தெய்வநல்லூர் கதைகள் 23

This entry is part 23 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

எம் எஸ் சி என அழைக்கப்பட்ட எம் . சூர்யசந்திரன் எங்கள் பள்ளிக்கு வரும்வரை அவரைப் பற்றிய பின்னணி எங்கள் யாருக்குமே தெரியாது. வசந்தம் டெயிலர்ஸ்  சந்திப்புகளில் தோழர் குருசாமியும், தோழர் செந்தூர்சாமியும் பேசிக்கொண்ட விவரங்கள் எங்களுக்கு பின்புதான் தெரிய வந்தன. ஆகவே புதிய ஆசிரியர் வரப்போகிறார் என்ற ஆர்வமே எங்களுக்கு இருந்தது. அவர் எங்கள் வகுப்புக்கு நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எங்களில் எவருக்கும் முதலில் இல்லை. ஆனால் அவரைப் பார்த்த பின்பு எங்களுக்கு அவர் எங்கள் வகுப்புக்கு வரவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. 

 எம் எஸ் சி சார் ஒரு வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு வந்து பணியில் சேர்ந்தமைக்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டுச் சென்றார். மதியம் அவர் நடைமுறைகளை முடித்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் என்றாலும் மாலைதான் அவர் பணியில் சேர்ந்த விவரம் அனைவருக்கும் தெரிந்தது. அந்த வெள்ளி மாலைதான் பணி மாறுதல் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா ஏற்பாடாகியிருந்தது. செந்தூர்சாமி சார் தவிர பிற அனைவரும் வழக்கமாக பேசி அமர்ந்தார்கள்.  செந்தூர்சாமி சார் ஆசிரியப்பணியின் மாண்பு அதைப் பணியாகப் பார்ப்பவர்களின் விழுமியத்தில் இருக்கிறது என்றும், அப்பண்பை மறந்தால் அது சமுதாய வீழ்ச்சிக்கு வழிகோலும் என்றுமெல்லாமும் பேசி அமர பலருக்கு குழப்பமாக இருந்தது. விழாவில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் நாங்கள் சாந்தினி டீச்சருக்காக பள்ளிக்கு வெளியே இருக்கும் மரத்தடியில் காத்திருந்தோம். 

