தெய்வநல்லூர் கதைகள்- 31

This entry is part 31 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

நாங்கள் யாருமே எம் எஸ் சி சாரை புகாரளித்து பழி வாங்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் அவர் எங்களைப் படுத்தும் பாட்டிலிருந்து தப்பிக்க முயன்றதே அவரைப் பொறுத்தவரை பழி வாங்கும் நடவடிக்கையாக கருதப்பட்டது. பிரேமின் கை வீங்கியதும் இயல்பாகவே நாங்கள் தோழரண்ணனைத் தேடிப்போனது நீவு சிகிச்சைக்குதான். ஆனால் எங்கள் சிந்தனை வீச்சுக்கு அப்பால் இயங்கும் சிந்தனையுடன் தோழரண்ணன் விஷயத்தைக்  கையாண்டதில் எங்கள் பங்கென எதுவுமில்லை. என்றாலும் இந்த அளவுக்குக்கூட  எம் எஸ் சி சாருக்கும் அன்று இது புரியவில்லை என்பதை இன்று நினைத்துப் பார்த்தால் வருத்தமான வியப்பாக இருக்கிறது.

இனி வரும் விஷயங்களைப் புரிந்து கொள்ள இந்த இடத்தில் இரு விஷயங்கள் சொல்லப்பட்டாக வேண்டும். ஒன்று எம் எஸ் சி சாரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது. பள்ளியில் ஒரு கதாநாயக அந்தஸ்துடன் அவர் வலம் வந்த நாட்களில் பலருக்கும் இருந்த கேள்வி- எம் எஸ் சி சாருக்கு திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா? இக்கேள்விக்கு என்ன அவசியம் என எங்களுக்குத் தோன்றியது போல பெரிய வகுப்புகளான 11, 12 மற்றும் ஆசிரியப் பயிற்சி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தோன்றவில்லை. குறிப்பாக, அக்காமார்கள் உண்மையைக் கண்டுபிடிக்க அலைபாய்ந்தனர். பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் துணிச்சல்காரன் எனப் பெயரெடுத்த ( மை டியர் லிசா படம் பார்த்து விட்டு வந்த அன்று நடுஇரவில் தனியே சென்று மாடநதிக் கரை சுடுகாட்டு மரத்தில் தன் சட்டையை மாட்டி விட்டு வந்து சவாலில் வென்றவர்) பாலமுருகன் ஒரு நாள் நேரிலேயே எம் எஸ் சி சாரைப் பார்த்து உங்களுக்குத் திருமணமாகி விட்டதா எனக் கேட்க அவர் புன்னகையுடன் ஆகியிருந்தால் நீ வந்து மச்சான் முறை சீர் செய்யப் போகிறாயா ஆகவில்லை எனில் உங்கள் ஊரில் பெண் பார்த்துக் கொடுக்கப் போகிறாயா எனக்கேட்டு துணிச்சல்காரனையே திகிலடைய வைத்தார். மாணவர்கள் அணி மாணவியருக்காக பல முயற்சிகளைச் செய்தும் அவருக்கு திருமணமாகி விட்டதா இல்லையா என கண்டறிய முடியவில்லை. அதற்குள் பிரேமுடனான உரசல்கள் பேசப்பட அவரது திருமணம் குறித்த பேச்சு அப்படியே அமுங்கியது. 

ஆசிரியப்பயிற்சியைப் பொறுத்தவரை பனிரெண்டாம் வகுப்பு முடித்த பின் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் பள்ளியிலேயே மூத்தவர்கள் அவர்கள்தான். தாங்கள் கல்லூரியில் பயில வேண்டியவர்கள், பள்ளியுடன் தம்மை இணைத்து வைத்திருப்பது மாபெரும் வரலாற்றுப் பிழை எனும் எண்ணமுடையவர்கள். ஆகவே பள்ளி சம்பந்தப்பட்ட எந்த விஷயத்கையும் அவர்கள் ஏற்பதில்லை. பின்பற்றுவதுமில்லை. நாங்கள் டவுசர்-சட்டை, பாவாடை-சட்டை, பெரிய வகுப்புகளான +1, +2 வில் பேண்ட் -சட்டை, தாவணி என்று வெள்ளை-அடர்நீலத்தில் சீருடை அணிகையில் இவர்கள் மட்டும் பேண்ட்-சட்டை, சேலை என வான்நீலமும், வெண்மையுமான தனி சீருடையில் வருவார்கள். சேலை காரணமாகவே ஆசிரியப் பயிற்சி மாணவியரை சின்ன டீச்சர்கள் என அழைக்கும் வழக்கமும் சிறுவகுப்பாரிடையே இருந்தது.   வியப்பாக பள்ளியும் அவர்களை நிர்பந்திப்பதில்லை.  ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் யாரும் காலை நேர பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் வகுப்பில் இருப்பார்கள். அவர்களுக்கென பிரத்யேகமான இரு ஆசிரியர்கள் உண்டு. அவர்கள் எடுக்கும் வகுப்பு போக பிற வகுப்புகள் அனைத்தும் பள்ளி ஆசிரியர்களால் எடுக்கப்படும். 

அந்த இரு தனி ஆசிரியர்களும் வழக்கமான ஆசிரியர் ஓய்வறைக்கு வராமல் பள்ளி தொடங்கிய நாளில் கட்டப்பட்டு விரிவாக்கம் ஆனபின் வெறுமே இருந்த சிறிய ஆசிரியர் ஓய்வறையை பயன்படுத்தினர். ஆசிரியப்பயிற்சி வகுப்பறைகளை ஒட்டியிருந்த ஓட்டுக்கட்டிடம் இது.  ஆசிரியப்பயிற்சியில் பாடத் திட்டங்களை ஒவ்வொரு மாதமும் ரெக்கார்ட் எழுதி மதிப்பெண்கள் பெறுவது முக்கியமான அம்சமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிலிருந்து வரும்  பிற ஆசிரியப் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் இந்த ரெக்கார்ட் நோட்டுகள் மதிப்பிடப்பட்டு வழங்கப்படும் புள்ளிகளே அவர்களது சான்றிதழில் முக்கிய இடம் பிடிக்கும். ஆகவே ரெக்கார்ட் நோட்டுகளை வைப்பதற்கு என அந்த அறை எடுக்கப்பட்டு இரு ஆசிரியர்கள் அமரும் அறையாக மாறியது.  இந்த இரு ஆசிரியர்களில் ஒருவர் (ராமமூர்த்தி சார்) எம் எஸ் சி சாருக்கு முன்பே அறிமுகமானவர். அவருடைய தூரத்து சொந்தம் என்பதால் எம் எஸ் சி சார் அந்த ஆசிரியப்பயிற்சி ஆசிரியர்களின் ஓய்வறையையே பயன்படுத்த ஆரம்பித்தார். ஆகவேதான் பூசை சார் சந்திப்புகள் எல்லாம் கருத்தபாண்டியார் டீக்கடை ஓய்வறையில் நடைபெற்றன. ஆசிரியப்பயிற்சி முடித்தவர்கள் எட்டாவது வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு தகுதி பெற்றவர்கள் என்பதால் 9, 10 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் இவர்களுக்கு பாடம் எடுப்பார்கள். அந்த முறையில் எம் எஸ் சி சாரும் ஆசிரியப் பயிற்சி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார். எங்கள் கணிதப் பாட நோட்டுக்கான அட்டை, ஒற்றை/இரட்டைக் கோடுகள், அடிக்கோடிடுதல், வலது மூலை பெயர் கட்டம் போன்ற யோசனைகள் எங்கிருந்து எம் எஸ் சி சாரால் பெறப்பட்டன என இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். 

