தெய்வநல்லூர் கதைகள் -8

This entry is part 8 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

வரலாறை முதலில் பார்ப்போம். எங்கள் பள்ளியின் முழுப்பெயர் ஊராட்சி ஒன்றிய நேரு நடுநிலைப் பள்ளி. தேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் நடத்தப்படும் பள்ளி மூன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி. ஆசிரியர்களுக்கான சம்பளம் மாநில அரசால் வழங்கப்படுவதால் அவர்கள் அரசு ஊழியர்கள். அதே நேரம் பள்ளி ஒன்றியத்துக்கு சொந்தமானது என்பதால் ஒன்றியத் தலைவராக வருபவர்கள் பள்ளியின் கெளரவத் தலைவர்கள் மற்றும் நிர்வாக மேலாளர்களாக இருப்பார்கள். மழைக்காலத்தில் மட்டுமே தோன்றும் அபூர்வ நாய்க்குடைக் காளான் போல ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவில் மட்டுமே நாங்கள் காணக்கூடியவர்களாக  இவர்கள் இருந்து வந்த காலத்தில் தேவநல்லூரில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் எங்கள் வீட்டுப்பாட நோட்டுகளைப் பாதித்து விட்டது. காலம்காலமாக காங்கிரஸ் வசம்தான் தேவநல்லூர் ஒன்றியம் இருந்து வந்தது. பரமேசுவரப் பிள்ளையும், மயிலம்பிள்ளையும் பதவிகள் தெற்கு, வடக்கு ரத வீதிகளைத் தாண்டிப் போய் விடாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் நாங்கள் 6 ஆம் வகுப்பு படிக்கையில் வந்த உள்ளாட்சித் தேர்தலின்போது  காங்கிரஸும், அதிமுக, கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) மூவரும் சமபலத்துடன் எண்ணிக்கை அமையும்படி தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. இரு சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.  ஒவ்வொரு கட்சியிலும் குறிப்பிட்ட சாதியினரே அதிகம் என்பதால் இன்னொரு கட்சிக்கு அதாவது இன்னொரு சாதிக்கு தலைவர், துணைத்தலைவர் பதவிகளை விட்டுக்கொடுப்பதில் இழுபறியானது. ஆகவே கஸ்பா நாயகம் பிள்ளை, பரம்பரை ஜமீன்தார் மனமுடையார் துரை, பரணி அப்பா ஆகிய பெரிய மனிதர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் எவர் பக்கமும் சாராமல் நின்று சுயேச்சையாக வெற்றி பெற்ற அக்கிரகாரத்தின் சாமா கணேசன் அய்யர் ஒன்றியத் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். (குண்டி கழுவ கொளத்துக்கு போனவனுக்கு கொடம் நெறைய தங்கம் கெடச்ச கதையா அய்யருக்கு தாசில் பண்ண அதிர்ஸ்டம் பாத்தீயளா  – கோழிக் கொடலு  பாளையங்கோட்டை ஆச்சியிடம் – 12 படி அரிசி புடைக்கையில் 4 ஆவது படியின் இரண்டாவது தவணை அரிசியை சொளகில் இட்டதும் 6 ஆவது புடைப்பின்போது சொன்னது ; தகவலின் உண்மைத்தன்மையை  நிரூபிக்க வேண்டியே மேலே கூறிய அரிசி புடைப்பு விவரம் இங்கு பகிரப்படுகிறது ) 

