நியுஃபின்லாண்ட் – ஒரு புவியியல் பாடசாலை

சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்ற ஒரு கோடைப் பயணம், அருமையான புவியியல் பாடமாக அமையும் என்பதை சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக என் கோடைப் பயணங்கள் அழகிய இயற்கை காட்சிகளைப் படம்பிடிக்கச் செல்வதே வழக்கம். அவ்வாறு, இந்தப் பயணம் அழகிய இயற்கைக் காட்சிகளைப் படம்பிடிப்பதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை. அத்துடன் கிடைத்த புவியியல் பாடங்கள் இதை மேலும் சுவாரசியமாக்கியது. முதலில், கனேடிய வரைபடங்களை உருவாக்கியவர்கள் மீது எனக்கு மிகப் பெரிய வருத்தம் ஒன்று உண்டு. படத்தில் பார்த்தால், எல்லாம் சிறிதாக இருக்கும். ஆனால், ஒரு இடத்திற்குச் சென்றால், அவற்றின் விஸ்தாரம் மற்றும் தூரம், இந்த வரைபடங்கள் சற்று ஏமாற்று வேலையோ என்று தோன்ற வைக்கும்! நான் சென்ற இடம், கனடாவின் கிழக்கு எல்லையில் உள்ள, தீவு மாநிலமான நியுஃபின்லாண்ட். இதன் ஆங்கில spelling Newfoundland – உச்சரிப்பு நியுஃபின்லாண்ட். ஏதோ சின்ன தீவாக இருக்கும் என்று வரைபடத்தைப் பார்த்தால் தோன்றும். ஆனால், அதன் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்குச் செல்ல, காரில் 17 முதல் 18 மணி நேரமாகும் (கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர்கள்)!. அயர்லாண்ட், ஐஸ்லாண்ட், இலங்கை, யாவும் நியுஃபின்லாண்ட் தீவை விடச் சிறியவை. அமெரிக்க மாநிலங்களில், இந்தத் தீவின் கிட்டத்தட்ட அதே பரப்பளவு உள்ள மாநிலம் டென்னிசி. நியுஃபின்லாண்ட் மாநிலம் வெறும் நியுஃபின்லாண்ட் தீவு மட்டும் அல்ல. கனடாவின் குபெக்கின் கிழக்கே உள்ள லாப்ரடார் பகுதியையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய பயணம் நியுஃபின்லாண்ட் தீவுக்கு மட்டுமே. முழு மாநிலத்தையும் எடுத்துக் கொண்டால், நியுஃபின்லாண்ட், ஜெர்மனி, யு.கே., ஜப்பான், இவற்றை விடப் பெரியது. அமெரிக்க Mainland –ல் பரப்பளவில் இரண்டாவது பெரிய மாநிலம் கலிஃபோர்னியா. நியுஃபின்லாண்ட் மாநிலம், கனடாவின் சின்ன மாநிலம் என்றாலும், கலிஃபோர்னியாவின் பரப்பளவில் 95%! டிவிக்குள் அடக்குவதற்காக வரைபடங்களை சின்னதாக்கி, புவியியல் வல்லுனர்கள், சற்று நம்மைத் தடம் புரள வைத்தாலும், இது கனடாவில் மிகவும் சகஜமான விஷயம்.

முதலில், எனக்கு இருந்த புவியியல் சந்தேகம், கனடாவிலிருந்து பிரிந்த தீவா நியுஃபின்லாண்ட்? அல்லது யுரோப்பிலிருந்து பிரிந்து தீவா? எனக்கு இந்த சந்தேகம் வர முக்கிய காரணம், நியுஃபின்லாண்டின் கடற்கரைகள். பொதுவாக, கடற்கரை என்றால், மணல், தென்னை மரங்கள் மற்றும் கடல் என்பதே என் மனதில் உள்ள பிம்பம்.

ஆனால், நியுஃபின்லாண்ட் கடற்கரைகளை சில வண்ணப்படங்களில் பார்த்தால், அங்கு கடற்கரை அருகே மிகப் பெரிய பாறைகளும் அதனருகே புல்லும் வளர்ந்துள்ளது. அத்தகைய கடற்கரைக் காட்சிகளை, நான் ஐயர்லாண்ட் கடற்கரைகளின் வண்ணப்படங்களில் பார்த்துள்ளேன். என் சந்தேகத்தை அங்கு பலருடன் பகிர்ந்ததில், தெரிய வந்த விஷயம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஐயர்லாண்டும் நியுஃபின்லாண்டும் இணைந்திருந்தனவாம்!

