- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34
சாந்தினி டீச்சரை வழியனுப்பி விட்டுத் திரும்பிய ஒரு நாளில் நாங்கள் எங்களை அறியாமலேயே செண்பக விநாயகர் கோவில் வாசலுக்கு வந்து விட்டிருந்தோம். கண்முன்னே எங்கள் பழைய தலைமையகத்தைக் கண்டதும் எங்களுக்கு பேச்சு நின்று விட்டது. நடையும் நின்றுவிட சிவாஜிதான் மெல்ல சுதாரித்தார். “பிள்ளையாரைக் கும்புட்டுட்டு வருவமா?”. யாரும் பதில் சொல்லவில்லை என்றாலும் கோவிலை நோக்கி திரும்பினோம். பிள்ளையார் அதே முகபாவனை மாறாமல் எங்கடே, கொஞ்ச நாளா ஒங்களல்லாம் காங்கல என்பது போல கண்களை மட்டும் உருட்டினார். அவரை வலம் வந்து வணங்கி குழியில் கிடந்த திருநீத்தை எடுத்து பூசிக்கொண்டு விநாயகரைச் சுற்றி இருந்த மேடையில் அமர்ந்தோம். அரச மரத்தின் சலசலப்பும், அதில் கூடடையும் பறவைகளின் குரல்களுமாக இடம் அமைதியாக இருந்தது.
“ஆறு மாசத்துல எல்லாமே வேற மாதிரி ஆயிடுச்சு, இல்ல?” – முணகல் போல பிரேம் குரல். “ஆமா, நாம மட்டுமாவது இங்கே அப்பப்போ வந்துருக்கணும்”- குற்ற உணர்வுடன் கூடிய சேமியா மணி குரல். “இவ்ளோ நாள் கழிச்சு வந்துருக்கோம். புள்ளையாருக்கு பண்டம் எதுவும் எடுத்துட்டு வரல”- நிஜமான வருத்தத்துடன் யக்கா பாட்ஷா குரல். சிவாஜி வழக்கம் போல் எதுவும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தார். நானும் வழக்கம் போல் என்ன சொல்வது என்ற யோசனையிலேயே இருந்தேன்.
“பிரேம், நீ ஏன் துரைய ஏசுன? எப்பவும் இப்டி செய்யமாட்டல்ல. என்னாதாம்டே ஆச்சு ஒனக்கு அன்னிக்கு?” – சரியான இலக்கை நோக்கி அம்பு எய்ய முடிந்த பலராலும் சிவாஜி போல சரியான நேரத்தில் எய்ய முடியாது. பிரேம் மெல்ல நிமிர்ந்தார். அவர் பதில் சொல்ல தயாராவது தெரிந்தது. “எனக்குமே தெரியல ஏன் அப்டி கத்தினேன்னு. துரை நம்ம காதுல விழற மாதிரியே டீச்சரை கிண்டல் பண்றதுல கோபம் வந்திருக்கலாம். நம்மள கேர்ள்ஸ் பெஞ்ச்னு சொல்லி கிண்டல் பண்றதால வந்துருக்கலாம். அப்றம், சங்கீதாவையும் என்னையும் வச்சி … “ பிரேம் குரல் கம்மவில்லை என்றாலும் சட்டென நிறுத்திக் கொண்டார்.
பிரேமின் வருத்தம் காரணமில்லாத ஒன்றல்ல. துரையை நோக்கி பிரேம் வகுப்பில் கத்திய அன்று அனைவருமே வியப்பும், அதிர்ச்சியுமாய் உறைந்து போயிருந்தோம், துரை உட்பட. அன்று வகுப்பு முடிந்ததும் சிவாஜி டீச்சரை கொண்டு விட்டு வரும்போது வழக்கமான பாதையில் வீடு திரும்பாமல் மந்தை, கோட்டையூர் தெரு, மேலபஜார், கீழபஜார் வழியே வீடு திரும்ப வேண்டுமென்று சொல்லி இரு வாரங்கள் அவ்வாறே பாதை மாற்றிச் சென்றோம். எங்களுக்குத் தெரியாமல் சிவாஜி சுனா கானாவிடமும் பேசியிருந்ததும், அப்போது எலுமிச்சைத் தோட்ட பணியிலிருந்து மாத விடுமுறையில் (சனி மதியம் கிளம்பி வீடு வந்து திங்கள் அதிகாலை தோட்டத்துக்கு திரும்புவது) வந்திருந்த சுனா கானா தனது நண்பர்கள் மூலம் துரைக்கு வன்முறை எனில் அதற்குத் தயார், எனவே அடக்கி வாசிக்கவும் என செய்தி அனுப்பியிருந்ததும் எங்களுக்கு பின்புதான் தெரிய வந்தது. துரை ஊரைச் சேர்ந்த சுனா கானா வின் நண்பர்கள் துரை வன்முறைக்கு இறங்க தாம் ஒத்துழைக்க மாட்டோம் என சுனா கானாவுக்கு உறுதி அளித்த தகவல் சிவாஜிக்கு வந்து சேர்ந்ததும்தான் நாங்கள் வழக்கமாகச் செல்லும் வழியில் செல்ல சிவாஜி ஒப்புக்கொண்டார். உள்ளூர் நண்பர்கள் ஒத்துழைக்காததோடு கூடவே டச்சிங் குழுவினரின் மானசீக ஆதரவும் எங்கள் குழுவிற்கு இருந்தது துரைக்கு கையறு நிலையாக இருந்தது. ஆனால் சொலல்வல்லனும் சோர்விலனுமாகிய துரை வேறு பாதையை தேர்ந்தெடுத்திருந்தார்.
வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் துரை குழுவினர் எங்கள் குழுவை மறைமுகமாகவும், நேரடியாகவும் கேலி, கிண்டல், நக்கல் செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக ஆசிரியருக்கு காக்காய் பிடித்தல், பொட்டப் பிள்ளைகளிடம் போய் குழைந்து பேசுதல், சுயமரியாதை இல்லாமல் ஆசிரியைகள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுதல் என்ற காரணங்களே எங்களை நோக்கி பெரும்பாலும் சொல்லப்படும். நாங்கள் வழக்கம்போல அமைதி காத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது வழக்கம். வகுப்பிற்குள் (ஆசிரியர்கள் மாறும் பீரியட் இடைவேளைகளில்) என்றால் சாடைப்பேச்சாக இருக்கும். பெண்களிடத்தில் நாங்கள் தின்பண்டம் வாங்கித் தின்ற பொற்காலக் கதைகளை இப்போது துரையுடன் ஐக்கியமாகியிருந்த சிங்கி சரவணன் சொல்லிக் கொடுக்க சாடைப் பேச்சுகளில் பழைய பள்ளியின் கதைகள் எள்ளி நகையாடப்பட்டன ( 1.பொட்டப்புள்ள பாவாடைக்குள்ள வச்சிருக்குத வாங்கித் தின்னவனுவல்லாம் ஆம்பளயால தீத்தி? – இன்னும் ஒழுங்கா மீச மொளைக்காத பொட்டப் பயலுவதான் பொட்டப்புள்ளகள்ட்ட வாங்கித் திம்பாங்க. 2. கூட்டமா கோயிலுக்குப் போயி சாமிப் பாட்டு படிக்கதுக்குல்லாம் நீ ஏம்ல போமாட்டேங்க சிங்கி?- அதுவா, சுண்டலுக்கு செத்தவன், வாழப்பழத்துக்கு வக்கத்தவந்தான் அப்டி போவான் தொர 3. தைரியமான ஆம்பளதானல லீடராவணும்; மந்திரம் ஓதி லீடரானவன் மணியாட்டத்தான லாயக்கு, அப்டி கிளாஸ் என்ன லட்சணத்துலல இருக்கும் தீத்தி? ம்… ஆண்டிப் பண்டாரம்லாம் இருக்க பசனை மடம் மாதிரி இருக்கும். 4.,…. 5. … 6. … 27. … ஒவ்வொரு கேள்வி பதிலுக்குப் பிறகும் தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர்கள் சிலவற்றில் இணைக்கப்படும் கூட்டுச் சிரிப்போசையை சேர்த்தே வாசகர்கள் கற்பனை செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது). எழுந்து செல்ல முடியாததால் இது எதுவும் எங்கள் காதுகளில் விழாதது போல இருக்க முயற்சிப்போம்.
எங்கள் அமைதி துரை கோஷ்டியாரை அதிகமாக சீண்டும் சந்தர்ப்பங்களில் துரை நேரடியாக பேச ஆரம்பிப்பார். அப்படி பேசும்போதுதான் புளியங்குடி கண்ணா திரையரங்கில் தான் பார்த்த தென்றலே என்னைத் தொடு படத்தில் மோகனும், ஜெயஸ்ரீயும் சரியாகவே நடிக்கவில்லை, குறிப்பாக அந்த நீச்சல் குளக் காட்சியில் என்று உரக்க அபிப்ராயம் தெரிவித்தார். உடனிருக்கும் தீத்தி (தீர்த்தாரப்பன் என்ற திருநாமம் உடைய இவரும் சுருள்முடித் தொடையர்களில் ஒருவர்) வேறு யாரால் அக்காட்சியில் சிறப்பாக நடித்திருக்க முடியும் எனக் கேட்க துரை பெயர் தவிர பிற அடையாளங்கள் அனைத்தையும் வர்ணித்து நம் பள்ளியில் பயிலும் இருவர் என கொண்டுவந்து பிரேம், சங்கீதா இருவரையும் மறைமுகமாக சொன்னார். குறிப்பாக அங்க வர்ணனைகள் ஆபாச எல்லையை தாண்டிச் சென்று விட்டபோது பிரேம் முகம் சிவந்து அழுவது போல ஆனது. சிவாஜி சட்டென எழுந்து