எழுத்தின் விலை – அமெரிக்காவின் பைரஸி வரலாறு

This entry is part 8 of 8 in the series காப்பிரைட் கதைகள்

புதிய அமெரிக்காவின் சிற்பி

ஃபிலடெல்ஃபியா 1730.

விளக்குகளை அணைத்துவிட்டு உறங்கச் சென்றிருந்தது அந்த வீதி. ஒரு அச்சுக்கூடத்தில் மட்டும் விளக்கொளி தெரிந்தது. உள்ளே ஒரு இருபத்து நான்கு வயது இளைஞன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்தான். அவன் மிக கவனமாகக் குனிந்து, ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோர்த்தான்.

அந்த இளைஞன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின். தனது  பன்னிரண்டாம் வயதிலிருந்து, தனது சகோதரர் ஜான் என்பவரிடம் அச்சுத்தொழில் கற்றுக்கொண்டு, அவரிடமே பணி செய்து வந்தார் ஃபிராங்க்ளின். ஆனால் அந்தப் பணிச்சூழல் அவர் மனதிற்கு விருப்பமானதாக இல்லை. எனவே தன் கையிலிருந்த புத்தகங்களை விற்று வழிச்செலவுக்குப் பணம் சேகரித்துக் கொண்டு பாஸ்டனில் இருந்து ஃபிலடெல்பியா விற்கு ஓடிவந்தார். அப்போது அவரது வயது பதினேழு.

ஃபிலடெல்ஃபியாவில் தனக்கென ஒரு அச்சுக் கூடத்தை உருவாக்கிக் கொண்டார் ஃபிராங்க்ளின். அச்சுத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் கற்றுக் கொண்டார். பதிப்பித்தல், எளிய மக்களுக்கு அதை விற்பனை செய்தல் என ஒவ்வொன்றிலும் இருந்த வியாபார நுட்பங்களைக் கற்றுக் கொண்டார்.

அன்று, அந்த இரவில் அவர் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த புத்தகம் லண்டனில் இருந்து அன்றுதான் அவருக்கு வந்து சேர்ந்திருந்தது. இந்தப் புத்தகம் வெளியாகிச் சில வாரங்களே ஆகியிருந்தன. அது ஒரு கிரேக்க வரலாற்றுப் புத்தகம். அறிவுப் பொக்கிஷம். அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கருதுபவர்கள் மற்றும் கற்றவர்கள் விரும்பி வாசிக்கும் புத்தகம். லண்டனில் இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர், கையெழுத்துப் பிரதியைச் சரிபார்த்தல், நேர்த்தியான வடிவமைப்பை உருவாக்குதல் என்று ஒவ்வொரு பணியிலும் கவனம் செலுத்தி இருந்தார். காலம், பணம் இவற்றை முதலீடு செய்து இந்தப் புத்தகத்தை உருவாக்கி இருந்தார். அந்த உழைப்பிற்கேற்ற விலையை நிர்ணயம் செய்தார். எளிய மனிதர்கள் எளிதில் வாங்க முடியாததாக இருந்தது அந்த விலை.

ஆனால் ஃபிராங்க்ளின், இந்தப் புத்தகத்தை அமெரிக்கர்களுக்கு மலிவாகக் கிடைக்கும் படிச் செய்ய விரும்பினார். லண்டன் விலையில் ஒரு சிறு பகுதியை விலையாக வைத்தால் கூட, அவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏன்? இந்தப் புத்தகத்தில் ஃபிராங்க்ளின் எந்த முதலீடும் செய்யவில்லை. யாரிடமும் பணம் கொடுத்து உரிமம்/அனுமதி வாங்கவில்லை. கையெழுத்துப் பிரதியைச்  சரிபார்க்க அவசியமில்லை. இந்தப் புத்தகம் விற்பனையில் ஏற்கனவே வெற்றி பெற்ற ஒன்று. நன்றாக விற்பனையாகும் என்பது நிச்சயம். ஃபிராங்க்ளின் வேலை அந்தப் புத்தகத்தைப் பிரதி எடுத்தது மட்டுமே.

மேலும், தனது வழிமுறையில் எந்தத் தவறும் இருப்பதாக அவர் கருதவில்லை. அமெரிக்கர்கள் யாருமே அப்படிக்  கருதவில்லை.  அமெரிக்கா போன்ற இங்கிலாந்தின் காலனி நாடுகள், லண்டனில் இருந்து தொலைவில் இருந்தன. அந்த நாடுகளில் புத்தகங்கள் அரிதானவையாகவே இருந்தன. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், ஃபிலடெல்ஃபியாவிலோ, பாஸ்டனிலோ புத்தகம் வாங்கக் கடைகள் கிடையாது.  அப்படியே இருந்திருந்தாலும் கூட, இங்கிலாந்துப் புத்தகங்களின் விலை, விவசாயப் பொருளாதாரம் கொண்ட அமெரிக்காவிற்குக் கட்டுப்படி ஆகாது.

