- தரவு ஏக்கம்!
- தகவல் இளக்காரம்
- மார்க் & ஜெஃப்: தரவின் தோழர்கள்
- திறன்பேசி என் சிறந்த நண்பன்
- தரவு தனியுரிமை
- தொழில்நுட்ப வளர்ச்சியும் வாடிக்கையாளர் அணுகுமுறையும்
அரசியல்வாதிகள் என்னதான் பெரிய டெக் நிறுவனங்கள் சமூகத்திற்கு பல்வேறு தீய விளைவுகளை உண்டாக்குகின்றன என்று கதறி வந்தாலும், இந்த நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். என் நண்பர் ஒருவர், இந்த டெக் நிறுவனங்கள் தலைமையகங்கள் இருக்கும் கலிஃபோர்னியா, உலகின் மற்ற பகுதிகள் போல அல்லாத ஒரு தனி உலகம் என்பார். இந்த நிறுவனங்களுக்குள் நிலவும் கடும் போட்டி ஒன்றே, இவர்களின் குறி. கேட்டால், எங்களது குழாயடி சண்டையில்தான் இந்த உலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி அடங்கியுள்ளது என்று வீர வசனம் வேறு பேசுகிறார்கள்.
2022 – ல் OpenAI நிறுவனம் GPT 3.5 –ஐ அடிப்படையாகக் கொண்ட ChatGPT –ஐ அறிமுகப்படுத்திப் பெரிய வெற்றி பெற்றது. இன்று (2026), GPT 5.4 -ஐ வெளியிட்டுள்ளார்கள். வெறும் சொற்கள் மட்டுமே கொண்ட அரட்டை அரங்கம், இன்று ஒரு முழு வீடியோ, ஒலி என்று எல்லா விதமான ஊடகங்களும் அடங்கும். அதே போல, கூகிள், Gemini 1.0 என்ற முதல் பதிப்பை 2023 –ல் வெளியிட்டது. இன்று (2026), Gemini 3.5 Flash வெளியிட்டு, OpenAI –ஐ விட அதிக செயல்திறனுடன் இயங்குகிறது. இதை இங்கு சொல்லக் காரணம், இந்த டெக் நிறுவனங்கள், தங்களது படைப்புகளை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படி போட்டா போட்டியிட்டு மெறுகேற்ற, பலவித முயற்சிகள் தேவை. இவர்களை விமர்சிக்கும் எந்த அரசியல்வாதியும் அவர்களைச் சேர்ந்த அரசாங்கமும், அப்படி எதையும் செய்யவில்லை என்பதே கசப்பான உண்மை. இணையத்தில் இருக்கும் நல்ல, கெட்ட விஷயங்கள் ஒன்றும் எல்லாம் OpenAI –க்குச் சொந்தமில்லை. அதே போல, எல்லாவித சமூக வலைத்தள தரவுகளும் Meta –வுக்குச் சொந்தமில்லை. இந்தத் தொழிலில் போட்டி போடும் ஒவ்வொரு நிறுவனமும், அடிப்படை இணைய தரவுகளைப் பயன்படுத்துகிறார்கள். மற்றபடி, தன்னுடைய படைப்பை, போட்டியாளரின் படைப்பைக் காட்டிலும் சிறந்தது என்று, எதை வைத்துச் சொல்லுவது? என்னையும் உங்களையும் வைத்துத் தான்! ஓர் உதாரணம், உதவலாம்.
ஒரு நாற்காலி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். எல்லா நாடுகளிலும், நாற்காலி உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் இருக்கின்றன. எந்த நிறுவனம் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது என்று கவனித்தால், அதன் காரணங்கள் பல இருக்கும்.
- அடிப்படை கச்சா பொருட்களின் தரம் (பெரும்பாலும் இங்கு நல்ல மரம் அல்லது எஃகு) (Raw material quality).
- உருவாக்கத் தரம் (build quality)
- பரிமாற்றத் தரம் (distribution quality)
- விற்பனை வீச்சு (marketing reach)
- நுகர்வோர் செண்டிமெண்ட் (consumer sentiment)
இதில் முதல் நான்கு விஷயங்கள், மிகவும் 20 –ஆம் நூற்றாண்டு சமாச்சாரங்கள். இன்றைய நிறுவனங்கள், அதுவும் பெரிய டெக் நிறுவனங்கள், இதை ஒரு பிள்ளைப்பாடமாகக் கற்று வைத்துள்ளன. பெரும்பாலும், ஒரு மெடாவின் படைப்பிலோ, அல்லது கூகிளின் படைப்பிலோ, அல்லது அமேஸான் சேவையிலோ அடிப்படை விஷயங்கள் பற்றி அலசத் தேவையில்லை.