நியுஃபின்லாண்டின் தென் பகுதி அவலான் தீபகற்பம் (Avalon peninsula). பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அவலோனியா என்ற சிறு கண்டம் (micro continent) இருந்ததாம். இது, புவியியல்காரர்கள் சொல்லும் plate tectonics ஐயர்லாண்டையும் நியுஃபின்லாண்டையும் அபூர்வ சகோதரர்கள் பாணியில் பிரித்து விட்டது! இரண்டு நாடுகளின் பாறைகளும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவையாம்! இதுவே என்னுடைய முதல் நியுஃபின்லாண்ட் புவியியல் பாடம்.

என்னுடைய அடுத்த பாடம் முற்றிலும் புவியியல் சார்ந்த ஒன்று என்று சொல்ல முடியாது. ஆனால், புவி சார்ந்தது. எல்லா சுற்றுலா பயணிகளையும் போல, செயிண்ட் ஜான்ஸ் (St Johns நியுஃபின்லாண்டின் தலைநகரம்) நகரின் வெளியே உள்ள Signal Hill என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். மார்கோனி, 1901 –ல், இங்கிலாந்தின் கார்ன்வால் என்ற இடத்திலிருந்து அனுப்பிய Morse code முதலில் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி இங்குதான் வந்தடைந்தது. உலகின் முதல் பன்னாட்டுத் தொலைத் தொடர்பு அது. இந்த Signal Hill, அட்லாண்டிக் சமுத்திரத்தை நோக்கி, ஒரு சின்ன மலை மேல் உள்ளது. மார்கோனி புராணம் தாண்டி, அங்கு என்ன உள்ளது? பேய்க் காற்று! என் போன்ற வண்ணப்படக் கலைஞர்களுக்கு சவாலான இடம். லென்சை மாற்றக் கைப்பையைத் திறந்தால், பையிலிருந்து ஏதாவது ஒரு சன்னமான விஷயம், அடலாண்டிக் கடலில் கலப்பது உத்தரவாதம்! அங்குள்ள குட்டிச் சுவற்றின் கீழ் உட்கார்ந்து லென்சுகளை மாற்றுவது வண்ணப்படக் கலைஞர்களின் வழக்கமான விஷயம்! காமிராவை திடமாக வைத்துக் கொள்வது, அங்கு பெரும் சோதனை! படம் பிடிப்பதைத் தாண்டி, என் சிந்தனை, ஏன், இந்தப் பேய்க் காற்றை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தோன்றியது. நியுஃபின்லாண்டின் மின்சாரம் 97% புதுப்பிக்கக்கூடிய சக்தி. இதனால், இந்த மாநிலத்தில் பேய்க்காற்றை மின்சாரமாக்குவதில் தயக்கமோ என்று தோன்றியது.

கடந்த 5 ஆண்டுகளில், நியுஃபின்லாண்டின் பொருளாதாரம், மீன்பிடிப்புத் தொழிலைத் தாண்டி ஏராளமாக மாறிவிட்டது. முதலில், எனக்குப் பேய்க்காற்று என்று தோன்றிய விஷயம், நியுஃபின்லாண்ட் மக்களுக்கு சாதரணமான ஒன்று என்றே தோன்றுகிறது. இந்தத் தீவில், ஏராளமான காற்று டர்பைன்கள் (wind turbines and wind farms) நிறுவப்பட்டு வருகிறது. இவற்றின் குறிக்கோள், தீவின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல. தேவையான மின்சாரம் நீர்சக்தி மின்சாரத்தால் தாராளமாக பயனில் உள்ளது. காற்று டர்பைன்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம், பச்சை ஹைட்ரஜன் (green hydrogen), மற்றும் பச்சை அமோனியாவாக மாற்றி, யுரோப்பிற்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளார்கள். நியுஃபின்லாண்டின் குறிக்கோள், வருடம் தோறும், 25 Gwh சக்தியை ஏற்றுமதி செய்வது. இதை கூடிய விரைவில் ஒரு தேசிய முக்கியத்துவ ப்ராஜக்டாக்க முயன்று வருகிறார்கள். உலகமெங்கும் கரியையும், டீசலையும் சக்தி மூலமாகப் பயன்படுத்துவதை விட்டு, இவ்வாறு இயற்கை வளத்தைப் பயன்படுத்துவது மிக நல்ல விஷயம். நான் சென்ற இடத்திலிருந்து சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள பல துறைமுக ஊர்களிலும் (தெற்கு, மத்திய மற்றும் வடக்கு பகுதிகள்) அட்லாண்டிக் கடலிலும் உற்பத்தி செய்யத் திட்டம்.