வருங்கால அமெரிக்காவின் நூறு டாலர் நோட்டுகளில் முகம் காட்டப்போகும், அமெரிக்காவின் சுதந்திர அறிக்கை மற்றும் அரசியலமைப்பு உருவாவதில் பங்களிப்பு செய்யப்போகும், புதிய அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவர் என்று கருத்தப்படப் போகும் ஃபிராங்க்ளின், அந்த இரவில் புத்தகம் ஒன்றை பைரஸி பதிப்பிற்காக அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்தார்.

Image : Public domain via Wikimedia

பின்னாளில் அமெரிக்கா காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு ஒரு தேசமானது. அப்போதும் புத்தகப் பைரஸி தொடர்ந்தது. அமெரிக்க நீதிமன்றங்கள் பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பாதுகாக்காமல் கைவிரித்தன.

இன்றைக்குக் நாம் கொண்டாடும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களுக்கு, பைரஸிக்கு எதிரான சட்டப் பாதுகாப்பு இல்லாமலே இருந்தது.


தொழில்முறைப் பைரஸி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க பதிப்பாளர்கள் தங்களுக்குள் ஒரு நடைமுறையைக் கடைப்பிடித்தனர்.

நியூயார்க்கின் ஹார்பர் அண்ட் பிரதர்ஸ்,  ஃபிலடெல்பியா வின் கேரி அண்ட் லீ, பாஸ்டனின் டிக்நர் அண்ட் ஃபீல்ட்ஸ் ஆகிய பதிப்பாளர்கள் பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தொடர்ந்து பைரஸி செய்தனர். இவர்களது ஏஜெண்டுகள் இங்கிலாந்தில் இருப்பார்கள். வணிக வெற்றி பெற்ற புத்தகங்களை வாங்கி அவற்றை விரைந்து அமெரிக்காவிற்குக் கப்பலேற்றுவதே இவர்களது முக்கியப் பணி. அமெரிக்கப் பதிப்பகம் கப்பலுக்குக் காத்திருக்கும். விரைந்து ஒரு பதிப்பை வெளியிடுவது முக்கியமானது. அப்படி விரைந்து வெளியிடும் முதல் பதிப்பாளர் மட்டுமே சந்தையில் வெற்றி பெறுவார்.

இத்தகைய போட்டி, அமெரிக்கப் பதிப்புத் துறையில் குழப்பத்தை உண்டாக்கியது. ஒரு புத்தகத்தை வெளியிட பதிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விலைகுறைப்பு செய்தனர். இதனால் பொதுவாகத் தொழில் லாபகரமானதாக இருக்கவில்லை.

இந்தப் பிரச்சினையைச் சரி செய்ய, தங்களுக்குள் ஒரு ஒத்துழைப்பு தேவை என்ற முடிவுக்கு பதிப்பாளர்கள் வந்தனர்.

முதலில் ஒரு புத்தகத்தைக் கைவரப்பெறும் பதிப்பாளர் அதனை அறிவிப்பார். பத்திரிகை விளம்பரம், அல்லது குழுக்கள் இடையே தகவல் பரிமாற்றம் என்று ஏதோ ஒரு வகையில் அந்த அறிவிப்பு இருக்கும்.  பிற பதிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்ட பதிப்பாளரின் “உரிமை”ஐ அங்கீகரிப்பார்கள். அந்தப் புத்தகத்தை அவர் அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டார்கள்.

இதனால் எழுத்தாளர்கள் தவிர்த்து அனைவரும் பயன் பெற்றனர்.


பைரஸி விளம்பரம்

1866 ஆம் ஆண்டின் குளிர் காலை.

மார்க் ட்வெய்ன் என்று அறியப்படும் சாமியுவல் க்ளமென்ஸ் ‘நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்’ செய்தித்தாளைப் பிரித்தார்.  அதில் ஒரு விளம்பரத்தைக் கண்ட  அவரது காதுகள் சூடாகின. அது “விட் அண்ட் ஹ்யூமர்” (Wit and Humor) என்ற புத்தகம் ஒன்றிற்கான விளம்பரம். பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டிருந்தனர். மார்க் ட்வெய்னும் அதில் இடம் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர்.

அவரது பெயர் “மார்க் ட்ரெயின்” (Mark Trai) என்று தவறாக வெளியாகி இருந்தது.

அவர் தனது படைப்பை வெளியிட யாருக்கும் அனுமதி கொடுத்திருக்கவில்லை. அப்படி ஒரு புத்தகம் வெளியாவதே அந்த விளம்பரம் மூலம் மட்டுமே அவருக்குத் தெரியவந்தது.

சுதர்லாண்ட் அண்ட் கோ என்ற பதிப்பாளர் அந்தப் புத்தகத்தைத் தபாலில் பெறலாம் என்றார். புத்தகத்திற்கு ஒரு டாலர். கெட்டியான அட்டைப் பதிப்பிற்கு ஒன்றரை டாலர்கள். முகவரியும் கொடுத்திருந்தார்.

சிறந்த கதைகள், கட்டுரைகள் என்று மனத்திற்குப் பிடித்தவற்றைச் சேகரித்து யாரும் ஒரு தொகுப்பாக வெளியிடலாம். யாரையும் கேட்க வேண்டியதில்லை. எழுத்தாளரின் பெயரையும் தவறாகக் குறிப்பிடலாம்.  யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. அப்போது மார்க் ட்வெய்ன் வளர்ந்து வந்த எழுத்தாளர். அவர் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழலில் அவர் இருக்கவில்லை.

