மெட்ரோ மோஹினி

TYEB MEHTA

ரயில் எண் 12658 – பெங்களுர் மெயில், சென்ட்ரல் நடைமேடைக்கு வந்தபோது நேரம் விடியற்காலை 4.27. இரெவெல்லாம் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்ததில் தோள், கண்கள், கழுத்து என உடம்பு முழுவதும் வலி. கீழ் பர்த்தில் காற்று வரவில்லை, நடு பர்த்தில் படுத்திருந்த மரக்கட்டையன் விட்ட குறட்டை, ரயில் என்ஜின் சத்தத்திற்கு சவால் விட்டது. சில சமயம் அவன் மூச்சை நெரித்துவிடலாம் போல இருந்தது.

“சே இன்னிக்கு முழுக்க போச்சுடா..”

மெதுவாக எழுந்து, முதுகை வளைத்து, பின்கழுத்து நடு பர்த்தின் விளிம்பை தொட்டபோது சுளீரென முதுகுத்தண்டு இழுத்தது. கைகளை முட்டியில் வைத்து மெதுவாக எழுந்து நின்று, சரிந்திருந்த பேண்ட்டை இடுப்புக்கு இழுத்துக்கொண்டேன். கண்களில் இன்னும் எல்லாம் இரண்டாகத் தெரிந்தது.

“ஆ………ஆ…..ஆ….பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……அஃக்க்க்…” மரக்கட்டையின் குறட்டை குரல் மேலும் அதிகரித்தது.

“த்த..லாடு…எப்படித்தான் தூக்கம் வருதோ?”.

தரையில் முட்டிபோட்டு தோள்பையை சீட்டின் கீழிருந்து எடுத்து மாட்டிக்கொண்டேன். கம்பார்ட்மென்டிலிருந்து வெளியேறுவதற்கு நீண்ட க்யு இருபக்கமும் நின்றிருந்தது. க்யு மெதுவாக நகரும்போது நடு நடுவில் பெட்டிகளுடன் நுழைந்தார்கள். ஒரு வழியாக கதவைத்திறந்து வெளியில் வந்தால் பாத்ரூமிற்கு ஒரு தனி க்யு, அதில் என் முன் இரண்டு பேர். அப்படியொன்றும் அடக்க முடியா வேதனையில்லை எனக்கு, என்ன முகப்பில் இருக்கும் ரெண்டு ரூபா பாத்ரூமா அல்லது இங்கேயா? இந்த கேள்வியைபற்றி யோசிக்கும் போது அந்த அதிசயம் நடந்தது. பக்கத்து பெட்டியின் பாத்ரூமிலிருந்து ஒரு ஐம்பது வயது பெண் ஒருத்தி வெளியில் வந்தாள். என் முன் நின்ற இருவர் தயங்கினர், நான் தயங்கவில்லை. விரைந்து கொட்டையை பிடித்து, கதவை திறந்தால், உள்ளே வர்ணிக்க முடியாத வன்முறை கோலம். மூக்கை பிடித்துக்கொண்டு வேலையை முடித்து, வெளியேறி நடைமேடைக்கு இறங்கினேன்.

காலை 4.37 க்கே புழுக்கம் அதிகமாக தெரிந்தது. ஒரு ஜோம்பியைப் போல நடக்க ஆரம்பித்தேன். ப்ளட்பார்மில் கொசுவலைக்குள் மனித ஈசல்கள், ரயில் பாத்ரூமிலிருந்த உபரி நீர் நடைமேடையில் வழிந்துகொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் வரிசையாக தூங்கிக்கொண்டிருந்தார்கள். பதினைந்து ரூபாய்க்கு ரயில்வே, காபி என்றழைக்கும் சக்கரைநீரை குடிப்பதற்கு காத்திருந்தார்கள் சில பயணிகள். சென்னை சென்ட்ரலுக்கு புரட்சித் தலைவரின் பெயர் சூட்டியதினால் அதன் நிலைக்கு புரட்சி மாற்றங்கள் எதுவும் காணமுடியவில்லை. முன்னை விட அதிக குப்பைத்தொட்டிகள் முளைத்திருந்தன. பிரதமந்திரியின் சுஜல் ஜீபில் ஜோஜினாவின் கீழ் மலமூத்திரம் மட்டும் பெட்டிக்குள் பிடிக்கப்பட்டு முறைப்படி வயலில் விடப்பட்டது. ஜோம்பி கால்கள் நகர்ந்தது, மேல் அழுத்த காற்று வெளியீட்டை தண்டி, என்ஜின் கர்ஜனையைத் தாண்டி, முன்னே பொது ஹாலின் ஜனக்காட்டை நோக்கி.