உரத்த குரலில் டச்சிங் சங்கரை ஒரு பாடல் பாடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கெனவே காத்துக் கொண்டிருந்ததைப் போல டச்சிங்கும் “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ஆணவச் சிரிப்பு” என்ற பாடலை தன் குழுவினரோடு பாட ஆரம்பித்தார். பாடலுக்கு மீறி குரல் உயர்த்தி ஆபாசப் பேச்சை தொடர முடியாத நிலையில் துரை அப்போது அமைதி காத்தாலும் எங்கள் குழுவை குறிப்பாக பிரேமை வீழ்த்தும் வர்மப் புள்ளியை கண்டுகொண்டு விட்டார். அதிலிருந்து பிரேம்-சங்கீதா குறித்த கேலிப் பேச்சுகளே துரை குழுவினரின் ஆயுதங்களாகின. இப்பேச்சுகளால் பாதிக்கப்பட்ட பிரேம் இரண்டொரு கோவில் சந்திப்புகளுக்கு வராமலானார். ஆனால் சங்கீதா இது எதையும் அறியாதவராய் பிரேம் வராதபோது அவர் வீட்டிற்கே சென்று பார்த்து விட்டு வந்தார். சங்கீதாவுக்கு எங்கள் வகுப்பில் நடப்பதொன்றும் தெரிய வேண்டியதில்லை என்ற சிவாஜியின் முடிவால் நாங்கள் யாரும் சங்கீதாவிடம் இது பற்றி பேசுவதில்லை. சங்கீதா எங்கள் ஒவ்வொருவரிடமும் பிரேமுக்கு என்னவாயிற்று எனவும், ஏன் அவர் முன்பு போல இயல்பாகப் பேசுவதில்லை என்றும் கேட்டபோது நாங்கள் பல காரணங்களைச் சொல்லி சமாளித்தோம்.
குறிப்பாக சிவாஜி கடித விசாரணை விவகாரத்தால் பிரேம் சற்று மனம் வருந்தியிருப்பதாக சொன்ன காரணத்தை சங்கீதா ஏற்றுக் கொண்டார். கூடவே சமாதானமும் சொன்னார் – “ஐயே, இதெந்தா? எங்க அப்பாக்கும், அம்மாக்கும் தெரியும், பிரேம் அம்மாக்கும் தெரியும். டீச்சர்மார் என்னக் கேட்டது சொன்னப்ப எங்க வீட்ல எல்லாரும் சிரிச்சு. பிரேமிடத்துல நீ சொல்லு சிவாஜி, இதெல்லாம் ஒரு சுக்குமில்லாத்த விஷயமாக்கும். இதுக்கு போயா இப்டி இருக்கான் அவன்?”
ஆசிரியர்களிடம் இவ்விஷயத்தை எடுத்துப் போனால் இன்னும் அதிக சிக்கல்கள் உண்டாகும் என உள்வட்டக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டதால் நாங்கள் இக்குழப்பங்களை நேரடியாகச் சந்திப்பதென்ற முடிவுக்கு வந்திருந்தோம். பழைய தலைமையகம் நாங்கள் முன்பு யுக்திகள் வகுத்து நிறைவேற்றிய பொற்காலங்களை நினைவூட்டியதால் அப்படியே தொடர்ந்து பேச ஆரம்பித்தோம். துரை வன்முறையைக் கையிலெடுக்கும் வாய்ப்பு இல்லையென சிவாஜி உறுதிபட தெரிவித்ததால் அதைக் குறித்து நாங்கள் மூளைப்புயல் செய்யவில்லை (எங்களுக்கு பின்பு தெரிந்த இதற்கான காரணம் உங்களுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது).
சேமியா மணிதான் வழக்கம்போல முதல் யோசனையைத் தெரிவித்தான் –“ஏல, இவனுவளுக்கும், டச்சிங் ஊர்க்காரங்களுக்கும் ஆவாது. எந்நேரமும் ஒருத்தனுக்கொருத்தன் எசலிக்கிட்டே கெடப்பானுக. நாம டச்சிங் ஆளுகள வச்சி க்ளாஸ்ல அவனுவள கொமப்போம்ல.” ஆனால் பிரேம் இந்த யோசனையை நிராகரித்தார் – “நமக்குள்ள இருக்கற சண்டைல அவங்கள இழுக்கக்கூடாது. அப்பறம் ஊருக்குள்ள தகராறாச்சுன்னா வெட்டு, குத்துன்னு போயிடும். நமக்கு இதெல்லாம் வேண்டாம்.”
