றெக்கை அத்தியாயம்   16

This entry is part 15 of 19 in the series றெக்கை

டோபு வீட்டுக்குச் செல்லும் தெரு முனையிலிருந்து பாதை வெளிச்சமிட்டு இருந்தது.   பட்டாசு வெடித்துக்  கொண்டிருக்கும் ஒலி    வீட்டை இனம் காட்டி இருக்க, பூ வாணங்கள் கந்தகப்பூ நெடி பரப்பின. 

வெடி வழிபாடோ அதற்கு இணையான வேறேதோ பண்டிகையோ சமீபத்தில்  கொண்டாடி முடிக்கப் பட்டிருக்கலாம் .பட்டாசும் மத்தாப்பும் மிச்ச சொச்சம் எல்லாம் ஜம்பமாக அரங்கேறும் வேளை. அடுத்த   வெடி வழிபாடு கொண்டாட இன்னும் கிட்டத்தட்ட ஒரு கர்ப்பகாலம் பொறுத்திருக்க வேண்டும்.

மலையாள பூமியில் வெடி வழிபாடு வருஷம் முழுக்க நடக்கும் நேர்த்திக் கடன். இங்கே அதை கொண்டு வந்தவர்கள் கால அளவை சுருக்கி விட்டார்கள். காசுக்கு என்ன குறைச்சல், பட்டாசு தட்டுப்பாடே காரணமாக இருக்கும் என்று நிர்மலாவுக்கு தோன்றியது. 

வெடிக்கணக்கில் வராது, கல்யாணச் சாவு. எனில் கிட்டத்தட்ட எழுபது, எண்பது வயது பூர்த்தியாகி வாழ்க்கையில் எல்லா சுகமும் அனுபவித்து போய்ச் சேர்ந்த விடைபெறுதல். நூறு வயது முடித்திருந்தால் அதற்கான காவல் தேவதைகள் பாடிக்கொண்டே வந்து கொண்டு போகும்   

சமயமாம் ரதத்தில் ஞான்

ஸ்வர்க்க யாத்ரை செய்யுன்னு

 எண்பது வயதுக்கு மேல் விண் ஏகினோரைப் பையப் பதனமாக அழைத்துப் போக மலையாளமோ தமிழோ பேசும் தேவதைகள் ரதத்தைக் கொண்டு வருவார்கள். ஏறி அமர்ந்து பாடிக்கொண்டே போகலாம்;

சமயமாம் ரதத்தில் ஞான்

ஸ்வர்க்க யாத்ரை செய்யுன்னு

கூடி இருந்து குலவையிட்டு கல்யாணம் போல் கொண்டாடும் மகிழ்ச்சிகரமான இந்த கல்யாணச்சாவு வெடி வெடித்து இன்பம்  அனுபவிக்கப் படும். எனில் வெடிக்    கணக்கில் வராது, கல்யாணச்சாவு . 

தோபோ வீட்டு வாசல் திண்ணை ஒரு சாயலுக்கு கேரளத்திலோ தமிழ் பிரதேசத்திலோ இருப்பது போல் சிறு மேடையாக வாசல் கதவுகளுக்கு இரு வசமும் உள்நோக்கி திறக்கும் ஜன்னல்களோடு அமைந்திருந்தது. ஜன்னல்களைக் கடந்து நிர்மலாவின் கார் போகும்போது இடித்துப் பிடித்துக்கொண்டு தலைகள் காரோட்டும் பெண்மணியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

நிம்மி கைகாட்டு இங்கே பார்

 அவசரமாக பரிச்சயத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அவசரமாக கையாட்டியபடி வேறே யார், பெஞ்சிதான். வாசலில் அமர்ந்து வெற்றிலை மேய்ந்து கொண்டிருந்த வயதான ஜோடி வெற்றிலை இடிப்பதை நிறுத்த, அதில் கிழவர்    சத்தம் போட்டார் –  கொல்லன் வீட்டுக்காரி, டாக்டரம்மா வண்டி ஓட்டி வந்துட்டிருக்காங்க. கவனம் சிதறிச்சுன்னா அவக மட்டுமில்லே  

நிர்மலா காரை ஓரமாக நிறுத்திவிட்டு திண்ணையில் படி ஏறினாள். சேர்ந்திருந்த பெண் கூட்டத்தில் இருந்து ஒரு மெல்லிய குரல் -தாத்தா, பஞ்சகாலத்துலே கார் இருந்துச்சா.