மார்க் ட்வெயின் புகழ் பெற்ற பின்னும் கூட நிலைமை ஒன்றும் தலைகீழாக மாறிவிடவில்லை. அவருடைய கடல் பயணக் குறிப்புகள் (த இன்னசன்ட்ஸ் அப்ராட்) அமெரிக்காவில் வெளியான உடனேயே, இங்கிலாந்தின் பைரஸி பதிப்பாளர்கள் அதனைத் தங்கள் நாட்டில் வெளியிட்டனர். டாம் சாயர், ஹக்குல் பெரி ஃபின் ஆகியவை பைரஸி மலிவுப் பதிப்புகளாக வெளியாகின.


பிரிட்டிஷ் பைரேட்கள்

ஜான் கேம்டன் ஹாட்டன்  என்பவர் ஒரு லண்டன் பதிப்பாளர். இவர் பைரஸி பதிப்புகளை வெளியிட்டு வந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட வகைப் புத்தகங்களையே குறிவைத்தார். அது அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகள்.

அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு, பிரிட்டனில் காப்பிரைட் கிடையாது. சர்வதேச காப்பிரைட் வரையறை என்ற ஒன்று கிடையாது. எனவே எழுத்தாளர்கள் நீதிமன்றமும் செல்ல முடியாது. பாதுகாப்பற்ற இந்த வகை அமெரிக்கப் புத்தகங்களைத்  தனது விருப்பமான பதிப்புகளாக ஹாம்டன் எடுத்துக் கொண்டார்.

செய்தித்தாள்களில் வெளிவந்த மார்க் ட்வெய்னின் படைப்புகளை அவர் சேகரித்தார். ட்வெய்னின் நையாண்டிக் கட்டுரைகள், பயணக் கடிதங்கள் ஆகியவற்றை ட்வெய்னின் அனுமதி இல்லாமல் தொகுத்து வெளியிட்டார். மார்க் ட்வெய்ன்  என்றில்லை, எந்த அமெரிக்கர் எழுத்தெல்லாம் இங்கிலாந்தில் விற்குமோ, அவை அனைத்தையும் பைரஸி செய்தார்.

மார்க் ட்வெய்ன் இது குறித்துத் தனது மனக்குறையை வெளிப்படுத்திய போது, அதனைப் புறக்கணித்தார் ஹாட்டன். அவரைப் பொறுத்தவரை, அவர் செய்தது சட்டப்படிக் குற்றம் அல்ல. அதுவும் உண்மையே. மார்க் ட்வெய்ன் தனது படைப்புகளைப் பாதுகாக்க விரும்பினால், அவர்தான் ஒரு சர்வதேச சட்டத்திற்கு முன்னெடுப்பு செய்ய வேண்டும். இதுவே அன்றைய நிலை.

ஹாட்டன், மார்க் ட்வெய்னின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டார். சில நேரங்களில், அவரது எழுத்தைத் தழுவி எழுதினார். சில நேரங்களில் மாற்றி எழுதினார். அனைத்தையும் வெளியிட்டார். இது ட்வெய்னின் பைரஸி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. ஹாடன் மறைந்த பின் ட்வெய்னின் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. மற்றொரு பதிப்பாளர் ஹாட்டன்  செய்து வந்த பைரஸியைத் தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில் மார்க் ட்வெய்ன் பொறுமை இழந்தார். கோபம் கொண்டு கடிதங்கள் எழுதினார். செய்தித்தாள்களில் புலம்பி எழுதினார். பைரஸியைச் சமாளிக்க புதிய உத்தி ஒன்றைக்கூடக் கையாண்டு பார்த்தார். அப்போது கனடா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. மார்க் ட்வெய்ன் தனது புத்தகத்தை முதலில் கனடாவில் வெளியிட்டார். இதனால், பிரிட்டிஷ் காப்பிரைட் பாதுகாப்பு அவருக்குக் கிடைத்தது. பின்னர் அதே புத்தகத்தை அமெரிக்காவில் வெளியிட்டார். அது அமெரிக்கப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்தது.  முதலில் அமெரிக்காவில் வெளியானால், அதனை இங்கிலாந்தில் மறுவெளியீடு செய்து காப்பிரைட் பதிவு செய்ய முடியாது.

இந்த உத்தி மார்க் ட்வெயினுக்கு ஓரளவு உதவியது என்றாலும், அது நிரந்தரமான தீர்வைக் கொடுக்கவில்லை.


“A day will come, when, in the eyes of the law, literary property will be as sacred as whiskey, or any other of the necessaries of life.”
— Mark Twain, speech in Montreal, Quebec, 1881.


சாம்யுவல் க்ளமென்ஸ்

1883 ஆம் ஆண்டு.