மிஞ்சி இருக்கும் ஒரே விஷயம் நுகர்வோர் செண்டிமெண்ட். இதைச் சற்று அலசுவோம். ஒரு டொயோட்டா காரைத் துறப்பது சற்று கடினம். அதை விற்பது, அதற்கான காப்பீடு, மற்ற கார்களின் விலை என்று பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. டொயோட்டா நிறுவனம் மீது தனக்கு குறைகள் இருந்தாலும், அதைப் பொறுத்துப் போவதே உகந்தது என்று எந்த ஒரு சாதாரண நுகர்வோரும் அறிவார். டொயோட்டாவை விட சற்று எளிது, நமது கற்பனை நாற்காலி நிறுவனம். அவர்களது படைப்பின் மேல் குறை இருந்தால், முதலில் முறையிடு செய்து பார்க்கலாம். அதற்கு இணைந்து, வேறு நாற்காலிகளை நுகர்வோருக்கு இலவசமாகத் தந்தால், அத்துடன் விஷயம் முடிந்தது. இல்லையேல், அந்த நாற்காலிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்னொன்றை வாங்கி விடலாம். ஏனென்றால், நாற்காலியில் விலை, டெயோட்டாவை ஒப்பிட்டால், மிகவும் குறைவு.
என் பார்வையில், டொயோட்டாவாகட்டும், அரசாங்கங்களாகட்டும், பழைய நோக்குடைய காப்பீடு அல்லது திறன்பேசி நிறுவனங்களாகட்டும், இவர்களது வியாபார/வரி கட்டுவோர் அணுகுமுறை இன்னும் 20 –ஆம் நூற்றாண்டைத் தாண்டவில்லை. முதலில் இதை இங்கு சொல்லி விடுகிறேன். இதை விவரமாக இந்தப் பகுதியில் மேலும் பார்ப்போம்.
முதலில், இன்றைய பெரிய டெக் நிறுவனங்களின் வியாபார அணுகுமுறையைப் பார்ப்போம். அவர்களின் மிகப் பெரிய அச்சம், அவர்கள் அளிக்கும் இலவச சேவைகள் (free services) நாற்காலியை விட மலிவானவை. 20 –ஆம் நூற்றாண்டுப் அணுகுமுறை இதற்கு ஒரு போதும் உதவாது. இதனால், இவர்கள் செய்வது சில மிக சாதுரியமான காரியங்கள்:
- இலவச சேவையைப் பயன்படுத்தும் நுகர்வோரை, மிகவும் நெருக்கமாக, மனித உணர்வுகளை மதித்து, தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
- இணையத்தில் உள்ள தரவுகள் பொது என்ற பட்சத்தில், நெருக்கமான நுகர்வோரின் ஒவ்வொரு மின்னணு அசைவும் தன்னுடைய வியாபார மற்றும் பெரு மொழி மாதிரிக்கு தீனியாக மாற்றி, அதை மேலும் மெருகேற்ற வேண்டும். இதையும் நுகர்வோரை அழுத்திப் பெறக் கூடாது. நுகர்வோரின் பயன்பாட்டு வசீகரத்தில், அவரையும் அறியாமல் இந்தப் பணி நிறைவேற வேண்டும்.
- நுகர்வோர் தன்னிடம் ஒரு கணக்கைத் திறந்துவிட்டால், மிக எளிதாக, பயனுள்ள மற்ற இலவச சேவைகளை அளித்த வண்ணம் இருக்க வேண்டும். அதிக பயனுள்ள இலவச சேவைகள், இன்னும் அதிக தரவாக மாற வாய்ப்புண்டு. உதாரணம், ஜிமெயில் பயன்பாட்டாளர், எளிதில், அதே கணக்கில் ஜெமினியையும் பயன்படுத்தலாம், கூகிளின் docs –ஐயும் பயன்படுத்தலாம், Photos –ஐயும் பயன்படுத்தலாம்.
