இங்கிலாந்திற்கு வந்த அச்சகம் – வில்லியம் காக்ஸ்டன்

This entry is part 2 of 3 in the series காப்பிரைட் கதைகள்
Image : Library of Congress

1441. லண்டன்.

காலை விடியும் முன் அந்தக் கப்பல்  லண்டன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டிருந்தது. காற்று அந்தப் பாய்மாரக் கலனை தேம்ஸ் நதியில் இருந்து, கருத்திருந்த  கடலை நோக்கித் தள்ளியது. கப்பலின் மேல் தளத்தில் நின்றிருந்த வில்லியம் காக்ஸ்டன், தான் பிறந்து வளர்ந்து நகரம் பனிமூட்டத்தில் மறைந்து கொண்டிருப்பதைக் கண்டார். துறைமுகம், தேவாலயக் கோபுரங்கள், முப்பது வருடங்களாகப்  பரிச்சயப்பட்டிருந்த நகரச் சந்தடி  ஆகியவை சிறிது சிறிதாக மறைந்து வந்தன.

காக்ஸ்டன் தன் பெற்றோர்கள் மணமுடித்த, தான் பிறந்து வளர்ந்து விளையாடித்திரிந்த, ஆடை விற்பனைத் தொழிலைக் கற்றுக்கொண்ட, முப்பது வருடங்கள் வாழ்ந்த லண்டன் சிறிது சிறிதாகத் தொலைவில் மறைவதைக் கண்டார். 

மறுபுறம் ப்ரூஷ் (Bruges) நகரம் அவரை எதிர்நோக்கி இருந்தது. ப்ரூஷ் தொழில் வளம் கொண்ட நகரம். அவர் மட்டுமல்ல. லண்டனின் ஒவ்வொரு இளைஞனும் ப்ரூஷ் பற்றிய கதைகளைக் கேட்டிருந்தார்கள். உயர்ந்து வணிகக் கட்டிடங்கள். கொழிக்கும் லாபத்தில் கட்டப்பட்டவை. பெரிய வியாபாரிகள்  ஒரு அரசனைப் போல் வாழ்ந்து வந்த அரண்மனைகள். கலைஞர்களும், அறிஞர்களும் கூட ப்ரூஷ் நகரை நாடினர். ப்ரூஷ், புதிய கனவுகளைக் கட்டியெழுப்பும் நகரமாக விளங்கியது.

காக்ஸ்டன் லண்டனில் ராபர்ட் லார்ஜ் என்ற ஒரு வியாபாரியிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். லார்ஜ் லண்டனின் செல்வந்தர்களில் ஒருவர். எளிய வாழ்க்கையில் ஆரம்பித்து லண்டனின் மேயர் பதவி வரை உயர்ந்தவர்.துணி ஒன்றைத் தொட்டுப் பார்த்தவுடன் அதன் தரத்தைப் புரிந்து கொள்ளும் வித்தையை லார்ஜிடம் இருந்தே காக்ஸ்டன் கற்றிருந்தார். பேரம் பேசவும், சிறு தவறு செய்தாலும் ஒரு மனிதனை நிர்மூலம் ஆக்கிவிடக்கூடிய சர்வதேச வியாபார அரசியலை சாதுரியமாகக்  கையாளவும் காக்ஸ்டன் கற்றிருந்தார். ராபர்ட் லார்ஜ் மறைந்தபின், காக்ஸ்டன் தன்னிடம் திறமை இருந்தபோதிலும் ஒரு வெற்றிகரமான வியாபாரியாகத் தான் இடம்பிடிக்கவில்லை எனபதை உணர்ந்தார். அன்றைய லண்டனின் வியாபார உலகம் வெகு சில சக்திவாய்ந்த மனிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. சிறு அளவிலான வாய்ப்புகளுக்கு தன்னைப் போல பல திறமையான இளைஞர்கள் போட்டி போடுவதை காக்ஸ்டன் கண்டார்.

காக்ஸ்டனுக்கு லண்டன் கொடுக்க முடியாத ஒன்றைக் கொடுக்கும் வல்லமை ப்ரூஷ் நகருக்கு இருந்தது. அது – எதிர்காலம்.

