அச்சு இயந்திரத்திற்கு முன் ஒரு புத்தகம் 

This entry is part 1 of 3 in the series காப்பிரைட் கதைகள்

பதினான்காம் நூற்றாண்டு இங்கிலாந்து, வூல்பிட் கிராமம். 

இங்கிலாந்தின் சிறு பிரபுக்களில் ஒருவரான சர் எட்மண்டின் கோட்டை வீடு. மாலை வெயில் கோட்டைச் சுவரில் பொன்னிறமாய்ப் படிந்தது.  மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் பட்டிக்குத் திரும்பும் ஒலி தொலைவில் கேட்டது. கம்பளிப் பொதிகள் வண்டிகளில் ஏற்றப்பட்டுச் சந்தைக்குச் செல்லத் தயாராக இருந்தன. ஆடுகளும், கம்பளிப் பொதிகளும், வேளாண்மையுமே  அந்த ஆங்கிலக் கிராமத்தின் உயிர்நாடி.

அந்தக் கிராமத்திற்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமானது. எட்மண்ட் பிரபுவின் முற்றத்தில் இருந்தவர்களின்  கவனம் அவர் முன் இருந்த மர மேஜை மீதே இருந்தது. அவர்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பொருள்…

ஒரு புத்தகம்.

மேஜை மீதிருந்த புத்தகத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எட்மண்ட் பிரபுவின் அழைப்பை ஏற்று வந்திருந்தவர்கள். பாதிரியார்கள் வில்லியம், தாமஸ் மற்றும் ஜான். இவர்களில் முதியவர் வில்லியம். அவரது கண்கள் பழுப்பேறியிருந்தன . தாமஸ் அவருக்கு இளையவர் என்றாலும் சற்றுக் கூன்விழுந்தவர் போயிருந்தார். மூவரில் இளையவர்  ஜான். அவர் தன் வாழ்நாளில் ஒரு புத்தகத்தைக்  கண்களால் கண்டதில்லை. அவர்கள் மூவரும் தங்கள் கைகளை முழங்கால்களில் வைத்து மண்டியிட்டவாறு அந்த மேஜையைச் சுற்றி அரைவட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

அவர்களில் வில்லியம், தாமஸ்  இருவரும் இதற்கு முன் புத்தகத்தைக் காணாதவர்கள் அல்ல. விழா நாட்களில் புனித எட்மண்ட் தேவாலயத்தில், பிஷப்புகள் புத்தகங்களைப் புரட்டும்போது, எட்ட இருந்து பார்த்திருக்கிறார்கள். ஆனால்,  இன்றுதான்  ஒரு புத்தகத்தை அருகில் இருந்து பார்க்கிறார்கள். 

அந்தப் புத்தகத்தின் ‘அட்டை’ பசுங்கன்றின் தோலால் செய்யப்பட்டிருந்தது.  வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. முற்றத்தின் வெளிச்சத்தில்  அட்டையின் பித்தளைப் பூண்கள் எடுப்பாகத் தெரிந்தன. மிக நேர்த்தியாகக் தைக்கப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தின் முனைகள், கைகள்  பட்டுப்பட்டு  மெருகேறியிருந்தன. அதன் பக்கங்களும் பசுங்கன்றின் தோலால் ஆனது. ஆனால், மெல்லிய தோல். புதிதாக இறக்குமதியாகி இருந்த காகிதத்தை விட இந்தத் தோல்  நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியது .

எட்மண்ட் பிரபு அமைதியாக அவர்களைக்  கவனித்துக் கொண்டிருந்தார். பாதிரியார்களின் கண்களில் இருந்த வியப்பு அவருக்குப் புரிந்தே இருந்தது. தேவாலயம்  தவிர, சுற்றுவட்டாரத்தில் எங்குமே வேறு ஒரு புத்தகம் கிடையாதென்பது அவருக்குத் தெரியும்.

புத்தகங்கள் விலையுயர்ந்தவை. எட்மண்ட் போன்ற ஒரு சிறு பிரபு வம்சத்திற்கும் கூடக் கட்டுப்படியாகாதவை. ஒரு புத்தகத்தை உருவாக்குவது விளையாட்டுக் காரியமல்ல. மிகுந்த உழைப்பும் பொருட்ச் செலவும் எடுக்கும்.