தலைமை ஆசிரியர் ஜெயசீலன் சார் ஏற்பாடு செய்த காரில் அவர் தங்கியிருந்த மேலரதவீதி ஒற்றை அறை சாமான்கள் கட்டப்பட்டு ஏற்றப்பட்டிருக்க அந்த காரிலேயே அவர் விடை பெற்றுக் கிளம்பினார். சாந்தினி டீச்சரை வாசல் கேட்  வரை வந்து மாரியம்மாள் டீச்சரும் ஜெயராஜ் சாரும் அனுப்பினார்கள். நாங்கள் ஓடிச் சென்று டீச்சருடன் சேர்ந்து கொண்டோம். நாங்கள் மூவரும் (பிரேம், சிவாஜி, நான்)  சேர்ந்து ஒரு பேனா வாங்கி வைத்திருந்தோம். பாட்ஷா அவருடைய அப்பா கொண்டுவந்திருந்த பேனாக்களில் ஒன்றை எடுத்து வந்திருந்தார். அவற்றை எல்லோர் சார்பாகவும் எங்கள் நினைவாக நாங்கள் டீச்சரிடம் கொடுத்தோம். பெருமாள் கோவில் திருப்பத்தில் டீச்சர் ஒரு நொடி நின்றார் ( நான் எதுவுமே செய்யலையேடா உங்களுக்கு, தினம் ஏதாவது சாப்பிடக் கொடுக்கறதுலருந்து இப்பவரை ஏதாவது கொடுத்துட்டே இருக்கீங்க, நானும் வாங்க மட்டும் செய்யறேன்). பிரேம் எங்கள் சார்பில் டீச்சருக்கு நன்றிகள் பல சொல்லி  எங்களது ஒன்பதாம் வகுப்பை இனிமையாகவும், கணிதப் பாடத்தை எளிமையாகவும் ஆக்கியமைக்கு இன்னும் கொடுக்க வேண்டும் எனவும் பெரியமனுஷத்தனமாக சொன்னார் ( டீச்சர், நீங்க கணக்கு சொல்லிக் கொடுத்து, கிளாஸ்ல எங்களுக்குள்ள போட்டில்லாம் வைச்சு எவ்ளோ செஞ்சிருக்கீங்க. அதுக்கு நாங்க செய்யறதெல்லாம் குறைச்சல்தான் டீச்சர் – அடக்கத்தோடு பிரேம்.  டே பிரேமு, பெரியமனுஷன் மாதிரி பேசறியேடா? எங்கடா கத்துகிட்ட இதெல்லாம்? – புன்னகையோடு சாந்தினி டீச்சர்).  பேருந்து நிறுத்தம் முன்பு உள்ள ஆறுமுகம் கடையில் எங்களுக்கு வற்புறுத்தி ஆளுக்கொரு பென்சிலும் பிஸ்கட் பாக்கெட்களும் வாங்கிக் கொடுத்தார். என்ன பேசுவது என்று தெரியாமல் மிகை உற்சாகத்தை நடித்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். பேருந்து தூரத்தில் வரும்போதே சட்டென மெளனம் கவிழ எங்களுக்கு அழுகை முட்டியது. ஒருவருக்கொருவர் அறியாமல் மறைத்துக் கொண்டோம். பேருந்தில் டீச்சர் ஏறும் நொடியில் பிரேம் கேட்டார் – டீச்சர், சொன்னதுபோலவே கடைசி வரைக்கும் உங்களைக் கொண்டு விட வந்துட்டோமில்ல?. மேல்படியில் நின்று திரும்பிய சாந்தினி டீச்சர் சட்டென்று உடைந்து போக அவர் கண்களில் நீர் நிரம்பி வழிந்தது. அவர் சன்னல் வழியே கண்ணீர் வழிய  கையாட்டிச் சென்ற காட்சிதான் இப்போது வரை பிரேம் நினைவில் இருப்பது. அதன்பின் அவர் டீச்சரை நேரில் சந்திக்கவேயில்லை. நாங்கள் மட்டும் இருமுறை சந்தித்தோம். கடைசியாக அவரது மகன் திருமணத்துக்கு போயிருந்தோம். (அவன் என்னடா இன்னுமா அதையே நெனச்சிட்டுருக்கான்? அதுலருந்து வெளிய வரவேயில்லையா? இப்டி நேர்ல வராம இருக்கானே? வீடியோ கால்லயும் கூட வர மாட்டேங்கானேடே. கொடுக்காபுளி பாக்கும்போதெல்லாம் அவனத்தான் நெனக்கேன்டே. வாய்ஸ் மெஸேஜ் அனுப்புதான். ஆனா நேர்ல வார மாட்டேங்கான். நீங்களாவது சொல்லக்கூடாதாடே? –  சாந்தினி டீச்சர் பிரேம் குறித்து கடைசியாகவும்(எப்போதும் பேசுவது) பேசியது).  

சாந்தினி டீச்சரை அனுப்பியதும் நாங்கள் ஒவ்வொருவரும் அழுதிருப்பதை உணர்ந்தோம். யாரும் எதுவும் பேசவில்லை. யாரும் சொல்லாமலேயே பெரிய கோவிலுக்கு சென்றோம். அன்றைய மண்டபப் பேச்சு டீச்சரைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. பிரேம் அப்போது சொன்ன ஒரு திட்டம் இப்போது வரை எங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சாந்தினி டீச்சரின் முகவரியை  பிரேம் வாங்கி வைத்திருந்தார். ஆகவே ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்களை அவருக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும், ஒவ்வொரு காலக்கட்டத்தில் நாங்கள் அடையும் முன்னேற்றத்தை அவருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்றும் சொன்னார். மிக வியப்பாக எங்களுக்கு ஒவ்வொரு கடிதத்துக்கும் டீச்சர் பதில் எழுதினார். பிரேம் வீட்டு விலாசத்துக்குதான் கடிதம் வரும். பிரேம் தெய்வநல்லூரை விட்டுப் போனபின் சிவாஜி வீட்டு விலாசத்துக்கு கடிதம் வரும். பிரேம் சிவாஜி வீட்டுக்கு எழுதி அனுப்பும் கடிதம் டீச்சருக்கு நாங்கள் எழுதும் கடிதங்களோடு வைத்து அனுப்பப்படும். டீச்சர் அனுப்பும் பதில் கடிதம் பிரேமுக்கு சிவாஜியால் அனுப்பப்படும். நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் டீச்சரின் கல்யாணப் பத்திரிக்கையும் எங்களுக்கு வந்து சேர்ந்தது. வாட்ஸப் வந்ததும் டீச்சரை இணைத்து நாங்கள் ஒரு குழு ஏற்படுத்திக் கொண்ட வரை ஆண்டுக்கொருமுறை என இந்த கடிதப்போக்குவரத்து தொடர்ந்து நடந்து வந்தது. 

