- தரவு ஏக்கம்!
- தகவல் இளக்காரம்
- மார்க் & ஜெஃப்: தரவின் தோழர்கள்
கடந்த இரு பகுதிகளில், என்னை ஒரு புள்ளி விவரமாகக் கூட மதிக்காத, அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய, கண்ணீர் கதைகளைப் படித்திருப்பீர்கள். இந்தப் பகுதியில், அந்த ஆழமான, தரவு ஏக்க சோகத்திலிருந்து, விலக முயற்சிப்போம். என்னை ஒரு மிக முக்கியப் புள்ளியாக நினைக்கத் தொடங்கிய சிலர் வந்துவிட்டதால், என்னுடைய தரவு ஏக்கம், கொஞ்சம் தனிந்து விட்டது என்று சொல்லலாம். இல்லையேல், நான் பல வரிகளைக் கட்டி, காப்பீடு, வங்கி, நகராட்சி, மாநில, மத்திய அரசாங்கங்களுக்கு தவறாமல் வரி கட்டிய பல கோடி பிரஜைகளில் ஒன்றானவனாகி இருப்பேன். என்னை நெருங்கியவர்களைத் தவிர என் பெயர் கூட ஒருவருக்கும் தெரிந்திருக்காது.
அப்படிப்பட்ட இருவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். ஒருவர் மார்க், மற்றொருவர் ஜெஃப். இருவரையும் அறிமுகப்படுத்துவதோடு, அவர்கள் செய்யும் (என் பார்வையில்) நல்ல காரியங்கள் பற்றியும் சொல்ல இருக்கிறேன்.
உலகெங்கும் பெரிதாக வெறுக்கப்படும் அமெரிக்க வியாபாரத் தலைவர்களில் ஒருவர் மார்க் ஜக்கர்பர்க் (Mark Zuckerberg). இளைய தலைமுறையினரை, தன்னைப் பற்றியே சிந்திக்கத் தூண்டி, அவர்களைக் கெடுத்தவர் என்று அவரை திட்டாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். பழைய நண்பர்களை சந்தித்து அரட்டை அடிக்க, ஃபேஸ்புக் (Facebook) என்ற ஒரு மென்பொருள் ஒன்றைத் தொடங்கினார், இன்று, தமிழில் எது இருக்கிறதோ, இல்லையோ, “முகநூல்” என்ற தூய தமிழ்ச் சொல் பிரயோகம், மார்க்கின் வெற்றிக்கு அடையாளமாக, தமிழ்க் கவிஞர்கள் வரை வளர்ந்து விட்டது!

உலக நடத்தையை விடுங்கள். மார்க்கிற்கும், எனக்கும் என்ன சொந்தம்? நிறைய இருக்கிறது! என்னுடைய உறவினர்களுடன் ஒரு நல்ல உறவு இன்று இருக்கிறது என்றால், அதற்கு மார்க் ஒரு முக்கிய காரணம். என்னுடைய கஸின்ஸுடன் முகநூலில் அதிகம் தொடர்பு என்று இல்லாவிட்டாலும், அவர்களது பிறந்தநாள் என்றால், முகநூல், எனக்கு ஒரு நினைவூட்டல் (reminder) அனுப்பி, என்னைக் காப்பாற்றி விடும்! தனியாக மின்னஞ்சலில் ஒரு வாழ்த்து அனுப்பினால், உடனே என் ஞாபக சக்தியை மெச்சும் உறவினரின் பாராட்டுதலுக்கு இணை ஏது? அட, என்னுடைய நலனில், மார்க்கிற்கு எத்தனை பரிவு!
