காபிரைட் சட்டத்தைச் செதுக்கிய வழக்குகள்

This entry is part 7 of 7 in the series காப்பிரைட் கதைகள்

இறந்தபின் ஒருவருக்குத் தன் இசை மேல் உரிமை உண்டா?

1803. லண்டன்.

ஜாரஜ் ஃப்ரெட்ரிக் ஹேண்டல் இறந்து நாற்பத்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன.

ஹேண்டல் இங்கிலாந்தின் முக்கியமான இசைக்கலைஞர்களில் ஒருவர். அவர் தன் வாழ்நாளில் பெரும் புகழ், செல்வம் ஆகியவற்றை ஈட்டியிருந்தார். பாமரர் முதல் படித்தவர் வரை, ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டவர். அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். பிரஞ்சுச் சிற்பி லூயி-பிரான்சுவா ரூபிலியாக், ஹேண்டலின் பளிங்குச் சிலை ஒன்றை வடித்தார் அவரது நினைவாக.

ஆனால், ஹேண்டல் உருவாக்கிய (எழுதிய) இசை அனைத்தும் அவர் வாழ்நாளின்போது வெளியிடப்படவில்லை. நாற்பது ஆபராக்கள், இருபதிற்கும் மேற்பட்ட ஆரட்டோரியோ, மற்றும் பல கன்சர்ட்டோ க்களைப் படைத்தவர் ஹேண்டல்.


ஆபரா (Opera) : ஒரு கதையை இசை மூலம் சொல்லும் வடிவம். இசை நாடகம் என்று கொள்ளலாம்.Classical Music 101: What Is Opera?
 

ஆரட்டோரியோ (Oratorio): இது நீண்ட இசை வடிவம். இசைக்குழு (Orchestra), பாடகர்குழு (Choir), பாடகர்கள் (soloist) ஆகியோர்களைக் கொண்டது. இந்த வடிவங்களின் கதையாடல் பெரும்பாலும் இறைபக்தியாக இருக்கும்.
Music Appreciation – Oratorio and Opera Similarities and Differences

கன்சர்ட்டோ (Concerto) : இது ஒரு இசைக்கருவியும், அதற்குத் துணையாக இசைக்குழுவும் வாசிக்கும் இசை வடிவம். (solo instrument and orchestra )
The Concerto, explained in under 5 mins…


ஹேண்டல் உருவாக்கிய படைப்புகளில் பல, பல்வேறு காரணங்களால் வெளியிடப்படாமல் இருந்தன. சிலவற்றை வெளியிட வேண்டாம் என்று ஹேண்டல் கருத்தியிருந்தார். சில படைப்புகள் மெருகேற்றப்பட்டு புதிய வடிவங்களில் வெளியாகி இருந்தன. சில, ஹேண்டல் முயன்று பார்த்து, கைவிட்டவை. அவற்றில் பல, ஹேண்டல் நினைவுகளில் இருந்தே மறைந்திருக்கக் கூடும்.

ஹேண்டல் மறைந்தபின், இந்தப் படைப்புகள் பலராலும் சேகரிக்கப்பட்டன. கைகள் மாறின. பலரும் அவற்றை அரிய கலைப்பொருள் என்றே சேகரித்திருந்தனர். அந்தக் கையெழுத்துப் பிரதிகள், அவற்றின் சந்தை மதிப்பை அறிந்தவர்கள் சிலரின் கைகளுக்கும் சென்று சேர்ந்தன.

ஒரு குறிப்பிட்ட இசைப் படைப்பு இருவர் கைகளில் இருந்தது. ஹேண்டல் திருத்தி எழுதியதாக இருக்கலாம். பிரதி எடுக்கும் உதவியாளர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றைப் பிரதி எடுத்திருக்கலாம். ஆக மொத்தம் ஒரு இசையின் இரண்டு உண்மைப் பிரதிகள், இரு வேறு நபர்களிடம் இருந்தன. ஒருவர் ஜான் ஹைம். மற்றொருவர் ராபர்ட் டேல்.

ஜான் ஹைம் வசமிருந்த ஹேண்டலின் வெளியிடப்படாத படைப்பைத் தான் வெளியிட முடிவுசெய்தார். பல கைகள் மாறி வந்திருந்த அந்தப் படைப்பு அவரது உரிமையைத் தெளிவாக நிர்ணயிக்க உதவவில்லை. ஆனாலும் ஹைம், அதை வெளியிடுவதற்கான உரிமை தனக்கு இருப்பதாக நம்பினார். ஆனால், ராபர்ட் டேல் தனக்கே அந்த உரிமை இருப்பதாகக் கருதினார்.