புழுக்கத்தையும் பொருட்படுத்தாமல் கம்பிளியில் உறங்கும் கம்பளிப்பூச்சி, தரையில் தூங்கிக்கொண்டு நெளியும் பூரான், இரும்பு நாற்காலியை உடைப்பதெற்கென்றே வளர்த்துக்கொண்ட உடம்புடைய பெண் யானை, மழை கழிந்து இதழ்களில் நீர்த்துளிகள் இருப்பது போல முகம் அலம்பி துடைக்கா முகங்கள், பேண்ட் ஜிப்பை போட மறந்த தாடி-ஞானி, கூட்டடம் கூட்டமாய் ஜர்தா-கருப்பு பற்கள் கொண்ட வடக்கர்கள், தொப்பை தெரிந்தாலும் முகத்தை மூடும் மார்வாரி பெண்கள், மீசை-முண்டாசு-பஞ்சை ஆண்கள், உலகையேத் தோள்களில் சுமந்த இரு துரைமார்கள், நெரிசல், குழப்பம், பெட்டிப்புதர்கள், உணர்ச்சிக்குழம்புகள், கண்களை பிளக்கும் வெளிச்சம், காதுகளை துளைக்கும் விளம்பர அறிவிப்புகள், இவைகளை தாண்டி தூரத்தில் விடியல் வளைவு. ஒரு ஜோம்பிக்கு ரத்தவெறி கிளப்ப வேறு என்ன வேண்டும்? வெளிச்சத்தில் பொசுங்கிப்போனாலும் பரவாயில்லை, வெளியே வந்தால் சரி.

“எங்கே போகணும் சார், டாக்ஸில போய்டலாம், ப்ரீ-பேயிடு ரேட்டு தான். கவுண்டர் இன்னும் திறக்கல…சார்.. சார்…கஹா ஜானா?” அவன் இரண்டே அடி எடுத்தவுடன், “புரைசைவாக்கம்” குழந்தைகளுடன் ஒரு பெண் கேட்டாள், “வாங்க” என்றவரிடம் அந்த பெண் பேரம் பேசவில்லை. வழக்கத்தை விட அதிக ஆட்டோக்கள், பயணிகள்.

முன்னே மெட்ரோ ஸ்டேஷனின் கண்ணாடி கூண்டு. அதுதான் என் இலக்கு.

4.52

மெட்ரோவின் முதல் வண்டி ஐந்து மணிக்குத்தான் கிளம்பும்.
சுரங்க லிஃப்டை அடைந்தபோது ஓரளவுக்கு கண்கள் தெளிந்திருந்தது. பொதுமேடையில் இறங்கியபோது மெட்ரோவில் அதிகம் கூட்டமில்லை. வினோதமாக இருந்தது. ரயிலில் இத்தனை பேர் வெளிவந்தும் இங்கு கூட்டமில்லையா? வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு வித அமைதி. வெளியே தலைதெறிக்க இயங்கும் நகரத்தை இங்கு காணமுடியவில்லை. டிக்கெட் கவுண்ட்டர்கூட க்யு இல்லாமல் காலியாகத்தான் இருந்தது.

“அசோக் பில்லர், ஒன்னு”

“உங்கள் வாட்ஸாப் நம்பரை அழுத்தவும்”

என்னடா கருமம் இது? வாட்ஸாப் இல்லாதவனெல்லாம் என்ன செய்யவான்? இல்ல போன் பேட்டரி கம்மியா இருந்தால்தான் என்ன செய்ய?

“உங்கள் வாட்ஸாப் நம்பரை ஒரு முறை சரிபார்த்து பச்சை பத்தானை அழுத்தவும்”

“வாட்ஸாப் இல்லாதவனெல்லாம் என்ன தண்டவாளத்துல போய் விழுந்து சாகணுமா?”

அப்போதுதான் தலையில் பல்பு எரிந்தது. கடந்த இரண்டு வாரங்களாக காலை நேரங்களில் மெட்ரோவில் மூன்று தற்கொலைகள். போலீசாரால் இறந்தவர்கள் எதற்காக தன்னையே மாய்த்துக்கொண்டனர் எனச் சரியாகக் கூறமுடியவில்லை. இதனால்தானோ அதிகம் கூட்டமில்லை?

“சாவரத்துக்கு வேற இடம் கிடைக்கலையா?”

