கண்ணனேந்தல் பறவைகளின் ஒளிப்பாய்ச்சி

சிவக்குமார் கணேசன் அவர்களின் நான்காவது கவிதைத் தொகுப்பு  “துதிக்கைத் துழாவல் “  என்று நினைக்கிறேன். படைப்பாளி என்பதைத் தாண்டி சூழலியல் சார்ந்த வண்ணயமான ஒளிப்படங்கள் எடுப்பதில் தேர்ந்தவர். காலைப்பொழுதில் கண்மாய்க்களுக்குச் சென்று நீர்ப்பறவைகளையும் மயில்களையும், குயில்களையும், முயல்களையும், கரிச்சான் மற்றும் ஊர்க்குருவிகளை ஒளிப்படங்கள் எடுப்பதோடு மட்டுமன்றி மரங்களடரந்த குறுங்காடுகளுக்குச் சென்று யானைகளையும் இயற்கையின் வடிசாற்றுக் காட்சிகளைப் பதிவுசெய்பவர். பழம் பறிக்கச் செல்லும் மூக்கு சிவந்த பச்சைக்கிளிகளோடு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர்,மதுரை நீர்வளத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றினாலும் தனது மனதிலும்  இருதயத்திற்குள் பதிந்திருக்கும் ஈரச்சுவடுகளிலும் எக்களித்துக் கொப்பளிக்கின்றன அன்றாடங்காட்சிகளின் நவீனக்கவிதைகள். 

துதிக்கைத் துழாவல்

இரண்டாம் முறையாக குளியலறையில் பார்த்தேன்
இருளில் மலர்ந்த ஒளியில்
கருப்பும் மஞ்சளுமாய்
தயங்கி நகர்ந்த உன்னை
இரண்டாம் முறையாக
கொல் அதை என அதிர்ந்த குரலை
இரண்டாம் முறையும் மறுதலித்தேன்.

இரண்டாம் முறையாக
தீபாவளி சங்குச் சக்கரமாய்ச்
சுருண்டிருந்த உன்னை
இரண்டாம் முறையும்
அதே குச்சியால்
அதே சிறு நெகிழி முறத்தில் தள்ளினேன்.

இரண்டாம் முறையும்
காற்றில் உன் துதிக்கைத் துழாவல்
எத்தனை அழகு
இரண்டாம் முறையும்
வீட்டிற்கு வெளியே
அதே இடத்தில் தவழவிட்டுச் சொன்னேன்.

மூன்றாவது முறையாக
குளியலறைக்குள் வராதே
அதிரும் குரலை
மூன்றாவது முறை
நான் இதுவரை மறுதலித்ததில்லை.

பாம்புகளின் மீதிருக்கும் கரிசனத்தை பதிவு செய்கிறது இக்கவிதை. பாம்புகள் வாழும் இடத்தை வீடுகளாக்கிக் குடியேறினால் அதன் வாழ்விடத்திற்குள் வரத்தான் செய்யும். அப்பாம்புகளை தத்தமது தற்காப்புக்காக அடித்துக் கொன்றுவிடுவதும்,வாயில்லாப் பூச்சி பாவம் அதப் போய் எதற்கு அடிக்கனும் என்று விரட்டிவிடுவதும் உண்டு. நூலாசிரியர் இரண்டாவது வகையை சார்ந்தவர் போல் தெரிகிறது.உயிர்களிடத்தில் பன்மடங்கு வைத்திருப்பதை அறிய‌ முடிகிறது.

”குளிர்சாதனப் பெட்டியில் கொல்லப்பட்டவர்” என்ற தலைப்பில் ஒரு கவிதையை இப்படி எழுதியிருக்கிறார்.

ஒங்க அம்மா கமலாக்காவோட
மீன் கொழம்புக்குத் தனி ருசிப்பா
கண்கள் மின்ன
வாயில் நீரொழுகச் சொன்னவரின் கையில்
வெற்று அலுமினியப் பாத்திரம்
சாகற வயசா ஒங்கம்மாவுக்கு?
கடவுளுக்குக் கண்ணில்லையப்பா…

யாசகம் பெற்று வயிற்றைக் கழுவிக்கொண்டு வாழும் ஒருவன் தனக்கு தினமும் உணவளித்து பசியாற்றிய பெண்ணின் மரணச் செய்தி கேட்டு துயரப்படும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றன.