இப்படி வரலாறால் பதவி பெற்ற சாமாவய்யர் மகனான கணேசய்யர் துணைத்தலைவரான செருப்புக் கடை இப்ராஹீம் பாயோடு ஒன்றிய பள்ளிகளில் ஆச்சரிய ஆய்வு  மேற்கொண்டார். அவர் அவ்வாறாக எங்கள் வகுப்புக்கு வருகையில் வரலாற்றுப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் முத்துசாமி சார். அய்யரும், பாயும் திரிவிக்ரம-வாமன கோலத்தில் முறையே திகழ்பவர்கள். 12 மணிக்கு கொட்டாவி விட்டால் கணபதி சார் திட்டுவார் – ஏல, மூதேவி, பீடை கண்ணு முழிச்சு பாக்கற உச்சி வேளையில வாயப் பொளக்காத, உள்ள ஏறிருவா அந்தாக்ல”. அய்யர் மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்த நேரம் பீடை கண் திறந்த நேரமேதான். “டே , திலகரோட முழுப்பேரையும் சொல்லுடே பாப்போம்” . அவர் விரல் நீட்டிக் கேட்டது டொம்ப்ளி செல்வத்திடம்- “சார்!  லோமான் பாங்க்ரலதிகர்”. கணேசய்யர் கண்கள் பிதுங்க பாயைப் பார்த்தார். பாய் உதவிக்கு வந்தார்.”சார்வாள், என்ன பாடம் நடத்துதீய இப்பம்? “முதல் இந்திய சுதந்திரப் போர் பாய்சார்”. பாய்சார் மகிழ்ந்தார்.  “டே , தலைவர்கள் பேரக் கேட்டா வெளிநாட்டுக்காரன், வெள்ளக்காரன் பேரெல்லாம் சொல்லுதே. முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வெள்ளக்காரன் என்னன்னுடே சொன்னான் ?”   டொம்ப்ளி பேசத் தயங்கி நின்ற  வரலாறு  எங்கும் கிடைக்காது. பாய்சார் மயக்கமடையும் விதத்தில் டொம்ப்ளி சொன்னான் –“சிப்ப மூதி நீ” .

தலைமை ஆசிரியர் அறையில் நிகழ்ந்த ஆலோசனைக் கூட்ட முடிவில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இனி வீட்டுப்பாடம் எழுத வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அதனை தினமும் கவனித்து கையெழுத்திட வேண்டுமெனவும், தலைமை ஆசிரியர் வாரம் ஒருமுறை கண்காணித்து வகுப்புக்கு ஏதாவது பத்து மாணவர்கள் வீட்டுப்பாடக் குறிப்பேட்டில் மேல்கையெழுத்திட வேண்டுமென்றும்   அய்யர்- பாய் கூட்டுத்தலைமை அறிவித்தது. டொம்ப்ளியின் கூடுதல் சிறப்புத் திறன் குறித்த முத்துசாமி சாரின் முறையீடுகள் கேட்பாரில்லாமல் ஆயின.  கூடவே அடுத்த ஒன்றியக் குழு கூட்டத்தின் தீர்மானங்களில் ஒன்றாக இதனை நிறைவேற்றப்போவதாகவும் தலைமைக் குழு எச்சரிக்கை விடுத்தது. அவ்வாறே நிகழ்ந்து அதன் தீர்மான நகல்  ஒன்றியத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு தாண்டமுடியா விதியாக மாறியது. பிற ஆசிரியர்கள் வீட்டுப்பாட நோட்டுகளில் கையெழுத்திடுகையில் அப்பக்கமே போகாமல் டொம்ப்ளி ஓடி மறையும் செயலின் பிண்ணணியும் இங்கே விளக்கப்பட்டது. 

இதில் வீட்டுப்பாட குறிப்பேடுகளை ஆசிரியர்கள் திருத்தும் பணியில் மாணவ அணியினர் பங்கு இப்படியானதாக இருந்து வந்தது – மாணவர்களிடம் வீட்டுப்பாட குறிப்பேடுகளைத் திரட்டுதல், பாடங்களின் அடிப்படையில் பிரித்து அந்தந்த ஆசிரியர்களின் ஆசிரியர் அறை மேசைகளுக்கு எடுத்துச் சென்று அடுக்குதல், அவர் திருத்துவதற்கு ஏதுவாக அருகிருந்து (இடப்பாகம் எழுந்தருளி) ஒவ்வொரு குறிப்பேட்டிலும் பாடங்கள் எழுதப்பட்ட பக்கத்தை சரியாகத் திருப்பித் தருதல், முடிந்ததும் குறிப்பேடுகளை மாணவரிடம் மீண்டும் கொண்டுவந்து சேர்த்தல்.  இதில் ஊழல் நடைபெறும் விதம் முந்தைய நாள் வீட்டுப்பாடம் எழுதாதபோதும் இன்றைய வீட்டுப்பாடத்தை எழுதிய பக்கத்தை மட்டும் திருப்பி ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கி மடித்து அடுக்கி விடுதல். நட்பு கருதியும், உணவுப்பண்ட பலன்கள் கருதியும் இந்த ஊழல் நடைபெறும். இதில் அதிகார துஷ்ப்ரயோகம் என்பது வேண்டுமென்றே நமக்கு வேண்டப்படாத விரோதியின் வீட்டுப்பாடக் குறிப்பேட்டை ஆசிரியரிடம் கொடுக்காமல் மறைத்து மறுநாள் முந்தைய வீட்டுப்பாடத்திற்கு கையெழுத்து பெறாமலிருப்பதைச் சுட்டி  அன்னார் முன்பே எழுதாமல் விட்டு இப்போது எழுதிக் கொண்டுவந்து விட்டதாக ஆசிரியரிடம் கூறி தண்டனை பெற்றுத் தருவது. ஊழலுக்கு வழிவகுத்தால் அதிகார துஷ்பிரயோகம் இவ்வாறுதான் பாதிக்கும் என்பதை தெண்டில் கோஷ்டி மூலம் அன்றே உணர்ந்தவர்களானோம் நாங்கள். குறிப்பாக முட்ட ராமர், ஈத்தக்குச்சி, டொம்ப்ளி ஆகியோர்தான் அடிக்கடி அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டனர். 

