- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34

இன்று யோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயமாக உணர முடிகிறது – எப்படி நம் பிறப்பை நம்மால் தீர்மானிக்க முடிவதில்லையோ அப்படியே நம் எதிரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடிவதில்லை பல நேரங்களில். எதிரியை நாம் முடிவு செய்வது போலவே இருந்தாலும் கூட அம்முடிவும் நம்மை மீறி நிகழும் ஒன்றால் நம்மீது இறக்கப்படுகிறது. விசாரிக்காமல் தன்மீது வன்முறையை பிரயோகித்ததற்காக பிரேமுக்கு எம் எஸ் சி சார் எதிரி ஆகிப்போனது போலவே அனைவர் முன்பும் தன்னை குற்றவாளியாக அதுவும், தான் இளவரசனாக வலம் வந்த களத்திலேயே குற்றவாளியாக்கி நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த கிரீடத்தையும் பறித்து விட்டதால் எம் எஸ் சி சாருக்கும் பிரேம் எதிரியாகிப் போனார். வயதோ, அனுபவமோ, முதிர்ச்சியோ, கல்வியோ எதுவுமே குறுக்கிட முடியாத பரமபத விளையாட்டு அன்றிலிருந்து துவங்கியது. வழக்கமான ஒரு நாளின் காலைநேர ஐந்து நிமிடங்கள் எங்கள் அடுத்த எட்டு மாத வாழ்க்கையை வேறொன்றாக கலைத்து அடுக்கின.
விசாரணை அறையிலிருந்து எங்களை போகச் சொன்னதும் நாங்கள் வெளியேறி நேரே வகுப்புக்கு போனோம். பிரேம் இறுகிய முகத்தோடேயே இருந்தார். நான் ஏதாவது பேசலாம் என முயற்சிக்கையில் சிவாஜியால் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். வகுப்பில் நாங்கள் நுழைந்ததும் வகுப்பே அமைதியானது. நயினாரும், டச்சிங்கும்தான் நடந்ததனைத்தையும் பிறருக்கு சொன்னார்கள். அவ்வப்போது சிங்கி வகுப்பினரால் முறைக்கப்பட்டார். எவரும் பிரேமிடம் சென்று “துட்டி” கேக்காமல் இருக்குமாறு சிவாஜி வலியுறுத்தினார். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வந்த ஆசிரியர்கள் பதினைந்து நிமிடங்கள் இச்சம்பவம் குறித்தே விசாரித்தார்கள். ஆனால் இந்த விசாரணையில் நாங்கள் அனைவருமே சற்று குழப்பமான இடம் செல்வி அக்காக்கள் விசாரித்த விதத்தால்தான். தமிழ்செல்வி, கலைச்செல்வி அக்காக்களில் எப்போதும் துடிப்புறப் பேசும் அக்கா தமிழ்செல்வி அக்கா. அன்று தமிழ்செல்வி அக்கா பிரேம் போல முகம் வாடியிருக்க குறைவாக பிறரிடமும், அதிகமாக தமிழக்காவிடமும் பேசும் கலையக்காதான் அதிகமாக விசாரித்தார். அன்று இருவரும் எடுத்த வகுப்பு பச்சைக் கடலையை மென்றது போல கசந்தபால் சுவையோடு இருந்தது. வகுப்பு முடிந்து கிளம்புமுன் பிரேம் அருகில் சென்ற தமிழ்செல்வி அக்கா “அவர் ஒண்ணும் அவ்வளவு மோசமில்ல. நீ அவர்ட்ட கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாம்லா. இல்ல, அக்காட்டயாவது வந்து சொல்லிருக்கலாம்லா. ஏண்டே, அவசரப்பட்டு பொடுபொடுன்னு போயி இப்டி செஞ்சிட்ட ?” என நசுங்கிய குரலில் சொல்லிச் சென்றார். தமிழக்காவின் பேச்சை அறிவுரையாக எடுத்துக் கொள்வதா, அவரது வருத்தமாக எடுத்துக் கொள்வதா என்ற குழப்பம் மட்டும்தான் எங்களுக்கு அப்போது இருந்தது.