யக்கா பாட்ஷா சொன்ன யோசனை சற்று உருப்படியாக இருந்தது. அந்த யோசனை சற்று பொறுமையாக இருப்பதுதான். பாட்ஷா ஆய்வின்படி சாந்தினி டீச்சர் கணித வகுப்பு எடுப்பதுதான் துரை கோஷ்டிக்கு வேப்பங்காயாக இருக்கிறது. இப்போது அந்த வகுப்பின்போது அவர்கள் இல்லாவிட்டாலும் (செல்வியக்காக்கள் பாடம் எடுக்கும் வகுப்புக்கு போனாலும்) அவர்களுக்கு அது ஒரு அவமானமே. வெகு விரைவில் புதிய கணித ஆசிரியர் வந்துவிட்டால் சாந்தினி டீச்சரின் கணக்கு வகுப்பு நமக்கு கிடையாது. அதன்பின் துரை கோஷ்டியார் சீண்டப்பட வேறு காரணம் இல்லையென்பதால் மெல்ல ஆர்வமிழந்து போவார்கள். நாம் ஏதாவது செய்தால் அதுவே அவர்கள் மேலும் வம்பு செய்ய வழிவகுக்கும். ஒரு வேளை வம்புகள் மேலும் தொடர்ந்தால் என்ன செய்வதென அப்போது யோசித்துக் கொள்ளலாம். எங்கள் எல்லோருக்குமே இந்த யோசனை அப்போதைக்கு நல்லது எனத் தோன்றியதால் அப்படியே முடிவெடுத்து புதிதாய் கூடிய பழைய சங்கத்தைக் கலைத்தோம்.
சிவாஜி அப்போதைக்கு ஒப்புக்கொள்வது போல இருந்தாலும் அவருக்கு துரை எளிதில் இவ்விஷயத்தை விட்டுவிடுவதாக இல்லை என்பது புரிந்திருந்தது. ஆகவே அவர் என்னை மட்டும் வரச்சொல்லி தனி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதனடிப்படையில் தோழர் குருசாமியண்ணனிடம் தனிப்பட்ட முறையில் வகுப்பில் நடப்பதென்ன என்பதைச் சொல்லிவிட வேண்டுமெனவும், அவரிடம் எங்களுடைய பெயர்களையோ, சங்கீதா பெயரையோ வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. அதே நேரம் பிரேம் முதலானோர்க்கும் இது தெரியக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இரு உறுப்பினர்கள் பங்கு பெற்ற இந்த அவசிய அவசர கூட்டத்தின் முடிவுகளைச் செயல்படுத்தும் பொறுப்பு எங்கள் இருவருக்கும் சமமாகக் கொடுக்கப்பட்டது.

பிரேம் வீட்டின் திண்ணையில் நாங்கள் கதைப் புத்தகம் வாசிக்கும் ஒரு நாளில் அறிமுகமானவர் குருசாமியண்ணன். தோழர் குருசாமி, குருசாமியண்ணன் என பலவிதங்களில் அழைக்கப்படும் குருசாமி அவர்கள் திருனவேலி வரை போய் பட்டப் படிப்பு படித்த வெகு சில மூத்தவர்களில் ஒருவர். பெரும்பாலும் அக்ரஹாரத்து ஆட்கள் திருனவேலி வரை போய் பட்டப் படிப்பு படிப்பார்கள். ஆனால் படிப்பு முடித்ததும் வேலைக்கு மெட்ராஸ், பாம்பே, டில்லி என கிளம்பி போய் விடுவார்கள். அவ்வாறு போகாமல் ஊரிலேயே தங்கி விட்ட பட்டப் படிப்பாளி குருசாமி அவர்கள். இங்கிருந்து படிக்கச் செல்லும்போது மைனரெனச் சென்ற அவர் திரும்பி வருகையில் தோழர் குருசாமியாகவே வந்தார். கல்கத்தா, மெட்ராஸ், பாம்பே, இந்தூர், பூனா, டெல்லி என அவர் சென்ற ஊர்களின் பெயர்களைக் கேட்டாலே அவர் தெய்வநல்லூர்க்காரர்தானா என ஐயம் ஏற்படும். பெற்றோர் வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்ளாத குருசாமி கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்ஸிஸ்ட் பிரிவின் தெய்வநல்லூர் முகமாக அறியப்பட்டார் என்றாலும் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்களிடமும் அவருக்கு நட்பு இருந்தது. போலவே கழக ஆட்களும் அவரைச் சந்தித்துப் பேச வருவார்கள். மேல பஜாரும், கீழ பஜாரும் சந்திக்கும் புள்ளியில் ஊடாகப் போகும் தெரு தைக்கா தெரு என்று முன்பே பார்த்தோம். அந்த புள்ளியில் இருக்கும் நாற்சந்தியில்தான் குருசாமியண்ணனின் “வசந்தம் டெய்லர்ஸ்” என்ற தையல்கடை இருந்தது. அக்கடைதான் அவர் அலுவலகம். அங்குதான் அவர் கட்சி ஆட்கள், பிற கட்சி ஆட்கள், சங்க ஆட்களை சந்திப்பதோடு எங்களையும் சந்திப்பார்.
