தெய்வநல்லூர் கதைகள்- 33

This entry is part 33 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

நண்பர்களே! இந்த கதைகளில் வெவ்வேறு இடங்களில் விதி விளையாடியது என்ற ஆகிவந்த சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதை விட பொருத்தமான சொற்கள் வேறெதுவும் கிடையாது என்பதையும், நிகழ்வுகளின் நிகழ்தகவுகளில் மனித உயிரினம் எவ்வளவு நொய்மையானது என்பதையும் நடந்தவற்றை இனி சொல்லச் சொல்ல நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.   

வெறித்து அமர்ந்திருந்த பிரேம் மனதில் தான் அவசியமின்றி அநியாயமாக ஒவ்வொரு முறையும்  பழி வாங்கப்படுவதாக தோன்றிய எண்ணம் வலுப்பட்டுக் கொண்டே வந்தது. பழி வாங்கப்படும் அளவிற்கு தான் எதுவும் செய்து விடவில்லை எனவும் தோன்றியது. ஆனால் தொடர்ந்து அசிங்கப்படுத்தப்படுவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வகுப்பிற்குள் அவமதிப்பை ஏற்றுக் கொண்டிருந்தால் இவ்வளவு தூரம் விஷயம் வெளியே போயிருக்காது என தோன்றிய நொடியில் எம் எஸ் சி சார் மேல் பிரேம் புள்ளி வைத்தார். என்ன செய்வது என தெரியாமல் இருந்த பிரேம் கண்ணில்தான் அக்காட்சி பட்டது.(யு நோ, அதைப் பாக்கறவரைக்குமே என் மனசுல அவர் மேல அப்படி ஒரு வெஞ்சன்ஸ் இருந்துருக்குன்னு எனக்கே தெரியல. ஐ வாஸ் கெட்டிங் கேரீட் அவே – பின்னாளில் ஒருமுறை பிரேம்). 

 ஆசிரியப் பயிற்சி ஆசிரியர்களின் ஓய்வறையிலிருந்து ராமமூர்த்தி சார் வெளியேறுவதும் எம் எஸ் சி சார் மட்டும் தனித்திருப்பதும் தெரிந்தது. அதீத பதட்டத்துடன் அடுத்த வகுப்பறையிலிருந்து செல்வியக்காக்கள் துள்ளி ஓடி ஓய்வறைக்குள் நுழைந்த வேகத்தில் “ஏதோ” சரியாக இல்லை என யூகித்த பிரேம் ஒற்றை விரலைக் காட்டி வெளியே பாய்ந்து சென்று ஓய்வறை ஓட்டுக் கட்டிடத்தைச் சுற்றிக் கொண்டு சென்று ஜன்னலை ஒட்டி காலில் குத்திய முள்ளை எடுப்பது போல குனிந்து உள்ளே பேசப்படுவதை கேட்டார். தம் இருவரையும் எம் எஸ் சி சார் தவிர்ப்பது ஏன் என இரு அக்காக்களும் கேட்க,  அதற்கு பதிலாக விளையாட்டாக தான் பேசியதையெல்லாம் இவ்வளவு தூரம் வினையாக கொண்டு வருவதற்கு தான் காரணமல்ல எனவும் இருவரும் இப்படி வந்து ஒருவரைக் கேட்க பயின்று வந்த பெண்மையின் சிறப்புகளைத் துறந்து விட்டனரா எனவும் சார் கேட்பது அரைகுறையாக பிரேம் காதில் விழுந்தது. கலையக்கா குரல் சற்று உயர்ந்ததால் பிரேமுக்கு கேட்டது. கூப்பிட்டு கூப்பிட்டு வைத்து பேசும்போதும் சினிமாக்கள் பார்க்க அழைத்துச் சென்றபோதும் எங்கள் பெண்மையின் சிறப்புகளை நீங்கள் அறியவில்லையா எனக் கேட்க தமிழக்கா அழுகையினூடாக நகை, பணம் என ஏதோ கேட்பது மெல்லிய குரல் காரணமாக பிரேமுக்கு கேட்கவில்லை. அதற்குள் அடுத்த வகுப்பில் இருப்பவர்கள் தன்னை கவனிக்கும் வாய்ப்பு இருப்பதால் பிரேம் வகுப்புக்குத் திரும்பினார். அவர் திரும்பிய ஐந்து நிமிடங்களிலெல்லாம் ஓய்வறையிலிருந்து எம் எஸ் சி சார் தவளைப் பாய்ச்சலாக வெளியேறினார். அக்காக்கள் இருவரும் குனிந்த தலையுடன் வகுப்புக்கு திரும்பினர்.