“இது எங்கள் குடும்பத்தின் பொக்கிஷம்” என்ற எட்மண்ட், தன் விரிந்த கண்களால் அந்த பிரார்த்தனைப்  புத்தகத்தைப் பார்த்தார்.  “என் தந்தை லண்டனில் இருந்த,  தேர்ந்த எழுத்தர்களிடம் சொல்லிப்  பெரும்பொருள் செலவு செய்து  எழுதச் செய்த புத்தகம்” என்றார் .

பாதிரியார் ஜான் சட்டென்று உணர்வு வரப்பெற்றார். அவர் வளர்ந்த குடும்பத்தின் ஏழ்மையும், ஒரு புத்தகத்திற்கு ஆகும் பொருட்ச் செலவும் ஒரு ஒப்பு நோக்காக அவர் மனக்கண்ணில் வந்து சென்றது. வில்லியம் தன் தலையை அசைத்து,  எட்மண்ட் சொன்னதை ஆமோதித்தார்.

“மூன்று எழுத்தர்கள் மூன்று வருட காலம் உழைத்து உருவாக்கிய புத்தகம் இது” என்றார் எட்மண்ட். மேலும் “அப்போதெல்லாம், வருடத்திற்கு ஒருமுறை என் தந்தை லண்டன் சென்று வேலை எப்படி நடக்கிறது என்று பார்த்து வருவார். பிரான்ஸ் தேசத்து  ஒயின், பிளாண்டர்ஸ் நாட்டின்  ஆடைகள் இவற்றை எழுத்தர்களுக்கு பரிசாகக்  கொண்டு செல்வார். ஆனால்… புத்தகம் முடிவதற்கு முன்னதாகவே  அவர் இறந்து விட்டார். நான் சென்று அவர் சார்பில் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டுவந்தேன்” என்றார்.

எட்மண்ட் அந்தப் புத்தக அட்டையை மென்மையாக வருடிப் பார்த்தார். உறங்கும் குழந்தை ஒன்றின்  கன்னத்தை வருடுவதைப் போல மென்மையாக. முதற் பக்கத் தலைப்புக்கள் வண்ணங்களில் எழுதப்பட்டு இருந்தது. நீலம், சிவப்பு மற்றும் பொன்னிறம். நீலமும் சிவப்பும் இயற்கையான பாறைப் படிமத் துகள்கள். பொன்னிறம் உண்மையான தங்கம். நுட்பமான தூரிகை ஒன்றைப் பயன்படுத்தி எழுதி இருந்தார்கள்.

வில்லியம் அந்தப் பக்கத்தைப் பார்த்தவாறு “இது என்ன புத்தகம்?” என்று கேட்டார்.

“இது பிரார்த்தனைப் புத்தகம்” என்றார் எட்மண்ட், மென்மையான குரலில். “இதன் பொருட்டே நான் உங்களை அழைத்தேன். வரும் ஞாயிறு அன்று என் தந்தையின் நினைவு நாள். அன்றைய பிரார்த்தனையில் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.” 

“பிரார்த்தனை நேரத்தில் இந்தப் புத்தகத்தை நீங்கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும், பாதிரியார்கள் ஒவ்வொருவரையும் பார்த்தபடி சொன்னார். “இதன் அட்டை கனமானது. ஆனால் பக்கங்கள் மென்மையானவை. எனவே கவனமாகக் கையாளவேண்டும்.”

மேலும் “இந்தப் புத்தகத்தை நான் காலையில் கொடுத்துவிட்டு, மாலையில் திரும்பப் பெற்றுக் கொள்வேன். தேவாலயத்தை விட்டு வேறு எங்கும் இதனை எடுத்துச் செல்லவேண்டாம். புத்தகத்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். கைகளில் ஈரம், எண்ணெய்ப்  பசை ஆகியவை இருந்தால், அது புத்தகத்தின் பக்கங்களைக் கறையாக்கி விடும்”

“நாங்கள் கவனமாக இருப்போம்” என்றனர் மூவரும்.

எட்மண்ட் குறிப்பாக, முதியவர் வில்லியம் தன் அறிவுரைகளைப்  புரிந்து கொண்டாரா என்று சோதிக்கும் வகையில் பார்த்தார். அந்தப் பாதிரியார்களின் வாழ்நாள் வருமானத்தைவிடவும், அவர்கள் பணியாற்றும் தேவாலயத்தைவிடவும் அந்தப் புத்தகம் மதிப்பு வாய்ந்தது. 