வெள்ளிக்கிழமை பிரிவுபசார நிகழ்வுக்குப் பின் திங்களன்று பள்ளிக்கு வந்த எங்களுக்கு குழப்பமான அறிகுறிகள் தென்பட்டன. முதலாவதாக அடுத்த தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்வரை எம் ஏ என் சார் (ஆவுடைநாயகம் சார்) தான் பொறுப்பு தலைமை ஆசிரியர் என்பது. (அதன் விளைவாகத்தான் இரண்டாம் குழப்பம் ஏற்பட்டது) இரண்டாவதாக மீசை சார் எனப்படும் கிருஷ்ணசாமி சார் பத்தாம் வகுப்புக்கு எந்தப் பாடமும் ஒதுக்கப்படாமல் எட்டாம், வகுப்பு, ஒன்பதாம் வகுப்புகளோடு நிறுத்தப்பட்டார். எங்களுக்கு ஆங்கிலம் எடுக்க வேறு ஆசிரியர்கள் இல்லாததால் முந்தைய ஏற்பாட்டையே தன்னுடைய ஆகச் சிறந்த யுக்தி என சொல்லிக் கொண்ட எம் ஏ என் சார் செல்வி அக்காக்களை எங்களுக்கு ஆங்கிலப் பாடம் எடுக்க நியமித்தார் ( சார், சும்மா கேள்வி கேக்காதீங்க.  மூணு பேரு டிரான்ஸ்பர் ஆன எடத்துல ஒருத்தர்தாம் வாரார். இப்ப நானும் ஹெட்மாஸ்டர் வேலையப் பாக்கதுனால எனக்கும் வாரத்துக்கு 3 பீரியட்தான் எடுக்க முடியுது. எல்லாருக்கும் மேக்ஸிமம் க்ளாஸ் போட்டுத்தான் சமாளிக்கேன். அந்த புள்ளைகளும் க்ளாஸ் எடுத்தாத்தான சார் சமாளிக்க முடியும். இதுல வந்து எனக்கு டென்த் க்ளாஸ் ஏன் கொடுக்கல, நைன்த் ஏன் கொடுத்தீங்கன்னு கேக்காதீங்க சார். செருப்புக்கு ஏத்த மாதிரியா கால் செய்ய முடியும்? பள்ளியோட நலன்ல அக்கறை இருந்தா செய்ங்க. இல்ல, நீங்களும் டிரான்ஸ்பர் வாங்கிட்டு மகராசனா போங்க. உங்களுக்கு பதில் சொல்ல மட்டும்தானா ஹெட்மாஸ்டர் வேலை?- எம் ஏ ஏன் சார் தேவைக்கு அதிகமான உரத்த குரலில் மீசை சாரிடம் பேசியது).  

எம் ஏ ஏன் சார் விஞ்ஞான ரீதியில் தன்னைப் பழிவாங்குவதை உணர்ந்தாலும் மீசை சாரால் உடனே எதுவும் செய்ய முடியவில்லை. வெறுப்புடனும், வருத்தத்துடனும் எங்கள் வகுப்புக்கு வந்த அவர் நாங்கள் எதற்கும் கவலைப்படாமல் படிப்பி‌ல் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமென்றும், வேறு உதவிகள் தேவைப்பட்டால் கேட்குமாறும் சொல்லி இரு நிமிடங்களில் விடைபெற்றுப் போனார். நாங்கள் திணறிப் போய் அமர்ந்திருந்தோம். போன வாரம் வரை எல்லாம் சரியாக இருந்த வாழ்க்கை இரு தினங்களுக்குள் வேறொன்றாக மாறி விட்டதை எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை 

ஏல, எம் ஏ ஏன் சார் நம்ம மீசை சாரை வேணும்னேதான் இப்டி போட்டு கொமைக்காரு. மீச சாரை வஞ்சம் வச்சி கருவிட்டே இருந்தாங்க. இப்ப பழி வாங்குதாங்க  – நயினார். 

