தெய்வநல்லூர் கதைகள்- 29

This entry is part 29 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் போன்ற ஒரு ஊரில் சிறு முணுமுணுப்பும் கூட மலைப்பாறை நடுவே ஒலி எதிரொலிப்பது போல மெல்ல பெரிதாகி பரந்துவிடும். வெற்றிலைக் கொடிக்கால் சாவடி, ஜெமினி டீக்கடை, பெரிய கோவில் தேரடி, மந்தை சத்திரம், பழக்கடை வாசல், பஸ் ஸ்டாண்ட் டீக்கடை போன்ற 18 மணி நேர செய்திச் சேனல்களில் அந்தந்த சேனல்களுக்குரிய உரையாடல் நிபுணர்களால் இச்செய்திகள் விரிவாகவும், விவரமாகவும், ஆழமாகவும், ஆபாசமாகவும், ஆர்வமூட்டும் விதமாகவும், இன்ன பிற ‘வும்’ களும் சேர்த்து விவாதிக்கப்படும். இன்றைய செய்திசேனல்களின் செயற்கை விவாதக்குழுக்களை விட மேற்சொன்ன நேரடி விவாதக்குழுக்கள் சுவாரசியமாகவே இருந்தன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். சங்கு அரையாண்டுத் தேர்வில் கணிதப்பாடத்தில்  முதல் மதிப்பெண் பெற்ற செய்தி அவர் தகப்பனாரால் வடக்கு ரதவீதி   அலங்காரி அம்மன் சேனலில் முதல் ஒலிபரப்பு செய்யப்பட்டு “கொடிக்கா சாவடி” சேனலில் மறுஒலிபரப்பு செய்யப்பட்டபோது சிவாஜி எனும் சா கணேசனின் அப்பா திருவாளர் சாத்தையா பார்வையாளராக இருக்க நேர்ந்தது. அதுவரை பிரேம், தன் மகனான சா கணேசன் ஆகிய இருவரால் மட்டுமே எடுக்க முடியும் என நம்பிக்கொண்டிருந்த மதிப்பெண்ணை நம்பவே முடியாத விதத்தில் புதுமுகம் ஒருவர் எடுத்து விட்டார் என்பதை அவரால் ஏற்கவே முடியவில்லை. வழக்கமான தெய்வநல்லூர் தகப்பன்மார்கள் போல அல்லாது சற்று நிதானித்து யோசிக்கும் பண்புடைய அவர் தங்கள் பரம்பரை, உறவுமுறை, தெரு ஆகிய அனைத்திலிருந்தும் முதன்முதலாக கல்லூரி சென்று வரும் தனது மகளும், சா கணேசனின் அக்காவுமான பார்வதியிடம் இது குறித்து ஆலோசித்தார். இந்த முக்கியத்துவத்தால் புளகாங்கிதம் அடைந்த பார்வதியக்கா  அந்த முக்கியத்துவத்தின் ஆயுளை நீட்டிக்க விரும்பியும், புளகாங்கித பெருமையை வளரச் செய்யும்நோக்கிலும் செயல்பட்டார். தான் தன் கல்லூரி பேராசிரியப் பெருமக்களுடன் கலந்தாலோசித்து வருவதாகக் கூறி சாத்தையா அவர்களை தன் மகளை சான்றோள் என உணரச் செய்தார். இந்தப் பிண்ணனி ஈண்டு விளம்பப்படுவதன் காரணம் அடுத்தடுத்த பத்திகளில் தெளிவாகும். 

ஞாயிறன்று காலை எங்கள் குழு முடிவு செய்தபடி நான், பிரேம், சிவாஜி ஆகிய மூவரும் மேலரத வீதியில் அமைந்திருந்த சங்கு இல்லத்திற்கு சென்றோம். நாங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாகக் கூறி “திருழா”க்காக ஊரிலேயே இருந்து விட்ட நயினாருக்கும் சேர்த்தே எங்கள் சந்திப்பு. முதலில் வழக்கமாக விளையாடக் கூப்பிடும் பையன்கள் என நினைத்த சங்குவின் பெற்றோர் பிரேம், சிவாஜியின் அணுகுமுறைகளால் கவரப்பட்டு எங்களை உள்ளே அழைத்து அமர வைத்து பேசும்படி சொன்னார்கள். சங்குவிடம் பேசியதில் தெரிந்த விபரம் சங்கு அப்பாவின் ஒன்று விட்ட தம்பியான நமசிவாயம் எனும் நமஸ் சித்தப்பா எம் எஸ் சி கணிதம் பயின்று முதல் வகுப்பில் தேறி, பி எட் படிப்பும் முடித்து வேலைவாய்ப்புத் துறையில் பதிந்து வைத்து அரசு ஆசிரியப்பணிக்காக காத்திருக்கிறார். அரசுப்பணி வரும்வரை வாளாவி இருக்காமல் சங்கரன்கோவில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வாரம் மூன்று நாட்கள் மட்டுமே சென்று வரும் “விசேட” பணியில் இருக்கிறார். தன் மகன் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் நல்மதிப்பெண் பெறுவது அவர் கையிலேயே இருப்பதாக நமஸ் தம்பியிடம் சங்கு அப்பா வேண்டிக்கொள்ள வாரம் மூன்று நாட்கள் சங்கு தனது சித்தப்பாவால் தனிப்பயிற்சி அளிக்கப்பட்டார். அதன் விளைவே சங்கு 92% மதிப்பெண்கள் பெற்று சித்தப்பாவிடம் வசவும் வாங்கியது ( இடியட்டு, இந்த 8 மார்க்கை எங்கண்ணனா வந்து எழுதுவான்? எத்தன மட்டம் இந்த கணக்குகள சொல்லிக்குடுத்தேன்? சொளையா 8 மார்க்க விட்டுட்டு வந்து பல்லக் காட்டிட்டு நிக்க? – சங்கு தான் பள்ளியில் முதல் மதிப்பெண் என்ற தகவலோடும், காதளவோடி கடைவாய்ப் பற்களைக் காட்டிய புன்னகையோடும்  விடைத்தாளை சித்தப்பா கையில் கொடுத்தபோது நமஸ் சித்தப்பாவின் எதிர்வினை). 