“இந்தப் புத்தகத்தில் இருப்பவை நீங்கள் வழக்கமாகச் சொல்லவும் வசனங்கள்தாம். ஆனால் இந்தப் புத்தகம் அந்த வசனங்களை விட மதிப்பு வாய்ந்தது. மூன்று எழுத்தர்களின் பெரும்பணி. என் குடும்பத்தின் ஒரு தலைமுறைச் சொத்து. கவனம்”  என்றார்.

“இதனைக் கைகளில் வைத்திருக்கும்போது மிகவும் புனிதமான பொருள் ஒன்றைக் கைகளில் வைத்திருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.” என்றார்.

Images  :Library of Congress

புத்தகத்தின் விலை

எட்மண்ட் பிரபு வைத்திருந்த புத்தகத்தின் மதிப்பைப் புரிந்து கொள்ள, நாம் அன்றைய நாளில் புத்தகங்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதைத் தெரிந்து  கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய புத்தகத்திற்கு ஐம்பது ஆடுகளோ, பசுங்கன்றுகளோ தேவைப்படும். ஒரு பைபிளை உருவாக்க இருநூறுக்கும் மேற்பட்ட கால்நடைகள் தேவைப்படலாம். இந்தக் கால்நடைகள் வளர்த்துப் பராமரிக்கப்பட வேண்டும். சரியான பருவத்தில் அவை வெட்டப்பட வேண்டும். பின்னர் அவற்றின் தோல், சுண்ணாம்பு நீரில் ஊறவைக்கப் பட்டு உரோமங்கள் நீக்கப் படவேண்டும். பின்னர் அரைவட்ட வடிவக்  கத்தி கொண்டு சுரண்டி, மரச்சட்டங்களில் காயவைக்க வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு முறை சுரண்டி, மென் சுண்ணாம்பு கரைந்த  நீரில் பதப்படுத்தப் படவேண்டும்.

எழுதும்போது தோலில்  மை பரவக்கூடாது. புத்தகமாக மடக்க வசதியாக மென்மையாக இருக்கவேண்டும். அதே நேரம், பல ஆண்டுகள் கிழியாமல் உழைக்கவும் வேண்டும். இது போன்ற தோல் தயாரிப்பதைத் தொழிலாகச் செய்தவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினர்.

Parchment makers’ workshop: interior view ,  Credit: Wellcome Library, London. 

மறுபுறம், அந்தத் தோலில் எழுதும் எழுத்தர்கள்.

திறமை வாய்ந்த எழுத்தர்கள் பகல் வெளிச்சத்தில் எழுத வேண்டும். நல்ல வெளிச்சம் ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து மணிநேரங்கள் மட்டுமே கிடைக்கும். அதுவும் எழுத்தர்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்தது. அவர்களுக்குக் கொடுக்கப் படும் மூலப் படிகள் தெளிவானவையாக  இருக்கவேண்டும். அவர்கள் ‘சிந்தித்து’ எழுதுவதற்கு அவகாசம் இருக்காது. அவர்கள் பணி படியெடுப்பதே. ஒரு சிறு எழுத்துப்பிழை, பல மணி நேர உழைப்பையும், தோலையும் வீணடித்துவிடும். சில நேரங்களில் தோலைச் சுரண்டிப் பிழை நீக்கம் செய்யலாம். ஆனால் அது நிச்சயமில்லை. தோல் கிழிந்துவிடலாம்.

தேர்ந்த எழுத்தர்கள் தேவாலயங்களில் பணி செய்தார்கள். இந்தப் பணி, பாதிரியார்களின் பிரார்த்தனை போலவே புனிதமானதாகக் கருதப்பட்டது. அது, அவர்கள் கடவுளுக்குச் செய்யும் தொண்டு. ஒரு எழுத்தர் முதுமை அடைவதற்கு முன்னோ, கண் பார்வை மங்குவதற்கு முன்னோ, ஒரு  சில பெரிய புத்தகங்களைப் படியெடுக்கலாம்.எழுதுகோல் பிடித்துப்பிடித்து விரல்கள் முடங்கிவிடும். குனிந்து எழுதியெழுதிக் கூன் விழுந்து விடும்.