வழக்கு நீதிமன்றம் சென்றது.

ராபர்டின் வழக்கறிஞர்கள் “காப்பிரைட் சட்டம் ஆன், படைப்பு வெளியாகிப்  பதினான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே ஒரு படைப்பிற்கு காப்பிரைட் பாதுகாப்பைக் கொடுக்கிறது. ஒருவேளை படைப்பாளி உயிருடன் இருந்தால், மேலும் பதினான்கு வருடங்களுக்கு அந்தப் பாதுகாப்பை நீடித்துக் கொள்ளலாம். ஆனால் ஹேண்டல் மறைந்து விட்டார். எனவே அவரது படைப்புகளின் காப்பிரைட் காலாவதி ஆகிவிட்டது” என்று வாதம் செய்தனர்.

அதற்கு முன் இது போன்ற வழக்கை நீதிமன்றம் பார்த்ததில்லை.

மேலும், காப்பிரைட் சட்டம் வெளியான படைப்புகளின் உரிமை பற்றியே வரையறுத்திருந்தது. ஒரு படைப்பு அச்சான நாள் முதல், அதனை பிரதி எடுக்கவும், மறுபடி வெளியிடவும் படைப்பாளிக்கு மட்டுமே உரிமை என்று சொன்னது. அது, ஒரு படைப்பு உருவாவதையும், ஒரு படைப்பு அச்சாவதையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. 2012 ஆம் ஆண்டின் சட்டத்திருத்தம் உருவாகும் வரை, இந்திய காப்பிரைட் சட்டம் ஒரு பாடல் பிறப்பதையும் அதை ஒலிப்பதிவு செய்வதையும் வேறுபடுத்திப் பார்க்காததைப் போலவே.

சரி, இப்போது ராபர்ட் மற்றும் ஜான் ஹைம் வசம் இருக்கும் ஹேண்டலின் படைப்புகள் அச்சில் வெளியானவை  அல்ல. அப்படியென்றால், அவற்றுக்குக் காப்பிரைட் பாதுகாப்பே இல்லையா? இதுவும் இந்த வழக்கின் வாதங்கள் எழுப்பிய கேள்விகளில் ஒன்று. இது ராபர்டின் வாதங்களில் ஒன்றாக இருந்தது.

ஹைம் தரப்பு வாதம் காப்பிரைட் சட்ட வரையறையைத் தாண்டியதாக இருந்தது — ஆன் சட்டம் பிறப்பதற்கு முன்பே, ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பின் மீது உரிமை உண்டென்றும், அது பதிப்பாக வெளியிடப்படாமல் இருந்தால், அது அவருக்கும், அவரது வாரிசுகளுக்கும் உரியது. பிற சொத்துக்கள் போன்று.

இந்த வாதத்தை நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது.

படைப்பு வெளியான பின், அதன் உரிமையை ஆன் காப்பிரைட் சட்டம் வரையறை செய்கிறது. படைப்பு வெளியாகமேலே இருந்தால், அது பொதுவான சட்ட வரையறையின்படி படைப்பளிக்கும் அவரது வாரிசுகளுக்குமே உரிமையானது என்று சொன்னது தீர்ப்பு.

ஹைம் மற்றும் டேல் வழக்கு, காப்பிரைட் உரிமை, ஆன் சட்டம் வரையறை செய்ததைவிடச் சிக்கலானது (அல்லது நுட்பமானது)  என்பதை உணர்த்தியது. 

காப்பிரைட் சட்டம் தவிர்த்த, பொதுவான சட்ட வரையறை இந்த வழக்கின் தீர்ப்பிற்கு ஆதாரமானது.

ஒரு படைப்பை ஒருவரது சொத்து போன்று பார்க்க முடியுமா? படைப்பு வெளியிடப்படவில்லை என்றால், அது வெளியிடப்படாமல் வாரிசுகள் மத்தியில் மட்டுமே புழங்குவது படைப்பின் நோக்கத்தைச் சிதைக்காதா?

இந்தக் கேள்விகள் விடைகள் இல்லாமல் இருந்தன. ஆனால் ஹைம் மற்றும்  டேல் வழக்கு, இறந்தவர்களின் படைப்புகள் காப்பிரைட் உரிமை உள்ளவை என்று சொல்லி முடித்தது.

