தெய்வநல்லூர் கதைகள் 14

This entry is part 14 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகளுக்கு இரு மாதங்களே இருந்த நிலையில்தான் எங்கள் வகுப்பில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் வெகுவேகமாக அமலாயின. தெண்டில் மண்டையும், அவர் நண்பர்களும் முதலில் ஒட்டாமல் இருந்தாலும் இம்மாற்றங்களின் பலன்களை உணர்ந்ததாலும், தனித்து விடப்படுவோம் என தெரிந்து கொண்டதாலும் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டனர். வகுப்பு ஆசிரியர் கணபதி சார் ஒவ்வொரு நாளும் பாசமலர் சிவாஜி போலவே மாறிக் கொண்டு வருவதாக டொம்ப்ளீ சொன்னது (பாமசலர் ஜிவாசிமா ராயிட்டசார்) உண்மையாகவே தெரிந்தது எங்களுக்கு. வகுப்பில் என்ன சலுகை கேட்கப்பட்டாலும் கொடுக்கப்பட்டது. பயல்களும், கேர்ள்ஸ்களும் இயல்பாகப் பேசிக்கொள்வது விசாரணைக்குரிய விஷயமாக இல்லாமலானது. இந்த நிலையில்தான் எங்கள் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடலாம் எனும் முடிவு எடுக்கப்பட்டது. 

இதற்கு முன்பு ஆண்டுவிழா என்பது மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் (நடுவே மரத்தடுப்புகளால் பிரிக்கப்பட்டு) இருக்கும் வகுப்பறைகளை ஒன்றாக ஆக்கி இரு மேசைகளுக்குப் பின் நான்கு நாற்காலிகள் போடப்பட்டு மாலை நான்கு மணி அளவில் நாங்கள் அனைவரும் நெருக்கமாக அமர வைக்கப்பட்டதும் பாய் சாரோ, அய்யர் சாரோ அழைக்கப்பட்டு அவர்கள் காந்தி, நேரு, போஸ், வ உ சி, பாரதியார் ஆகியோர் வாழ்க்கையை அருகிருந்து பார்த்தது போலவே பேசி அவர்களைப் போலவே எங்களையும் வாழச் சொல்லி ( நர்ரூமூலடகலே கெடையாது, நமப்படிலபக்கல் வுட ?- டொம்ப்ளீ வருத்தம் – நம்மூர்ல கடலே கெடையாது, நாம எப்டில கப்பல் விட? , ஏல, பெரியவங்களா ஆனப்புறம்தானல அப்டி ஆவணும், வ உ சி ஒண்ணும் ஆறாப்பு படிக்கையிலயே கப்பல் வுடல்லலா, அரவங்காட்டாம இருல – சிவாஜியின் அடிக்குரல் ஆற்றுப்படுத்தல்) 5.30 க்கு தேசிய கீதம் பாடி முடிக்க எங்களுக்கு பச்சைக் காகிதம் சுற்றிய சாக்லேட் ஆளுக்கு ஒன்றாகத் தரப்படும். இடையே அந்த ஆண்டின் அரையாண்டுத் தேர்வு வரை முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு ( 1- டபரா டம்ளர், 2- தட்டு போலவும், கிண்ணம் போலவும் ஒருங்கே காட்சி தரும் தட்ணம், 3- காம்பஸ் டப்பா). இவை தவிர மூவருக்கும் மைப்பேனா(அய்யர் சார் நற்கொடை), பென்சில்-அழிரப்பர் (பாய்சார் நற்கொடை )  ஆகியவற்றுடன் கூடுதலாக இரண்டு சாக்லேட்டுகள் என்ற அளவில் விழா சாதாரண நிறைவு பெறும். தலைமை ஆசிரியர் அறையை ஒட்டிய எட்டாம் வகுப்பு மாலை மூன்று மணிக்கே காலி செய்யப்பட்டு வடை, மைசூர்பாகு, மிக்சர் மற்றும் தேநீர் ஆகியவை பரிமாறப்பட தயாராகும். விழா முடித்து வந்த ஆசிரியர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் மட்டுமே இங்கு அனுமதி. பரிசு பெற்றவர்கள் கூட இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தேநீர் விருந்தோடுதான் விழா இனிதே நிறைவுபெறும்.  