ஏம்ல, மீச சாரும் ஊருக்குள்ளதான குடியிருக்காரு? பூசப்பாண்டி சார்வாளுக்கும் சொந்தம்லா? இவங்களை அவர் என்னல செஞ்சாரு? – யக்கா கேள்வி. 

மீச சார் கல்யாணம் கட்டிக்கிட்டது எங்க பறக்குடிலருந்து. அந்த டீச்சர் (சார் மனைவி டீச்சர் என்பதும் டீச்சர் கணவர் சார் என்பதும் தெய்வநல்லூர் வழக்கு) நல்லா படிச்சவங்க. திருனவேலி காலேஜுல படிக்கையில ரெண்டு பேரும் காதலிச்சு கட்டிக்கிட்டாங்க. டீச்சர் அப்பா செருப்பு தைக்க ஆளா காதி கடையில வேலை பாக்காரு. அதனால சார்வாள் ஊருக்குள்ள பெரிய தகராறு. ஆனா சார் அந்த டீச்சர் கூடதான் இருப்பேன்னு  உடும்புப் பிடியா நின்னு போலீசுக்கெல்லாம் போயி வெவகாரத்த பைசல் பண்ணுனாரு. அந்த டீச்சரும் ரெவினுல வேல பாக்காங்க. அதனால ஒண்ணும் பண்ண முடியல. அதுலருந்து அவர கருவிக்கிட்டே இருக்காங்க. இப்ப சான்ஸ் கெடச்சதும் அவரப் போட்டுப் பாக்காங்க- நயினார் மந்தணக் குரலில் சொல்லிய சமகால தெய்வநல்லூர் வரலாற்றின் ஒரு பகுதி).   மீசை சாரைப் பார்க்கும்போதெல்லாம் எம் ஏ என் சார் தன் செருப்பை கழட்டி சற்று முன்னால் தள்ளுவதும், செருப்பைப் பற்றியே பேசுவதும், சப்தமெழ செருப்பை தரையில் தட்டுவதும் ஏனென்று எங்களுக்கு அன்றே புரிந்து விட்டிருந்தது. 