கப்பல் மூன்று நாட்கள் பயணம் செய்தது. எப்போதெல்லாம் வாய்ப்பிருந்ததோ, அப்போதெல்லாம் கரையை ஒட்டியே பயணம் செய்தது அந்தக் கப்பல். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே ஆழ்கடல் பயணம். கப்பலின் பணியாளர்கள, புயலின் அறிகுறிகளுக்காக வானத்தைப் பார்த்தபடியே பயணம் செய்தார்கள். திடீர்ப் புயல் ஒன்று அந்தக் கப்பலைப் புரட்டிப் போட்டுவிடலாம். காக்ஸ்டன் மூன்று நாட்களும் கப்பலின் கீழ்த் தளத்திலேயே இருந்தார். கப்பலின் ஆட்டம் அவர் வயிற்றைக் குமட்டியபோதும், அவர் மனம் நிலையாக ப்ரூஷ் நகரைப் பற்றியிருந்தது.

இறுதியாகக் கப்பல் ப்ரூஷ் வந்தடைந்தது. உப்புக்கறை படிந்த, நீரில் அசைந்து கொண்டிருந்த மர மேடை மீது கால் வைத்து இறங்கிய உடனேயே, தான் ஒரு புதிய உலகத்தில் காலடி எடுத்து வைத்திருப்பதை காக்ஸ்டன் உணர்ந்து கொண்டார்.

தேம்ஸ் நதியில் வெள்ளம் பெருகும்போதெல்லாம் லண்டன் நகரின் மண்பாதைகள் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும். குப்பைகூளங்களில் இருந்து  துர் நாற்றம் வீசும். ஆனால் ப்ரூஷ் நகர் சாலைகள் அகலமானவையாக இருந்தன. அவை ப்ரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. லண்டனில் கட்டிடங்கள் ஒன்றை ஒன்று நெருக்கியடித்துக் கொண்டிருக்கும். ப்ரூஷ் நகரின் வணிகக் கட்டிடங்கள் சாலையில் இருந்து உள்ளடங்கி இருந்தன. அவற்றின் வாயில்கள் வேலைப்பாடுகள் கொண்டிருந்தன.

நகரின் ஊடே ஓடிய தெளிந்த கால்வாய்கள்  பயணிகளும், சரக்குகளைத்  தாங்கிப் படகுகள் சென்று வந்தன. கால்வாயின் குறுக்கே இருந்த வில் போல் வளைந்திருந்த பாலத்தில் மக்கள் கால்வாயைக் கடந்து  சென்றனர். துறைமுகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் நின்றன. இத்தாலியக் கப்பல்கள் பட்டு, ஜெர்மானியக் கலங்கள் கற்பூரமணி (amber) ஆகியவற்றையும்  கொண்டுவந்தன. ஆப்ரிக்காவைச் சுற்றி வந்திருந்த  போர்த்துகீசியக் கப்பல்கள் இந்தியாவில் இருந்து நறுமணப் பொருள்களைக் கொண்டு வந்தன.  துறைமுகத்தில் நின்றிருந்த கப்பல்களில் பல தேசக்  கொடிகள் பறந்தன. துறைமுகத்தின் உப்புக் காற்றில் வீசிய தார் மணம், வியாபார வளத்தை பறைசாற்றியது.

ப்ரூஷ் வளமான நகரம். ஐரோப்பாவின் வியாபாரத் தலைமையகம். இங்கிலாந்தின்  கம்பளி ஆலைகளில் ஆடைகள் ஆகின. கீழை நாடுகளின் நறுமணப் பொருட்கள் வெள்ளியும், பொன்னும் கொடுத்து வாங்கப்பட்டன. உலகெங்கினும் இருந்த கலைஞர்களும் அறிஞர்களும் ப்ரூஷ் நகரைத் தேடிவந்தனர். ஐரோப்பாவின் கலாச்சார மையமாகவும் ப்ரூஷ் திகழ்ந்தது.

புதிதாக வந்திருந்த காக்ஸ்டன் தன் வாழ்க்கையை ப்ரூஷ் எந்த அளவிற்கு மாற்றப் போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை.

Image: Library of Congress

முப்பது வருடங்கள்…

காக்ஸ்டன் ப்ரூஷின் முக்கியமான வியாபாரிகளின் ஒருவர் ஆகி இருந்தார்.