சங்குவிடம் மேலும் பேசி அவர் பெற்றோரிடம் விடை பெற்று வெகுநாட்கள் கழித்து எங்களது தலைமையகமான செண்பக விநாயகர் மேடையில் கூடினோம். சங்கு வீட்டிலிருந்து தலைமையகம் வரும்வரை சிந்தனையிலேயே வந்த பிரேம்  தலைமையகத்தை அடைந்ததும் தன் யோசனையை வெளியிட்டார். அதன்படி நமஸ் சித்தப்பாவிடம் நாங்களும் தனிப்பயிற்சிக்கு போயே ஆகவேண்டும். இது காலத்தின் கட்டாயம் எனவும் கூறினார். ஆனால் இதை “பையங்களாகிய” நாங்கள் சென்று கேட்டால் சித்தப்பாவால் கோரிக்கை நிராகரிக்கப்படும் அபாய சாத்தியக்கூறு அதிகமிருப்பதால் சித்தப்பா மறுக்க முடியாதபடி “பெரியாளுக” மூலமாக சாதிக்க வேண்டுமெனவும் எங்களால் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை நாங்கள் எடுத்த அதே நேரம் பார்வதியக்கா மிக நீண்ட உரை ஒன்றை பல கல்வி சார் கலைச்சொற்களோடு ஆற்றி வெற்றிலை கொடிக்கால் சங்க நிர்வாகியும், ஊர் நாட்டாமையும் தன் தகப்பருமான சா கணேசனை ஒரே நேரத்தில் மிரட்சியும், பெருமிதமும் கொள்ளச் செய்து மூச்சு வாங்கி நின்றிருந்தார். “ஏட்டி, என்ன செய்யணும்னு கேட்டா கோணவாத்தியான் கோவில் சொவரல்லாம் சொரண்டி வெத்திலக்கு சுண்ணாம்பு எடுத்தானாம்ன கதையா என்னமோ அந்தாக்குல நீட்டி மொழக்குதயே ஒழக்கு ஓயரத்துக்கு இருந்துகிட்டு? என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுட்டி அவங்கிட்ட.  கட்டுக்கு ஆயிரம்ணு 300 கட்டு வெத்தலைய முப்பது நிமிசத்துல கணக்கு முடிச்சு சிட்ட போட்ருவாம்டி எம்மகன். என்னமோ பாடம் எடுக்கயே அவனுக்கு” என சாத்தையாவின் தாயாரான பட்டவாரத்தி அம்மை தடுத்தாட்கொள்ள எரிபார்வை ஒன்றை வீசி பார்வதியக்கா சொன்ன ஒற்றை வரி –“அவன நல்ல வாத்தியார்கிட்ட டியூசன் அனுப்புங்க”. அதுவரை தேர்ச்சி மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்களுக்கே தனிப்பயிற்சி என இருந்த தெய்வநல்லூரின் “தேங்கிய குட்டை” மனநிலையை பார்வதியக்கா தன் நீண்ட உரை மூலம் உடைத்தெறிந்தார். திருமணமாகி தற்போது புனே வில் வசிக்கும் அக்கா ஊருக்கு வந்து எங்களைச் சந்திக்கும்போதெல்லாம் “நாந்தாம்டே ஒங்களல்லாம் டியூஷன் சேக்கணும்னு சொல்லி போராடி கஷ்டப்பட்டு அடம் புடிச்சு சாப்புடாம கெடந்து சாதிச்சேன் தெரியுமா?” எனச் சொல்வதற்கு எல் ஈ டி பல்புகள் மின்னும் சட்டத்திற்குள் முகம் மட்டும் காட்டி நிற்கும் பட்டவாரத்தி அம்மை ஏதோ சொல்ல முயற்சிப்பதை உற்றுப் பார்த்தால் தெரியும்.   