Hime v. Dale (1803)


காப்பிரைடின் வாழ்நாள்

உலகின் முதல் காப்பிரைட் சட்டம் ஆன், மற்றும் அதன் பின் உருவான காப்பிரைட் சட்டங்கள் இவை அனைத்தும், காபிரைட்டின் வாழ்நாளையும் வரையறை செய்தன. ஆன் சட்ட வரையறை, இன்றைய சட்ட வரையறை போன்று தாராள வாழ்நாளைக் கொடுக்கவில்லை. இன்றைய வரையறை வரலாற்றின் போக்கில் சட்டம் கற்றுக்கொண்டதே. மேலும், டேல் மற்றும் ஹைம் வழக்கில், பொதுவான சட்ட அடிப்படையில் ஹேண்டலின் படைப்புகள் சட்ட உரிமை பெற்றவை என்று பார்த்தோம். அது சரியென்றால், காப்பிரைட் சட்டம் என்ற ஒன்று தேவையா? ஒரு வீடு, வாகனம், நிலம் போன்று படைப்பும் ஒரு சொத்து என்று கருத முடியுமா? இவை அன்றைய நாளில் எளிய கேள்விகள் அல்ல.

ஆன் சட்டம் காப்பிரைட் பதினான்கு வருடங்கள் செல்லுபடியாகும் என்று சொன்னது. படைப்பாளி உயிருடன் இருந்தால் மேலும் பதினான்கு ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். அதன் பின், அந்தப் படைப்பு பொதுச் சொத்து ஆகிவிடும் (public domain). அதன் பின் யாரும் அந்தப் படைப்பை வெளியிடலாம்.

ஆனால் அன்றைய லண்டன் புத்தக விற்பனையாளர்கள் இந்த வரையறையை, கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை பணம் கொடுத்து பதிப்புரிமை பெற்ற  ஒரு படைப்பு என்றென்றைக்கும் தங்களுக்கு உரிமையானது, அல்லது அப்படி இருப்பதே நியாயம் என்று கருதினர்.

சொத்துக்களின் உரிமையில் இருந்து படைப்புகளின் உரிமை ஏன் வேறுபட்டு இருக்கவேண்டும் என்பது அவர்கள் கேள்வி.

ஒரு வழக்கு அந்தக் கேள்விக்கும் பதில் சொன்னது.


ஸ்காட்லாந்து பதிப்பு

அலெக்ஸ்சாண்டர் டொனால்ட்ஸன் என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பதிப்பாளர். லண்டன் பதிப்பாளர்கள் கைவசம் வைத்திருந்த, காப்பிரைட் காலாவதி ஆகியிருந்த படைப்புக்களைப் வெளியிட்டார் டொனால்ட்ஸன். லண்டன் பதிப்புகளைவிடக் குறைவான விலைக்கும் விற்றார். இவர் லண்டன் பதிப்பாளர்களுக்கு தலைவலியாகிப் போனார்.

டொனால்ட்ஸன் வெளியிட்ட புத்தகங்கள், ஆன் சட்டப்படி பதினான்கு வருட காப்பிரைட் காலம் முடிவடைந்தவை. மேலும் அன்றைய காலத்தில், ஸ்காட்லாந்த் , இங்கிலாந்துடன் இணைந்திருந்தாலும்கூட, தனித்தனி சட்ட அமைப்புகள், அரசியல் குழப்பங்கள் ஆகியன நிறைந்ததாக இருந்தது. எனவே ஆன் சட்டம் ஸ்காட்லாந்தில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதும் விவாதம் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. இந்தக் குழப்பங்கள் போதாதென்று, டொனால்ட்ஸன் லண்டனிலேயே கடைதிறந்து தனது புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார். லண்டன் புத்தக விற்பனையாளர்கள் பெரும் வணிகச் சவாலைச் சந்தித்தனர்.

லண்டன் பதிப்பாளர்கள் டொனால்ட்ஸன் மீது வழக்குத் தொடுத்தனர். தங்கள் வசம் பதிப்புரிமை உள்ள புத்தகங்களை டொனால்ட்ஸன் பைரஸி செய்து வருவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் லண்டன் பதிப்பாளர்கள்.

