இந்த வாரம் இந்திரா பார்த்தசாரதிக்கு தொன்னூற்றேழாவது பிறந்ததினம் வருகிறது. முந்தைய வாக்கியத்தில் பெயருக்கு முன் என்ன முன்னடையை எழுதலாம் என்று யோசித்து எதையும் போடமால் விட்டிருக்கிறேன். புனைவெழுத்தாளர், நாடகாசிரியர், கட்டுரையாசிரியர், இலக்கிய விமர்சகர், சமூக ஆய்வாளர், பேராசிரியர் இப்படிப் பல மனதில் தோன்றின. இவை எல்லாமே அவருக்கு முற்றிலும் பொருத்தமானவை, ஆனால் இவற்றில் எதுவுமே அவரை முழுமையாக வரையறுக்க உதவாது. இ.பா. இந்தப் பகுதிகளின் கூட்டுத்தொகையை விஞ்சி நிற்பவர். படைப்பாளியின் பங்களிப்புகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் மரபில் அவருடைய இருப்பிடத்தை ஒப்புநோக்கல் தவிர்க்க இயலாதது. ஆனால் பன்முக நிபுணத்துவத்தில் இந்திரா பார்த்தசாரதியுடன் ஒப்பிட ஒருவரும் இல்லை என்றுதான் தோன்றுகிறது இந்நிலையில் நமக்குச் சாத்தியமாவது அவருடைய மேதைமையைக் கொண்டாவது மாத்திரமே.
சொல்வனத்தின் இ.பா-97 பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
சிறப்பிதழுக்கான வேலைகள் நான்கு மாதங்களுக்கு முன்னரே துவங்கின. முதற்படியாக இந்திரா பார்த்தசாரதியைத் தொடர்புகொண்டு அவருடைய அனுமதியை வேண்டினேன். “எனக்குத் தொன்னூற்றாறு வயதாகிறது. இப்போது நான் எழுதியவை குறித்து யாருக்கும் ஆர்வமிருக்குமா” என்று சிறப்பிதழின் தேவை குறித்த விலக்கம் அவரிடமிருந்து பதிலாக வந்தது. ஆர்வமிருப்பதால்தானே தலைப்படுகிறோம் என்ற உறுதிக்குப் பிறகு, ‘செய்யுங்கள்’ என்று சொன்னார். சிறப்பிதழ் அவருடைய சிறுகதை, நாவல்கள், நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் குறித்தவை மட்டுமில்லாமல் அவருடைய நெருங்கிய நண்பர்களின் தனிப்பட்ட அனுபவங்கள், அவர் படைப்புகள் குறித்த கல்விப்புல ஆய்வுகளையும் தாங்கிவரவேண்டும் என்று முடிவுசெய்தோம். ஒவ்வொன்றுக்கும் பொருத்தமானவர்களாக நாங்கள் கருதியவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டோம்.
கேட்ட நான்காம் நாளே, முதலாவதாக வந்தது, இரா. முருகனின் கட்டுரை. அது தில்லி தமிழ் இலக்கிய உலகம் குறித்த ஒரு காலக்கண்ணாடி. இ.பாவுடன், கஸ்தூரி ரங்கன், சுஜாதா என்ற முப்பெரும் ஆளுமைகள் கணையாழி என்ற தமிழ் இலக்கிய விசையை இயக்கிக்கொண்டிருந்த விதம் குறித்த மின்னற்பொழுதுப் பதிவு. ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டு உடனே எழுதித் தந்தவர் அம்பை. அவருடைய கட்டுரை இ.பாவுடனான தன் அரை நூற்றாண்டு நட்பைத் தொட்டுக்காட்டி, நகுலன், இ.பா எனும் இரண்டு ஆளுமைகள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்ட தருணத்தையும் விவரிக்கிறது. அம்பை கட்டுரையுடன் இலவச இணைப்பாக சில நிழற்படங்களையும் தந்திருந்தார். அத்துடன் இந்தச் சிறப்பிதழுக்கான இ.பாவின் படங்களின் தொகுப்பும் துவங்கியது.