இத்தகைய எழுத்தர்கள் தேவாலயங்களின் சொத்து. இவர்கள் உடல் உழைப்பில் இருந்து விடுவிக்கப் படுவார்கள். நல்ல உணவும் உறைவிடமும் வழங்கப்படும். இவர்களது ஆரோக்கியம் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கப்படும்.

ஒரு புத்தகத்தை உருவாக்குவது கூட்டு முயற்சி. அதில் அங்கம் வகித்தவர்களில் கலைஞர்களும் அடங்குவர். நகக் கண்ணைக் காட்டிலும் சிறிய வடிவங்களைத்  தூரிகை கொண்டு தீட்டவும், பொன்னிற வடிவங்களைச் சரியான கலவை கொண்டு வரையவும், நூறு வருடங்களுக்கு மங்காமல் இருக்கும் நிறமிப் பொருள் கலந்து எழுதவும் திறம் பெற்ற கலைஞர்கள் இவர்கள்.

அலங்கார எழுத்துருக்கள், சிவப்பு மற்றும் பொன்னிறம் கொண்ட வடிவங்கள், இவற்றை அடக்கும் ஒரு கட்டம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பக்கத்தை எழுத ஒரு வார காலம் ஆகும். இது போன்ற அலங்காரப் பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை உருவாக்கப் பல வருடங்கள் ஆகும்.

Images: Library of Congress

இறுதியாகப்  பக்கங்களை தைத்து, தோல் வேயப்பட்ட மரப்பலகைகளைப் பித்தளைப் பூண் கொண்டு பூட்டி, அலங்காரம் செய்து முடிக்கும்போது அந்தப் புத்தகம், அதன் உரிமையாளரின் செல்வ வளத்திற்கும் சாட்சியாக மாறும்.

இதுபோன்ற அலங்கார பைபிள் ஒன்று ஒரு வீட்டின் விலை பெறும். ஒரு சாதாரணப் புத்தகம் ஒரு தொழிலாளியின் வாழ்நாள் வருவாயை விலையாகக்  கேட்கும். அரசர்களும், போப் குருமார்களும் எழுதும் அரிய புத்தகங்கள் செல்வந்தர்களின் கோட்டை கொத்தளங்களுக்கு இணையாக உயில்களில்  இடம்பெறும். போர்க்காலங்களில் இத்தகைய புத்தகங்கள் சிறைபிடிக்கப் படுவதும் உண்டு.

புத்தகங்கள் அரிதானவை. எனவே அறிவும் அரிதானதாக இருந்தது. ஒரு எளிய மனிதன் புத்தகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இதுவே எட்மண்ட் பிரபுவின் புத்தகம் பிறந்த உலகம்.

ஆனால், ஜெர்மனியில் பொற்கொல்லர்  ஒருவர் உலகை  மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார். 


அச்சு இயந்திரம்

1450 ஆம் ஆண்டு. ஜெர்மனியின் மெய்ன்ஸ் நகரம்

அந்தப் பட்டறையில் சூடான உலோகத்தின் நெடியும் புத்தம்புது அச்சு மையின் நெடியும்  போட்டி போட்டது.  யொஹாநெஸ் குடென்பெர்க், தான்  அச்சடித்த அந்தக் காகிதத்தைக் கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தார். எழுத்துக்கள் ஓரளவு சரியாக அச்சாகி இருந்தன. வரிகளைப் படிக்க முடிந்தது. ஆனால் வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளி சீராக இருக்கவில்லை. அந்தச் சுமாரான பக்கத்தை அச்சாக்க அவருக்குப்  பத்து வருட காலம் பிடித்திருந்தது.

அவர் அந்தக் காகிதத்தைக் கசக்கி மூலையில் எறிந்தார். அப்படிக் கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் ஒரு மலை போல் குவிந்து கிடந்தன. ஒவ்வொன்றும் ஒரு முயற்சிக்கான அடையாளம்.

