றெக்கை– அத்தியாயம் 11

This entry is part 11 of 17 in the series றெக்கை

வைத்யரத்னா தங்கவேலு அய்யங்கார் வலனாடு சிறு நகரில் ஒரு பெரிய ஆள்கூட்டம் பஞ்சமா பாதகங்களில் ஈடுபடாமல்  காப்பாற்றினார்.   

ஐரோப்பாவின் திலகமென சான்றோர் போற்றிப் பரவும் ஸ்பெயின் தேசம் வட ஆப்பிரிக்காவை சந்தித்து கைகுலுக்கும் மெல்லிலா சிறுநகரை ஒட்டி சிக்கனமாக விரியும் நிலப்பரப்பு  வலனாடு. வலநாடு என்றும் அறியப்படும்.

நல்ல கருப்பு, அனேகம் ஷேடுகளில் மாநிறம், அபூர்வமாக வெள்ளை என்று மேல்தோல் வர்ணஜாலத்தோடு வலனாடு ஜனத்தொகை செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. விக்டோரியா மகராணி விண்ணாடு ஏகிய ஒன்று ரெண்டு கூடாமல் குறையாமல் வள்ளிசாக ஆண்டு 1901.

பதினைந்து வயது இளைஞனாக மெயின்லாண்ட் இந்தியாவிலிருந்து வலனாடு சிறு நகரத்துக்கு ஒப்பந்தத் தொழிலாளியாக வந்து   கரும்பு தோட்டத்தில், கரும்பு சர்க்கரை ஆலையில், சகலவிதமான உத்யோகமும் பார்த்து, ஓடி ஆடி வேலை பார்த்ததெல்லாம் போதுமென்று தீர்மானித்தார் தங்கவேலு அய்யங்கார்.   

அவர் கப்பலில் வந்திறங்கிய போது தங்கவேலுவாக மட்டும் தான் இருந்தார். சரிப்படாது என்று அப்போதைய கரும்புத் தோட்ட தலைமை சூப்ரவசர் தீர்மானித்தார். யாரெல்லாம் ஒற்றைப் பெயரோடு வந்தார்களோ அவர்கள்  ஆளாளுக்கு ஒரு ரெண்டாம் பெயர் -சர்நேம்-தேர்ந்தெடுத்துக் கொண்டு வேலைக்கு வர நிர்பந்தம் செய்யப்பட்டார்கள்.  

யெரூபா தெய்வம் நீள பெயர் கொண்ட எவருக்கும் நீண்ட ஆயுள் வழங்க தயங்காது. தன்னை  பூசித்து விரதமிருந்து வேண்டும் வேற்று மதத்தவர்களுக்கும் தான்.

அந்தக் காலத்தில் கரும்பு தோட்ட சீனியர் மஸ்தூர்  ஒருத்தர் பேச்சியம்மா துணை என்று புது நோட்டுப் புத்தகத்தில் பிள்ளையார் சுழிக்கு கீழே எழுதி ஜாதிப் பட்டியல் தயாரித்திருந்தார்.    தங்கவேலு பெயரோடு பின்னொட்டாக  அய்யங்காரை சேர்க்க யாருக்கும் ஆட்சேபணை இல்லை.   தங்கவேலு மிக்க மகிழ்ச்சியோடு தங்கவேலு  அய்யங்கார் ஆனார்.

பதினைந்தாம் வயதில் ஒப்பந்தத் தொழிலாளியாக தமிழ்நாடு மண்மேடு கிராமத்தில் இருந்து வட ஆப்பிரிக்காவில் உள்ள வலனாடு சிறு நகர நாட்டுக்கு வந்து நாற்பத்தைந்து வருஷம் இங்கே பணி எடுத்து, ஜூனியர் மஸ்தூர், சீனியர் மஸ்தூர், ஹெட் மஸ்தூர், சகலரையும் கண்காணிக்கும் கங்காணி என்று வரிசையாக பதவி உயர்வு பெற்று,  அறுபது வயதில் அடியெடுத்து வைத்தார்.

தங்கவேலு அய்யங்கார் அகவை அறுபதில் கட்டாயமாக பணி ஓய்வு பெற வேண்டும் என்று துரைகள் வெளியில் சொன்னாலும், உள்மனதில் அவர் ரிடையரே ஆகாமல் மூச்சு பிரிகிற நேரம் வரை வேலை பார்த்துக் கொண்டிருக்க வேணும் என்ற அபிலாஷை இருந்தது. ஒரு வழியாக, வேறென்ன, வெளியே போகிற வழிதான், தங்கவேலாருக்கு ஓய்வு கிட்டியது.