இரண்டாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தமிழ்செல்வி, கலைச்செல்வி எனும் செல்வி அக்காக்கள் குறித்து. இருவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். இதில் கலைச்செல்வி அக்கா ஆசிரியப்பயிற்சி முடித்து கடலோரக் கவிதைகள் ஜெனிஃபர் டீச்சர் போல வேலைக்குப் போக வேண்டும் என முடிவு செய்தார். ஆகவே தமிழ்செல்வி அக்காவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பனிரெண்டாம் வகுப்பு முடிந்து இரு ஆண்டுகள் கழித்து ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தார். எப்போதும் தோழியைப் பிரியாத தமிழக்காவும் கலையக்காவுடன் ஆசிரியப் பயிற்சி வகுப்புகளுக்கு வந்தார். மகமைச் சங்கத்தின் முக்கிய தலைவராக விளங்கிய கலையக்காவின் அப்பா சேர்மக்கனியார் தன் மகள் விருப்பமே தன் விருப்பமும் என்று சொல்லி அவரைப் படிக்க வைத்தார். பெரிய கோவில் ஓதுவாரின் தம்பி மகளும், உள்ளூர் சிக்கன நாணய சங்கத்தின் எழுத்தருமான தமிழக்காவின் அப்பா சிவ.சிற்சபேசன் என்ற சிக்கனப் பிள்ளை கலையக்கா உடனிருப்பதால் தன் மகளையும் அனுப்பி வைத்தார். சிக்கன நாணய சங்கம் சம்பளம் வழங்குவதிலும் சிக்கனமாகவே இருந்ததால் தமிழக்காவின் பெரும்பாலான செலவுகளை கலையக்காவே பார்த்துக் கொண்டார். ஆடைகள், அணிகலன்கள், நோட்டுப் புத்தகங்கள் என இருவருடையவையும் ஒரேபோல் இருக்கும். பின்னாளில் நாங்கள் பேசிக்கொண்டபோது எங்களை ஒத்த வயதுடைய சுப்ரமணியபுரம் பட இயக்குநர் சசிகுமாரும், சுந்தரபாண்டியன் பட இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனும் சிறுவயதில் தெய்வநல்லூர் வந்திருக்கிறார்கள் என உறுதியாக சொல்லிக்கொண்டோம். ஏனென்றால் கலையக்காவை பார்க்காத ஒருவரால் சுப்ரமணியபுரம் துளசி (ஸ்வாதி) கதாபாத்திரத்தையும், தமிழக்காவைப் பார்த்திராத ஒருவரால் சுந்தரபாண்டியனில் வரும் கதாநாயகியின் தோழியான இளமதி (நீது நீலாம்பரன்) கதாபாத்திரத்தையும் எப்படி திரையில் கொண்டுவந்திருக்க முடியும்? இருவரையும் என்றாவது நேரில் சந்தித்தால் உண்மையைக் கண்டுபிடித்து விடுவோம். 

தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி கிழக்கு மேற்காக யானைக் கோவணம் போல நீண்டு கிடக்கும் இடத்தில் அமைந்தது என முன்பே அறிவீர்கள். இதில் ஆசிரியப் பயிற்சி வகுப்புக் கட்டிடங்கள் கிழக்குக் கோடியில் அமைந்திருந்தன. அவற்றை ஒட்டி பழைய ஆசிரிய ஓய்வறை. ஆசிரியப் பயிற்சி கட்டிடத்தின் பின்னே அமைந்திருக்கும் சிறு கதவு வழியே பெரியகோவில் பக்கவாட்டு சந்தான கீழச் சந்தில் நுழையலாம். இதில் நுழைந்து வடக்குப் பக்கமாக 50 மீட்டர் நடந்தால் பெரியகோவில் வாசல் மண்டபத்தின் பக்கவாட்டில் நுழைந்து கோயிலுக்குள் இறங்கி நேரே மேலே ஏறி மேலச்சந்து வழியே வடக்கு ரத வீதியை அடையலாம். இந்த மேலச் சந்தில்தான் தமிழக்காவின் வீடும், எம் எஸ் சி சாரின் தனிப்பயிற்சி மையமும் அமைந்திருந்தன. தாங்கள் தனித்துவம் கொண்டவர்கள் என்பதால் பள்ளியின் பொது வாசலை விட இந்த சிறு வாசலே ஆசிரியப் பயிற்சி மாணவர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பள்ளியின் காலைப் பிரார்த்தனைக்கு தாமதமாக வருபவர்கள் இந்த கீழச்சந்து வாயில் வழியே பள்ளிக்குள் நுழைந்து பிரார்த்தனை முடியும் வரை வகுப்பின் பெஞ்சுகளுக்கு கீழே பதுங்கியிருந்து பிரார்த்தனை முடிந்து மாணவர்கள் திரும்புகையில் தாமுன் உடன் கலந்து தண்டனையிலிருந்து தப்பிப்பர்.  எம் எஸ் சி சார் பள்ளிக்கு வந்த புதிதில் பிரார்த்தனை கூட்டத்தை ஒழுங்குபடுத்தியமை குறித்து முன்பே பேசியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த தப்பிக்கும் யுக்தியை அறிந்து கொண்ட அவர் அந்த வாசலை பூட்டி மூடிவிடுமாறு சொல்லி விட்டார். பள்ளி மாணவர்களோடு  தாங்களும் பொதுவாயில் வழியே வருவது தங்களது  தனித்துவத்திற்கு இழுக்கு எனக் கருதிய  ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் அக்கதவைப் பூட்டியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பொறுப்பு தலைமை ஆசிரியரை அணுக எம் ஏ என் சார் கை விரித்து விட்டு  விரலை மட்டும் எம் எஸ் சி சார் பக்கமாக நீட்ட … இவ்வாறாகவே எம் எஸ் சி சாருக்கும் செல்வியக்காக்களுக்குமான முதல் நேரடி சந்திப்பு ஏற்பட்டது.   