இந்த இடத்தில்தான் சங்கீதாவை தன் கோஷ்டிக்குள் இணைக்க வேண்டி தெண்டில் செய்த காரியம் உப்புக்கண்டத்தால் வெளிப்படுத்தப்பட்டது. பெண்கள் கோஷ்டியில் உள்ள ஒரே அணியான ஜான்சிராணி அணியைப் பிரித்து சங்கீதா தலைமையில் தனக்கு சாதகமான அணியை நிறுவ தெண்டில் மேற்கொண்ட முயற்சிகளில் இது முக்கியமானது. ஏனென்றால் ஜான்சிராணி அணி இன்னும் ஆசியஜோதி அணியினருக்கே மானசீக ஆதரவளித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. சங்கீதா அடிக்கடி வீட்டுப்பாடம் எழுதி வராத நாட்களில் தெண்டிலாரால் சலுகை காட்டப்பட்டு , அதாவது ஆசிரியரிடம் மறைத்து (குறிப்பேடுகளில் கையெழுத்திட்டதும் ஆசிரியர்கள் கையெழுத்திட்ட வலி தீர பிரம்பை ஆசையுடன் வருடியபடியே வழக்கமாகக் கேட்கும் “யார்லாம்டே வீட்டுப்பாட நோட்டு வைக்கலை இன்னிக்கு?” என்ற கேள்விக்கு பட்டியலிட்டு பதிலளிக்கும்போது சங்கீதா பெயர் பட்டியலில் இல்லாமல் ஆனது. அதற்கு மாறாக மறுநாள் முந்தைய பாடத்தில் கையெழுத்து முதல்முறை பெறப்பட்டு மறுபடி இன்றைய பாடத்திற்காக இரண்டாம் முறை குறிப்பேடு உள்நுழைக்கப்பட்டு மறுபடி கையொப்பம் பெறப்பட்டு ஊழல் விஞ்ஞான முறைப்படி தடயங்கள் இல்லாதவாறு நிகழ்த்தப்பட்டது.

கிடா தகவலைச் சொன்னதும் சிவாஜி பரபரப்படைந்தார். உடனே சென்று கணபதி சாரிடம் சொல்ல வேண்டுமென பரபரப்பானார். ஆனால் பிரேம் யோசனையிலாழ்ந்தார். மதியம் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற வேண்டுமென   உத்தரவிட்டார். சிவாஜி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார். நான் வழக்கம்போல அமைதி காத்து நடுநிலை காத்தேன். மதியம் மு மாரியப்பன் குரல் வழக்கத்துக்கு மாறாக ஓங்கி ஒலித்தது –“ பிரேமு, நீ எல்லாந் தெரிஞ்சவனோல? என்னத்துக்குல அவனுவள சார்ட்ட மாட்டி விட மாட்டேங்க?”. பிரேம் மு மா வை ஆடையிலிருந்து உதறிய பாச்சாவைப் பார்க்கும் பார்வையால் 15 நொடிகள் நோக்கினார். மு மா சொல்லடங்கி கண்கள் சிவக்க நிற்க சிவாஜி இம்முறை நடுநிலை பாத்திரம் வகித்தார். “சரிடே முனா, கெடந்து சலம்பாதடே. எதுக்குன்னு கேக்கத்தான இப்ப வந்துருக்கோம். அவன் சொல்லுததுக்குள்ள கோழியெல்லாம் மேயும்போது கூடையில கவுத்த சேவல மாதிரி அலமலந்துகிட்டு  வாற அந்தாக்ல. பொறுடே.     பிரேம், அவன் கேக்கதுல என்ன தப்பு? ஏன் சார்ட்ட சொல்லவேண்டாங்க?” பிரேம் பள்ளி சென்று திரும்பும்  மகவைக் காணும் இளந்தாயின் பார்வை ஒன்றை சிவாஜி மேல் நொடியில் வீசி மறுபடி இறுகி “ சரி. இப்ப போயி சார் கிட்ட சொல்றோம்னே வச்சிக்கோ. சார் என்ன கேப்பார்? “ மு மா மற்றும் அனைவர் முகங்களும் மீன்வாடை கண்ட பூனைகளின் முகத்தை ஒத்தன. சிவாஜி தான் முதலில் முகஒளி மீளப்பெற்றார்-“ஆமாடே, இது பாயிண்ட்லா”. 

