அமெரிக்க எல்லையில் சோதனைக்குள்ளாகும் டிஜிட்டல் வாழ்க்கை

அங்கிள்சாம் நாட்டிற்குள் சட்டபூர்வமாக காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு வெளிநாட்டினரையும் குடியேற்ற அதிகாரிகளும் எல்லை காவலர்களும் அனுமதித்தால் ஒழிய, அத்தனை எளிதாக நாட்டிற்குள் போக முடியாது. ஒவ்வொருவரின் கடவுச்சீட்டையும் சல்லடை போட்டுத் தேடி முறையான அனுமதி பெற்றுள்ளார்களா என்று பார்ப்பது குடியேற்ற அலுவலர்களின் கடமை. அப்படி உள்ளே வருபவர்கள் சட்ட விரோதமான பொருட்களைக் கொண்டு வருகிறார்களா என்று உற்றுக் கண்காணிப்பது சுங்க அலுவலர்களின் பணி. கூடவே K9 ‘ஜிம்மி’ வேறு நம்முடைய பெட்டியை முகர்ந்து நம்மை சந்தேகத்துடன் பார்ப்பது போலவே ஐயம் கொள்ள வைக்கும். சந்தேகப்படும் வகையில் யாராவது தென்பட்டால் அவர்களைத் தனியே அழைத்துச் சென்று விசாரிப்பது காலம்காலமாக நடந்து கொண்டிருப்பது தான். பிசினஸ் விசாவில் வந்த பெண்ணை அபுதாபி விமான நிலையத்தில் வைத்து கேள்விகள் கேட்க, அவருடைய பதில்களில் திருப்தி கொள்ளாமல் திருப்பி அனுப்பி வைத்த கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிறது.

அதுவும் தவிர, பெருகி வரும் கள்ளக் குடியேற்றம், கடத்தல், தீவிரவாதம் போன்ற சம்பவங்களால் எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பாவிகள் சிலரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது உண்மை. தீவிர கண்காணிப்பாளர்களான CBP (Customs and Border Protection) அதிகாரிகள் தாங்கள் சந்தேகிக்கும் நபர்களின் கணினி, கைப்பேசிகளையும் பரிசோதிக்க, 2026ல் சட்டப்பூர்வமாக்கப்பட்ட electronic-device search directive அதிகாரத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். வேறு வழியில்லாமல் அதற்கும் சம்மதிக்க வேண்டியுள்ள நிலையில் தான், ‘சாமுவேல் டூனிக்’ என்ற 30 வயது அமெரிக்கக் குடிமகனின் வழக்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜனவரி 24, 2025 அன்று ‘டொமினிக்கன் ரிபப்ளிக்’ நாட்டில் விடுமுறையை முடித்துக் கொண்டு அட்லாண்டா விமான நிலையத்துக்குத் திரும்பினார் டூனிக். வழக்கமான சுங்க பரிசோதனை வரிசைக்குச் செல்வதற்கும் முன்பாகவே அவர் இரண்டாம்கட்ட பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனால் அவர் குற்றவாளி என்று அர்த்தமல்ல. CBPக்கு ஒருவரை மேலதிக விசாரணைக்காக நேரடியாக இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் பரந்த அதிகாரம் உள்ளது. சந்தேகம் இல்லாமல்கூட சில பயணிகள் இவ்வாறு சோதனைக்கு அனுப்பப்படலாம் என்றும் CBP விளக்குகிறது. என் பக்கத்து வீட்டுப் பெண்ணின் பெட்டியில் அவளுக்குத் தெரியாமல் அவருடைய அம்மா பூஜை செய்த எலுமிச்சம்பழத்தை வைத்துவிட்டிருக்கிறார். காய்கள், பழங்கள் உள்ளே எடுத்துக் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்பதால் பெட்டியிலிருந்து எடுத்துப் போட சொன்னதோடு அபராதமாக $750 வேறு கட்டியிருக்கிறார்கள். கூடவே, இரண்டாம் கட்ட பரிசோதனையில் அவளுடைய, அவள் கணவனுடைய கைபேசிகளைக் கேட்டு ஆராய்ந்திருக்கிறார்கள். இது நடைமுறை.