குடென்பெர்க் அடிப்படையில் ஒரு பொற்கொல்லர். அவரது அனுபவம், அச்சுத் துறையில் வேறு யாருக்கும் சாத்தியப் படாதவற்றை சாத்தியமாகியது. உலோகங்களின் பண்புகளைப் புரிந்து கொள்ளவும், அச்சு இயந்திரத்திற்குத் தேவையான உலோகக் கலவைகளை உருவாக்கவும் அவரால் முடிந்தது. அச்சு இயந்திரம் பற்றிய கனவின் காரணமாக அவர் கைவிட்டிருந்த தொழில்  அவரை உள்ளிருந்து இயக்கியது.

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு தேவை. முதலில் இந்த எழுத்துருக்கள் கடினமான இரும்பு ஒன்றில் இடம்வலமாகச் செதுக்கப்படவேண்டும். அப்படிச் செதுக்கப்பட்ட எழுத்துரு செப்புத் தட்டின் மேல் வைத்து அடிக்கப்பட்டு, அச்சுப் பாதிக்கப் படவேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட செப்பு அச்சில் உலோகக் கலவை ஊற்றப்பட்டு, எழுத்துருக்கள் உருவாக்கப்படவேண்டும். இந்தக் கலவை  அச்சடிக்கும்போது உண்டாகும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அச்சுக்கு உறுதியாகவும் இருக்க வேண்டும். அதற்கு மிகவும் சிறந்தது  ஈயம், செம்பு, அஞ்சனக்கல் (Antimony) இவற்றைக் கொண்டது. இதனை  சோதனைகள் மூலம் கண்டறிய பல வருடங்கள் ஆனது.

குடென்பெர்க்கின் கடன் சுமை மேலும் மேலும் அதிகரித்து வந்தது. அச்சு இயந்திரம் எப்போது தயாராகும் என்று அவரிடம்  கேட்பதை  அவர் குடும்பத்தினர் நிறுத்தியிருந்தனர். உண்மையில் அவர்கள் அவரிடம்  எதை கேட்பதையும் நிறுத்தியிருந்தனர்.

(a) Gutenberg Press (b)Invention of printing – Gutenberg taking the first proof: Library of Congress

அச்சுகளின் தேவை எளிதானதல்ல. சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள், நிறுத்தக் குறிகள், எழுத்தர்கள் பயன்படுத்தும் பிற குறிகள் என மொத்தம் முன்னூறு அச்சுருக்களை உருவாக்கினார் குடென்பெர்க்.

அச்சு இயந்திரம் செய்வது, முதலில் குடென்பெர்க் நினைத்தது போல் எளிமையான காரியமாக இருக்கவில்லை. அவர் அச்சுத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் வடிவமைக்க வேண்டி இருந்தது. திராட்சை ரசம் பிழிய உதவும் இயந்திரத்தில் இருந்து, காகிதக் கூழ் தயாரிக்கும் இயந்திரம் வரை ஒவ்வொன்றில் இருந்தும் அவர் பாகங்கள் இயங்கும் உத்திகளை எடுத்துக் கொண்டார். 

இவற்றுள் மிகவும் சவாலாக அமைந்தது? மை. எழுத்தர்கள் பயன்படுத்தும் மை நீரில் கரையக்கூடியது. அது அச்சு இயந்திரத்திற்குச் சரிவரவில்லை. எழுத்துருக்களில் அது நன்றாக ஒட்டவில்லை. தாளில் ஒழுகியது. எனவே அச்சுக்கென்று எண்ணெய்ப் பசை கொண்ட மை ஒன்றைத் தயாரிக்க வேண்டி வந்தது.

இறுதியாக, இப்போதுதான் அனைத்தும் சரியாக அமைந்திருந்தன. எனினும், சுமாரான அச்சுப் பக்கமே சாத்தியம் ஆகி இருந்தது – அவர் கசக்கி எறிந்த அந்தக் காகிதம்.

காகிதத்தை எறிந்த குடென்பெர்க், நடந்து ஜன்னல் அருகே சென்றார். வெளியே  இருளில் இருந்த மெய்ன்ஸ் நகரை  வெறித்துப் பார்த்தார். நகரின் மற்றொரு பகுதியில் யோஹான் ஃபூஸ்ட் (Johann Fust), குடென்பெர்க்கின் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். ஃபூஸ்ட் குடென்பெர்க்கின் அச்சுத் தொழிலுக்கு பெருந்தொகையைக் முதலீடு செய்திருந்தார். அவர் குடென்பெர்க் போன்று கனவுகளைச் சுமப்பவர் அல்ல. வியாபாரி. முதலீடு, லாபம் அல்லது நட்டம். இவையே அவருக்குத் தெரிந்த உலகம்.