நிறைந்த கண்களோடு
சொன்னவரின் கண்களின்
கால நிலை மாறி
சட்டென்று எரிந்தது குரோதம்
இந்தச் சனியந்தானப்பா
எங்களையெல்லாம் கொன்னது.
அவரின் விரல் நீண்ட திசையில்
மெல்ல உறுமியது குளிர்பதனப் பெட்டி
எங்கே அவர்?
அதிர்ந்ததொரு குரல்
ராப் பிச்ச வந்திருக்கேன் தாயி
சோறு, சாம்பார், மீன் குழம்பு,
ரசம் என கலவையான மணம்
சுவாசங்களில் நிறைய,
கையில் பாத்திரத்தோடு வரும்
அம்மாவைப் பார்த்தேன்…

காடாத்துணியில் பெருவிரல்களும் நாடியும் இறுக்கமாக் கட்டப்பட்டு உறைந்த நிலையில் குளிர்சாதனப்பெட்டியில் படுத்துக் கொண்டிருக்கும் அம்மாவையும், அலுமினியப் பாத்திரங்களோடு ‌யாசகம்‌ கேட்டு வரும் யாசகனையும் ஒப்பிட்டுப் பேசுகிறது கவிதை. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருப்பதைக் கேட்டிருப்போம். “ஏரும் உழவும் நெல்லுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் எமதூருக்கு, வழிப்போக்கர்களாக வருபவர்களுக்கும் யாசகம் கேட்டு வருபவர்களுக்கும் அள்ளிக் கொடுத்து பசியாற்றிய எமதூர் சம்சாரிகள் தானமும் தர்மமும் செய்ததால் எமதூருக்கு தானம்தர்மம் என்ற பெயரும், பிற்காலத்தில் மருவி தானத்தவம்” என்றாயிற்று என்று முப்பாட்டன்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நூலாசிரியரின் இக்கவிதையை வாசிக்கையில் எமதூர் சம்சாரிகளின் அறவாழ்வும் நினைவுக்கு வருகிறது. சிறுமலைச் சிகரங்களிலிருந்து பறந்திறங்குபவன் என்கிற தலைப்பில் சிறுமலையின் அழகியலையும் விளக்குகிறார். கொடிமலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும் புழுதியோடு‌‌சேர்ந்த மண் வாடையும் ,காட்டுப்பறவைகளும்,முதிர்ந்த பழமரங்களும் எங்கும் நிறைந்து காணப்படும் பச்சையத்தின் பெருங்குவியலை நமது கண் முன் அருக பெருகத் திரட்டிக் குமிக்கிறார். பதினான்கு கொண்டை ஊசி வளைவுகளைப் பற்றியும் அதன் அகடு முகடுகளையும் வர்ணிக்கின்றன. மலையின் உச்சியில் நின்று வெயில் தகிக்கும் திண்டுக்கல்லைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனின் கண்களில் மிளிரும் நிலவியல் அமைப்பைக் கூறுகின்றன கவிதைகள்.

பிறந்த ஊரால் கைவிடப்படுபவர்கள்
எங்க ஆளயே காணோம்?
என்று அலைபேசும் உறவுகளிடம்
சொல்ல வார்த்தைகளின்றித் தவிக்கிறார்கள்.
வேலை நிமித்தம் வெளியூருக்கு
வாழ்க்கைப்பட்டவர்களை
விஷேசங்கள், துக்க நிகழ்வுகளை மறைத்து
முதலில்
சொந்த ஊரின் மனிதர்கள்
கை விடுகிறார்கள்.
பிறகு பிறந்த ஊரே
கை விட்டு விடுகிறது…

பணி நிமித்தம் காரணமாக அலைகுடிகளாக நகரங்களுக்கும் முது ஊர்களுக்கும் சென்று வாழ்க்கைப்பாட்டை நடத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தத்தமது சொந்த ஊரை நினைவுகளில் அசைபோடுவதும், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் மட்டுமே ஊர்களுக்கு வந்து சென்று போவார்கள். ஒவ்வொரு பயணத்தின் போதும் அவ்வூரின் பெருத்த வலிகள் இருதயத்தைச் சுட்டெரிக்கும். வேறு வழியின்றி கடந்து செல்வார்கள். முதலில் சொந்த ஊர் மனிதர்கள் கைவிடுவதும் பிறகே ஊரே கைவிட்டு விடுகிறது என்று முடிக்கிறார் கவிதையை நூலாசிரியர் .

பழனி மலையடிவாரத்தையும் மின்னொளியில் மிளிரும் அச்சிறு நகரத்தையும் கவிதைகளில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். இத்தொகுப்பிலே இந்தக்கவிதையே மிகச் சிறந்த கவிதை என்று சொல்லலாம்.நவீன மொழியில் இக்காலத்தின் அசலை உணர்ச்சிகர வசீகர தொனியில் சுட்டியுள்ளார்.

முள்முடியை,
துருவேறிய ஆணிகளை அகற்றுகையில்
கடும் வேதனையில்
சுருங்கி மீண்டது அந்த அழகிய முகம்.
முக ரோமங்களெல்லாம்
நனைய நனைய
பருகிய குவளை நீரில் அணைந்தது
அத்தனை வருட தாகம்.