திங்களன்று காலை இடைவேளை விட்ட பிறகு எம் எஸ் சி சார் பள்ளிக்கு வந்தார். அவர் பள்ளிக்குள் நுழைந்த விதத்தை அடுத்த ஒரு வாரம் பள்ளி முழுவதும் பேசித்தீர்த்தது. அதற்கு உண்டான காரணத்தைத் தெரிந்து கொள்ள நிலவி வரும் சூழலை இங்கு சொல்ல வேண்டியதாகிறது. முதல் விஷயம் ஆசிரியர்களின் வாகன அணிவகுப்பு.  அதுவரை சக்திமோகன் சார், தங்கச்சாமி சார் போல ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே மோட்டார் பைக் வைத்திருந்தார்கள். ராஜூத் என அழைக்கப்படும் ராஜ்தூத் பைக்கில்தான் ஆசிரியர்கள் வருவார்கள். பிறர் சைக்கிளிலும், எம் ஏ என் சார், பூசப்பாண்டி சார் லூனா வண்டியிலும் வருவார்கள். வெளியூரிலிருந்து வந்து தங்கி பணி செய்யும் ஆசிரியர்கள் பெரும்பாலும் நடந்தே வருவார்கள். இரண்டாவது விஷயம், ஆடை அணிமுறைகள்.  மேல்நிலை (+1, +2) வகுப்புகளுக்கு, ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு  பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே பேண்ட் அணிந்து பள்ளிக்கு வருவார்கள். அதுவும் அகப்பை சிரட்டையில் மூக்குப்பொடியை போட்டு விளக்கெண்ணையில் குழப்பியது மாதிரியான ப்ரவுன் நிறம், தண்ணீரில் ஊறப்போட்ட முற்றிய வாழையிலை மாதிரியான கரும்பச்சை நிறம்,  சாக்கு மூட்டையில் பேரெழுதப் பயன்படுத்தப்படும் திரவம் செய்வதற்கான கருநீல மாத்திரை மாதிரியான நிறம் ஆகிய மூன்று நிறங்களில் மட்டுமே பேண்ட் அணிவார்கள். சட்டையும் அதேபோல நீலம் பூசிய வெள்ளை, வெளுத்த மஞ்சள், வெளுத்த வான் நீலம், சாயம் போன குங்குமம் ஆகிய நிறங்களில் மட்டுமே இருக்கும். சமயங்களில் சட்டையை மட்டும் கழட்டி ஆணிகளில் மாட்டிவிட்டு ஓய்வறையில் உறங்கி எழுந்து போட்டுக்கொள்கையில்  சட்டை மாறிவிடாதா என்ற ஐயம் (பேண்ட்டை கழட்டி மாட்டுவதில்லை என்பதால் அந்த ஐயம் தோன்றவில்லை) எங்களுக்கு எப்போதும் உண்டு. அதுவும் அரைக்கை சட்டை தொப்பை மேலிருந்து பேண்டின் ஸிப்பை எட்டிப் பிடிக்க போராடி விரித்த குடையை பாதியாய் வெட்டி வைத்தது போல அடித் தொப்பைக்கு வெயில் படாமல் காற்றை மட்டும் அனுமதிப்பது போல தொங்கும். இது போக சட்டையில் பின் கழுத்து பகுதி அழுக்கு படாமலிருக்க பலவண்ணக் கைக்குட்டையை நீளவாக்கில் சுருட்டி மடித்து பின்கழுத்தில் சட்டைக்கும் கழுத்துக்கும் நடுவே தடுப்பரண் அமைத்தல். அதே கைக்குட்டையை மூக்கு துடைக்க, வாய் துடைக்க, அமரும் நாற்காலியைத் துடைக்க, மைப்பேனாவின் கசிவைத் துடைக்க, அவ்வப்போது முகம் துடைக்க என பலவிதங்களில் பயன் படுத்தி எடுத்தல் ஆகியவையும் அவர்கள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே. உள்ளூர் டயர் தயாரிப்பு மற்றும் காதி நிலையங்களில் கிடைக்கும் கருப்பு முரட்டு செருப்பு இரண்டு மட்டுமே அவர்களது கால்களை அலங்கரிக்கும். மூன்றாவதாக உள்ள விஷயம் சற்று தனிப்பட்ட விஷயங்கள் என்றாலும் அதன் பாதிப்புகள் எங்கள் மீது விடிவதால் இங்கு சொல்லவேண்டியதாகிறது. அலுவல் ரீதியிலான ஆடை என்பது ஒரு வாரத்திற்கு இரண்டு ஜோடிகள் மட்டுமே என்ற முடிவிற்கு தெய்வநல்லூர் பள்ளி ஆசிரியர்கள் எவ்வாறு வந்தனர் என்பது இன்றளவும் ஆய்வு செய்யப்படாமலேயே முடிந்துபோன சமூக மானுடவியல் நடத்தை. திங்கள் மதியம் முதல் புதன் வரை (அல்லது வியாழன் மதியம் முதல் வெள்ளி வரை) ஆடைகளிலிருந்து கிளம்பும் இயற்கை உடல்மணம் ஆசிரியர்களை எவரும் நெருங்க முடியா கவசமென விளங்கி காக்கும். சிகரெட், பீடி, வெற்றிலை, டீ, மூக்குப்பொடி ஆகியவற்றின் தொல் வரலாற்றுச் எச்சங்கள் மிக்க வாய்,  மழைக்காலத்திற்குப் பின் பாசி காய்ந்து படிந்த கோவிலின் மதில் சுவரை நினைவுபடுத்தும். கூடவே விவரிக்க இயலா மணமும் உண்டு. கூடவே மீசை என்ற பெயரில் இன்னும் தன்னை ஜெமினி கணேசனாக நினைத்துக் கொண்டு மேலுதட்டின் மேல் விளிம்பில் பிள்ளையார் எறும்பு (கருப்பு எறும்பு) வரிசை போன்ற கோட்டுத் தீற்றல்.  இவ்வாறாக சற்றே பண்பட்ட நிலையில் இருப்பதான முயற்சியில் இருப்பவர்கள் மத்தியில்   எம் சூர்யசந்திரன் வந்த காட்சிதான் பேசப்பட்டது. 

