சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?

This entry is part 18 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்
JAGANNATH MOHAPATRA

தெய்வநல்லூர் கிராமமே என்றாலும் சற்று பெரிய கிராமம், சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு நடுவாக விளங்கிய கிராமம் என்பதால் ஒரு சிறு நகருக்குரிய அந்தஸ்தை மெதுமெதுவாக உருவாக்கிக் கொண்டு வந்த கிராமமாக இருந்தது. தெய்வநல்லூருக்கு  சிறுநகர் என்ற இடம் உருவாகி வர முக்கியக் காரணம் அதன் அமைவிடம். மிகச் சரியாக தென்காசி-மதுரை நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஊர்.  தென்காசி-மதுரை நெடுஞ்சாலை தெய்வநல்லூரை ஊடறுத்துச் செல்லும் சாலையாக அமைந்திருந்தது. அதாவது மைய நெடுஞ்சாலை தெய்வநல்லூர் ஊருக்குள் அமைந்திருந்தது.  பிற கிராமங்கள் அனைத்துமே மையச்சாலையிலிருந்து பிரிந்து உள்ளே செல்லும் சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தன. நீங்கள் நெடுஞ்சாலைப் பேருந்தில் வந்தால் தெய்வநல்லூர் என்று கேட்டு பயணச்சீட்டு வாங்கலாம். பிற ஊர்கள் எனில் அந்த ஊர் பெயரோடு விலக்கு (அருளாச்சி விலக்கு, ராயகிரி விலக்கு)  என பின்னொட்டு சேர்த்துதான் பயணச்சீட்டு பெற முடியும். மட்டுமன்றி இறங்கி இரண்டு கிலோமீட்டராவது நடந்துதான் அந்தந்த ஊர்களை அடைய முடியும். நேரடியாக ஊரை வந்தடைய முடிந்த இந்த போக்குவரத்து வசதி காரணமாகவே அரசுத் துறை அலுவலகங்கள் (நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி  கூட உண்டு), வேளாண் பொருட்களுக்கான மையச்சந்தை, ஒரே ஒரு திரையரங்கம்  என  பலவும் தெய்வநல்லூரிலேயே அமைந்தன. இந்த வகையிலும் சுற்றியுள்ள கிராமங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு தெய்வநல்லூரில்தான் தாலுகாவின் இரண்டாவது மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டிருந்தது. சிவகிரி தாலுகாவில் இருந்த தெய்வநல்லூர் தனி தாலுக்காவாக அறிவிக்கப்படவேண்டுமென அய்யர் சாரும், காலஞ்சென்ற பாய் சாரும் கடும் முயற்சி எடுத்து வந்தார்கள் என்றால் தெய்வநல்லூரின் சிறப்பை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். 

1950 களிலேயே தெய்வநல்லூர் மேல்நிலைப்பள்ளியைப் பெற்று விட்டது. பெரிய கோவிலான உமையொருபாகன் கோவிலின் வலப்புறமாக வெளிப்பிரகாரத்துக்கும், அதற்கப்பால்  அமைந்திருந்த தெற்கு ரத வீதிக்கும் இடையே நீள வாக்கில் பரந்து இருந்த இடம் பள்ளிக்கு வழங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பஞ்சாயத்து தலைவராகவும், உப தலைவராகவும் இருந்த ராஜகோபாலய்யரும், முத்தையா மூப்பனாரும் (சா கணேசன் என்ற சிவாஜியின் தாத்தா) சேர்ந்து நிலம் மற்றும் தளவாடச் சாமான்களுக்குப் பொறுப்பேற்க, பால்பிள்ளையின் அப்பாவான ஆறுமுக நயினார் பிள்ளை, கட்டுஞ்செவல் ஜமீன் குமரேச இந்திர  பாண்டியனார் கட்டிடங்களுக்குப் பொறுப்பேற்க அரசு ஆசிரியர்களுக்குப் பொறுப்பேற்றது. இவ்வாறாகப் பெறப்பட்ட பள்ளி 1960 களில் முழுமையாக அரசு உதவி பெறும் பள்ளி நிலையிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளியாக மாற்றம் பெற்றது.    

ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் மேல்நிலைப் பள்ளி. பனிரெண்டாம் வகுப்பில் இரண்டே பிரிவுகள். கணிதம்-உயிரியல்-வேதியியல் பிரிவு , வணிகவியல்-கணக்குப் பதிவியல்-பொருளியல் பிரிவு. உயிரியலுக்கு தனி சோதனைக்கூடமும், இயற்பியல்-வேதியியலுக்கு இணைந்த சோதனைக்கூடமும் இருந்தன. இதோடு இணைந்து அன்று வழக்கத்திலிருந்த ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் இருந்தது. 

நாங்கள் நேரு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்துப் பிரிந்த ஆண்டு ஒரு பொற்காலத்தின் முடிவு போல ஆனது. தலைமை ஆசிரியர் செந்தூர்பாண்டி சார், பாலகனி டீச்சர், சங்கரம்மாள் டீச்சர், கணேசன் சார், இஸ்மாயில் சார் ஆகியோரும் அந்த ஆண்டு பணியிட மாற்றம் பெற்றார்கள். அந்த ஆண்டிலிருந்து நேரு பள்ளி நேரடியான அரசுப் பள்ளியாக மாறியதால் இம்மாற்றங்கள் நிகழ்ந்தன. மாற்றல் சான்றிதழ் வாங்க நாங்கள் அனைவரும் ஒன்றாகவே கிளம்பிச் சென்றோம். எல்லோருக்கும் அம்மா, அப்பா என யாராவது ஒருவரும், பிரேமுக்கு மட்டும் அவரது தெருவிலிருக்கும் உறவுக்கார அண்ணன் ஒருவருமாக வந்தார்கள். அனைவரையும் வகுப்பறையில் அமரச் செய்த செந்தூர்பாண்டி சார் எங்கள் அனைவரையும் அரைமணி நேரம் புகழ்ந்து  எங்கள் பெற்றோரை “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கச்” செய்தார். பிற சார்வாள்கள், டீச்சர்களும் பேசினார்கள்.  மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதும் அப்படியே அரைக் கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று கையோடு அங்கு 9 ஆம் வகுப்பில் சேர்த்து விட்டு வருவதுதான் தெய்வநல்லூரில் ஒலகவழக்கமாக இருந்தது. மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் பெரியவர்கள் மும்முரமாக இருந்தபோது நாங்கள் அனைவரும் மரத்தடியில் கூடினோம். நாங்கள் இனி அனுபவிக்கவிருந்த பல துயர்களுக்கான தொடக்கம் இங்குதான் முதலில் உணரப்பட்டது. உப்புக்காரியான பாண்டியம்மாள், ஓட்டக்கை மந்திரமூர்த்தி, ஊதா சுகுமாரி, கு கணேசன், நெட்டை வள்ளிமயில் ஆகியோர் எட்டாம் வகுப்போடு தம் கல்விப்பயணத்தை முடித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர். “ஒம்பதாப்புல சத்துணவு கெடையாதுல்லா, எங்கப்பா அவர் கூடயே வேல செய்ய நிக்கச் சொல்லிருச்சு” குனிந்த தலையுடன் கு கணேசன் சொல்லி எங்கள் பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்தாலும் அவர் கைகள் சட்டையின் கீழ்பகுதியை கண்களுக்குக் கொண்டுபோவதை  அவரது பின்புற அசைவுகள் சொல்லின.  இதே காரணத்தை வேறு மாதிரியாகச் சொன்ன பாண்டியம்மாளும், சுகுமாரியும் மாடு மேய்க்கவும்,   வயல் வேலைக்கும் செல்வதாகச் சொன்னபோது  இருந்த வருத்தத்தை அடுத்த சம்பவம் ஒன்றுமில்லாமல் ஆக்கியது. அனைத்து பெண்களாலும் சூழப்பட்டு சமாதானம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த நெட்டை வள்ளிமயில் நிலை எங்களை துணுக்குறச் செய்தது- இரு வயது கூடுதலாக இருந்தும் ஒன்றாம் வகுப்பில்  பள்ளியில் சேர்க்கப்பட்ட வள்ளிமயில் தற்போது வயதுக்கு வந்துவிட்டதால் ( ச்சீ! அதெல்லாம் ஆம்பளைங்க கேக்கக்கூடாது.  நாங்க சொல்லவும் கூடாது. உங்களுக்கு புரியாது. வேற யார்ட்டயும் போயி கேட்றாதீங்க – மெஜூரா ) அவருக்கு இன்னும் ஆறு மாதங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. “எங்கப்பாக்கு பெரியம்மா மகளுக்கு மகன். ஒண்ணு விட்ட அக்கா மகன்தான்னாலும் அப்பா வாங்குன கடன கட்ட முடியல. வட்டி அசலத் தாண்டுனாலும் கட்ட முடியல. அதான்  அவுகளுக்கே என்னக் கட்டிக்கொடுத்து கணக்கு முடிச்சிக்க சொல்லி கேக்கவும் எங்கப்பா சரின்னுட்டாரு. அடிதடி கேஸுல தென்காசி கோர்ட்ல ஆறுமாசம்னு சொல்லிட்டாக.  அது முடிச்சு வரவும் எங்க கல்யாணம், வேற யாரு அவரக் கட்ட சம்மதிப்பா? அதான் என்னைய…” – உடைந்து அழும் இந்த வள்ளிமயில்தான் ஆண்டுவிழா உடை மாற்று அறை கலவரத்தில் அவர்களை அடித்து காலை உடைக்க சூளுரைத்து உடைந்த மேஜைக்காலை எடுத்தபடி பாய்ந்து சிவாஜியால் தடுக்கப்பட்டவர். புதிய பள்ளிக்கு போகும் ஆர்வம் பெருமளவு வடிந்து விட்டிருந்தது. சிலர் மறுநாள் சென்று சேர்வதாகச் சொல்லிவிட நாங்கள் பத்துக்கும் குறைவானவர்களே மேல்நிலைப்பள்ளிக்கு சென்றோம். 