எப்போதும் முந்திச் சென்று வெடிப்புறப் பேசும் கலையக்காதான் எம் எஸ் சி சாரிடம் வேகமாக பேசினார். பள்ளி மாணவர்கள் இவ்வாயிலை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வது பள்ளி ஆசிரியர்கள் கடமைதானே தவிர எங்கள் வாயிலை அடைப்பது முறையல்ல என ஆரம்பித்து கண்கள் சுழல உதடுகள் துடிக்க மார்புச் சங்கிலியின் அன்னப்பதக்கம் அதிர பேசி முடித்தார். தமிழக்கா மெல்லிய குரலில் தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு இல்லாத தண்டனை பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் எனவும் சரியான நேரத்துக்கு வரும் தாங்களும் சுற்றி வந்து தெற்கு ரத வீதியில் நுழைந்து மீண்டும் பள்ளி பொது வாயிலிலிருந்து கீழ்கோடி வரை நடப்பதால் தாமதமாகிறது எனவும் சொல்லி சில பையன்களின் தாமத வருகைக்காக ஆசிரியப் பயிற்சியின் இரு வகுப்பு மாணவர்களும் (இரு ஆண்டுகள்) ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டார். வெப்பமும், குளிர்ச்சியும் மாறி மாறி ஒத்தடமாகத் தரப்படும் வீக்கத்திற்கான சிகிச்சை போல அமைந்த இரட்டைக் கிளவிகளால் மனமிரங்கிய எம் எஸ் சி சார் அவ்வாயிலைத் திறந்து விட்டுவிட்டு இரு அக்காக்களையுமே அங்கு பிரார்த்தனை நேர காவல் பணியையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இங்கிருந்துதான் இரு அக்காக்களுக்கும் எம் எஸ் சி சாருக்குமான நெருக்கமான தொடர்பு வளர்ந்தது. குறிப்பாக கலையக்காதான் தன் ஆதர்ச ஆசிரிய நாயகனாக எம் எஸ் சி சாரை மதித்தார். கலையக்கா சொல்லே வேதமென வளர்ந்த தமிழக்காவும் அதே உணர்வை வழிமொழிந்து பின்பற்றலானார். இதற்குப் பின்னரே எம் எஸ் சி சார் தன் இருப்பிடமாக ஆசிரியப் பயிற்சி ஆசிரியர்களின் ஓய்வறையை  தேர்ந்தெடுத்தார். 

பத்தாம் வகுப்பு அ பிரிவும், ஆசிரியப்பயிற்சி வகுப்புகளும் ஒரே   கட்டிடம். ஒரே படிக்கட்டில் ஏறி இடப்பக்கம் திரும்பினால் இரு வகுப்பறைகள் ஆசிரியப் பயிற்சிக்கானவை. வலப்பக்கம் திரும்பினால்  இருக்கும் இரு வகுப்பறைகள் முறையே 9, 10 வகுப்புகளுக்கான அ பிரிவு. இங்குதான் சங்கீதாவை முதலில் சந்தித்தனர் செல்வியக்காக்கள். அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான் புது வசந்தம் திரைப்படம் வெளியாகி ஆண் பெண் காதலில்லா நட்பு ஒரு காட்டுத்தீ போல விவாதிக்கப்பட்டது. அதைப் பாராட்டி புகழ்ந்து கொண்டிருந்தவர் கலையக்கா. சரியாக அதே  நேரத்தில்தான் சங்கீதாவுக்கு பிரேம் கடிதம் எழுதி விசாரணை நடந்து அதில் பிரேம் சொன்ன “அவ என் ஃப்ரெண்டு சார்” ஆப்த வாக்கியமாக பிரபலமானது. அதன் வழியே  பிரேமும், சங்கீதாவும் செல்வியக்காக்களின் நட்பில் இணைந்ததும் நாம் முன்பே பேசியதுதான். 

பிரேமுக்கும், எம் எஸ் சி சாருக்குமான உரசல் போக்கு தொடர்கையில் செல்வியக்காக்கள் முயன்ற சமாதான தூதும் சரி வரவில்லை. இதில் தலையிட வேண்டாம் என எம் எஸ் சி சார் புன்னகையுடன் கடுமையாக கலையக்காவிடம் சொல்லிவிட்டார். ஆனால் தொடர்ந்து அவர்களிடம் இனிமையாகவே பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் வட்டார கல்வி அதிகாரியின் விசாரணைக்கு ஆளாகி அவரால் அறிவுறுத்தல் (எச்சரிக்கை) கடிதம் கொடுக்கப்பட்டார் எம் எஸ் சி சார். அவர் மொத்த பத்தாம் வகுப்புகளுக்கும் கணித ஆசிரியர் என்ற பதவி பறிபோய் அவரது அடையாளமான பிரம்பும் பிடுங்கப்பட அவர் சோர்வுற்றவராக இருந்தார். ஆனால் நாங்கள் அ பிரிவில் இணைந்ததும் சங்கீதா, மெஜூரா ஆகியோர் அண்மையால் மகிழ்வுற்றோம். எங்களது மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. நேரு பள்ளியில் நாங்கள் உருவாக்கிய அதே சூழலை அ பிரிவிலும் உருவாக்கலாமா எனும் ஆலோசனையை நாங்கள் மிக ஊக்கத்துடன் நடத்திக் கொண்டிருந்தோம். எங்கள் முகங்கள் பழையபடி ஒளிபெற்று விளங்கின. பிரேமின் இடக்கைக்கான சிகிச்சை தொடர்ந்தது. பத்தாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு எழுதி முடிக்கும்போதுதான் பிரேமின் கை சற்று இயல்புக்கு திரும்பியது (நான் அவர்கிட்ட வசம்மா சண்ட போட்டேன் தெரியுமாடா பிரேம், உன் கையப் பாத்ததும் எனக்கு என்னென்னோ ஆயிருச்சுடா, உண்டுதானடி தமிழு? -கலையக்கா. ஆமாடா, அன்னைக்கு மத்தியானம் கூட இவ சரியா சாப்புடாம சாரை வஞ்சிக்கிட்டே இருந்தா. அவர்கிட்டயும் நல்லா சண்ட போட்டா ஒனக்காக-தமிழக்கா). 