பிரேம் தெருவிலிருக்கும் ஒரு அண்ணன் தான் பிரேமை பள்ளியில் சேர்க்க வந்தார். அவர் வீடு பிரேமுக்கு எதிர் வீடு. ஒருவகையில் அவர் பிரேமுக்கு சொந்தமும் கூட. ( அவன் என் சின்ன தாத்தா பொண்ணோட பேரன்டா – பிரேம் பாட்டி). குருசாமியண்ணன் அந்த அண்ணனுக்கு நண்பர் என்பதால் அவரைப் பார்க்க வருவார். எதிர்வீட்டுத் திண்ணையிலிருந்து அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் பிரேம் வீட்டுத் திண்ணையில் டெக்ஸ் வில்லர் கார்ஸனை கலாய்த்துக் கொண்டிருந்தார். சட்டென ஆர்வமான குருசாமியண்ணன் பிரேம் வீட்டை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தார். பிரேம் அவரைப் பார்த்ததும் கதையை நிறுத்தினார். “தம்பி, நானும் கத கேக்கதாம்பா வந்தேன். நானும் இப்டி உக்காந்து கேக்கலாமில்லையா?”. கூடவே அந்த அண்ணனும் சின்ன சிரிப்புடன் நின்றிருக்க இப்படி ஒரு பெரியாள் வந்து எங்களிடம் கேட்பது எங்களுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் பிரேம் அவரை அமரச் சொன்னார் ( உக்காருங்க சார், நாங்க சும்மா பூந்தளிர், லயன் காமிக்ஸ், கோகுலம் தான் வாசிக்கறோம். உங்களுக்கு இதெல்லாம் பிடிக்குமா சார் ? – ஏ, என்ன தம்பி நீ ? சார், மோருன்னு. குருசாமியண்ணேன்னு கூப்டுங்கடே). இவ்வாறாக அறிமுகமான குருசாமியண்ணன்தான் எங்களை அழைத்துப் போய் கிளை நூலகத்தில் உறுப்பினராக்கி விட்டார். அனைவருக்கும் காப்பாளர் கையெழுத்தும் அவர்தான் போட்டார். பிரேம், சிவாஜி, சேமியா, நான் ஆகியோர் நூலக உறுப்பினர் கட்டணமான ஐந்து ரூபாயை கட்டிவிட பிற அனைவருக்கும் ( அஞ்சு ரூபா கொடுத்து கதப் பொஸ்தகம் படிக்கப் போறயா? ரெண்டு நா சாப்பாட்டுக்கு அரிசி வாங்கலாம். போறியா வெளக்கமாத்தக் கொண்டு சாத்தட்டுமா? – டொம்ப்ளீயின் அம்மா நூலக உறுப்பினர் கட்டணம் குறித்து தெரிவித்த கருத்துகள் பலவற்றில் ஈண்டு பதியத்தக்க கருத்து இதுவே) குருசாமியண்ணனே கட்டினார்.
இதை எல்லாம் விட அவர் எங்களுக்கு செய்த சுவாரசியமான விஷயம் அவர் கடையில் இருக்கும் ராதுகா பதிப்பக புத்தகங்களை எங்களுக்கு வாசிக்கக் கொடுத்ததுதான். அந்த வழுவழு தாள்களையும், படங்களாக விரியும் அயல் மண்ணின் சொர்க்க வாழ்க்கை முறைகளையும் எத்தனை எத்தனை முறை காதுகளாலும், கண்களாலும், வாயாலும், விரல்களாலும் வாரி விழுங்கியிருப்போம் என கணக்கே கிடையாது. யா பெரல்மானின் பொழுதுபோக்கு பெளதீகம் படித்த ஜோரில் உருளைக்கிழங்கிலிருந்து மின்சாரம் எடுத்து சீரியல் பல்ப் ஒன்றை எரிய வைக்க முயன்ற நினைவுகளை சேமியா கடந்த ஆண்டு அரட்டையின்போது கூட சொல்லிக்கொண்டிருந்தார். (சேனக்கெழங்குலருந்து கரண்ட் எடுத்தா டீப்லைட்ட எரியவைக்கலாமான்னு கேட்டவந்தானல நீனு? – அமுக்கு டப்பாவை நோக்கி சேமியா). சிறுவர்களை கூட்டி வைத்து விளையாடுவதாக கேட்டவர்களுக்கு குருசாமியண்ணன் சொன்ன பதில்களின் தொகுப்பாக இப்பதிலைச் சொல்லலாம் – “அதென்னடே சின்னப்பயலுகங்கே? நீ பொறக்கையிலேயே மீச மயிறோடயே பொறந்தயோ? பள்ளிக்கூட பாடத்தக் கூட படிக்கமாட்டாம படிப்ப நிப்பாட்டுனவன்லாம் பெரிய மனுசன். பாடத்தத்தாண்டி பொஸ்தகம் படிக்க இவங்கல்லாம் சின்னப்புள்ளைக, என்னடே? இந்தான்னு ரெண்டு வருசத்துல வெடச்சு நிமிந்துருவானுக பாரு, இப்பயே சமூக பொறுப்பு வந்தாதான் உண்டு. பழுத்த எல பித்தம்; பச்ச எல பலம்னு சொல்லிருக்காங்கடே, கேட்ருக்கியா? சரி, இத்தன நாள் வாரயே? இந்த புக்குல்லாம் என்ன தோழர், நான் வாசிக்கட்டுமான்னு ஒருமட்டமாச்சும் கேட்ருப்பியா? போடே, போயி டீ குடிச்சமா, பஜ்ஜி தின்னமா, தந்தி பேப்பர்ல படம் பாத்தமான்னு இருடே, போ”.