மாலை வரை நாங்கள் வேறெதுவும் பேசிக்கொள்ளவில்லை. பள்ளி முடிந்ததும் சொல்லிவைத்தாற்போல நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே பெரிய கோவில் நோக்கி போனோம். சபாபதி மண்டபப் படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது எங்களைத் தவிர வெளிப்பிரகார மரங்களில் அடையும் பறவைகள் குரல் தான் இருந்தது. சிவாஜி பிரேமிடம் இனி என்ன செய்வது என்று கேட்க பிரேம் நெடுநேரம் பேசாமல் இருந்ததால் அடைத்திருந்த தொண்டையை செருமி சரி செய்து தனக்கும் புரியவில்லை என்றார். நாங்கள் மீண்டும் மெளனத்தில் ஆழ முயற்சித்தபோது எங்கள் பின்னால் நிழலாடியது. திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் சங்கீதாவும், மெஜூராவும் முன்னால் வந்தனர். நெருக்கத்தில் பிரேமின் உடல்வரிகளைப் பார்த்ததும் சங்கீதாவின் கண்கள் நீர் கோர்த்து மையிடப்பட்ட இமை விளிம்புகளுக்குள் அணையிடப்பட்டது போல மாறின. பிரேம் ஒருமுறை சங்கீதாவை நிமிர்ந்து பார்த்து விட்டு குனிந்து கொண்டார். பிரேமின் கண்களைப் பார்த்த நொடி சங்கீதா கண்களின் அணைக்கட்டு உடைந்தது. நாங்கள் எவருமே எதிர்பாராத விதமாக சங்கீதா பிரேம் அருகில் அமர்ந்து அவரது கையிலுள்ள வரி மேல் தன் விரல்களால் மெல்ல தடவினார். இறுகி முஷ்டி பிடித்து வைத்திருந்த பிரேமின் உள்ளங்கைகள் தளர ஆரம்பித்தன. மெல்ல விரிந்து வந்த பிரேமின் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டார் சங்கீதா. பிரேம் குனிந்தவாறே இருந்தாலும் அவர் கால் வைத்திருந்த முன்படியில் இரு கால்களுக்கும் நடுவே கோலத்திற்கு வைக்கப்பட்ட புள்ளிகள் போல நீர்புள்ளிகள் தோன்றி பரவின. நான் அசைந்து பேச வாயெடுக்கையில் மெஜூராவின் கண்களால் அடக்கப்பட்டேன். வழமை போல சிவாஜியை திரும்பி பார்த்தேன். சிவாஜி மெல்ல எழுந்து என்னையும், நயினாரையும் விரலால் சைகை காட்டி அவருடன் வரச் சொன்னார். நாங்கள் எழுந்து அவருடன் நான்கடி நடந்ததும் மெல்ல சொன்னார் – நம்மல்லாம் உள்பிரகாரத்துல 7 சுத்து போவோம். நாங்கள் முதல் சுற்றில் பாதி அளவில் இருக்கும்போதே மெஜூராவும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். அவங்க என ஆரம்பித்த நயினாரை சிவாஜி அடக்கினார். நாங்கள் சுற்றுக்கள் முடித்தபோது சபேச குருக்கள் மடப்பள்ளிக்குள் இருந்து வெளியே வந்தார்- என்னடா பசங்களா, இன்னைக்கு இவ்ளோ சீக்கிரமா வந்துட்டீங்க? படிக்கப் போறீங்களா? இன்னைக்கு சுண்டல் இருக்கு. ஏழு மணி ஆகும். அவர் குரல் கருவறை வாயிலோடு தேய்ந்தது. நாங்கள் சபாபதி மண்டபத்தில் படிக்கட்டுகளுக்குத் திரும்பினோம். பிரேமும், சங்கீதாவும் வழக்கம் போல விலகி இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கு ஆறுதலாக இருந்தது. நாங்கள் இயல்பாகப் போய் சேர்ந்து கொண்டோம். சங்கீதா பிரேமிடம் ஹைதராபாத் பயண அனுபவம் குறித்து கேட்டுக் கொண்டிருந்தார். மெல்ல இயல்புக்கு திரும்பிய பிரேம் அடுத்த அரைமணிநேரம் தன் பயண அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தார். பள்ளி நேரம் முடிந்த பின்னரும் ஒரு மணி நேரம் ஆகி விட்டதால் வீட்டில் தேட ஆரம்பித்து விடுவார்கள் என சிவாஜி நினைவுப்படுத்த நாங்கள் கிளம்பினோம். சங்கீதா கிளம்புமுன் தயக்கமின்றி பிரேமின் கைகளைப் பற்றிக் கொண்டு “நான் சொன்னதெல்லாம் ஓர்மையில் இருக்கட்டும். எந்தெங்கிலும் பிரேம் பிரேம்தானன்னே. என்ன?” எனக் கேட்டு தன் பிடியை ஒருமுறை அழுத்தி விட்டு கைகளை விலக்கிக் கொண்டு கிளம்பினார். மெஜூராவும் பிரேமிடம் எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து விட்டு கிளம்பினார்.
