தெய்வநல்லூர் கதைகள் 13

This entry is part 13 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

பெரிய கோவில்  சந்திப்புக்குப் பிறகு மொத்த வகுப்புமே மாறிப்போனது. அன்றைய மாலை நாங்கள் எவ்வித காரணமுமின்றி சும்மா சிரிப்பதே அம்மா சுகமென சிரித்து பேசினோம்.  வெள்ளி மாலை கோவில் சந்திப்பு முடிந்து சங்கீதாவும், மெஜூராவும் உடன் வர நாங்கள் மூவரும் என அனைவரும் ஒன்றாக கோவிலிலிருந்து கிளம்பி தெற்கு ரதவீதி வழியே சுற்றி மேலரதவீதி சந்திப்பில் “கேர்ள்ஸை” அனுப்பி விட்டு நாங்கள் மூவரும் வடக்கு ரத வீதி வழியே வந்து பஜார் சாலையில் திரும்பி பிரேம் வீடு வந்து சேரும் வரை யார் என்ன சொன்னாலும் சிரித்துக் கொண்டே இருந்தோம். பிரேம் வீட்டுத் திண்ணைக்கு வந்து அமர்ந்து தண்ணீர் குடித்ததும்தான் சற்று நிதானமடைந்தோம். பிரேம் அவர் வழமைப்படி வெகுவேகமாக சில தீர்மானங்களை சிவாஜியுடன் விவாதிக்க ஆரம்பித்தார். அவர் சொல்லி வரும் வேகத்தைப் பார்த்தபோது ஏற்கனவே சிந்தித்து முடிவெடுத்தவற்றை திருப்பிச் சொல்லும் வேகம் போல இருந்தது. சிவாஜி எவர் பேசினாலும் குறுக்கிட்டுப் பேசுபவர் அல்லர் எனினும் மிகச் சரியான இடங்களில் சுழலும் பற்சக்கரத்தின் அளவை மாற்றுவதிலும், வேகத்தடை என குறுக்கிட்டாலும்  பயணம் நில்லாதிருப்பதை உறுதி செய்வதிலும் கெட்டிக்காரர். ஆகவே பிரேம் பேசி வரும் விஷயங்களில் பலவற்றை ஆமோதித்தும் தனது ஐயங்களை தெளிவுப்படுத்திக்கொள்ளுதல்களாகவும், மறுப்புகளை ஆலோசனைகளாகவும் சொல்லி     தீர்மானங்களை ஒரு வடிவத்திற்கு கொண்டுவர தன்னாலான உதவிகளைச் செய்தார். சில தீர்மானங்களை என் யூகம், அனுமானம், முன்னறிவு, பட்டறிவு, கற்பனை, பெட்டிக்கு வெளியே சிந்தித்தல், கனவு, ஆழ்நிலை தியானக் காட்சி போன்ற எவற்றாலும் காட்சிப்படுத்தியே பார்க்க இயலவில்லை. பேருருவக் காட்சி கண்ட பார்த்தன் போல மெய்யுறைந்து இருந்தேன்.

இரவு நெருங்குகையில் பிரேம் வீட்டிலிருந்து கிளம்பி வரும்போதுதான்  என்னால் சற்று நிதானிக்க முடிந்தது. சிவாஜியிடம் கேட்டேன் – “ ஏல, இவன் சொல்லுதமாரியெல்லாம் செய்ய முடியுமாலா? மத்த கிளாஸ் பயலுகல்லாம் சிரிப்பானுவல்லா ?”