குருசாமியண்ணன் பேசினால் பலரும் கேட்பது அவருக்கு இருந்த இன்னொரு முன்னொட்டுப் பெயரின் காரணமாகக் கூட இருக்கலாம். அவர் நெல்லை (இன்றைய நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டம்) மாவட்டம், மதுரை மாவட்டப்பகுதிகளில் அறியப்பட்ட அடிமுறை ஆசான். சிலம்பம், அடிமுறை கற்றவர். கோவில்பட்டி அய்யங்கார் வரிசை வீசத் தெரிந்த சிலரில் அவரும் ஒருவர். சிலம்பமும், அடிமுறைகளும் பரம்பரை கலையாக அவரிடம் வந்தது. எங்களுக்குக் கற்பிக்க ஆர்வமாக இருந்தார் என்றாலும் அவரது அரசியல், சமூகப் பணிகள் அவரை அனுமதிக்கவில்லை. ஆனால் அவ்வப்போது எங்களுக்கு அதன் கூறுகளை தெரியப்படுத்துவார். பள்ளியில் விழுந்து அடிபட்ட யக்காவின் கால் சுளுக்கை ஒரே நிமிடத்தில் உருவி சரி செய்தது, லீவில் கட்டிட வேலைக்குப் போன அமுக்குடப்பா செங்கலை கடத்தும் பணியில் இருக்கையில் தவறாக வீசப்பட்ட செங்கலைப் பிடிக்கும் முயற்சியில் நடுவிரலை பின்புறமாக வளைத்துக்கொள்ள ஒரே நாளில் எண்ணெய் தடவி சரி செய்தது என பல முறை எங்கள் குழுவின் இயன்முறை மருத்துவர் குருசாமியண்ணந்தான். எல்லோரும் மூங்கில் கம்பை சிலம்புக்கு பயன்படுத்த குருசாமியண்ணன் மட்டும் புளியமரக் கம்பை பயன்படுத்துவார். கருப்பா நதிக் கரை புளியமரம் ஒன்று ஒரு மழை வெள்ளத்தில் சரிந்தபோது அதன் நீளக் கிளை ஒன்றை வெட்டி வண்டியில் போட்டு கொண்டுவந்தார் குருசாமியண்ணன். மேல்பட்டை உரியும்வரை வெயிலில் இட்டு பட்டை உரிந்ததும் நிழலில் உலர்த்தி எடுத்ததும் “ரெண்டு மொழங்கை” பருமனில் ஆறடி, ஆறடியாக இரு கட்டைகள் கிடைத்தன. அக்கட்டைகளை வெட்டுளியால் செத்தாமல் சீவுளியால் சீவி சீவியே கைப்பிடிக்குள் அடங்கும் பருமனுக்கு கம்பாக ஆக்கினார் குருசாமியண்ணன். அதன்பின் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகிய எண்ணெய்கள் கலந்த எண்ணெய் கடுக்காய் இட்டு காய்ச்சப்பட்டது. இரு கம்புகளிலும் பழைய பருத்தி துணி வேட்டி மூன்று சுற்றாக வருமாறு முழுமையாக கட்டப்பட்டு இந்த எண்ணெய் ஊற்றி ஒரு மண்டலம் ஊற வைக்கப்பட்டது. தினமும் எண்ணெய் ஊற்றி துணிக்கம்பங்கள் இருட்டறையில் வைக்கப்படும். வாரம் ஒருமுறை சற்று நேரம் வெயிலில் காய வைக்கப்படும். இதற்குப் பின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் நீரில் மூழ்க வைத்து பின் வெயிலில் ஒரு நாள் உலர்த்தியதோடு பக்குவம் முடியவில்லை. வண்டிப்பைதாவுக்கு பட்டை அடிக்கும் இடத்தில் கொடுத்து எண்ணெய் ஊற்றி தணலில் கம்புகள் வாட்டப்பட்டன. சூடாக்கியதும் இரும்பைப் போல தண்ணீரில் முக்காமல் எண்ணெயை ஊற்றி குளிர்விக்கும் முறை. பிற மூங்கில் கம்புகளைத் தட்டினால் டங் என்ற ஓசை எழும்பும். ஆனால் குருசாமியண்ணன் சிலம்புக் கம்பைத் தட்டினால் டிங் என மணியோசை போல ஒலிக்கும். சற்றே கனமாகத் தெரியும் கம்பு, கையின் வீச்சுவசத்துக்கு வந்துவிட்டால் நழுவாமல் குருவி சிறகென சொல்பேச்சு கேட்கும். இரு கம்புகளில் சற்று வளைவுகள் கொண்ட கம்பு குருசாமி அண்ணனால் பரிசாகக் கொடுக்கப்பட்டு பிரேமிடம் இன்றும் இருக்கிறது.
