சிறுகதைத் தொகுப்பு – நகர் துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்து படித்த VIII தஸ்தாவேஜ்கள்

சிறுகதைகளைப் பற்றி தமிழில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகப் பேசி வருகிறோம். பொது வாசிப்புப் புழக்கத்தில் சிறுகதைகள் என்பன சுவாரஸ்யமான கதை எனும் அடிப்படை விதியை மட்டுமே நம்பி உள்ளது. அளவில் சிறிய கதை, குறைவான கதாபாத்திரங்கள் உள்ள கதை, அடிப்படை நீதி போதனை செய்யும் கதை, ஒரு அறிவுறையுடன் முடியும் கதை என சிறுகதையின் அடிப்படைகளாக அமைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. இன்று நீதி போதனை, அறிவுரை போன்றவை எல்லாம் சிறுகதையின் இயல்புக்குள் வருபன அல்ல என்பதை ஆரம்ப கட்ட வாசகர்கள் கூட அறிந்துகொண்டு விட்டனர். அதனால் தமிழில் முதல் சிறுகதை எனச் சொல்லப்படும் வ.வே.சு அல்லது பாரதியார் கதைகள் சிறுகதை பரிணாம வளர்ச்சியில் மிக ஆரம்பகாலகட்டத்தை சுட்டி நிற்பவனாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். அவை அன்றைய சமூக நிலையைச் சுட்டி நிற்கும் திசை கற்களாக நின்றுவிட்டன. அன்றிலிருந்து இன்று தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றி வரைந்தால் அது சிறுகச் சிறுக கல்லை உளியால் தட்டி உள்ளிருக்கும் சிலை வெளிவரும் சித்திரமாக அமையும்.
ஒவ்வொரு காலகட்டமும் ஏதோரு விதத்தில் அதன் சாராம்சத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. பாரதியாரின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் அரசர் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் அடைந்த தாவலின் சித்திரத்தை கண்டு கொள்ள முடியும். உலகலாவிய புது சிந்தனைகளை முன்வைத்துப் பேசிய முதல் தமிழரின் படைப்புகள் என்பதையும் உணர முடியும். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எழுதிய வ.வே.சு ஐயர் அவர்கள் காலனிய ஆட்சியால் தொலைந்து போன பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுப் பேசத் தேவையான சிந்தனைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்கினார். இருவரும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை தமிழில் நவீனத்துவமும் பின்நவீன நவ காலனிய யுகமும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கும். இன்று காலனிய யுக சிந்தனையிலிருந்து விடுபட நொண்டியடிக்கும் நிலை நமக்கு வந்திருக்காது என சிந்திக்கத் தோன்றுகிறது.
இன்றைய தமிழ் சிறுகதைகள் சகல தரப்புகளிலிருந்தும் வெளிப்படும் அறமற்ற நிலைப்பாடுகளின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றது. அநீதியும், கீழான விழுமியங்களும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்களின் வாழ்வின் மீது காட்டும் வன்முறையை ஆவணப்படுத்தும் வரலாற்று காலத்தில் நாம் வாழ்கிறோம். யாருடைய பார்வையிலிருந்து நீதி என்பதும், வாழ உரிமை இல்லாததாக நம்பும் மக்கள் விரலைச் சுட்டி பழி காட்டும் எதிரிகளை முன்வைப்பதும் இக்காலகட்டத்தின் வழித்தடங்கள்.
தனி நபர் மைய அணுகுமுறையான நவீனத்துவம் புரட்சிகரமான அறத்தை மறுதலித்தது. இன்றைய சிறுகதை உலகம் அடையாளங்களின் நியாயங்களை அறத்தின் மையமாகப் பார்க்கிறது. தனி நபர் இதற்கு அவசியமில்லை. சமூகமும் அதன் வெளிப்பாடுகளும் மட்டுமே அறத்தை இயக்கும் அச்சாணி. அதன் முக்கியமான இயங்கு நிலை அடையாளங்களை மையப்படுத்துகிறது. சமூக அடையாளங்களைப் பொதுமைப்படுத்துவது வழியாக அது வரலாற்றை நியாயப் படுத்தப் பார்க்கிறது. வரலாற்று நிகழ்வுகளுக்கான நியாயங்களை அது அடையாளங்களின் மைக்ரோ நகர்வுகளில் தேடுகிறது. இதற்குள் சிக்கிக் கொள்வதால் இன்றைய தமிழ் சிறுகதை பின் காலனிய மன நிலையில் இருந்து விடுபட்டதாக நினைத்துக் கொண்டு ஒரு புதுவித காலனிய மன நிலையை உருவாக்குகிறது. எக்காரணங்களால் மரபை நவீனத்துவம் உதாசீனம் செய்ததோ அதற்குச் சமானமான காரணங்களால் பின் காலனித்துவமும் மரபை எதிர்கிறது.
