1. தூண்டில்
பணமெனும் மீன்
தீண்டும் வரையில்
மனத்தூண்டில் பிடித்திருக்கும்
ஒவ்வொருவரையும்
புத்தராகவே அமர
வைக்கிறது ஆசைக்குளம்!
2. பாடம்
மனப்பாடப் பகுதியினை ஒப்பித்தவாறே
பாட்டிலில் மீதமிருக்கும்
நீரை வேருக்கு ஊற்றுகிறாள்
வீடு திரும்பும் பள்ளிச்சிறுமி
தலையசைத்து பாடம் படிக்கின்றன
உறிஞ்சும் கிளைகள்.
3. தாவும் அணில்

ஆலமரத்திற்கு வாய்வரைந்து
உரையாடச் செய்கிறது
மரப்பட்டையினைக் கட்டியணைத்து
இங்கும் அங்கும்
தாவும் அணில்.
4. விலகியோடல்
நனைவதில் அத்தனை அலாதி
வரவேண்டுமென
மனதுக்குள் விரும்புகிறார்கள்
மேலே படாதவரை
இதமாயிருக்கிறது அவர்களுக்கு
விரும்பியிறங்கி கரைபுரண்டு
பொழிகையில் விரோதியினைப் போல
விலகியோடும் அவர்களைப்
புரிந்துகொள்ள இயலவில்லை
அடைமழைக்கு.
5. இறகுப்பந்து
தேடி வரும் இறகுப்பந்தின்
தலையில் ஓங்கியடித்து
எதிரிலிருப்பவருக்கு கிடைக்கவிடாமல்
கீழ்விழச் செய்வதில்தான்
வெற்றியிருக்கிறதென
கற்றுத்தருகிறது மையத்தில்
வலை விரித்திருக்கும்
அற்ப உலகம்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

மதிப்புமிகு ஆசிரியர் குழுவிற்கு எனது கவிதைகளை இதழ் 356ல் வெளியீட்டமைக்கு எனது அன்பின் நன்றிகளை உரித்தாக்குகிறேன்
ரகுநாத் வ மதுரை