வீட்டிற்கு திரும்பும் வழியில்தான் நாங்கள் இயல்பாக பேச ஆரம்பித்தோம். இந்த விஷயம் தன் வீட்டிற்கு தெரிய வேண்டாம் என பிரேம் சொன்னார். ஆனால் இந்த வரிகளை எப்படி மறைப்பது என்பது நயினார் கேட்ட சந்தேகமாக மட்டுமல்லாமல் எங்கள் எல்லாருக்கும் இருந்தது. வீட்டிற்குள் போனதுமே தான் வேட்டி கட்டிக்கொண்டு கால்களின் வரிகளை மறைத்து கொள்வதாக சொன்ன பிரேம் சட்டையை வைத்து பாதிக் கைகளை மறைத்துக் கொள்வதாகவும் சொன்னார். ஆனால், சட்டை மறைக்க முடியாத முழங்கையின் கீழ்ப்பகுதியில் இரண்டு வரிகள் இருந்தன. அதைச் சமாளிக்க என்ன செய்ய என யோசித்தபோது சிவாஜி சொன்ன யோசனை பொருத்தமாக இருந்தது. அதன்படி பள்ளி முடிந்தபோது குருசாமியண்ணனின் சிஷ்யர்கள் பள்ளி மைதானத்தில் சிலம்பு பயிற்சிக்கு வந்தார்கள், நாங்களும் வேடிக்கை பார்க்கப்போனபோது இரட்டைக் குச்சி வீச ஆசைப்பட்ட பிரேம் அதற்கு முயற்சித்தபோது இரு மணிக்கட்டுகளையும் எதிரெதிராக சுற்றி தன்னைத்தானே அடித்துக் கொண்டுவிட்டார். இப்போது தாமதமான ஒரு மணிநேரம், கைவரிகள் இரண்டுக்கும் ஒன்றையொன்று நிரப்பும் காரணம் கிடைத்து விட்டதால் அதையே அனைவரும் மாறாமல் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தோம்.
பிரேமின் அம்மா கூட அதிகமாக எந்த கேள்வியையும் கேட்கவில்லை, ஆனால் பிரேமின் பாட்டி மட்டும் சற்று சந்தேகமாக கூடுதலாக எங்களைத் துருவினார். சற்று தடுமாறினாலும் சமாளித்து விட்டோம். மறுநாள் பிரேம் பள்ளிக்கு வரவேண்டாம் என சிவாஜி ஆலோசனை சொன்னார். அதன்படி பிரேம் பள்ளிக்கு வராமல் ஓய்வு எடுத்துக் கொண்டார் (மறக்காமல் விடுப்பு விண்ணப்பக் கடிதம் எழுதி சிவாஜி கையில் கொடுத்தும் விட்டார்). மறுநாள் பிரேம் வராதது குறித்து பலரும் விசாரித்தார்கள். குறிப்பாக மீசை சார், பூசை சார் இருவரும் விசாரித்தார்கள். உடல்நிலை சரியில்லாததன் காரணத்தை விடுப்பு விண்ணப்பத்தில் பிரேம் குறித்திருந்தது போலவே நாங்களும் சொன்னோம். வியப்பாக அன்று எம் எஸ் சி சாரும் பள்ளிக்கு வரவில்லை. செல்வி அக்காக்களும் வரவில்லை.
தலைமை ஆசிரியர் அறையில் விசாரணை முடிந்து வெளியே வந்த எம் எஸ் சி சாருக்கு உடம்பில் வெயில் உறைத்ததும்தான் தனக்கு நடந்தது என்ன என்பதே உள்ளுக்குள் உறைத்தது. ஆசிரியைகள் அறையின் சன்னல் பார்வைகளில் அவர் மீதான கேலி இருந்ததாக உணர்ந்தார். ஆசிரியர்கள் அறைக்குப் போனால் மீசை சாரும், ஜெயராஜ் சாரும் இருப்பார்கள் என்பதால் எங்கு போவதென சற்று தடுமாறினார். பூசை சார் ராஜசேகரன் சாரிடம் தன் வகுப்பை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சற்று பிந்தி வந்தவர் எம் எஸ் சி சாரை தோளோடு சேர்த்து பிடித்து மெல்ல தள்ளியபடியே கருத்தபாண்டியாரின் டீக்கடை நோக்கி அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து டீக்கடையின் ஓய்வறை இருவரும் (அவ்வப்போது எம் ஏ என் சாரும்) கூடிப் பேசும் ரகசிய ஆலோசனை மையமாக ஆனது.