இந்த சம்பவத்தை பிரேம் எங்களுக்குச் சொல்லும்போது காலம் கடந்திருந்தது. விபரீதங்கள் நடந்து விட்டிருந்தன. எம் எஸ் சி சார் மாட்டிக்கொள்ளப்போகும் விவகாரம் இது என உணர்ந்த பிரேமுக்கு இதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தானே யோசித்திருக்கிறார். ஆனால் ஏதாவது பிடி கிடைக்க வேண்டுமானால் இரு அக்காக்களையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டுமென திட்டமிட்டார். அதன்படி செல்வியக்காக்கள் பள்ளி நேரம், வீடு திரும்பும் நேரம் வரை பிரேமால்  கண்காணிக்கப்பட்டனர். தொடர்ந்து கண்காணித்த பிரேமுக்கு நீரின்றி வாடும் நாற்று போல அவர்கள் இருவரும் வதங்கி வருவது மட்டும் கவனத்துக்கு வரவேயில்லை.  ஆபாச ஓவிய நிகழ்வில் பிரேமுக்கு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆறுதல் சொன்னார்கள். சங்கீதாவை சந்திக்கவே முடியாமல் போனது குறித்து மிகவும் வருந்தினார்கள். ஆனால் பிரேம் ஏதோ ஒன்றால் இயக்கப்பட்டவர் போல ஆனார். அவரது விடாமுயற்சிக்கு (கெடு)பலன்  கிடைத்தது. 

அன்று மார்ச் 3 ஆம் தேதி. எங்களால் இன்றுவரை மறக்க இயலாத நாள். பிரேம் இன்றுவரை ஒவ்வோராண்டும் இந்தத் தேதியில் எதுவும் உண்ணாமல் விரதம் இருக்கிறார். அந்த மார்ச் 3 ஆம் தேதி காலை எங்கள் எல்லோருக்கும் ஒரே போல்தான் விடிந்தது. காலை பள்ளி ஆரம்பித்து சிறு இடைவேளை வரை எல்லாம் இயல்பாகவே இருந்தன. இடைவேளை முடியும்போது செல்வியக்காக்கள் சற்று பதுங்கலாக ஓட்டுக் கட்டிடத்தை நோக்கிப் போவதை கவனித்த பிரேம் பரபரப்படைந்தார். அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தவாறே வெளியே வருவதையும், உள்ளே நுழைகையில் கலையக்கா கையிலிருந்த குறிப்பேடு வெளியே வரும்போது இல்லாததையும் பிரேம் அவதானித்திருந்தார். ஓய்வறையில் யாரும் இல்லை என்பதையும் கவனித்த பிரேம், வகுப்பெடுக்க மீசை சார் வந்துகொண்டிருப்பதைப் பார்த்து தைரியம் பெற்றவராய் கையில் குறிப்பேட்டோடு வெளியே இறங்கிச் சென்று  வகுப்பறை வாயிலில் மீசை சாரை எதிர்கொண்டு வேல்முருகன் சாரிடம் இந்த நோட்டைக் கொடுத்து விட்டு  வர அனுமதி வேண்டினார். மீசை சார் தலையசைத்து அனுமதித்தபடியே வகுப்புக்குள் நுழைய, வெளியே பாய்ந்தோடும் பிரேமை சிவாஜியும், நானும் குழப்பமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். அடுத்த இரு நிமிடங்களில் இரு குறிப்பேடுகளுடன் பிரேம் தன் இடம் வந்து அமர்ந்தார். 

 அந்த இன்னொரு குறிப்பேடு கலையக்காவுடையது. பிரேம் மிக இயல்பாக டெஸ்க்கின் உள்ளே வைத்து அக்குறிப்பேட்டை சோதித்தார். அவர் எதிர்பார்த்தது போலவே நான்காக மடிக்கப்பட்ட இரு பக்க கடிதம் ஒன்று குறிப்பேட்டின் உள்ளட்டைக்குள் இருந்தது. இன்னும் இயல்பாக அக்கடிதத்தை எடுத்த பிரேம் தன் புத்தகத்திற்குள் செருகி, விரித்து  பாடத்தை புத்தகத்தில் கவனிப்பதுபோல  அக்கடிதத்தை படிக்க ஆரம்பித்தார். இவை அனைத்துமே பிரேம் சொல்லி நாங்கள் தெரிந்து கொண்டவை. நாங்கள் அக்கடிதத்தை பார்க்கவே இல்லை. இவற்றை பிரேம் செய்ததை எங்களால் அப்போது கண்டு பிடிக்க முடியவில்லை. பிறர் கடிதத்தை வாசிப்பது நாகரீகம் அல்ல என்றாலும் அதன் உள்ளடக்கத்தை சொல்லாமல் (பிரேம் சொல்லியபடி) சம்பவங்களை விளக்குவது சாத்தியமல்ல என்பதால்…..