இந்த ஆண்டு தலைமை ஆசிரியர் செந்தூர்பாண்டி சார் வேறு மாதிரி யோசித்திருந்தார்.    அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளியான நியூ ஏல் இங்லீஷ் ஸ்கூல் நடத்திய ஆண்டுவிழா. எல் கே ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை – எல் கே ஜி யை முதன்முதலில் தெய்வநல்லூரில் அறிமுகம் செய்த நர்சரி பள்ளி நியூ ஏல் இங்க்லீஷ் ஸ்கூல் என அறிக.  தெய்வநல்லூரே வியக்கும்வண்ணம் ரதவீதியில் பந்தல்  மேடை போட்டு     புளியங்குடியிலிருந்து மைக் செட்டும், சங்கரன்கோவிலில் இருந்து டிஸ்கோ லைட்டுகளும்( போட்டோ எடுக்கும்போது அடிக்கும் ஃப்ளாஷ் போல மேடையில் அடிக்கும் லைட்டும் (நின்னுக்கோரி வர்ணம் அமலா நினைவுக்கு வந்தால் நீங்கள் வயதடைந்தவரே), ஒரு உயரமான ஸ்டாண்டில் பொருத்தப்பட்ட லைட்டுக்கு முன்பு இட்லிதட்டை சுழல விட்டது போல ஒவ்வொரு இட்லி வாயிலும் வெவ்வேறு வண்ண காகிதங்கள் ஒட்டப்பட்டு சுழற்றி விட்டால் பல வண்ணக் கலவைகளை அள்ளி இறைக்கும் லைட்டும் ) கொண்டு வரப்பட்டு அனைத்திற்கும் முத்தாய்ப்பாக ராஜபாளையத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நாடகங்களுக்கான ஒப்பனைக் கலைஞரும். பள்ளி ஆண்டுவிழாவுக்காக போஸ்டர் அடித்தமைக்காக ஊரில் முதன்முதல் பட்டமும் நியூ ஏல் இங்க்லீஷ் ஸ்கூலுக்கே சேரும். இன்னும் சில “ஊரில் முதன்முதல் பட்டமும்” அப்பள்ளிக்கே சேரும்- விழாவை ஃபோட்டோ எடுத்தது, ஆசிரியைகளுக்கு (போன மாதம் பள்ளி முடித்த அக்காக்கள்) மேடையில் பட்டயம் அளித்து கெளரவித்தது. விழாவின் முந்தைய ஒரு வாரமும், விழா முடிந்த அடுத்த ஒரு மாதமும் ஊரில் இதுவே பேச்சாக இருந்தது. ஏல் பள்ளி குழந்தைகள் வீட்டில் அந்த போட்டோக்கள் புளியங்குடி ஸ்டூடியோக்களில் சட்டமிடப்பட்டு (தெய்வநல்லூரா அண்ணாச்சி, ஏல் பள்ளிக்கூட போட்டாதான? சட்டம் போட 20 ரூபா, ப்ரேம் போட 25 ரூபா ஆவும். எதுன்னு சொல்லி போட்டோவ கொடுத்துட்டு போயி கண்ணா தியேட்டர்ல படம் பாத்துட்டு வாங்க. ரெடியாயிரும்) இன்றும் எளிதாகக் காணக் கிடைக்கும்.  ஆனால் அன்று  மாட்டிய புதிதில் பக்கத்து ஊர் உறவினர்கள் வந்து பார்த்து போகும்படிக்கு அவை தொடர்காட்சிப்பணியில் இருந்தன. 

இரண்டாவது காரணம், அந்த கல்வியாண்டில் ஊரின் மொத்த பிள்ளைகளும் எலுகேசி படிக்க ஏல் பள்ளியில் சேர்க்கப்படுவதற்காக காத்திருந்ததாக நம்பப்பட்ட வலுவான புரளி ( அடேயப்பா, தம்பி ஆள் வயசுல கொறச்சலா இருந்தாலும் காரியத்துல கெட்டில்லா. அசத்திட்டீகளே ஆண்டுவெழாவ, எம் ஜி ஆர் படம் பாத்தது மாரில்லா இருந்துச்சு, இந்த வருசம் என் அண்ணன் பேத்தியாள படிக்கப் போடுவாக. நான் கண்டிசனா நம்ம பள்ளிக்கூடத்துலதான் சேக்கணும்னு சொல்லிருக்கேம்லா- ஏல் பள்ளியின் நிறுவனரான சிவபதியிடம் ஜெமினி டீக்கடை பெரிய மனித சபை உறுப்பினர்கள்; ஜெமினிண்ணே, அவுக டீ க்கு நம்ம கணக்குல பற்று எழுதிக்கிடுங்க – ஏல் சிவபதி தொடர்ந்து 11 ஆவது நாளாக). 

தான் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் ஜவகர் நடுநிலைப் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைந்ததாக அவப்பெயர் வரலாறில் வந்து விடக்கூடாது என முடிவெடுத்த மயிர் நீப்பின் உயிர் வாழா பரம்பரை செந்தூர்பாண்டி சார் நாலாப்பு கூட இல்லாத பள்ளியே அவ்வளவு பெரிய விழா நடத்துகையில் 8 ஆம் வகுப்பு வரையுள்ள தனது பள்ளியின் விழா யாரும் அறியா வண்ணம் ஒரு அறைக்குள் நடந்து முடிவதா என்ற தன் மனசாட்சியின் (காலையில் தலைவாருகையில் கண்ணாடியில் தோன்றிற்று என ஒரு தரப்பும், கோவிலுக்கு வந்த பிற பெண்டிரின் அலர் கேட்டு அனலிடை வழுதுணங்காய் என ஆன அவர் தம் திருவாட்டி காட்டிய மறுமுகம் என மற்றொரு தரப்பும் பேசியமை தெய்வநல்லூர் தலைமை அலுவலகத்தில் ரகசியக் காப்பு பிரமாணமாக இருப்பதால் விரிவாக விளக்கப்படவில்லை) உந்துதல் கேள்வியால்  தூண்டப்பட்டு அவ்வாண்டின் விழாவை பெரிதினும் பெரிதாகக் கொண்டாட திட்டமிட்டார்.   

பள்ளியின் செயல்பாடுகளால் மகிழ்ந்திருந்த முதன்மை கல்வி அதிகாரியும் விழாவை சிறப்புற நடத்த அனுமதித்து விழா செலவில் ஒரு பகுதியை தாராளமாகவே சிறப்பு அனுமதியாகத் தந்தார். பாய் சாரும், அய்யர் சாரும் அகமகிழ்ந்து ஊராட்சி ஒன்றிய நிதியை மிகத் தாராளமாகவே அளித்தனர். ஒன்றிய நிதி அளிக்கப்பட்டது போதவில்லை என்ற ரகசிய வாய்மொழித் தகவலை பரவ விட்ட தலைமை ஆசிரியர் குழு உள்ளூர் புரவலப் பெருந்தகைகளை அணுக தாம் பரிசு வழங்கும் ஃபோட்டோ தம் வீட்டில் மட்டுமல்லாது பல மாணாக்கர்கள் வீட்டிலும் இருக்கும் என உள்ளூர ஆசைப்பட்ட புரவலர்கள் வெளியூர கல்விக்காக தாம் உவந்து அளிப்பதாகச் சொல்லி அளித்த  தொகையும் மொத்தமாகச் சேர்ந்து மூன்று விழாக்கள் நடத்த போதுமானதாக இருந்தது. 