ஃபூஸ்ட் குடென்பெர்க்கின் பட்டறை, ஆய்வுகள், ஆகியவற்றுக்குப் பணம் கொடுத்திருந்தது, லாபத்தை எதிர்பார்த்தே. ஆனால் குடென்பெர்க்கிடம் இருந்து அவருக்குக் கிடைத்தவை காரணங்களும், வாக்குறுதிகளும் மட்டுமே. அவை எதுவும் நிறைவேறவில்லை. ஃபூஸ்ட் தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தார்.

குடென்பெர்க் அச்சு இயந்திரத்தை நோக்கித் திரும்பினார். எழுத்துக்களுக்கு  இடையே இருந்த சீரற்ற இடைவெளிக்கு எது காரணமாக இருக்கும் என்று சிந்தனை செய்தவறு இயந்திரத்தைக் கழற்றத் தொடங்கினார்.


முதல் பைபிள்

நான்கு வருடங்களுக்குப் பின்…

1454 ஆம் ஆண்டு குடென்பெர்க்கின் கனவு நனவாகியது.

இப்போது எழுத்துக்கள் துல்லியமாகவும், சீரான இடைவெளியுடனும் இருந்தன. குடென்பெர்க் முதலில் அச்சுக்குத் தேர்ந்தெடுத்தது – பைபிள். அதுவே அன்றைய நாளின் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம்.

மொத்தம் நூற்றியெட்டு பிரதிகள்.

அன்றைய நாளில் ஒரு எழுத்தர் ஒரு பைபிளை எழுத இரண்டு வருடங்கள் ஆகும். நூற்றியெட்டு பைபிள்கள் என்பது பெரும் சாதனை.

சில பைபிள்கள் காகிதத்தில் உருவாகின. காகிதம் அப்போது ஐரோப்பாவின் புதிய பொருள். குடென்பெர்க்கின்  பைபிள்களுக்கான காகிதம் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சில பைபிள்கள் வழக்கம்போலத் தோல் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் விலை காகித பைபிள் போல மூன்று மடங்கு நிர்ணயிக்கப் பட்டது.

தோல் கொண்டு உருவாக்கப்பட்ட பைபிள்கள் நீடித்து உழைப்பவை. அவை செல்வந்தர்களாலும், தேவாலயங்களாலும் வாங்கிக்கொள்ளப் பட்டன. அவை வேலைப்பாடுகள் கொண்டு, சிறந்த எழுத்தர்கள் உருவாக்கும் பைபிளுக்கு இணையாக இருந்தன. சிறப்பு ஓவிய வேலைப்பாடுகளுக்கென்று வெற்றுப் பக்கங்கள் விடப்பட்டன.

இந்த அச்சுப் பிரதிகள் கையால் எழுதும்  பைபிள்களில் இருந்த, கலை வண்ணத்தை  இழந்திருந்தன. ஆனால் துல்லியமான எழுத்துக்கள், ஒரே மாதிரியான வடிவமைப்பு ஆகியவற்றைப் பெற்றிருந்தன. கைகளால் எழுதப்படும் பைபிள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இப்போது இந்தப் புதிய பைபிள்கள், எழுத்தர்களின் தனிப்பட்ட பாணியோ பிழைகளோ இல்லாமலிருந்தன. முக்கியமாக, அனைத்துப் பிரதிகளும் ஒரே மாதிரியாக இருந்தன. 

காகிதப் பிரதிகள் முப்பது ஃபிலோன்களுக்கும், தோல் பிரதிகள் மூன்று மடங்கு  விலைக்கும் விற்பனையானது. எழுத்தர்கள் உருவாக்கும் பைபிளைக் காட்டிலும் விலை குறைவு என்றாலும் கூட , அது பெரும் விலைதான். இருந்தாலும், இப்போது புத்தகம் பலருக்கும் சாத்தியமானது.

குடென்பெர்க் பைபிள்களில் நாற்பத்து ஒன்பது பைபிள்கள் இன்றும் இருக்கின்றன. அவை இருப்பது சில நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பழம்பொருள் சேகரிப்பவர்களிடம்.