ஆனால் டூனிக்-ன் நிலை சாதாரண பரிசோதனையை விட வேறுபட்டதாக இருந்திருக்கிறது. அதிகாரிகள் அவரது ஃபோனை பரிசோதித்துப் பார்க்க கேட்டிருக்கிறார்கள். அவரும் கொடுத்திருக்கிறார். ஆனால், அன்லாக் செய்ய தயங்கியுள்ளார். பலமுறை வழக்கறிஞருடன் பேச வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. அவர் பயன்படுத்திய Google Pixel phoneல் GrapheneOS என்ற privacy-focused operating system இருந்துள்ளது. அதில் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சத்தின் மூலம் அலைபேசியின் உரிமையாளர் ஒரு தனி கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ள முடியும். அந்த கடவுச்சொல் பயன்படுத்தப்பட்டால் ஃபோன் திறக்கப்படாமலேயே அதில் உள்ள தகவல்கள் அழிக்கப்படும். இதன் நோக்கம் ஒரு நபர் கட்டாயப்படுத்தப்பட்டு தனது கடவுச்சொல்லை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், sensitive dataவைப் பாதுகாப்பதாகும். டூனிக் அந்த அம்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.

குழந்தை பாலியல் துஷ்பிரயோக படங்கள் தொடர்பில் அவரது ஃபோனை சோதிக்க நினைத்தது காரணமாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் டூனிக்-ன் கைப்பேசியில் இருந்த அவரது போராட்டம், அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களில்தான் அவர்களின் உண்மையான ஆர்வம் இருந்ததாக அவருடைய வழக்கறிஞர் தரப்பு கூறுகிறது.

ஆனால் அரசு தரப்பினரோ, “எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அவரது கைப்பேசியைக் கேட்டுள்ளனர். அவரும் கொடுத்துவிட, அதைத் திறந்து பார்ப்பதற்குக் கடவுச்சொல்லைக் கேட்டு அவர் வழங்கியதை அதிகாரிகள் உள்ளிட்டனர். ஆனால் தொலைப்பேசி திறக்கப்படுவதற்குப் பதிலாக அதன் உள்ளே இருந்த தகவல்கள் முழுவதும் அழிந்துவிட்ட நிலையில் government evidence-ஐ அழித்ததாக அவர் மீது கூட்டாட்சி குற்றவியல் குற்றச்சாட்டு (federal felony charge) போடப்பட்டுள்ளது. டூனிக் தனது கைப்பேசியில் இருந்த தகவல்களை அழித்துவிட்டார். பின்னர் அதிகாரிகள் தொலைபேசியை கைப்பற்றினர்” என்று வாதிடுகின்றனர்.

டூனிக்-ன் வழக்கறிஞர்களோ, அதிகாரிகளிடம் அவர் கொடுத்த கடவுச்சொல்லை அவர்களே கைப்பேசியில் உள்ளிட்டபோது தகவல்கள் மறைந்து போனது. அரசு அதிகாரிகள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தியபோது நடந்த தகவல்கள் அழிப்பிற்குத் தங்கள் கட்சிக்காரர் எப்படி சட்டரீதியாகப் பொறுப்பாக முடியும்?அதற்காக ஏன் குற்ற வழக்குப் போட வேண்டும் என்று கபில்சிபல் பாணியில் நீதிமன்ற தாக்கலில் கேட்டுள்ளனர்.

அரசு கைப்பற்றவிருந்த பொருளை ஆய்வு செய்வதைத் தடுத்து டிஜிட்டல் தகவல்களை அழித்த குற்றத்திற்காக அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை இருக்கலாம். ஆனால் டூனிக் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் தான் நிரபராதி என்றும் தன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ள வழக்கு இன்னும் விசாரணையில் தான் உள்ளது.

டூனிக் ஒரு சாதாரண பயணி அல்ல. அவர் அட்லாண்டாவின் “Stop Cop City” இயக்கத்துடன் தொடர்புடைய போராளி. அவரது போராட்ட குணம், அரசியல் நடவடிக்கைகளே அதிகாரிகளின் கவனத்திற்கு அவரை கொண்டு வந்ததாகவும் அதனாலேயே அவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். அவருடைய கைபேசியை கைப்பற்றுவதைத் தடுக்க அதன் தகவல்களை அழித்ததற்காகவே குற்றம் சாட்டப்பட்டு அமலாக்க அதிகாரங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது எல்லை பாதுகாப்புத்துறை.

இதனால் இந்த வழக்கு ஒரு மனிதரின் கைபேசி பற்றிய வழக்காக மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் திரும்பும் தருணத்தில் எல்லை பாதுகாப்பு ஒருவருடைய கைபேசியை எவ்வளவு தூரம் ஆராய முடியும்? phone-ஐ unlock செய்ய மறுப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? தகவல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் பிரைவசி தொழிநுட்பமே குற்றத்தின் ஆதாரமாக மாறுமா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இன்று உலகம் மாறிவிட்டது.

