- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
பசுமை விரித்து பாட்டம் பாட்டமாகப் பயிர் செழிக்கும் பூமியில் நிர்மலா நடந்து கொண்டிருந்தாள். தும் தும் தும் என்று எங்கோ தொலைவில் முரசுகள் அதிர்ந்து அவளுக்கு வழி காட்டும்போது ஒரு வினாடியில் வெட்டவெளி பின்வாங்கி, இருளை அள்ளி எங்கும் திணித்தது.
’நிர்மலா. எழுந்திருடி குழந்தே. உன் சொப்பனம் திருடு போயிண்டிருக்கு’
நிர்மலாவின் அம்மா சிநேகாம்பாள் குரல் கிரீச்சிட அவளை எழுப்பினாள்.
“மெல்ல எழுப்புடி ராட்சசி. அவளே குஞ்ஞம்மா குட்டி. இப்பொ நிறைசூலி’.
சிநேகாம்பாளின் தகப்பனாரான ஆலப்பாட்டு சுப்ரமணிய அய்யர் என்ற ஆலப்பாட்டு வயசர் தரைக்கு ஓரடி மேலே பறந்தபடி கிசுகிசுத்தார். நிர்மலாவின் தாத்தா அவர்.
“சூல் பிடிச்சிருக்குன்னா என்ன? லோகத்துலே வேறே யாரும் குழந்தை பெத்துக்கலியா? அவ தாத்தா செல்லம், அப்பா செல்லம். நான் சொன்னா எங்கே கேட்கப் போறா. போங்கோ நடந்து போயோ பறந்து போயோ பெரிய பொதியா உம்ம பேத்திக்கு தேன் முட்டாயி வாங்கிண்டு வந்து கொடுங்கோ”
இன்னொரு சிறுமி அழும் குரல் எங்கேயோ கேட்டது.
“இவ அக்காளும் பள்ளி எழுந்தாச்சு.. ரெட்டை பொதியா மிட்டாய் வாங்கிண்டு வாங்கோ. வந்து வாச்சிருக்கே.சாரதே, அழாதேடா கண்ணம்மா. வந்துட்டேன்”
தாத்தா
நிர்மலா சத்தமாகக் குரல் எழுப்ப அது தொண்டைக்குள்ளேயே மூழ்கி விட்டது.
அம்மா, சாரதா அக்கச்சி – குரல் எழுந்து வெளியே போகவில்லை

நிர்மலா கட்டிலில் எழுந்து உட்கார்ந்து இருட்டை வெறித்தபடி இருந்தாள். எங்கே இருக்கேன்? வேம்பநாட்டுக் காயல் ஓரம் நெல் விளையும் குட்டநாட்டு அம்பலப்புழைப் பிரதேசமா இது? பதினைந்து வருஷம் குடியிருந்தும் இன்னும் மனதில் பதியாத மேட்ரிட் மாநகரம்? தெற்கு ஆப்பிரிக்காவிலே இப்போ வந்து சேர்ந்திருக்கற வலனாடு?
எந்த ஊரானா என்ன, இருட்டிலே எல்லாம் ஒண்ணுதான். அவள் உறங்கப் போகும் முன்பு தான் பசங்க கிட்டாவையும், விசியையும் ரொட்டித் துண்டுகளையும் பழக்கூழையும், தகர டப்பாவைத் திறந்து யெமாஸ் தெ சாந்த தெரிசா இனிப்புப் பண்டத்தையும் சாப்பிட்டு உறங்க வைத்திருந்தாள்.
தெரிசா என்று முடியும் இனிப்பின் பெயர் நிர்மலாவுக்கு தன் அக்கா சாரதா என்ற தெரிசாவை நினைவு படுத்தியது.
“அக்கச்சி உன்னை பார்க்கணுமே. அம்மா கனவிலே வந்துடறா. உன்னைத் தான் நான் தொலைச்சுட்டேன். எடின்பரோவிலே தாமசிக்கறியாமே? எப்பவோ யாரோ சொன்னது நிஜம்தானா? அப்பாவா? அவரும் என் சொப்பனத்திலே வருவார். ஒரு வார்த்தை பேசறதில்லே. மனக் குமைச்சல், வேதத்திலே நம்மப்பா ஏறாமலே இருந்திருக்கலாம். ஒரு பெரிய குடும்பமே சிதறி சின்னாபின்னமாப் போச்சு. அக்கச்சி உன்னை பார்க்கணுமே.
மௌனமாக அழுதாள். அழுகைக்கு நடுவே கோழித் தூக்கமாக உறங்கி விடியலில் எழுந்தாள்.