பெரிய வளைவோடு கூடிய நுழைவாயில். நேர் எதிரே கிணறு. மோட்டார் அறை எனும் பெயரில் வாட்ச்மேன் அறை. நுழைவாயிலின் இரு சிறகிலும் நீண்ட வகுப்பறைக் கட்டிடங்கள். நேரே சாலையை ஒட்டிய ஜன்னல்கள். பின்புறம் கோவில் மதில். நீண்ட செவ்வகமான நீளம் என்பதால் நீளவாக்கில் நீண்ட வகுப்பறைகள். கோவிலை ஒட்டி உள்ளே நுழைய ஒரு பாதை. கிட்டத்தட்ட புதிர்பாதை போல ஆங்காங்கே நிற்கும் வகுப்பறைக் கட்டிடங்கள். நேரு பள்ளி போல மைதானத்தைச் சுற்றிலுமாக அமைந்த வகுப்பறைகள் இங்கு இல்லை. மைதானம் பள்ளிக்கு வெளியே எதிரில் மாடநதிக்குப் போகும் பாதையை ஒட்டி பரந்து கிடந்தது. பள்ளியின் அலுவலக அறை சன்னல் வழியே சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. அறைக்கு வெளியே வரிசையில் நின்று வாங்க வேண்டியிருந்தது. மரத்தடியில் வைத்து விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டன. கிட்டத்தட்ட எல்லா விண்ணப்பங்களையுமே பிரேமின் அண்ணனும், சிவாஜி அப்பாவும்தான் நிரப்பினார்கள். நேரு பள்ளி போல காலியான வகுப்பறைக்குள் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவற்றை நிரப்ப பெஞ்ச் டெஸ்க்கை அனுமதிக்கும் நடைமுறை இல்லை. விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு கொடுக்கப்படுகையில் கொடிக்காசு என்ற பெயரில் இரண்டு ரூபாய் கொடுக்குமாறு சொல்லப்பட்டது. ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய்தான் இருப்பதாகச் சொன்னவர்களிடம் மறுநாள் வந்து மீதியைத் தரவேண்டும் என்ற கண்டிப்புடன் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த திங்களன்று தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும் என்றும் தேர்வு செய்யப்பட்டோர் அடுத்த திங்களுக்குள் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட வேண்டுமென்றும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டது. வரிசையில் எங்களுடன் நின்றிருந்த வெள்ளானைக்கோட்டை சங்கரநயினார் அப்பா  விண்ணப்பத்தை நிரப்ப முடியாமல் விழித்து விண்ணப்பம் வழங்கும் அலுவலரிடமே கேட்டார். தான் இதற்காக சம்பளம் பெறவில்லையென்றும், அரசு ஊழியரான தன்னிடம் அவ்வாறு கேட்டதே கண்டிக்கத்தக்கது எனவும், படிப்பறிவு இல்லாவிட்டால் அதிகாரிகளை மதிக்ல்கும் பண்பாவது இருக்க வேண்டும் எனவும், இன்னும் பலவும் அவரது ஒற்றைக் கேள்விக்கு பதில்களாகச் சொல்லப்பட்டன. அந்த பதில்கள் எவற்றாலும் விண்ணப்பம் நிரப்ப முடியாது என்பதை உணர்ந்த சங்கரநயினார் எனும் நயினாரின் அப்பா திகைத்து நிற்க பிரேம் முன்சென்று அவரை தன் அண்ணனிடம் அழைத்து வந்தார். விண்ணப்பங்கள் தொடர்பான எல்லா ஐயங்களையும் , தகவல்களையும் சிவாஜி அப்பாவும், பிரேமின் அண்ணனும் அங்கிருந்தோருக்கு விளக்கினர். முடித்து வெளியே வந்ததும் எதிரே இருந்த ஒரே கடையில் டீ வாங்கித் தருவதாக சொல்லி பிரேமின் அண்ணனை நயினாரின் அப்பா அழைக்க அவர் அன்புடன் மறுக்க விரைந்து சென்ற நயினார் அப்பா அக்கடையில் நான்கு வாழைப்பழங்களை வாங்கி வந்து மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பிரேமிடம் நயினாரை வகுப்பில் கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.  