சிவாஜி ஒரு தீர்மானத்துக்கு வந்த பின் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுத்தீர்மானம் கூட அதை மாற்றிவிட முடியாது. “சரி,….கேர்ள்ஸ்கிட்ட பண்டம் மாத்தி வாங்கி திங்கோம்லா. அதுக்கு மொதல்ல என்ன பேசினானுவ? இப்ப அவனுகளே போயி அவங்க க்ளாஸ் கேர்ள்ஸ்ட்ட பண்டம் கேக்காங்க. மொதல்ல வீம்பு புடிச்சு பேசுவானுகன்னு நமக்கு தெரியாதால? பொறவு வந்து நம்மள்ட்டயே கேப்பானுக, எப்படில செஞ்சீங்கன்னுட்டு? நாம செய்யுதத செய்வோம். நீயும் யோசில. ஏதாச்சும் கொழப்பும்னா, அதான் காலைல வரச் சொல்லிருக்காம்லா. அப்ப பேசிக்கிடுவோம் “ – கற்பனையை எனக்கு காட்சி வழியேதான் நீட்டத்தெரியும். ஆனால் சிவாஜிக்கு கற்பனையை அனுபவத்தின் வழியே நீட்டித்து முடிவுக்கு வந்து விட முடியும். அன்றைய இரவுதான் என் வாழ்க்கையின் உறக்கம் வராத, யோசனைகள் மிகுந்த முதல் இரவு என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.     அடுத்து இருந்த இரு நாட்களும் சனி, ஞாயிறு என விடுமுறை தினங்களே என்றாலும் எங்களுக்கு நேரம் போதவில்லை.

சனிக்கிழமை காலையில் சிவாஜி என் வீட்டிற்கு வருமுன்னரே நான் தயாராக இருந்தேன். பிரேம் வீட்டுக்கும் நாங்கள் இருவரும்  போனபோது கருங்காலிக்கு நாணாத கோடாரியான பட்டவாரத்தி அம்மையின் பேரனான   சிவாஜியே நாணும்படி நடந்த சம்பவம் தெய்வநல்லூர் வரலாற்றில் முதன்முறை என சொல்லத்தக்க விதத்தில் நடந்தது. அய்யர்குடியின் திண்ணை தாத்தாக்களும், பாட்டிகளும் எட்டிப் பார்த்தார்களேயன்றி வேறு எதையும் நிகழ்த்தவில்லை. ஆனால் திங்கள் மதியத்திற்கு மேல் பள்ளியில் நெருப்பென பரவிய இச்சம்பவம் மேல்நிலைப் பள்ளி அண்ணன்களைக் கூட வியக்கச் செய்து “யாருல அந்த பிரேமு?” என எங்களிடம் விசாரிக்கும்வரை கொண்டுவந்தது. பாலகனி டீச்சர் மட்டுமே இதைக் குறித்து ஆர்வம் காட்டி   கூடுதலாக ஒரு கேள்வி மட்டும் கேட்டு ஐயம் தீர்த்துக் கொண்டார். ஆனால் முத்துசாமி சார் முகத்தில் சுருக்கம் தோன்றும்படி கேட்டுக் கொண்டாரே தவிர வேறெதுவும் சொல்லவில்லை. அப்படி நிகழ்ந்த சம்பவம் அன்று எங்களாலும் “கண்களை நம்பமுடியவில்லை” எனும் வரிக்கு பொருத்தமாக இருந்தது.

நானும் சிவாஜியும் பிரேம் வீட்டு வாயிற்படியில் ஏறும்போதே எங்களுக்குப் பழக்கமான குரல்கள் காதைத் தொட்டன. முதலில் படி ஏறிய சிவாஜி தயங்கும் பின்ன நொடியை உணர்ந்து நான் என்ன எனக் கேட்பதற்குள் இருவருமாக அக்காட்சியைக் கண்டோம். திண்ணையில் உள்ள பெஞ்சின் (அதில்தான் அமர்ந்து பிரேம் படிப்பது) இரு முனைகளிலும் பிரேமும், சங்கீதாவும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த காட்சி. நடுவே பிரேம் அம்மா கொண்டு வந்து வைத்திருந்த தட்டை, முறுக்கு, அப்பம் உடன் எப்போதும் போல சொம்பும், டம்ளருமாய் நீர். எங்களது நீண்ட நெடிய அனுபவமிக்க 13 வருட வாழ்க்கையில், தெய்வநல்லூர் உலக அனுபவத்தில் ஒரு பொம்பளப் புள்ள ஒரு பையன் வீட்டுக்கு வந்து பேசுவதாகிய மேற்கின் உதயசூரியனை நாங்கள் பார்த்ததுமில்லை. கேட்டதுமில்லை. அதைவிட பேரதிர்ச்சி பையன் வீட்டில் பொம்பளப் புள்ளய அனுமதித்து அமர்ந்து பேச இடம் கொடுத்து விருந்துபசரிப்பது. அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் படியிலிருந்து நுழைவதா, இறங்குவதா என குழம்பி நிற்கையில் சங்கீதாதான் முதலில் கவனித்தது. “இதோ வந்தில்லா” என அவர் எழ பிரேமும் எழுந்து எங்களை உற்சாகமாக வரவேற்றார். பிரேம் அம்மா வந்து எட்டிப் பார்த்து “வாங்கடா” என வரவேற்று விட்டு உள்ளே சென்று இன்னும் இரண்டு முறுக்குகளோடு அப்பமும் கொண்டுவந்து வைத்தார்- “பூ  வச்சுப்பியோன்னோ?”  என பிரேம் அம்மா சங்கீதாவைக் கேட்க அவர் கண்களாலும், தலையசைவாலும், புன்னகையாலும் கூடுதலாக குரலாலும் சம்மதம் சொன்னார்.