Gutenberg Bible. Library of Congress

அச்சு இயந்திரம் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்க இந்த குடென்பெர்க் பைபிளே தொடக்கமாக இருந்தது.

ஆனால் அச்சக இயந்திரம் உருவாக்கிய மாற்றங்களைக் காண்பதற்கு  குடென்பெர்க் உயிர்வாழவில்லை.


அச்சுப் புரட்சி

1455 ஆம் ஆண்டு. குடென்பெர்க் பைபிளை வெளியிட்டு ஒருவருடம் ஆகியிருந்தது. யோஹான் ஃபூஸ்ட் தான் கொடுத்த பணத்தைக் கேட்டு குடென்பெர்க் மீது வழக்குத் தொடுத்தார்.

வழக்கின் விசாரணை என்னவோ சிக்கலாக இருக்கவில்லை. ஃபூஸ்ட்க்குக் கொடுக்க குடென்பெர்க்கிடம் பணம் இருக்கவில்லை. எனவே நீதிமன்றம், வழக்கில் ஃபூஸ்ட்க்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அச்சு இயந்திரம், அச்சகம், அச்சுக்கள் மற்றும் மை ஆகிய அனைத்தும் குடென்பெர்கிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. ஃபூஸ்டின் மருமகன் பீட்டர் ஷூஃபர் குடென்பெர்கின் அச்சகத்தைத் தொடர்ந்து நடத்தத் தொடங்கினார். புத்தகங்கள் பீட்டரின் பெயர் தாங்கி வெளியாகின. குடென்பெர்கை மக்கள் மறந்து போயினர்.

அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த அந்த மனிதன் அடையாளம் இலாதவராகவே  தன் இறுதி நாட்களைக் கழித்தார். மெயின்ஸ் நகரின் ஆர்ச்பிஷப் வழங்கிய உதவித்தொகையில் வாழ்ந்து, 1468 ல் மறைந்து போனார் குடென்பெர்க். பெரும் மாற்றங்களை உருவாக்கப் போகும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அவரை வியாபாரமும் சட்டமும் சேர்ந்து தோற்கடித்திருந்தன.

ஆனால் அவர் கண்ட கனவை யாராலும் தோற்கடிக்க இயலவில்லை.

அடுத்த பத்து ஆண்டுகளில், அச்சு இயந்திரம் ஜெர்மனியெங்கும் பரவியது. மெய்ன்ஸ் நகரில் அச்சைக் கற்றுக் கொண்டவர்கள் அதனை ஸ்டராஸ்பர்க் , கொலோன், பாசல் போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்றனர். அச்சுத் தொழில் பரவியது.

இருப்பது ஆண்டுகளில், அச்சுத் தொழில்  பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பரவி இருந்தது. 1480 வாக்கில் சுமார் நூறு ஐரோப்பிய நகரங்களில் அச்சகங்கள் இயங்கின. 1500 ஆம் ஆண்டின் கணக்குப்படி, சுமார் இரண்டு கோடிப் புத்தகங்கள் அச்சாகி இருந்தன. இது கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மனித குலம் எழுதிய கையெழுத்துப் புத்தகங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகம்.

அச்சுத் தொழில்  புத்தகங்களின் விலையை சுமார் எண்பது சதவிகிதம் வரை குறைத்திருந்தது. நூலகங்கள் நூற்றுக் கணக்கான புத்தகங்களை வைத்துக் கொள்ள முடிந்தது. ஒரு காலத்தில் தேவாலயங்களுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டுமே உரித்தானதாக இருந்த அறிவுச் செல்வம், இப்போது அனைவருக்கும் உரியதாக மாறியிருந்தது.

அதுவரை குறைவாகவே  இருந்த கல்வியறிவு, புத்தகங்களின் வருகையால் அதிகரித்தது. அதிகரித்த கல்வியறிவு புதிய புத்தகங்களுக்கான தேவையை உருவாக்கியது. பிரார்த்தனை, ஆண்டு அட்டவணை, காதல், வரலாறு, தத்துவம் என்று புதிய புதிய புத்தகங்கள் அச்சாகின.