அடுத்த ஒரு மாத காலம் எவ்வித சம்பவங்களும் இல்லாமல் போனது. அந்த அமைதி புயலுக்கு முன்பான அமைதி என்பது எங்களுக்கு அப்போது தெரியவில்லை. பள்ளியில் எங்கேனும் நேரில் பார்க்க நேர்ந்தால் எம் எஸ் சி சாரும், பிரேமும் தலையைத் தழைத்தபடியே நகர்ந்து விடுவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் குறிப்பிடத்தக்க சம்பவமாக சொல்ல வேண்டுமென்றால் பிரேமும், சங்கீதாவும் வழக்கத்தை விட அதிகமாக சந்தித்துப் பேசிக் கொண்டார்கள் என்பதைத்தான். அதாவது, அதுவரை அவர்கள் பேசிய எல்லாமும் எங்களுக்குத் தெரிந்ததாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் எங்கள் முன் பேசிக்கொள்வது கூட அவர்கள் இருவருக்கு மட்டுமேயான உரையாடல் போல எங்களுக்குத் தோன்றியது. அதேநேரம் இருவரும் நாங்கள் இல்லாமல் தனியே சந்தித்துக் கொண்டதில்லை என்பதையும் சொல்ல வேண்டும். செல்வியக்காக்கள் எங்களுடன் பேசுவதிலும் சிறு விலக்கம் இருப்பதாக தோன்றியது. குறிப்பாக தமிழ் அக்கா புன்னகை முன்பு போல இல்லை என சங்கீதாவே சொன்னார். காலாண்டுத் தேர்வு முடிந்து ஒரு வாரம் பள்ளி விடுமுறை. விடுமுறை முடிந்து நாங்கள் வந்தபோது எங்கள் வகுப்புகள் வேறொன்றாக மாற ஆரம்பித்தன.
புயலின் மையம் அமைதியாக இருக்கும் என்பதைப் போல எங்கள் வகுப்பில் எதுவுமே நிகழவில்லை. காலாண்டுத் தேர்வு முடிந்த ஒரு வார காலத்தில் எங்களது வினாத்தாட்கள் திருத்திக் கொடுக்கப்பட்டதும் பொறுப்பு தலைமை ஆசிரியராகிய எம் ஏ என் சார் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் ஒன்றை கூட்டினார். அந்தக் கூட்டம் ஒரு திங்கட்கிழமை காலையில் கூட்டப்பட்டது. ஞாயிறன்றே பள்ளிக்கு வந்த எம் ஏ என் சார் அலுவலக உதவியாளர் என ஆவணங்களிலும் ப்யூன் என நடைமுறையிலும் அழைக்கப்பட்ட காளிமுத்து அவர்களைக் கூட தனது அறைக்குள் அனுமதிக்காது கதவைப் பூட்டிக் கொண்டு ஏதோ செய்தார். இடையில் இருமுறை கருத்தபாண்டியார் வீட்டிலிருந்து (பள்ளி விடுமுறை நாட்களில் கடையும் விடுமுறை என்பதால் கடையின் ஒரு பகுதியே வீடாக இருந்த காரணத்தால் ஞாயிறன்று சமையல் பணி திருமதி பட்டாணியம்மாள் கருத்தப்பாண்டியாரைச் சேர்ந்தது. ஊருக்குச் செல்லாமல் தெய்வநல்லூரிலேயே தங்கியிருக்கும் வெளியூர் ஆசிரியர்கள் அன்று மட்டும் அம்மையாரின் சமையலை உண்ணும் பேறு பெற்றோர் ஆவர்) வந்த தேநீருடன் சில தாள்களும் மட்டுமே அறைக்குள் அனுமதிக்கப்பட்டன. இரண்டு மணி நேரம் கழித்து வியர்வையில் குளித்த வண்ணம் பனியனுடன் சட்டையைக் கையிலேந்திக் கொண்டு தனக்குத்தானே புன்னகைத்தவாறு வந்த எம் ஏ என் சார் வாயிலருகே நிற்கும் காளிமுத்து அண்ணனைப் பார்த்ததும் எம் ஜி ஆரைக் கண்ட நம்பியார் போல முகம் மாறினார்- “டே காளிமுத்து, என் ரூம் சாவி என்கிட்டயே இருக்கட்டும் கேட்டாயா? திங்ககெழம சாயந்திரம் வாங்கிக்கோ“. எந்த பதிலையும் எதிர்பாராமல் தன் லூனாவில் ஏறி நடப்பவர்களைத் துரத்திச் சென்றார். ஆவல் தூண்ட காளிமுத்தண்ணன் தலைமை ஆசிரியர் அறைக்கு பின்பக்கமாக போய் சன்னல் வழியே உள்ளே நடந்ததைப் பார்க்க முயலும்போதுதான் சன்னல் உட்புறமாக தாளிடப்பட்டிருந்ததை உணர்ந்தார். எம் ஏ என் சார் உற்சாக மிகுதியால் பஸ் ஸ்டாண்ட் பக்கமாக அல்வா, மல்லிப்பூ வாங்க லூனாவில் விரைந்து ஊர்ந்தார்.