உடுக்கையை நிற்க வைத்தது போல பிரம்பால் செய்யப்பட்ட, தவிலுக்கு இருபுறமும் இருப்பதைப் போன்ற கயிறாலான வளையம் வைத்து அமருமிடம் செய்யப்பட்ட அதுவரை வேறெங்கும் பார்த்திராத இரண்டு இருக்கைகள் பிரேம் வீட்டில் மட்டுமே இருந்தன. பிரேமும், சங்கீதாவும் ஆளுக்கு ஒன்றாக அதில் அமர நாங்கள் பெஞ்சில் அமர்ந்தோம். முதல் ஐந்து நிமிடங்களுக்கு சிவாஜிக்கே கூட இயல்பாகப் பேச முடியவில்லை என்றால் என் நிலைமை  சொல்லுவதற்கில்லை. ஆனால் பிரேமும், சங்கீதாவும் பேசிக் கொண்ட இயல்பில் நாங்களும் ஈர்க்கப்பட்டு அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் எங்களுக்கும்  தயக்கங்கள் அனைத்தும் விலகியிருந்தன. நாகர்கோவில் என்பது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலம் என 96 ல் நான் நாகர்கோவில் போவது வரை நினைத்திருந்ததற்கு காரணம் அன்றைய தினம் சங்கீதா அவர் ஊரைப் பற்றி பேசியதுதான். அதன்பின் பள்ளியில் செய்யவேண்டியவற்றை, முதல்நாள் மாலை பேசியவற்றை சங்கீதாவிடம் சொல்ல அவர் அதில் ஐயம் கேட்டு தெளிவுற்று, தன் பங்கினை எவ்வாறு செய்வதென்ற தன் திட்டத்தை மெஜூராவிடம் பேசி விட்டு நாளை வந்து சொல்வதாகச் சொன்னார். மறுநாளும் அவர் வரப்போவதாகச் சொன்னது கூட எங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. 12.30 மணியளவில் வாசலில் சைக்கிள் மணி சத்தம் கேட்டது. சங்கீதா புன்னகையுடன் “அப்பா வந்தாச்சு” என எழுந்தார். பிரேம் திண்ணையிலிருந்து படியிறங்கி வாயிலுக்குச் சென்று “ உள்ளே வாங்க சார்” என வரவேற்றார், வீட்டின் உள்வாயிலில் தோன்றிய பிரேமின் அம்மாவும் “உள்ள வாங்கோ” என்றார். திண்ணை வாசலின் நிலைக்கு குனிந்து உள்ளே வந்தார் சங்கீதாவின் அப்பா. சங்கீதாவுக்கு ஆண் வேடமிட்டது போன்ற தோற்றத்துடன்  கனத்த மீசை அளவுக்கே புருவத்திலும் அடர்த்தியாக முடி இருந்த அவருக்கு காதுகளிலும் முடி இருந்தது. சங்கீதாவை புன்னகையுடன் நோக்கி “மோளே, போலாமா” என்றவர் அதே புன்னகையுடன் நிமிர்ந்து பிரேம் அம்மாவிடம் “ சார் வந்தா சொல்லிடுங்கம்மா” என்றார். “நிச்சயம் சொல்றேன். நீங்க காஃபி  குடிச்சுட்டு போலாமே, நிமிஷமா கலந்துர்றேன்” என்றார் பிரேம் அம்மா. “வேணாம்மா, இவ அம்மா சமையல் செய்து வச்சிருக்கும். நாங்க போனதும் சாப்பிடணும். பிரேம், நீ பின்ன அகத்துக்கு வா” என்றார். “ஒரு நிமிஷம்” என்ற பிரேம் அம்மா வீட்டுக்குள் சென்று திரும்பியபோது கையில் கால்முழம் அளவுக்கு நெருக்கிக் கட்டிய மல்லிகை இருந்தது.  சங்கீதாவை கைகளால் அருகிலழைத்து வைத்து விட்டார். சங்கீதா “போயிட்டு நாளைக்கு வரேன்” என பிரேம் அம்மாவிடம் சொல்ல “நாளையுமோ” என்றார் அவர் அப்பா. “நாள அச்சனுக்கு ஓஃபீஸ் டூட்டி இல்ல மோளே” என்று மெல்லிய குரலில் சொல்ல சங்கீதா “அச்சா, ஒரு மணிக்கூறு மாத்ரம்” என்றார். “கொழந்தைகள் லீவுல வேறென்ன பண்ணுவா, பாவம், அழைச்சிண்டு வந்து விடுங்கோ, வேறெங்கையும் போகாம நான் பாத்துக்கறேன். திண்ணைலயே இருந்து படிக்கட்டும், வெளையாடட்டும், உங்களுக்கு முடியறச்சே வந்து அழைச்சிண்டு போங்கோ. இல்ல, இவன் அப்பா வந்ததும் அவரையே கொண்டு வந்து விடச் சொல்றேன்” என்றார் பிரேம் அம்மா. சிலபல முகமன்களுக்குப் பிறகு சங்கீதா எங்களுக்கும் கைகாட்டி டாட்டா (அதுவரை நாங்கள் பஸ்ஸில், ரயிலில்  போகும் ஆட்களுக்குதான் டாட்டா சொல்ல வேண்டுமென நினைத்திருந்தோம்) சொல்லி அப்பாவுடன் சைக்கிள் ஏறிப் போனார்.    