வழக்கு பல வருடங்கள் நீடித்தது. இறுதியில், 1774 ல், ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் என்று அழைக்கப்படும் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது வழக்கின் மேல்முறையீடு.


வழக்கு வாதங்கள்

வழக்கின் விவாதங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

லண்டன் பதிப்பாளர்களைப் பொறுத்தவரை, புத்தகம் பிற சொத்துக்கள் போன்றதே. ஒரு எழுத்தாளர் ஒரு படைப்பை ஒரு பதிப்பாளரிடம் விற்ற்றுவிட்ட பின், பதிப்பாளர் அதனைப் பதிப்பிக்கும் உரிமை பெறுகிறார். எழுத்தின் மீதான உரிமை மட்டுமே எழுத்தாளருக்கானது. இதுவே ஆன் காப்பிரைட் சட்டம் உருவாக்கிய புதிய வரையறை. மற்றபடி ஒரு புத்தகம் விலை கொடுத்து வாங்கும் எந்த ஒரு பொருளைப் போலவே, பதிப்பாளருக்கு காலவரையறை ஏதுமின்றி உரிமையானது.

ஆங்கிலோ-அமெரிக்க சட்ட வரையறைகளை உருவாக்குவதில் முக்கியத்துவம் பெற்ற வில்லியம் பிளாக்ஸ்டோன் இந்தக் கருத்தையே கொண்டிருந்தார். இங்கிலாந்தின் மற்றொரு முக்கிய நீதிபதி லார்ட் கேம்டன் இந்தக் கருத்தைச் சரியென்று கருதினார். லண்டன் பதிப்பாளர்களின் வாதம், முக்கியத்துவம் பெற்ற சட்ட அறிஞர்களின் பார்வையுடன் ஒத்திருந்தது.

William Blackstone: Unidentified painter, Public domain, via Wikimedia Commons

மறுபுறம் டொனால்ட்ஸன், படைப்பு ஒரு கட்டத்தில் பொதுச் சொத்தாக வேண்டும் என்று கருதினார். ஒரு படைப்பு உலகத்திற்கானது அல்ல என்றால், மாடு, மனை,காணி இவற்றுக்கும் ஒரு புத்தகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? இலக்கியம், அறிவு, கலை இவையனைத்தும் மானிடர்களுக்கு உரியவை. தனிநபர் பூட்டிவைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல என்பதும் ஆன் காப்பிரைட் சட்டம் அதை உறுதிசெய்வதில் முதல் அடி மட்டுமே. இது ஒரு வாதம்.

காலவரையறை அன்றி, நிரந்தரமாக ஒருவருக்கு உரிமையாகும் அறிவுச் சொத்து, சமூக ஏற்றத்தாழ்விற்க்கு இட்டுச் செல்லும் என்பது விளக்கம் ஏதும் தேவைப்படாத உண்மை. மேலும் அந்த நிலை ஒரு சமூகத்தில் அறிவுசார் அடக்குமுறை ஒன்றை சமூகப் பொருளாதாரத் தளங்களில் உருவாக்கும்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கான பதிலைத் தேடிய வாதங்கள் முடிவடைந்து, நீதிமன்றத்தின் முன், மானுட சமூகத்தில் அறிவுசார் படைப்புகளின் இடம் எது என்ற மாபெரும் கேள்வி மலை போல் நின்றது. .

அந்த நாள், பிப்ரவரி 22, 1774.


தீர்ப்பு

இருபத்தி இரண்டு ஜூரிகள் டொனால்ட்ஸனுக்கு ஆதரவாகவும் பதினோரு ஜூரிகள் எதிராகவும் வாக்களித்தனர். தீர்ப்பு டொனால்ட்ஸனுக்கு சாதகமானது.

ஆன் சட்டம் கொடுத்த பதினான்கு வருட காலக்கெடுவிற்குப் பின், ஒவ்வொரு புத்தகமும் பொதுச் சொத்தாகும். இன்றைய பாரதியார் பாடல்கள் போல.

லண்டன் பதிப்புத் துறைக்கு இந்தத் தீர்ப்பு இடியாக இறங்கியது. நிரந்தரம் என்று கருதி செய்திருந்த முதலீடுகள் வீணாகின. தலைமுறைகளாகக் கட்டி இருந்த பதிப்புத் தொழில்கள் சரிந்தன.