அன்பும், பாசமும் நிறைந்த போன்ற தொடக்க முகமன்கள் நமக்கு முக்கியமல்ல என்பதால் நேரே உள்ளடக்கத்திற்கு போகலாம். மிக கிராமப்புறத்திலிருந்து நல்ல வாழ்க்கைக்கு ஏங்கியிருந்த எங்களுக்கு உங்களைப் போன்ற நவநாகரிக இளைஞர் கிடைத்ததை நாங்கள் பெருமையாக எண்ணியிருந்தோம். நீங்கள் பிறரை விட எங்களிடம் கூடுதலாகப் பழகுவதில் மகிழ்ந்திருந்தோம். எங்கள் மதிய உணவுகளை நீங்கள் பகிர்ந்து கொண்டபோது நாங்கள் எங்கள் கனவுகள் நிறைவேறும் என்ற மகிழ்வில் இருந்தோம் என்றெல்லாம் தொடக்க கால நட்பு உருவாகி வந்ததைக் குறிப்பிட்ட கடிதத்தில் அடுத்த கட்ட உறவு பலப்பட்டதும் எழுதப்பட்டிருந்தது. வார நாட்களில் பிற பள்ளிகளில் அஸைன்மெண்ட்  என்ற பெயரில் கிளம்பி வந்த இருவரையும் சற்று தள்ளியிருந்த வெளியூர்களில் (ராஜபாளையம், தென்காசி) சினிமாவுக்கு அழைத்துச் சென்றது, பூ வாங்கிக் கொடுத்தது, வளையல், கம்மல் போன்ற அணிகலன் வாங்கிக் கொடுத்தது போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தன. தனியே பயிற்சி மையம் ஆரம்பித்ததும் தமிழுடன் நெருக்கம் காட்டியதால் சற்று கோபமடைந்தாலும் இருவரில் ஒருவருக்காவது அதிர்ஷ்டம் அமையட்டும் என தாங்கள் சமாதானமாகி விட்டதாகவும் கடிதத்தில் இருந்தது.  முன்பொருமுறை மனைவியாக எதிர்பார்க்கும் பெண் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் எனக் கேட்டதற்கு கலையக்கா போல அழகும், துடிப்பும் தமிழக்கா போல அமைதியும், பணிவும் கலந்த பெண்ணையே தான் விரும்புவதாக நீங்கள் கூறினீர்கள், அப்போது எங்கள் இருவரில் யாரை மனைவியாக தேர்வு செய்வீர்கள் எனக் கேட்டபோது இருவரும் ஒப்புக்கொண்டால் இருவரையுமே மணந்து கொள்ள தயாராக இருக்கிறேன் எனச் சொன்னீர்கள். அன்றிலிருந்து தமிழக்கா தன் பெற்றோருக்குத் தெரியாமல் உங்கள் ஆடைகளைத் துவைத்துப் போட்டு வந்ததையும், நீங்கள் உணவுண்ட பாத்திரங்களைக் கழுவி வைத்ததையும்  நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்றெல்லாம் நினைவூட்டல்கள் அக்கடிதத்தில் இருந்தன. வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனதைக் கூட இருவரும் மன்னிக்கத் தயாராக இருந்ததாகவும் ஆனால் முன்பே தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருத்தி இருப்பதை மறைத்து தங்களுடன் பழகி வந்ததை தங்களால் துரோகம் என்றே நினைக்க முடிவதாகவும் தங்கள் அன்பு உதாசீனப்படுத்தப்பட்டதாகவும்  குமுறல்கள் கடிதத்தில் இருந்தன.  கடைசியாக தங்களை கடந்த சில நாட்களாகத் தவிர்த்து வந்ததற்கான காரணத்தைக் கேட்டபோது பெண்மையின் நற்குணங்கள் இல்லாமல் பேசக்கூடாது என தாம் விமரிசிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட கடிதத்தில் , தம் தரப்பை மேலும் விளக்கும் அவகாசத்தைக் கூட கொடுக்காமல் தம்மை உதாசீனம் செய்யும் பாங்கில் அன்னாரின் போக்கு இருப்பதை தங்களால் தாங்க இயலவில்லை எனக் குறிப்பிட்டு பெண்மையின் சிறப்புக்கு பங்கம் ஏற்படாதவகையில், கற்பு நெறி மாறாத வகையில் நடந்து கொள்ளப்போவதாக தாம்  இருவரும் முடிவெடுத்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது. நீங்கள் எல்லா நலத்துடனும், வளத்துடனும் நீடூழி வாழ வேண்டும் எனவும் தாம் இருவரும் எங்கிருந்தாலும் அன்னாரையே நினைத்துக் கொண்டிருப்போம் எனவும் எழுதி முடிக்கப்பட்டிருந்த அக்கடிதத்தில் இரு செல்வியக்காக்களும் கையெழுத்திட்டிருந்தனர்.   இருவரும் மாறி மாறி அக்கடிதத்தை எழுதியிருந்தது கையெழுத்து மூலம் தெரிந்தது. ஆனால் வியப்பான விஷயமாக எங்குமே அந்த அன்னார் யாரென பெயர், ஊர் குறிப்பிடப்படவில்லை. யாரென்ற யூகமும் கடினமாக இல்லைதான். 