இந்த சூழலில்தான் எங்கள் பழைய எதிரியும், துரை கோஷ்டியாரின் நண்பருமான மாடசாமி உள்ளே நுழைந்தார். ஒன்பதாம் வகுப்பில் தோல்வி மாடசாமிக்கு பள்ளி வாழ்வில் நடந்த ஐந்தாம் தோல்வியாக அமைந்து விட்டது. அதற்கு மேல் மாடசாமி படித்து மாவட்ட ஆட்சியராகி தனக்கு கஞ்சி ஊற்றப்போவதில்லை என உணர்ந்த அவரது அப்பா தன் மனைவியின் தம்பி மூலமாக சங்கரன்கோவில் மண்டியில் மூட்டை தூக்கும் பணிக்கு மாடசாமியை  அனுப்பி வைத்தார் (தெய்வநல்லூர் மொழியில் “அடிச்சுப் பத்தி விட்டார்”). மாதம் ஒருமுறையாவது தெய்வநல்லூர் வரும் மாடசாமி சந்தையின் இருண்ட மூலைகளில் தான் கற்ற வித்தைகளை தன் பழைய பள்ளி நண்பர்களான துரை கோஷ்டியாரிடம் சொல்லி அவர்களை ஏங்கச் செய்து வந்தார். இப்படியான சந்திப்புகளின்போது தான் துரை கோஷ்டியாரிடம் நேரு பள்ளி ஆண்டுவிழாவில் தம் மீதும், துரை கோஷ்டியார் மீதும் மிளகாய்பொடி வீசி தாக்குதல் நடத்தியது இந்த பிரேம் கோஷ்டிதான் என்பதை வெளிப்படுத்தினார்.   அதிலிருந்துதான் பிரேம் சங்கீதாவை இணைத்து துரை ஆபாச கிண்டலை வெளிப்படுத்தி எங்களை நோகடித்தது. விசாரணைக்குப் பிறகு எம் எஸ் சி சார் ஆர்வமிழந்தவராக நடந்து கொள்வதைக் கண்ட துரை கோஷ்டியாருக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் செயலாக இருந்த காலத்தில் தாம் எதிர்பார்த்திராத, தம் தகுதிக்கு அடைய முடியாது என நினைத்த  அதிகாரங்களை தமக்கு அள்ளி வழங்கி தம்மை முந்த முடிந்தவர்களையும் கட்டுப்படுத்தி வைக்கும் கூடுதல் அதிகாரத்தையும் தந்த ஞானத்தந்தைக்கு ஒப்பானவர் இப்படி இருக்க, தாம் எதுவும் செய்யாமல் இருப்பது குறித்து துரை அங்கலாய்த்தபடியே இருந்தார். 

எம் எஸ் சி சாரின் தனிப்பயிற்சி மையம் சற்று சுனக்கமடைந்தது. அதிலிருக்கும் ஐந்தாறு மாணவர்கள் எங்களுடன் நமஸ் சார் தனிப்பயிற்சிக்கு வர ஆரம்பித்தனர்.   இதே நேரத்தில்தான்  செல்வி அக்காக்கள் தம்மை அறியாமலேயே ஒரு பிழையைச் செய்தனர். எங்கள் கோஷ்டி எவ்வளவு அப்பாவியான, நல்ல மனம் கொண்ட, நட்பு மிக்க கோஷ்டி என எம் எஸ் சி சாருக்குப் புரிய வைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்த அவர்கள் அதன் பகுதியாக நாங்கள் பெரியகோவிலில் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருவதை எம் எஸ் சி சாரிடம் சிலாகித்துப் பேசினர். பேசப்பட்ட இடம் தனிப்பயிற்சி மையம். உங்களுக்கு ஐயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் முன்பே சொன்னபடி அந்த பயிற்சி மையத்துக்கு அடுத்த வீடு தமிழக்காவுடையது (பாகப்பிரிவினையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சிக்கனப் பிள்ளைக்கு ஒரு பாகமும், அவரது சகோதரர் “பாங்க் பிள்ளை”க்கு ஒரு பாகமும் வழங்கப்பட்டது). இரு வீடுகள் என சொல்லப்பட்டாலும் ஒரே வீடுதான் அது. அங்கு தனிப்பயிற்சி அளித்து ஆசிரியப் பயிற்சி பெற எம் எஸ் சி சாரிடம் கேட்டு அனுமதி வாங்கி கலையக்கா வருவார். கூடவே தமிழக்காவும். தமிழக்கா வீட்டில் இருந்து கூடுதல் நேரம் ரெக்கார்ட் நோட் எழுதி வருவதாக கலையக்கா தன் வீட்டில் சொல்லியிருந்தார்) இருவரும் தனிப்பயிற்சி வகுப்புகளில் அவ்வப்போது பாடம் எடுப்பதுண்டு. அப்படியான ஒரு நாளில்தான் நாங்கள் மகிழ்ந்திருப்பது சொல்லப்பட ஏற்கனவே கொதித்து இறுகிய எம் எஸ் சி சார் தன் நிதானத்தைத் தவற விட்டார். யாரோ இருவர் கொஞ்சிக் குலவுவதையெல்லாம் தன்னிடம் சொல்ல வேண்டிய தேவை இல்லை என கோபித்த அவர் உடனே சமாதானமாகி அக்காக்களை  வீட்டிற்கு அனுப்பி விட்டு துரை கோஷ்டியாருடன்  தனியே பேசியதாக பின்னர் தெண்டிலு தெரிவித்தார். ஆனால் அப்பேச்சின் விளைவா, அந்த யோசனையே அவருடையதா என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. செய்தது யாரென மட்டும் தெரிந்தது.  தோழரண்ணன் தொடர்புகளால் சந்தேக வட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட மாடசாமி சங்கரன்கோவில் தொழிலாளர் சங்க ஆட்களால் அலுவல் சாரா விசாரணை முறைகளில் தாம் செய்த தவறை ஒப்புக்கொண்டார். 