லண்டன் பதிப்புலகிற்குச் சாபமாகிய  இந்தத் தீர்ப்பு எளிய வாசகனுக்கு வரமானது. ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்த புத்தகங்கள், பல பதிப்பாளர்கள் மூலம், போட்டி விலையில் கிடைத்தன. புத்தகம் வாங்குவது பலருக்கும் எளிதானது.

இந்தத் தீர்ப்பு பின்னாட்களில் வந்த அனைத்து காப்பிரைட் சட்டங்களுக்குமான அடிப்படையை நிர்ணயித்தது.


ஒற்றைக் காகிதம் புத்தகமாகுமா?

படைப்புகளின் காப்பிரைட் உரிமை, அதன் ஆயுள் காலம் ஆகியவை ஓரளவு வரையறை ஆகியிருந்தாலும், எது “படைப்பு” என்ற கேள்வி மீதமிருந்தது.

ஆன் காப்பிரைட் சட்டம் “புத்தகங்கள்” என்று படைப்புகளை வரையறை செய்திருந்தது. சென்ற அத்தியாயத்தில் கிறிஸ்டியன் பாக் மற்றும் லாங்மேன் வழக்கைப் பார்த்தோம். இசைக்குறிப்புகள் புத்தகம் என்ற வரையறையில் வருமா என்ற கேள்விக்கு அந்த வழக்கு பதில் அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால், அந்த இசைக்குறிப்பே ஒற்றைக் காகிதமாக இருந்தால்? அதுவும் லாங்மென் வழக்கின் வரையறையில் வருமா?

இந்தக் கேள்வி இசைக்கான காப்பிரைட் வரையறையில் முக்கியமானது. ஏனென்றால், பெரும்பாலான இசைக்குறிப்புகள் புத்தக வடிவில் பதிப்பாகி விற்பனைக்கு வந்தாலும் கூட, ஒரு முக்கியமான இசைக்குறிப்பு ஒரு சில காகிதங்களாக இருக்கலாம்.

க்ளமன்டி ஒரு சிறந்த இசைக்கலைஞர். இசையமைப்பாளர், பியானோ கலைஞர். இசை படைப்பது மட்டுமின்றி லண்டனில் ஒரு பதிப்பகத்தையும் வெற்றிகரமாக நடத்திவந்தவர்.

க்ளமன்டி Image : Wikimedia

க்ளமன்டி பிறந்தது ரோம் நகரில். சிறுவன் க்ளமன்டி ஆர்கன் இசைப்பதைக் கண்ட பீட்டர் பெக்போர்ட் (Peter Beckford), அவரை லண்டன் அழைத்து வந்தார். அவரது தந்தைக்கு ஒரு தொகை கொடுத்து எழுவருட ஒப்பந்தத்தில் லண்டன் அழைத்து வரப்பட்டார். ‘விலைக்கு’ வாங்கப்பட்டார் என்றே குறிப்புகள் சொல்கின்றன.

க்ளமன்டி ஏன் விலை கொடுத்து வாங்கப்பட்டார்?

முழுநேரமும் இசை பயிற்சி எடுத்துக் கொள்வதற்காகவே. க்ளமன்டியின் பராமரிப்பு, இசைப் பயிற்சி இவற்றுக்கான செலவுகள் பீட்டர் பெக்போர்ட் – ஐச் சேரும். அவர் ஒரு வகைப் புரவலர் என்று புரிந்து கொள்ளலாம். புகழ்பெற்ற கொரிய இசைக்குழு BTS இசைக்குழுவினர் ஒப்பந்த அடிப்படையில் “தத்தெடுத்துக்” கொள்ளப்பட்டது போல். BTS குழு போல க்ளமண்டி லாப நோக்கத்துடன் தத்தெடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், அது பீட்டர் பெக்போர்ட் போன்ற ஒருவருக்கு ஒரு சமூக அந்தஸ்த்தைக் கொடுத்தது.
[INT] What does it take to become BTS according to former trainees [Part 1]

க்ளமன்டி லண்டனின் புகழ்பெற்ற, முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர் ஆனார். வியன்னா நகரில் அரசரால் நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டு மொஸார்ட் கடுமையாகப் போராடி வெற்றி பெறுவதற்குக் காரணமானார்.