ஆக இருவேறு தண்டவாள இணைகள் ஒரே இணையாக  மாறுவது போல நாங்கள் எடுத்துச் சென்ற கோரிக்கையும், சாத்தையா அவர்களின் முடிவும் ஒன்றாகவே இருந்தன. சிவாஜி கடுகி  வந்து என்னையும்,பிரேமையும் அவர் இல்லம் அழைத்துச் செல்ல நமஸ் சித்தப்பா விஷயத்தை பிரேம் சாத்தையா அவர்களிடம் விளக்கமாக சொன்னார். நிரூபிக்கப்பட்ட செயல்திறன் உடைய நமஸ் சித்தப்பாவை உடனே ஏற்றுக்கொண்ட சாத்தையா அவர்கள் அன்று மாலையே நமஸ் அவர்களைச் சந்தித்தார். மாதம் பத்து ரூபாய் எனும் தொகையும், தன் மகனுடன் நால்வர் வருவார்கள், விரைவில் எண்ணிக்கை கூடினால் வருமானம் இன்னும் உயர வாய்ப்பிருப்பதையும் சாத்தையா அவர்கள் விளக்கிய விதத்தால் கண்கள் விரிந்த நமஸ் சித்தப்பா எனும் சித்தப்பா சார் எங்களுக்கு தனிப்பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டார். இவ்வாறாக நாங்கள் நால்வரும் சங்கோடு சேர்ந்து ஐவரானோம். நயினார் அப்பா தன் மகன் படிப்பான் என்றால் மாதம் நூறு ரூபாய் கூட கொடுக்கத்தயாராக இருப்பதாக விம்மி உரைத்து வயலில் கிணற்றைச் சுற்றிலும் வெறுமே இருந்த ஆறடி சுற்றை காய்கறிப் பாத்திகளாக்கி தனிப்பயிற்சி கட்டணத்தை சமாளித்தார். எங்கள் மூவரில் பிரேம் வீட்டில்தான் டியூஷன் போவதற்கு சற்று யோசனை செய்யப்பட்டது. ஆனால் பிரேம் தன் அரையாண்டு தேர்வு முடிவுகளைக் காட்டி ஒப்புதல் வாங்கி விட்டார். நமஸ் சார் எனப்படும் சித்தப்பா சார் (எடே, அவன்தான் சித்தப்பான்னு கூப்டா நீங்களுமாடே சித்தப்பாம்பீங்க. சார்னு கூப்புடுங்கடே ,…- நமஸ் சார்.  சரி சித்தப்பா சார் – சங்கு. மூதி, அவங்களச் சொன்னேம்ல. பொறந்துருக்கான் பாரு எண்கண்ணணுக்குன்னு- நமஸ் சார் சடவு. அதிலிருந்து நமஸ் சார் அவ்வப்போது எங்களுக்கு சித்தப்பா சார் ஆகி வந்தார்). நமஸ் சார் பாடம் நடத்தும் விதம் சுவாரசியமாக இருக்காது. ஆனால் மறக்க முடியாத விதத்தில் இருக்கும். ஒரு வகுப்பில் மூன்று கணக்குகளை எங்களுக்கு விளக்கும் சித்தப்பா சார் அடுத்த இரண்டு கணக்குகளை எங்களையே செய்யச் சொல்லி ஒவ்வொருவரையும் தனித்தனியே கவனித்து திருத்தங்கள் சொல்லி பயிற்றுவித்தார்.  இம்முறையால் நாங்கள் கணக்கை மனப்பாடம் செய்யும் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் இடத்திற்கு வந்தோம். இம்மாற்றம் நடைபெற கிட்டத்தட்ட இரு மாதங்களாயின. 