இந்த ஞாயிறு மர்மத்தின் காரணம் திங்கட்கிழமை கூட்டத்தின்போது விலகியது. எம் ஏ என் சாரின் அறையின் கரும்பலகை, சுவர்கள் அனைத்தும் வெவ்வேறு எண்களின் பட்டியலால் நிரப்பப்பட்டிருந்தன. கரும்பலகையில் பல வண்ண சாக்பீஸ்களால் எழுதப்பட்டிருந்த பட்டியல்கள், ஸ்கெட்ச் பேனாக்களால் வரையப்பட்ட பட்டியல்களைத் தாங்கிய தாள்கள், காலியாக விடப்பட்டிருந்த அட்டவணைப் பட்டியல் ஒன்று என அந்த அறை வேறொன்றாக மாறியிருந்தது. உள்ளே நுழைந்த மீசை சார் கோஷ்டி குழப்பத்தில் இருக்க பூசை சாரும், எம் எஸ் சி சாரும் சிறு அடக்கப் புன்னகையுடன் இருக்க கூட்டம் துவக்கப்பட்டது. எம் ஏ என் சார் ஆரம்பித்த விதத்திலேயே அவர் பலமுறை ஒத்திகை பார்த்திருப்பது தெரிந்தது. அரைமணி நேரம் இடைவிடாமல் பேசப்பட்ட அவரது உரையின் திரண்ட கருத்து – காலாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் செய்யப்பட்ட “ஆராய்ச்சி” முடிவுகளின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மானவர்களது தேர்ச்சி சதவீதம் 60 க்கு குறைவாகவே இருக்கும். இதற்கான காரணங்கள் பல இருப்பினும் முக்கியமானவை 1. ஒரே பாடத்தை வெவ்வேறு பிரிவுகளுக்கு வெவ்வேறு ஆசிரியர்கள் எடுப்பதால் அந்த பாடத்தில் ஒட்டுமொத்த ஆசிரியத் திறன் வெளிப்படாமலாகிறது. உதாரணமாக, அ பிரிவிற்கு ஆங்கில ஆசிரியரான ராஜசேகரன் சார் திறமையால் அந்தப் பிரிவு மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைகையில் பிற பிரிவின் மாணவர்கள் அதே பாடத்தில் அவ்வாறாக தேர்ச்சி அடைவதில்லை. 2. கணிதம், ஆங்கிலம், அறிவியல் போன்ற கடினமான பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைத் தாண்டி அப்பாடங்களின் தேர்வில் மதிப்பெண் பெற வைப்பதற்கான சிறப்பு கூடுதல் முயற்சிகள் எதையும் எடுப்பதில்லை. 3. புதுமையான பயனுள்ள கற்பித்தல் முறைகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கே முன்னுரிமையும், சிறப்புரிமையும் வழங்கப்படும். இந்த புள்ளிகள் ஒவ்வொன்றையும் வலியுறுத்த அதற்கான தரவுகளை பட்டியலாக்கி அறை முழுவதும் ஒட்டி இருந்ததை எம் ஏ என் சார் சுற்றி சுற்றி காட்டியதில் மீசை சார், சந்திரா டீச்சருக்கு கழுத்துப் பிடிப்பு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
அரைமணிநேர முடிவில் ஐந்து நொடிகள் மட்டுமே இடைவெளி விட்டு மேற்சொன்ன மூன்று விஷயங்களை மனதில் கொண்டு ஏதேனும் திட்டமிருக்கும் ஆசிரியர்கள் யாராவது உண்டா என எம் ஏ என் சார் கேட்டார். தலைக்கு மேல் பூச்சிகள் பறக்க அமர்ந்திருந்த ஆசிரியப் பெருமக்கள் அக்கேள்வியை உள்வாங்கி யோசிக்குமுன்பே எம் எஸ் சி சாரின் கை உயர்ந்தது. “ரொம்ப பாஷ்ட்டா இருக்கீங்க சார்… வெர்ரி வெர்ரி குட் .. சொல்லுங்க உங்க ஐடியாவை”- அழுத்தி உச்சரிப்பது அச்சொற்களின் பொருளை ஆழமாக்கும் என்பது எம் ஏ என் சாரின் நம்பிக்கை , குறிப்பாக ஆங்கிலத்தில்.