மறுநாள் ஞாயிறு என்பதால் சற்று தாமதமாகத்தான் நாங்கள் பிரேம் வீட்டுக்குப் போனோம். சங்கீதா மட்டுமில்லாமல் மெஜூராவும் உடன் இருந்தது எங்களுக்கு திகைப்பாகத்தான் இருந்தது. ஆனால் அதிர்ச்சி, திகைப்பு, வியப்பு ஆகியன அடிக்கடி நிகழ்ந்து வழக்கமாகிவிட்டபடியால் நாங்கள் கண்ணிமைக்கும் பொழுதுக்குள் அவற்றை ஏற்று சமாளித்து ஒத்திசைவாக செயல்படக் கற்றுக்கொண்டுவிட்டோம்.     முதலில் எங்களைப் போலவே தயக்கத்தில் இருந்த மெஜூராவும் விரைவாக மீண்டு சிரித்துப் பேச ஆரம்பித்தார். முதல் நாள் பேசியிருந்தவற்றில் சில ஐயப்பாடுகளை, சமாளிக்க வேண்டியவற்றை பேசி முடித்ததும் பிரேம் அம்மா கொடுத்த வறுத்த வேர்கடலையை வெல்லத்துண்டு சேர்த்து தின்று முடித்தோம். சங்கீதா அப்பா வந்து மெஜூராவையும் சேர்த்து அழைத்துச் செல்கையில்    எங்களையும் அவர் அப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சங்கீதா. பிரேம் கண்ணால் பேசிய நொடியில் சிவாஜி சங்கீதா அப்பாக்கு “வணக்கம் சார்” சொல்ல, ஒரு நொடி இடைவெளியிலேயே எப்போதும் சிவாஜியைப் பின்தொடரும் நானும் அதற்கடுத்த நொடியில் “வணக்கம் சார்” சொன்னேன். சங்கீதா அப்பா புன்சிரிப்புடன் எங்கள் அப்பா பெயர், செய்யும் வேலை, தொழில் எல்லாவற்றையும் கேட்டார். கூடவே தான் மின்வாரியத்தில் வேலை செய்வதாகவும் சொன்னார். அன்று வீடு திரும்புகையில் திடீரென நாங்கள் பெரிய மனிதர்களாகிக் கொண்டிருக்கிறோம் எனும் உணர்வு ஒரே நேரத்தில் எங்களிருவருக்கும் ஏற்பட்டிருந்தது.  