மதிய உணவு இடைவேளை நெருங்கும்போது பிரேம் முகத்தில் ஒரு விபரீத ஒளி பிறந்தது.  மதிய உணவு இடைவேளை ஆரம்பிக்கையில் என்னை அழைத்து பிரேம் கலையக்காவின் குறிப்பேட்டை என்னிடம் கொடுத்து அதை ஆசிரியர் ஓய்வறையில் ஜெயராஜ் சார் மேஜையில் யாரும் அறியாவண்ணம் வைத்து விட்டு வரும்படி சொன்னார். காரணமின்றி எதையும் பிரேம் சொல்லமாட்டார் என்பதால்(ஜெயராஜ் சார்தான் மகமைச் சங்கத்தின் கெளரவ ஆலோசகர்) சிவாஜியிடம் கூட கலந்து கொள்ளாமல் நான் சென்று அக்குறிப்பேட்டை ஜெயராஜ்  சாரின் மூக்குக்கண்ணாடிப் பேழைக்கு கீழே வைத்தேன். அறிவியல் ஆசிரியர் சண்முகசுந்தரம் சார் மட்டும் பனியனுடன் உறங்கிக் கொண்டிருக்க பிற ஆசிரியர்கள் உணவுக்காகப் போயிருந்தனர். 

விதியின் விளையாட்டு என்பதை உணர வேண்டிய இடம் இதற்குப்  பின்னரே ஆரம்பித்தது. காலை சிறு இடைவேளையிலிருந்து செல்வியக்காக்கள் வகுப்பில் இல்லை. பெண்களுக்கே உரிய சிக்கலால் அருகிலேயே இருக்கும் தமிழக்கா வீட்டிற்கு இருவரும் அவ்வப்போது போய் வருவது வழக்கம். அவ்வாறு அவர்கள் வகுப்பிலுள்ளோர் நினைத்துக் கொண்டிருக்க மதிய உணவு இடைவேளை முடிந்து வகுப்புகள் தொடங்கும்போதும் அவர்கள் இல்லை என்பது நெருடலாக ஆனது. ஏறக்குறைய அதே நேரம் தமிழக்காவின் அம்மா கையில் ஒரு செம்புத் தண்ணீருடன் வீட்டின் “தெருவாசலுக்கு” வந்து சந்தின் இருபுறமும் பார்த்துக் கொண்டிருந்தார். இவர்கள் வீட்டிற்கு கறிவேப்பிலை பறிக்க வந்த மயிலம் பிள்ளை மனைவி அண்ணனை  எதிர்பார்த்து இப்படி காத்திருக்கிறீர்களா எனக்கேட்டு எங்கண்ணன் சிக்கனம்பிள்ளை இந்த விஷயத்துல கோடீசுவரந்தான் போங்க என கண்ணடித்து கேலி பேசி தமிழம்மாவை முகம் சிவக்க வைத்தார்.  “சும்மாருங்க மதினி, ஓங்கண்ணனுக்கு வாக்கப்பட்டு அந்தாக்ல…சோலியல்லாம் முடிஞ்சுதே இட்லிக்கு மாவாட்டுமுன்ன சித்த தலயச் சாய்ப்போம்னு படுத்தேன். அரவமேயில்லாம நடுவீட்டுல தமிழு வந்து நிக்கா. ஏட்டி, கதவத் தொறக்க சத்தம்கூட இல்லாம அரவங்காட்டாம வந்து நிக்கயே, என்ன தூரமாயிட்டயா , நாளாவல்லையே,  இப்ப வந்துருக்கயென்னு கேட்டா  என்னைய உத்து பாக்கா. இல்லம்மா, உன்கிட்ட சொல்லிக்கிடாம கெளம்பிட்டேம்லா, அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேம்னா. சரிட்டி, ஒரு வா தண்ணி குடிச்சிட்டு போட்டீன்னு உள்ள போயி தண்ணி மொண்டுட்டு இருக்கையிலயே வேணாம்மா, அங்கயே நெறய தண்ணின்னு சொன்னாமாரி இருந்துச்சு. எடுத்துட்டு வாரதுக்குள்ள ஆளக்காணம் மதினி. அதான் தெருவுல போறாளான்னு பாக்கையில நீங்க வந்தீக. “ மயிலம் பிள்ளை மனைவியும் ஆச்சரியப்பட்டார் – “நானு சந்துல நுழையவும்தான் நீங்க வெளில வாறீக. உங்க கண்ணுல படாட்டியும் எங்கண்ணுல பட்டுருக்கணுமே. என்னையத் தாண்டியும் போகலையே. லேட்டாயிருச்சுன்னு ஒரே ஓட்டமா ஓடிட்டா போல”.       