இதற்கிடையில், ஐந்து வருடம் முன்பு காலில் வென்னீரைக் கொட்டிக் கொண்டு வீங்கி விதிர்த்து அதற்கான மருந்து, மாத்திரை, களிம்பு என்று வைத்தியம் பார்த்துக் கொண்டு, முழுக்க ஸ்வஸ்தமானது. மூணு மாசம் இப்படி வீட்டில் அடைந்து கிடந்தபோது தங்கவேலு அய்யங்கார் சும்மா இல்லை தான். மெனொபாஸ் என்ற மாதாந்திர அவஸ்தை நிற்க தொடங்கும் வேளையில் அவர் மனைவி கமலலோசனி அம்மாள் கர்ப்பவதியானாள். அதற்கு மேலும் வீட்டு திண்ணையில் சாய்வு நாற்காலியிட்டு ஓய்வெடுக்க அவருக்கு மனம்  கேட்கவில்லை. 

கமலலோசனி அம்மாள் பண்டொரு காலம் தங்கவேலு அய்யங்கார் ஒத்தாசையோடு கருவுற்றபோது என்ன காரணமோ கரு உதிர்ந்து விட்டது. இப்போது உருவானதாவது ஒரு நூறு வருடமும் அதற்கு மேலும் இந்த புண்ணியபூமியில் தாக்குப் பிடிக்கட்டும் என்று பிரார்த்தனைகளோடு தங்கவேலு அய்யங்கார் க்ருஹ வைத்தியம் என்ற வீட்டு வைத்திய நூல் தொகுதியை மொத்தம் மூணு தொகுதி  தொள்ளாயிரத்து எழுபது பக்கம்- சிரத்தையாக கற்க ஆரம்பித்து கரைகண்டார், self taught. 

மண்மேடு கிராமத்தில் பள்ளிக்குப் போய் படிக்க வாய்ப்பு கிட்டாது போனது. வலனாடு வந்து அததுக்கு என்று நேரம் ஒதுக்கி பணியாற்ற முனைந்தபோது திருப்தியாக இருந்தது. கமலலோசனி அம்மாளே சாட்சி.

தங்கவேலு அய்யங்கார் எப்படி வைத்தியரானார்? வளநாடு சிறு நகரில் பள்ளிக்கூடம் இருக்குதே தவிர கல்லூரி எல்லாம் இல்லை. ஆனால் என்ன? க்ருஹ வைத்தியம் மூன்று வோல்யூமும் தலைகீழாக பாடம் சொல்ல முடியும் அவரால். போதுமே. அவர் வைத்தியர் ஆகி விட்டார். மேலும், அலோபதி, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி அறிமுகப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து வீட்டில் ரெண்டு பெரிய அலமாரிகளில் அடுக்கி வைத்து தினமும் தூசி தட்டிக் கொண்டிருந்தார்.

கர்ப்பிணிக்கோ அக்கம்பக்கத்து பெண்பிள்ளைகள், குழந்தைகளுக்கோ சிறு சுகவீனங்கள் வந்தால் சைமன் டாக்டரிடம் போய் நிற்காமல் – அவரிடம் சதா மீன் நெடியடிக்கும் – தங்கவேலாரை அணுகினால் உடனே குணம் காணும்.

 கடந்து போன  ஐந்து வருடங்களில் அவர் வலனாடு நகரப் பிரமுகராகவும். ஊரறிந்த வைத்தியராகவும் பரிமளித்தார். தந்தையாக முடியவில்லை,

அவர் கரும்பு ஆலையில் மூன்று மாத லீவு முடிந்து திரும்ப போன தினத்தில் ஊரோடு ஜனங்கள் புதுப்பணக்காரன் டேவியை நகரசபை கட்டடத்துக்கு      கூட்டி வந்து மாலை மரியாதை செய்து அனுப்பினார்கள். அவனுக்கு நாற்பதாம் வயசு ஆனதை நகரம் கொண்டாடுகிறதாம். மைக்கை பிடித்து, ஒலிபெருக்கி வைத்து ஊரான் நாலுபேர் பேசியது இந்தத் தரத்தில் இருந்தது –

 ‘நண்பர் டேவ் வாழ்க்கையில் முன்னேறி வர என்ன காரணம்? உழைப்பு. கடின உழைப்பு. மற்றும் அவர் செயலில் எல்லாம் பின்னாலிருந்து ஒத்துழைப்பு நல்கும் அவர் மனைவி ரூத் அம்மையார்’. 