“சார், என்னை விட அனுபவம் உள்ள ஆசிரியர்கள் இருக்காங்க. ஆனா நம்ம பசங்களுக்கு அந்த அனுபவத்த பயன்படுத்திக்க தெரியலைன்னு சொல்லணும். இப்ப நம்மள்ட்ட நாலு பிரிவு பத்தாம் வகுப்புகள் இருக்கு. வகுப்புக்கு 35 ன்னு கணக்கு பாத்தா 150 பேர். இவங்கள்ள காலாண்டுல ஃபெயிலானவங்கன்னு பாத்தா 48 பேர். பப்ளிக் எக்ஸாம்னா இதுவே 60 க்கு மேல போயிடும். நாம 60% கூட பாஸ் காட்ட முடியாது. இந்த 48 லயும் 31 பேர் கணக்கு, ஆங்கிலம் ரெண்டுலயும் ஃபெயிலானவங்க, கணக்குல மட்டும்னு பாத்தா 39. அதனால நாலு பிரிவுக்கும் கணக்கு பாடத்துல எல்லாரையும் பாஸ் பண்ற பொறுப்பை நான் ஏத்துக்கறேன்.” எம் எஸ் சி சார் நிதானமாக பேசினார். மீசை சார் ஏதோ பேச முன்வந்து அப்படியே நிறுத்திக் கொண்டார். பூசை சார் “சார், எம் எஸ் சி சார்வாள் சொல்லுதது போல பொறுப்பெடுத்துச் செய்யணும்னு யார் சார் வாரா இன்னைக்கு? அவாளையே நீங்க பத்தாம் வகுப்பு ஏதாவது ஒரு பிரிவுக்கு வகுப்பாசிரியராவும் போட்ருங்க. பொறுப்பெடுத்து செய்யற ஆளுக்கு நாமளும் ஒரு மரியாத செய்யனும்லா?” – மீசை சார் மீது ஓரக்கண் பதித்தவாறே பேசி முடித்தார் பூசை சார். எம் ஏ என் சார் கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு விரிந்த புன்னகை ஒன்றை வீசி வேறெவரையும் பேச விடாது தனது தீர்மானங்களை கூட்டத்தின் தீர்மானமாக ஆக்கி சந்திப்பை முடித்து வைத்தார். ஜெயராஜ் சார் வெளியில் வந்த பிறகு சொன்னதுதான் பலரது என்னமாகவும் வந்தது – “ நாடகக் கம்பெனில போயி ஒத்திக பாத்துட்டு வந்துருப்பாங்க போல”.
இந்த சந்திப்பின் விளைவுகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன்படி பத்தாம் வகுப்புகளின் அனைத்து பிரிவுகளுக்கும் கணித ஆசிரியராக நியமிக்கப்பட்ட எம் எஸ் சி சார் ஆ பிரிவாகிய எங்கள் பிரிவுக்கு வகுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களை பள்ளி நேரம் போக இருக்க வைத்து கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடத்த வகுப்பாசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. வகுப்பாசிரியர்கள் அனுமதிப்பதன் பேரில் மட்டுமே கூடுதல் நேர வகுப்பை பிற ஆசிரியர்கள் பயன்படுத்தலாம். வகுப்பின் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் வகுப்பாசிரியர் வசம் விடப்பட்டன. குறிப்பாக நேர அட்டவணையை மாற்றும் அதிகாரம் வகுப்பாசிரியருக்கு தரப்பட்டது. இம்மாற்றங்கள் அனைத்தும் பத்தாம் வகுப்புகளுக்கு மட்டுமே. பிற வகுப்பு மாணவர்கள் இயல்பாகவே படித்தார்கள்.