மதிய உணவு இடைவேளைக்கு அடுத்து மூன்றரை மணிக்கு சிறு இடைவேளை. இடைவேளை நெருங்கவும் ஆசிரியப் பயிற்சி வகுப்பில் குழப்பம் அதிகரித்தது. யாரிடமும் இருவரும் எதுவும் சொல்லிச் செல்லவில்லை என்பதையும் அவர்கள் இருவரின் புத்தகப் பைகள் அப்படியே இருப்பதையும் கண்ட ராமமூர்த்தி சார் பதட்டமானார்.  இடைவேளை விட்டதும் பிரேம், சிவாஜி , நான் மூவரும் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வறை அருகே சென்று நின்றோம். “இங்க எதுக்கு பிரேம் நிக்கோம்? – இருடா, நீ நோட்டை சார் டேபிள்ள வச்சிட்டல்ல.  என்ன நடக்குதுன்னு பாப்போம்”. ஆனால் நாங்கள் எதிர்பாராதது நடந்தது. இடைவேளை விட்டதும் ஆசிரியப்பயிற்சி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் அறைக்கு விரைந்தனர். சரியாக அதே நேரம் பெரிய கோவில் எதிரே செல்லும் இலங்குளம் சாலையின் வலக்கிளையாக பிரிந்து செல்லும் நெற்செவல் கிராமப் பாதையில் இலங்குளம் கரையிலிருந்து 250 மீட்டர் தொலைவில் இருக்கும் வயலின் உரிமையாளரான திருமால் கோனார் சைக்கிளில் பள்ளிக்குள் பாய்ந்து வந்தார். உள்ளூர் ஆட்கள் எவரும் பள்ளி வாயில் தாண்டி  சைக்கிள் ஓட்டி வருவதில்லை. இறங்கி உருட்டி வந்துதான் நிறுத்துவார்கள். ஆனால் கோனார் பதட்டமாகியிருப்பது அவர் சைக்கிளை ஸ்டாண்ட் கூட போடாமல் மரத்தில் சாத்தி விட்டு ஓடி வருவதில் தெரிந்தது. ப்யூன் காளிமுத்து அண்ணன் தான் சைக்கிள் நுழைவதைப் பார்த்து விட்டு விரைந்து வந்தார். நாங்கள் நிற்குமிடத்திலிருந்து பத்தடி தொலைவில் காளிமுத்து அண்ணன் கோனாரைப் பிடித்தார் – “ஐயா, என்னாச்சு? புள்ளைகள் நடமாடுத எடம். இப்டி சைக்கிள்ள பாஞ்சு வாறீகளே. என்ன அவசரம்?” கோனார் மூச்சு வாங்கக் கூட அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை – “எடே, எடே, காளி..” அவர் கைகள் நடுங்கின. காளிமுத்து இப்போது பதட்டமானார். “கோனாரண்ணே, என்ன ஆச்சு?” “யப்பா, நம்ம கெணத்துல…  நம்ம கெணத்துல…  ரெண்டு புள்ளைக முழுகிக் கெடக்குப்பா. எப்ப வுழுந்துச்சுகன்னு தெரியல. நம்ம பள்ளிக்கூட சேலைதான் உடுத்தியிருக்குக. யாரு என்னன்னு மட்டுப்படலப்பா. யாராச்சும் வந்து ஆளு இன்னாருன்னு பாருங்கடே”. காளிமுத்து கோனாரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்கு ஓடினார். நாங்கள் அதிர்ந்து நிற்க பிரேம் பாய்ந்து ஓட ஆரம்பிக்க நாங்களும் அவரைத் தொடர்ந்தோம்.        

திருமால் கோனார் வயல் இலங்குளக் கரைக்கும், Y வடிவில் வலப்பக்கம் பிரியும் நெற்செவல் கிராம சாலைக்கும் நடுவே இருப்பது. அவர் வயலில் குறுக்காக வடக்கே நடந்தால் இலங்குளக் கரையை அடையலாம். தெற்கே எல்லையாக வளைந்து செல்லும் சாலை. மாட்டுவண்டிப் பாதையாக இருந்த காலத்தில் திருமால் கோனாரின் தாத்தா வெங்கடரங்கக் கோனார் சாலையில் செல்லும் ஆட்களுக்கும், மாடுகளுக்கும் தாகம் தீர்க்கும் பொருட்டு சாலையை ஒட்டி தன் வயலில் கிணறு வெட்டினார். இன்றும் மாட்டுக்கு நீர் காட்டும் கல்தொட்டி, இரவை சால் மீதங்களைப் பார்க்கலாம். வண்டிப்பாதை தார்சாலையாக மாறவும் கிணற்றுக்கும் சாலைக்கும் நடுவே மரங்களை நட்டு வளர்த்து இடுப்புயர மண்சுவர் வைத்து தரைமட்டக் கிணற்றிலிருந்து பயணிகளை பாதுகாத்தார் திருமால் கோனார். தெய்வநல்லூர் பகுதியில் இலங்குளம்தான் வேளாண் நீர் ஆதாரம். அதன் கரையிலிருக்கும் வயல் கிணறுகள் ஊற்றுக் கிணறுகள். அதிகபட்சம் முப்பதடி ஆழம் உடையவை. தண்ணீர் ஊற்றெடுத்து பதினைந்தடி வரை கண்ணாடி போல மின்னிக் கிடக்கும். உள்ளே இருக்கும் மீன்களை மேலேயிருந்தே எண்ணி விடலாம். மின் மோட்டார்  வந்து நீரை இறைத்தாலும் நாலாபுறமும் இருந்து பாயும் ஊற்றுகளால் அடுத்த அரைமணி நேரத்தில் கிணற்றில் பதினைந்தடி நீர் நிரம்பிவிடும். 