கொஞ்சம் மட்டுப்பட்ட மஞ்சளில் வெண்மை கலந்த நிறம், அளவாக வெட்டப்பட்ட   தலைமுடி எண்ணெய் பூசாத மினுமினுப்புடன். குருவிக்கூடு, ஸ்டெப் கட்டிங் போன்ற பழமை, புதுமை இரண்டின் கோளாறும் இல்லாத வகையில் இயல்பாக அமைந்த சிகை அலங்காரம். மேலுதட்டில் அடர்த்தியாக வளர்ந்து அளவாக கத்திரித்து விடப்பட்ட மீசை. கோகுல் சாண்டல் பவுடர் மணக்கும் பளபளத்த முகம். சற்றே உள்ளடங்கிய துருதுருவென அலையும் கண்கள். அழகான நீண்ட கோடுகள் கொண்ட அல்லது சிறிய கட்டங்கள் போட்ட சட்டை, கருப்பு, அடர் பழுப்பு, தெளிந்த நீலம் ஆகிய அழகிய வண்ணங்களில் பெல் பாட்டம்  போல அல்லாமல் மேல்பாதத்தின் எலும்பு குவிமுனையோடு நிற்கும் பேண்ட்கள். மிக முக்கியமாக சட்டையை பேண்ட்டில் விட்டு (டக் இன்) வரும் விதம் (சட்டையையும் பேண்டையும் சேர்த்தே தைத்திருப்பார்களோ என ஐயம் விளைவிக்கும் வகையில் செம்புலப் பெயர் நீர் கலந்தது போல).  அதுவரை விளையாட்டு ஆசிரியராக இருந்த (கவனிக்கவும்- இருந்த , பணிபுரிந்த அல்ல)  சீனிவாசன் சார் மட்டும் ஆண்டு ஆய்வு நாளன்று சம்பிரதாயமாக வெள்ளை பேண்ட்டில் வெள்ளை சட்டையை இன் செய்து வருவார். கிழவி கட்டிய பஞ்சுப்பொதி போல ஆங்காங்கே பிதுங்கி, புடைப்பெய்தி வயிற்றுப்பகுதி பொத்தான்கள் தம் பணியின் முழு முயற்சியில் ஈடுபட்டிருப்பதையே இன் செய்வது என அறிந்திருந்தோம். அதே போல போலீஸ்காரர்களுக்கு சவால் விடும் வகையில் பட்டையான ஒன்றை பெல்ட் என அணிந்து வருவதை தெய்வநல்லூர் ஆசிரியர்கள் (எடவாரு எனப்படும் இடைவார்) ஆகப்பெரும் ஃபேஷனாக கருதி வந்தனர். இரண்டு விரற்கடை அகலத்தில் பாம்புத் தோல் போன்ற மினுமினுப்பில் தங்க நிற பக்கிள்(எடவாரு கொக்கி தாம்டே பக்கிளு – சேமியா) கொண்ட பழுப்பு, கருப்பு என இரு பெல்ட்கள் ( பேண்ட்க்கு ஏற்றார்போல பெல்ட் என்பதை எம் எஸ் சி சார் அன்றே கடைப்பிடித்தார்). அழகிய பளிச்சென்ற பல் வரிசை, கிராம்பு அல்லது ஏலக்காய் மெல்லுவதால் அவர் பேசும்போது வரும் மெல்லிய நறுமணம். இடக்கையின் வலுத்தூக்கும் அளவை பரிசோதிக்கும் கைக்கடிகார ஆசிரியர்களுக்கு நடுவே கையோடு ஒட்டிய சிறிய அழகிய ஸ்ட்ராப் வாட்ச். மிக முக்கியமாக கயிறு இல்லாத (ஷூ லேஸ்) கருப்பு/பழுப்பு ஷூ (பொருத்தமான காலுறையுடன், ஷூ தினமும் பளபளப்புடன்). சட்டையின் முதல் பட்டனைத் திறந்து விட்டிருந்தால் மட்டுமே கண்ணில் மின்னி மறையும் தங்கச் சங்கிலி – இதுதான் எம் சூரியசந்திரன் சார் தோற்றம். திங்களன்று தங்கநிற கம்பி போன்ற சட்டகத்தில் (ஃப்ரேம்) அமைந்த கரும்பச்சை நிற குளிர்கண்ணாடி அணிந்தவாறு சமீபமாக  புதுக்கவிதை படத்தில்  ரஜினி பயன்படுத்தி பிரபலமான சிவப்பு நிற இண்ட் சுசுகி மோட்டார் பைக்கில் அவர் பள்ளிக்குள் நுழைந்தபோது பார்த்த பலருக்கும் மூச்சடைத்தது.  அதுவரை அவ்வாறான அலங்காரங்கள் திரைப்பட நாயகர்களுக்கு மட்டுமே உரியது என்ற தெய்வநல்லூர் மூடநம்பிக்கை எம் எஸ் சி சார்வாளால் ஒரு திங்களன்று காலை தகர்க்கப்பட்டது. 

