லண்டனில் அவரது முதல் இசை நிகழ்ச்சி பெற்ற வரவேற்பு, கிறிஸ்டியன் பாக்கிற்கு நம்பிக்கையளித்தது.தனது எதிர்காலத்தைத் தேடி லண்டன் வந்த கிறிஸ்டியன் பாக்கை, லண்டன் அரவணைத்துக் கொண்டது. அவரை ‘லண்டன் பாக்’ என்று அன்போடு அழைக்கவும் செய்தது.

அரசர் மூன்றாம் ஜார்ஜின் மனைவி அரசி ஷார்லட் (Queen Charlotte), கிறிஸ்டியன் பாக்கை தனது இசை ஆசிரியராக நியமித்துக்  கொண்டார். அந்தப் பணி வருவாய், சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் கொடுத்தது. கிறிஸ்டியன் பாக் புதிய இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றவும், பல பிரபுக் குடும்பத்து வாரிசுகளுக்கு இசை கற்றுக்கொடுக்கவும் அந்தப் பணி அனுமதித்தது.

கிறிஸ்டியன் பாக் லண்டனில் தனது நண்பர் கார்ல் ஃப்ரீட்ரிக் ஆபெல் உடன் இணைந்து சந்தா இசை நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கினார். (ஆண்டு சந்தா செலுத்துவதன் மூலம் ஒரு ரசிகர் பாக்-ஆபெல் வழங்கும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆண்டு முழுதும் அனுமதிக்கப்படுவார்கள்.) ஆபெல் சிறந்த இசைக்கலைஞர். வயோலா டா காம்பா (viola da gamba) என்ற இசைக்கருவியைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர். (ஆனால், அப்போது செல்லோ (cello), வயோலா டா கம்பாவை ஓரம் கட்டியிருந்தது.) ஆபெ லும் கிறிஸ்டியன் பாக்கின் தந்தை செபாஸ்டியன் பாக்கிடம் இசை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டியன் பாக் மற்றும் ஆபெல் இருவரும் 1765 ல் தொடங்கிய சந்தா இசை நிகழ்ச்சிகள் இருபது வருடங்கள் சிறப்பாக நடைபெற்றன.

Image via Wikimedia Commons

லாங் மேன் வழக்கு

1770 களில் பாக் மற்றும் ஆபெல், லண்டன் ரசிகர்களின் விருப்ப இசைக் கலைஞர்களாக மாறியிருந்தனர். இவர்களது படைப்புகள் புகழ்பெற்றன. மக்களால் விரும்பப்பட்டன. விருந்துகளில் இடம்பெற்றன. காபி கிளப்களில் பேசப்பட்டன.

அவர்களது இசையை வெளியிட பதிப்பாளர்கள் போட்டி போட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முறையான உரிமம் பெற்று பதிப்புகளை வெளியிடவும் செய்தனர். அவர்களில் ஜேம்ஸ் லாங் மேன் என்ற பதிப்பாளர், அனுமதி பெற்றும், வாய்ப்புக் கிடைக்கும்போது பைரஸி செய்தும் பதிப்புகளை வெளியிட்டு வந்தார். இவரைப்போலவே பல லண்டன் பதிப்பாளர்கள் இயங்கி வந்தனர். பதிப்புத் தொழிலை நெறிப்படுத்தும் வழிவகைகள் இல்லமால் இருந்தன.

1773 ல், பாக் மற்றும் ஆபெல் படைப்புகளை லாங்மென் அனுமதி இன்றி வெளியிட்டார்.

பாக் நீதிமன்ற வழக்குத் தொடுத்தார். வழக்கு இழுத்தடித்துக் கொண்டே போனது. அன்றைய நாளில் இசைக்குறிப்புகள் காப்பிரைட் சட்ட வரையறையில் வருமா என்பது விவாதத்திற்கு உள்ளானதாக இருந்தது. இளையராஜா ராயல்டி கேட்பது சரியா? பாடல்கள் அவருக்குச் சொந்தமா அல்லது ரெகார்ட் நிறுவனங்களுக்குச் சொந்தமா என்ற இன்றைய கேள்விகள் போல, அன்றைய லண்டனின் கேள்வி, இசைக்குறிப்புகளுக்கு காப்பிரைட் உண்டா என்பதாக இருந்து வந்தது.

பல முறையீடுகளுக்குப் பின், இந்த வழக்கு 1777 ஆம் ஆண்டு, நீதிபதி வில்லியம் முர்ரே முன் வந்தது. முர்ரே லண்டனின் சட்ட வரலாற்றில் முக்கியமானவர். வணிகச் சட்ட நடவடிக்கைகளில் பல சீர்திருத்தங்களை அவரது தீர்ப்புகள் உருவாக்கி இருந்தன. கிறிஸ்டியன் பாக்கின் வழக்கு அவரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஐந்து ஆண்டுகள் முன் அவர் அளித்திருந்த தீர்ப்பு, இங்கிலாந்தில் அடிமை முறையை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது.