விசாரணை முடிந்து நாங்கள் அ பிரிவில் சேர்ந்து எல்லாம் சரியாகி விட்டதென பெருமூச்சு விட ஒரு மாத காலம் கடந்திருந்தது. இதற்கிடையே நான்காண்டு கால அயல் பணியில் வெளிநாடு சென்றிருந்த பிரேமின் அப்பாவிற்கு பணிகள் விரைவாகவே முடிந்து விட்டதால் நான்கு மாதங்களுக்கு முன்பே இந்தியா திரும்புவதாக கடிதம் வந்தது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் பயணச்சீட்டு கிடைப்பதைப் பொறுத்து வருவதாக கடிதம் அனுப்பியிருந்தார் பிரேமின் அப்பா. எங்களுக்கும் அவரைச் சந்திக்கப்போவதில் ஆவல். தான் அப்பாவுக்கு எழுதிய கடிதங்களில் எங்களையெல்லாம் குறிப்பிட்டு எழுதுவதாக பிரேம் மாதமொருமுறை சொல்வார். கூடுதலாக பள்ளிக்கு பொங்கல் விடுமுறை ஒரு வாரம் என்பதால் நாங்கள் மகிழ்ந்திருந்தோம். ஆனால் அந்த விடுமுறை ஒரு வதையாக மாறிப்போனது. புதன்கிழமையிலிருந்து பொங்கல் விடுமுறை ஆரம்பம் என்ற மகிழ்வில் விடிந்த  ஒரு திங்கள்கிழமை காலை ஊரின் பொது இடங்கள் சிலவற்றில் கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களை ஒத்த ஆண்,பெண்  உருவங்கள் உடலுறவின் எல்லா நிலைகளையும் முயற்சிப்பது போன்ற கரிக்கோடு ஓவியங்கள் தென்பட்டன. அதில் ஆணுக்கு நேராக பிரேம், பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் பெண் படத்துக்கு நேராக சங்கீதா, பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தது.  நிறைய இடமிருந்த சில சுவர்களில் பெரிய கோவில் பிரகாரங்களில் —– எனப் பலவாறாக எழுதப்பட்டிருந்தது. அவற்றில் கும்மியடி, லீலை, முரட்டடி, ஊமைக்குத்து போன்ற பரிபாஷைகளே இங்கு பகிரத்தக்கவை. பிற சொற்களை அறிய “ஆசீர்வதிக்கப்பட்ட” வாழ்க்கை அனுபவம் இருந்தால்தான் சாத்தியம். ஒருசில இடங்களில் ஒரு பெண் மீது மூன்று ஆண்கள் இருக்கும் படங்கள் இருந்தன. அவற்றில் பெயர்கள் இல்லை. திங்களன்று காலை பள்ளியைத் திறக்க வந்த காளிமுத்து அண்ணன் திகைத்து ஓடி எம் ஏ என் சாரை அழைத்து வந்தார். பள்ளியில் உட்புற சுவர்கள், வகுப்பறை சுவர்கள், கழிப்பறைச் சுவர்கள் என எங்கும் இதே போன்ற வாசகங்களும், படங்களும். 

நான்கு தென்னை மட்டைகள் ஒன்றாக விழுந்தாலே பரபரத்துவிடும் தெய்வநல்லூருக்கு இத்தகைய சம்பவம் பசித்தவனுக்கு விருந்து போல. 8 மணிக்குள் ஊரிலுள்ளோர் அனைவரும் விபரமறிந்து “ஓவியங்கள்” வரையப்பட்ட “திருத்தலங்கள்” ஒவ்வொன்றாகச் சென்று பார்த்தனர். இன்னும் பார்க்கப்படாத ஓவியங்கள் இருக்குமிடத்தை ஒருவருக்கொருவர் “கலையார்வத்தால்” பகிர்ந்து பிறருக்கு உதவினர். ஒரு அவலநகைச்சுவையாக எங்களுடன் நேரு பள்ளியில் படித்து தற்போது படிப்பை நிறுத்தி விட்டு பேப்பர் போடும் பணி செய்து வரும் “நியூஸ்” சந்திரன் தான் சிவாஜிக்கு முதலில் தகவலைக் கொண்டுவந்தவர். (ஏல, நேசமாவே நம்ம பிரேமையால இப்டி படம் போட்ருக்காணுவ. தாயோளிக, செருக்கிவுள்ளைக, சிக்கினாங்கன்னா ஒற்ற இழுப்புல காத்தாம்பட்டைய நொறுக்கிருவேம்). சிவாஜியும், நானும் மட்டுமாக சென்று “ஓவியங்களைப்” பார்த்து வந்தபோது மணி 9 ஆகியிருந்தது. தயக்கத்துடன் நாங்கள் பிரேம் வீட்டுக்கு வந்தபோது பிரேம் வீட்டில் எந்த சலனமும் இல்லை. நாங்கள் வந்ததும் பிரேம்  வழக்கம் போல பேசிக்கொண்டு பள்ளிக்கு வந்தாலும் நாங்கள் ஏதோ போல இருப்பதாகச் சொல்லி என்னாச்சு என்னாச்சு எனக் கேட்டபடியே வந்தார். வழியில் சிலர் பிரேமை கைகாட்டி பேசுவது தெரிந்தது. பள்ளிக்குள் நுழைந்ததும் பிரேமுக்கே விஷயம் தெரிந்தது. பிரேம் இதுவரை சந்திக்காத அதிர்ச்சியை சந்தித்திருந்தார். வகுப்பிற்குள் நுழைந்து தன்னிடம் சென்று அமர்ந்தவர் எவரிடமும் பேசாமல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தார். அவரை விட மோசமான நிலையில்  சங்கீதா. வழக்கம்போல நாகர்கோவில் சென்று திங்கள் காலை ஊர் திரும்பி உடனே கிளம்பி நேரே பள்ளிக்கு வந்து விட்டார் சங்கீதா. அவரும் அதே போல வெறித்த பார்வையுடன் அவரிடம் வந்து அமர்ந்தார். சிவாஜி என்னிடம் நம் இருவரில்  ஒருவராவது எப்போதும் பிரேமுடன் இருக்க வேண்டும், பிரேமை தனியே விடக்கூடாது என எச்சரித்தார். அவ்வாறே மெஜூராவிடமும் சங்கீதாவைப் பிரியாமல் இருக்குமாறு சொல்லப்பட்டது. பிரேமும், சங்கீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதை கவனமாகத் தவிர்த்தது எங்களுக்குத் தெரிந்தது. பிற வகுப்புகளிலிருந்து வந்த மாணவர்கள் பொருட்காட்சியில் பார்ப்பது போல இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு சென்றனர்.  ஒரு கட்டத்தில் சங்கீதா கண்களிலிருந்து நீர் கொட்ட ஆரம்பிக்க பிரேம் டெஸ்க்கில் தலை கவிழ்ந்தார். அன்று காலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நாங்களும், சங்கீதா & மெஜூராவும் போகவில்லை. முதல் வகுப்பு ராஜசேகரன் சாருடையது. ஆனால் அவர் வரவில்லை. ஆசிரியர்கள் ஓய்வறை  பல சலனங்களுடன் இருப்பது தெரிந்தது. எம் ஏ என் சார் அவர் அறையில் இல்லை. கருத்தபாண்டியார் கடை ஓய்வறையில் ஆலோசனையில் இருந்தார்.   சற்று நேரத்திற்கெல்லாம் தன் அறைக்குத் திரும்பிய எம் ஏ என் சார் பத்தாம் வகுப்பின் ஆசிரியர்களுக்கான அவசர சந்திப்பை அறிவித்தார். அதை ஒட்டி எல்லா பத்தாம் வகுப்புகளுக்கும் முதல் பீரியட் எந்த ஆசிரியரும் வரவில்லை. எல்லோரையும் பேச விட்ட எம் ஏ என் சார் பள்ளியின் பெயரில்லாவிட்டால் தான் இதில் தலையிட்டிருக்கப் போவதில்லை என்றும், பள்ளியின் பெயர் கெட அனுமதிக்க முடியாது எனவும் உறுதியாகக் கூறினார். 