காக்ஸ்டன் ப்ரூஷ் நகரில் எளிய வியாபாரத்தையே தொடங்கி, பெரிய வியாபாரிகளுக்குப் பணி செய்தார். ப்ரூஷ் கலாச்சாரத்தைச் சிறிது சிறிதாகக் கற்றுக் கொண்டார். அவரது லண்டன் வியாபாரப் பயிற்சி இங்கு உதவவில்லை. பிரெஞ்சு மொழி தெரியாமல் செல்வந்தர்களுடன் வியாபாரம் செய்வது எளிதாக இருக்கவில்லை.

உயர்மட்டக் குடிமக்களிடம் உரையாட பிரெஞ்சு. பணியாளர்களுடன் பேச டச்சு, கொஞ்சம் ஜெர்மானிய மொழி என ஒவ்வொன்றையும் கற்றுக் கொண்டார் காக்ஸ்டன். எப்போது கப்பலில் சரக்குகள் வரும், எப்போது வணிகப் பொருட்காட்சி நடக்கும் என்பவற்றைத் தெரிந்து கொண்டார்.

காக்ஸ்டனுக்கு நாற்பது வயதாகும்போது அவர் ப்ரூஷின் முக்கியமான வியாபாரிகளின் ஒருவராகி இருந்தார். இங்கிலாந்தின் உயர் தரக் கம்பளி ஆடைகள், பட்டு போன்ற விலையுயர்ந்த ஆடைகளை விற்பனை செய்துவந்த காக்ஸ்டனுக்கு சமூகத்தின் முக்கியப் புள்ளிகள் மற்றும் செல்வந்தர்கள் வாடிக்கையாளர் ஆகினார். காக்ஸ்டனின் நேர்மையான வாணிபம் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.

1462 ல் காக்ஸ்டன் ப்ரூஷசின் முக்கியப் புள்ளி ஆகியிருந்தார். அவர் ப்ரூஷசின் ஆங்கில வாணிபர்களின் வியாபார அமைப்பின் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கில வியாபாரிகளின் பிரதிநிதியாக அரசை அணுகுவது, வியாபாரப் போட்டியாளர்களை சாமரம் செய்வதும், ஆங்கில வாணிபர்களின் நலனுக்கென்று பணியாற்றுவதுமாக அவருக்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. பல வருடங்கள் அந்தப் பதவியில் இருந்த காக்ஸ்டன் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டது போலவே அரசியல் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

இப்போது காக்ஸ்டன் ப்ரூஷின் செல்வந்தர்களில் ஒருவர் ஆகியிருந்தார். மணம்முடித்து வீடு, பணியாட்கள் வசதிகளுடனும், சமூகத்தில் முக்கிய மனிதராகவும் வாழ்ந்த காக்ஸ்டன், தான் லண்டனில் இருந்து கப்பலில் வந்து இறங்கியபோது மனதில் கொண்டிருந்த இலட்சியங்களைத் தாண்டி, பெரும் வெற்றி பெற்றிருந்தார்.

அவர் தனது ஐம்பதாம் வயதை நெருங்கும் போது அவரது வாழ்க்கை புதிய மாற்றத்துக்குத் தயாரானது.

மனக்கணக்குப் போடவும், கையெழுத்துப் போடவும் மட்டுமே கற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளுக்கு மத்தியில் காக்ஸ்டன் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார். காதல் கதைகள் முதல் தத்துவம் வரை எந்தப் புத்தகம் விற்பனைக்கு வந்தாலும் அதை வாங்கிக் கொள்வார். வியாபார நடவடிக்கைகள் முடிந்தபின் மாலை நேரங்களில் அவர் புத்தகங்களில் மூழ்கிப் போனார்.

போதிய செல்வம் ஈட்டியிருந்த காக்ஸ்டன் இப்போது இலக்கியத் தேடலில் இருந்தார். குறிப்பாக மொழி பெயர்ப்புகள் அவர் பார்வையில் முக்கியத்துவம் பெற்றன. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய மொழிப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். பிரெஞ்சு புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது காக்ஸ்டன் மொழிபெயர்ப்பின் சவால்களைச் சந்தித்தார். இலக்கிய மொழிபெயர்ப்பு மொழியறிவுக்கு அப்பாற்பட்டது என்பது காக்ஸ்டனுக்குப் புரிந்தது. அவர் அந்தச்  சவாலை விரும்பினார். அவரது மாலை நேரங்கள் படிப்பதற்கு பதில் மொழிபெயர்ப்பில் செலவானது.