குருசாமியண்ணன் குறித்து சொல்ல நிறையவே இருக்கிறதென்பதால் நாம் அவ்வப்போது அவரைப் பேசலாம். இப்போது பள்ளி சூழ்நிலைக்கு வரலாம். குருசாமியண்ணன் காவல் நிலையம், நீதி மன்றம், அரசு அலுவலகங்கள், வங்கிகள் குறிப்பாக கூட்டுறவு வங்கிகள் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி எவருக்காவது உதவும் பொருட்டு உடன் செல்பவர். ஊர்தகராறுகளில் மத்திசம் (மத்யஸ்தம்) பேச அழைக்கப்படுபவர் என்பதால் துரை ஊரின் பெரிய ஆட்களை துரை இறக்கினால் அவர்களை நிறுத்த குருசாமியண்ணனால் தான் முடியும் என்பது சிவாஜியின் கணக்கு. ஆகவேதான் அவரிடம் இப்பிரசினையைக் கொண்டு போகலாமென சிவாஜி கருதினார். ஆகவே நாங்கள் இருவரும் இப்பிரச்சினையை அவரிடம் மறுநாள் மாலை சொன்னோம். கவனமாகக் கேட்டுக் கொண்டவர் இது சிறு பிரச்சினை எனவும், பள்ளிக்குள் நடக்கும் இதில் தான் தலையிட எதுவுமில்லை என்றும் சொன்னார். கூடவே இந்த எல்லைக்கு வெளியே எது நிகழ்ந்தாலும் தான் இறங்கி உதவுவதாகவும், இப்போது நாங்கள் இதைப் போன்ற சச்சரவுகளில் ஈடுபடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சொன்னார்.
இந்த நிலையில்தான் பொங்கல் விடுமுறை முடிந்து நாங்கள் பள்ளிக்குத் திரும்பியதும் ஒரு சுவாரசியமான திருப்பம் காத்திருந்தது. எங்கள் பள்ளிக்கு முறைப்படி வர வேண்டிய மூத்த ஆசிரியருக்கான பணியிடம் அவருக்கே ஒதுக்கப்பட்டு அவர் பணியில் சேர வந்தார். எளிய பருத்தி வேட்டி, அதே போன்ற சட்டை, தோளில் எப்போதும் சிவப்புத் துண்டு, டயரில் தைக்கப்பட்ட செருப்பு, பேச ஆரம்பிக்குமுன் “ஹ்ம்” என்ற சிறு உறுமலோடு ஆரம்பித்தாலும் உரத்த குரலில் சிரிப்போடு பேசும் தன்மை – இப்படித்தான் வந்தார் எஸ் செந்தூர்சாமி எனும் எஸ் எஸ் எஸ் எனும் ட்ரிபிள் எஸ் சார். “ஹ்ம்… என்னடே இதுல கஸ்டம்? எலே, வண்டிபைதா பாத்துருக்கீங்கள்ளா. வேற என்னடே வேணும் வட்டம் புரிய?” நாலு முக்கோண வடிவ தாள்களை இணைத்து சட்டென ஒரு வட்டம் உருவாக நாங்கள் இமைக்க மறந்திருந்தோம். ஆரங்கள், சுற்றளவு, மையம் என நான்கு தாள்களை மட்டுமே வைத்து மாயம் போல நிகழ்த்தினார் வகுப்பை. எங்கள் எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி. அன்று மாலை சாந்தினி டீச்சரை வழக்கம் போல பஸ்ஸுக்கு கொண்டு விட போனோம். அன்றைய கணக்கு வகுப்பின் மாயங்களை போட்டி போட்டுக் கொண்டு விவரித்தவாறே போனோம். எங்கள் எல்லோருக்குமே அன்றைய கணக்கு வகுப்பைப் பற்றி சொல்ல ஏதாவது இருந்தது. சாந்தினி டீச்சர் வெறுமே உம் கொட்டியவாறே வந்தார். பேருந்து தூரத்தில் வருவது கண்ணில்பட்டதும் டீச்சர் மெல்லிய குரலில் கேட்டார் –“நாளைலருந்து பஸ் ஏத்திவிட வருவீங்களாடே ?”. ஒரே நொடியில் அனைவரும் உணர்விழந்தோம். பேருந்து நெருங்கி வேகம் குறைந்து வந்தது. சிவாஜிதான் முதலில் சுதாரித்தார் – “டீச்சர், நாங்க இங்க படிக்கறவரை வருவோம் டீச்சர்” . பிரேம் சிவாஜி காட்டிய இலக்கை சரியாகப் பிடித்தார் – “ஸாரி டீச்சர், தப்பா பேசிருந்தா மன்னிச்சுருங்க”. டீச்சர் மெல்லிய புன்னகையுடன் பிரேம் கன்னத்தில் தட்டிவிட்டு பேருந்தில் ஏறி வழக்கமாகச் சொல்லும் வரிகளைச் சொன்னார் –“பார்த்து கவனமா வீட்டுக்குப்போகணும், என்ன?”. கையாட்டி அவர் கண்மறைய பிரேம் முகம் கடுமை காட்டியது- “ சே, நாம ரொம்ப செல்ஃபிஷ்டா, எந்த டீச்சரும் இல்லாதப்ப நமக்காக வந்து சொல்லிக் கொடுத்தாங்க சாந்தினி டீச்சர். இப்ப நமக்கு சார் வந்தவுடனே டீச்சர் க்ளாஸ் எடுத்ததையே மறந்துட்டு அவங்கள்ட்டயே போயி பெரும பீத்திக்கறோம் பாரு… “ சிவாஜி உட்பட நாங்கள் எல்லோரும் அதை ஆமோதித்தோம். ஆகவே இந்த பிழையீட்டுக்காக பெரிய கோவில் பிரகாரத்தை 51 தடவை சுற்றி வந்து டீச்சர் நலனுக்காக வேண்டிக்கொள்வது என முடிவெடுத்தோம்.