பெல்ஃபோர்ட் கிளார்க் கம்பெனி (Belford, Clark & Company) என்று சிகாகோ நகரைச் சேர்ந்த பதிப்பகம் மார்க் ட்வெயினின் எழுத்துக்களை அவரது அனுமதியின்றி வெளியிட்டது. அவரது தொடக்க கால எழுத்துக்கள். காப்பிரைட் பதிவு செய்வதைப் பற்றியெல்லாம் ட்வெய்ன் சிந்தித்திருக்காத காலத்தில் எழுதிய எழுத்துக்கள். அன்றைய காப்பிரைட் சட்டப்படி, முறையாகப் பதிவு செய்யப்படாத படைப்புகளுக்கு காப்பிரைட் செல்லுபடியாகாது. அந்தப் படைப்புகள் வெளியான உடனேயே பொதுச் சொத்தாகிவிடும். யாரும் அவற்றை மறு பதிப்பு செய்யலாம்.

ஆனால் ட்வெயினின் வழக்கறிஞர்கள் ஒரு புதிய உத்தியை முயற்சி செய்து பார்க்க நினைத்தனர். வெளியான படைப்புகள் காப்பிரைட் பதிவு செய்யப்படாதவை என்றாலும், அந்தப் பதிப்புகள் மார்க் ட்வெயின் என்ற பெயரைப்  பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டன. எனவே பொதுச் சட்டப்படி ஒருவது பெயர், புகழ் இவற்றை அவரது அனுமதியின்றி வியாபாரத்திற்குப் பயன்படுத்தியதாக வாதாடலாம் என்று கருதினர். காப்பிரைட் சட்ட வரையறை முதிர்ச்சி பெறாத நாட்களில் இத்தகைய வழிமுறைகளை வழக்கறிஞர்கள் பயன்படுத்தி இருப்பதை வரலாற்றில் ஆங்காங்கே பார்க்க முடியும்.

“மார்க் ட்வெயின்” என்ற பெயரை பெல்ஃபோர்ட் கிளார்க் கம்பெனி அனுமதி இன்றிப் பயன்படுத்தி இருக்கிறது. அதற்கான அனுமதி அந்தப் பெயரை உரிமையாகக் கொண்டவரிடம் இருந்து பெறப்படவில்லை. மேலும் வெளியான படைப்பின் பிழைகள், குறைவான தரம் இவை, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். இதுவே வாதம்.

எதிர்தரப்பு  வழக்கறிஞரின் வாதம் சம்மட்டி அடியாக இருந்தது.

“மார்க் ட்வெயின்” என்ற பெயர் மேற்படி எழுத்தாளரின் சட்டப்பூர்வப் பெயர் அல்ல. அது ஒரு புனைப்பெயர். அவரது உண்மையான பெயர் “சாம்யுவல் க்ளமென்ஸ்”. இந்த வாதம் சட்டப்படி நீதிமன்றத்தில் செல்லுபடியாகவும் செய்தது. ஏனென்றால், “மார்க் ட்வெயின்” சட்டபூர்வப் பெயர் அல்ல. பதிவு செய்யப்பட்ட வணிகக் குறியீடும் (ட்ரேட்மார்க்) அல்ல.

“மார்க் ட்வெயின்” என்ற பெயரே உங்களுடையதல்ல. எனவே தவறான பதிப்பினால் உண்டாகும் களங்கமும் உங்களுக்கானதல்ல என்று சொல்லிய நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை சாம்யுவல் கிளமென்ஸ் என்ற பெயரிலேயே எழுதியது.
Samuel L. Clemens v. Belford, Clark & Co., 14 F. 728 (C.C.N.D. Ill. 1883)

காப்பிரைட் உரிமையை நிலைநாட்டுவதே அரிதாக இருந்த காலத்தில் புனைப்பெயரை நிலைநாட்டுவது கனவிலும் நடக்கக் கூடியதல்ல.

U.S. Post Office, Public domain, via Wikimedia Commons

“நன்றி மறந்த” சார்ல்ஸ் டிக்கென்ஸ்

ஜனவரி 1842.

இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த கப்பல், பாஸ்டன் துறைமுகத்தை அடைந்திருந்தது. மக்கள் அந்தக் கப்பலை எதிர்பார்த்துக் கூடியிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்து இருந்தது சார்ல்ஸ் டிக்கென்ஸ் இன் வருகையை. தாங்கள் நேரில் பார்த்திராத, ஆங்கில இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரை வரவேற்கக் காத்திருந்தனர். அவர் எழுதியிருந்த ஆலிவர் ட்விஸ்ட் மற்றும் பல புத்தகங்களை அவர்கள் படித்திருந்தனர். அமெரிக்கர்கள் சார்ல்ஸ் டிக்கன்ஸைப் போல வேறு ஒரு ஆங்கில எழுத்தாளரைக் கொண்டாடியதில்லை.

Post of the USSR, Public domain, via Wikimedia Commons

அமெரிக்கர்கள் படித்த டிக்கன்ஸின் எழுத்துக்கள், அமெரிக்கப் பைரஸி பதிப்புகள் மூலம் அவர்களை வந்தடைந்தவை. அவர்கள் கொண்டாடிய புத்தகங்களின் பின் இருந்த பொருளாதார, சட்டச் சிக்கல்கள் பற்றி அந்த வாசகர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் டிக்கென்ஸு க்கு அது பெரும் மனக்குறையாக இருந்து வந்தது.