அன்று மாலை தலைமையகமான செண்பக விநாயகர் கோவிலில் எங்கள் மகாத்மா அணி கூடியது. அதுதான் தெய்வநல்லூர் வரலாற்றில் மகாத்மா அணியினரின் இறுதிக் கூட்டமாக அமைந்தது என்பது வரலாற்றுக்குத் தெரிந்திருந்தது. எங்களுக்குத் தெரியவில்லை. பிரேம் சற்று படபடப்புடன் இருப்பதாகப் பட்டது. சிவாஜியும், ஈத்தக்குச்சியும் விரைவில் கணக்கெடுப்பு நடத்தியதில் ஊளப்பால் இசக்கி, அமுக்கு டப்பா அருண்ராஜ் ஆகியோர் 9 ஆம் வகுப்புக்கு விண்ணப்பம் வாங்கவில்லை எனத் தெரிந்தது. மறுநாள் பிரேமுடன் சிவாஜியும் நானுமாகப் புறப்பட்டு அமுக்குடப்பா வீட்டிற்குப் போனோம். எங்களை எதிர்பாராத அமுக்குடப்பா தான் விண்ணப்பம் வாங்கி வைத்திருப்பதாகவும் திங்களன்று வந்து சேருவதாகவும் தரையைப் பார்த்தவாறே சொன்னார். ஆனால் உள்ளிருந்து வந்த அவர் அம்மா உண்மையைப் போட்டுடைத்தார். பள்ளிக் கட்டணம் மற்றும் படிப்புச் செலவுகளை அவர்கள் செல்லும் தேவாலயம் பொறுப்பேற்றுக் கொண்டாலும் மதிய உணவு இல்லாத நிலையில் அருண்ராஜ் எனும் அமுக்குடப்பாவால் பள்ளிக்கு வர இயலாது. பிரேம் அமுக்குடப்பாவை ஏறெடுத்தும் பார்க்காமல் அமுக்குடப்பாவின் அம்மாவுடன் பேசினார். பிரேமின் அம்மா அமுக்குடப்பாவின் அம்மாவைப் பார்க்க விரும்புவதாகவும் தங்கள் வீட்டிற்கு நாளையே  அமுக்குடப்பாவின் அம்மா வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அவ்வாறே நிகழ இரு அம்மாக்களும் அரைமணி நேரம் பேசி கால் மணி நேரம் கண்ணீர் சிந்தி முடித்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அருண்ராஜ் பள்ளி செல்வதென்று முடிவானது. பள்ளி நாட்களில் அமுக்கு டப்பாவின் மதிய உணவுக்கான    பொறுப்பை பிரேமின் அம்மா ஏற்றுக்கொண்டார். இந்த பொறுப்பில் நாங்கள் அனைவருமே அவ்வப்போது பங்கு பெற்றோம்- அதாவது பிரேம் பள்ளி வராத நாட்களில் அல்லது எங்கள் வீடுகளில் எப்போதாவது அசைவம் சமைக்கும் நாட்களில் அமுக்குடப்பாவின் மதிய உணவுப் பொறுப்பு எங்களைச் சேர்ந்தது. ஆனாலும் மிகப் பெரும்பாலான நாட்களில் அமுக்குடப்பா பிரேமுடன் தான் மதிய உணவை உண்பார். பத்தாம் வகுப்பு முடித்து பிரேம் சென்றதும் அமுக்குடப்பா தானே சமைத்து பள்ளிக்கு உணவு எடுத்து வந்தார். (ஒங்களுக்கெல்லாம் ஞாபகம் இல்லாமலாடே இருக்கும்,  ரெண்டு வருசம் அவன் வீட்லதான் சாப்டு வளந்தேன். அவனுக்கு என்னவோ அதத்தான் எனக்கும் கொடுத்தாங்க. பிரேமோட பாட்டி ஏண்டா , இவங்களோட கோவிலுக்குப் போறயே, ஞாயித்து கெழமை  சர்ச்சுக்கு ஒழுங்கா போறியா, உண்டானதை விடப்படாதுன்னு சொல்லுவாங்க. புது வருசத்துக்கு எங்க வீட்ல எல்லாருக்கும் ரெண்டு வருஷம் புதுத்துணி எடுத்துக் கொடுத்தாங்க. இன்னைக்கு நான் நல்லாருக்கேன்னா எட்டாப்போட படிப்ப நிறுத்த விடாம மேல படிக்க வச்சதுதான். பிரேமுக்கு திருப்பிச் செய்யணும்னு இல்ல. அவன் நல்லாதான் இருப்பான். ஆனா என்னைய மாதிரி நிக்கற பயலுகளுக்கு செய்யலாம்ல – பழைய குற்றாலம் அருகே சுவாமி சித்பவானந்தர் பெயரில் இருக்கும் ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் ஐவரின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டு எங்களையும் ஆளுக்கு ஒரு குழந்தையின் படிப்புச் செலவையாவது ஏற்றுக்கொள்ள வைத்த அமுக்குடப்பாவின் பேச்சு, 2010 ஆம் ஆண்டின் ஒரு நாளில்).