பதிப்பிக்கவோ, விற்பனைக்கென்றோ இல்லாமல், ஆர்வத்தின் காரணமாக மட்டுமே அவர் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். அவரது முதல், பெரிய மொழிபெயர்ப்பு “ட்ராய் நகர வரலாற்றுத் தொகுப்பு” (Recueil des Histoires de Troie) என்பதாகும். இது ஒரு கதைத் தொகுப்பு.

மொழிபெயர்ப்பு கடினமானதாக இருந்தது. வேலை மெதுவாக நடந்தது. ஒவ்வொரு பக்கத்தையும் வார்த்தை வார்த்தையாக எழுத வேண்டி இருந்தது. காக்ஸ்டனின் கண்கள் மங்கின. பகல் வெளிச்சம் குறைவதற்குள் மளமளவென்று எழுத வேண்டும். விரல்கள் முடங்கி வலியெடுத்தன.

“எழுதுகோல் முனை மழுங்கியது. என் கண்கள் ஒளிமங்கின. விரல்கள்  தளர்ந்தன” என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் காக்ஸ்டன்.

ஆனால் அதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. காக்ஸ்டன் வருடக் கணக்கில் எழுதினாலும் ஒரு புத்தகத்தை மட்டுமே எழுத முடியும். அதுவும் ஒரே ஒரு பிரதி மட்டுமே.

குடன் பெர்க் அச்சு இயந்திரத்தை உருவாக்கி இருந்த செய்தி ஐரோப்பா முழுவதும் பரவியது. எங்கெல்லாம் முதலீடு, தொழில்த்  திறம், புத்தகத்திற்கான சந்தை மூன்றும் ஒன்று கூடுகிறதோ, அங்கெல்லாம் அச்சுத் தொழில் இடம் பிடித்தது. ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நகரங்களில் அச்சுத் தொழில் பரவியது. புத்தகங்கள் விலை குறைந்து பரவியது. உலகம் மாற்றமடைந்து கொண்டிருந்தது.

காக்ஸ்டனும் அச்சு இயந்திரத்தைக் கேள்விப் பட்டிருந்தார். ப்ரூஷ் நகரிலே கொலார் மான்சன் என்பவர் அச்சகத்தை நிறுவி இருப்பதையும்  அறிந்து கொண்டார். இருவரும் சந்தித்தனர். எப்படிச் சந்தித்தனர் என்பதைப் பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால், காக்ஸ்டன் அச்சுத் தொழிலில் மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பது நிச்சயம்.

காக்ஸ்டனின் வயது ஐம்பது. அந்த வயதில் அவரைப் போன்றவர்கள் பொதுவாக, மரணத்திற்குத் தயாராவார்கள். உயில் எழுதுவார்கள். தேவாலயங்களுக்கு நன்கொடை கொடுப்பார்கள். கடவுளுடனும், அண்டை வீட்டுக்கார்களுடனும் சமாதானம் செய்து கொள்வார்கள். அந்த வயதில் புதிய தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்வதைக் கனவிலும் கருத மாட்டார்கள். ஆனால் காக்ஸ்டன் அப்படி மரணமடைய விரும்பவில்லை.

ஜெர்மனிக்கும்  சென்று அச்சுத் தொழிலைக் கற்றுக் கொண்டார். தெளிவான அச்சுக்கான உலோகக் கலவைகளைத் தெரிந்து வைத்திருந்தார். மை தயாரித்தார். அச்சுக் கோர்த்தார். அச்சடித்தார். பக்கங்களைத் தைத்துப் புத்தகம் ஆக்கினார்.

1475 ல் ஆங்கிலத்தின் முதல் அச்சுப் புத்தகத்தை உருவாக்கினார்.


முதல் ஆங்கிலப் புத்தகம்

காக்ஸ்டனின் கண்களை மங்கச் செய்த, விரல்களை முடக்கிய  “ட்ராய் நகர வரலாற்றுத் தொகுப்பு”, முதல் புத்தகமாக அச்சிடப்பட்டது.

அது கையால் எழுத்தர்கள் எழுதிய புத்தகம் போன்று நேர்த்தியாக இருக்கவில்லை. பொன் தோய்த்து எழுதிய எழுத்துக்கள் இல்லை. அலங்காரங்கள் இல்லை. ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டு, விரும்பும் எவரும் வாங்கிக் கொள்ளும் வகையில் இருந்தன. ட்ராய் நகரின் கதைகளைப் படிக்க விரும்பும் எவரும் எளிதில் படிக்கலாம்.

