புருஷ சூக்தத்திற்காக உறுதியாய் நிற்பதைப் பற்றி! –  முதல் பகுதி

மூலம் : கொன்ராட் எல்ஸ்ட்டின்

தமிழாக்கம் : கடலூர் வாசு

முன்னுரை :

இக்கட்டுரை முதலில் ஒரு புத்தக விமரிசனமாக ஆரம்பித்தது. ஆனால், அப்புத்தகத்தில்  தற்காப்பிற்காக எழுதப்பட்ட ஒரு பகுதியை மட்டும் கூர்ந்து நோக்குவதாக  மாறிவிட்டது. வெளிநாட்டவரின் முற்றுகைகள்  எவ்வாறு ஹிந்துக்களின் முழு மனோ  நிலைக்குமான விளைவையும்  முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது என்பது இப்பகுதியில் தெரிய வருகிறது.

அனுராதா தத் அவர்களின்  “ரிடெம்ப்ஷன் “ (எவல்யூட்ஸ் பிரசுரம், கூர்கான்,2017) டாக்காவில் உள்ள சவுதிரி குடும்பத்தைப் பற்றிய நீண்ட கதை என்பதைத் தவிர அது சமீபத்திய இந்திய சமூக வரலாற்றைப் பற்றிய பகுப்பாய்வும் ஆகும். இக்கதையின் கரு, ஒரு நாடகத்தின் உயிர்நாடி போன்ற மிகப்பெரிய சம்பவம். பல நூறாயிர கணக்கான உயிர்களிடையே உணர்ச்சி மிகுந்த பேரிடரை ஏற்படுத்திய சம்பவம் – பிரிவினை. இக்குடும்பம், சரியான தருணத்தில் கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்து இந்த அவலத்தை தவிர்க்கிறது. ஆனால் அமைதிக் காலத்தில் கூட, கரிய கடவுள் காளியின் நகரத்தில் உள்ள மிகுந்த சமய உணர்ச்சியையும்   சமூக நெருடல்களையும் வைத்து  ஒரு பெரும் கதையே எழுதலாம். சவுதிரியின் குழந்தைகள் வாரணாசியிலும்  பிறகு டெல்லியிலும்  குடியேறிய பின்   சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடக்கும் முக்கிய சம்பவங்களில்  பங்கேற்கின்றனர். 

கதை போக்கையும் நிகழ்வுகளையும் இதற்குமேல் சொல்ல விரும்பவில்லை. சவுத்திரி குடும்பத்தின் தலை விதியில் ஆர்வமுள்ள  வாசகர்கள் புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளலாம். புராதனக் கதைகளில் உள்ள பொருத்தமான கருத்துக்களை நவீன சம்பவங்களுடன் இணைப்பதில் புதிய அலையாக எழுந்துள்ள  தொன்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டுள்ள புதினங்களை விட மிகவும் நம்பத்தகுந்ததாக இப்புத்தகம் உள்ளது.எனவே, படிக்க இது ஒரு சிறந்த புத்தகம். நீண்ட கதைகளை விமரிசனம் செய்வது  எனது தனிசிறப்பு அல்ல. இருந்தாலும் அதன் வரலாற்றுப் பின்னணி எனது கூம்பொளி (Searchlight)யின் வெளிச்சத்திற்குள்ளே வந்துள்ளது. எனவே, அதை விமரிசனம் செய்ய அனுமதி வேண்டுகிறேன் . 

இப்புதினத்தின் முன்னுரையிலும் கதையின் பல பகுதிகளிலும், ஏராளமான  குறீப்பிடுகள் தூவப்பட்டுள்ளன. இவை  கதையுடனும்  அக்காலத்திய இந்து சமுதாயத்துடனும்  குறிப்பாக சாதியுடனும் சம்பந்தமுள்ளதாக அமைந்துள்ளது.  உண்மையாகவே, சாமானிய இந்துக்கள்  எதிர்கொள்ளக்கூடிய  விவரங்களின் சிறந்த சுருக்கமாக அமைந்துள்ளது. எனவே, தயவு செய்து இப்புத்தகத்தை படியுங்கள். கீழ்காணும் எனது கருத்துக்களிலும் கவனம் செலுத்துங்கள். இக்கருத்துகள் இப்புத்தகத்தின் ஒரு சில வரிகளை பற்றியது மட்டுமே. ஆனாலும், பலனுள்ளதாகும். 