இந்த இருமாதங்களில் வகுப்பில் சம்பவங்கள் நடைபெறாமலில்லை. முதல் இரு வாரத் தேர்வுகளின்  முடிவிலேயே எங்களது விடைத்தாள்கள் தனித்து ஒளிர்வதை எம் எஸ் சி சார் கண்டுபிடித்து விட்டார். குறிப்பாக கூடுதல் பயிற்சி வினாவாக பாடநூலில் இருந்த 8 மதிப்பெண் வினாவுக்கான விடையை நாங்களும், சங்குவும் மட்டுமே முழுமையாகவும், சரியாகவும் செய்து வந்திருந்தது அவரது கவனத்தை சீண்டியது. பூசை சார் வழியே துரையும், தீத்தியும் களமிறங்கி நாங்கள் தனிப்பயிற்சி செல்வதை உளவறிந்து எம் எஸ் சி சாரிடம் சொன்னார்கள். அதுவரை தெய்வநல்லூர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சவால் அத்தனை நேரடியாக வெளியிலிருந்து விடப்பட்டதில்லை என்பதை உணர்ந்த எம் எஸ் சி, பூசை, எம் ஏ என் சார்வாள்கள் கூட்டணி கருத்தபாண்டியார் உணவுவிடுதி ஓய்வறை ஆலோசனைகளை தொடர்ந்து செய்தது. மக்களவை விவாதம் போல நீண்ட விவாதத்தால் ஒலிமாசு அதிகரிப்பதைத் தாங்க இயலாத திருமதி பட்டாணியம்மாள் கருத்தப்பாண்டியார் ஏனம் கழுவிய கையோடு  புதர் பிளந்து வரும் மதப்பிடி என விவாத குச்சிலுக்குள் புகுந்து அதே தனிப்பயிற்சியை எம் எஸ் சி சாரே ஆரம்பித்தால் போதாதா எனவும், இதற்கு இவ்வளவு நேரம் பேசுவது போல வெட்டியாக பேசிக் கழித்ததால்தான் வெளியாள் ஒருவர் இவ்வளவு தூரம் துணிந்திருக்கிறார் எனவும் முத்தாய்ப்பு வைத்து நீண்ட ஆலோசனைக் கூட்டத்தை நிமிடத்தில் முடித்து வைத்தார். இந்த முடிவை ஏற்றுக் கொண்ட மூவரணி அதற்கான செயல்திட்டங்களில் இறங்கி நடைமுறைக்கு கொண்டுவர மேலும் ஒரு மாத காலம் ஆகியது. பெரிய கோவிலின் பக்கவாட்டு வழிகளை ஊடறுத்துக் கொண்டு தெற்கு, வடக்கு ரதவீதிகளை இணைக்கும் சந்தில் வடக்கு ரத வீதியை ஒட்டிய சந்து வீடாக அமைந்த பேங்க் பிள்ளை எனப்படும் சரவணப் பெருமாள் பிள்ளை வீட்டின் மாடி வாடகைக்கு எடுக்கப்பட்டது. செல்வியக்காக்களில் ஒருவரான தமிழ்செல்வி அக்கா வீட்டிற்கு அடுத்த வீடு. இன்னும் சொல்லப்போனால் எம் எஸ் சி சார் வாடகைக்கு எடுத்த வீடு தமிழ்செல்வி அக்காவின் பெரியப்பா வீடு. தமிழ்செல்வி அக்கா மூலமாகவே இந்த வீடு வாடகைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டு தனிப்பயிற்சி மையமாக ஆனது.   வங்கிப்பணி காரணமாக கோவையில் வசித்து வந்த பிள்ளைவாள் வாடகையாக வரும் நல்லூழை வியந்தவராக ஒப்புக்கொண்டார். கீழ்வீட்டில் அவர்கள் “ஜாமாங்களை” போட்டு வைத்திருப்பதால் சார்மார்கள் அவற்றையும் கண்காணித்துக் கொள்ள வேண்டினார். இவ்வாறாக எம் எஸ் சி சாரால் தனிப்பயிற்சி அமைப்பு துவக்கப்பட்டதும் அதில் முதல் மாணவராக துரை சேர்க்கப்பட்டார். அவரது மொத்த கோஷ்டியாரும் எம் எஸ் சி சாரின் டியூசனில் சேர்ந்தனர்.    

டிரிப்பிள் எஸ் சாரின் வருகையும், அவர் பேசிச் சென்றதும் தண்டனை அடிமுறைகள் மாற்றம் பெற்றன. 95 க்கு மேல் 100க்குள் மதிப்பெண் பெற்றால் இரட்டை அடிகள் எனும் அதீத அநியாய தண்டனைப் பிரிவு கைவிடப்பட்டது. ஒற்றைப்படை அடிமுறை தண்டனை தொடர்ந்தது என்றாலும் முன்புபோல பிரம்பைப் பிடித்திருக்கும் கை காது வரை உயர்ந்து இறங்கும் வேகம் அடியின்  குறைந்திருந்தது. பிரம்பின் மீதான கைப்பிடி நெஞ்சுக்கு மேல் எழாமலானது.  இரு மாதங்களின் முடிவில் களம் சமநிலை பெற்றதால் அமைதி திரும்பும் என நாங்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் எம் எஸ் சி சார் வேறு விதமாக களமிறங்கினார். தனது அடிமுறை தண்டனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். புன்னகை முகமாக அன்புடன் பேச ஆரம்பித்தார். எம் எஸ் சி சார் அவ்வாறாக பேசியதும் துரை, தீத்தி, சிங்கி ஆகியோர் அம்மாணவர்களை அணுகி எம் எஸ் சி சாரிடம் தனிப்பயிற்சிக்கு சேருமாறு அன்புடன் வற்புறுத்துவர். மாதம் பத்து ரூபாய் அல்ல, ஐந்து ரூபாய் மட்டுமே எனும் சலுகையும் இரு வாரங்கள் வரை எம் எஸ் சி சாரின் இன்முக வரவேற்பு கோரிக்கையுடன் அம்மாணவனுக்கு வழங்கப்படும். அதன்பின்னும் அம்மாணவன் தனிப்பயிற்சிக்கு சேரவில்லையெனில் கைப்பிரம்பு உயரும் அளவு கூடிக்கொண்டே போகும், அதற்கு எதிர்விகிதத்தில் அவர் முகத்தில் புன்னகை மாறும். டச்சிங், ஜெபமணி போன்ற சிலர்  மாதம் ஐந்து ரூபாய் எனும் பணத்தையும் கூட கொடுக்க இயலாதவர்களாக இருந்தனர். நாங்கள் எங்களுக்குத் தரப்படும் தனிப்பயிற்சியை டச்சிங் கோஷ்டியாரிடம் பகிர்ந்து அவர்களையும் அதிக மதிப்பெண்கள் பெற உத்வேகமூட்டினோம். உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும், தெண்டிலு  செந்திலும் எங்கள் வகுப்பே. அன்னார் எங்களுடன் தாமரை இலைத் தண்ணீராய் நட்பு பாராட்டி வந்தார். பிரம்படியின் வேகம் தாளாது அன்னாரும் எம் எஸ் சி சாரிடம் தனிப்பயிற்சிக்கு சேரவும் ஒரு கட்டத்தில் மொத்த வகுப்பும் எம் எஸ் சி சாரிடம் தனிப்பயிற்சிக்கு செல்வோர், செல்லாதவர் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. 