“க்ளமண்டி மிகத் திறமையான இசைக்கலைஞர் ஆனால் அவரது இசையில் உணர்வு இருக்கவில்லை” என்று தனது கடிதத் தொடர்புகளில் மொஸார்ட்  குறிப்பிட்டிருந்தாலும் கூட, க்ளமன்டி மொஸார்டின் இசைத் திறமையை, “நான் மொஸார்ட் போன்ற ஒரு இசைக்கலைஞரைப் பார்த்ததில்லை” என்று புகழ்ந்தார்.

பீட்டர் பெக்போர்ட : Image : Pompeo Batoni, Public domain, via Wikimedia Commons

ஆனால், க்ளமன்டி ஒரு இசைக்கலைஞர் என்பதைக் கடந்து, ஒரு தொழில் முனைவோராகவும் வெற்றி பெற்றார். பதிப்பகம் நடத்தினார். பியானோ தயாரித்து விற்பனை செய்தார்.

ஒரு பதிப்பாளர் என்ற வகையில் அவர் உரிமம் பெற்றிருந்த பல இசைக்குறிப்புகளை, சிலர் பைரஸி பதிப்புகளாக வெளியிடுவதை அறிந்தார் க்ளமன்டி. அவரைப் பொறுத்தவரை படைப்பின் மீதான சட்ட உரிமையைத் தாண்டி, பைரஸி என்பது ஒரு பதிப்பாளருக்கு நட்டம் உண்டாக்கக் கூடியது.

1807 ஆம் ஆண்டில், க்ளமன்டி உரிமம் பெற்று இருந்த புகழ் பெற்ற பாடல் “ஹே ஹோ” (Heigh-Ho). இதன் இசைக் குறிப்புகளை கோலடிங் என்ற பதிப்பாளர் பைரஸி பதிப்பாக வெளியிட்டார். க்ளமன்டி, கோலடிங் மீது வழக்குத் தொடுத்தார்.

கோலடிங் தரப்பு, ஆன் சட்டம் புத்தகங்களுக்கு மட்டுமே காப்பிரைட் உரிமை கொடுக்கிறது. இசைக்குறிப்புகள் கொண்ட ஒற்றைக் காகிதம், புத்தகம் என்ற வரையறையில் வராது என்று வாதம் செய்தனர். மேலும், புத்தகம் என்ற சொல்லைச் சட்ட வரையறையில் பயன்படுத்திய பாராளுமன்றம் அதற்கான காரணத்தை நிச்சயமாகக் கொண்டிருக்கும் என்று வாதம் செய்தனர்.

க்ளமன்டி தரப்பு, “புத்தகம்” என்ற சொல்லை விரிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்றும், அது ஒரு படைப்பைத் தாங்கி நிற்கும் கருவி மட்டுமே, சட்டம் அந்தக் கருவியின் உள்ளடக்கத்தைப் பாதுகாக்கிறது. எனவே புத்தகமோ, காகிதமோ அதன் உள்ளடக்கம் என்ன என்பதே கேள்வி, என்று எதிர் வாதம் வைத்தனர்.

இந்த வழக்கில் வழங்கப்படக்கூடிய ஒரு தவறான தீர்ப்பு, தவறான உதாரணமாகிவிடும் வாய்ப்பும் இருந்தது. இதனைப் புரிந்து கொண்ட நீதிமன்றம், க்ளமன்டி தரப்பிற்குச் சாதகமாகத் தீர்ப்பை வழங்கியது.

க்ளமன்டி-கோலடிங் வழக்கு இந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
Clementi v. Golding (1809)


சட்டத்தின் எல்லை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பிரைட் சட்டம் பல வகையிலும் மேம்படுத்தப்பட்டது. படைப்பாளியின் மறைவிற்குப் பின்னும் நீடிக்கும் உரிமை, எழுத்துக்களைப் போன்றே இசைக்குறிப்பிற்கும் பாதுகாப்பு, குறிப்பிட்ட காலத்திற்குப் பின் படைப்பு பொதுச் சொத்தாக மாறி சமூக உடைமை ஆதல் என்று.

ஆனால், ஒரு சிக்கல் மீதமிருந்தது. அது — காப்பிரைட் சட்டம் உலகலாவியதாக இருக்கவில்லை என்பதே.

பிரான்சின் எழுத்தாளர் பெற்ற காப்பிரைட் பிரான்சில் மட்டுமே செல்லும். இங்கிலாந்தில் அவரது புத்தகத்தை பைரஸி செய்வது சட்டவிரோதமானது அல்ல. இங்கிலாந்தின் இசைக்கலைஞரின் இசை, பிரான்சில் பைரஸி செய்யப்படலாம். அதனை பிரான்ஸ் நாட்டின் சட்டம் தடை செய்ய முடியாது.