கால் வலி தீர சபாபதி மண்டப படிக்கட்டில் உட்கார்ந்து பேசியபோது கூட எங்கள் சுயநலத்தை குற்றம் சொல்லிக்கொண்டோமே தவிர ட்ரிபிள் எஸ் சாரை ஒருவருமே குறை சொல்லவில்லை. அடுத்து வந்த நாட்களில் ட்ரிபிள் எஸ் சார் எங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்களில் ஒருவராகி விட்டார். துரை குழுவை அவர் கையாண்ட விதம் அலாதியானது. அவர்களை தனியே அழைத்து மரத்தடியில் வைத்து கூடுதல் வகுப்புகள் நடத்தினார். அவ்வாறாகவே டச்சிங் குழுவினரையும் தனிவகுப்புகளில் இணைத்துக் கொண்டார். டச்சிங் கோஷ்டியில் ஒருவரையும், துரை கோஷ்டியில் ஒருவரையும் இணைத்து ஒருவருக்கொருவர் ஒவ்வொரு கணக்காகப் போட்டு இன்னொருவருக்கு விளக்க வேண்டும் என ஒரு முறையை அறிமுகம் செய்தார். அவர் இருந்தவரை அவர் முன்பு மட்டும் நடந்த இச்சடங்கு அதன்பின் தொடரவில்லை. வகுப்பில் இடையூறு செய்ய முற்பட்டால் கருணையே இல்லாமல் தண்டிக்கும் ட்ரிபிள் எஸ் சார் வீட்டுப்பாடம் செய்யாத எவரையும் தண்டிப்பதில்லை. செல்லமாக கன்னத்தில் ஒரு தட்டு தட்டி நாளைக்கு சேர்த்து செய்து வரும்படி சொல்லி விடுவார். எங்கள் குழுவில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்த இன்னொரு விஷயம் ட்ரிபிள் எஸ் சாரும், குருசாமியண்ணனும் தோழர்கள். அதாவது தோழராவதற்கு முன்பே அறிமுகமான நண்பர்கள். தான் தெய்வநல்லூர் வந்து விட்டதை தோழர் குருவுக்கு தெரிவிக்க வந்த ட்ரிபிள் எஸ் சார் அவ்வாறாகத்தான் எங்கள் வகுப்பு நிலவரங்களை தோழர் குரு மூலமாகத் தெரிந்து கொண்டு மேற்படி நடவடிக்கைகளை எடுத்தார். ஒரு மாலையில் நாங்கள் வசந்தத்தில் (தையல் கடையை அவ்வாறாகத்தான் குறிப்பிடுவோம்) இருக்கையில் ட்ரிபிள் எஸ் சார் அங்கே வந்து குருசாமியண்ணனுடன் சகஜமாகப் பேசும்போதுதான் எங்களுக்கு விஷயமே தெரிந்தது. கூடுதல் நற்பலனாக ட்ரிபிள் எஸ் சார் வசமிருந்தும் எங்களுக்கு வாசிக்க புத்தகங்கள் கிடைத்தன. வசந்தம் சந்திப்பில் குருசாமியண்ணன் சில புத்தகங்களின் குறிப்பிட்ட அத்தியாயங்களை பிரேமையோ, சிவாஜியையோ உரக்க வாசிக்கச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லுவது அவ்வப்போது நடக்கும். அப்படி ஒரு முறை வாசித்த வால்கா முதல் கங்கை வரை நூலின் ஒரு அத்தியாயத்தை இரண்டு நாட்கள் கழித்து வகுப்பில் வாசிக்கச் சொன்னார் ட்ரிபிள் எஸ் சார். சிவாஜி உடனே உணர்ந்து சொன்ன விஷயம் வகுப்பு குறித்த தொடர் உரையாடலில் ட்ரிபிள் எஸ் சாரும், குருசாமியண்ணனும் இருக்கிறார்கள் என்பது.
இவ்வாறாக பலப்பல குழப்பங்களுடன் தொடங்கிய எங்கள் மேல்நிலைப் பள்ளி வாழ்க்கை அதன் குழப்பங்களைத் தாண்டி இனி சுமுகமாக இருக்கும் என மகிழ்ந்திருந்த வேளையில் விதி தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி பக்கமாக பார்வையைத் திருப்பியது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