மேல்நிலைப் பள்ளியின் வகுப்புகள் தொடங்கியபோது ஒன்பதாம் வகுப்பு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மகாத்மா அணியைச் சேர்ந்த 15 பேர் ஒன்பதாம் வகுப்பில் இணைந்திருந்தோம்.  எப்போதுமே ஏ பிரிவு பெண்கள் வகுப்பாகவும், (வகுப்புக்கு நாற்பது பேர் கணக்கில் பெண்கள் எண்ணிக்கை குறைந்தால் ஆண்களில் பொடிப்பயலாக இருப்பவர்களையே பொறுக்கி எடுத்து சேர்ப்பார்கள்), பி, சி பிரிவுகள் முழுக்க ஆண்கள் வகுப்புகளாகவும் இருந்தன. நான், பிரேம், சிவாஜி, தெண்டில் ஆகியோர் பி பிரிவிலும் சேமியா, மு மா, முட்ட ராமர், ஈத்தக்குச்சி முருகன், டொம்ப்ளீ ஆகியோர் சி பிரிவிலும் பிரிக்கப்பட்டோம். சங்கீதா, மெஜூரா, குட்டை வள்ளிமயில், மூக்குறிஞ்சி பொன்னம்மா ஆகியோருடன் யக்கா பாட்ஷா, புல்தடுக்கி பெனியேல் ஏ பிரிவில் இருந்தனர். முதல் ஒரு வாரம் வரை புதுப்பள்ளியின் நடைமுறைகளைத் தெரிந்து கொள்வதில் கழிந்தது. அதன்பின் வந்த நாட்களில் எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதலாவதாக பள்ளியில் நாங்கள் மதிக்கப்படவேயில்லை. பதினொன்றாம், பனிரெண்டாம் வகுப்பு அண்ணன்கள்தான் மதிக்கப்பட்டனர். அவர்களிலும் மூன்று குழுக்கள் இருந்தன. எங்கள் வகுப்புக்கு வந்த இரு குழுக்கள் ஒவ்வொருவரையும் ஊர் பேர் விசாரித்து சில குழுஊக் கூறி சொற்களைப் பயன்படுத்திப் பேசி மாணவர்களை இடம்மாற்றி அமர வைத்துச் சென்றன. அவ்வகுப்புகளைப் போலவே எங்கள் வகுப்புகளிலும் இரு குழுக்களும், இரண்டிலும் சேராத எங்களைப் போன்றவர்கள் மூன்றாவது குழுவாகவும் ஆகிவிட்டோம். இக்குழுக்களுக்குள் உள்ளவர்களில் பக்கத்து ஊர்களிலிருந்து வருவோர் அந்தந்தக் குழுக்களோடு மட்டுமே வந்து செல்ல வேண்டுமென்பது எழுதப்படாத விதியானது. 