சற்று நேரத்தில் பிரேமுக்கும், சங்கீதாவுக்கும் தனித்தனியே தலைமையாசிரியர் அறைக்கு அழைப்பு வந்தது. இருவரையும் தேவையற்ற வேலைகளைச் செய்து பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கியபடியால் பெற்றோருடனோ, காப்பாளருடனோ வந்து தன்னை சந்திக்க வேண்டுமெனவும், இப்போது இருவரும் வீட்டிற்குச் செல்லலாம் எனவும் எம் ஏ என் சார் சொன்னார். ஆசிரியர் அறைவாசலில் நின்று சிவாஜியை அழைத்த மீசை சார் இருவரையும் தனியே வீட்டிற்கு அனுப்ப வேண்டாமென்றும் நாங்கள் யாராவது உடன் செல்லும்படியும் சொன்னார். ராஜசேகரன் சாரும் உடனிருந்து ஆமோதிக்க முதலில் சங்கீதா மெஜூராவுடன் கிளம்பினார். வகுப்பு வாசலைத்தாண்டுமுன் எங்கள் எல்லோரையும் பார்த்த சங்கீதா பிரேமை ஒரு நொடி உற்றுப்பார்த்தார். சங்கீதா கண்களை பிரேம் சந்தித்த இரண்டாம் நொடியில் பிரேமின்  சட்டை நனைய ஆரம்பித்தது. நாங்களும் அடுத்ததாக பிரேமுடன் கிளம்பினோம். பிரேம் வீட்டில் விஷயம் தெரிந்து விட்டிருந்தது. பாலாஜி அண்ணன் பிரேமை அழைத்து வர கிளம்பியபோது நாங்கள் சென்று சேர்ந்தோம்.  பிரேமின் அம்மா எங்களிடம் பிரேமை யாரேனும் திட்டினார்களா, கிண்டல் செய்தார்களா எனக் கேட்டார். நாங்கள் பள்ளியில் எம் ஏ என் சார் சொன்னதை மட்டும் சொன்னோம். பிரேமின் அம்மா வெறித்த பார்வையுடன் திண்ணை பெஞ்ச் மேல் அமர்ந்திருந்த பிரேமிடம் சென்று அவர் தலையை கோதினார். காத்திருந்தது போல பிரேம் வெடித்து அழுது அம்மாவைக் கட்டிக் கொண்டார். பாலாஜி அண்ணன் எங்களுக்கு கண்ணைக் காட்டி வெளியே அழைத்துப் போனார். நாங்கள் தோழரண்ணன் கடைக்குப் போனோம். அதற்குள் தோழரண்ணன் ஊராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு டீ, வடை வாங்கிக் கொடுத்து பணமும் கொடுத்து ஊரில் ஆங்காங்கே வரையப்பட்டிருந்த ஆபாச ஓவியங்களை அழிக்கச் சொல்லி அனுப்பியிருந்தார். நாங்கள் போனதும் எங்களிடம் பள்ளியில் நடந்தவற்றைக் கேட்டவர்கள் எங்களை பள்ளிக்கு செல்லும்படியும், யாருடனும் பேச வேண்டாம் எனவும் மாலை வந்து பிரேமை சந்தித்து விட்டு கடைக்கு வரும்படியும் சொன்னார்கள். நாங்கள் பள்ளிக்குத் திரும்பினோம்.  

பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் சங்கீதாவின் அப்பா தலைமை ஆசிரியரைச் சந்திக்க வந்தார். அவர் வந்த சிறிது நேரத்திலேயே பிரேமின் அண்ணனும் வந்தார். பாலாஜி அண்ணன் எம் ஏ என் சார் அறைக்குள் நுழையும்போது சங்கீதா அப்பாவின் குரல் அதிர்ந்து கொண்டிருந்தது. “அதென்ன சாரே அப்படி கேட்டது? இப்ப உங்கள அப்டி எழுதினா யாரு இப்டி செய்ததுன்னுதானே  கேக்கணும்? அப்படி உண்டான்னு கேட்டா எந்து அர்த்தம் சார்? வாழக் குருத்து போலுள்ள பிள்ளைகள் சார். படிப்பு, விளையாட்டுன்னு ஸ்நேகமாயிட்டு இருந்த பிள்ளைகளை எவனோ தெண்டி அப்டி எழுதினா நாமல்லையா சார் தைரியம் சொல்லணும்?  எனிக்கி ஆ பையன் மேல எந்த கம்ப்ளெயின்டும் இல்ல சார். அப்டி  கம்ப்ளெயின்டு கொடுக்காமெங்கில் பச்சக் கள்ளம் எழுதின தெண்டி மேல கொடுக்காம் சார்”. பிரேமின் அண்ணன் வருவதைப் பார்த்த உடனேயே எம் ஏ என் சார் சங்கீதா அப்பாவை அமைதிப்படுத்தினார். பாலாஜி அண்ணன் வந்ததும் பள்ளியின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் ஆபாச ஓவியங்களை ஏன் இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்கள்,படிக்கும் மாணவர்கள் கவனம் இதில் போனால் எப்படி படிப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். சம்பந்தப்பட்ட இருவரின் பெற்றோர்/காப்பாளர் காண்பதற்கான சாட்சியாகவும், நாளை கல்வி அதிகாரி கேட்டால் சாட்சியாக விளங்கவுமே தான் விட்டுவைத்திருப்பதாகவும் வேண்டுமென்றால் வெளிச்சுவரில் இருப்பதை சுத்தப்படுத்துவதாகவும் தெரிவித்தார் (வேண்டுமென்றே பள்ளி உள்சுவரில் மூன்று நாட்கள் அந்த ஆபாச ஓவியங்களும், தகவல்களும் அப்படியே விடப்பட்டிருந்தன).  இருவருக்கும் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா எனக் கேட்ட எம் ஏ ஏன் சார் இவ்விஷயத்தில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும் வட்டார கல்வி அலுவலருக்கு விஷயத்தை தெரியப்படுத்தி அதன் அடிப்படையில் மேற்கொண்டு என்ன செய்யலாமென இருப்பதாகவும் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். துடித்து எழுந்த சங்கீதா அப்பாவை பாலாஜி அண்ணன் அமைதிப்படுத்தி அப்படியே செய்யுமாறு எம் ஏ என் சாரிடம் சொல்லி விட்டு சங்கீதா அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியேறினார். 