மு மா மீண்டும் குழப்பமடைந்து “ ஏல சிவாஜி, என்னல பாயிண்ட்டு இப்ப?” . சிவாஜி தன் ஆச்சியின் பேர வடிவாக உருமாறி விளக்கினார் –“ ஏ கூவ மூனா, அவ நோட்டுல எல்லா நாளும் கையெழுத்து சார்வாள்களும், டீச்சம்மாரும் போட்ருப்பாங்க. அது கள்ளக் கையெழுத்துன்னு அவங்கள்ட்டயே சொன்னா அவங்களும் தப்பு செஞ்ச மாதிரி ஆயிரும்லா. அதனால நம்ம சொன்னோம்னா உனக்கெப்புடில அது தெரியும்னு கேப்பாங்க. தெண்டிலு செய்யுததை  சினிமா புடிச்சால காட்ட முடியும்?” மு மா அய(ர்)த்துப் போனார். சேமியா மணி, யக்கா பாட்ஷா முன்வைத்த அபத்த யோசனைகள் பிரேமின் பாச்சாப் பார்வையால் நிராகரிக்கப்பட்டன.  பிரேம் மதிய இடைவேளைக்குப் பிறகு ஒரு யோசனையோடு சந்திக்கலாம் என்று சொல்ல அவசரக் கூட்டம் நிதானமாகக் கலைந்தது. பல கருத்துக்களும், யுக்திகளும் கூட்டம் முடிந்த பின்னும் அலசப்பட்டன. ( ஏல முமா, அவ நோட்டைப் பிடுங்கி வச்சிட்டா என்னல?- யக்கா ; எதுக்கு? பொட்டப்புள்ள நோட்டப் புடிங்கிட்டாம்னு தெண்டிலு சார்ட்ட மாட்டிவிட்டு அடிவாங்குததுக்கா?- மு மா ; தெரிமாயநை ருசா விட்ரவா ( தெரியாம நைசா உருவிரட்டுமா?) -டொம்ப்ளி )        

மதிய இடைவேளையில் சத்துணவு வரிசையில் நிற்க பொறுமையே இல்லாமல் ஈத்தக்குச்சி, டொம்ப்ளி இருவரும் முண்டியடித்து  பாலகனி டீச்சரின் மோதிரமணியா வளைக்கையால்  குட்டுப்பட்டனர். பிரேம் அவர் வழக்கமாக எடுத்து வரும் மூன்றடுக்கு கேரியரை (சாம்பார் சாதம், தயிர்சாதம், பொரியல்/கூட்டு)   பிரித்து வைத்துக் கொண்டு வழக்கமாக நாங்கள் அமர்ந்து உண்ணும் வாகை மரத்தின் அடியில் வழக்கமாக நாங்கள் சத்துணவு வாங்கிவரும் வரை வழக்கமாகக் காத்திருப்பது போல அன்று  காத்திருக்கவில்லை. வழக்கமான மதியமில்லை என்பதை உணர்த்தவே வழக்கங்கள் பல கையாளப்பட்டன என அறிக. பிரேமின் கேரியர் மட்டும் பிரிக்கப்படாமல் அங்கே காத்திருந்தது அவர் இன்னும் உண்ணாமல் கடமையில் ஈடுபட்டு வேறெங்கோ சென்றிருப்பதையும், விரைவில் திரும்பி விடுவார் என்பதையும் உணர்த்தியது. எங்கள் குழும வழக்கப்படி அனைவரும் வந்ததுமே உணவு உண்ணப்பட வேண்டும் என்பதால் நாங்கள்  பிரேமுக்காக காத்திருந்தோம். 