ஏல் பள்ளியின் விழா மூன்று மணி நேரம் மட்டுமே என்பதால் ஜவகர் பள்ளியின் விழா முழு நாளும் என தீர்மானிக்கப்பட்டது.  ஒவ்வொரு வகுப்பும் ஒரு கலை நிகழ்ச்சி எனவும்  ஆசிரியர்கள் சார்பில் மூன்று நிகழ்ச்சிகளும் நடத்தப்பட முடிவாகியது. சரியாக இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்புதான் பள்ளிக்கு முதன்முறையாக உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டு செல்வராஜ் சார் வந்து சேர்ந்தார். அதுவரை விளையாட்டு பீரியட் என்ற பெயரில் நாங்கள் மைதானத்தில் உருண்டு எழுந்து வருவதை அவர் விளையாட்டு என ஒப்புக்கொள்ளாததோடு தினமும் மாலை பள்ளி நேரம் முடிய 15 நிமிடங்கள் இருக்கையில் மைதானத்தில் அழைத்து நிறுத்தி (6,7,8 வகுப்பு மாணவர்கள் மட்டும், கேர்ள்ஸ் கிடையாது)  அதுவரை நாங்கள் கேள்விப்பட்டிராத டிரில் வகுப்பு எடுத்தார். பனியன் அல்லது சட்டை என ஏதாவது ஒன்றை மட்டுமே அணிய வேண்டும் என்ற தெய்வநல்லூரின் உலக பொதுவிதியை மாற்றி டிரில் வகுப்பில் டவுசர் பனியன் அணிய வேண்டுமென வற்புறுத்தினார். நாங்கள் படிக்கும் காலத்தில் பள்ளியிலேயே அரசு செலவில் சீருடைகள் வழங்கப்படுமாதலால் யாரும் பனியன் அணியும் வழக்கம் இல்லை. ( விதிவிலக்கு – பிரேம் — உள்பனியன் போட்டா ஒரே சட்டைய தொவைக்காம மூணு நாள் போடலாம்ல, அதான் அவன் உள்பனியன் போட்டு வாறான் – தெண்டிலின் காழ்ப்புப் பதிவு – 11 டிசம்பர் 86). கடைசியில் பனியன் வாங்க வற்புறுத்தியும் வாங்க இயலாத மாணவர்கள் சட்டை இன்றி வெற்றுடலாய் கடைசி வரிசையில் நிற்க செல்வராஜ் சார் மனது  வைத்தார். ஆசிரியர்களின் மூன்று நிகழ்ச்சிகளில் டிரில் காட்சியும் ஒன்று. 

பையன்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்வு டிரில் என்பதால் சீண்டப்பட்ட முதலாம் அலை பெண்ணுரிமைப் போராளியான யோகாம்பாள் டீச்சர் கேர்ள்ஸ் மட்டுமே பங்கு பெறும் குழு நடனம் மூன்று  பாடல்களுக்கு என ஆசிரியைகள் சார்பில் போராடிக் கேட்டு பெற்றார். (அதெப்படி சார், ட்ரிலுக்கு 20 நிமிஷம் கொடுக்கீங்க, புள்ளைக ஆட ஒரு பாட்டுன்னா   அஞ்சு நிமிசம்தான வருது? நியாயமா இருக்கணுமா இல்லையா? – யோகாம்பாள் டீச்சரைத்  தொடர்ந்து சங்கரம்மாள் டீச்சர் பேச  எழுந்திருப்பதைப் பார்த்த தலைமை ஆசிரியர் நொடி கூட தாமதிக்காமல் மூன்று பாடல்களுக்கு புள்ளைக ஆட அனுமதி தந்தார். இது தவிர மூன்றாவது நிகழ்வாக பொன். செல்லையா சாரும், கணேசன் சாரும் இணைந்து எழுதிய 30 நிமிட நாடகம்.  டிரில் தவிர இரண்டு படைப்புகளும் விழாவன்று மேடையில் அரங்கேற இருப்பவை. காலையிலிருந்து வகுப்பு வாரியாக நடைபெறும் கலைநிகழ்ச்சியில் சிறந்த இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அவையும் மாலை மேடையில் நிகழ்த்தப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில்தான் எங்கள் ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்போடு மோதிய இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது. இரு மாதங்களே என்றாலும் அந்த மோதலின் விளைவுகள் நால்வர் வாழ்க்கையில் வடுவாக நிலைத்து விடப்போவதன் விதையாக ஆனது. 