கிளம்பிய இருவரும் நேரே பேருந்து நிலையம் சென்று அங்கு காத்திருந்த தோழரண்ணனுடன் பேருந்து ஏறி சிவகிரி வட்டார  கல்வி அலுவலகம் சென்று டிரிப்பிள் எஸ் சாரை சந்தித்தனர். மாலை இவர்கள் தெய்வநல்லூர் திரும்ப பேருந்து ஏறியபோது சிவகிரி எல்லைக்குள் எம் ஏ என் சாரைச் சுமந்தபடி எம் எஸ் சி சாரின் பைக் நுழைந்தது. இம்முறை நிமிர்ந்த நன்னடையினராய் எம் எஸ் சி சார் அலுவலகம் புகுந்தார். அவை நடுவே உடுக்கை இழந்தவன் போல தன்னை நடித்த எம் ஏ என் சார் நடந்ததை மிகை சோகத்துடன் கூறி பள்ளி மானம் போய்விட்டதாகவும் அதிகாரி அவர்களே அதைக் கண்டுபிடித்து மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.  கூடவே தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நன்னெறிக் குழு என்ற பெயரில் எம் ஏ என் சார் உருவாக்கியிருந்த ஆசிரியக் குழு (எம் ஏ என் சார், எம் எஸ் சி சார், பூசை சார் ஆகியோர்)  சார்பில் இவ்விஷயத்தில் வட்டார கல்வி அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்ட  கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தார்.  எம் எஸ் சி சார் மிகக் கம்பீரமாக தான் அம்மாணவனின் துர்நடத்தை, ஒழுக்கக்குறைவு  குறித்து முன்பே சொல்லியும் அதிகாரியவர்கள் நம்பவில்லை எனவும், மாறாக அவற்றைச் சரி செய்ய முயன்ற தன்னையே விசாரணைக்கு உட்படுத்தி மனஉளைச்சல் ஏற்படுத்தியதாகவும் சொன்னார். வெகுநாட்களுக்குப் பிறகு அவ்வப்போது அவர் முகத்தில் புன்னகை போன்ற லாட வளைவு உருவாகி மறைந்தது.  

டிரிப்பிள் எஸ் சார் குறுக்கிடாமல் மிக அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த அமைதியை தவறாகக் கணித்த எம் ஏ என் சார் பழைய ஓய்வறை சக ஆசிரியரான  டிரிப்பிள் எஸ்ஸைக் காண விழைந்தார். -“என்ன சார்வாள், நாங்களேதான் வந்ததுலருந்து பேசிக்கிட்ருக்கோம்.  அலுவல் நேரம் முடிஞ்சும் பள்ளி நலனுக்காக கைக்காசைப் போட்டு சிவகிரி வரைக்கும் வந்துருக்கோம். நீங்க இப்டி அமைதியாருந்தா என்ன அர்த்தம்?”. டிரிப்பிள் எஸ் சார் இதற்கெனவே காத்திருந்தது போல ஆரம்பித்தார் – “உங்க வேலைல (அடிக்குரலில் அழுத்திச் சொன்னது) நீங்க ஆர்வமா இருக்கறது குறித்து மகிழ்ச்சி சார். இப்ப நான் என்ன நடவடிக்கை எடுக்கணும்ங்கறீங்க?”. எம் எஸ் சி சார் தூண்டில் வீசப்படும் முன்பே புழுவைக் கடிக்க துள்ளினார் – “எம்மேல கம்ப்ளெயிண்ட் வந்தப்ப இப்டி எங்களக் கேட்டா நடவடிக்கை எடுத்தீங்க? இப்ப எதூமே தெரியாத மாதிரி கேட்டா என்ன சார் அர்த்தம்?” எம் ஏ என் சார் தாழிப்பானை உடைவதற்கு முந்தைய விரிசலை உணர்ந்து வெண்ணெயை காக்க முயற்சித்தார் – “சார்வாள், நீங்க வர்க்க நீதியைக் காப்பாத்த போராடற சங்கத்து ஆளு, இவரு சமூகத்து நீதியக் காப்பாத்த போராடற சங்கத்து ஆளு, இவரு சங்கம்தான் ஆட்சிலயும் இருக்கு. உங்களுக்குத் தெரியாதது இல்ல….”