ஒரு சிறிய smartphone-க்குள் நாம் ஒரு பெட்டியில் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு நம்முடைய வாழ்க்கையையே குவித்து வைத்திருக்கிறோம். குடும்பப் புகைப்படங்கள், தனிப்பட்ட உரையாடல்கள், அலுவலக மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், மருத்துவத் தகவல்கள், பயண வரலாறு, சமூக, அரசியல் கருத்துகள், சில நேரங்களில் நம்முடைய மிக அந்தரங்கமான எண்ணங்களையும் கூட.

அப்படியிருக்க, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் ஒரு அதிகாரி, “உங்கள் ஃபோனை அன்லாக் செய்யுங்கள்” என்று கேட்டால் அது ஒரு சாதாரண பாதுகாப்பு சோதனையா? அல்லது நமது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அரசாங்கம் நுழையும் தருணமா? இந்தக் கேள்வி வெறும் கற்பனை அல்ல. இது தான் சாமுவேல் டூனிக் என்ற அமெரிக்கக் குடிமகன் எதிர்கொள்ளும் மத்திய குற்றவியல் வழக்கு. அதுமட்டுமல்ல, இந்த வழக்கு வெளிவரும் நேரமும் முக்கியமானது.

அமெரிக்காவின் எல்லையில் சாதனங்களைச் சோதிக்கும் அதிகாரத்தை CBP பயன்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. 2026 ஜனவரியில் தான் இந்தப் பரிசோதனை தொடர்பான புதிய CBP Directive 3340-049B நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, அமெரிக்க எல்லையைக் கடக்கும் பயணிகளின் தொலைபேசி, மடிக்கணினி, டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை எவ்வாறு சோதிக்க வேண்டும், அதிலுள்ள தகவல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலாகும். இது புதிய அதிகாரம் அல்ல. மாறாக, அந்தச் சோதனைகளுக்கான நடைமுறைகளைத் தெளிவுபடுத்துகிறது. இதில் “basic சர்ச், “advanced search” என்பதும் வேறுபடுத்தப்பட்டுள்ளன. Advanced search நடத்துவதற்கு CBP-யின் விதிகளின்படி தேசிய பாதுகாப்பு காரணம் அல்லது CBP அமல்படுத்தும் சட்டத்தை மீறியதாக நியாயமான சந்தேகம் போன்ற அடிப்படை காரணியும் உயரதிகாரி ஒப்புதலும் தேவைப்படுகிறது. அதிகாரிகள் network connectivity-ஐ துண்டித்து, சாதனத்தில் உள்ள தகவலையே சோதிக்க வேண்டும். சட்டப்படி அனுமதிக்கப்பட்ட சில சூழ்நிலைகளில் சோதனையில் கிடைத்த தகவல்களை CBP தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். இருப்பினும், இந்த Directive என்பது CBP-யின் உள்நாட்டு கொள்கை. அது அரசியலமைப்புச் சட்டத்தின் இறுதி விளக்கம் அல்ல. ஒரு குறிப்பிட்ட கைபேசி சோதனை Fourth Amendment-ஐ மீறியதா என்பதை இறுதியில் நீதிமன்றங்களே தீர்மானிக்கும். 

மிக முக்கியமாக, டூனிக்-ன் கைபேசி சோதனை ஜனவரி 24, 2025ல் நடந்தது; 049B Directive கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, 2026 ஜனவரி 1ல் அமலுக்கு வந்தது. எனவே டூனிக்கிடம் நடத்தப்பட்ட சோதனை இந்த புதிய Directive-ன் கீழ் நடத்தப்படவில்லை. ஆனால் இன்று அமெரிக்க எல்லையில் மின்னணு சாதனங்களை எவ்வாறு சோதிக்க வேண்டும் என்பதற்கான தற்போதைய CBP விதிமுறைகளை 049B காட்டுகிறது. CBPயே இம்மாதிரி சோதனைகள் மிகவும் அரிதானவை. 2024ல் எல்லையைக் கடந்து வந்த பயணிகளில் 0.01%க்கும் குறைவானவர்களின் சாதனங்கள் மட்டுமே சோதிக்கப்பட்டன எனக் கூறுகிறது.