டிக்கென்ஸ் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றினார். விருந்துகளில் கலந்து கொண்டார். இலக்கியக் கூட்டங்களுக்குத் தலைமை வகித்தார். அரசியல்வாதிகள் அவரைச் சந்திக்க வந்தனர்.

“என்னை ஒரு அரசனை வரவேற்பது போல அமெரிக்க மக்கள் வரவேற்றனர்” என்று பின்னாட்களில் அவர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். அன்று அவருக்குக் கிடைத்த வரவேற்பு போன்றதொரு வரவேற்பு  அமெரிக்க மக்களிடம் இருந்து மற்றொருவருக்குக் கிடைக்க நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. அது பிரிட்டிஷ் இசைக் குழு பீட்டல்ஸ் அமெரிக்கா வந்த போது கிடைத்த வரவேற்பே. ஒரு ராக் ஸ்டார் போன்று வரவேற்கப்பட்டாலும் கூட டிக்கென்ஸ் மனதில் நீங்காமல் இருந்த வடு, அமெரிக்காவின் இலக்கியப் பைரஸி தான்.

பாஸ்டன், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் என்று தான் கலந்து கொண்ட ஒவ்வொரு கூட்டத்திலும் தன் மனக்குறையை வெளிப்படுத்தினார் டிக்கென்ஸ். அமெரிக்காவில் தங்கள் புத்தகங்கள் விற்பனையாவதால் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. அமெரிக்கர்கள் இலக்கிய ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் பைரஸியைக் கண்டிப்பதில்லை. அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். என்று கூட்டங்களில் பேசினார் டிக்கென்ஸ். இந்தப் பேச்சை அமெரிக்கர்கள் ரசிக்கவில்லை.

அவரது கருத்து சர்ச்சையை உருவாக்கியது. “நன்றியற்ற” டிக்கென்ஸ்பற்றிப் பத்திரிகைகள் எழுதின. தன்னை வரவேற்றுப் பெருமைப்படுத்திய மக்களிடம் அவர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கலாம் என்று கட்டுரைகள் எழுதின. சில பத்திரிகைகள் ஒருபடி மேலே சென்று, “அமெரிக்கக் கலாச்சாரத்தை விரும்பாத டிக்கென்ஸே! திரும்பப் போ!!” என்றன.

டிக்கென்ஸ் செய்த தவறு என்ன? பைரஸி மூலம் கிடைத்த புகழ் கொடுத்த மேடையை, பைரஸி செய்பவர்கள் கொடுத்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டு “பைரஸி ஒரு குற்றம்” என்று சொன்னதே. பைரஸி செய்பவர்கள் தலை குனிவார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் அவர்களோ, மனம் புண்பட்டனர்.

டிக்கென்ஸின் அமெரிக்கப் பயணம் அவர் மீது அமெரிக்கர்கள் வைத்திருந்த மரியாதையை சேதப்படுத்தியது.

அமெரிக்கர்கள் டிக்கென்ஸ் வாசிப்பதைக் கேட்கக்  கட்டணம் செலுத்திக் காத்திருந்த காட்சி
Unattributed, Public domain, via Wikimedia Commons

கிறிஸ்த்மஸ் காரல் 

அடுத்து வந்த ஆண்டுகளில், டிக்கென்ஸ் அமெரிக்கர்களை எந்த செயலுக்காக விமர்சனம் செய்தாரோ, அதனை அவரது சொந்த நாடே அவருக்குச் செய்தது.

1843 டிசம்பர் மாதம். டிக்கென்ஸின் “கிறிஸ்த்மஸ் காரல்” வெளியானது. அந்தக் கதை, வாசகர்களுக்கு ஒரு சிறந்த கிறிஸ்த்மஸ் பரிசாக இருக்க வேண்டும் என்று டிக்கென்ஸ் நினைத்தார். நேர்த்தியான வடிவம், வண்ணப் படங்கள், சிறப்பான அட்டை வடிவமைப்பு என, காலம், பொருள் இவற்றைச் செலவழித்து அந்தப் புத்தகத்தை உருவாக்கினார். அதன் விலை எளிய மக்கள் வாங்கக் கூடியதாக இல்லை என்றாலும், நடுத்தர மக்களால் வாங்கக் கூடியதாக இருந்தது. நடுத்தர வர்க்க ஆங்கிலேயர்களே டிக்கன்ஸின் பெரும்பான்மை வாசகர்கள்.

கிறிஸ்த்மஸ் காரல் ஆங்கில கலாச்சாரத்தின்  முக்கிய அடையாளமானது. இன்று அதிகம் பயன்படும் “மெர்ரி கிறிஸ்த்மஸ்” என்ற வாழ்த்துச் சொற்றொடர், புகழ் பெற்றதே இந்தப் புத்தகத்தால் தான். டிக்கென்ஸின் அந்தக் குறுநாவல், பிறருக்கு உதவும் எண்ணம் இல்லாது கருமியாக வாழ்ந்த ஒருவன், கிறிஸ்த்மஸ் காலத்தில், தனக்குத் தெரிந்த, இறந்து போனவர்களின் ஆவிகளைச் சந்திப்பதையும், அவன் அடைந்த மன மாற்றத்தையும் சொல்லும் கதை. பின்னாட்களில் பல திரைப்படங்கள் இந்தக் கதையின் சாயலில் வெளிவந்தன.