முன்பே சொன்னபடி எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி எங்கள் பள்ளி. ஆகவே பள்ளி மாணவர் தலைவராக எட்டாம் வகுப்பு அண்ணன்மார்களே எப்போதும் இருந்து வருவது வழக்கம். தினமும் காலை அனைத்து மாணவர்களும் ப வடிவில் வகுப்பு வாரியாக நிறுத்தப்படும் பிரேயரில் தலைமை ஆசிரியர் கொடிக்கம்பத்துக்கு ஒட்டி நிற்க அவருக்கு இடப்பக்கம் பத்தடி தொலைவில் மாணவர் தலைவர் எனப்படும் ஸ்கூல் லீடர் நிற்பார். பள்ளி நேர், பள்ளி ஓய்(வு) என உரத்த குரலில்  சொல்லி மொத்த மாணவர்களையும் காவல்துறை அணிவகுப்பாக உணரச் செய்வது ஸ்கூல் லீடரின் பணி.  (நேர்) கால்களை சேர்த்து அடித்தும், கைகளை பக்கவாட்டில் இறுக்கி ஒட்டி வைத்தும், (ஓய்வு) கால்களை அரையடி அகற்றி வைத்தும், கைகளை பின்னால் கோர்த்தும் பத்து முறை அனைவரும் செய்தபின் லீடர் வாகா எல்லை ராணுவ வீரரை கானமயில் எனக்கொண்டு தன்னிடத்தில் இருந்து பத்து அடிகள் முன்னே, புழுதி பறக்க வலப்பக்கம் திரும்பி பத்து அடிகள், மீண்டும் வலப்பக்கம் பொறி பறக்க திரும்பி ஆறு அடிகளில் தலைமை ஆசிரியர் முன் நிற்பார். கால்களை உதைத்து பள்ளி வணக்கம் எனச் சொல்லி தலைமை ஆசிரியரை நோக்கி சலாம் செய்வார்(அனைத்து மாணவர்களும் அவ்வாறே எதிர்வெயிலில் பாதை நோக்கும் கிழவனின் கையசைவில் சலாமிடுவார்கள்). பதிலுக்கு தலைமை ஆசிரியர் புறங்கை விரல்களால் பாதி நெற்றிக்கு திருநீற்றுப் பட்டை இடுவது போல சைகை காட்டியதும் லீடர் பொறியோடு புழுதி பறக்கத் திரும்பி அதே ஆறு, பத்து, பத்து அடிகளில் தன்னிடம் வந்து சேர்வார், வந்தவுடன்    பள்ளி ஓய் கொடுப்பார். மொத்த பள்ளியும் கால் அகட்டி நிற்க அன்றைய தினத்துக்கான அறிவிப்புகளை தலைமை ஆசிரியர் (அதற்குரிய ஆசிரியர்களும் அறிவிக்க வருவதுண்டு) சொல்வார். மீண்டும் லீடர் பள்ளியை நேருக்கு கொண்டுவந்து இருந்த இடத்திலிருந்தே பொறிழுதி பறக்க திரும்பி சலாம் செய்து பள்ளி கலையலாம் எனச் சொல்ல அனைவரும் தத்தம் வகுப்புகளுக்கு வரிசையாக வகுப்பாசிரியரால் (முதல் பீரியட் எப்போதும் வகுப்பாசிரியருடையது) நடாத்திச் செல்லப்படுவர்.  விடுமுறை தினங்களில் மட்டுமன்றி காலை, மாலை வேளைகளிலும்  தன் அப்பாவுக்கு உதவியாக வெற்றிலைக் கட்டு மடித்து வண்டியில் ஏற்றும் பணியாலும், பெரும்புகழ் பட்டவாரத்தி பராமரிக்கும் மாடுகளுக்கும், வீட்டு உபயோகத்துக்கும் அண்டா அண்டாவாக கிணற்றில் நீர் இறைக்கும் செயலசைவாலும் டிரில் வகுப்பில் சிவாஜி சிறப்புப் பாராட்டு பெறுமளவு டிரில்லை ஒரு கலையெனக் கையாண்டார். ஆகவே ஆண்டுவிழா சிறப்பு டிரில்லில் முதல் மாணவனாக நின்று அசைவுகளை செல்வராஜ் சாரின் விசிலுக்கு ஏற்ப செய்யும் தனி ஒருவனாக செல்வராஜ் சாரால்  சிவாஜி நியமிக்கப்பட்டது எட்டாம் வகுப்பை கொதிக்கச் செய்தது. 

நாம் இங்கே அதிகமும் எட்டாம் வகுப்பைப் பற்றி பேசியதில்லை. பேசுமளவு அவர்களும் நடந்து கொண்டதில்லை என்பதும் காரணம்.  ஏழாம் வகுப்பில் நாங்கள் செய்த பல சீர்திருத்தங்கள் பிற வகுப்புகளால் முயன்று பார்க்கப்பட்டு தோல்வியைத் தழுவின என முன்பே பேசியிருக்கிறோம். அதில் முழுத்தோல்வி அடைந்த வகுப்பு எட்டாம் வகுப்புதான். முக்கிய காரணங்கள் இரண்டு. முதலாவது வகுப்பாசிரியராக இருந்த சங்கரநாராயணன் சார்.     இரண்டாவது பள்ளி மாணவர் தலைவராகவும், வகுப்புத் தலைவராகவும் இருந்த மாடசாமி. 

மாடசாமி ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் கூடுதலாக ஓராண்டு தங்கியிருந்து அடிப்படைக் கல்வியை மீளக் கற்று கல்வி தவிர்த்த பிறவற்றில் கைதேர்ந்தவர். ஏழாம் வகுப்பிலும் கூடுதலாக ஒரு வருடம் படிக்கும் முடிவில் இருந்தவரை கணேசன் சார்தான் கெளம்புடே என எட்டாம் வகுப்புக்கு அனுப்பி விட்டார். அங்கு இருந்த சங்கரநாராயணன் சாருக்கும் மாடசாமிக்கும் ஜாதகத்தின் பத்து பொருத்தங்களை விடவும் அதிக பொருத்தம் ஏற்பட்டிருந்தது. திருநெல்வேலியில் குடும்பம் இருந்ததால் (மனைவியும் அரசுப்பணி என்பதால் இவருடனான பிணக்கினால் மாற்றல் பெற்றுச் சென்று விட்ட கதை இன்னொரு பத்து பக்கம் வரலாம் என்பதால்…)  பள்ளிக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கியிருந்த   சங்கரநாராயணன் சாருடன் கிட்டத்தட்ட இன்றைய “லிவிங் டு கெதர்” முறைக்கு மாறியிருந்தார் மாடசாமி. இரவு உறங்க மட்டுமே வீட்டுக்குப் போகுமளவு அவர் சார்வாள் அறையிலேயே இருந்தார். படிப்பதன் பொருட்டு என எண்ணினால் நீங்களே இந்த நூற்றாண்டின் சிறந்த அப்பாவி. வார இறுதி நாட்களில் புறா, கொக்கு, குருவி, அணில், முயல்  ஆகிய கொடூர மிருகங்களை வேட்டையாடி, கொன்ற பாவம் தீர சங்கரநாராயணன் சாருக்கு வறுத்துத் தருதல், சுத்தமான வடிசலை தேர்ந்தெடுத்து வாங்கி சங்கரநாராயணன் சார்வாளுக்குப் படைத்தல், இரவு உணவாக வாரம் நான்கு நாட்கள் முத்தலிபு அத்தா கடையில் புரோட்டா-சால்னா வாங்கி வருதல், காலையிலும் மதியமும் கோதையாச்சி வீட்டு முறை உணவகத்திலிருந்து உணவு எடுத்து வருதல் (சில நாட்களில் முத்தையா பிள்ளை கடையிலிருந்தும்), இவை போக வெண்குழல் சுருட்டு வாங்கி வருவது, வெற்றிலை போயிலை (புகையிலை) வாங்கி வருதல் முதலான குரு சேவைகளில் ஈடுபட்டு வந்த புண்ணியகோடி சீடராக அமைந்திருந்தார் மாடசாமி. பகரமாக இவை அனைத்திலும் புல்லுக்கும் ஆங்கே பொசியும் பங்கு மாடசாமிக்குரியது. 