திங்களன்று காலை பள்ளிக்கு வெகு சீக்கிரமே நானும், சிவாஜியும் போய்விட்டோம்.    சங்கீதாவும், மெஜூராவும் உள்ளே நுழையும்போதே எங்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே வந்தது எங்கள் அணியினருக்கே வியப்பாக இருந்தது. பிரேம் எப்போதும் வகுப்பு துவங்குவதற்கான முதல் மணிக்கும் இரண்டாம் மணிக்கும் நடுவில்தான் வருவார் என்பதால்  உடனடியாக ஒரு அவசரக் கூட்டம் கூட்டி வெள்ளி மாலையிலிருந்து ஞாயிறு வரை நிகழ்ந்தவற்றையும், எடுத்த முடிவுகளையும் அணியினருக்குச் சொன்னோம். எங்கள் அணியினரில் பலருக்கும் யானையின் சோற்று  உருண்டையை பூனையின் தொண்டைக்குள் திணித்தது போல இருந்தது. நாங்கள் பேசி முடிக்கவும் வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது. வகுப்பிற்குள் வந்து அமர்ந்த எல்லோர் பார்வையும் சங்கீதா மீதும் பிரேம் மீதும்தான் இருந்தது.   தெண்டில் அணியினருக்கு எங்களது புன்னகைப் பரிமாற்றம் குழப்பத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவசரக் கூட்டம் பதற்றத்தையும் கொடுத்திருந்தது. அவர்களது உளவுப் பிரிவின் செயல் தலைவரான ஊளப்பால் மு மா வை ஜாடையால் வினவுவதை எங்கள் அனைத்துப் பிரிவுகளும் கவனித்தாலும் அதை பொருட்படுத்தவில்லை.

அன்று மதியம் எங்கள் அணியின் உள்ளிருப்புக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கீதாவும், மெஜூராவும் கலந்து கொண்ட தகவல் தெண்டில் அணியினரை நிலைகுலைய வைத்து விட்டது. சங்கீதாவும், மெஜூராவும் எங்கள் அணியின் கூட்டத்துக்கு வந்தபோது எங்கள் அணியின் பிற உறுப்பினர்களும் என்னையும், சிவாஜியையும் போல குழப்பப்பதட்டம் அடைந்தனர். சற்று நேரத்திலேயே எங்களைப் போலவே அவர்களும் இயல்பாகி விட்டனர். மதிய உணவுக்குப் பின் வகுப்புகள் துவங்குவதற்கான மணியடித்ததும் குழுவின் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு மாலை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இப்போது மொத்த வகுப்புமே (தெண்டில் அணியினரைத் தவிர) சிரிப்பாணி மின்ன அமர்ந்திருந்தது. “கேர்ள்ஸ்” தரப்பும், பையன்கள் தரப்பும் பரஸ்பரம் முகம் திருப்பும்போதெல்லாம் புன்னகையைப், பரிமாறிக்கொண்டதால் மதிய வகுப்பு கூடுதல் ஒளியுடன் இலங்கியது. 

அன்று மாலை கோவிலில் எங்கள் ஆசியஜோதி அணியினரும், ஜான்சி ராணி அணியினரும் அலைகடலெனத் திரண்டதால் ஆறுமுக நயினார் சன்னதியே நிறைந்து வழிந்தது. ஆகவே தீர்மானங்களை முன்மொழிய, வழிமொழிய வசதியாக வெளிச்சுற்று பைரவர் சன்னதி அருகே கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. சிவாஜியும், மெஜூராவும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டிருந்ததால் தீர்மானங்கள் மீதான விவாதங்கள் குறைவாகத்தான் இருந்தன. கூட்டம்  முடிவடையும்போது பலருக்கும் பல பொறுப்புகள் தரப்பட்டிருந்தன. எனக்கு பிற உறுப்பினர்களுக்கு நிதானமாக விளக்கி தீர்மானங்களை புரிய வைத்து அவற்றை அமுல்படுத்துகையில் வரும் குழப்பங்களை சீர் செய்யும் பொறுப்பு. ஆசிரியர்கள் தரப்பைக் கையாளும் பொறுப்பு பிரேம், சங்கீதா, சிவாஜி ஆகியோரைச் சேர்ந்தது.