இந்த வழக்கில் லாங்மென் தரப்பு வாதம் எளிமையானதாக இருந்தது. 1710 ஆன் காப்பிரைட் சட்டம் எழுத்துக்கள் மற்றும் புத்தகங்களுக்கே காப்பிரைட் உரிமை வழங்குகிறது. இசைக்குறிப்புகள் அந்த சட்ட வரையறையில் அடங்காது — இதுவே வாதம்.

பாக்கின் வழக்கறிஞர் எதிர் வாதம் வைத்தார் — படைப்புக்களை பாதுகாப்பதே சட்டத்தின் நோக்கம். எழுத்து, இசைக்குறிப்பு என்ற வேறுபாடுகள் ஏற்புடையவை அல்ல.

வில்லியம் முர்ரே வழங்கிய தீர்ப்பு சுருக்கமாக இருந்தது — இசைக்குறிப்புகள், எழுத்துக்கள் போன்றவையே. காப்பிரைட் சட்டம் இசைக் குறிப்புகளுக்கும் செல்லும் என்பதே அந்தத் தீர்ப்பு.

இந்த Bach v. Longman வழக்கு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.


வெற்றியின் விலை

வழக்கின் வெற்றியை அனுபவிக்க கிறிஸ்டியன் பாக் நீண்ட நாட்கள் உயிர் வாழவில்லை.

வழக்கு வெற்றிக்குப் பின், பாக்-ஆபெல் இரட்டையர்களின் இசை நிகழ்ச்சிகள் சிறிது சிறிதாக தேயத் தொடங்கின. மக்கள் ரசனை மாறிவந்தது. பல இளம் இசைக்கலைஞர்கள்  புதிதாக உருவாகி வந்தனர். பாக்-ஆபெல் நிகழ்ச்சிகளுக்கான சந்தா வசூல் குறைந்து கொண்டே வந்தது.

கிறிஸ்டியன் பாக்கின் கடன் பெருகியது. அவரால் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியவில்லை. கிறிஸ்டியன் பாக், மொஸார்ட் என்று யாராக இருந்தாலும், வருவாய் குறையும்போது செலவுகளைக் குறைக்க முடிவதில்லை. புகழ் பெற்ற கலைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் தரம், சமூகத்தில் அந்தஸ்து இவற்றைப் பேணவேண்டிய அவசியம், வருவாய்க்கு மீறி செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம், இவை  என்றைக்கும் மாறப்போவதில்லை

1782 ஆன் ஆண்டின் புதுவருட நாள் அன்று பாக் மறைந்தார். அன்று அவரது வயது நாற்பத்தாறு.

கிறிஸ்டியன் பாக்.

அவர் விட்டுச் சென்ற கடனின் அளவு, அவர் ஈட்டியிருந்த சொத்தை விஞ்சியது. அரசி ஷார்லட் பாக்கின் இறுதிச் சடங்குகளுக்குச் செலவு செய்ய வேண்டியிருந்தது. இசைக்குறிப்புகளுக்கு காப்பிரைட் உரிமை உண்டு என்று தன் வழக்கின் மூலம் நிலைநாட்டிய ஒரு கலைஞனின் இறுதி நாட்கள் நிலைத்தன்மை கொண்டிருக்கவில்லை.

கிறிஸ்டியன் பாக் மரணம் அடைந்த செய்தி கேட்ட மொஸார்ட் “இசையுலகிற்கு இழப்பு” என்று தான் தந்தைக்குக் கடிதம் எழுதினான்.

ஆனால், கிறிஸ்டியன் பாக் இசை படைத்தது மட்டுமல்லல்லாமல்  அதன் உரிமையை நிலை நிறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு ஒன்றை நடத்தி வென்றதையும் சேர்த்துப் பார்க்கும்போது, மொஸார்ட் புரிந்து கொண்டதை விட பெரும் இழப்பு கிறிஸ்டியன் பாக்கின் மரணம்.

பைரஸி ஒழியவில்லை. ஒழியப்போவதும் இல்லை. ஆனால், பாக்-லாங்மேன் வழக்கின் பின், அது வழக்காடக் கூடியதாக மாறியிருந்தது.

அந்த வகையில் அன்றைய லண்டனில் நடைபெற்ற, சட்ட அடிப்படையில் மிக முக்கியமானது என்று கருதக்கூடிய சில வழக்குங்களை நாம் பார்க்கப்போகிறோம்.

காப்பிரைட் கதைகள்

புதிய லண்டன்

Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.