அந்தப்  புத்தகம் நன்றாக விற்றது. காக்ஸ்டன் சந்தையைத் தெரிந்து கொண்டார். அது – ஐரோப்பாவின் பிற பகுதிகளில் பிரபலமான புத்தகங்களைப் படிக்க விரும்பிய ஆங்கிலேயர்கள்.

இப்போது காக்ஸ்டன் ஒரு ஆடை வியாபாரி மட்டுமல்ல. அவர் ஒரு பதிப்பாளருமானார். தன் சிந்தையில் உதித்ததை நாணயங்கள் அச்சடிப்பதைப் போன்று அச்சடிக்கும் வல்லமை பெற்ற ஒருவர்.

அடுத்தடுத்த புத்தகங்கள் மளமளவென்று தயாராகின. மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். ஆங்கிலேயர்கள் விரும்பும் எந்த ஒரு மொழி பெயர்ப்பையும் சேகரித்து அச்சாக்கினார். ஒவ்வொரு புத்தகத்தைப் பதிப்பிக்கும்போதும் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்.

ப்ரூஷ் நகரில் புகழ் பெற்றிருந்தாலும் அவர் மனம் தான் பிறந்து வளர்ந்த லண்டனையே சுற்றி வந்தது. அதுவரை இங்கிலாந்தில் அச்சகங்கள் இருக்கவில்லை. அது கைகளால் எழுதப்படும் புத்தகங்களையும், இறக்குமதி செய்யப்படும் அச்சுப் புத்தகங்களையும் நம்பி இருந்தது.

இங்கிலாந்திற்கு அச்சகத்தைக் கொண்டு வரப்போகும் எந்த மனிதனுக்கும் ஒரு சந்தை இருந்தது. தொழில் போட்டி இல்லாத சந்தை. அச்சகத்தைக் கொண்டுவரும் அந்த ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தது இங்கிலாந்து.  சந்தை. 

1476 ஆம் ஆண்டு. காக்ஸ்டனின் வயது அறுபது. அவர் தனது அச்சு இயந்திரம், மைக் குடுவைகள், புத்தகங்கள் என, அச்சுத் தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு லண்டனை நோக்கிப் புறப்பட்டார்.

அச்சகம்

காக்ஸ்டன் தனது அச்சகத்தை லண்டனில் நிறுவவில்லை. லண்டன் ஏற்கனவே பெரும் வணிகர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. லண்டனில் வணிகர்கள் அவர்களுக்குள் கடுமையான போட்டியில் இருந்தனர். லண்டன் போட்டி பொறாமைகள் நிறைந்திருந்தது. தொழிற் கழகங்கள் (guilds) இரும்புக் கரம் கொண்டிருந்தது.

லண்டன் அருகே இருந்த வெஸ்ட்மின்ஸ்டர், லண்டனின்  தொழிற் கழகங்களின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்ட இடமாக இருந்தது. அரசவை, பாராளுமன்றம் ஆகியவை வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்தே செயல்பட்டன. புத்தகங்களை விரும்பும் சமூகம் அங்கே வசித்தது. தேவாலயத்தைச் சார்ந்தவர்களுக்குப்  பிரார்த்தனைப் புத்தகங்கள் தேவைப்பட்டன. வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகங்கள் தேவைப்பட்டன. அந்தப் பகுதியில் தனது அச்சகத்தை நிறுவியதன் மூலம் காக்ஸ்டன் இங்கிலாந்தின் ஆளும் வர்க்கத்திற்கு எளிதில் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பைப் பெற்றார்.

அவர் தனது இங்கிலாந்து அச்சகத்தில் முதலில் பதிப்பித்தது பாவ-மன்னிப்பு அறிக்கை. அவை வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தால் நன்கொடை பெற்றுக்கொண்டு விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் தேவாலயத்துக்குப் பொருள் கொடுத்துத் தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டார்கள். இந்தச் சிறு கையேடு அச்சாக்க எளிதாக இருந்தது. லாபமும் கொடுத்தது. காக்ஸ்டனுக்கு புதிய வாடிக்கையாளர்களைக் கொடுத்தது.