நிர்மலா படுக்கை அறையில் எட்டிப் பார்த்தாள். பசங்க ரெண்டும் இன்னும் எழுந்திருக்கவில்லை.
ஒன்றுக்கு மேல் மற்றொன்றாகக் கட்டியிருந்த பலகைப் படுக்கைகள். விசி கீழ்ப் படுக்கையில். கிட்டா தரையில் கிடந்தான். உயரமான ஏசுவைக் குரிசில் ஏற்றித் தரையில் குரிசை சாய்த்ததுபோல் இரண்டு கைகளையும் ஆக மட்டும் விரித்தபடி அவன் கிடந்தான்.
குட்டிப் பசங்களா, புவன் திய.
ஸ்பானிஷ் மொழியில் காலை வணக்கம் சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் கீழிறக்கி குவித்துக் கண் மலர்த்தி நின்றாள் நிர்மலா.
பக்கத்தில் ஏதோ நெடி. குழந்தை மூத்திரம் பெய்து அரையை ஈரமாக்கிக் கொண்டால் வரும் வாடை.
‘கிட்டா உறங்க முந்தி குளிமுறி போய்ட்டு வரச் சொல்றேனே அது இதுக்குத்தான். கால்சராய் நனைஞ்சு போச்சுன்னா கழற்று’.
கிட்டாவின் படுக்கை மேல் கை வைத்து தடவிப் பார்த்தாள். சுக்காக உலர்ந்திருந்தது மெத்தை. அவன் உயரத்துக்குப் படுக்கையில் படுத்தால் ரெண்டு காலும் வெளியே நீட்டவேண்டி வரும். பாவம் சின்னப் பையன். தரையில் படுத்ததால் நிஜாரிலேயே போயிருப்பான். முதல் வேலையாக இன்று பசங்க ரெண்டு பேருடைய படுக்கைகளையும் தக்கபடி மாற்றியமைக்க தச்சரை கூப்பிடணும். நல்ல வேளை நிஜார் தான் நனைந்திருக்கும். மூத்திரத் துணியை பிரயத்னப்பட்டு சுத்தம் செய்ய வேணாம். துவைத்தால் போதும்.
அந்த ஒரு நிமிட மகிழ்ச்சி வடிந்த அடுத்த கணம் அவனுடைய றெக்கைகள் சொட்டச் சொட்ட நனைந்த காகிதப் பணம் போல் ஒன்றோடு ஒன்றாக ஈரம் ஒட்டி இருந்ததைப் பார்த்தாள் நிர்மலா.
வெள்ளைச் சிறகுகள் தூவெண் நிறம் மங்கி மஞ்சளாகத் தெரிந்தன.
கிட்டா, எப்படி நிஜாரை நனைச்சுக்காம மூச்சா போனே
எழுந்து வந்த விசி சோம்பல் முறித்தபடி கேட்டாள்.
சாரி, நீ அதைப் பார்க்க முடியாது.
சிரித்தபடி கிட்டா தீனி மேஜையில் வைத்திருந்த சாப்பாட் டு பொருள்கள் அடங்கிய பெரிய பிரப்பங்கூடையை திறந்து பார்த்தான்.
குளிக்க வேணாமா, குறைந்த பட்சம் கை அலம்ப வேணாமா. றெக்கையை எடுத்து குளிமுறி சுவர்லே துணி மாட்டற நீள ஆணி அடிச்சிருக்கும். அங்கே விட்டுட்டு வா. விசி, இன்னோரு பாத்ரூம் உனக்கு தான்.
அவள் அருகில் வந்த விசி ’அம்மா றக்கை ஒரு வாரமாக தெருப் புழுதி, வெய்யில்லே காஞ்சு வியர்வை படிஞ்சு இப்படி அசுத்தமா இருக்கு. எனக்கு அரை மணி நேரமாவது குளிச்சாகணும்’ என்று கிசுகிசுத்தாள்.
பார்க்கலாம் இங்கே எல்லாம் காலம்பற ஒரு மணி நேரம், சாயரட்சைக்கு அரை மணி குழாயிலே தண்ணி வருமாம். சரிடி நீ குளி. முதுகு நனையணும் என்ன? இல்லேன்னா நான் திரும்ப குளிக்கச் சொல்வேன்,
அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டு நிம்மி குட்டி சமர்த்துடி நீ என்றபடி முத்தமிட்டாள் விசி. நிர்மலாவுக்குக் கண் நிறைந்து போனது..
எல்லாம் விதிச்சபடி நடக்கட்டும். போய்க் குளிச்சிட்டு வாங்கோ. சாப்பாடு எடுத்து வைக்கறேன்.