என்னுடைய பயணத்தின் இன்னொரு முக்கிய காரணம், நியுஃபின்லாண்டில் மே மாதத்தில், கடலில் மிதந்து வரும் பெரும் பனிப்பாறைகளைக் காண்பது. அழகிய வண்ணப்படங்களைப் பார்த்த பின், நானும், மிதக்கும் பனிப்பாறைகளைப் படம் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். இதற்காக பிரத்யேகமான இணையதளங்கள், இந்தப் பகுதியில் இத்தனைப் பெரிய பனிப்பாறைகளைப் பார்க்கலாம் என்று அறிவிப்பார்கள். இது ஒரு ஊரில் பார்க்கக் கூடிய விஷயமல்ல. இயற்கை ஜாலம், சில ஆண்டுகளில், சில ஊர்களின் கரையருகே பார்க்க முடியும். தீவின் ஒரு பெரிய பகுதியை Iceberg alley என்று அழைக்கிறார்கள். இந்தப் பகுதியின் முக்கியத்துவம், வட துருவத்திலிருந்து உடைந்து, கடலில் மிதந்துவரும் பல பெரிய பனிப்பாறைகளை, கடற்கரை அருகே காணமுடியும். போனவிஸ்டா (Bonavista NL) என்ற ஊரில் உள்ள கலங்கரை விளக்கத்திற்குச் சென்றேன். அங்கு உள்ள ‘இயற்கை வளத்துறை’ (Natural Resources, Canada) சார்ந்த ஒரு பெண், பனிப்பாறைகளைப் பற்றிய விஷயங்களை அழகாக எனக்குப் புரியவைத்தார்.

வட துருவம் அருகே உள்ள ஒரு மிகப் பெரிய தீவு க்ரீன்லாந்து (Greenland). இது டென்மார்க்கைச் சேர்ந்தது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், பனியுறை யுகக் காலத்தில், பூமி உறைந்தபோது, உருவான பனிப்பாறைகள், சமீப காலம்வரை, அப்படியே இருந்தன. வழக்கமாகக் கோடைக் காலத்திற்கு முன், கடலருகில் உள்ள பனிப்பாறைகள் வெப்பத்தினால் உருகி, அட்லாண்டிக் கடலில் மிதக்கும். இங்கிலாந்திற்கும், கனடாவிற்கும் இடையே உள்ள அட்லாண்டிக் கடலில் நடக்கும் வழக்கமான நிகழ்வு இது. க்ரீன்லாந்து, நியுஃபின்லாண்டிலிருந்து 2,500 கி.மீ. தள்ளியுள்ளது. நீங்கள் ஒரு நீச்சல் தொட்டியில் ஐஸ் கட்டி ஒன்றை, ஏன் ஒரு நூறு கட்டிகளைப் போட்டாலும், அவை ஒரு எல்லையிலிருந்து மறு எல்லையைத் தொடுவதற்குள் பெரும்பாலும் உருகிவிடுகின்றன. 2,500 கி,மீ. கடந்து கனடாவின் கடற்கரையை அடையும்போதும் பனிக்கட்டிகளாக இருக்கவேண்டுமெனில், அவை எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும்? எந்த ஒரு பனிப்பாறையும், கடலுக்கு மேலே தெரியும் பாகம், அதன் முழு அளவில் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே.  மீதமுள்ள 95%, நீரின் கீழே உள்ள பகுதி. கனேடிய கடற்கரையில் நான் பார்த்தது, நீருக்கு மேல் 30 அடியிலான ஒரு பனிப்பாறை. தேடிப் பிடித்து ஒரு 30 அடி பனிப்பாறையைப் பார்ப்பது, பெரிய காரியமாகிவிட்டது. இயற்கை வளத்துறை பெண் சொன்னது, ”புவிச் சூடேற்றத்தால், பனிப்பாறைகள் வழியிலேயே உருகிவிடுகின்றன. இப்பொழுதெல்லாம், இவற்றைக் காண்பது அரிதகிவிட்டது.”