சாதி அரசியல்:

  சாதியமைப்பில் பொதுவாக இருந்த மனக்கசப்பே  ஹிந்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு பெருமளவில் மாறியதற்கு  காரணம் என்பது கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் எம். என். ராய்  சிந்தனையில் உருவான அதிகாரபூர்வமான எண்ணம். இதற்கு இந்து ஆர்வலர்கள் முன் வைக்கும் சமாதானம் இஸ்லாமிய ஆட்சிதான் சாதி உறவுகளையும் வேற்றுமைகளையும்(முக்கியமாக ஆண்பெண்ணிரிடையே) மேலும் கடினமாக்கியுள்ளது; பழமை விரும்பிகளின் கையும் ம் மற்ற ஹிந்துக்களை விட மேலோங்கியுள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையைத்த்தான்  ரிடெம்ப்ஷன் புத்தகமும் எடுத்துள்ளது.  இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும் முழு உண்மையல்ல. சாதி முகம்மதியர்கள் வருவதற்கு முன்பே இருந்த ஒன்று என்பதை மறுக்க இயலாது. 

அது போலவே, ஆங்கிலேயர்கள் எவ்வாறு சாதியை கையாண்டார்கள் என்பதை பொது அறிக்கைகளிருந்தும், தனியார் எழுதியுள்ள வெளிப்படையான தகவல்களிருந்தும் சேகரித்து கொடுத்துள்ள தத் அவர்களின்  கண்ணோட்டமும் சரியானதே. ஆம்! ஆங்கிலேயர்கள் சாதியுணர்வை மிகைப்படுத்தும் கணக்கீட்டின் மூலம், மக்களிடையே பிளவைஉண்டுபண்ணி வெல்லும் எண்ணத்துடன்தான்  தங்கள் கொள்கைகளை வகுத்துக் கொண்டனர். ஆனால், முன்னரே இருந்ததைத்தானே அவர்கள் கையாண்டனர். 

காலனீயம் சாதியை ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்தபோது, 1000 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாமிய படையெடுப்பு நடந்த சமயத்திலேயே இருந்த ஒன்றுதான். ஆனால் அது அனாதியல்ல. அதையும் ஒப்புக்கொள்கிறோம். சாதிக்கு வரலாறு உள்ளது- பிறப்பு, வளர்ப்பு காலம், தற்போதைய தேய்வு காலம்.  சரி! சாதி  எவ்வாறு தோன்றியது?

பாரசீக மொழிச் சாயம்:(Avestan Colours)

            இதைப் பற்றிய எனது கருத்து,பாரசீக நான்கு சாயங்கள்(Pistras)தான், இந்திய நான்கு வர்ணங்களின் மூலாதாரம்.. பாரசீக பாதிரிகள், இஸ்லாமிய படையெடுப்புக்கு பின் தங்கள் மதம் முற்றிலும் அழிவதுநிச்சயம் என அஞ்சிய காலத்தில் எழுதப்பட்ட ‘டென்கார்ட்’ என்ற புத்தகம் இதை வருணித்துள்ளது. எழுதியது அழியும் என்பதால்  வாய்வழி சம்பிரதாயமாக  கிடைத்ததை தழுவி எழுதப்பட்டுள்ளது.மிகப் பழமையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றங்கள் இல்லாதது எனக் கூற முடியாது. பாரசீக  அகதிகள் இப்புத்தகத்துடன் சிறிது காலத்திற்குள்ளேயே இந்தியாவில்  குடியேறினபோதும், இப்புத்தகம் இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க சாத்தியமில்லை. நாம் பேசும் காலம்  கி.பி.  9ம் நூற்றாண்டு. சாதி விவரங்கள் ஏற்கனவே 2000 வருடங்களாக மஹாபாரதம், புத்தரின் வாழ்க்கை,மேலும்  பல ஆதாரங்களில் அடிக்கடி தலை காட்டிய ஒன்றாகும்.  

மாறாக, ஈரானிய சமூகப் பிரிவு  இந்திய சமூகப் பிரிவை ஒத்துள்ளது. ஈரானியர்கள் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதை ஸ்ரீகாந்த் தலகேரி   திட்டவட்டமாக நிரூபித்துள்ளார். மேலும்  பிரிவென்பது அனைத்து சமூகங்களிலும் இயற்கையாகவே நடப்பதாகும்.  பிரிவிற்கான பொறுப்பை முடிந்த அளவிற்கு நம்மிடமிருந்து வெளியினரிடமோ வெளிநாட்டினரிடமோ தள்ள முயல்வது சகஜம்.ஆனால் , இதற்கு இரானியர்களை தேர்ந்தெடுப்பது  என்பது   நடக்காத கதை.  ஈரானியர்கள் வெளிநாட்டினர் என்பதே சந்தேகத்திற்கிடமானது. ஏனென்றால், அவர்கள் இந்தியாவிலிருந்து குடிபெயந்தவர்கள். வேத குலத்தை சார்ந்த ஐம்பிரிவுகளில்  ஒருவர்; யயாதியின் 5 குழந்தைகளில்   இருவரான  அனு ,புரு  வம்சாவளியில் வந்ததாகக்  கருதப்படுபவர்கள்; பிருகு,சியவனா  போன்ற வேத முனிகளின் எழுக்களில் ஈரானியர்கள் அதிக அளவில் தென்படுகிறார்கள். 