இந்தப் பிரிவினை தெளிவாக ஆனதும் எம் எஸ் சி சார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தார். வாரத்தேர்வு  மதிப்பெண் விஷயத்தோடு விவகாரம் முடிந்து விடவில்லை என உணரவைக்கப்பட்டோம். எம் எஸ் சி சாரிடம் தனிப்பயிற்சி செல்லாதவர்கள் எனும் குழு உண்டெனினும் அக்குழுவுக்குள் நமஸ் சாரிடம் தனிப்பயிற்சிக்கு செல்வோர், எங்குமே தனிப்பயிற்சிக்கு செல்லாதோர் என கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவுகளாக விளங்கி வந்தது. அதில் நமஸ் சாரிடம் ட்யூஷன் படிக்கும் எங்கள் குழுவே ஆகச்சிறிய குழுவாக விளங்கியது. எங்களுக்கும் பிரேமுக்கும் மிக வியப்பான விஷயமாக இருந்தது செல்வி அக்காக்களின் சமாதான பேச்சுவார்த்தை. செல்வி அக்காக்கள் குறிப்பாக கலையக்கா, தொடர்ந்து எங்களை எம் எஸ் சி சாருடன் சமாதானமாகப் போகும்படி அன்புடன் வலியுறுத்தினார். சங்கீதா மூலமாக அவர்கள் முயன்றபோது எம் எஸ் சி சார் பிரேமை அடிப்பதை நிறுத்தினால்தான் நாங்களும் நிறுத்துவோம் என்று (சங்கீதாவின் ஆலோசனைப்படி) சொன்னோம். ஆசிரியப் பயிற்சி வகுப்புகளையும் எம் எஸ் சி சார் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் தனது பைக்கில் புளியங்குடி சென்று திரும்பும் எம் எஸ் சி சார் தனிப்பயிற்சிக்காக வாடகை வீடு எடுத்ததும் அவ்வப்போது தெய்வநல்லூரிலேயே தங்க ஆரம்பித்தார். 

வாரத்தேர்வு தண்டனை முறைகளில் மாற்றம் வரக் காரணம் நாங்கள் தொடர்ந்து 100% மதிப்பெண்களை அடைந்ததே. எங்களை மாட்டிவிட வேண்டி கடினமான கணக்குகளைக் கேட்டால் அவரிடம் தனிப்பயிற்சிக்கு வருவோர்தாம் அதிக அடிகளைப் பெறும் வாய்ப்புள்ளவர்களாக இருந்தனர். ஆகவே “கெரில்லா” தாக்குதல் முறைகளைக் கையாள ஆரம்பித்தார். சில உதாரணங்கள் – 