தோற்றத்தில் மட்டுமல்ல. வந்த ஒரு வாரத்திற்குள் வேறு சில செயல்பாடுகளாலும்  எம் எஸ் சி சார் பள்ளியை மாற்றியமைத்தார். மாணவர்களைத் தண்டிக்க அவ்வப்போது பள்ளி வளாகத்தில் இருக்கும் அரச/புளிய மரக் குச்சிளை (குச்சிக்கும் கிளைக்கும் இடைப்பட்ட வடிவமென அறிக)  பயன்படுத்துதலே தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி ஆசிரிய நடைமுறை. பெண் டீச்சர்கள் மட்டும் ஒரு அடி  ஸ்கேலை உபயோகித்தலும் தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை நடைமுறை. ஆனால் எம் எஸ் சி சார் உள்ளூர் காதி நிலையத்தில் விற்கப்படும் நுனிக்கொண்டை பிரம்பு ( சுண்டுவிரல் பருமனே இருந்தாலும் வளைந்து கொடுத்தாலும் அடிக்கும்போது வலுவாக இருக்கும்) இரண்டடி நீளத்தில் வைத்திருந்தார். அதை அவர் பயன்படுத்தும் விதத்தால் நாமும் அடி வாங்கமாட்டோமா என்ற ஆவலை அவர் ஏற்படுத்தினார் என்றாள் அது மிகையாகாது. அதுவரை காலை பிரார்த்தனைக்கு தாமதமாக வருபவர்கள் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும்போதே வந்து வந்து வரிசையில் சேர்வார்கள். பிரார்த்தனை முடிந்ததும் வருபவர்களை அந்த நேரம் கேட்வாசலில் இருக்கும் ஆசிரியர்கள் ஒரு செல்ல அடி முதுகில் போட்டு அனுப்புவார்கள்.   

எம் எஸ் சி சார் வந்ததும் பிரார்த்தனை ஆரம்பிக்கையில் கேட்வாசலுக்கும் பிரார்த்தனை மாணவர்கள் கடைசி வரிசைக்கும் நடுவில் நின்று கொண்டார். ஆரம்பித்த நொடிக்குப் பிறகு வருபவர்களை போக்குவரத்து காவலர் போல கைகாட்டி ஒரு ஓரத்தில் நிறுத்தினார். முடிந்ததும் வருபவர்கள் தனி குழு. முதல் குழுவினரை பிரார்த்தனை முடிந்ததும் வரிசையில் நிறுத்தி பெயர், வகுப்பை குறித்துக் கொண்டு இடது கையை நீட்டச் சொல்லி பிரம்பால் ஒரு அடி. ஒரு வாரத்தில் இருமுறை தாமதமாக வந்தால் இரண்டாம் குழுவுடன் சேர்க்கப்படுவார். இரண்டாம் குழுவுக்கான தண்டனை சற்று வித்தியாசமானது. இரண்டாம் குழுவினர் மொத்தமாக பள்ளி மைதானத்தை இரு சுற்றுகள் ஓடி வர வேண்டும். ஓடி முடித்ததும் மூன்றாவது சுற்றாக  ஒவ்வொரு வகுப்புக்கும் (6 முதல் 12 வரையிலான எல்லா பிரிவுகளுக்கும்) ஓடி வாசலில் நின்று வணக்கம் ஐயா /அம்மா (ஆசிரியை அல்லது பெண்கள் இருக்கும் பிரிவுகள்) என்று சொல்லி விட்டு வர வேண்டும் (ஓடிக்கொண்டே). வணக்கச் சுற்றோடு தண்டனை முடிவடையாது. இரு அடிகள் பிரம்பால் வாங்கிக் கொண்ட பின்பே வகுப்புக்கு போக முடியும். ஒரே வாரத்தில் காலைப் பிரார்த்தனைக்கு தாமதமாக வருவோர் எண்ணிக்கை நம்ப முடியாத விதத்தில் குறைந்தது. எம் எஸ் சி சார் வந்ததும்தான் ஆசிரியர்கள் பைக் நிறுத்துமிடம், மாணவர்கள் சைக்கிள்கள் நிறுத்துமிடம் என பிரித்து வெட்டப்பட்ட மரக்கிளைகளால் தடுப்பு வேலி அமைத்து பிரித்தார். வேலித் தடுப்புக்கு வெளியே எந்த சைக்கிளாவது இருந்தால் இருசுற்று மைதான ஓட்டமும், ஒரு பிரம்படியும். அதிசயிக்கத்தக்க அளவில் பள்ளி வளாக இட அளவு அதிகமாகியது.  பள்ளி விட்டதும் முதலில் பெண்கள் வெளியேறியதும்தான் பையன்கள் வெளியேற வேண்டும்  (ஐந்து நிமிடங்கள் கழித்து) என்ற புதிய உத்தரவையும் அமல்படுத்தினார். இதனால் பெரிய வகுப்பு பையன்களின் கேலிகளுக்குப் பயந்து கொண்டு பிற வகுப்புப் பெண்கள் பெரிய கோவில் சந்து வழியே கூட்டமாக ஓடுவது நின்றது.   எம் எஸ் சி சார் என்ன சொன்னாலும் நடப்பதற்கு முக்கிய காரணம் பொறுப்பு தலைமை ஆசிரியராகிய எம் ஏ என் சார். இந்தப் பள்ளிக்கு எம் எஸ் சி சார் மாற்றல் வாங்கி வந்த விதத்தை எம் ஏ என் சார் அரிய சாதனையாகக் கருதினார். ஆகவே எம் எஸ் சி சார் என்ன சொன்னாலும் உடனடியாக ஏற்று ஒப்புதல் கொடுத்தார்.   