இந்த கூட்டுக் கூட்டத்தின் விளைவுகள் நாங்கள் எட்டாம் வகுப்பு முடிக்கும்வரை நீடித்தன என்பதுதான் முக்கியம். சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்லுவதென்றால் ;

  • ஜான்சிராணி அணியும், ஆசிய ஜோதி அணியும் இணைந்து ஒரே அணியாக மாறி மகாத்மா காந்தி (சுருக்கமாக மகாத்மா) அணியாக மாறின
  • பெண்கள் அணி என தனி அணியாக எதுவும் நீடிக்கத் தேவையில்லை எனும் தீர்மானம் கேர்ள்ஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டு வகுப்பாசிரியரான கணபதி சார் ஏற்றுக்கொள்ளும்வரை வலியுறுத்தப்பட்டது. (ஆகவே தனக்கு சார்பான பெண்கள் அணி எனும் தெண்டில் கோஷ்டியாரின் கனவு தகர்க்கப்பட்டது)
  • சேர்ந்து படித்தல் எனும் பரஸ்பர கல்வி பரிமாற்றத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி முதல் ஐந்து மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் கடைசி மதிப்பெண்களைப் பெற்றிருக்கும்  இருபது மாணவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். பள்ளி நேரத்துக்கு சற்று முன்பாகவே (சில சமயங்களில் பள்ளி நேரம் முடிந்தும் கூட)  இந்த குழுவினர் வந்து படிப்பைத் தொடரலாம். முக்கியமான நிபந்தனை – இக்குழுவைப் பயன்படுத்தி தனி அணி தொடங்கக் கூடாது. அப்படி துரோக எண்ணம் தோன்றினாலோ, அதன் அறிகுறிகள் வெளிப்பாட்டாலோ அது மகாத்மா அணியினரால் கடுமையாகக் கையாளப்படும்.
  • தலைமைப் பொறுப்பு தவிர பிற துறைகளுக்கான பொறுப்புகள் சுழற்சி முறையில் உறுப்பினர்களிடையே பகிர்ந்து அளிக்கப்படும். தலைமைப் பொறுப்பு பிரேம், சங்கீதா, சிவாஜி ஆகியோரிடையே கூட்டுப்பொறுப்பாக கையாளப்படும்.
  • நீதிநெறி வகுப்புகளில் வெறுமே தூங்கிக் கிடப்பதற்குப் பதிலாக கதைப்புத்தகங்களை ஒருவர் (பிரேம் கொண்டு வருவது) உரக்க வாசிக்க பிறர் கேட்கும் முறை கொண்டு வரப்பட்டது. ஆசிரியர்களின் தணிக்கைக்குப் பிறகே கதைகள் அனுமதிக்கப்படும் எனும் விதி முதன்மையாக இருந்ததால் ஆசிரியர்கள் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள் ( யோகாம்பாள் டீச்சர், பாலகனி டீச்சர் இருவரும் எங்களை விட ஆர்வமாக இதில் கலந்து கொண்டது எங்கள் மகாத்மா அணியினருக்குக் கிடைத்த வெற்றி என்றால் அது மிகையாகாது)
  • வகுப்பின் கடைசியில் இருக்கும் மரத்தடுப்பில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றும், இரு சீப்புகளும் (தலைமயிர் அடர்த்தி காரணமாக பெண்களுக்கு தனி சீப்பே தவிர பாலியல் பாகுபாடு காரணமல்ல ) வைக்கப்பட்டன. காலையில் வகுப்பில் நுழைந்ததும் அனைவரும் சென்று தலையை சரியாக வாரிக்கொண்டு வரவேண்டும். அவ்வாறே ஒவ்வொரு இடைவேளையிலும் செய்ய வேண்டும். யார் யார் தலை வாரிக்கொள்ள வேண்டும் எனும் அழகுக் கண்காணிப்பை சேமியாவும், ஊதா சுகுமாரியும் விரும்பிச் செய்தனர். தலை படிந்த மாணாக்கரைக் கண்டு கண்ண நீர் சுரந்த கணபதி சார் அவர் பங்குக்கு இரு சிறிய டப்பாக்களில் (சைபால் – சர்வ ரோக நிவாரணி) திருநீறும், குங்குமமும் எடுத்து வந்து “வகுப்பழகே ஆகுமாம் வாசிப்பழகு” எனும் இந்த திட்டத்திற்கு மெருகூட்டினார் (சீப்புகள் வாரம் ஒருமுறை சுத்தம்  செய்யப்படும் ; பொறுப்பு- அந்த வாரத்துக்கான துப்புரவுப் பணிப் பிரிவு)