பத்து மணிக்கு மருந்து மாத்திரை எடுத்து வைச்சு கார்பனேட் மிக்சரை கலக்கி ஜாடியில் நிறைச்சுடலாம். அதெல்லாம் எட்டு, பத்து வயசு பசங்களை வைச்சு செய்யறது இல்லை. நிர்மலா தான் முழுக்க செய்தாகணும்.
டிஸ்பன்ஸரி எடுத்து வைக்கறபோது அப்போ அப்போ ஏதாவது பேசிக் கொண்டு சின்னப் பசங்க குறுக்கும் நெடுக்கும் போனா இடமே ரம்யமாக இருக்கும். கைக்காரியமும் சுளுவாக முடிஞ்சுடும்.
ரொம்ப களைப்பா இருக்கு அம்மா. நாளைக்கு எடுத்து வைக்கலாமா?
நாளைக்கு ஸ்கூல் போகணும் . புன்சிரிப்போடு கூறினாள் நிர்மலா.
பத்திரமாக கம்பளியும் பட்டுத் துணியும் ஒன்றன்மேல் ஒன்றாக சுற்றி பட்டு நூலால் கட்டிய சதுரப்பெட்டியை அவிழ்த்து ஜாக்கிரதையாக உள்ளே இருந்து எண்ணெய் ஓவியங்கள் இரண்டை வெளியே எடுத்தாள். முதல் ஓவியத்தில் சுந்தரனான யுவன் சிரித்தான். லெவி கோஹன்.
டேய் கருப்பு தடியா என்னை விட்டுப் போக எப்படிடா மனசு வந்துது.
நிர்மலாவின் கண்ணீரில் காட்சியெல்லாம் மங்கலாகத் திரையிட்டு உறைந்தது.
நீ உயிரோடு இல்லைன்னு இன்னும் மனசு ஏத்துக்க மாட்டேன்கிறது.
உயிர் இல்லாட்ட என்ன நிம்மி’மா, உன் கூட எப்பவும் இருக்கேனே யோசிச்சுப் பாரு எத்தனையோ காலம் சேர்ந்து இருக்க போறோம்.
உடம்பு இல்லாமல் அவனோடு தாம்பத்தியம் நிகழ்த்த முடியுமா? கேட்டால், கண் சிமிட்டி ஆவி போகம் சாத்தியமானது என்று பகடி பேசுகிறான். கலவி மட்டுமா தாம்பத்யம்?
மேட்ரிட்டில் இருந்து வலனாட்டுக்கு நிர்மலா மகளோடும் மகனோடும் ஒருவழிப் பயணம் .வைத்தபோது. அது போன மாதம். கப்பலிலும் பஸ்ஸிலும் காரிலும் லாரியிலும் தொடர்ந்து பயணம் செய்து வலனாடு வந்து சேர்ந்தது நேற்று சாயந்திரம்.
லெவி அந்திம நேரத்தில் நிர்மலாவைக் கேட்டுக்கொண்டபடி தான் இந்தப் பயணம்.
குளிமுறியிலே வேகமா தண்ணி விழுந்ததிலே றெக்கை கரைஞ்சு போச்சு. நிஜமாத்தான் அம்மா.
விசி ஆச்சரியமும் சந்தோஷமும் போட்டி போட்டு வர துவாலையால் தலை துவட்டியபடி அறிவித்தாள்.
மனுஷாளுக்கு றெக்கை முளைக்கறதாவது ஒண்ணாவது என்று நம்பாமல் வந்து நின்று பார்த்துப் போக இனி யாரும் உத்தேசிக்க மாட்டார்கள் என்பது ஆசுவாசம் தரக் கூடியது. றெக்கை இனி எப்போதும் வராது என்று உத்தரவாதம் கொடுக்க தெய்வம் வருமா?
தெய்வச் சிறுவர்கள் என்று தீர்மானமாகச் சொல்லி கால் பாதத்தில் ஆணி முளைத்த ரோகம் தீரவோ, தலைமுடியில் பேனும் பொடுகும் இல்லாது ஒழியவோ வேண்டிக் கொண்டு ரெண்டு சிறு தெய்வங்களின் பாதம் பணிந்து காணிக்கையாக வாழைப்பழங்களை சமர்ப்பிக்கும் பெருங்கூட்டம் இல்லாது போகும்.
நிர்மலா விசி தலையைத் துவாலையை அவளிடம் வாங்கி அருகே நின்று அணைத்து .தலைமுடி ஆற்றியபடி ரகசியம் பேசுவதுபோல், பேசுவது போல் என்ன, ரகசியம் தான் பேசினாள்-
இன்னம் இருக்குடி குழந்தே பொண்ணா பிறந்துட்டு ஒண்ணு ஒண்ணா சங்கடம் வந்துண்டுதான் இருக்கும். இடுப்பிலே தூரத்துணி கட்டிக்கணும். வயத்தை தள்ளிண்டு மாசக் கணக்கிலே அல்லல் படணும். அப்புறம் பிரசவம்.