நாங்கள் மூவரும் கோனார் கிணற்றை நெருங்கும்போதே சிறிய கூட்டம் அங்கு சேர்ந்திருந்தது. நாங்கள் கிணறை எட்டிப்பார்த்தபோது யாரும் தடுக்கவில்லை. எல்லோருமே உள்ளே பார்த்துக் கொண்டிருந்தனர். மிக லேசான பச்சையும், நீலமும் கலந்த பளிங்கு போன்ற நீர். அதில் தரையில் படுத்து உறங்குபவர்கள் போல ஒருவருக்கொருவர் நெருக்கிக்கொண்டு செல்வியக்காக்கள் கிணற்றின் தரையில் கிடந்தார்கள். இருவரும் குப்புறக் கிடந்தாலும் முகங்கள் மட்டும் பக்கவாட்டில் லேசாகத் திரும்பியிருந்தன. எவ்வித சலனமும் மேல்பரப்பு நீரில் இல்லையென்றாலும்  கீழே ஊற்று நீர் பாய்வது இரு அக்காக்களின் கூந்தல்கள் அலையலையாய் நெளிவதில் தெரிந்தது. அவ்வப்போது முதுகுச் சேலை மடிப்புகள் உப்பி தணிந்தன. பிரேம் அப்படியே மெல்ல பிளந்த வாயுடன் பின்னகர சிவாஜியும், நானும் அவரைத் தாங்கிப் பிடித்து பக்கவாட்டிலிருந்த மரத்தடிக்கு மறுபுறமாகப் போனோம். பிரேம் திகைத்தவராக அமர்ந்திருந்தார். அதே நேரம் பூசை சார் பைக்கில் எம் ஏ என் சாருடன் வந்திறங்கினார். அடுத்து கோனாருடன் சைக்கிளில்  வந்திறங்கினார் ராமமூர்த்தி சார். கிணறை எட்டிப் பார்த்ததும் சால் மேடையிலேயே தலையில் கை வைத்து அமர்ந்த ராமமூர்த்தி சார் மெல்லிய குரலில் “ அந்தப் பொண்ணுகதான் சார்” என்றார். எம் ஏ என் சார் பூசையிடம் “தலமுடில்லாம் அசையுதேடே. தண்ணில உசுர் போனா  ஒடம்பு மெதக்கல்லாடே செய்யும். வெளிய தூக்கி முதுக அமுக்கி தண்ணிய கக்க வச்சிட்டா பொழக்க வச்சிரலாமில்ல? “. பூசை சார் பதிலளிக்குமுன் களை பறிக்க வந்த பெண் “சார்வாள், தண்ணில ஊறி ஒடம்பு வெளிய வரணும்னா ஒரு நாளு ஆவும். அதுவர உள்ளதான் கெடக்கும். வாயு ஏற ஏறதான் உப்பி வந்து மெதக்கும். இதப் பாத்தா உச்சிப் பொழுதுக்குதான் முங்குனது போல தெரியுது. எமன், காலன், தூதன்னு மூணு பேரும் ஆளுக்கு எட்டு மணிக்கூறு உயிரை பிரிப்பாங்களாம். அதுக்குப் பொறவுதான் ஒடம்பு மெதக்குமாம். வீட்ல எறந்தா ஒரு நாள் ஆகவும்தான் ஒடம்புல வாடை வர ஆரம்பிக்கும். மாங்கொழுந்து போல இருக்கே புள்ளைக. பெத்தவ வயிறு எரிய இப்டியாட்டி செய்வீக..பாதகத்தியளா!” ஈரம் படிந்த கண்களுடன் அவர் அழுகைக்குள் நுழைந்தார். சரசரவென கூட்டம் சேர்ந்தது. பூசை சார் ஏதோ யோசித்தவராய் எம் ஏ என் சாரை தனியே அழைத்துச் சென்று பேசினார். ராமமூர்த்தி சாரை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு இருவரும் பைக்கில் ஏறி பள்ளி நோக்கி பறந்தனர்.           