இந்த விஷயத்தில், உலகின் மனிதர்கள் அனைவரும், கையைப் பிசைந்து கொண்டு, யாரோ பூனைக்கு மணி கட்டுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பது வேதனையான விஷயம். புவியியல் அறிவூட்டிய இன்னொரு நியுஃபின்லாண்ட் இடம், பானவிஸ்டா அருகில், கடற்கரையில் மறைந்து இருக்கும் ஒரு மாநிலப் பூங்கா. அதெப்படி ஒரு மாநிலப் பூங்கா மறைந்திருக்க முடியும்? நான் கனடாவில் பார்த்த மாநில மற்றும் தேசியப் பூங்காக்களில் அதிகம் விளக்கப்படாத மற்றும் மக்கள் பார்க்காத ஒரு பூங்கா Dungeon Provincial Park, (UNESCO Geosite). மரம், பூக்கள் எதுவுமற்ற ஒரு கடற்கரை தளம் இது. பெயருக்கு ஏற்றாற் போல, அங்கு கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய நிலவரை இருந்தது. அட்லாண்டிக் கடலின் நீர், இந்த நிலவரைக்குள் சென்று திரும்பிய வண்ணம் இருந்தது. சரி, இதில் என்ன புவியியல் அடங்கியுள்ளது? இயற்கை, பல்லாயிரம் ஆண்டுகளாக, கடல் அலைகள் விடாமல், பெரும் பாறைகளை அரித்து, குகைகளை உருவாக்கியுள்ளது. இவ்வகை குகைகள், கடற்கரையில் அரிது.

இங்குள்ள sea stack –ஐ, அரித்து, கடற்கரை ஓர சிறு மலைகள் மற்றும் இவ்வகை வளைவுகள், நிலவரைகள் யாவும், ஒரு சக்தி வாய்ந்த ஐஸ் மற்றும் கடல்லைகளால் உருவாக்கப்பட்ட அதிசயம். இந்த dungeon –ஐச் சுற்றி நடக்கலாம். ஒரு புறம் கடல், மறு புறம் நிலம். இடையில் இந்த dungeon சற்று விநோதமான காட்சி.

மேற்கத்திய நியுஃபின்லாண்டில் இன்னொரு அழகான புவியியல் பாடம் மற்றும் காட்சி ஒரு 12 மணி நேர சாலைப் பயணத்திற்குப் பிறகு, காத்திருந்தது. பொதுவாக, நான் படம் பிடிக்கும் நேரத்தில், மிகப் பெரிய பங்கு, சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் போய்விடும். ஆனால், எதையுமே விட்டு விடாமல் படம் பிடிக்க வைத்த இடங்கள் மிகச் சில. அப்படிப் பட்ட ஒரு இடம் West Brooke Pond என்ற இடத்தில் மூன்று மணி நேரப் படகுப் பயணம்.  வழக்கம் போல, கனேடிய Pond என்பது ஒரு எல்லை தெரியாத பெரிய நீரமைப்பு. ஆனால், இந்த Pond-ல் எங்கு திரும்பினாலும் மலைகள் மற்றும் fjords. இந்த fjords என்பது நார்வே மற்றும் ஃபின்லாந்தில் அதிகம். ஆனால், வட அமெரிக்காவில் மிகவும் அரிது.fjords எப்படி உருவாகிறது? இயற்கை, ஐஸ்ஸை வைத்துக் கொண்டு பல மில்லியன் ஆண்டுகள் உருவாக்கிய ஓவியம். அதாவது, பின் வாங்கும் பனிப்பாறைகள், மலைகளை செங்குத்தாகச் செதுக்கி, அந்த மலையைச் சூழ்ந்துள்ள மற்ற மணல், கற்களை தன்னுடன் இழுத்துச் சென்று, பள்ளத்தாக்குகளை, அத்தகைய, மலையைச் சுற்றி உருவாக்கும். நீர், பள்ளத்தாக்கை நிறப்பி, இந்த மலைகள் நீரிலிருந்து செங்குத்தாக வானை நோக்கி உயர்ந்து நிற்பதைக் காண்பது, இயற்கையுன் art gallery –க்குள் சென்ற பிரமிப்பை ஏற்படுத்துவது உண்மை. ஐ.நா. காரர்களுக்கு நியுஃபின்லாண்டை மிகவும் பிடிக்கும் போல. West Brooke Pond இருக்கும் இடம், கனடாவின் தேசிய பூங்காவான Gros Morne National Park. இதை UNESCO Heritage Site என்று பல காரணங்களுக்காக அழைக்கிறார்கள்.  இங்கு மேலும், ஒரு புவியியல் பாடமும், ஐ.நா காரர்கள் தரும் தனிச்சிறப்பு அம்சமும் புரியும்படியான இன்னொரு தளத்தையும் காணக் கிடைத்தது.