மறு நாள் காலையில் முதல் பீரியடுக்கே எம் எஸ் சி சார் எங்கள் வகுப்பிற்குள் நுழைந்தார். அதுவரை குழப்பமாகவே இருந்த எங்களுக்கு சூழலின் விபரீதம் புரிந்தது. ஆனால் எம் எஸ் சி சார் எவ்வித வெறுப்பும் வெளிப்படாத முகத்தையே காட்டினார். இதற்கு முன் இந்த வகுப்புக்குள் தான் வந்ததே இல்லை என்பது போல இருந்தது அவரது செயல்பாடு. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (பெயர், படிப்பு – என் பேரும் படிப்பும் ஒண்ணுதாண்டே ) தன்னுடைய குடும்பம் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் எங்கள் ஒவ்வொருவரையும் குடும்பம் குறித்து சொல்லச் சொன்னார். வழக்கம் போல முன் பெஞ்சு மாணவனாகிய தெண்டிலு எழுந்தபோது அவரை கையசைவால் அமர வைத்தவர் –“அதென்னடே, மொத பெஞ்ச்சுன்னதும் எல்லாத்துலயும் மொத ஆளா வந்துரணுமா? அடுத்தவனும்தான் வரட்டுமே” தெண்டிலு முகம் குழப்பமானபோது பிரேம் முகம் இறுக்கமானது. நயினார் அருகில் மூன்றாம் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஜெபமணி என்ற கழுமாடன் எழுந்ததும் எம் எஸ் சி சார் மறுபடி முகத்தை உறை நிலைக்கு கொண்டு சென்றார் – “இருடே, இருடே, குறுக்கு வழியா பாயப்படாது”. இம்முறை நயினார் முகமும், டச்சிங் முகமும் இறுகின.
எம் எஸ் சி சார் கண்கள் நீண்டு சென்று கடைசி பெஞ்சைத் தொட்டன. துரை அவர் பார்வையிலிருந்து சற்று மறைப்பான கோணத்திற்கு தன்னை சரித்துக் கொண்டார் என்றாலும் எம் எஸ் சி சார் சரியாக துரை கண்களில் தன் பார்வையைப் பதித்தார் –“நீ சொல்லுடே! நாம கடைசி பெஞ்ச் ஆட்கள்ட்டருந்தே எதையும் ஆரம்பிப்போம்” துரை முகம் மலர்ந்தார். ஒவ்வொருவராக சொல்லி வரும்போது டச்சிங் முறை வந்தது. டச்சிங் தன் ஊர் பெயரை சொன்னார். ஆனால் எம் எஸ் சி சார் தெரு பெயரைக் கேட்டார். டச்சிங் மறுபடி ஊர்பெயரையே சொன்னார். எம் எஸ் சி சார் விடாமல் தெருப் பெயரை வற்புறுத்தவும் தலை குனிந்தபடி டச்சிங் “கக்கன் காலனி” என்றார். எம் எஸ் சி சார் முகத்தில் புன்னகை போல் ஒன்று வந்தது – சத்தமாத்தான் சொல்லேண்டே, குடியிருக்க தெரு பேரை சொல்ல என்ன யோசன வாழுது?”. நயினார், ஜெபமணி இருவரும் தமக்கான முறை வந்தபோது ஊர்பெயரைக் குறிப்பிடாமல் “காலனி சார்” என்றார்கள். எம் எஸ் சி சார் ஊர் பெயர் கேட்காமல் விரலால் அடுத்த ஆளைச் சுட்டி நகர்ந்தார். பிரேம் முறை வந்தபோது மொத்த வகுப்பும் உறைநிலையில் இருந்தது. ஆனால் பிரேம் சொன்னவற்றை காதிலேயே வாங்கியது போல காட்டிக் கொள்ளவில்லை எம் எஸ் சி சார். பீரியட்களில் என்னென்ன மாற்றங்கள் என சொன்னவர் அடுத்த கட்டத்திற்கு போனார். இனி வகுப்பில் அகர வரிசைப்படியே மாணவர்கள் அமர வேண்டும். விளைவாக நான், பிரேம், சிவாஜி மூவரும் பிரிய வேண்டியதானது. அதிலும் சிறு மாற்றமாக பிரேமை நயினார்க்கு அடுத்தபடியாக அமர வைத்தார். அதற்கடுத்த பெஞ்சில் டச்சிங் இடம்பெற்றார். துரை இரண்டாம் பெஞ்சில் இடம் பெற்றார். எந்த வகுப்பிலும் இவ்வரிசை மாறி எவரும் அமரக் கூடாது எனவும் அதைக் கண்காணிக்கும் பொறுப்பு துரைக்கு தரப்படுவதாகவும் அறிவித்தபோது துரை கூட அதை நம்பவில்லை.