 நாங்கள் சொல்லிழந்து வெறுமே நின்றோம். அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் வயலிலிருந்து வடக்கே உயர்ந்து நிற்கும் இலங்குளக் கரையில் ஒரு டிராக்டர் வந்து நிற்பதும், கையில் மூட்டை முடிச்சுக்களுடன் ஏழெட்டு பேர் பாய்ந்திறங்கி  வயலுக்குள் புகுந்து குறுக்காக ஓடி வருவதும் தெரிந்தது. வந்தவர்கள் கூட்டத்தை விலக்கி விட்டு உள்ளே பார்த்தார்கள். பார்த்து விட்டு அவர்களில் ஒருவரை அனைவரும் ஏறிட்டார்கள். அவர் கண் நிறைந்து வழிய “பாவி, மாமங்காரன்னு இருந்தும் பிரயோசனமில்லன்னா இப்டி செஞ்ச. ஒரு வார்த்த என்னன்னு சொல்லிருந்தா ஊர் மெச்ச செஞ்சிருப்போமே” என கதறினார். அடுத்த நொடியே துண்டால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவர் சரசரவென ஆணைகளைப் பிறப்பித்தார். இருவர் மட்டும் கிணற்றின் படிக்கட்டுகளில் இறங்கி நீருக்குள் நழுவி சென்றார்கள். மேலே நால்வர், கொண்டு வந்திருந்த கயிற்றுச் சுருளை பிரித்து இரட்டை தொட்டில் சுருக்காக முடி போட்டார்கள். உள்ளே இறங்கிய இருவரும் அக்காக்கள் உடல் மேலே இருந்ததால் அவர்கள் செய்வதென்ன என மேலிருந்து தெரியவில்லை. உதைத்தெழும்பி நீர்மட்டத்துக்கு மேலே வந்தவர்கள் “செல்வண்ணே, கை பின்னிருக்கு, சேலை சேந்து முடிஞ்சிருக்கு. வெரைச்சிருச்சுண்ணே. உள்ள வச்சு ஒண்ணும் செய்ய முடியாது” என்றனர். ஒரு நொடி மட்டுமே யோசித்த செல்வன் இரு உடல்களையும் சேர்த்து தூக்குமாறு சொன்னார். தொட்டில் போல இரட்டை வளையத்தோடு கயிறு உள்ளே இறக்கப்பட்டது. ஒருவர் உடல் மீது இன்னொருவர் என ஒரே உடலாய் மேலே கொண்டுவரப்பட்ட செல்வியக்காக்கள் சால் மேடையில் கிடத்தப்பட்டனர். நெருங்கிய கூட்டத்தை நால்வர் விரட்டி விலகி நிற்கச் செய்தனர். நாங்கள் இருந்த மரத்தின் பின் சாலை என்பதாலும் அந்த குறுகிய இடத்தில் எங்களைத் தவிர யாரும் நிற்க முடியாது என்பதாலும் மரங்களின் இடைவெளி எங்களை பார்க்க அனுமதித்தாலும் நாங்கள் மறைந்து நிற்கவும் இடமளித்ததால் நாங்கள் அங்கேயே நின்று திகைத்து பார்த்திருந்தோம். மேடையில் மல்லாக்க கிடத்தப்பட்டதும்தான் விஷயம் தெரிந்தது. இருவர் சேலைகளும் சேர்த்து முடிச்சிடப்பட்டிருந்தன. உள்ளங்கைகளை ஒருவருக்கொருவர் பற்றியிருந்தது தெரிந்தது. இருவர் கூந்தல்களும் கலந்து ஒன்று சேர்ந்து இருவர் முகங்களையும் மூடியிருந்தன. பற்றியிருந்த விரல்களைப் பிரிக்க முயன்றனர் இருவர். விரைப்பேறி கம்பி போல ஆகி விட்டிருந்தன விரல்கள். அவர்கள் செல்வண்ணனை நிமிர்ந்து பார்க்க அவர் கண்களைக் காட்டினார். தமிழக்காவின் கட்டை விரல் கீழே மூட்டை தூக்கும் கொக்கியை லாவகமாக நுழைத்து மறுபுறமாக வளைக்க விபரீதமான கோணத்தில் திரும்பிய தமிழக்காவின் கட்டைவிரல் விரைப்பிழந்து நனைந்த துணி போல உள்ளங்கையிலேயே விழுந்தது. “ஏய். என்னப்பா இது?” என எழுந்த ராமமூர்த்தி சாரை ஒருவர் வந்து தோளோடு அழுத்தி அமர வைத்து ஒற்றை விரலை வாயில் வைத்து எச்சரித்தார். சேலை முடிச்சு ஈரத்தால் இறுகியிருக்க, தலைமுடிகள் சிக்காகி பிரிக்க முடியாமல் இருக்க செல்வண்ணன் கண்காட்டி விட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டார். உருவிய கத்தியால் சேலை கிழிக்கப்பட்டு, தலைமுடி யாரிது எனத் தெரியாமல் அறுக்கப்பட்டு இருவரும் பிரிக்கப்பட  களை பறிக்கும் பெண்மணியின் அழுகைக்குரல் உயர்ந்து வந்தது. 