டிரிப்பிள் எஸ் சார் சற்று சாய்ந்து உட்கார்ந்தார் – “சார், மொத பாயிண்டு, நீங்க கொடுத்துருக்கறது புகார் மனு இல்லை. கோரிக்கை மனு.  என்ன செய்யலாம்னு நான்தான் முடிவு பண்ணனும். ரெண்டாவது பாயிண்டு, நீங்க புகார் மனு கொடுத்தீங்கன்னா சம்பந்தப்பட்ட மாணவர்களோட  பெற்றோரை வரவழைச்சு அவங்க தரப்பையும் கேட்டுகிட்டு அவங்க இது சம்பந்தமா போலீஸ்ல புகார் கொடுக்கறதா இருந்தா போலீஸ் விசாரணை முடியுமட்டும் நம்ம விசாரணையை நிறுத்தி வைக்கணும். கூடவே இது சம்பந்தமா முதல்லருந்து என்னென்ன நடந்ததுன்னு மாவட்ட அதிகாரிக்கும், டிபார்ட்மெண்ட்டுக்கும் அறிக்கை கொடுக்கணும். போலீஸ் புகார் ஆச்சுன்னா பத்திரிக்கை நியூஸா வரும். ஆட்சில இருக்கப்பட்ட சங்கத்து ஆளு வேற. இதையெல்லாம் யோசிச்சுட்டுத்தான் கோரிக்கை மனுவோட வந்துருக்கீங்கன்னு புரிஞ்சுக்கறேன். ஒண்ணு பண்ணுங்க… இந்த கோரிக்கையை எடுத்துட்டுப் போய்ட்டு நாளைக்கு புகார் மனுவா கொண்டாங்க. நான் நடவடிக்கை எடுக்கறேன். சரிதானா?”    போலீஸில் புகார் என்ற சொல்லைக் கேட்டதும் இருவரும் இடி கேட்ட பிணையல் நாகங்களென ஆனார்கள். எம் ஏ என் சார் முகத்தில் லாட வடிவம் மறைந்து புருவங்களில் தோன்றியது. எம் ஏ என் சார் தான் சமாளித்துக் கொண்டு பேசினார் –“சார், சார், உங்க மேல நம்பிக்கை இல்லாம இருந்தாதான புகார் மனு கொடுப்போம். நீங்க நேர்மையா செயல்படுவீங்கன்னுதான கோரிக்கையா வைக்கறோம். ப்ரொஷீஜர் படி இது பேர்ல சார்வாள் என்ன ஆக்ஷன் எடுக்கணுமோ அதை எடுத்தா போதும். “

டிரிப்பிள் எஸ் சார் முகத்தில் உணர்ச்சியில்லாத மெழுகுத்தன்மை கூடியது- “சார், ப்ரொஸீஜர்படி மொதல்ல இப்படி சம்பவம் பள்ளியில நடந்ததுன்னும், அதற்கு என்ன முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுன்னும் தலைமை ஆசிரியர் கிட்டருந்து  எங்க ஆஃபீஸ்க்கு ரிப்போர்ட் வரணும். அதுல மேல் நடவடிக்கைக்கு குறிப்புகள் தருமாறு கேட்டு, அதாவது ஸீக்கிங்க் அட்வைஸ் ஃபார் ஃபர்தர் ஆக்ஷன்னு கேட்ருக்கணும். எனக்கு நம்ம பள்ளிலருந்து அப்டி எந்த அறிக்கையும் வரல. ஆனா வட்டார கல்வி அதிகாரியால ஒப்புதல் அளிக்கப்படாம பள்ளில நியமிக்கப்பட்ட  ஒரு குழுவோட கோரிக்கை மனுதான் இப்ப என்கிட்ட இருக்கு.   ப்ரொஸீஜர்படி இந்த கோரிக்கையை உங்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி இந்த மனுவில் சொல்லப்பட்ட விஷயங்களை முன்பே வட்டார கல்வி அலுவலகத்துக்கு இதுவரை தலைமை ஆசிரியர் தெரிவிக்காமல் இருந்ததன் காரணங்களை விளக்கும்படி கேக்கணும். பள்ளில ஏதாச்சும் விசாரணை, நடவடிக்கை எடுத்திருந்தீங்கன்னா அதற்கான விவரங்கள் வேணும். அதற்கப்புறமா எல்லா விவரங்களையும் மாவட்ட அதிகாரிக்கு அனுப்பிட்டு அவர்கிட்ட ஸீக்கிங்க் அட்வைஸ் ஃபார் ஃபர்தர் ஆக்ஷன்னு கேட்டு காத்திருக்கணும். சார்வாள், இப்ப நான் என்ன செய்யட்டும்?”

எம் ஏ என் சார் அலையிலிருந்து உலையில் விழுந்தது போலானார். மனதிற்குள் பூசை சாருக்கு பூசை கொடுத்தார். தான் கற்பனை செய்தபடி தலைமை ஆசிரியர் பணி அவ்வளவு எளிதில்லையோ என ஐயம் கிளம்பியது. ஐயம் சிறுத்துப் போகும்படி டிரிப்பிள் எஸ் சாரின் கேள்விகள் பூதாகரமாக எழுந்தன. பார்வையைத் தழைத்தபடி சீவாளியை சரி செய்யும் நாதஸ்வர வித்வான் போல உதடுகளை மடித்தபடி எம் எஸ் சி சார் அமர்ந்திருப்பதைப் பார்க்க அவர் தனக்கு உதவிக்கு வரப்போவதில்லை என எம் ஏ என் சாருக்கு புரிந்தது. மறுபடியும் தான் மட்டுமே தனித்து விடப்பட்டு நிற்பதன்  கழிவிரக்கத்தில் விழுந்தார் எம் ஏ என் சார். தனது சொற்களில் தழுதழுப்பை ஏற்றினார்- “சார்வாள், நீங்க சொல்லுத புரோஷீஜர்லாம் தெரியும் சார். அப்டி செஞ்சா பள்ளிக்கூட மானத்த நம்மளே தண்டோரா போட்ட மாதிரி ஆய்ரும்னு சாருக்கு தெரியாதா? அதே நேரம் சார்வாளுக்கும் சொல்லாம இருக்கப்படாதேன்னுதான் இப்டி செய்தது. என்னருந்தாலும் சின்னப் புள்ளைக. நம்ம புள்ளைக எதிர்காலத்த நாமளே கெடுத்த மாதிரி ஆகக்கூடாதுல்லா. அதான் இப்டி… இப்பம் சார்வாள் மேற்கொண்டு என்ன செய்யணும்னு சொல்லுதீகளோ அப்டியே செய்துரலாம். எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்ல..”  எம் எஸ் சி சார் இந்தத் தாவலை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் சிவப்பேறிய முகத்திலேயே வெளிப்பட்டது. பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துமாறும், இது குறித்து இனி பேசுவதானால் அலுவல் நடைமுறைகளின் படி மட்டுமே இருக்க வேண்டுமெனவும், தன் ஒப்புதல் இன்றி எவ்வித குழுவும் பள்ளியில் இருக்கக்கூடாது எனவும் டிரிப்பிள் எஸ் சார் சொல்லி அச்சந்திப்பை முடித்துக் கொண்டார். 6 ரூ 50 பை செலவு செய்து எழுதப்பட்ட மனு கருத்தபாண்டியார் கடை அடுப்பைப் பற்ற வைக்க உதவியது. ஆனால் இவை எதையும் மறக்காத பிரேமின் செயல் எம் எஸ் சி சாரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 

(தொடரும்)

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள்- 30 தெய்வநல்லூர் கதைகள்- 32

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.