இது சட்ட நடைமுறைப் பிரச்சினை மட்டுமல்ல. படைப்பாளிகளுக்குப் பொருளாதார நட்டத்தை உண்டாக்கும் பிரச்சினையும் ஆகும்.

இங்கிலாந்தின் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பிற ஐரோப்பிய நாடுகளில், பதிப்பாக்கலாம், மொழிமாற்றம் ஆகலாம், மறுவுருவாக்கம் செய்யப்படலாம். செய்யப்பட்டன. ஒரு எழுத்தின் புகழ் எந்த அளவு அதிகமானதோ, அந்த அளவு அதன் பைரஸிசியும் அதிகமானது. காய்த்த மரங்கள் கல்லடிபட்டன.

அப்போது நடைபெற்ற காப்பிரைட் வழக்குகள் பெரும்பாலும் இந்த எல்லை தாண்டிய பைரஸி வகையே. இங்கிலாந்து பதிப்பாளர்கள் இங்கிலாந்து காப்பிரைட் சட்டத்தின் எல்லைகளைச் சுட்டிக் காட்டித் தங்களை பாதுகாத்துக் கொண்டனர். வெளிநாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகளைப் பாதுகாக்க முடியாமல் இங்கிலாந்தின் நீதி மன்றங்கள் தடுமாறின.

1824 ல் க்ளமன்டி மற்றும் வாக்கர் வழக்கு, ஒரு இங்கிலாந்து பதிப்பாளர், வெளிநாட்டு படைப்பாளியிடம் இருந்து பதிப்பு உரிமம் பெற்றால், அந்தப் படைப்பை இங்கிலாந்தின் சட்டம் பாதுகாக்கும் என்று சொன்னது.ஆனால், இது ஒரு புதிய குழப்பத்தைக் கொண்டு வந்தது. ஒரு வெளிநாட்டுப் படைப்பாளியிடம் சொற்பத் தொகை கொடுத்து உரிமம் பெற்ற இங்கிலாந்து பதிப்பாளர்கள், அதனைத் தங்கள் உடைமை ஆக்கிக் கொண்டு கொள்ளை லாபம் பார்த்தனர். சில நேரங்களில் அவர்கள் உரிமம் பெற்ற ஆவணங்கள் சந்தேகத்திற்கு உரித்தாகின.
Clementi v. Walker (1824)

இதுபோன்ற பல வழக்குகளை இந்தக் காலகட்டத்தில் பார்க்கலாம். காப்பிரைட் சட்டத்திற்கான சர்வதேச வரையறைகள் உருவாகும் வரை இந்தக் குழப்பங்கள் நிலவின. உண்மையில் ஒரு சர்வதேச வரையறை உருவாவதற்கு இந்தக் குழப்பங்களே காரணமாகின.

சர்வதேச புதிய வரையறைகள் தேவை என்ற கருத்து உருவானது. சர்வதேச வரையறை எப்படிப் பிறந்தது என்பதை நாம் வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

அமெரிக்கா

முதல் காப்பிரைட் சட்டம் இங்கிலாந்தில் பிறந்தபோது, அமெரிக்கா விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது.

1787 ல் அமெரிக்க அரசியலமைப்பு உருவானபோது, அது நாடாளுமன்றத்திற்கு, அறிவியல் மற்றும் கலை மேம்பாட்டின் பொருட்டு, எழுத்தாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் தங்கள் படைப்பைபின் மீது முழு உரிமை இருக்குமாறு சட்டம் இயற்றும் அதிகாரத்தை அளித்தது.

1790 இல் முதல் தேசிய அளவிலான காப்பிரைட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, “வரைபடங்கள், விளக்கப்படங்கள் மற்றும் புத்தகங்கள்” ஆகியவற்றின் உரிமை படைப்பாளிக்கு 14 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. படைப்பாளி உயிருடன் இருந்தால், இதனை மேலும் ஒருமுறை புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

1831 ல் அமெரிக்கக்  காப்பிரைட் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. முதல் 14 வருட கால வரையறை 28 வருடங்கள் ஆனது. மேலும் ஒரு 14 வருடங்களுக்குப் புதுப்பிக்கவும் வழி செய்தது. இதனால் படைப்பாளிகளுக்கு 42 வருட காலத்திற்கு படைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் முழுமையான காப்பிரைட் சட்டம் என்று சொல்ல முடியாது.