 நியுஃபின்லாண்டின் Gros Morne National Park –ல் உள்ள ஒரு மலை அமைப்பிற்கு Tablelands என்ற பெயர். வழக்கமாக, எல்லா மலைகளும், பல் மில்லியன் ஆண்டுகள் பூமியில் நடக்கும் tectonic plate movements என்ற மிகப் பெரிய அடுக்குப் பாறைகளின் சறுக்கலில் உருவானவை. ஆனால், சில tectonic plate movements, பூமியைப் புரட்டிப் போடும் சக்தி வாய்ந்தவை. அத்தகைய tectonic plate movement நிகழும் பொழுது, சில சமயம், பூமி சற்று பிளந்து, அதன் உள்ளிருக்கும் விஷயங்கள் (பாறைக் குழம்புகள்) வெளியே வீசி எறியப் படும். இவை பெரும்பாலும், கடலின் அடியே நிகழ்வதால், அத்தகைய பிளவுகளின் விளைவை நம்மால், நிலத்தில் காண முடிவதில்லை.

ஆரம்பத்தில் சொன்னது போல, நியுஃபின்லாண்ட், யுரோப்பிலிருந்து வலுக்கட்டாயமாக பூமியின் ராட்சச நிலத்தட்டுகளின் சறுக்கலால் உருவானது என்று பார்த்தோம். நாம் அனைவரும் வாழும் பூமியின் மேல் தட்டு, Crust என்று சொல்லப்படும். இது, கிட்டத்தட்ட 80 கி.மீ. வரை ஆழமானது. அதன் கீழுள்ள பகுதி, Mantle என்று அழைக்கப்படுகிறது. இதில் மேலே உள்ள பகுதி Upper Mantle கிட்டத்தட்ட 400 கி,மீ. ஆழம் வரை இருக்கும். அதன் கீழுள்ள Lower Mantle என்ற மிக மிகச் சூடான பகுதி கிட்டத்தட்ட 2,885 கி.மீ. ஆழம். அதன் கீழே கிட்டத்தட்ட 4,200 கி.மீ, ஆழம் படு பயங்கர சூடான Core (both Outer and Inner Core) பகுதி உள்ளது. இங்கு இதைச் சொல்லக் காரணம் உள்ளது.  நியுஃபின்லாண்டை உருவாக்கிய இயற்கை சக்தியின் வீரியம் பற்றிய ஒரு புரிதலை இந்த Tablelands தெளிவுபடுத்துகிறது. பூமியின் 100 கிலோமீட்டருக்கு அதிகமான ஆழத்தில் உள்ள Upper Mantle தளத்திலிருந்து வெளியான பாறைகளை இங்கு எங்கும் பார்க்கலாம். பூமியின் tectonic plate movement –ல் எத்தனை அளவு பிளவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பதே சற்று கடினம்.

இந்தப் பாறைகள், நாம் எங்கும் பார்க்கும் பாறைகள் போலவே தோன்றும், சற்று மஞ்சளானவை. ஆனால், புவியியல் ஆராய்ச்சியாளர்கள், இவற்றை Upper Mantle பாறைகள் என்று நிரூபித்துள்ளார்கள். இது போன்ற தளங்கள் பூமியில் அரிது.

மிதக்கும் பனிக்கட்டியை மட்டுமே பெரிதாக மனதில் வைத்து, நான் மேற்கொண்ட பயணம், புவியியல் பற்றிய ஒரு அருமையான புரிதலையும், மிக அழகான காட்சிகளைப் படம் பிடிக்கவும் உதவியது.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.