இதற்குக் காத்திருந்த மாதிரி இல்லாமே என்ன அரசூர் மகாராஜா கார் வச்சிருந்தார் என்று பக்கத்தில் வைத்திருந்த ஜாடியில் இருந்து தாராளமாக நாசீகா சூர்ணம் என்று எழுதியிருந்த மூக்குத் தூளை எடுத்து ஒரு சிமிட்டா உறிஞ்சு விட்டு மீசையை நீவிக்கொண்டு சிரித்தார்.

நீங்க மட்டும் புகையிலைப் பொடியை உறிஞ்சினா போதுமா? பக்கத்தில் இருந்த கிழவி பொடி ஜாடியை அவசரமாக எடுக்க அது கிட்டத்தட்ட கவிழ்ந்து எங்கணும் பொடியின் கந்தத்தைப் பரப்பியது.

அரசூர் ஜமீன்? தாத்தா சரியாத்தான் கேட்டேனா?

நிர்மலா பரபரப்போடு பொடிக்கார மூத்தோரைக் கேட்டாள்.அரசூர் வயோதிகர்களும் வியாதிஸ்தரும் அவள் அறியாமலேயே அவளது குட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார்களா? எனில் யாவர்?

டாக்டரம்மா வாங்க வாங்க. குட்டி டாக்டருங்களா வாங்க. வளநாடு வரவேற்பு இதுவரை இப்படியான இதமாகத் தானிருக்கிறது.

நிம்மி வீட்டுக்கு போய் மூத்திரம் போய்ட்டு வந்தியா? எதுக்கு அதெல்லாம். காரை நிக்க வச்சுட்டு அந்தப் பக்கம் குந்தினா போதுமே

ரூத் முகத்தைச் சுளித்தாள். பெஞ்சி இதென்ன டாக்டருக்கு மரியாதை சொல்லி விருந்து பண்ண வந்திருக்கோம். நீ பாட்டுக்கு ஏதோ சொல்றே

பெஞ்சி நிர்மலா தோளில் கைவைத்து உரிமை கொண்டாடினாள். நிர்மலா ரகசியம் பேசுகிற குரலில் பெஞ்சி காதில் சொன்னாள் – தடிச்சி, சகிக்கலே, நீ அஸ்லீல வார்த்தை சொன்னால் இறங்கி போயிடுவேன் பார்த்துக்கோ. கேட்டியா?

அம்மாடி உனக்கு ஆச்சு, முலைச்சிக்கு ஆச்சு நான் வாயே திறக்கலே 

 பெஞ்சி ரூத்தை ஒரு வினாடி கழுத்துக்கு கீழே ஸ்பர்சித்து விலகினாள். நிர்மலாவுக்கு பெஞ்சி பேசியது ஆபாசமாகத் தெரியவில்லை. குழந்தைகள் முன் அதையெல்லாம் வாரி விட்டது தான் சகிக்கவில்லை.

 பஞ்ச காலத்துலே கார் இருந்துச்சா தாத்தா? 

சன்னமான குரல் வாய்த்த பெண் மறுபடியும் தாத்தாவை சீண்டினாள். 

யாரு அவங்க? 

நிர்மலா கையில் கொண்டு வந்திருந்த போர்ச்சுகல் சாக்லெட்டை ரூத்திடம் கொடுத்தபடி கேட்டாள். 

டாக்டரம்மா அது என் மாமனாரும் மாமியாரும்.

ஆமா பஞ்சகாலத்திலே எப்படியோ எதையோ பண்ணி ரெண்டு ஆளுங்க வண்டி ஓட்டிக்கிட்டு ஜமீந்தாருக்கு கெட்ட சமாசாரத்துக்கு உருப்படி கொண்டு வருவாங்க.

 கிழவி  கூட்டத்தை உத்தேசமாகப் பார்த்து சொன்னாள்.

அப்படியெல்லாம் ஜமீந்தாரை சொன்னா வெத்தலை போட முடியாதபடி நாக்கு அழகிடும். அவர் நாட்பட்ட பிரம்மசாரி. 

தாத்தா உள்ளே பார்த்து பாயசம் ரெடியா என்று கேட்டபடி சொன்னார்.

ஆமா, பிரம்மசாரி. சேடிப் பொண்ணா அரண்மனையிலே எங்க பாட்டி தானே இருந்தா, அவளுக்கு தினசரி மடியிலே போட்டுக்கிட்டு கால் பிடிச்சு விட்டு கால் ரூபா காசும் தருவார். 

கிழவி பெருமையோடு சொன்னாள். பசங்க கேட்க தகுதி உள்ள சம்சாரம் இல்லே இதெல்லாம். பசங்களைக் கேட்டு வீடு திரும்பலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தாள். திரும்பினாள் இரண்டு பேருமே இல்லை.