இந்தப் புத்தகம் விற்பனையில் வெற்றி பெற்றாலும் கூட, ஒரே வாரத்தில் பைரஸி பதிப்பின் போட்டியால் பாதிப்படைந்தது. போட்டிப் புத்தகத்தின் பெயர் “கிறிஸ்த்மஸ் கோஸ்ட் ஸ்டோரி” — பொருத்தமான பெயர். கிறிஸ்த்மஸ் காரல் புத்தகத்தின் கதையைச் சுருக்கி எழுதியிருந்தார்கள். அதனை வெளியிட்டது பார்லி இல்லுமினேடட் லைப்ரரி (Parley’s Illuminated Library). அதன் விலை டிக்கன்ஸின் புத்தகத்தின் விலையை விடக் குறைவு.

டிக்கென்ஸ் நீதிமன்ற வழக்குத் தொடுத்தார்.  நீதிமன்றம் டிக்கென்ஸ் தரப்புக்குச் சாதகமாக தீர்ப்பும்  வழங்கியது. பைரஸி புத்தகம் தடை செய்யப்பட்டது. டிக்கென்ஸ்க்கு இழப்பீடு கொடுக்கவும்  உத்தரவிட்டது. இப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

புத்தகத்தை வெளியிட்ட பாலீ இல்யூமினேடட் லைப்ரரி, தான் திவால் ஆகிவிட்டதாகப் பதிவு செய்தது. இதனால் டிக்கென்ஸ் சட்டப்படி இழப்பீடு எதுவும் பெற முடியவில்லை.

டிக்கென்ஸ் அந்த கிறிஸ்த்மஸ் கால விற்பனையில் சம்பாதித்தது சுமார் பிரிட்டிஷ் 230 பவுண்டுகள். அவர் வழகிற்குச் செய்த செலவு 700 பவுண்டுகள்.

Dickens v Parley’s Illuminated Library (1844)

Linen-bound hardback first edition of A Christmas Carol
நேர்த்தியான வடிவில் வெளியாகி இருந்த கிறிஸ்த்மஸ் காரல்

பிதாமகர் விக்டர் ஹ்யூகோ

மார்க் ட்வெயின் மற்றும் டிக்கென்ஸ் போலவே பிரான்ஸ் எழுத்தாளர் விக்டர்  ஹ்யூகோவின் நாவல்களும் பைரஸி பதிப்புகள் மூலம் உலகெங்கும் விற்பனை ஆகின. அவரது எழுத்துக்கள் இலக்கிய உலகம் கொண்டாடிய எழுத்துக்கள். லெ மிஸ்ரப்ல  (les miserables) போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்புகளைக் கொடுத்தவர் ஹ்யூகோ.

டிக்கென்ஸ் அமெரிக்கர்கள் மத்தியில் தனது மனக் குறையை வெளிப்படுத்தினார். மார்க் ட்வெய்ன் மாற்றத்திற்கான சட்டம் வேண்டித் தனது குரலை அரசியல் அரங்கில் வெளிப்படுத்தினார். ஆனால் ஹ்யூகோவின் வழிமுறை முற்றிலும் வேறு. அவர் மாற்றத்திற்கான அமைப்பு ஒன்றைப் பற்றிக் கனவு கண்டார்.

ஹ்யூகோவின்  மூன்றாம் நெப்போலியனுக்கு எதிரான அரசியல் அவரை பிரான்ஸை விட்டு ஓட வைத்தது. பத்தொன்பது வருடங்கள் அகதியாக வாழ்ந்த ஹ்யூகோ, படைப்புரிமை தேச எல்லைகள் தாண்டியது என்பதை அனுபவத்தில் கண்டவர்.

1878 ல் ஹ்யூகோ சர்வதேச இலக்கியக் கூட்டமைப்பை பாரிஸ் நகரில் கூட்டினார். உலகெங்கும் இருந்து எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் பங்கேற்றனர். இந்த அமைப்பு எழுத்தாளர்களின் படைப்புகள் மீது அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்த சர்வதேசக் கோட்பாடுகளை  வகுத்தது. ஹ்யூகோவின் பார்வை,அவரது எழுத்துக்களைப் போலவே தேச எல்லைகளைக் கடந்து படைப்பாளிகளை இணைத்தது.

உலக அளவிலான பிரச்சினைகளை உலக அளவிலான பார்வையால் மூலமே தீர்க்க முடியும் என்று நம்பினார் ஹ்யூகோ. அவர் கண்ட கனவு பைரஸிக்கு எதிராக படைப்புகளைப் பாதுகாப்பது அல்ல. மாறாக, அது படைப்பாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைந்தது.

பாரிசில் ஹ்யூகோ கூடிய கூட்டமைப்பு ஒரு சர்வதேசக் கலை  இலக்கிய அமைப்பு ALAI (Association Littéraire et Artistique Internationale) உருவாகக்  காரணமானது. விக்டர் ஹ்யூகோ கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட இந்த அமைப்பே, 1886 ல் காப்பிரைட் சட்ட வரையறைக்கான உலகின் முதல் சர்வதேச மாநாடான பெர்ன் மாநாடு (Berne Convention ) நடைபெறக் காரணமானது.