  • எல்லாவற்றையும் விட தலைமை அணியினர் செய்த சாதனை பள்ளி வரலாற்றில் இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது ( எங்கள் வகுப்பில் படித்தவர்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் அது) – இனி உணவுப்பண்டங்களை வகுப்பிற்குள்ளேயே பகிர்ந்து உண்ணலாம் எனும் அனுமதியை ஆசிரியர்களிடமிருந்து பெற்றது- அனுமதியை சாத்தியமாக்கிய செயல்பாடு – வகுப்பில்  இரு குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டு அனைத்து குப்பைகளும் அதில் இடப்படும் என்பதுதான் – வகுப்பிற்குள் சிறு துண்டுத் தாள் கூட கிடக்காத கூர் மிகு தூய்மை என்பதை கண்காணிக்கும் பணியில் அக்கா பாட்சாவும், டொம்ப்ளீ செல்வமும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இந்த திட்டத்திற்கு தமது மகத்தான வரவேற்பை நல்கி பிற வகுப்புகளும் இதைப் பின்பற்ற கடுமையாகப் பரிந்துரைத்தவர் பள்ளி தூய்மைப் பணியாளரான கொண்டாரம்மா. 
  • ஆசிரியர்கள் மிக உற்சாகத்துடன் ஆதரவு தெரிவித்த மற்றொரு முன்னெடுப்பு “நலம் நாடும் நட்பு”. அதாவது அணியின் உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு ( என் பண்டத்தை நீ எப்படில தொடலாம்?) ஏற்பட்டால் அவர்கள் அதை அவர்களுக்குள்ளாகவே நீடிக்காமல் உடனே சமாதான பேச்சுவார்த்தைக் குழுவுக்கு கொண்டு வர வேண்டும். வேறுபட்டு பேசுகையில் இருவரும் மூன்று முறைக்கு மேல் எதிர் வார்த்தையாடுதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைக் கண்காணிக்கும் பணியை உப்புக்காரியும், கூடுதல் பொறுப்பாக சிவாஜியும் ( தனி பொறுப்புடன் கூடிய பணியாக  ஈத்தக்குச்சி  முருகன் சிவாஜிக்கு இதில் உதவுவார்) மேற்கொண்டனர்
  • பிரேம் தன் அனைத்து திறன்களையும் பயன்படுத்தி கொண்டுவந்த “வீட்டுப்பாட விடுபடலுக்கான தண்டனை” முறை மாற்றம் தெண்டில் கோஷ்டியாரைக் கூட மனம் மாறும்படிச் செய்தது – ஆசிரியர்களிடம் அவரும், சங்கீதா, சிவாஜியும் இணைந்து வாதாடி சோதனை முறையில் ஒரு மாதத்திற்கு  அனுமதி வாங்கிய இந்த முன்னெடுப்பு நற்பலன்களை தந்ததால் இட்ம்முறை அனைத்து ஆசிரியர்களாலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது – அதன்படி வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதில்லை ; மாறாக காலை, மதிய, மாலை இடைவேளைகளில்  உட்காராமல் நின்று கொண்டே விடுபட்ட பாடங்களை எழுதி முடித்து ஆசிரியரிடம் கையெழுத்து நேரில் சென்று பெற வேண்டும்; ஒரு வாரத்தில் ஒருமுறை மட்டுமே நின்று எழுத அனுமதி; அதே வாரத்தில் இரண்டாம் முறையும் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்தால் இடைவேளைகளில் முட்டி போட்டவாறே எழுதி முடிக்க வேண்டும். அதே வாரத்தில் மூன்றாம் முறை எனில் முட்டி போட்டு எழுதி முடிப்பதோடு மட்டுமல்லாமல் வகுப்பின் சன்னல்களை (ஆறு சன்னல்கள்) முழுவதும் துடைக்க வேண்டும்.    இதைக் கண்காணிக்கும் பணி டும்ரீக்கோல் குருசாமி, நெட்டை வள்ளிமயில் மற்றும் மு மா வுக்குத் தரப்பட்டது