பள்ளிக்கு வெளியே இவை எனில் பள்ளிக்குள் மாடசாமி தனித்தகுதி பெற்ற மாணவராகவே வலம் வந்தார். பள்ளி வாயில் வரை சாரம் (லுங்கி) கட்டிக்கொண்டு வரும் அவர் பள்ளி அருகிலுள்ள பெட்டிக்கடையின் பின்புற மறைவிற்குப் போய் டவுடசருக்கு மாறி  வகுப்புக்கு வருவார். (வனுக் கேம்ல தொடலே ல்லாமுடிமொள ச்சிறுக்கு – அவனுக்கு ஏம்ல தொடையில எல்லாம் முடி முளைச்சிருக்கு- வாழைத்தொடையர்களாகவே அனைவரும் பள்ளிக்குள் சுற்றுகையில் வன்தொடையாளர் ஒருவரைக் கண்ட அதிர்ச்சியில் டொம்ப்ளீ செல்வம் கேட்டது). சத்துணவு, தண்ணீர் பானை போன்ற எந்த வரிசையும் தனக்கில்லை என இருக்கும் மாடசாமியின் குரலுக்குத்தான் பள்ளியின் வகுப்புகள் ஒவ்வொன்றும் வரிசை மாறாமல் செல்லும் என்பதே நகைமுரண் எனும் சொல்லுக்கு விளக்கமாகிறது.  சங்கீதா பள்ளிக்கு வந்த புதிதில் அடிக்கடி எங்கள் வகுப்பு பக்கம் நடமாட ஆரம்பித்தார் மாடசாமி. அவருடன் முன்பு படித்து தற்போது இவரை முன்பே வரவேற்கும் விதமாக மேல்நிலைப் பள்ளி சென்று விட்ட பெரியண்ணன்மார்களும் மாடசாமியுடன் தென்பட ஆரம்பித்தார்கள். பள்ளி விட்டு வீடு சென்ற சங்கீதாவின் பின்னாலேயே சென்று  வீடு எங்கே எனக் கேட்ட மாடசாமியிடம் சங்கீதா பதில் கூறாமல் செல்ல அவருக்கு முன்னால் சென்று வழிமறிப்பது போல் நின்ற மாடசாமியைக் கண்டு அஞ்சாத சங்கீதா மாடசாமி விலகவில்லை எனில் தான் கூச்சலிடப்போவதாக கூச்சலிட்டார். சூழல் அறிந்து விலகிய மாடசாமி மறுநாள் சங்கரம்மாள் டீச்சரால் விசாரிக்கப்பட்டார் (இந்த திட்டம் மெஜுரா வழியாக சங்கீதாவுக்கு சிவாஜி & பிரேமால் சொல்லப்பட்டது). 

விசாரணையில் முதலில் தான் பேசவேயில்லை என மறுத்த மாடசாமி சாட்சிகள் உண்டு என டீச்சர் சொன்னதும் பதுங்கினார். தன் வகுப்பு மாணவனை தானில்லாமல் விசாரிக்கக் கூடாது என்ற உரிமை கோரல் வழியாக விசாரணைக் குழுவில் இடம்பெற்ற சங்கரநாராயணன் சார் மாடசாமியின் பதுங்கலைக் கவனித்து விஷயத்தை திசை திருப்ப ஆரம்பித்தார்.

 “அதென்ன டீச்சர் , இவனே தான் பேசுனானா? அந்தப் புள்ள கூப்புட்டு இவம்போய் பேசிருக்கலாம்லா? அந்தப் புள்ள கூப்புடலைங்கதுக்கு சாச்சி இருக்கா?”- பனிமூட்டத்துக்கு நடுவே பறக்கும் வெள்ளைக் கொக்கு போல மதர்ப்பான சிரிப்பு மின்னி மறைந்தது. 

குறிப்பை நொடிப் பொழுதில் உணர்ந்த மாடசாமி தலையைக் குனிந்தவாறே சொன்னார் – “ அவதான் டீச்சர் என்னை பள்ளிக்கூடம் விட்டதும் பேச வரச்சொன்னா”. சங்கீதா கண்களில் எறிந்த நெருப்பால் அவர் கண்ணீர் துளிகள் கூட ஆவியாகி விட்டன. “ஞான் கூப்பிடலை டீச்சர்” – அலறலாய் வெளிப்பட்டது குரல். “சரிமா, அதுக்கு சாச்சி வேணுமுல்ல? மறிச்சு பேசுணதுக்கு சாச்சி உண்டும்னா வரச் சொன்னதுக்கும் சாச்சி இருக்கும்லா? என்னடே நாஞ்சொல்லுதது?“- ஆட்காட்டி விரல் உயர்த்தப்பட்ட முகவாயின் அடிக்கழுத்தை சொறிய சங்கரநாராயணன் சார் சொரிந்த தர்க்க வாதம்.     சங்கரம்மாள் டீச்சர் நடக்கும் நாடகத்தை மீறி, தான் உணர்ந்த உண்மையை நிரூபிக்க வழியின்றி திகைத்த நேரம் 3 நொடிகள் மட்டுமே. நான்காம் நொடியில் அறைவாயிலில் சிவாஜியும், பிரேமும் கையில் ஆளுக்கொரு நோட்டுடன் தோன்றினர்.