இரண்டாவதாக வகுப்பு ஆசிரியர்கள் நேரு பள்ளியைப் போன்று நெருங்கிப் பழகக் கூடியவர்களாக இல்லை. வகுப்பாசிரியராக இருந்த மீசை ராமசாமி சார் ஓரளவு புன்னகைத்துப் பேசினாலும் வகுப்பின் இரு குழுக்களில் ஒரு குழு அவருடன் முறைத்தபடியே இருந்தது. பிரேம் தலைமையில் நாங்கள் சென்று அணி துவக்குவதைப் பற்றி பேசியபோது மீசை சாரை மீறிக்கொண்டு எம் ஏ என் எனப்படும் எம் ஆவுடைநாயகம்  சார் எழுந்தார். சிறு வயதிலேயே அரசியல் பேச ஆசையா எனக் கேட்டு பிரேமை உற்றுபார்த்து இந்த வேலையெல்லாம் இங்கே காட்டக்கூடாது என்றும் உங்கள் காலம் முடிந்து விட்டது என்றும் சொன்னார். மீசை சார் குறுக்கிட்டு எம் ஏ என் சார் இவ்வாறு சிறுவர்களிடம் பேசலாகாது என பணிவாகச் சொன்னதற்கு அவரை இன்னும் கடுமையாகப் பேசினார் ஏ எம் என். ஆசிரியர் அறையில் இருந்த எவரும் ஏ எம் என் னைத் தடுக்கவில்லை  என்பதை விட நமுட்டுச் சிரிப்பில் இருந்தனர் என்பதுதான் எங்களுக்கு அன்று புரியாமலிருந்தது. முடிவில் அதெல்லாம் வேணாம்பா என்ற விரக்தியான சொற்களோடு அணி ஆரம்பிக்கும் யோசனை முளையிலேயே முடித்து வைக்கப்பட்டது. 