சேலை கிழிக்கபட்டதால் மாராப்பு அரைகுறையாய் கிடந்த கலையக்காவைப் பார்த்த செல்வன் “ஐயோ, ஐயோ” என அலறி தான் கட்டியிருந்த வேட்டியை உருவி எடுத்தார். தரையில் விரித்ததும் இருவர் கலையக்கா உடலை அதில் வைத்து  வேட்டியின் எதிரெதிர் நுனிகளை இழுத்துக் கட்ட ஆறே நொடிகளில் கலையக்கா ஒரு பொதி போல ஆனார். உள்டவுசரோடு செல்வன் அழுகை மண்ட அப்பொதியைத் தூக்கி தன் தோளில் வைத்துக் கொண்டு வயலுக்கு குறுக்கே வடக்கு நோக்கி டிராக்டர் நிறுத்தியிருந்த இடத்துக்கு லொங்கோட்டமாக ஓடினார். “இந்த தோள்லதான பாதகத்தி ஒன்னத் தூக்கி வச்சு முடி எறக்குனேன். மேக்காட்டு அய்யனாரே! வாழ வேண்டிய புள்ளய காவு எடுத்தியே! ஒம் பொங்கல்ல மண்ணள்ளி வைப்பேன் நானு! எந்தங்கமே! ஐயோ! சொல்லாம போனாளே”- அவர் அரற்றலும் அழுகையும் ஓடும் வேகத்துக்கு ஒப்ப தேய்ந்து கொண்டே வந்தன. அவருடன் நால்வர் இணையாக இருபுறமும் ஓட இங்கிருந்த இருவர் சாமான்களை சாக்கில் வைத்துக் கட்டி இரு அரிவாள்களை பரிசோதிப்பது போல எடுத்து திருப்பிப் பார்த்து விட்டு டிராக்டரை நோக்கி ஓடினர். கூட்டத்தில் எவரும் அவர்களைப் பின்தொடரவில்லை. வேட்டியின் நீளம் அளவுக்கு அகலம் போதாததால் கலையக்காவின் தலைமுடி, அதோடு இணைந்த சங்கிலியின் அன்னப்பதக்கம்,  நீண்ட இடக்கை  வெளியில் தொங்கின. ஓடும் அசைவுக்கு மருதாணிப்பூச்சு மறையாத கை டாட்டா காட்டுவதைப் போலவே அசைய  சென்று மறைந்தார்  கலைச்செல்வி அக்கா.  

டிராக்டர் கிளம்பும் வேகத்தை இங்கிருந்தே அனுமானிக்க முடிந்தது. திடீரென பிரேமிடமிருந்து “க்கா,கா…” என விசித்திர குரல் எழும்பியது. நானும், சிவாஜியும் பிரேம் பார்த்த இடத்தைப் பார்த்து மூச்சடைத்தோம். கலையக்காவையே பார்த்துக் கொண்டிருந்ததால் பிரித்துப் போடப்பட்ட தமிழக்காவை நாங்கள் கவனிக்கவில்லை. தமிழக்கா முகம் எங்கள் பக்கம் திரும்பியிருக்க வெறித்த விழிகளின் சலனமற்ற முறைப்பு நாங்கள் இருக்கும் திக்கில் இருந்தது. பிரேம் அந்தப் பார்வையால் பதட்டம் அடைந்தார். பிரேமின் குரலால் திரும்பிய களை பறிக்கும் பெண்மணி அக்காவின் முகத்தை வான் பார்க்க திருப்பி விட்டு எங்களை அங்கிருந்து விரட்டினார். சிறுவர்கள் பார்க்கும் விஷயமல்ல என அவருடன் இன்னும் சிலரும் சேர நாங்கள் அப்படியே பின்புறமாக சாலைக்கு ஏறிக் குதித்தோம். உடைபட்டதால் தொங்கிக் கிடந்த கட்டைவிரலை மஞ்சள் கிழங்கை உள்ளங்கையில் வைத்திருப்பது போல வலது உள்ளங்கையில் தாங்கி, நீரூறிய விரல்களில்  மருதாணி ஒளி வீச, நீண்ட முந்தானை அலை போல காற்றில் புரள, கருவானின் முழு நிலவு போல கூந்தல்கள் நடுவே முகம் வானை வெறிக்க தமிழ்செல்வி அக்கா தனியே கிடந்தார்.  

நாங்கள் திரும்புகையில்  கூட்டம் நடுவே  “அனாதையா கெடக்காளே எம் பொண்ணு” என்ற அலறலுடன் ஓட்டமும், நடையுமாக விரையும் சிக்கனம் பிள்ளையைப் பார்த்தோம். பள்ளி நான்கு மணிக்கே விடப்பட்டு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சேமியாவும், யக்காவும் எங்கள் பைகளோடு வாயிலருகே காத்திருந்தார்கள். பள்ளிக்குள் ஆசிரியர்கள் நடமாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. பிரேம் மயக்கம் போல தள்ளாட ஆரம்பித்தார். அதோடு சேர்த்து அவர் செய்த இன்னொரு செயலும் எங்கள் கட்டுப்பாட்டை மீறியது என்பதால் அச்செயலையும் வெறுமே பார்த்திருந்து விட்டு, அவரை வீட்டில் கொண்டு விட்டதோடு அந்த சபிக்கப்பட்ட மார்ச் 3 முடிந்தது. 

(தொடரும்)

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள்- 32 தெய்வநல்லூர் கதைகள்-34

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.