மெட்ரோ ஊழியர்கள் முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது. கைப்பை சோதனை இயந்திரத்தில் யாருமில்லை. செக்யூரிட்டி சோதனைக்கு ஒருத்தர் தான், அதுவும் கூட மயில் இறகை வருடுவதுபோல லேசாக வளையத்தை காட்டிவிட்டு விட்டுவிட்டார்.

“என்னடா இது? நார்மலா அக்கிள், கொட்டைவரைக்கும் போகும் வளையம் இன்னிக்கு ஏன்….?”

பையை எடுத்துக்கொண்டு படிக்கட்டில் இறங்கத் தொடங்கினேன்.

“பரங்கிமலைக்கு செல்லும் அடுத்த மெட்ரோ இன்னும் ஐந்து நிமிடங்களில் நடைமேடை ஒன்றிலிருந்து புறப்படும்”

படிக்கட்டில் மெதுவாக இறங்கும்போது ஒரு வித உளைச்சல். யாரோ பின்தொடர்வது போன்ற உணர்ச்சி. திடீரென்று ஏசியின் தாக்கம் என்மேல் விழுந்தது, உடம்பில் எலும்புவரை உறைந்தது. தலை சுற்றி, ஒரு கால் தப்பியது. சுதாரித்துக்கொண்டு திரும்பி பார்த்தேன் யாரும் இல்லை. மேலே ஏ சி பைப்புகள் எதுவும் இல்லை. அது என்ன மெல்லிய வாசனை? முதல் பேஸ்மென்ட் இறங்கியதும் பச்சை லைன் ரயில் மேடையில் தயாராக கதவு திறந்து நின்றுகொண்டிருந்தது. நடைமேடையில் ஓர் இரண்டு நபர்கள் தான்.

படிக்கட்டிலிருந்து இறங்கியதுமே முதலில் இருந்த கம்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தேன். ஒற்றை பெண் என்னை பார்த்தாள். உடனே வெளியேறினேன். லேடிஸ் கம்பார்ட்மெண்ட் மட்டுமின்றி, மெயிலின் பாத்ரூமில் சந்தித்த அதே ஐம்பது வயது பெண்.

“வேண்டாம்டா சாமி!”

அடுத்து இருந்த பொது கம்பார்ட்மெண்ட்டில் ஏறி, இரு கம்பார்ட்மெண்ட் இணைப்பின் பக்கத்தில் இருவருக்கு மட்டும் அமைக்கப்பட்ட மேஜையில் உட்கார்ந்து மொபைல் போனில் தலைப்பு செய்திகள் வாசிக்கலாம் என பாக்கெட்டில் இருந்த போனை எடுக்கபோன போதுதான் அவளை முன் இருக்கும் கண்ணாடியில் பிம்பமாக பார்த்தேன்.

“ஏறும்போது கம்பார்ட்மெண்ட் காலியாத்தானே இருந்தது? இல்லையா?”

அதே வரிசையில் கதவுக்கு அப்பால் தொடர்மேஜையில் உட்கார்ந்திருந்தாள். மெல்லிய தோற்றம், அது என்ன வெள்ளைநிறச் சுடிதாரா? வகிடு எடுத்த முன் தலை முடி, அதில் என்ன மல்லிகையா? இருபத்தியிரெண்டு என்பது என் யூகம். பொட்டு வைத்திருந்தாளா? இந்த லேசான வாசனை அவளிடமிருந்தா? டைட்டான சுடிதாரில் மார்பின் மிரட்சி….

“சே..உனக்கு எதுக்குடா இதெல்லாம்?”

நான் பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்ததுபோலும், தலை குனிந்தவாறே தரையை அப்போதுவரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தவள், கண்களை மட்டும் உயர்த்தி என்னை கண்ணாடி மூலம் பார்த்தாள். எங்கள் கண்கள் சந்தித்தன, கதவுகள் மூடின, ரயில் புறப்பட்டது.

“அடுத்த நிறுத்தம் எக்மோர். கதவுகள் இடதுபுறம் திறக்கும்”

என்னையும் அறியாமல் அவள் பிம்பத்தை பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து, சட்டென்று தலை குனிந்து மொபைலை பார்த்தேன். அந்த சில மணித்துணிகளில் அவள் பிம்பம், வடிவம், அந்த கண்கள், சிந்தைக்கு எட்டியிருந்தது. கண்களை இரண்டு மூன்று முறை சிமிட்டியபோது பளிச் என அவள் நிழல் காணமுடிந்தது.