மூன்றாவதாக நாங்கள் சந்தித்த அதிர்ச்சி பண்பாடு தொடர்புடையது. வகுப்பில் மிகச் சாதாரணமாக கெட்ட வார்த்தைகள் புழங்கின. கெட்ட வார்த்தைகளை வகுப்பில் பேசுவதை கடுமையாக ஆட்சேபித்த பிரேம் இரு குழுவினரில் ஒருவரால் வசையுடன் மிரட்டப்பட்டும், இன்னொருவரால் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டார். பேரரசரின் அவையில் வந்தமர்ந்த பலவீனமான சிற்றரசனைப் போல ஆகியிருந்தார் பிரேம். ஒரே ஆறுதலாக அமைந்த வகுப்பு தமிழ் வகுப்பு. ராயகிரியிலிருந்து வரும் ஜெயராஜ் சார்தான் தமிழ் எடுத்தார். அவர் வகுப்பில் மட்டும்தான் எல்லோரும் சிரிக்க முடிந்தது. செய்யுள் பகுதி என்றாள் எவர் தனி உற்சாகம் அடைவார். புத்தகத்தில் உள்ள பாடல்களைத் தாண்டியும் அவர் சொல்லிக் கொண்டே போவார். வகுப்பில் 3 முறைகளுக்கு மேல் சந்தேகம் கேட்கக்கூடாது என பிற ஆசிரியர்களால் நிறுத்தப்பட்டிருந்த பிரேமுக்கு ஜெயராஜ் சார் வகுப்பில் எந்தத் தடையுமில்லை. ஆகவே பிரேம் அவரிடம் கெட்ட வார்த்தை பிரச்சினையை கொண்டு சென்றார். நாங்கள் யாருமே எதிர்பாரா வண்ணம் அப்பிரச்சினையை ஜெயராஜ் சார் எளிதாகக் கையாண்டார். அவருடன் பேசியதிலிருந்து பிரேம் புன்னகையுடன் கெட்ட வார்த்தைகளைத் தாண்டிச் சென்றார். “சரி, அப்டி என்ன கெட்ட வார்த்தைடே சொல்லுதானுவ? அட அம்பி, வெக்கப்படாம சொல்லுடே”  எனக்கேட்ட ஜெயராஜ் சார் அவருக்கே உரிய கண் இடுங்கலும், புன்னகையும் கலந்து வர நாங்கள் ஒவ்வொருவரும் சொன்ன கெட்ட வார்த்தை வசவுகளுக்கு அரும்பொருள் சொன்னார்.  

தாயொளி –  பாயுமொளி, உள்ளொளி, அருளொளி ங்க மாதிரியான அம்புட்டு ஒளிக்கும் தாயான தாய் ஒளி நீ தான்னு சொல்லுதாம்டே (பிரேம் கேட்டமைக்கு)

ஒங்கொப்பனவொளி – வெறுவாக் கெட்ட மூதி, வகுப்புல இரட்டுற மொழிதல் அணி சொல்லையில மண்டைய  சொறிஞ்சிட்டிருந்தையோ, ஒண்ணு உங்கப்பன் தேசுல இருந்து வந்த ஒளி தானடே நீ,  ரெண்டு   ஓங்கப்பன் ஒளி உனக்கு இருக்குங்காம். பேரொளியில் பிறந்த ஒளியேன்னு ஒங்கப்பனையும், ஒன்னையும் சேர்த்துல்லாடே பாராட்டிருக்காம். (நயினார் கேட்டமைக்கு) 