- நுகர்வோரை ஒரு வியூகத்தில் அவர்களுக்குத் தெரியாமலே இணைத்து விடல் அவசியம். உதாரணம், எக்ஸ் அல்லது LinkedIn போன்ற சமூக வலைத்தளங்கள். பொதுவாக எக்ஸில் தனிப்பட்ட தொடர்புகளும், LinkedIn –ல், வேலை சம்பந்தமான தொடர்புகளும் வைத்துக் கொள்வது இன்று ஒரு வழக்கமாகிவிட்டது. இந்தத் தொடர்புகள் ஒரு வியூகம். இந்த சமூக வலைத் தளங்களிலிருந்து வெளியேறுவதைக் கடினமாக்குகின்றன. இதை நாம் ஒரு இலவச டொயோட்டாவாக நினைத்துக் கொள்ளலாம். விட்டு விலகுவதைக் கடினமாக்கி விடுகிறார்கள்.
இந்த மிகப் பெரிய டெக் நிறுவனங்கள் தங்கள் நுகர்வோரை மரியாதையுடன், அன்புடன் நடத்துகிறார்கள். ஏனென்றால், நுகர்வோர், அவர்களது அடிப்படை கச்சா பொருள். அவர்கள் இல்லையேல், இன்னொரு போட்டியாளர், முன்னேறி, அவர்களது நிறுவனத்திற்கு பெரு நஷ்டம் விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.
முதல் இரண்டு பகுதிகளில் நாம் பார்த்த எந்த ஒரு நிறுவனத்திடமாவது, இந்த நுகர்வோரை நெருங்கும் முனைப்பு கொஞ்சமாவது இருந்ததா? இந்த முனைப்பு, பெரிய டெக் நிறுவனங்களின் ஆயுதம். அது இருக்கும் வரை, அரசாங்கங்கள், நாடுகள் எல்லாம், ஒரு பொருட்டே அல்ல. மார்க் கார்னி பேசும், செயல்திறன் போன்ற விஷயங்கள் தேவையானவை. ஆனால், 21 –ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஒரு 20 –ஆம் நூற்றாண்டு அள்வீடலை எட்டிப் பிடிப்பது டெக் நிறுவனங்களுக்கு வெளியே உள்ள மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இதற்கான காரணம், பல உலகத் தலைவர்களும், மேல்வாரியாக, தரவு மையங்கள், அவை தேக்கும் ஏராளமான தரவுகளை மட்டுமே பார்க்கிறார்கள். சற்று கீழிருந்து மேலே பார்த்தால், இந்த டெக் நிறுவனங்களின் ஆயுதங்கள் என்னென்ன என்று தெரிய வரும். அதில் பல பாடங்கள், 20 –ஆம் நூற்றாண்டு சிந்தனையில் சிக்கியுள்ள அமைப்புகள் கற்க வேண்டியவை.
- எப்படி வரி கட்டும் பிரஜையை மதிப்பது, மரியாதையாக நடத்துவது
- எப்படி கட்டணம் கட்டும் பிரயாணியை நெருக்கமாக வைத்துக் கொள்வது
- எப்படி காப்பீடு கட்டும் வாடிக்கையாளரை மதித்து நடத்துவது
- எப்படி மாதா மாதம் திறன்பேசி பில்லை கட்டும் வாடிக்கையாளரை ஒரு நண்பர் போல நடத்துவது
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் எல்லா டெக் நிறுவனங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்ட், சென்ற நூற்றாண்டு நிறுவனம். திறன்பேசி சேவை நிறுவனத்திற்கும், இதற்கும், பெரிதான வித்தியாசம் இல்லை. யுரோப்பில் (குறிப்பாக ஃப்ரான்ஸ், கொஞ்சம் இத்தாலி, மற்றும் ஜெர்மனி) மைக்ரோசாஃப்டின் பிடியிலிருந்து விலக, பல முயற்சிகள் தொடங்கி விட்டன. அதே போல, இன்னொரு தடுமாறும் மிகப் பெரிய அமெரிக்க மென்பொருள் நிறுவனம் அடோபி. இவை இரண்டையும் இங்கே குறிப்பிடக் காரணம், இந்த இரு நிறுவனங்களும், தங்களது நுகர்வோரை நெருக்கமாக வைத்துக் கொள்ளவில்லை.