அன்று மாலை எங்களது சந்திப்பில் எவருமே உற்சாகமாக இல்லாமலானோம். வழக்கமாக சுதாரித்து ஏதாவது யோசனையைத் துவக்கும் சிவாஜியும் கூட முகம் இருண்டு வெறித்த பார்வையுடன் இருந்தார். பிரேம் நெற்றியில் சுருக்கங்கள் மிகுந்திருந்தன. சேமியாதான் முதலில் விரதம் கலைத்தார்- “அவரு எல்லாத்தையும் மொதல்லயே வெசாரிச்சுட்டுதான் வந்துருக்காரு. பூச சார் கூடயேதான சுத்துதாரு. துரையப் பத்தி தெரியாமயா இருக்கும்? பூச சாரும், துரையும் ஒரே ஊர்க்காரங்க வேற. வேணும்னேதான செய்யுதாரு”. யக்கா பாட்சாவும் பேசினார் – “ அது ஏம்ல காலனிக்காரங்கள மட்டும் எங்கருந்து வாற, எங்கருந்து வாறன்னு திருப்பி திருப்பி கேக்காரு?”
பிரேம் மெளனம் கலைத்தார் –“ அவாளுக்கே அதை ஞாபகப்படுத்தறார். அவ்ளோதான்”
எனக்கு இவர்கள் முக்கிய பிரச்சினையைப் பேசாமல் வேறு எதையோ பேசுவதாகத் தோன்றி அவர்களை பிரச்சினையை நோக்கி இழுத்தேன் – “நாம வேணா மீச சார், கங்கா சார்கிட்ட போயி நம்மள பழயபடி ஒண்ணா ஒக்கார வைக்கணும்னுட்டு கேப்பமா?”. சிவாஜியின் கண்ணசைவிலேயே காரியங்களைச் செய்து பெயர் வாங்கிய எனக்கு அவர் அருகில் இல்லாமல் வகுப்பில் உட்காருவதை நினைத்தாலே நடுங்கியது. சிவாஜி என்னைப் பார்த்த பார்வையில் கோபம், கனிவு இரண்டும் இருந்தன – “ ஏல, கிறுக்குப் பயலால நீனு? நம்ம சேர்ந்து ஓக்காரக்கூடாதுன்னுதான் அவரு எல்லாரையும் பிரிச்சி ஒக்கார வச்சிருக்காரு. இப்ப யார் கேட்டாலும் நான்தான் வகுப்பாசிரியர், நாஞ் சொல்லுதபடிதான் வகுப்பு இருக்கணும்பாரு”. எனக்கு நடுக்கத்தோடு அடிவயிறு சில்லிடும் உணர்வும் சேர்ந்தே ஏற்பட்டது. (பின்னாட்களில் 2019 ல் ஒரு ஜூம் சந்திப்பில் இதை நான் சொன்னபோது “யு நோ, அவர் க்ளாஸுங்கும்போதே எனக்கு பதட்டமாகிடும். அப்டாமினல்ல சில்லுனு ஆகி ப்ளாடர் நெறஞ்ச மாதிரி ஆயிடும். போனாலும் வராது. பட் ஐ கெப்ட் ஹேவிங்க் தி ஃபீலிங் ஆஃப் பர்ஸ்ட்டிங். காலேஜ் வந்தப்பறம்தான் இதெல்லாம் அட்ரீனலினோட வேலைன்னு புரிஞ்சது. யெஸ், வீ வேர் இன் பெய்ன்” –பிரேம் சொன்னது). அன்றைய சந்திப்பில் எங்கள் உரையாடலை விட மெளனமே அதிகமாக இருந்தது. எந்த யோசனையுமின்றி நாங்கள் கிளம்பினோம். மறுநாள் பள்ளிக்கு கிளம்புகையில் அத்தனை ஆண்டுகளில் இல்லாமல் முதன்முறையாக பள்ளிக்கு செல்வது குறித்து சொல்லத் தெரியாத பயம் ஏற்பட்டது. அது சரியே என உணர்த்தும் செயல்பாடுகள் வகுப்பில் தொடர ஆரம்பித்தன.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