ஐயோ, ரெண்டும் தனியா வீடு திரும்பி பசியோடு உறங்கிடுமே. விசிக்கு  பயம் ஏற்படுத்துகிற மாதிரி ஏதாவது.

ஒண்ணும் கவலைப்படாதே நிம்மி. பசங்களுக்கு என் பசங்களோட உக்கார வச்சு   சோறு  கொடுத்துட்டு வர்றேன். யாம் கருணைக் கிழங்கு ஃபோ ஃபோவும் தான். யாம்  கெட்டி சூப். விசிக்கு ரொம்ப பிடிச்சது. யாமிருக்க பயமேன்

அடி தடிச்சி? உனக்கு நான் என்ன பதில் மரியாதை செய்ய? நிர்மலா கண் நிறைந்தது. குண்டம்மா உனக்கு ஓட்டை வாய் ஆனா தங்கமான மனசு

ரொம்ப நல்லது. அவளை இழுத்துப் போய் உள்ளறை பாதி இருட்டில் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். ஒரு வினாடி தயங்கி நிர்மலா பதிலுக்கு அவளோடு இதழ் கலந்தாள். கைகள் பதற்றத்தில் இருக்க வெளியேற ரூத் அடுத்த அறையிலிருந்து வெளியே வந்தவள் எல்லாம் அறிந்த புன்னகையோடு தலையசைத்து சொன்னாள் – 

டாக்டரம்மா டின்னர் ரெடி. இன்னும் பத்து நிமிசத்திலே உங்க ஊர் பாயசம் காயுது. அது வரைக்கும் உங்க சௌகரியம் போல.

 வாக்கியத்தை அந்தரத்தில் தொங்க விட்டு பெஞ்சியை குறுஞ்சிரிப்போடு நோக்கி நடந்தாள்.

நிர்மலாவுக்கு அவமானமாக இருந்தது. அடுத்த வினாடி அது மாறியது. அன்பை சொல்ல பெஞ்சிக்கு அப்படித்தான் தெரியும். அவள் மொழியில் பிரியம் செப்ப ஒரு முழு ஜீவிதத்தில் ஒரு நிமிடம் மட்டும் தந்தாலென்ன

 சாவகாசமா பாயாசம் சாப்பிட்டு எனக்கும் வாங்கிட்டு வா. நான் வீட்டுக்குப்  போய் பசங்களை கவனிச்சுக்கறேன், அதுங்களுக்கு றெக்கை உதிர்ந்துதுன்னா கலந்து கொடுக்க வேண்டிய மருந்து எனக்குத் தெரியும். நீ கொடுக்கும் போதெல்லாம் பார்த்திருக்கேன்.

நிம்மி அவளை நோக்கி கைகூப்பினாள். பெஞ்சி வேகமாக வெளியே போனாள்.

தாத்தா ஊட்டுபுரைன்னா என்ன ? காத்திரமான குரலில் யாரோ தோபுவின் தகப்பனிடம் கேட்டார்கள் தாத்தா எழுந்திருந்தார். என்னவோ சொன்னார் – 

பின் சீட்டில் விளையாட்டுக்காக பசங்க வாய் முழுக்க வார்த்தை அடக்காமல் ஆப்பிரிக்க நாவுக்கு ருசியான  பதார்த்தங்களின் பெயர்களை அவசரமாக கட்டடம் கட்டி முடிச்சதும் கோவில் பிரகாரத்தில் இந்தியாவின் அரசாங்கத் தலைவர் கூறிய நல்ல வரிகளைச் சொல்லுங்கள 

அவர் கையில் பிராந்தி பாட்டில் வைத்திருந்தார். 

ஊட்டுபுரயிலே பிராந்தியா செருப்பாலே அடிப்பேன். ஊட்டுபொரன்னா என்ன தெரியுமா? தினம் நூல்காரங்களை உக்கார வச்சு சோறும்  சாம்பாரும் ஊட்டற இடம். அரண்மனைக்குள்ளே இருக்கும் இல்லை கோவில்லே இருக்கும்.  பஞ்சகாலத்திலே ராஜா, ஜமிந்தார்  மூணு வேளை சோறு உண்ண முடியாது இதிலே நூல் காரருக்கு சோறு  கொடுக்க எங்கே முடியுது. 

பாயசம் ரெடி, 

ரூத்  பரபரப்பாக நிர்மலாவைத் தேடினாள். வாசலை அடைத்து நின்ற ஸோம்பி அவளைத் தள்ளிவிட்டு உள்ளே வந்து கொண்டிருந்தான். இருந்தார்.

(தொடரும்)

றெக்கை

றெக்கை – அத்தியாயம் 15 றெக்கை அத்தியாயம் 14

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.