சிறப்பிதழ் உருப்பெற ரவி சுப்பிரமணியனின் உதவியைச் சொல்லியாக வேண்டும். நான் வேண்டும் என்று கேட்ட அனைத்து ஆளுமைகளின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே என் கணினிக்கு இடம் பெயர்ந்தன. என்னை இணைப்பில் இருக்கச் சொல்லி, வேண்டிய பிறரிடம் என்னை நேரடியாக அறிமுகப்படுத்தி என் பணியை எளிதாக்கினார்.
வெளி ரங்கராஜனின் கட்டுரை பெருங்கதையாடல்களூடே இ.பாவின் நுண்ணோக்குப் பார்வையையும் வரலாற்று மறுவாசிப்பையும் குறித்து விவரிக்கிறது. அ. ராமசாமி இன்னொரு மாபெரும் ஆளுமையான கிரிஷ் கர்னாட்-டுடன் இ.பாவின் இந்தியத்தனம் மிக்க நவீன நாடகங்களை ஒப்புநோக்குகிறார். இங்கிலாந்தில் வசிக்கும் நாடக நடிகர், இயக்குநர் பாலேந்திராவைத் தொடர்புகொண்டதும் சுவிட்ஸர்லாந்திலும், லண்டனிலும் இ.பாவின் முன்னிலையில் அவருடைய நாடகங்களை நடத்திய அனுபவங்களை மகிழ்ச்சி பொங்க நினைவுகூர்ந்தார். அவர் கட்டுரையும் அவற்றைப் பிரதிபலிக்கிறது.
இந்தச் சிறப்பிதழ் பயணத்தில் பல சுவாரசியமான தகவல்களும் கிடைத்தன. எங்கள் கும்பகோணம் பகுதியில் கல்யாணம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் காவிரியாற்றின் அருகிலிருக்கும் திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபடுவார்கள். லண்டன் பாலேந்திராவுடன் பேசிக்கொண்டிருந்தபோது உடனடி கல்யாணத்திற்கு இன்னொரு வழியும் இருக்கிறது என்று தெரியவந்தது. தான் நடத்திய ‘மழை’-யின் (இ.பா எழுதிய முதல் நாடகம்) இணை நடிகையாக வந்த ஆனந்தராணியைக் கைப்பிடித்த கதையைச் சொன்னார். இதேபோல தில்லியில் பாரதி மணியும் க.நா.சுவின் மகள் ஜமுனாவும் மழை நாடகத்தின் வழியே இணைந்ததும் பாலேந்திராவின் உரையாடல் வழியே தெரிந்தது. கோவிலுக்குச் செல்ல ஆர்வமில்லாதவர்கள் கட்டாயம் இ.பாவின் மழை நாடகத்தைக் முயலலாம்.
புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் வேலு சரவணனைத் தொடர்புகொண்டபோது மிகவும் நெகிழ்ந்துபோனார். ‘அவர் இல்லாமல் நான் இல்லை’ என்று குரல் கம்மச் சொன்னார். அவரிடமிருந்து ஐந்தாறு பகுதிகளாக வாட்ஸப் வழியே கட்டுரையைப் பெற்றுத் தொகுத்தது ஒரு சுவாரசியமான அனுபவம். அந்தக் கட்டுரை இ.பா புதுச்சேரியில் உருவாக்கி வளர்த்த நிகழ்கலைத் துறையை விவரிக்கிறது. பாவண்ணனின் கட்டுரை இராமாயணத்தின் மாரீசனைப் படிமமாக்கிச் சமகால அரசியலைப் புனையும் ‘மாயமான் வேட்டை’ நாவலை முன்வைத்து இலட்சியவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் அலசுகிறது. புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளிகளை நெகிழ்த்தும் இந்திரா பார்த்தசாரதியின் திறமையை ‘கிருஷ்ணா கிருஷ்ணா’-வை முன்வைத்து விவரிக்கிறார் எம்.ஏ. சுசீலா.
இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் திருப்பூர் கிருஷ்ணன். அவருடைய கட்டுரை இ.பா நாடகங்களின் பொது அம்சங்களைப் பேசுகிறது. அழகியசிங்கர் தானறிந்த இ.பாவைப்பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். இன்றைய சமூகத்தில் காதல், குடும்ப உறவுகள், சிதைந்த கனவுகள் இவை எவற்றையும்விட, நம் அரசியலமைப்பின் தாக்கங்கள் வலிமையானவை என்று சொல்லும் மாலன், தமிழ் இலக்கிய உலகின் எழுதப்படாத ஆச்சாரமான ‘அரசியல் தவிர்’ என்ற விதியை உடைத்த முதல் படைப்பாளியாக இ.பா-வை அடையாளம் காட்டுகிறார். இன்றைய இ.பா-வின் அறச்சீற்றம் ஆறிப்போனாலும் அற்றவில்லை எனச் சொல்கிறார்.
இந்தச் சிறப்பிதழுக்கு இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் பங்களிப்பு மெருகூட்டுகிறது. இலக்கியம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், நாடகம், எனப் பரந்துபட்ட விஷயங்கள் குறித்த இ.பாவின் சிந்தனைகளை அவர் கட்டுரைகளை முன்வைத்து சுனில் கிருஷ்ணன் விவரிக்கின்றார். அதைப்போல தத்துவ, உளவியல், வரலாற்று முரண்களின் சந்திப்புப் புள்ளியாக இ.பாவின் நாடக உலகை நிறுவுகிறார், ஆர். காளிப்ரஸாத். இந்த முரண்களைக் குறித்து நம்மைத் தீவிர உரையாடலுக்கு அழைக்கும் இ.பாவின் நாடகங்கள் தமிழ் மேடைகளில் அதிகம் இடம்பெறவில்லை என்ற அவர் வருத்தம் என்னுடையதும்கூட. இ.பாவின் ‘தமிழ் இலக்கியத்தில் வைணவம்’ நூலை முன்வைத்து, கிரிதரன் ராஜகோபாலன் வைணவத்தில் மெய்ப்பாடு, அறவியல், அழகியல் ஆகிய முப்பகுதிக் கூறுகளின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து ஆழமாக விவாதிக்கிறார். ‘ஒரு கப் காபி’ சிறுகதையிலிருந்து தொடங்கி சமூகம், மனிதநேயம் குறித்த சிந்தனைகளுக்கு இட்டுச்சென்ற தன் இ.பா வாசிப்பைப் பற்றி சுபா காரைக்குடி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
இபாவின் நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த சி.டி. இந்திரா, தி. ஶ்ரீராமன், ஆர். ராஜகோபாலன் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. தனித்தனியே தொடர்புகொண்டபோது அவர்கள் முவரும் இ.பாவுக்கு சாகித்ய அகாடமியின் நல்கை வழங்கப்பட்டபோது அகில இந்திய வானொலியில் மூவரும் ஒன்றிணைந்து வழங்கிய நிகழ்வின் ஒலிப்பதிவை வெளியிடலாம் என்று சொன்னார்கள். கூடுதலாக, அந்நிகழ்வில் இ.பாவும் தனக்கு அளிக்கப்பட்ட நல்கை குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார். அதன் ஒலிக்கோப்பை நான் உரைவடிவமாக்கிக் கொடுக்க, அவர்கள் அதைச் செழுமைப்படுத்தித் தந்தார்கள். வானொலிக்காக அந்நிகழ்வை ஒழுங்கமைத்து நடத்திய அருணண் இதை வெளியிடும் உரிமையையும் ஏற்பாடு செய்து தந்தார்.