மூச்சில் அனல் பறக்க திரும்பிய டீச்சர் “என்னடே, பாடத்துல சந்தேகமா? இப்ப எந்த சந்தேகமும் கேக்காத. போயிட்டு பெறவு வாடே “ என விரட்டினார்.   “டீச்சர், பாலகனி டீச்சர் உங்கள்ட்ட கொடுத்து கையெழுத்து வாங்கிட்டு வரச் சொன்னாங்க” – வகுப்பு வருகைப் பதிவேட்டை கையில் வைத்திருந்த பிரேம் வழக்கத்துக்கு மாறான அதீத பணிவுடன் சொன்னார். டீச்சர் கை அசைந்து உள்ளே வரச் சொன்னதை சங்கரநாராயணன் சார் விரும்பவில்லை. “ஏல , டீச்சர் முக்கியமான வேலையா இருக்காகன்னு போயி சொல்லுங்கல. போங்கல “ என அவர் விரட்டுவதை சற்றும் பொருட்படுத்தாத பிரேம் வேகமாகச் சென்று டீச்சர் மட்டுமே பார்க்கும் வண்ணம் குறிப்பிட்ட பக்கத்தைத் திறந்து குறிப்பிட்ட வரிசையில் விரல்களை ஓட்டினார். அரை நொடி பிரேமை டீச்சர் பார்த்த பார்வையில் கருப்பனின் ஆசி இருந்தது. சிவாஜி சாதாரண நோட்டின் ஒரு பக்கத்தை மட்டும் டீச்சருக்கு காட்டினார். சிவாஜிக்கும் கருப்பனின் ஆசி கிட்டியது. ஏழு நொடிகளில் இருவரும் “நன்றி டீச்சர். நன்றி சார் “ எனக் கூறி எட்டாம் நொடிக்குள் மறைந்து போனார்கள்.( மறைந்தவர்கள் தோன்றிய இடம் அறைக்கு  வெளியே டீச்சர் அமர்ந்திருக்கும் சன்னலுக்கு கீழே – எங்கள் தலைக்கு ஒரு அடிக்கு மேல்தான் சன்னல் என்றாலும் உள்ளே பேசுபவை எங்களுக்கு தெளிவாகக் கேட்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்ட சன்னல் அது- உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஓசையின்றி அங்கே நெருக்கி அமர்ந்து உளவறிந்து உடனுக்குடன் செயலாற்றிய காட்சி இது என அறிக). 

டீச்சர் முகம் சற்று கோணியது போல மாறினாலும் தோள்கள் நெகிழ்ந்து நாற்காலியின் முனைகளில் படிந்தன. “சங்கீதா, உள்ளதச் சொல்லுட்டி. நீ வரச் சொல்லாம அவன் வருவானாட்டி? நெசத்தச் சொல்லு” – சங்கீதா அதிர்ச்சியும், பதட்டமும் தாக்க எதை முதலில் கையாள்வது என தீர்மானிக்க முடியாமல் “ஞானில்லா” என்பதையே திணறி திணறி இருமுறை சொல்லி மூன்றாம் முறை சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க நின்றார். ( இந்த இடத்தில் வெளியே – இரட்டைக் கொலைகள் செய்யும் நோக்கில் துள்ளி எழ முயன்ற டொம்ப்ளீயை கண்களால் பிரேமும், கைப்பிடியால் சிவாஜியும் அடக்கினார்கள்).   சங்கரநாராயணன் சார் சிரிப்பு இப்போது சாதாரணமாகவே  தெரியுமளவு   மாறியது. மாடசாமியின் முகத்திலும் பதட்டம் மறைந்து இயல்பு நிலை கூடியது. “இவ சரிப்பட மாட்டா. அழுது சாதிக்கா. டே மாடசாமி, நீயே சொல்லுடே, ஒன்னய  வரச் சொல்லி யாருக்கிட்ட சொல்லிவிட்டா?” – டீச்சர் இயல்பான குரலில் மாடசாமியைக் கேட்டார்.

இயல்புக்குத் திரும்பி விட்ட மாடசாமி முன்யூக மதியுடன் இடம் சுட்டி பொருள் விளக்கி சொன்னார் – “அவளேதான் டீச்சர் காலைல ரீசஸ் பீரியடுல வந்து  சொன்னா”(முன்யூக மதி – வேறு யார் மூலமாகவாவது சொல்லி விட்டதாகச் சொன்னால் அந்த நபரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அப்படி எதுவும் சங்கீதா தன்னிடம் சொல்லவில்லை எனச் சொல்லிவிட வாய்ப்பிருப்பதை உணர்ந்து அவளே வந்து சொல்லியதாகச் சொன்னது) 

“என்னன்னு சொன்னா?”

“உங்கிட்ட தனியா பேசணும் போல இருக்கு. பள்ளிக்கூடம் விட்டதும் எம் பின்னாடியே வா, தேர்முட்டி கிட்ட வச்சி ஒண்ணு சொல்லுவேன்னு சொன்னா டீச்சர். அதான்…” – தனக்குப் பொருந்தாத அப்பாவி முகம் காட்ட முயற்சித்தார் மாடசாமி. 