-புளியங்குடியிலிருந்து வாங்கி வந்து தனது தனிப்பயிற்சி மாணவர்களுக்குக் கொடுத்து விட்டு அவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு மறுநாள் வகுப்பில் வந்து கணக்கு நோட்டுக்கு காக்கி நிற அட்டைதான் போட வேண்டும் எனவும் அதுவும் மறுநாளே போட்டு வரவேண்டும் எனவும் போடாமல் வரும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அடி கூடுதல் என்ற விகிதத்தில் பிரம்படி எனவும் அறிவித்தார். தெய்வநல்லூர் கடைகள் எவற்றிலுமே காக்கி அட்டைத்தாள் இல்லை. மறுநாள் சிவாஜி எழுந்து பணிவுடன் கடைகளில் காக்கி நிற அட்டைத்தாள் கிடைக்கவில்லையே எனச் சொல்லவும்  பிறர் (அவர் டியூசனில் படிப்பவர்கள்) எப்படி போட்டு வந்தார்கள் எனக் கேட்டு அவர்களை கணக்கு நோட்டை எடுத்துக் காட்டும்படி சொன்னார். அன்றிலிருந்து 6 நாட்களுக்கு 1,2,3,4,5,8 (சனி, ஞாயிறு விடுமுறை நாட்களும் திங்களன்று கணக்கில் சேர்க்கப்பட்டன) என்ற வரிசையில் நாங்கள் பிரம்படி வாங்கினோம். காக்கி அட்டை போட்டு வந்த எவருமே அது எங்கே கிடைத்தது என சொல்லவில்லை. நாங்கள் கேட்டபோதெல்லாம் துரை, தீத்தி இருவரும் எவரையும் பதில் பேச அனுமதிக்கவில்லை.  நாங்களே எதிர்பாரா வண்ணம் தெண்டிலு ரகசியமாய் அன்று மாலை அவர்களுக்கு மட்டும் காக்கி அட்டை ரகசியத்தை சொல்லிச் சென்றார். யதேச்சையாக அன்று மாலை எங்கள் நேரு அணியின் பழைய உறுப்பினரும், தற்போது பந்தல் தொழில் பயிற்சியாளருமான ஈத்தக்குச்சி எனும் மா முருகனை சிவாஜி  சந்தித்தபோது இந்த சிக்கலை தெரிவித்தார். இச்சிக்கலை தான் உடனே தீர்ப்பதாகக் கூறிய  ஈத்தக்குச்சி உடனே சிவாஜியுடன் கணேஷ் ஜவுளிக்கடை கடல் சென்று சாத்தையா அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்தி துணிகள் வைத்துத்தரும் காக்கி நிற தாள்பைகள் பத்து பெற்றுவந்து அதை நீளத்தாளாக வெட்டி கடைப்பெயர் உள்பக்கம் வருமாறு மாற்றி எங்கள் கணக்கு நோட்டுகளுக்கு அட்டை போட்டுக் கொடுத்து காப்பாற்றினார்.  

– அட்டை இட்டதும் இரு நாட்கள் கழித்து அட்டையில் கட்டம் வரைந்து பெயர் எழுத வேண்டுமெனவும் எழுதி வராதவர்களுக்கு அடி விகிதாச்சார முறையில் வழங்கப்படும் எனவும் எம் எஸ் சி சார் சொன்னார். இது ஒரு விஷயமா என நினைத்த நாங்கள் வழக்கம் போல அட்டை நடுவே எழுதி மறுநாள் காட்டினோம். அட்டையில் பெயர் எழுதுவது எப்போதும் வலது மேல் மூலையில்தான் இருக்க வேண்டும் எனவும், எல்லாம் தெரிந்தது போல பேசும் பிரேமுக்கு இதெல்லாம் தெரியாதா? எனக் கேட்டு அடி விழுந்தது எங்களுக்கு. வழக்கம்போல அவரது தனிப்பயிற்சி மாணவர்கள் மட்டும் வலது மேல்மூலையில் எழுதி வந்திருந்தார்கள். 