2021 முதல் 2022 வரை நாமெல்லாம் கோவிட் வந்து பல விதங்களிலும் பாதிக்கப்பட்டோம். பலரும் மருத்துவமணைகளுக்குச் சென்று, மீண்டோம். அந்த கால கட்டங்களில், பல சுகாதாரக் காப்பு முறைகள், நாடுகள் வாரியாக கோவிட் பாதிப்பு என்று பல பதிவுகளை முகநூலில் வெளியிட்டிருந்தேன். அவை வெளியான போது, சிலர், கமெண்ட் அடிப்பார்கள், பலரும் மெளனம் சாதிப்பார்கள். இன்று, (2026), முகநூல், என்னிடம், “கோவிட் பற்றி 2022 –ல் அருமையான பதிப்புகளை வெளியிட்டீர்கள். இன்று சமூகத்திற்கு தேவையான பதிவுகள் எதுவும் காணோமே” என்று நினைவூட்டுகிறது! அட, வெளியிட்ட போதும், இன்றும், சட்டை செய்யாத சமூகத்திற்கு முன், எனக்கு மரியாதை அளித்து, மீண்டும் அந்தப் பணியில் ஏன் ஈடுபடவில்லை என்று வாஞ்சையாக தோளில் தட்டும் மார்க் என் அரசாங்கம், புறநகர் ரயில் நிறுவனம், உள்ளூர் அரசாங்கம் செய்யாததைச் செய்து காட்டியுள்ளார். அந்தத் தனிப்பட்ட கவனிப்பு, எனக்கு மிகவும் முக்கியம்!
அத்தோடு நிற்பதில்லை மார்க். என்னுடன் படித்த நண்பன், வேலுமணி, சில வருடங்கள் முன் என்னைப் பார்க்க வந்திருந்தான். அவனுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து, சில வண்ணப்படங்களை, என்னுடைய மற்ற கல்லூரி நண்பர்கள் பார்ப்பதற்காக முகநூலில் வெளியிட்டிருந்தேன். பலரும், அவர்களது கருத்துக்களை, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதன் பின், பெரிதாக தொடர்பு ஒன்றும் வேலுமணியுடன் இல்லை. சமீபத்தில், முகநூல் எனக்கு, வேலுமணியின் படத்தை அனுப்பி, “மூன்று ஆண்டுகளாக வேலுமணியுடன் தொடர்பு ஏதும் இல்லையா?” என்று நினைவூட்டியது. வேலுமணி கூட, இதைச் செய்திருக்க மாட்டான். என்னுடைய நட்புகள் நன்றாக இருக்க வேண்டும் என்று மார்க் ஒருவர் மட்டும்தான் கவலைப் படுகிறார்!
அதே போல, என்னைப் பற்றிக் கவலைப்படும் இன்னொரு நபர் ஜெஃப். முதலில் இணையத்தில் புத்தகக்கடையைத் திறந்த ஜெஃப், மெதுவாக, அதை ஒரு பல்சரக்குக் கடையாக மாற்றினார். அவர், எந்த நாட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தாலும், ஒரே எதிர்ப்புதான். நான் அமேஸான் பற்றிதான் சொல்கிறேன். எனக்கு ஜெஃபை தெரியாது. ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்! சற்று தலைகீழாக இருப்பது போலத் தெரியும் – இளையராஜாவுக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு அவரைத் தெரியாது என்பதைப் போல!
ஒரு முறை, நான் ஆர்டர் செய்த பொருள் வந்து சேர கால தாமதமாகியது. அவர்களது கால் செண்டரை அழைத்தேன். சரி, நம்முடைய காப்பீடு நிறுவனம் போல இழுபறிதான் என்ற மனதோடு கூப்பிட்ட எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்கள். நான் அழைக்கும் செல்பேசி எண்ணிலிருந்து, என் அமேஸான் கணக்கைப் பார்த்துவிட்டு, அந்த ஏஜண்ட் தொடர்ந்தார், “உங்களது சமீபத்திய ஆர்டரில் பிரச்சினையா?”. என்னிடமிருந்து, எந்த சுய விளக்கத்தையும், என்னுடைய செல்பேசி நிறுவனம் போல, அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நான், அதற்கு, “இரண்டு வாரமாகியும், அந்தப் பொருள் இன்னும் வந்து சேரவில்லை” என்றேன். “உங்களது நிலைக்கு நாங்கள் வருந்துகிறோம். நீங்கள் எங்கள் நிறுவனத்திடமிருந்து கடந்த 10 ஆண்டுகளாக பொருட்களை வாங்கி வருகிறீர்கள். இதை நாங்கள் மதிக்கிறோம். இதோ உங்களது ஆர்டரை ரத்து செய்கிறோம். உங்களது கடன் அட்டையில் இன்றே, அந்தப் பணம் திரும்பிவிடும். இதே பொருளை மீண்டும் வேண்டுமானால் நீங்கள் ஆர்டர் செய்யலாம். முதல் ஆர்டரின் பொருள், வந்து சேர்ந்தாலும், நீங்கள். அதை எங்களுக்குத் திருப்ப வேண்டியதில்லை. இரண்டையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்”.