எதார்த்தமான வருணிப்பை இக்கவிதையை வாசிக்கும் போது ஆசிரியரின் பார்வை தென்படுகிறது. ரோமங்களை கிளை பரப்பிய வேர்முகம் ,அதனைப் பிடுங்கியெரியும் போது படும் வலியும் காயமும் ,அழகிய சுயரூபமும் கலைந்து விடுகிறது . நெடுங்காலத் தாகத்தால் குவளைநீரில் தணிக்கும் முகரோமங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

இரத்தம் உறைந்திருந்த
காயங்களையெல்லாம்
கழுவித் துடைத்து மருந்திட்டேன்.
புன்னகைத்தபடி
அந்த இளைஞன் சொன்ன
வார்த்தைகளின் மொழியெதுவெனத்
தெரியவில்லையானாலும்
நன்றியென்பதை உணர்ந்தேன்.
பரவாயில்லை என்று சிரித்த
என்னை இறுகத் தழுவிக் கொண்டான்.
நானழிந்து பிரபஞ்சத்தின்
ஒரு குறுங்குறுந்துகளாகி
வாழ்வில் இதுவரை நானறியாத
பரவசப் பெருஞ்சுழலில் சுழன்று
நிகழுக்கு வந்த போது
என் உடலில்
அவனது இதமான
வெம்மை மட்டுமே மீதமிருந்தது.
சாய்ந்திருந்த, குருதியுறைந்த
மர வழவழப்பைத்
தடவின என் கைகளில்
அதே, அதே இதமான வெம்மை..

மேற்காணும் கவிதை பெண்ணை மையப்படுத்தி அவளின் ஏக்கமும் எத்தனிப்பும் பற்றி சித்தரிக்கிறது. தான் கண்ட காட்சியை இப்படியும் உவமைப்படுத்தி எழுதியிருக்கிறார்

“நீரிலிருந்து விடுபட்டு
அந்தரத்தில் நடனமிட்டு
நீரினுள் வீழ்ந்து மறையும்
கானாங்கெழுத்தியை ரசித்தபடி
இதமான வெம்மையில்
எலுமிச்சை மணக்கும்
பாலற்ற தேநீரை
ஒரு வாய் பருகுகிறேன்”..

ஒரு வாய் தேநீர் பருகும் நேரத்தில் கவிஞனின் இரசனை எங்கே போய்க்கொண்டிருக்கிறது பாருங்கள். ஆச்சரியப்படுத்துகின்றன வரிகள்.

கருங்கொண்டை மாங்குயில்கள்
பறந்து மறையும்
மரங்களடர்ந்த மலைமுகட்டில்
எட்டிப் பார்க்கும்
கனத்த மேகங்களில்
ததும்பும் மழைத்துளிகள்…

தான் ஒரு இயற்கைக் காதலன் என்பதனை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றன சிவக்குமார் கணேசனின் கவிதைகள். அதிலும் குறிப்பாக “மாங்குயில்களின் கருங்கொண்டை” என்ற வார்த்தையை கவிதைகளில் நிறைய இடங்களில் புழங்குகிறார். கொன்றை மலர் அரும்பிய மரத்தைப் போன்றிருக்கும் மயிலின் கொண்டைகளை யார் தான் ரசிக்காமல் இருக்க முடியும். ஆசிரியரையும் அகவியலைக்கின்றன மாங்குயிலின் கருங்கொண்டைகள் என்பதனை உணர்த்துகிறது.
குளிர்சாதனப் பெட்டியில் எனது உடலைவைக்காதீர்கள் ,கடுங்குளிரைத் தாங்க முடியாது,நாற்காலியில் அமர்த்துங்கள் என்று இறந்து போன ஒருவரின் ஆன்மா பேசுவதும் சமகாலச் சம்பவங்களை பிணையும் கவிதைகளும் உள்ளன. காமதாண்டவம் எனும் தலைப்பில் மனிதர்களின் தீராக் காமம் குறித்து விவரிக்கிறது ‌.

மிகக்குறிப்பாக நூலாசிரியர் மதுரையில் பணியாற்றியதால் கண்மாய்கள் குறித்து இயற்கைக் காட்சிகளை பெரும்பாலான கவிதைகள் கொண்டிருக்கக்கூடியவையாக உள்ளன. கண்ணனேந்தல், நாகனாகுளம், போன்ற தல்லாகுளத்தைச் சுற்றி ஐயர் பங்களாவரை விவரிக்கின்றன கவிதைகள். அவ்வகையில் தன் கண்களில் உள்வாங்கி ஒளிப்படமாக்கி அதனைப் படைப்புகளில் உயிர்பெறச் செய்திருப்பதாக அமைந்துள்ளன.
இருப்பினும், பயணத்தோடும், வாழ்ந்தனுபவத்தோடும் நிகழ்காலத்துச் சம்பவங்களை பெருமளவில் கூர்தீட்டப்பட்டிருக்கிறார் கவிதைகளின் வாயிலாக கவிஞர் சிவக்குமார் கணேசன்.

நூல் குறிப்பு:
துதிக்கைத் துழாவல்
கவிதைகள்
சிவக்குமார் கணேசன்
வெளியீடு:மௌவல் பதிப்பகம்
பக்கங்கள்: 126
விலை : 140
தொடர்புக்கு: 94435 58201


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.