இந்த உரையாடலுக்கு நடுவே ஆங்காங்கே “இல்லா, பச்சக் கள்ளம், பொய் ” ஆகிய சொற்கள் அழுகைக்கான சேர்மானங்களுடன்  சங்கீதா குரலில். அதற்கு மேல் சொல்லெடுக்க முடியாமல் டீச்சரின் முறைப்பு,  

சங்கரம்மாள் மீது கருப்பு எல்லா நேரங்களிலும் திடுமென இறங்குவதில்லை. சில நேரம் உறிஞ்சு தாளில் மையேறுவது போல மெல்ல பரவுவதும் உண்டு. சொந்தமாக இருக்கும் வயலில் அறுப்பின்போது “ஆம்பளக் கட்டு” வைக்கோலையும் துளி தளர்விலாமல் தூக்கி வண்டிக்கு அடுக்கும் சங்கரம்மாள் டீச்சரை அங்கே பார்த்து நீங்கள் வியக்கவில்லை எனில்  அரிசி ஆலையில் இருபத்தைந்து கிலோ மூட்டைகளை தூக்குவதைப் பார்த்து வியக்க இரண்டாம் வாய்ப்பு இருக்கிறது. போலவே தாய்வழிப் பாட்டனாரிடம் கற்ற வித்தை, கல்லாமல் பாகம்படும் குலவித்தையென இரு விதங்களிலும் தேர்ந்த சிலம்ப வரிசை ஆட்டக்காரர். அன்றைக்கு கோவில்பட்டிக்கு தெற்கே சிலம்பத்தில் அதிகமும் ரகசியமாக அறியப்பட்ட “ஐயங்கார் வரிசை” வீசத் தெரிந்த பெண்மணி( எடே, பன்னெண்டு சுவடும், ஆறு அடிமொறயும், ஒம்பது வரிசையும் தெரிஞ்ச ஒத்த பொம்பளப் புள்ள இந்த ஜில்லாலயே என் பேத்தியா தாம்டே – சங்கரம்மாள் டீச்சரின் தாய்வழித் தாத்தா கருத்த பாண்டியார்). ஆகவே கருப்பன் வந்திறங்கும்போது தன் பக்தையின் அடிமுறைகளை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வார் என்பது தெய்வநல்லூர் அறிந்ததே. கூடுதலாக  சங்கரநாராயணன் சார் டீச்சரின் விசாரணைக்கு கட்டுப்பட்டு அமர்ந்திருந்தது உதவி தலைமை ஆசிரியர் பதவியும் டீச்சர் வசம் இருந்ததேயாம். 

டீச்சர் இருக்கையிலிருந்து வழக்கத்தை விட நிதானமாக எழுந்து மாடசாமி அருகில் சென்றார். “அப்ப இவதான் உங்கிட்ட நேத்து ரீசஸ் இன்டர்வெல்லப்ப வந்து என்னயப் பாக்க வா ன்னு கூப்டா, சரிதானடே? “ – டீச்சரின் இயல்புக்கு மாறான நிதானத்தால் சங்கரநாராயணன் சார் கூர்மையானார். என்னவோ சரியில்லை என்று உணர்ந்தவருக்கு எங்கு விஷயம் தப்பியது என யோசிப்பதா, மாடசாமியை எச்சரிப்பதா எனக் குழப்பம் ஏற்பட்டதை மாடசாமியால் கவனிக்க முடியாமல் ஆனது. தான் சொன்னதே டீச்சரால் கோர்வையாகச் சொல்லப்பட்டதும் மாடசாமி உற்சாகமானார். “ஆமா டீச்சர்” –சங்கீதாவின் கேவலில் கூடி வந்த  டெசிபலையும், “நேத்து நான்” என்ற ஆரம்பத்தையும்  “ஏய்” என்ற உறுமலில் அடக்கி பூஜ்யத்துக்கு கொண்டுவந்த டீச்சர் மாடசாமி பக்கம் இயல்பான பாவனையில் திரும்பினார் – “எங்க வச்சிடே சொன்னா?” நொடி நேரம் யோசித்த மாடசாமி “ஹெட்மாஸ்டர் ரூம் வாசல் வேப்ப மரத்துக்கு கீழ வச்சி” சங்கரநாராயணன் சார் கருகும் வாசனை கூடி வருவதை உணர்ந்து எழுந்து பேச எத்தனிப்பதற்குள் கருப்பன் ஆவேசமாகியிருந்தான். சட்டையின் மேல் இரு பொத்தான்கள் தெறித்து விழுந்திருக்க வகுப்பறையின் முதல் பெஞ்ச் மேலே  அறுப்புக்கு கிடக்கும் வரால் மீன் போல மல்லாக்கக் கிடந்தார் மாடசாமி. கன்னத்தின் உள்ளே பல் குத்தி ரத்தம் வர கன்னம் வீங்கி அடுத்த ஏழு நாட்கள் மாடசாமி ஓய்வெடுக்கக் காரணமான அந்த ஒற்றை ஒரு அறைக்கு மேலே அவர் வாங்காமல் போனது சங்கரநாராயணன் சார் குறுக்கே வந்து விட்டதால். சட்டை பற்றப்பட்டு  அப்பற்றுதலால் அனிச்சையாய் தலை குனிய கன்னமும்  கழுத்தும் தாடையும் ஒன்றிணையும் புள்ளியில் அடியும், குத்தும் சேர்ந்த “குத்தடி” விழுந்த அடுத்த நொடி மாடசாமியால் வலியை மட்டுமே உணர முடிந்தது. அரை நிமிடங்கள் தாண்டியே  அடியின் விசையால் தான் பின்தள்ளப்பட்டு டெஸ்க்கில் விழுந்து கிடப்பதை அவரால் உணர முடிந்தது. 