டேவ் புளகாங்கிதமடைந்து மனைவியான, ஏற்கனவே சொல்லப்பட்ட அசாத்தியமான ஸ்தனபாரம் வாய்க்கப்பெற்ற ரூத்தை, இடம் பொருள் ஏவல் நோக்காது அணைத்து முத்தம் தந்தானாம்.

இது நிகழ்ந்து ரெண்டே வாரத்தில் காற்று தங்கவேலு அய்யங்கார் பக்கம் வீசியது. ’வெனிஸ் ஓஃப் ஆஃப்ரிக்கா’ வலனாடு என்று முன்னொட்டு இட்டு ஊருக்கு சிறப்பு சேர்க்கணும். இந்த நல்ல நிகழ்வை ஊரிலேயே மூத்த குடிமகனான தங்கவேலு அய்யங்கார் அக்ராசனம் வகித்து நடத்திக் கொடுக்கணும். 

நகரசபைத் தலைவரும் உறுப்பினர்களும் தங்கவேலு அய்யங்காரை நேரில் வந்து வேண்ட வந்திருந்தார்கள். 

அதில் ஒரு மெம்பரின் வாயை துணி வைத்து அடைத்திருந்தது, அவன் முனிசிபாலிட்டி மீட்டிங்கில் கேட்டானாம் – ‘ஆப்பிரிக்க வெனிஸ் என்று நம் வலனாடு-வுக்கு பட்டம் தர என்ன அடிப்படை? நான் வெனீஸ் நகருக்கு டூரிஸ்ட் ஆக போயிருக்கிறேன். அங்கே கட்டிடங்கள் எல்லாம், தெருக்கள் அனைத்தும் தண்ணீரிலேயே  அமைத்திருக்கும். கோண்டோலாக்கள் என்ற படகுகளை தெருக்களூடே ஓட்டியே போக்குவரத்து நடக்கும். நடக்காது. மிதக்கும்’ என்றும், இன்னும் பிறவும் பிதற்றினானாம்.

யார்ரா இவன் ஆரம்பிக்கும் போதே அஸ்து கொட்டறான். வலனாட்டுலே கால் கழுவ தண்ணி இல்லே. வெனிஸ் எப்படி ஆகும்னு கேட்கிறான் தேச துரோகி.

அத்தனை மெம்பர்களும் சேர்ந்து தேசத்துரோகி தேசத்துரோகி என்று ஒரே குரலாக உயர்த்தினர். 

இந்த தேசத்துரோகி மேலும் அதிகமாக பரப்புரை நடத்தாமல் அவனுடைய தேசத்துரோக வாயை அடைச்சு வைக்கணும். அதிலே கைக்குட்டையை அடை.

முனிசிபல் சேர்மன் ஓய்வறை போய்த் திரும்பியதும் சொன்னார். அவர் உத்தரவுப்படி நோய்த் தொற்று  வராமல் காக்க ரெண்டு சர்ஜிகல் முகமூடி அணிவிப்போம். என்று உத்வேகத்தோடு மெம்பர்கள் கோஷமிட்டார்கள்.

அந்தப்படிக்கு இருபத்திரண்டு மெம்பர்களும், சேர்மன், வைஸ் சேர்மன் அடங்கலாக வெனீஸ் அனுதாபி  உள்பட  தங்கவேலு அய்யங்கார் வீட்டு முற்றத்தில் முழு நகரசபை ஆஜர். ஒரே கோரிக்கையோடு வந்திருக்கிறார்கள்.

வைத்தியர் ஐயா அவசியம் வந்து தலைமை வகித்து நடத்திக் கொடுக்கணும்

(வந்து தொலையேண்டா கிழட்டு மூதேவி. உன்னை விட்டா ஊர்லே வேலையத்தவன் வேறே யாரிருக்காங்க?) 

டேவை கூப்பிட வேண்டியது தானே? 