ஆனாலும், அமெரிக்கா இந்தத் தொடரின் முக்கியக் களம். அமெரிக்காவின் கலாச்சார, பொருளாதார மாற்றங்கள், தொழில்நுட்பங்கள், அவை உருவாக்கிய குழப்பங்கள், அவற்றைக் நெறிப்படுத்த உருவான அமைப்புகள் இவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம், இந்தியாவில் அத்தகைய அமைப்புகள் தோன்றி, வளர்ந்த வரலாற்றையும், இந்திய அமைப்புகளின் குறைபாடுகள் என்னவென்பதையும், சட்டத்திருத்தங்கள் ஏன் பலனளிக்கவில்லை என்பதயும் நாம் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் இளையராஜாவின் பாடல்கள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு ஏன் தெளிவான பதில் கிடைப்பதில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஆகவே அடுத்த அத்தியாயத்தை நாம் அமெரிக்காவில் தொடங்குவோம்.


பின் குறிப்பு

முக்கியமானவை என்று  நான் கருதிய வழக்குகள் மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதிக சட்ட  விபரங்கள், அதிக வழக்குகள் படிப்பதற்கு நெருடலாக இருக்கலாம் என்று கருதியதால். பின்வரும் வழக்குகள் சுருக்கமாக விளக்கப்படுகின்றன. இதில் நாம் ஏற்கனவே விரிவாக்கப் பார்த்த வழக்குகளும் அடக்கம்.  சட்ட விபரங்களில் ஆர்வம் கொண்டவர்கள் அதிகக் தகவலை விரும்பினால் பின்னூட்டத்தால் அதனைக் குறிப்பிடலாம்.

ஹைம் – டேல் வழக்கு -Hime v. Dale (1803)

நீதிமன்றம் ஹைமுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. மறைந்த படைப்பாளிகளின் வெளிவராத படைப்புகளுக்கான உரிமையை உரிமம் பெற்றவர் பாதுகாக்க முடியும் என்று தீர்மானித்தது.

க்ளெமன்டி – கோல்டிங் வழக்கு -Clementi v. Golding (1809)

ஒற்றைத் தாள் இசையும் “புத்தகம்” என்ற வரையறைக்குள் வரும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது காப்பிரைட் பாதுகாப்பின் வரையறையை விரிவுபடுத்தியது.

டான்சன் – காலின்ஸ் வழக்கு -Tonson v. Collins (1762)

இறுதித் தீர்ப்பு குறித்து தகவல்கள் இல்லை, ஆனால் இந்த வழக்கு காப்பிரைட் காலம் குறித்த முக்கியமான விவாதங்களை எழுப்பியது.

மில்லர் – டெய்லர் வழக்கு -Millar v. Taylor (1769)

பொதுச் சட்டத்தின்படி, படைப்பாளிகளுக்கு நிரந்தர காப்பிரைட் உண்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்பு பின்னர் மாற்றப்பட்டது.

டோனல்ட்சன் – பெக்கெட் வழக்கு – Donaldson v. Beckett (1774)

ஆன்  சட்டத்தின்படி காப்பிரைட் காலவரையறைக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்தது. இது மில்லர் வழக்கின் தீர்ப்பைத் திருத்தியது.

டால்மைன் – பூசீ வழக்கு – D’Almaine v. Boosey (1835)

அனுமதியின்றி ஒரு படைப்பை மாற்றி வெளியிடுவதும் காப்பிரைட் மீறல் என்று தீர்ப்பளித்தது.

பூசீ – ஜெப்ரீஸ் வழக்கு -Boosey v. Jefferys (1851)

வெளிநாட்டுப் படைப்பாளிகளின் உரிமையை இங்கிலாந்து சட்டம் பாதுகாக்கும் என முதலில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஜெப்ரீஸ் – பூசீ வழக்கு -Jefferys v. Boosey (1854)

மேல்முறையீட்டில், வெளிநாட்டுப் படைப்பாளிகள் முதலில் இங்கிலாந்தில் வெளியிட்டால் மட்டுமே அவர்களது உரிமை பாதுகாக்கப்படும் என்று தீர்ப்பு மாற்றப்பட்டது.


காப்பிரைட் கதைகள்

பைரஸி

Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.