ஒக்காளவொளி –   ஓகை ஆள் ஒளி யத்தாம்ல சேர்த்து அப்டி சொல்லுதாம். ஓகைன்னாக்க பெரு மகிழ்ச்சின்னு அர்த்தம். பெரு மகிழ்ச்சியை ஆளும் ஒளியே ங்காம்  ஒன்னப் பாத்து. (சிவாஜி கேட்டமைக்கு)

  இன்னுமிருக்குடே தமிழ்ல. உன் ஆத்தாளை ஒக்க எனக்கு ஆத்தாள் இல்லையேங்கத பாதி மட்டும் சொல்லி வசவுங்க்கீக! சிறுச்சண்ணம் கண்ணனுக்கு ங்கான் சீவிலிபுத்தூரான் ; அதுவே சிறுசு, அத இன்னும் சுருக்கி குஞ்சாமணிக்கு மூணு சுழிய ரெண்டு சுழியாக்கி கெட்ட பேரா ஆக்கி வைச்சி வசவா சொல்லுதீங்க, 

சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா ?(எங்கள் அனைவரையும் பார்த்து) 

மதிய உணவு உண்ணும் நேரம் தவிர பிற நேரங்களில் எங்கள் அணியினரால் சந்தித்துக் கொள்ள இயலவில்லை என்றாலும் வார இறுதி நாட்களில் சந்தித்து பேசுவது தொடர்ந்தது. சங்கீதா, மெஜூரா இருவரையும்  வார இறுதி நாட்களில் பிரேம் வீட்டில் சந்திப்பது மாதம் இருமுறையாவது நடந்து வந்தது. காலாண்டுத் தேர்வுகள் வந்தபோது கிட்டத்தட்ட புதிய பள்ளியின் நடைமுறைகளுக்குப் பழகியிருந்தோம். தேர்வு விடுமுறை முடித்து பள்ளிக்குத் திரும்பியபோதுதான் எங்களுக்குப் புதிதாக கணித ஆசிரியர் வரவிருப்பதாக மீசை சார் சொன்னார். அதுவரை கணிதம் எடுத்து  வந்த கலைவாணி டீச்சர் மாற்றலாகிச் சென்ற இடத்தில் இவர் வருகிறார் என்றார். நேரு பள்ளி போல மாற்றல் வந்தால் மாணவர்களிடம் வந்து சொல்லிவிட்டுச் செல்லும் வழக்கமும் இங்கு இல்லை என்பதால் டீச்சர் மாற்றலான விஷயமே எங்களுக்குத் தெரியவில்லை. புதிய ஆசிரியரின் வரவை நாங்கள் ஆவலோடு   எதிர்பார்த்திருந்தோம். அவர்தான் எங்கள் வாழ்வில், குறிப்பாக, பிரேம் வாழ்வில் கொடுங்கனவாக ஆகப்போகிறவர் என அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அன்று பிரேம்தான் அவர் அவர் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார் என்பதுதான் கொடுநகைமுரண்.

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள் தெய்வநல்லூர் கதைகள் – 19

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?”

    1. பள்ளி எட்டாம் வகுப்பு பள்ளியாக துவக்கப்பட்டு பி யூசி வகுப்பாக மாறி மேல்நிலைப்பள்ளியாக மாறியது. அந்த வரலாறு சொல்லப்படாமல் அந்த வட்டாரத்தின் முதல் மேல்நிலை அந்தஸ்தைப் பெற்ற பள்ளி என்பதே அவ்வாறு சொல்லப்பட்டது. இருப்பினும் தவறாகப் பொருள்படும்படி இருப்பதை மாற்றிக் கொள்கிறேன். நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.