“யாரா இருக்கும்? காலேஜ் பொண்ணு மாதிரி இல்ல, நைட் ஷிஃப்ட் முடிஞ்சிட்டு போறாளா? இல்லையே, அவுங்களுக்கு தனி பஸ் உண்டே? ஆனா என்ன ஃபிகருடா? தனியா வேற போறா? ஒரு வேள…?”

கண்விரித்து சொப்பனத்தில் ஆழ்த்தேன். ரயில் பயணத்தின் வலி முற்றிலும் போய், உடம்பு முழுவதும் விழித்துக்கொண்டிருந்தது. ஒரு மெல்லிய இழை போல சந்தோசம். நினைத்ததுபோல நாள் ஒன்னும் பாழாகவில்லை. சில நிமிடங்கள் கண் சிமிட்டவில்லை. லைட்டான புன்னகை முகத்தில் தோன்றியது.

“அடுத்த நிறுத்தம் நேரு பார்க். கதவுகள் இடதுபு……”

மொபைல் தானாகவே லாக் ஆனது கூட தெரியாமல் அதனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். மெதுவாக முதுகை நிமிர்த்தி வாட்டமாக உட்கார்ந்தேன். இன்னும் அங்கேயேதான் உட்கார்ந்திருக்கிறாளா? மெட்ரோவின் கூரையை பார்ப்பதுபோல கண்ணாடியில் ஒரு சின்ன நோட்டம் விட்டேன். அங்கேயேதான் உட்காந்திருந்தாள். பக்கவாட்டில் ஒரு காலை மட்டும் மடக்கி , இரு கால்களுக்கு மத்தியில் இடைவெளி விட்டு, மிதமாக ஒரு பக்கமாக சாய்ந்து, கைகளை தொடைகளின் மீது வைத்து… முதல் முறையாக முழுத் தோற்றம் தெரிந்தது. உடல் சிலிர்த்தது. மறுபடியும் எங்கள் கண்கள் சந்தித்தன. ஆனால் இந்த முறை விலகவில்லை.

“அடுத்த நிறுத்தம் அண்ணா நகர் ……”

என் கால்கள் நடுவில் ஒரு புடைப்பு, இருதயம் தக் தக் என அடித்தது. கண்கள் மூலம் பேசிக்கொண்டோம்.

“நிழலே இப்படின்னா நிஜத்துல? திரும்பி பார்க்கலாமா? பாத்தா என்ன? அவளும்தானே பாக்கிறா, என்ன ஆக போகுது?”

மெதுவாக கழுத்துத் தானாவே திரும்பியது. அவளும் திரும்பிப் பார்த்தாள். வெண்ணிறச் சுடிதார், மா நிறம், அடர்ந்த கூந்தல், அதில் வாசம் வீசும் மல்லிகைப் பூ. வரைந்ததுபோல நெளிந்த புருவம், மெலிந்த தோள்கள், வாழைத் தண்டு போல கழுத்து, செவிகளில் அது என்ன தங்கத் தோடா?, சுடிதாரைப் புடைக்கும் மார்பகங்கள், அழுக்கு ஆசைகள் என் மனதில்….

“அத்துட நித்தமரு ஷானி……”

மெதுவாக எழுந்தாள், கண்கள் கலையாமல் என் முன்னால் வந்து நின்றாள். என்ன ஒரு அழகு! என் கண்களை மூட முடியவில்லை..

” வா…போகலாம்”

கதவுக்கு முன்னால் கைகோர்த்து நின்றிருந்தோம்.

“ஹுதா…..கி ம….”

உள்ளே ஏறுபவர்கள் மீது மோதிக்கொண்டு வெளியில் வந்தேன். ரயில் கிளம்பிய பிறகு , எதற்கோ மறுபடியும் திரும்பி நின்றுகொண்டேன். சில வினாடிகள் என நினைக்கிறன், அவளுடன் இன்னும் கைசேர்த்துக்கொண்டுதான் இருந்தேன். மல்லிகைப்பூ வாசம் என் சுவாசத்தை நெரித்தது.

“எங்கேயாவது போலாமா?” கைகோர்த்தவாறு அவள் கேட்டதும், கண்கள் விரிந்தது, அடக்கமுடியாத வீரியம் என்னிடம் எழுந்தது. எப்படி மாயமாய் தண்டவாளத்தைத் தாண்டினாள் என யோசிக்க நேரமில்லை…

“வர்றேன்..உன்னோட..”

நடைமேடையில் வந்த ரயில் ப்ரேக் அடிக்கவில்லை. என் உடல் பாகங்கள் கூட கிடைக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.