இன்னும் சில முன்னெடுப்புகள் கதை வளருங்கால் விவரிக்கப்படும் என்பதால் இம்முன்னெடுப்புகளின் பக்க விளைவுகளை இங்கு சொல்லலாம்.

  • இம்முயற்சிகளின் சிறப்பு அனைத்து ஆசிரியர்களால் புகழப்பட்டதும், தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டியன் அவர்களால் பாராட்டப்பட்டதும் பிற வகுப்பினர் முயற்சித்து தோல்வி கண்டனர்
  • பிற வகுப்பாசிரியர்கள் கூடுதல் ஆதரவு தெரிவித்து முயன்றும் அவர்கள் வகுப்புகளில் ஒருசிலவற்றையே நடைமுறைப்படுத்த இயன்றது
  • ஆசிரியர்களின் தனி உரிமையான  எதேச்சதிகார செயல்பாடுகளை மாகாத்மா அணியினர் கட்டுப்படுத்துவதான போக்கு என இந்த முன்னெடுப்புகளைக் குறித்து சங்கரநாராயணன் சார், முத்துசாமி சார்  போன்ற ஒருசிலர்  முணுமுணுத்தாலும் தலைமை ஆசிரியரின் சீரிய ஆதரவாலும், டீச்சர்களின் ஒருமித்த ஆதரவாலும் முணுமுணுப்புகள் மேலெழவில்லை   
  • பள்ளியில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு எனப்படும் இன்ஸ்பெக்டர் சார் விசிட் நடைபெற்றபோது ஏழாம் வகுப்பைப் பார்த்து அவர் வியந்து நின்றதும், அரை மணி நேரத்துக்கும் மேலாக வகுப்பில் அமர்ந்து பேசி விஷயங்களை அறிந்து கொண்டதும் கூட பள்ளி அளவில்தான் பேசப்பட்டன. ஆனால் அவர் ஆய்வு முடிவில் தலைமை அணியினரை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து கை குலுக்கிப் பாராட்டி ஆளுக்கு ஒரு பென்சில் பரிசளித்த நிகழ்வும், தனது அலுவலகம் திரும்பியதும் இவற்றைத் தனியாகக் குறிப்பிட்டு பள்ளிக்கு பாராட்டுக் கடிதம் எழுதி அதனை சுற்றறிக்கையாக மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் அனைத்துக்கும்  அனுப்பியதும் மேல, கீழ பஜார்களிலும் பேசுபொருளாயின. அதற்கடுத்த மாதத்தில் திருனவேலிக்கு மீட்டிங் போய் வந்த செந்தூர்பாண்டி சார் அனைத்து ஆசிரியர்களையும் எங்கள் வகுப்புக்கு வரச்செய்து தலைமை அணியின் மூவருக்கும் பேனாவும், பிற அனைவருக்கும் பென்சிலும் தன் செலவில் பரிசாக வழங்கி கண்கலங்கிப் பாராட்டினார்

இவற்றை ஒரே நாளில் நாங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும் அதில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளும் எங்களை மகிழ்ச்சி கொள்ள வைத்த நாட்களாகவே அமைந்தன. ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இம்முன்னெடுப்புகளில் பங்கேற்றது வாழ்நாள் நினைவாக இனித்திருக்கிறது இன்றும். எல்லா வசந்த காலங்களுக்கும் முடிவுண்டு என்பதை அடுத்த ஓராண்டில் மறந்திருந்தோம். அதை இனி பார்க்கலாம்…

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் -12தெய்வநல்லூர் கதைகள் 14 >>

One Reply to “தெய்வநல்லூர் கதைகள் 13”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.