பிரேம் திரும்பி வருகையிலேயே அவர் முகம் அரியர்ஸ் அறிவிப்பினைக் கண்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகியின் முகத்தை ஒத்திருந்தது கண்டு நாங்கள் இனி யோசிக்க வேண்டியதில்லை என்ற ஆசுவாசம் பற்றி பெருமூச்சு விட்டு எங்கள் முகத்தையும் மலர்த்தினோம். சிவாஜிதான் வந்தவுடனே கேட்டார்- “ காயா பழமா ?”. புன்சிரிப்பைச் சிந்திய மறுநொடியே அதற்கான பிராயசித்தமான கடுகடுப்பை முகம் பூசிக் கொண்டு பிரேம் விவரங்ககளை எடுத்துரைத்தார். விவரம் என்னவெனில் வெள்ளி மாலை பள்ளி விட்டதுமே சங்கீதா வீட்டினருடன் கிளம்பி நாகர்கோவில் செல்கிறார், அங்குள்ள ஆச்சி வீட்டில் சனி,ஞாயிறு இருந்து கொண்டாடிவிட்டு திங்கள் அதிகாலை கிளம்பி தெய்வநல்லூர் வந்து சேர்ந்து உடனே பள்ளிக்கு வந்து விடுவதால் திங்கள் அன்று ஒப்படைக்க வேண்டிய வீட்டுப்பாடங்களை எடுத்துச்  சென்று எழுத பெரிதும் சிரமப்பட்டிருக்கிறார்.  ஒரு திங்களன்று வீட்டுப்பாடம் எழுதவில்லை என வீட்டுப்பாட நோட்டை வாங்க வந்த தெண்டிலிடம் சொல்ல தெண்டிலார் காரணம் வினவ தன் நாகர்கோவில் பயணத்தை சொல்லியிருக்கிறார்.  தெண்டிலார்  உறுமீன் கண்ட கொக்கென தனை உணர்ந்து ஒரு யோசனையை சங்கீதாவுக்கு சொல்லியிருக்கிறார். அதாவது திங்களன்று வந்து வீட்டுப்பாடத்தை எழுதி விட்டு மறுநாள் செவ்வாயன்று அன்றைய பாடத்தோடு சேர்த்து கொடுத்துவிட்டால்  தான் இரு தினங்களுக்கும் சேர்த்து கையொப்பம் வாங்கி விடுவதாக முன்வைத்த நிபந்தனை உதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.   ஆனால் பதிலுதவியாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அணியை  சங்கீதா துவக்கி  அதனை அறிஞர் அண்ணா அணியின் துணை அணியாக நடத்த வேண்டும். அதன்படியே சில வாரங்களாக வீட்டுப்பாட ஊழல் நடைபெற்று வருகிறது. இவ்வளவு தகவல்களையும் நாங்கள் வரிசையில் நின்று சத்துணவு வாங்கி வருவதற்குள் எப்படி பிரேம் இவ்வளவு துல்லியமாக தகவல் சேகரித்தார் என எனக்குப் புரியவில்லை. நாங்களே எதிர்பாரா விதத்தில் “மெஜூரா ஜெயலட்சுமி”யை எங்கள் யாருக்கும் தெரியாமல் பெண்களுக்குள் உளவறிய நியமித்திருந்தது பிறகுதான் எங்களுக்கே தெரிந்தது.        

தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் அந்த திங்கட்கிழமை சம்பவத்திற்கான நாளாக குறிக்கப்பட்டது. வழக்கம்போல பிரேம், சிவாஜி, நான் மூவரும் திட்டம் தீட்டினோம். னோம் என்பது கெளரவம் கருதி சொல்வது. பிரேமும், சிவாஜியும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதும், அவ்வப்போது முந்தைய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளவுமான பாத்திரமே என்னுடையது. திங்கள் காலை வரை ரகசியம் காக்க வேண்டி குழும உறுப்பினர்களுக்கு ரகசிய காப்புப் பிரமாணத்தை நாங்கள் மீள ஒருமுறை நினைவுப்படுத்தினோம். 

(தொடரும்)

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் – 7தெய்வநல்லூர் கதைகள் – 9 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.