இந்திரா பார்த்தசாரதியின் போலந்து நாட்கள் மிகவும் முக்கியமானவை. அரசாங்க அடக்குமுறைகளையும் அவற்றை எதிர்த்தெழுந்த வெகுஜனப் புரட்சியையும் அவர் நேரில் கண்டிருக்கிறார். ஜெர்மானிய நாஸிகளின் அழிப்பிலிருந்து தேவாலயங்களை கம்யூனிஸ அரசு மீளுருவாக்கம் செய்த முரண் அவருக்கு ‘ஏசுவின் தோழர்கள்’ நாவலுக்கான கருவையும் களத்தையும் தந்தது. அவருடைய போலந்துத் தொடர்பை இந்தச் சிறப்பிதழில் பிரதிபலிக்க வேண்டி வார்ஸா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யாட்ஸெக் வொஸ்னியாக் (Jacek Woźniak) அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர் சிறப்பிதழ் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். இ.பா வார்ஸா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் அவர் அன்புடனும் மரியாதையுடனும் அங்கே நினைவில் கொள்ளப்படுவதாகச் சொன்னார். வொஸ்னியாக்கின் அனுமதியுடன் அவருடைய ‘The Past as an Exponent of the Present in Modern Tamil Literature’ ஆய்வுக்கட்டுரை இந்தச் சிறப்பிதழில் வெளியாகிறது. இந்திரா பார்த்தசாரதியின் ‘The Rama Story as Embellished by Kamban’ எனும் கல்விப்புல ஆய்வுக்கட்டுரையை கனடா வி. வெங்கட் பிரசாத் ‘கம்பனின் கவித் தீண்டலில் இராம காதை’ என்ற தலைப்பில் இந்தச் சிறப்பிதழுக்காக மொழிபெயர்த்திருக்கிறார்.
பாஸ்டன் பாலா 2005-ஆம் ஆண்டு இ.பா அமெரிக்கா வந்திருந்தபோது தமிழோவியம் தளத்திற்காக அவருடன் ஒரு நேர்காணலைப் பதிவு செய்தார். இணையத்தில் காணாமல்போன அந்த நேர்முகம், இச்சிறப்பிதழில் மீள்பதிப்பு பெறுகிறது. அகாலமாகத் தன் நாற்பத்தைந்தாவது வயதிலேயே இறந்துபோன ஆதவன் இந்திரா பார்த்தசாரதியின் மாணவர். ஆதவனின் மறைவுக்குப் பின், இ.பா நேஷனல் புக் டிரஸ்ட்க்காக அவருடைய சிறுகதைகளைத் தொகுத்தார். அந்தத் தொகுப்பிற்கு இ.பா எழுதிய முன்னுரை அவர் மாணவரின் படைப்புலகுக்கு அற்புதமான திறப்பைத் தருகிறது. இ.பாவின் தில்லி நாட்களில் சுஜாதா அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தார். தமிழ் எழுத்து நடையைச் செழுமைப்படுத்திய சுஜாதா, தன் நண்பரின் மொழித்திறனை ‘என்றுமுள தமிழும் இன்றுள்ள தமிழும்’ நூலறிமுகத்தில் விமர்சிக்கிறார்.
சிறப்பிதழுக்காக நிழற்படங்களைத் தந்து உதவிய பத்மா பார்த்தசாரதி, ரவி சுப்பிரமணியன், தளவாய் சுந்தரம், அம்பை, பாலேந்திரா ஆகியோருக்கு எங்கள் நன்றிகள். இதழுக்கான முகப்போவியம் வேண்டி ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவை அணுகினேன்; ஏற்கனவே வரைந்த ஓவியம் தயாராக இருக்கிறது என்று மறுநாளே அனுப்பிவைத்தார், நன்றிகள்!
கல்விப்புலத்தில், மேதைகளின் வாழ்காலத்தில் அவர்கள் சாதனைகளைப் பிரதிபலிக்கும் Festschrift எனும் கட்டுரைத் தொகுப்பை வெளியிடுவார்கள். இந்தச் சிறப்பிதழை அதுபோன்ற சாதனைக் கொண்ட்டாட்டமாக வெளியிடுவதில் சொல்வனம் பதிப்புக்குழு உவகை கொள்கிறது.

பிறந்தநாள் நல்வாழ்த்துகள், இ.பா.
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.


இ. பா. சிறப்பு மலர் பற்றிய அருமையான முன்னோட்டம்!
சொல்வனம் ஒரு தமிழ் இலக்கிய மலர்வனம்! மனம் கவர் வனம்!