ஆனால் காக்ஸ்டன் பாவ-மன்னிப்புக் அறிக்கைகளை வெளியிடும் நோக்கத்துடன் இங்கிலாந்து வந்திருக்கவில்லை.

1478 ல் அவர் “கான்டர்பரி டேல்ஸ்” சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

ஜெப்ஃரி சாஸர்

ஜெப்ஃரி சாஸர், கான்டர்பரி டேல்ஸ் எழுதி நூறு ஆண்டுகள் ஆகியிருந்தது. அது கான்டர்பரி நகரின் தாமஸ் பெக்கிட் தேவாலயத்திற்கு வரும் யாத்திரீகர்கள் சொல்வது போன்ற கதைகளின் தொகுப்பு. ஒரு போர் வீரன், இல்லத்தரசி, பாதிரியார், ஒரு உழைப்பாளி என பல்வேறு மனிதர்களின் கதைகளைக் கொண்டது. அந்தக் கதைகள் இங்கிலாந்து சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டியது.

சாஸரின் இந்தக் கதை நூறு வருடங்களாக மீண்டும் மீண்டும் எழுத்தர்களால் படியெடுக்கப்பட்டது. ஒவ்வருவரும் எழுதும்போது, எழுத்துகள் மாறின. வார்த்தைகள் மாற்றமடைந்தன. பத்திகள் கூடிக் குறைந்தன. சரியான மூலப் பதிப்பு எது என்பது யாருக்கும் தெரியவில்லை. எந்தப் பிரதி கிடைக்கிறதோ, அதுவே சாஸரின் கதை.

காக்ஸ்டனின் அச்சகம் இந்த நிலையை மாற்றியது. முதல் முறையாக இங்கிலாந்து முழுவதும் ஒரே பிரதி விநியோகம் செய்யப்பட்டது. பிழைகள் திருத்தப்பட்டு மூலக்கதை திட்டம் செய்யப்பட்டது. இன்றைக்கு கான்டர்பெரி டேல்ஸ் படிக்கும் ஒருவர் படிப்பது காக்ஸ்டனின் பதிப்பு. காக்ஸ்டன் தேர்ந்தெடுத்த வார்த்தைகள், வாக்கியங்கள்.

காக்ஸ்டனின் ‘கான்டெர்பெரி டேல்ஸ் செல்வந்தர்கள், வணிகர்கள், அறிஞர்கள் என பல தரப்பினராலும் வாங்கப்பட்டது. புத்தகம் வாங்கப் பணமும், கவிதைகளைப் படிக்கும் அளவு மொழியறிவும் உள்ள ஒவ்வொருவரும் அந்தப் புத்தகத்தைப் படித்தார்கள். தன் எஞ்சிய வாழ் நாட்களில் எத்தகைய வாடிக்கையாளர்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதை காக்ஸ்டன் கண்டு கொண்டார்.

அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு சுமார் நூறு புத்தகங்களை வெளியிட்டார் காக்ஸ்டன். 1492 ல் மரணமடைந்தார்.

காக்ஸ்டன் வெளியிட்ட புத்தகங்கள் பல்வேறு வகைப்பட்டவை. கதைகள், வரலாறு, தத்துவம், மதம், செயல்முறைக் கையேடுகள், குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்கள் எனப் பட்டியல் நீள்கிறது.

காக்ஸ்டன் முக்கியமான ஐரோப்பிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அது ஆங்கில இலக்கியத்தைச் செழுமை ஆக்கியது. பிரார்த்தனைப் புத்தகங்கள், பயணிகளுக்கு உதவிக் குறிப்புகள் என்று அவர் எதையும் விட்டு வைத்ததாகத் தெரியவில்லை.

பெரும்பாலானவற்றைத் தானே மொழி பெயர்த்தார். அதுவரை லத்தீனும், பிரெஞ்சும் அறிந்தவர்கள் மட்டுமே வாசித்திருந்த இலக்கியங்களை ஆங்கிலேயர்களுக்கு அளித்தார். எளிய வாசகனுக்கு தொன்மையான இலக்கிய வடிவங்களைக் கொண்டு சென்றார். பிறரது எழுத்துக்களை பிழை திருத்தினார். சீரமைத்தார்.