-அடுத்ததாக எம் எஸ் சி சார் செய்த ஒரு ஏற்பாடுதான் எங்களைத் தூண்டியது. வகுப்பாசிரியர் என்ற முறையில் தன் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு தான் கூடுதல் பயிற்சி அளித்து மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற வைக்கவிருப்பதாக அறிவித்தார். வழக்கம்போல் எம் ஏ என் சார் இந்த ஏற்பாட்டை புகழ்ந்து அனுமதித்தார். வாரம் மூன்று நாட்கள் இந்த கூடுதல் வகுப்புகள். அவற்றில் கணக்கு மட்டுமன்றி பிற பாடங்களிலும் எம் எஸ் சி சாரால் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டோம். இந்த இடம் வரை உங்களுக்கு இது நல்ல நோக்கமுள்ள , சரியான செயல்பாடு என்று தோன்றியிருக்கலாம். அப்படியானால் உங்களுக்கு எம் எஸ் சி சாரை சரியாகத் தெரியவில்லை என அர்த்தம். அவர் கூடுதல் வகுப்புகளுக்காகத் தேர்ந்தெடுத்த மூன்று நாட்களும், நேரமும் மிகச் சரியாக நாங்கள் நமஸ் சாரிடம் தனிப்பயிற்சிக்கு செல்லும் நாட்களும், நேரமும். இம்முறை சற்றே துணிந்த நயினாரும், நானும் எம் எஸ் சி சாரிடம் சென்று இம்மூன்று நாட்களை மாற்றுமாறும், இயலாத பட்சத்தில் நேரத்தையாவது மாற்றுமாறும் பணிவுடன், பயத்தயக்கத்துடன் கோரிக்கை வைத்தோம். புன்னகை போன்ற வளைவு தோன்ற மாற்ற வேண்டிய காரணம் என்ன என வினவினார். பிரேமின் எச்சரிக்கையை நினைத்து அந்த பதட்டத்திலும் வியந்து வியர்த்தோம் (டேய், அவர் வேணும்னேதான் இந்த டயத்துல வைக்கறார். சங்குட்ட போய் சிங்கி நம்ம ட்யூஷன் டைம்லாம் முந்தாநாள் கேட்ருக்கான். இப்பதான் எதுக்குன்னு தெரியறது… நாம போய் மாத்திக் கேட்டா எதுக்குன்னு கேப்பார். டியூஷன்னு சொன்னா தெரியாத மாதிரி ஸ்கூல் முக்கியமா, ட்யூஷன் முக்கியமான்னு கேப்பார். கேக்கறது வேஸ்ட்டுடா-பிரேம்). இருப்பினும் எங்கள் பணிவின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் அவரிடம் கேட்க நினைத்து இவ்வாறாக சிக்கிக்கொண்டோம்.  நாங்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து தப்பிக்க நினைத்தபோது எம் எஸ் சி சார் பிரம்பை வருடியபடியே மாவட்ட ஆட்சித் தலைவர் பணியில் நாங்கள் இருக்கிறோமா? மாநில அமைச்சர் பதவியில் இருக்கிறோமா? ஊர் நாட்டாமைப் பணிகள் செய்கிறோமா? என பலவாறு கேட்டு படிக்கும் வயதில் படிப்பை முக்கியமாக நினைக்காமல் சிறப்பு வகுப்பை தவிர்க்க நினைத்த காரணத்தை சொல்லச் சொல்லி ஆளுக்கு இரண்டு அடிகள் கொடுத்தார். எப்படி தூண்டப்பட்டார் என்றே அறிய முடியாத நொடியில் நயினார் தாங்கள் வகுப்புக்கு வர மறுக்கவில்லை என்றும், நேரத்தை மட்டுமே மாற்றிக் கேட்கிறோம் என்றும் அதற்கு அடிப்பது சரியில்லை எனவும் அவரது மேலுதட்டு மென்புகை மீசை துடிக்க சொன்னார். புன்னகை வளைவு இன்னும் இறுக காரணத்தை நாங்கள்  சொல்லும்வரை விகித முறைப்படி தினமும் கூடுதல் கணக்கில் அடிகள் தொடரும் என்றார் எம் எஸ் சி சார். நாங்கள் இருவரும் இக்கூடுதல் அடிகளை அடுத்த மூன்று நாட்கள் மட்டுமே வாங்கினோம். காலம் வேறோர் திருப்பத்தை வைத்துக் காத்திருந்தது எங்களுக்குத் தெரியவில்லை அப்போது. 

நமஸ் சார் சங்கரன்கோவில் பள்ளிப்பணி முடித்து வந்து வகுப்பெடுக்க முடிந்தது அம்மூன்று தினங்களே. ஆகவே எங்களுக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. நமஸ் சார் வேறு தினமோ, நேரமோ தனக்கு சாத்தியமில்லை என சொல்லிவிட்டார். பதினைந்து தினங்கள் நமஸ் சார் டியூஷன் ஒத்திவைக்கப்பட்டது. முதல் வாரம் இரு நாட்கள் சிறப்பு வகுப்பில் எங்களை பிற பாடங்களை படித்து கேள்வி பதில்களை ஒப்புவிக்கும்படி சொன்னார் எம் எஸ் சி சார் . கணக்கைப் பொறுத்தவரை அன்று வகுப்பில் நடந்ததையே திரும்ப எழுத வேண்டும். அதன்பின்னர் எம் எஸ் சி சார் இந்த சிறப்பு வகுப்புக்கு வந்த அனைவரையும் பாடங்களைப் படித்து விட்டு துரையிடம் ஒப்புவிக்க வேண்டுமெனவும், துரை அனுமதியின் பேரில் அவர்கள் வீட்டுக்குச் செல்லலாம் எனவும் கூறினார். இந்த அறிவிப்பை விட எங்களைக் கடுப்பேற்றியது துரையின் செயல்பாடு. ஒப்புவிக்க தயாராக நாங்கள் எத்தனை முறை கைதூக்கினாலும் கண்டுகொள்ளாமல் பிற அனைவரையும் ஒப்புவிக்கச் சொல்லி கேட்பது, அவர்கள் திணறினால் நாளை வந்து படித்து ஒப்புவிக்குமாறு கருணையோடு கூறி அனுப்பி வைப்பது, எங்களையும் டச்சிங் குழுவினரையும் கடைசியாக அணுகுவது, நாங்கள் ஒப்புவிக்கையில் ஒரு முறை திக்கினாலும் மறுபடி படித்து வந்து முதலிலிருந்து ஒப்புவிக்குமாறு கூறி உட்கார வைப்பது, எப்போதும் எங்களையே கடைசியாக அனுப்புவது, ஓரிரு நாட்கள் அபூர்வமாக திரும்ப வரும் எம் எஸ் சி சார் (தீத்தி சென்று க பா கடையிலிருப்பவரை  அழைப்பது) இன்னும் ஒப்புவிக்காதவர்களை பிரம்படி கொடுத்து அனுப்புவது என நாங்கள் கூலிப்படையினரை நாடலாமா என யோசிக்கும்  அளவுக்கு துரை கோஷ்டியாரின் அடாவடிகள் எங்களை வெறியேற்றின. 