இவ்வளவு மாற்றங்களையும் எங்கள் குழு மனமார வரவேற்றது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். உடனே பிரேம் சென்று எம் எஸ் சி சாருடன் பேசியிருப்பார் என நீங்கள் யூகிக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் சரியாக அந்த ஒரு வார காலம் பிரேம் அவரது மாமாவின் கல்யாணத்திற்காக ஹைதராபாத் போயிருந்தார். (எங்களுக்கெல்லாம் வெளிநாடு போல அன்று இருந்த நகரம். என்னல இது, இங்கேர்ந்து திருனவேலி போய் ராத்திரி முழுக்க ரெயில்லயே படுத்தே எந்திரிச்சி மெட்ராஸ் போயி அங்கயும்  போயி ராத்திரி முழுக்க ரெயில்லயே படுத்தே எந்திரிச்சாத்தான் கைதராபாத்து வரும்ங்கான். அதென்ன வெளிநாடாடே ? இவ்ளோ தூரத்துல இருக்கு – பிரேம் தன் பயணத்திட்டத்தை விவரித்த பின் நயினார் வியப்பு). ஆகவே எம் எஸ் சி சார் வருகையும், அவர் உருவாக்கிய உடனடி மாற்றங்களையும் பிரேம் அறிந்திருக்கவில்லை. நாங்கள் அவர் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தோம். சொல்ல எங்களுக்கு நிறைய இருந்த காரணத்தால் அவர் ஞாயிறு நள்ளிரவு தான் திரும்பி வருவார் என சொல்லியிருந்தாலும் ஞாயிறு மாலை கூட அவர் பாட்டி மட்டும் இருந்த வீட்டை சும்மாவாவது சென்று பார்த்து விட்டு வந்தோம்.   ஒருவழியாக திங்களன்று காலை எட்டு மணிக்கே பிரேம் வீட்டுக்கு நாங்கள் போனபோது கண்கள் சிவந்து உறக்கக் கலக்கத்தில் சோர்ந்திருந்த பிரேமைப் பார்த்தோம். அன்று பள்ளிக்கு விடுப்பு எடுத்து ஓய்வு கொள்ள திட்டமிட்டிருந்த பிரேம் நாங்கள் சொன்ன அறிமுக கதைகளால் கவரப்பட்டு தானும் பள்ளிக்கு கிளம்பினார்.  அன்றைய தினம்தான் எங்கள் நால்வருக்கும் பள்ளி வாழ்க்கை வேறொன்றாக மாறிய நாள்.

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள் எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.