எதற்கென்று புரியாமல் ஒரு சில மெம்பர்கள் கைதட்டினார்கள்.வாயில் துணி அடைத்து முகமூடி அணிவித்திருந்த  தேசத் துரோகி அவசரமாக ஏதோ சொல்ல துணியை வாயிலிருந்து எடுக்க முனைந்தான். அவனது கைகள் பின்னால் கட்டப்பட்டிருப்பதால் அவனால் பேச முடியாமல் போனது.

முனிசிபால்டி சேர்மன், தங்கவேலாரை உற்று நோக்கினார்.

வைத்தியர் ஐயா கோபத்திலே இருக்கார் போல. நாம் போகலாம். 

அவர்கள் சொல்லி வைத்தாற்போல் வாசல் வரை போய் உடனே திரும்பி பார்க்க, தங்கவேலு அய்யங்கார் சிரித்தபடி நின்றார்.

பொசுக்குனு கிளம்பியாச்சு போல. ஒரு தாய் மக்களா இருந்து கலந்து பழகியாச்சு, கோபதாபம் எல்லாம் இனி மனசிலேயே அழுத்தி கரைச்சுட வேண்டியது தானே. இப்ப நான் இல்லையா.

நிலைமை திரும்பவும் சகஜமானது. நகராட்சி தலைவர் அவசரப்பட்டார் –

அடுத்த வாரம் பொதுக்கூட்டம் நடத்திடலாம். புதன்கிழமை சரியா வருமா? 

 மெல்ல. கொஞ்சம் வேகம் கம்மி பண்ணுங்க. ஊர் சார்பில் நகரத்துக்கு பட்டம் சூட்டறது நல்ல விஷயம் தான். அந்த ரப்பர் பிரம்பை மேஜை மேலேயே வைப்பா தம்பி. 

விஷமக்காரனாக சிரித்த இன்னொரு கௌன்சிலர் கேட்டான்

ஒரே ஒரு நிமிஷம் மருத்துவர் ஐயா. பிரம்பு முனையிலே அஞ்சு விரலோடு   சின்னதாக, மகா சின்னதாக உலோகக் கை பொருத்தி வச்சிருக்கே, இது என்ன புது மெடிக்கல் உபகரணமா? மூல நோய்க்காரங்க வந்தா பரிசோதிக்கவா?

நகரசபை தலைவர் உபதேசியார் தோரணையோடு கனிவாக மொழியலுற்றார் –

விக்ஞானம் முன்னேறி வரும் வேகத்தில் அடுத்த நூற்றாண்டிலே எல்லாம் வேகம், எதுவும் வேகம் தான்.  எல்லா உபகரணமும் அதுக்கு அனுசரணையாக இருக்கும். எல்லோரும் றெக்கை கட்டிக்கிட்டு பறப்பாங்க போல.

ஆதரவை யாசிக்கும் பார்வையோடு தங்கவேலு அய்யங்காரை பார்த்தார் நகரசபை தலைவர். தேசத் துரோகி மட்டும் கரகோஷம் செய்தான்.

இது உபகரணம் எல்லாம் இல்லே, முதுகு சொரிஞ்சுக்கத்தான். மெயின்லேண்ட்லே இருந்து வரவழைச்சது. டெஸ்ட் பண்ணி பார்க்கறீங்களா?

அவர் நிறுத்துவதற்குள் இவர் சட்டையவிழ்த்து தோள் வழியே முதுகுக்கு நெருங்க அந்த பிரப்பன்குச்சியை வைத்து வருடினார்.

எப்படி இருக்கு? தங்கவேலு அய்யங்கார் பரபரப்போடு கேட்டார்.

 சுகம். பரம சுகம்.

வைத்தியர் குச்சியை வாங்கி பக்கத்திலிருந்த ஈர வலைத்துணியால் துடைத்து மேஜைக்குள் வைத்தார். அப்புறம்? பார்வையில் கேட்டார்.

வைத்தியர் அய்யா, வலனாடு  சிறு நாட்டுக்கு இனிமேல் டூரிஸ்ட் யார், எங்கே இருந்து வந்தாலும் அவர்களுக்கு விலையில்லா புறம்சுரண்டி தலா ஒன்று வழங்கப்படும்னு அறிவிச்சுடலாம்.

வெறும் நாளுக்கு அன்னக்காவடி

திருநாளுக்கு தோச்சு அடி

சொலவடை நினைவில் வர தங்கவேலு அய்யங்கார் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னார்-. 