விளைவாக அந்த வாரத்தேர்வில் நாங்கள் 100% பெற முடியாமலாகி குறைந்தோம். அதுவரை நிறுத்தி வைத்திருந்த பிரம்படி தண்டனையை எம் எஸ் சி சார் இம்முறை கடுமையாகவே நிறைவேற்றினார். அதிலும் பிரேம் 96% மதிப்பெண்ணுடன் வந்தும் 8 அடிகள் கொடுத்தார். இம்முறை நான்கு அடிகள் உள்ளங்கையிலும், நான்கு அடிகள் புறங்கையிலும். இரட்டை அடி தண்டனை கைவிடப்பட்டும் பிரேம் ஏன் கூடுதல் அடிகள் வாங்கினார் என உங்களுக்கு கேள்வி எழலாம். அதற்குக் காரணம் பிரேம். வழக்கமாக அடி வாங்கியதும் “ஒப்புதல் வாக்குமூலம்” தர வேண்டிய பிரேம் அன்று மெளனமாக நின்றார். புன்னகை குதப்பிய உதட்டு வளைவுடன் எம் எஸ் சி சார் கேட்டார் – “என்னடே, போன வாரம் சாப்ட்ட நெய் பத்தலையோ? குரலே கேக்கலையே?”. பிரேம் உதடு துடிக்க “ நெய்யூத்தி சாப்பிடறது குத்தமா சார்?” என்றார். மேசையிலிருந்து துள்ளி இறங்கிய எம் எஸ் சி சார் “ஒழுங்கா படிச்சு மார்க் எடுக்க வக்கில்லன்னாலும் இந்த திமிரு புடிச்ச பேச்சுக்கு கொறச்சலில்ல. இப்ப மரியாதையா உறுதிமொழி சொல்லப்போறயா இல்லையா?” என கர்ஜித்தார். பிரேமின் துடிக்கும் உதடுகள் இறுகின. கண்கள் வெறித்த பார்வையாய் மாறின. வீம்பாக மெளனத்துடன் கையை நீட்டினார். உதட்டு வளைவு மறைந்து புருவ நெறிப்புடன் கண்கள் ஆழத்துக்குப் போய் முகம் விகாரமாக எம் எஸ் சி சார் நீட்டப்பட்ட பிரேமின் கையை  பிரம்பாலேயே   புறங்கையாகத் திருப்பினார். நாங்கள் அதிர்ந்து திரும்பி கண்களை இறுக மூடிக்கொண்டதால் “விஸ்ஸ் .. ரொப்”எனும் ஓசையை மட்டுமே கேட்டோம். இதுவரை கேட்காத அடிக்குரல் எம் எஸ் சி சாரிடமிருந்து கிளம்பியது –“இது ஆசிரியரை எதுத்து பேசி உறுதிமொழி சொல்லாததுக்கு. இப்ப உள்ளங்கையக்காட்டு, மார்க் கொறஞ்சதுக்கு பாக்கி இன்னும் 3 அடி இருக்கு.” இரண்டாமடிக்குப் பிறகு உறுதிமொழியை சொல்லுமாறு மறுபடி உறுமினார் சார். பிரேம் அதே முகபாவத்துடன் புறங்கையை நீட்டினார். பிரம்பின் கைப்பிடி காது வரை உயர்த்தப்பட்டு அடி இறங்கியது. அடுத்த இரு அடிகளைத் தொடர்ந்தும் பிரேம் மெளனம் சாதித்து தானே புறங்கையை நீட்டி அடிகளைப் பெற்றுக்கொண்டார். 8 அடிகளையும் நாங்கள் யாரும் பார்க்கவில்லை. ஆனால் பிரேம் முகத்தில் வெறிப்புத் தன்மை மாறவே இல்லை. மாறாக முகமெல்லாம் சிவந்து வெளிறிய கண்களுடன் பிரம்பை வீசி எறிந்து வெளியேறினார் எம் எஸ் சி சார். கலைமகள் கைப்பொருளென அவர் வைத்திருந்த பிரம்பு தரையில் கிடக்கப் பொறுக்காத துரையும், சிங்கியும் அதை பொறுக்கிக் கொண்டு சார் பின்னால் ஓடினர். வகுப்பு மொத்தமும் உறைநிலையில் இருந்தது.   

(தொடரும்)

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள்- 28 தெய்வநல்லூர் கதைகள்- 30

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.