அதிகத் தகவல்களை ALAI இணையத்தில் பார்க்கலாம் https://www.alai.org/en/ 

விக்டர் ஹ்யூகோ நீதி மன்றங்களில் தனது வழக்குகளை நடத்தவில்லை. நிரந்தரமான தீர்வுகள் குறித்துக் கனவு கண்டார்.

Victor Hugo

பெர்ன் உடன்படிக்கை

காப்பிரைட் பாதுகாப்புக்கு ஒரு சர்வதேச உடன்படிக்கை தேவை என்ற கருத்து உருவானது.

விக்டர் ஹ்யூகோவின் அழைப்புக் குரலைக் கேட்டு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் படைப்பாளிகள் ஸ்விட்சர்லாந்த் நோக்கிப் புறப்பட்டனர். கவிஞர்கள், இசை கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள். இவர்களுடன் அரசுகளின் பிரதிநிதிகளும் சேர்ந்து கொண்டனர்.

1886 ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சுவிச்சர்லாந்தின் பெர்ன் நகரில் கூடிய பத்து நாடுகள், தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நோக்கம். அந்த வேறுபட்ட நோக்கங்களை நிறைவேற்றியது ஒரே உடன்படிக்கை – பெர்ன் உடன்படிக்கை.

அப்போது ஐரோப்பாவின் வியாபார மையமாக இருந்த பெல்ஜியம் ஒரு சர்வதேச அறிவுசார் சட்டம் தேவை என்று உணர்ந்திருந்தது, புதிதாக உருவாகி இருந்த ஜெர்மனி தொழில் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தனது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உலக அளவில் பாதுகாத்துக் கொள்ள விரும்பியது.

பிரான்ஸின் பாரம்பரியக் கலைச் செல்வம், பிரிட்டனின் இலக்கிய வளம், ஸ்பெயின், இத்தாலி ஆகியவற்றின் மறுமலர்ச்சிக் (Renaissance ) காலக் கலைச் செல்வங்கள் ஆகியவை சர்வதேச காப்பிரைட் சட்டத்தின் தேவையை அந்தந்த நாடுகளுக்கு உணர்த்தியிருந்தன.

கறுப்பின மக்களைக் கொண்ட  கரீபியன் பகுதியில் இருந்து ஹெய்டி (Heidi) யும், ஆப்ரிக்காவில் இருந்து லைபீரியா (LIberia) வும், இஸ்லாமிய இலக்கியங்களைக் கொண்டிருந்த துனிசியா (Tunisia) வும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இந்த உடன்படிக்கையை உண்மையாகவே சர்வதேச உடன்படிக்கை ஆக்கின.

ஸ்விட்சர்லாந்து இவர்கள் அனைவரையும் உபசரித்துத் தனது பெர்ன் நகரில் மாநாட்டை நடத்திக் கொடுத்தது.

பத்து நாடுகளுடன் தொடங்கிய இந்த உடன்படிக்கை, இன்று 181 நாடுகளின் காப்பிரைட் சட்டங்களுக்கு அடித்தளமாக விளங்குகிறது. பெர்ன் உடன்படிக்கை, உலகின் படைப்பாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் முதல் சர்வதேச உடன்படிக்கையாக வரலாற்றில் இடம் பெற்றது.

 என்ன சொல்கிறது பெர்ன் உடன்படிக்கை ?

 1. சர்வதேச சட்டப் பாதுகாப்பு (National Treatment)

ஒருவர் தன் நாட்டில் காப்பிரைட் உரிமை பெற்றிருக்கும் ஒரு படைப்பு, ஒப்பந்தம் செய்துள்ள ஒவ்வொரு நாட்டிலும் காப்பிரைட் உள்ள படைப்பாகக் கருதப்படும். ஒரு படைப்பாளி தன் சொந்த நாட்டில் பெறும் சட்டப் பாதுகாப்பை மற்ற நாடுகளிலும் பெறுவார்.

இதன் அடிப்படையில் மார்க் ட்வெயின் எழுத்துக்கள் இங்கிலாந்திலும், டிக்கென்ஸின் எழுத்துக்கள் அமெரிக்காவிலும் பாதுகாப்புப் பெறும். (ஆனால் அமெரிக்கா அப்போது பெர்ன் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.  பின்னாட்களிலேயே பெர்ன் உடன்படிக்கையில் இணைந்தது)
 
2. தானியக்க பாதுகாப்பு ( Automatic Protection)

அதுவரை இருந்த காப்பிரைட் சட்டங்கள் போல ஒருவர் தன் படைப்பை அலுவல் பூர்வமாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. படைப்பு பிறக்கும்போதே காப்பிரைட் உரிமையும் பிறந்து விடுகிறது என்று சொன்னது பெர்ன் உடன்படிக்கை.

இந்த உடன்படிக்கை ஏற்பட்டு இருந்திருந்தால், மார்க் ட்வெயின் பெலஃபர்ட, கிளார்க் பதிப்பகத்தின் மீது தொடுத்த வழக்கு அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கும்.