என்னைப் பற்றி, எத்தனை தெரிந்து வைத்திருக்கிறார், ஜெஃப்! பத்து வருட வியாபாரப் பழக்கம். சும்மா, எங்கள் உள்ளூராட்சி போல அல்ல. என்னுடனான உறவை நம்பி, பணத்தை உடனே திருப்புகிறார்கள். அதுவும் மதித்து, மன்னித்து, என்னுடனான உறவை பலப்படுத்துகிறார்கள்.
அதே போல, இன்னொரு முறை, ஒரு பொருளை வாங்கி, அதன் உறையை நீக்கிய பிறகு, அவ்வளவு பயனுள்ளதாகத் தெரியவில்லை. அமேஸான் இணையதளத்திற்கு, அதை திருப்புவதற்காகச் சென்றேன். அவர்களின் காரணங்களில் ஒன்று, “தவறாக பொருளை வாங்கி விட்டேன்”. இவ்வாறான தவறுகள் சகஜம். பெரிய கடைகளில் வாங்கினால், அங்கு ஒரு பெரிய வரிசையில் நின்று, வாங்கிய பொருளையும், ரசீதையும் எடுத்துச் சென்றால், 1 முதல் 2 மணி நேரங்களில் பொருளைத் திருப்பி, உங்களது கடன் அட்டைக்குப் பணமும் சென்றுவிடும். ஆனால், ஜெஃப் பாசமானவர். அவருக்கு என் நேரத்தின் அருமை தெரியும். “நீங்கள் இதற்காக, மெனக்கிட்டு எங்கும் போய் பொருளைத் திருப்பத் தேவையில்லை. பொருள் திருப்ப ரசீதை உங்கள் வீட்டு அச்சு எந்திரத்தில் அச்சடித்து விட்டுக் காத்திருங்கள். எங்களது கூரியர் நிறுவனம் உங்களது வீடு தேடி வந்து பொருளைப் பெற்றுக் கொள்வோம். வருவதற்கு சில மணி நேரம் முன், வீட்டில் நீங்கள் இருக்கிறீர்களா என்று ஊர்ஜிதப்படுத்திவிட்டு வருவோம். நீங்கள் பிசியாக இருந்தால், அதற்கு தகுந்தவாறு எங்கள் வருகையை மாற்றிக் கொள்வோம்!”. என்னுடைய வீட்டின் முகவரியை அவர்கள் “பாதுகாப்பு” கருதி, என் செல்பேசி நிறுவனம் போலக் கேட்கவில்லை. பல சின்னக் கடைகளில் பொருளைத் திருப்ப, காலையில் சென்றால், “முதல் பரிவர்த்தனையாகப் பொருளைத் திருப்பி வாங்குவதில்லை. மாலை வாருங்கள்” என்று செண்டிமெண்ட் பேசுவார்கள். நீங்கள் யாரென்ற கவலையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது.
என்னதான் ஜெஃபையும், மார்க்கையும் உலகமே கடிந்து கொண்டாலும், என்னை மதித்து, புள்ளி விவரத்திற்கு ஒரு படி மேலே போய், என் உறவையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் இவர்களை எனக்குப் பிடிக்கும். இவர்களையே தூக்கிச் சாப்பிடும், இன்னொருவரை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
–தொடரும்
Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.