போகட்டும் சிறு பெண்ணை சஞ்சலிக்க வைக்கணுமா? நிர்மலா பேசியபடியே உடல் அதிர்ந்து விசியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
அவள் கண்ணுக்குள் காட்சி துல்லியமான வெளிச்சத்தில் நகர்ந்தது.
பசுமை விரித்து பாட்டம் பாட்டமாகப் பயிர் செழிக்கும் பூமியில் நிர்மலா நடந்து கொண்டிருந்தாள். தும் தும் தும் என்று எங்கோ தொலைவில் முரசுகள் அதிர்ந்து அவளுக்கு வழி காட்டும்போது ஒரு வினாடியில் வெட்டவெளி பின்வாங்கி, இருளை அள்ளி எங்கும் திணித்தது.
’நிர்மலா. எழுந்திருடி குழந்தே. உன் சொப்பனம் திருடு போயிண்டிருக்கு’
நிர்மலாவின் அம்மா சிநேகாம்பாள் குரல் கிரீச்சிட அவளை எழுப்பினாள்.
“மெல்ல எழுப்புடி ராட்சசி. அவளே குஞ்ஞம்மா குட்டி. இப்பொ நிறைசூலி’.
சிநேகாம்பாளின் தகப்பனாரான ஆலப்பாட்டு சுப்ரமணிய அய்யர் என்ற ஆலப்பாட்டு வயசர் தரைக்கு ஓரடி மேலே பறந்தபடி கிசுகிசுத்தார்.
அம்மா அம்மா என்ன ஆச்சு? விசி நிர்மலாவை தீனி மேசை நாற்காலியில் அமர்த்தியபடி பதற்றத்தோடு கேட்டாள்.
Hallucination ஆக நீண்ட கனவு. நிர்மலா சமநிலைக்கு வந்தாள்.
நேற்று எல்லோரும் பார்த்துண்டு இருக்கறபோதே அதிகப்பிரசிங்கியா ஜிர்ருனு மொளச்சிடுத்து என்று தாமதமாகக் குறை சொன்னாள் விசி.
அது ஒண்ணுமில்லேடி சூழ்நிலை இன்னும் பழகலே இல்லியா, அடுத்தாத்துலே சாவு, குலவை. முரசு இப்படி புதுசா பார்க்கவும் கேட்கவும் அமைஞ்சு போன அதிர்ச்சியிலே ரெண்டு பேருக்கும் றெக்கை அரும்பினது சுபாவீகம். நான் நேத்து ராத்திரி உங்களுக்கு மருந்து கொடுக்காமல் போனதும் அதுக்கு காரணத்திலே ஒண்ணு.
அப்பா பெயிண்டிங்கை எங்கே வைக்கப் போறே அம்மா? ஹால்லேயா வாசல் ரேழியா ? .கிட்டா ஆர்வத்துடன் கேட்டான்.
விசி அப்பா ஆல்பர்ட் வேக்னர் வாசல் சுவரிலே இருப்பார், உங்கப்பா லெவி கோஹன் வீட்டு ஹால்லே, சரியா?
முன்வாசல், திண்ணை, ரேழி இது மூணும் டிஸ்பென்சரி. ஹால், பின் ரேழி, சமையல்கட்டு., டைனிங் ரூம், கழிப்பறை இதெல்லாம் நம்ம வீட்டு அம்சங்கள்.
நிர்மலா விரலால் சுட்டினாள்.
நோயாளியை நீ பரிசோதனை பண்ண எங்கே இருப்பே?
ட்ராயிங் ரூம் சாவி கேட்டிருக்கேன். வீட்டு சொந்தக்காரர் இன்னிக்கு தரேன்னார்.
பாதியில் நிறுத்தினாள். சின்னப் பசங்க. இவ்வளவு விளக்கமா தகவல் சொல்லியாகணுமா? சரி வாங்கோ பசங்களா ஆகாரம் கழிக்கலாம்.
என்ன தின்னப் போறோம்? விசி கேட்டாள்.
பிரட் டோஸ்ட், மார்மலைட், ஆப்பிள் ஸ்ட்ருடெல் கேக், மசாலா டீ ….
அவர்கள் காலைச் சாப்பாடு தொடங்க இருந்தபோது வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம். பெரிய கேக்கை சீவி நாசுக்காக எடுத்த விள்ளலை வாயில் திணித்தபடி கிட்டா வாசலுக்குப் போனான்.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