ஏதோ சொல்ல வந்தீங்க, நான் எங்கேயோ போய்ட்டேன்

வைத்தியருக்கு விழாவிலே ஒரு கணிசமான பொற்கிழியும் வழங்கிடுவோம் என்றார் நகரசபை தலைவர்.  

எனக்கு பணம் எல்லாம் வேணாம். பெயருக்கு முன்னால் சேர்த்துக்க ஒரு பட்டம் கொடுங்க   அது போதும். தங்கவேலு அய்யங்கார் சொன்னார்.

கொடுத்திட்டா போச்சு. ஒரு உதாரணத்துக்கு உங்களுக்கு டாக்டர்-ன்னே பட்டம் கொடுத்திடலாமா?

ஹேய், அது வேணாம். அதுக்கு காலேஜ்லே போய் படிச்சு கஷ்டப்பட்டு டாக்டர்னு சொன்னா பொருத்தமா இருக்கும்.  எனக்கு சரிப்பட்டு வராது. நீங்களே வைத்தியம் பற்றி முன்னெட்டு ஒண்ணு யோசிச்சு சொல்லுங்க 

 வைத்திய  சிகாமணி, வைத்திய வைரம், வைத்திய தங்கம், வைத்திய வெள்ளி, வைத்திய சனி, ,.வைத்திய முத்து, வைத்திய ரத்னம்

நகரசபையில் ஒரே பெண் உறுப்பினரான ஜெசிக்கா வரிசையாக பெயர் சொல்லத் தொடங்கினாள். கூட்ட நெரிசலில் யாரோ அவள் காலை மிதித்து விட்டார்கள்,

வெயிட், கடைசியா என்ன சொன்னே ஜெசிக்கா?

எவண்டா காலை மிதிச்சது 

ஊஹூம் அது இல்லே. அதுக்கு முந்தி சொன்னியே 

வைத்திய ரத்னம்

வைத்திய ரத்னம் வைத்திய ரத்னம் வைத்ய ரத்னா

சித்திரம் : ஷங்கரா

அதற்கு அடுத்த வாரம் பொதுக்கூட்டம் நடந்தது. தங்கவேலு அய்யங்கார் வைத்ய ரத்னா தங்கவேலு அய்யங்கார் ஆக்கப்பட்டார். அவர் வீட்டு வாசலில் கருப்பு நிற பின்னணியில் வெள்ளை எழுத்துகளில் பெயர்ப் பலகை தொங்கியது –

வைத்ய ரத்னா தங்கவேலு அய்யங்கார்

சகல ரோக சத்ரு

ஆரோக்ய மித்ரா

இவிடம் எல்லா விதமான நோய் நொடிகளும் குணமாக நயமான மலிவான  சிகிச்சை அளிக்கக் கூடும்

வைத்ய ரத்னா பட்டம் கொடுப்பித்துக் கொண்டால் போதுமா? வீட்டு வாசலில் பெயர்ப்பலகை தூக்கினால் போதுமா? ஏற்கனவே இங்கே இருக்கப்பட்ட அலோபதி வைத்தியர் சைமன் டாக்டரே நோயாளி வர காத்திருக்கிறார். சீன மருத்துவம் என்றோ என்னமோ பிதற்றி நோய் காணும் முன்பே டாக்டர் ஃபீஸ் தரணும் என்று கட்டாயப் படுத்துகிறார். கல்யாணம்  ஆவதற்கு முன்னே கர்ப்பமான ஸ்திரி வேண்டும் என்று கேட்பது மாதிரி.

வைத்ய ரத்னா அப்போது தான் அவர் கற்ற வீட்டு வைத்திய அறிவை தனக்கே பிரயோகித்து பார்க்க தீர்மானித்தார். From self taught to self medication.

 சும்மா சாய்வு நாற்காலியில் ஆரோகணித்து ஊர் குளத்தில் தண்ணீர் மொண்டு வரப் பேசிக்கொண்டே போகும் வடிவான    அரம்பையரை கண்பாப்பா தெறித்து தரையில் விழுமளவு பார்த்துக் கொண்டிருப்பது அலுத்து விட்டிருந்தது. திடகாத்திரமான நல்ல கருப்பி பெண்டுகள்

இந்த வைத்யரத்னா தங்கவேலு அய்யங்கார் வலனாடு சிறு நகரில் ஒரு பெரிய ஆள்கூட்டம் பஞ்சமா பாதகங்களில் ஈடுபடாமல்  காப்பாற்றினார்.   