3. நிரந்தரப் பாதுகாப்பு (Independence of Protection)

ஒரு நாடு, ஏதோவொரு காரணத்தினால், தன் குடிமகன் ஒருவன் பெற்றிருக்கும் காப்பிரைட் உரிமையை ரத்து செய்துவிட்டாலும் கூட , மற்ற உறுப்பு நாடுகளில் அந்தப் படைப்பின் காப்பிரைட் உரிமை பறி போகாமல் இருக்கும் என்று சொன்னது பெர்ன் உடன்படிக்கை.

ஆளும் அரசை எதிர்த்து எழுதியதால் அரசியல் அகதியாக வெளிநாடு செல்ல நேர்ந்த விக்டர் ஹ்யூகோவின் படைப்புரிமை பாதுகாக்கப்பட்டிருக்கும்.


4. குறைந்தபட்ச பாதுகாப்பு வரையறை (Minimum Standards)

ஒவ்வொரு நாடும் இலக்கிய, அறிவியல் மற்றும் கலைப் படைப்புகளுக்குக் குறைந்தபட்சமாகக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் தெளிவாக வரையறுத்தது பெர்ன் உடன்படிக்கை. பதிப்பித்தல், மொழிமாற்றம் செய்தல் என்று எல்லா உரிமைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டன.

பைரஸி பற்றிய கார்ட்டூன் : Original artist: Joseph Ferdinand Keppler (1838-1894)

அமெரிக்கா  பெர்ன் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை. அமெரிக்காவில் பிறந்த புதிய தொழில் நுட்பங்களும் அவை உருவாக்கிய சட்டச் சிக்கல்களும் தனித்துவமானவை.

இங்கிலாந்து நீதிமன்றங்கள் வெளிநாட்டு எழுத்தாளர்களின் காப்பிரைட் உரிமை பற்றிய வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த போது, அமெரிக்கா, கலிபோர்னியாவின் சுரங்கங்களில்  தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அது பெரிய சமூகப் பொருளாதார மாற்றங்களைக் கண்டு கொண்டிருந்தது. இனி நாம் பார்க்கப் போகும் சவால்கள் உருவாகிய இடங்கள்  இங்கிலாந்தின் அச்சுப் பதிப்பகங்கள் அல்ல. அவை அமெரிக்காவின் புதிய இசைச் சந்தைகள்.

அந்தப் பயணம் தொடங்கப் போவது  அமெரிக்காவின் தங்கச் சுரங்கங்களில் இருந்து.

உலகின் முதல் venture capital

1861 ம் ஆண்டு, விக்டர் ஹ்யூகோ வுக்கும், ஆல்பர்ட் லக்ராய் (Albert Lacroix) என்ற  28 வயது பெல்ஜியப் பதிப்பாளருக்கும் வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராத வகையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.  ஆல்பர்ட் லக்ராய் தனது சொந்தப் பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். (Lacroix , Verboeckhoven  & Co.)

இந்த நிறுவனத்தின் மூலம், விக்டர் ஹ்யூகோவின் லெ மீசராஃப்ல  (Les Misérables) நாவலைப் பதிப்பிக்கத் திட்டமிட்டார். விக்டருக்கு கொடுப்பதற்கான பணத்திற்கு, ஆபன்ஹைம் (Oppenheim) என்ற ப்ரசல்ஸ் (Brussels) வங்கியில் கடனும் பெற்றார்.

ஒரு வங்கி, புத்தகம் வெளியிடக் கடன் கொடுத்த முதல் வரலாற்று நிகழ்வு இதுதான். முதல் வென்ச்சர் காபிடல் (Venture Capital startup) மூலதனம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆல்பர்ட்டின் இந்த முயற்சி நிச்சயமற்றது (Risk ). ஏற்கனவே விக்டர், மூன்றாம் நெப்போலியனை விமர்சனம் செய்து, அரசியல் அகதியாகத் தன் நாட்டை விட்டு வெளியேறி, வேறொரு நாட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே அந்தப் புத்தகம் நிச்சயமாக பிரான்சில் தடை செய்யப்படும். மேலும்  ஆல்பர்ட்டுக்கு, ஹ்யூகோ என்ன எழுதப் போகிறார் என்பதும் தெரியாது. எழுதப்போவது ஒரு சமூக நாவல், அரசியல் நாவல் அல்ல என்பது மட்டுமே விக்டர் கொடுத்த தகவல்.

மூன்று லட்சம் பிராங்க் விக்டருக்குக் கொடுக்கப்பட்டது. அது ஒரு பெரும் தொகை. (இன்றைய நிலவரத்தில் சுமார் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). ஒப்பந்தத்தின் காலம் 8 ஆண்டுகள். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக  லெ மிஸ்ரப்ல  (Les Misérables) என்ற காலத்தை வென்ற நாவல் வெளியானது. உலகம் முழுதும் உள்ள மக்களால் வாசிக்கப்பட்டது. இதுவே ஒரு கலைப் படைப்புக்கு ஒரு வங்கி முதலீடு (venture fund ) செய்த முதல் வரலாற்று நிகழ்வு.

காப்பிரைட் கதைகள்

காபிரைட் சட்டத்தைச் செதுக்கிய வழக்குகள்

Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.