ஒருவகையில் காக்ஸ்டன் ஒரு பதிப்பாளர் மட்டுமல்ல. ஒரு வாசகன் எதை விரும்புவான் என்பதைத் தெரிந்து கொண்டு, அதைத் தேடிச் சேர்த்து, எளிமையாகப் புத்தக வடிவில் அச்சாக்கி அதை சந்தைப்படுத்தும் ஒரு தொழிலை உருவாக்கினார். ஒவ்வொரு புத்தகமும் ஏன் முக்கியமானது என்பதை விளக்க, அவற்றுக்கு முன்னுரைகள் எழுதினார். பதிப்புத் தொழிலை ஆதரிக்கும் புரவலர்களை உருவாக்கினார். வாசகன் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக புத்தகங்களைக் கடைவிரித்தார்.

காக்ஸ்டன் ஆங்கில இலக்கியத்தின் அடித்தளத்தைக் கட்டினார். அவர் சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார். சிலரை தவிர்த்தார். தேர்ந்தெடுத்த ஆசிரியர்களின் எழுத்துக்களை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பதிப்பித்தார். அவர் தேர்ந்தெடுத்த ஆக்கங்கள் இலக்கிய வரலாறில் நிலைபெற்றன. அவர் தவிர்த்த ஆசிரியர்கள் மறக்கடிக்கப் பட்டனர்.

இது புதிய உலகத்தின் புதிய அதிகாரம். மக்கள் எதைப் படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம். எழுத்தர்கள் எழுதிய புத்தகங்களும் கூட தேவாலயங்களால், செல்வந்தர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால், அச்சுத் தொழில், அந்த அதிகாரத்தைப் பன்மடங்கு பெரிதாக்கி ஓரிடத்தில் குவித்தது. அச்சுப் பாதிக்கப்படும் புத்தகம் பல்லாயிரம் மக்களை அடைந்தது. அச்சுப் பெறாத புத்தகம் யாராலும் வாசிக்கப் படாமல் போனது.

காக்ஸ்டன் இந்த அதிகாரத்தை நுட்பமாகப் பயன்படுத்தினார். ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிபெயர்ப்புகளை பெரிதும் தேர்ந்தெடுத்தார். அடர்த்தியான, கருத்துச் செறிவுள்ள புத்தகங்களை விட , மக்கள் விரும்பும் புத்தகங்களையே தேர்ந்தெடுத்தார். எளிய வாசகன் விரும்புவதை வெளியிடுவதே பதிப்புத் தொழிலின் அடிப்படை என்ற வெளிப்படை ரகசியத்தைப் புரிந்து கொண்டார்.

அவர் விட்டுச் சென்றது வெறும் தொழில் அல்ல. ஒரு மரபு. அவரது உதவியாளர் விங்கின் டவர்ட் அவரது அச்சகத்தைத் தொடர்ந்து நடத்தினார். மேலும், விங்கின் பங்களிப்பு காக்ஸ்டனின் பங்களிப்பை விடப் பெரிதாக இருந்தது. அவர் தொழில் நுட்பத்தை மேம்படுத்தினார். மேலும் பல  அச்சகங்கள் லண்டனில் தோன்றின. பின்னர் நாடெங்கும் பரவின. அடுத்த தலைமுறை இங்கிலாந்து பெரும் பதிப்புத் துறை கொண்ட நாடாக மாறியிருந்தது.

குடென்பெர்க்கோ, காக்ஸ்டனோ எதிர்பார்த்திராத வகையில் அச்சுத் துறை வளர்ச்சி கண்டது.

அச்சுத் தொழில் புதிய புத்தகங்களை மட்டுமல்லாமல், புதிய பிரச்சினைகளையும் உற்பத்தி செய்தது.

தவறான செய்திகள், வதந்திகள்  வேகமாகப் பரவின. படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் களவு போவதைக் கண்டனர். எதுவெல்லாம் விலை போகுமோ அதுவெல்லாம் அச்சாகின.

அச்சுத் தொழில் பழைய சட்டங்களால் நெறிமுறைப்படுத்த முடியாத ஒன்றானது. புதிய சட்டங்கள் பிறக்கவும் காரணமானது.

‘காப்பிரைட்’  காலம் பிறக்கவிருந்தது.

காப்பிரைட் கதைகள்

அச்சு இயந்திரத்திற்கு முன் ஒரு புத்தகம்  ஸ்டேஷனர்ஸ் கம்பெனி

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.