அதென்ன சங்கதி என்று இனி சாற்றுவோம்.

-தொடரும்

இணைப்பு றெக்கை -அத்தியாயம் 11

திரிதின ஸ்பிரிக் அப்படீன்னா?

இல்லறத்தானுக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் தலையாயது தினசரி கேலண்டரில் தேதி கிழித்தல். நினைவு வைத்துக் கொண்டு, காலையில் முதல் வேலையாக கேலண்டர் பக்கம் போய், ரெண்டு மூணு தாள் முன்கூட்டியே அவசரமாகக் கிழிபடாமல், நேற்றைய தேதிக்கான தாளை மட்டும் கிழிக்க வேண்டும். அப்புறம் முக்கியமானது கிழித்ததைப் படித்து விட்டுக் குப்பையில் போட வேணும். அல்லது படித்து விட்டுக் கிழித்தாலும் சரிதான்.

முன்பெல்லாம் தெற்கு மாவட்டங்களில் பல வீடுகளில் விவேகானந்தா தினசரி கேலண்டர் தான் தட்டுப்படும். மதுரை விவேகானந்தா அச்சகம் வெளியிட்டது அது. பழ.நெடுமாறன் அவர்களின் தந்தையார் நடத்திய அச்சகம். நீளமான கேலண்டர். ஒவ்வொரு தேதிக்கும் ஒரு சிறிய கட்டுரை மாதிரி நாள், நட்சத்திரம், அன்றைக்கு நடக்கும்எல்லா மத நிகழ்ச்சிகள், தலைவர்கள் பிறந்த, இறந்த தினங்கள் இப்படி பலதும் நல்ல தமிழில் வந்திருக்கும்.

இப்போது விவேகானந்தா கேலண்டர் கிடைக்கிறதா தெரியவில்லை. கல்லூரிக்குப் போகும்போது மற்ற வீடுகளில் செய்த மாதிரி நாங்களும் ஆனந்த விகடனுக்கு மாறி விட்டோம். விகடன் கேலண்டரில் போனஸ் கோபுலு சார் வரைந்த அழகான முருகன் படம். எல்லா வருஷமும் கந்தன் தான் என்றாலும் அலுக்காது.

கேலண்டரில் தேதி கிழிக்கும் போது எப்போவாவாது கண்ணில் படும் சொற்றொடர் – திரிதின ஸ்பிரிக். ஏதோ வருஷத்து விவேகானந்தா கேலண்டரில் பூண்டி மாதா திருநாள் திரிதின ஸ்பிரிக் என்று நடுவில் முற்றுப் புள்ளி இல்லாமல் அச்சாகி இருந்ததால், இந்த விசேஷமான வார்த்தை கத்தோலிக்க மத விழா சம்பந்தப்பட்டது என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

நேற்று ஒரு நண்பர் புரோகிதர்.காம் என்ற இணையத் தளத்துக்கான சுட்டியை அனுப்பியிருந்தார்

http://www.prohithar.com/amavasai/amavasai_nandana_vijaya.pdf

பழைய பஞ்சாங்கமாக இருந்தாலும் ஒரு தடவை பார்த்து விட்டுப் போகலாம் என்று படிக்கப் போனால், ’அமாவாசையைக் கணிப்பது எப்படி?’ என்று கட்டுரை.

நம்ப மாட்டீர்கள். அசந்து போனேன். இது வான நூல். Pure astronomy. Not astrology.

’சந்திரன் பூமியில் இருந்து தொலைவில் பயணிக்கும் காலத்தில் அதன் வேகம் குறையும். இதனால் ஒரு திதி கட்டாயம் 24 மணி நேரத்துக்கு மேல் வியாபித்திருக்கும். அதாவது மூன்று நாட்கள் தொடர்பில் திதி இருக்கும். இதுவே திரிதின ஸ்பிரிக் எனப்படும். இந்த திரிதின ஸ்பிரிக் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் கட்டாயம் ஏற்படும்.’.

ஆபீஸ் போகும் முன் அறிவு வளர்த்திய இணையத்துக்கு நன்றி.

http://www.prohithar.com/amavasai/amavasai_nandana_vijaya.pdf

றெக்கை

றெக்கை  அத்தியாயம் பத்து நாவல்  றெக்கை– அத்தியாயம் 12

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.