சங்கரநாராயணன் சார் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து பெருங்குரலில் “டீச்சர், டீச்சர் “ என ஓலமிட்டவாறே தாவி மாடசாமிக்கு முன்பு போய் கை விரித்து நின்ற காட்சி சத்தியவான் கிடக்க கூற்றுவன் முன் சாவித்ரி நின்றதை ஒக்கும் என்பதை பத்து ஆண்டுகள் கழித்து அரவிந்தரை வாசிக்கையில் உணர முடிந்தது. அவரது ஓலத்தாலும், திடுமென்ற சப்தத்தாலும் பிற ஆசிரியர்கள் உள்ளே வர கருப்பன் மலையேறினான் –“அந்தப் புள்ள முந்தாநேத்து லீவு. நேத்து மதியத்துக்கு மேலதான் பள்ளிக்கூடம் வந்துருக்கா. இவன் நேத்து காலையில மொத பீரியட் முடியவும்  வெளிய போனவன் மத்தியான இன்டர்வெல் அப்பதான் சாப்பாடு வாங்கிட்டு வந்துருக்கான். இவன் சாப்பாடு வாங்குன நேரம் பன்னெண்டே காலுக்கு , முத்தையா பிள்ளை கடைல. (ஈத்தக்குச்சி என்ற மா முருகனின் மாமா சமையல் வித்தகராகப் பணியாற்றும் இடம்) . இவன் என்கிட்டயே அந்தப்புள்ள வந்து காலை 11:15 இன்டர்வெல்ல அவங்கிட்ட சொல்லிச்சுங்கான். என்ன திண்ணக்கம் இவனுக்கு. மொளச்சு மூணு எல விடல. எளவட்ட வேல காட்டுதான். இன்னொரு மட்டம் அந்தப் புள்ள இருக்க லக்குல ஒன்னயப் பாத்தேன்…, “ துருத்திய நாக்கும், சுடர்  பறக்கும் கண்களும், முஷ்டிப் பிடியிலிருந்து திமிறி எழுந்த ஆள்காட்டி விரலின் மணிநாக்கு அசைவும் சொற்களை விட அதிகமாக உணர்த்தின.  ஒரு கையால் கன்னமும், மறு கையால் சட்டையையும் அழுத்திப் பிடித்தபடி வெளியேறிய மாடசாமி ஆண்டுவிழா வரை டீச்சருக்குப் பயந்தோ என்னவோ சங்கீதா பக்கம் திரும்பவில்லை. ஆனால் சேர்த்து வைத்து ஆண்டுவிழாவில் அவர் செய்த செயலாலும், அதன் தொடர் விளைவுகளாலும் எங்களில்  நால்வர் வாழ்க்கையில் மாறாத வடுக்கள் நிறைந்தன.    

  ஏழாம் வகுப்புக்கும், எட்டாம் வகுப்புக்குமான முதல் மோதல் சம்பவம் இது. இதன் பின்னர்தான் கையெழுத்து விஷயம் குறித்த கலவரம் நிகழ்ந்து அடங்கியது. அக்கலவரத்தில் சங்கீதா மீது சங்கரம்மாள் காட்டிய கரிசனைக்கான காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இந்த முதல்  சம்பவத்தை ஒட்டி தலைமை ஆசிரியர் வரை ஆலோசித்து சங்கரநாராயணன் சார் எட்டாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு மாற்றப்பட்டு பாலகனி டீச்சர் எட்டாம் வகுப்பு ஆசிரியரானார். மாடசாமி பள்ளி நேரங்களில் வெளியே சுற்றுவது தடை செய்யப்பட்டு செல்வராஜ் சாரின் தனிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டார். சங்கரநாராயணன் சார் நறுந்தேறல் மாந்தி சிந்தித்திருக்கையில் பிரேமும், சிவாஜியும் உள்நுழைந்த காட்சி உறுத்தியது. அதன்பின்னரே சங்கரம்மாள் மீது கருப்பு இறங்க முடிந்தது புரிந்தது. மிக இயல்பாகப் பேசி பாலகனி டீச்சர் அவ்வாறு எந்தக் கையெழுத்தும் வாங்கி வரச் சொல்லவில்லை என தெரிந்துக்கொண்ட நொடியில் பையன்கள் செய்த செயல் என்னவென அவருக்குத் தெளிவாகியது. ஆனால் சங்கரம்மாள் டீச்சர் இருக்கும்வரை எதுவும் செய்ய இயலாது என அறிந்து பேசாமலிருந்தார். மாடசாமிக்கும் தெரிந்தாலும் அடிமுறைகளுக்குப் பயந்து அமைதி காத்தார். கூடவே அவ்வப்போது எலுமிச்சை தோட்டத்திலிருந்து ஊருக்கு வரும் சு கணேசனின் ஆதரவு எங்கள் அணிக்கு இருப்பது பள்ளிக்கு வெளியே எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.  

இந்த நிலையில் டிரில் வகுப்பில் மாடசாமி தவிர்க்கப்பட்டு சிவாஜி முன்னிறுத்தப்பட்டது இரண்டாம் மோதலுக்கான பொறியைக் கிளப்பியது. நேரடியாக செல்வராஜ் சாரிடம் மாடசாமி தன்னை முன்னிறுத்தாததற்கான காரணத்தைக் கேட்க செல்வராஜ் சார் கண்ணிமைக்கும் நேரமும் தாமதியாது மாடசாமியை மைதானத்துக்கு அழை(இழு)த்துச்சென்று டிரில் அசைவுகளுக்கான ஆணைகளைப் பிறப்பிக்க ஆரம்பித்தார். முதலிரண்டு வரிசைகளின் அசைவுகளை சரியாகச் செய்த மாடசாமி மூன்றாம் வரிசை அசைவுகளில் தடுமாற ஆரம்பித்தார். ஆறாம் வரிசை அசைவுகள் வரும்போது கல்லென உறைந்து விட்டார். ஒவ்வொரு வரிசை அசைவுக்கும் ஒரே போல ஒன்,டூ, த்ரீ, ஃபோர் என வருவதும், சில வரிசைகள் எய்ட் வரை போவதும்  அவரைக் குழப்பியது. அடுத்து அழைத்து வரப்பட்ட சிவாஜி பன்னிரு வரிசை அசைவுகளையும் எவ்வித தயக்கங்களும் இல்லாமல் செய்து காட்ட செல்வராஜ் சார் “என்னடே மடச்சாமி, இப்ப என்ன செய்ய?” என்றார். நிராயுதபாணியாக களம் விட்ட ராவணனை ஒத்த மா(ம)டசாமி பதிலின்றி விலகினார்.   

நீறு பூத்த நெருப்பாக பகை பக்கத்திலேயே இருக்க  தெய்வநல்லூர் ஜவகர் நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கின.

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள் 13 தெய்வநல்லூர் கதைகள்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “தெய்வநல்லூர் கதைகள் 14”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.