வறுமையில் இறந்த அமெரிக்க பாப் இசையின் தந்தை ஃபாஸ்டரின் கதையை நாம் இதற்கு முன் பார்த்தோம். அவரது புகழ்பெற்ற “ஓ சுஸானா” மின்ஸ்ட்ரல் இசை நிகழ்ச்சிக்கு என்று எழுதப்பட்ட பாடல்தான். பின்னாட்களில் ஃபாஸ்டர் தனது மின்ஸ்ட்ரல் வகைப் பாடல்களைக் கைவிட்டார் என்றும், ஹாரியட் பீச்சர் ஸ்டோ எழுதிய, “அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலும் அவர் மனமாற்றத்திற்கு ஒரு காரணம் என்றும் , பின்னாளில் கறுப்பின மக்களின் உணர்வுகளைச் சித்திரிக்கும் வகையில் அவர் எழுதிய பாடலை பிரெட்ரிக் டக்ளஸ் என்ற அடிமை முறைக்கு எதிரான செயற்பாட்டாளர் பாராட்டினார் என்றெல்லாம் குறிப்புகள் சொல்கின்றன. இது இந்த அத்தியாயத்தின் அடிக்குறிப்பல்ல. அமெரிக்கப் பாப் இசை வரலாற்றின் அடிநாதம். டின் பான் ஆலி இசையமைப்பாளர்களைச் சுரண்டியது என்று கருதினால், அது கறுப்பினக் கலைஞர்களைக் கடுமையாகச் சுரண்டியது என்று சொல்லலாம்.