ஹிந்துக்கள் விமரிசகர்களை சமாதானப்படுத்தும் இப்போக்கை கைவிட வேண்டும். அடக்குமுறையில் வல்லுனர்களா கவும , சமீப காலம் வரை  அடிமைத்தனத்தை ஆதரித்த கலாச்சாரத்தை சேர்ந்த கிருத்துவ மதபோதகர்கள்,  ஹிந்துக்களின் சாதி உணர்வையும், மேலும் உடன்கட்டையேறுதல் போல் எங்கெங்கெல்லாம் கை  வைக்க முடியுமோ அவற்றையெல்லாம் பழிக்கின்றனர் என்பது உண்மைதான். ஹிந்துக்கள் எதிர்வினையாக, சாதி கொடுமையானது என்பதை ஒப்புக் கொள்கிறோம். சநாதத்தை அதிலிருந்து மீட்டு விடுவோம் என்றும் உடன்கட்டையேறுதலுக்கு  இஸ்லாமியப் படையெடுப்புதான்  காரணம்  என சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.  இதைக் கேட்டு விமரிசகர்கள் சிரிக்கின்றனர். மேலும் இது எதிர்விளைவைதான்  உண்டுபண்ணும். எதிர்க்கட்சியினர் இவ்வாதத் தந்திரங்களை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகின்றனர். . உதாரணத்திற்கு, ஹிந்து மதம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது, உத்தராயணத்தில் பட்டம் விடுவதால் பறவைகள் மடிகின்றன, தீபாவளி நாளில் வெடி வைப்பதால் காற்று  மாசுபடுகின்றது, ஹோலி பண்டிகையில் தூவும் வண்ணப் பொடிகளில் விஷ  ரசாயனங்கள் கலந்துள்ளன போன்றவையாகும். இப்போக்கு தொடர்ந்தால்,  ஹிந்துக்களுக்கான  ஒரே வழி, தீங்கு விளைவிக்கும் ஹிந்து மதத்தை சுருட்டி வைத்து விட்டு பிற மதங்களுக்கு மாறுவதுதான் என்பது போலுள்ளது. 

மாறாக, ஹிந்துக்கள் தங்களது வரலாற்றின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு தங்களது விமரிசகர்களையும் அவ்வாறே செய்யச் சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால், கிருத்துவ மதபோதகர்களும் முல்லாக்களும் அடிமைத்தனம்,பெண்வர்க்க வெறுப்பு, மூடநம்பிக்கை, விக்கிரக உடைப்பு போன்ற பல சுமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். ஹிந்துக்கள் 2000 வருடங்களாக தொடரும் சாதிக்கொடுமையை சுமப்பதென்பது தவிர்க்க முடியாதது. முதலாவதாக சில உண்மைகள்: நல்லதோ கெட்டதோ சாதி ஹிந்து மதத்துடன் இணைந்த ஒன்று. இந்த உண்மையை எத்தகைய விளக்கத்தினாலும் மாற்ற முடியாது. பிறகுதான் இவ்விணைப்பு ஏன் எதனால் நடந்தது என்பதற்கான பணியை  தொடங்க முடியும். அதன் முடிவில், சாதி தீமையானது என தெரிந்தால் அதை சரிசெய்யும் பொறுப்பையும் நீங்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மதபோதகர்களும் முல்லாக்களும்  உங்களை தொந்தரவு பண்ணுவதை விட்டு அவர்களது வீட்டைமுதலில் ஒழுங்குபடுத்தட்டும். நீங்களும் அதையே செய்யுங்கள். 

என்னை எடுத்துக்கொள்ளுங்கள்.எனது கெல்டிக் ஜெர்மானிய மூதாதையர்கள் நரபலி கொடுத்தவர்கள். எனது வீட்டிற்கருகே ஒரு சிறிய குளம் உள்ளது. அதிலுள்ள மண்ணின் கலவையினால் சடலங்கள் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அம்மண்ணிலிருந்து கடவுளுக்கு பலியாக, அதற்கான சடங்குக் குறிகளுடன் உயிரோடு அக்குளத்தில் மூழ்கடிக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.  அதனால் என்ன? இப்போது அதை நாங்கள் செய்வதை நிறுத்தி விட்டோம். அவ்வாறு செய்வதாக இருந்தால்,ஒழிப்புவாதிகளுடன் நானும் கூட நிற்பேன். ஆனால், அது வரலாற்று உண்மை என்பதை மறுப்பது அறமல்ல. எனவே, உங்களது பாரம்பரியத்தில் சங்கடமாக உள்ள விவரங்களை வெளியேற்றும் முயற்சிகளை நிறுத்துங்கள். ஹிந்து தர்மம் நிலையாகநிற்கவும்  தொடரவும் தகுதி வாய்ந்தது. அதில் படர்ந்துள்ள சில கறைகளை சுலபமாக கழுவ முடியும்.

                               (தொடரும்)  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.