உலகத் தலைவர்கள், தங்களிடமுள்ள சட்டக் கட்டுப்பாடுகளை வைத்து, பெரிய டெக் நிறுவனங்களின் பிடியை தளர்த்த நினைக்கிறார்கள். இதுவரை, பெரிதாக, யாரும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை (மைக்ரோசாஃப்ட் ஒரு விதிவிலக்கு). அப்படியே, இந்தப் பெரிய டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தினாலும், அவர்களது நுகர்வோர் அரவணைப்பைத் துண்டிப்பது, மிகவும் கடினம். முன்னமே சொன்னது போல, இந்தப் பயனர் தரவு ஏக்கத்தை வைத்து, பெரிய டெக் நிறுவனங்கள், இன்னும் அடுத்த கட்டத்திற்குப் போவதை அரசாங்கங்களால் தடுக்க இயலாது.
அதற்காக, பெரிய டெக் நிறுவனங்கள் செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது அல்ல இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம். சட்டக் கட்டுப்பாடுகள் ஓரளவிற்கே உதவும். இவர்கள் கற்றுத் தந்துள்ள பாடத்தை, மற்ற துறையினர் கற்றுக் கொண்டு இயங்கினால், அது அந்தத் துறைக்கும், சமூகத்திற்கு நன்மை பயக்க வாய்ப்புண்டு. இத்தனைக்கும், இந்தப் பெரிய டெக் நிறுவனங்களின் ஆதிக்கம், கடந்த 15 ஆண்டுகளாகத் தான் உள்ளது. அரசு நிறுவனங்கள் இந்த வேகத்தில் இயங்காவிட்டாலும், இப்பொழுதாவது ஆரம்பிப்பது நல்லது. இவர்கள் உலகிற்கு கற்றுத் தந்த முக்கியப் பாடங்கள் இவை:
- உலகின் பல்வேறு இணைய தரவுகள் எளிதில் கிடைப்பவை. அதில் ஏராளமான மனித அறிவும், அனுபவமும் உள்ளது. ஆனால், இது வெறும் முதல் படி.
- இந்த உலகத் தரவுகளுடன், நுகர்வோர் அனுபவமும் கலந்து பயன்பெற, நுகர்வோரை அரவணைத்தல் அவசியம். அவர்களை நல்ல விதமாக நடத்தினால், மிகப் பெரிய மாதிரிகளை இலவசமாக முன் வந்து மெருகேற்றுவார்கள்.
- ஆங்கிலத்தில் stickiness என்ற பயன்பாடு உண்டு – அதாவது, நுகர்வோர் எப்படி ஒரு சேவையுடன் இயங்குவதை, ஒரு நல்ல அனுபவமாக மாற்றுவது என்று அவசியம். ஏனென்றால், நுகர்வோரின் அனுபவம் இதில் மிகவும் முக்கியம். அதற்கு, தரவைப் பற்றிய சிந்தனை, கீழிருந்து மேலோங்க வேண்டும் (bottom up data fine tuning).
இவை யாவும் 21 –ஆம் நூற்றாண்டின் புதிய சிந்தனை. வெறும் செயற்கை நுண்ணறிவு என்று இந்தத் தொழிலை சாட்டை வைத்து துவைப்பதைத் துறந்து, அவர்கள் பயன்படுத்தும் புதிய அணுகுமுறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காப்பீடு நிறுவனமோ, அல்லது செல் நிறுவனமோ இவ்வாறு இயங்கத் தயங்கும். சந்தேகமே இல்லை. ஆனால், இவ்வாறு மாறாவிட்டால், அவர்களது சேவையும் இந்தப் பெரிய டெக் நிறுவனங்களின் கையில் மாற வாய்ப்புண்டு!
இன்று, பரவலாக, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் வளர்ச்சி, இன்னும் ஓராண்டில் பெரிதாக பாதிக்கப்படும் (AI Tech bubble) என்ற கருத்து நிலவுகிறது. அப்படியே நடந்தாலும், இந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி பெருகுவதற்கு முன் இயங்கி வந்த கூகிள், மெடா மற்றும் அமேஸான் போன்ற நிறுவனங்கள், லாபகரமான நிறுவனங்கள். அவர்களது நுகர்வோரை நெருங்கும் அணுகுமுறைகள், ஒரு 20 ஆண்டுகளாக மெருகேற்றப்பட்டவை. இந்த ஆயுதத்தை அவர்கள் ஒரு போதும் துறக்கப் போவதில்லை. அதை வேறு விதமாக அவர்களது வியாபாரம் வளரப் பயன்படுத்துவது நிச்சயம். மற்ற அரசு, தனியார் நிறுவனங்கள், இதை ஒரு ஏ.ஐ. குமிழியுடன் சேர்த்து மறந்துவிடாமல் இருப்பது அவசியம்.
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