கேள்வி எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல. அந்தப் பரிசோதனையில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் எத்தனை அரசாங்கத்திற்குத் தெரிய வரும் என்பதும் முக்கியமாக, “என்னுடைய கைபேசி. என்னுடைய தகவல்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை. இவற்றின் மீது இறுதி உரிமை யாருக்கு” என்ற கேள்விதான் இந்த வழக்கின் மையமாக இருக்கிறது.

இந்தக் கேள்வி நாளை யாருக்கும் எழலாம்.

இதுவரை எந்தவித குற்றவியல் குற்றச்சாட்டுகளும் டூனிக் மீது இல்லை. அவர் அட்லாண்டாவில் கட்டப்பட்டு வரும் ‘Atlanta Public Safety Training Center’ எதிர்ப்பாளர்களால் ‘Cop City’ என்று அழைக்கப்படும் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடைய போராளி. அவர் ‘Stop Cop City’, ‘Defend the Atlanta Forest’ இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர். இந்த இயக்கங்கள் காவல்துறை பயிற்சி மையம் அமைப்பதற்கு எதிராகச் சுற்றுச்சூழல், காவல்துறை அதிகாரம், சமூகநீதி உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்துப் போராடி வந்தன. இந்தப் போராட்டங்கள் தான் டூனிக் மீதான கவனத்தை ஈர்த்ததில் பெரும்பங்கு வகித்தன என்று அவரின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இது இங்கே ஒரு முக்கியமான சட்ட வேறுபாட்டை உருவாக்குகிறது.


டூனிக் மீது தீவிரவாத குற்றச்சாட்டும் இல்லை. அவர் தீவிரவாதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் இல்லை. ஆனால் இவரைப் பற்றின மத்திய அதிகாரிகளின் செய்தி பரிமாற்றத்தில் “சந்தேகப்படும் தீவிரவாத செயல்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் “Defend the Atlanta Forest” இயக்கத்தை அரசு “anti-government, anti-authority violent extremist group” என்று கருதியதாகவும் இவர் தரப்பு வாதிடுகிறது.

ஒருவரின் பெயர் ஒரு law-enforcement alert அல்லது watch-related system-ல் தோன்றுவதால் அவர் ஒரு குற்றத்தைச் செய்தவர் என்று அர்த்தமல்ல. அந்த நபரிடம் கூடுதல் விசாரணை தேவை அல்லது பாதுகாப்பு சார்ந்த தகவல் இருக்கிறது என்பதைக் குறிக்கலாம்.

ஆனால், டூனிக் மீதான “flag” எதன் அடிப்படையில் உருவானது? அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? அதன் பின்னால் உண்மையான தேசிய பாதுகாப்பு சார்ந்த அக்கறை இருந்ததா? அல்லது அவரது சட்டப்பூர்வமான அரசியல் செயற்பாடுகள் அதிகப்படியான அரசு சோதனைக்குக் காரணமானதா என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் டூனிக் குற்றவாளி என்றோ அரசின் நடவடிக்கைகள் சரியானது என்றோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. அக்டோபர் 23ல் இவ்வழக்கைப் பற்றின கூடுதல் தகவல்கள் தெரியலாம். அதுவரை காத்திருக்கும் நேரத்தில் அமெரிக்க எல்லையைக் கடக்கும் முன் Phone-ஐ எப்படி தயார் செய்வது என்று பயணிகள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

இந்த வழக்கின் முக்கியத்துவம் அவர் ஒரு போராளி என்பதிலோ, அவர் பயன்படுத்திய கைபேசியில் GrapheneOS இருந்ததிலோ மட்டும் இல்லை.

ஒரு மனிதனின் கைபேசியை அரசு எப்போது திறக்கலாம்? எவ்வளவு தூரம் பார்க்கலாம்? எந்தச் சூழ்நிலையில் பார்க்கலாம்? அந்தத் தகவலை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம்? ஒரு குடிமகன் தனது தனியுரிமையைப் பாதுகாக்க முயன்றால், அந்த முயற்சியே குற்றமாக மாறுமா? இந்தக் கேள்விகளுக்கு ஒரே ஒரு எளிய பதில் கூட இல்லை என்பது தான் நிதர்சனம். அதனால் தான் ‘தொலைபேசி தனிஉரிமை’ பற்றிய சட்டப் போராட்டம் மிகவும் முக்கியமானது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எப்படியிருந்தாலும் எல்லைப் பாதுகாப்பு, தொலைபேசி தனிஉரிமை இந்த இரண்டுக்கும் இடையிலான கோடு எங்கே வரையப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய கேள்வியும் எதிர்பார்ப்பும்.


Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.