மார்ட்டின் லூதர் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக நடத்திய ப்ராட்டஸ்டன்ட் இயக்கம் பரவ புத்தகங்களே முக்கியக் காரணமாக இருந்தன என்று சொல்லலாம். கத்தோலிக்கத் திருச்சபை,  கண்டறிந்து தடுப்பதற்கு முன்னதாக புத்தகங்கள் கைமாறின.  மார்ட்டின் லூதர் 1517 ல் பிரகடனம் செய்த தொண்ணூற்றைந்து கொள்கைகள், அச்சின் மூலம் ஒருமாத காலத்திற்குள் ஜெர்மனியெங்கும் பரவியது. அடுத்த சில மாதங்களில் ,அது ஐரோப்பா எங்கும் பரவிருந்தது. கிறிஸ்துவர்களின் நம்பிக்கையை மறு வரையரை செய்வதில்  புத்தகங்கள் முக்கியப் பங்காற்றின.

1543 ல் கோபர்நிக்கஸ் சூரிய மையக் கொள்கையை அறிவித்தபோது, அதனை ஐரோப்பாவின் அறிவுச் சமூகம் அறிந்து கொள்ள, அவரது புத்தகமே  காரணமானது. அவரது கோட்பாடுகளை புரிந்து கொள்ளவும், கணக்கீடுகளை சரிபார்க்கவும், அந்தக் கோட்பாடுகளை மறுக்கவும் கூடப் புத்தகங்களே  வழிசெய்தன. விரைவில் சூரியமையக் கொள்கையின் அடிப்படையில் பிற ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்யவும் அவரது புத்தகம் உதவியது. பின்னாட்களில் உருவான அறிவியல் புரட்சிக்குப் புத்தகங்களே வித்திட்டன.

சரி,  நாம் பார்த்த எட்மண்ட் பிரபுவின் புத்தகம் என்னவாயிற்று?

அது அவரது சந்ததியினரால் நூறு வருடங்களுக்குப் பாதுகாக்கப்பட்டது. அது இப்போது வூல்பிட் கிராமத்தின் ஒரே புத்தகம் என்ற தகுதியை இழந்திருந்தது. லண்டன், ஆக்ஸ்போர்ட் மற்றும் காம்ப்ரிட்ஜ் பகுதிகளில் அச்சகங்கள் உருவாகி இயங்கி வந்தன. புத்தகங்கள் எளிதில் வாங்கக் கூடிய பொருள் ஆனது. இப்போது அதற்காக எட்மண்ட் பிரபுவின் தந்தை போலப் பெரும் செலவு செய்ய வேண்டியதில்லை.

ஆனால் எட்மன்ட்  பிரபுவின் புத்தகம் இப்போது வேறு வகையில் முக்கியதத்துவம் பெற்றது. அது இப்போது பழம்பொருட்களைச்  சேகரிக்கும் ஒருவர் வசம் இருக்கிறது. இப்போது அது, கையால் எழுதப்பட்ட புத்தகம் என்ற வகையிலும், பழம்பொருள் என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய உலகம் பிறந்திருக்கிறது.

புதிய உலகத்தின் பிரச்சினைகளும் புதியவை. அவை  எட்மண்ட் பிரபுவோ, குடென்பெர்கோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத பிரச்சினைகள். அது – யார் எதை அச்சடிப்பது? எது யாருக்குச் சொந்தமானது?

இந்தப் புதிய கேள்விகளுக்கான விடை புதிதாகவே பிறந்தது. அந்த விடை பிறந்த மண்ணிற்கு அச்சுத் தொழிலைக் கொண்டு சென்றவன் ஒரு வியாபாரி. நீங்கள் நினைப்பது போற ஒரு  வியாபார அல்ல. கைகளால் எழுதி எழுதிக் களைத்துப் போய், அச்சு இயந்திரத்தை நாடிய ஒரு வியாபாரி. அவன் கொண்டுவந்த அச்சு இயந்திரம் அந்த மண்ணில் புதிய குழப்பங்கள் உருவாகக் காரணமானது. ஒரு புதிய தீர்வு பிறக்கவும் காரணமானது.

அந்தத் தீர்வு காப்பிரைட் என்று பெயர் பெற்றது.

காப்பிரைட் கதைகள்

இங்கிலாந்திற்கு வந்த அச்சகம் – வில்லியம் காக்ஸ்டன்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.