இந்தப் பின்னணியில் பாவெல் சக்தி எழுதிய நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்க்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் கதைத் தொகுப்பை நாம் அணுக வேண்டியிருக்கிறது. 2020 ஆண்டு வெளியான இந்தத் தொகுப்பில் மொத்தம் 8 கதைகள் உள்ளன.
போர்க்களம் போலக் காட்சியளிக்கும் நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் நடக்கும் அவலங்களை காட்சிபடுத்தும் விதமாக இக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பாவெல் சக்தி தொழில்முறையில் நாகர்கோவில் நீதி மன்றத்தில் வழக்கறிஞ்சராகப் பணி புரிகிறார். தினமும் அவர் சந்திக்கும் பல சம்பவங்களையும், நியாயத்துக்காக கோர்ட் வளாகத்துக்குள் குவியும் பல மனிதர்களைப் பற்றியும் ஒவ்வொரு பக்கத்திலும் நம்மால் வாசிக்க முடிகிறது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சமூக அடையாளங்களின் மீதான நம் பார்வை முக்கியம் பெறுவது இக்கதைகளில் குவிகின்ற பெயரிலி மக்களும் அவர்களது இறுதி நம்பிக்கைகளும் இருப்பதினால் தான்.
செங்களம்படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல்தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
குறுந்தொகையில் வரும் ஒரு போர்க்காட்சிப் பாடல் இக்கதைகளுக்கு படிம வெளியைத் தந்திருக்கிறது. அசுரரை அழித்த அம்பில் தோய்ந்த குருதி, யானையின் தந்தத்தில் படிந்த குருதி நீதிமன்றங்க்களின் தூண்களாகவும், காவல் நிலையத்தின் சிவப்பாகவும் மாறி இருக்கின்றன. அரசு அதிகாரம், அலட்சியம் போன்றவை இவற்றின் காரணியாகி மக்களின் இறுதி நம்பிக்கையையும் சிதைக்கும் தஸ்தாவேஜ்களை இந்த நவீன போர்க்களத்தில் பிழைத்த யானைகள் வாசிக்கின்றன. வீரம் எனும் விழுமியத்தைச் சுட்டிக்காட்ட எழுதப்பட்ட போர்க்காட்சி இக்கதைகளில் மேலதிகமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இங்கு போர் புரிந்த யானைகளும் பலியாகின்றன. நியாயம் கிடைக்காத பெயரிலிகளோடு அவர்களும் பலி ஆகின்றன. அவ்வகையில் இக்கதைகளின் படிம வெளி போர், குருதி என வீர மரபின் விழுமியங்கள் தரும் அர்த்தங்களை மேலும் விரிவாக்குகின்றன.
சோபியா: மறத்தலை விடக் கொடியது வேறில்லை – எனும் கதையிலிருந்து இந்த எட்டு தஸ்தாவெஜ்களைத் தொடங்கலாம். கதையாகவோ கதாபாத்திரமாகவோ ஒன்றொரு ஒன்று இக்கதைகளில் தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் சூழ்நிலை மற்றும் அற மீறலுக்கான சரிவுகளில் பல தொடர்புகள் உண்டு. இந்த கதை ஒரு கிரிமினல் வக்கீல் அவர்களின் நினைவேந்தலுக்குச் செல்லும் ஜூனியர்களின் பார்வையிலிருந்து தொடங்குகிறது. மூன்று முக்கியமான ஜூனியர்கள் – ராஜு, வித்யா, ஸ்டீபன். அதில் வித்யா இறந்த போன சீனியரின் மகள். மூவரும் நல்ல நண்பர்கள் என்பதால் அவர்களுக்குள் எந்தவிதமான ஒளிவு இல்லை. ஆனால், அவரவர்களது திறமைக்கு ஏற்ப சீனியர் அவர்களிடம் தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார். அப்பாவுடன் நெருங்கிப் பழகியதால் ராஜூவை அவரைப் பற்றிப் பேச அழைக்கிறாள் வித்யா. முன்னரே தயார் செய்யாவிடடாலும், வித்யா இப்படி ஒரு அழைப்பு தொடுப்பாள் என எதிர்பார்த்து ராஜு பேசத் தடங்குகிறார். ட்ரிபிள் கொலை எனும் பிரபலமான வழக்கை அவரது சீனியரும் அவரும் எப்படி சமாளித்தனர் எனச் சொல்லாத தொடங்குகிறார். ஒரு பெண் தனது அதீத காம ஆசையால் கணவனுடன் உறவு கொள்ளும் போது பலவிதமான பாணிகளை செயல்படுத்தும் படியாக சிடிக்கள் போட்டுப் பார்க்கிறாள்.கணவனை அப்படிப்படட முறை மீறிய செயல்களை செய்யும்படி சொல்கிறாள். அப்படி அவன் செய்யாத போது , ஆண்மை இல்லாதவன் என குற்றம் சாட்டி சண்டை வலுக்கிறது. கணவரின் தரப்பிலிருந்து அவளது நடத்தையும் அவள் கணவர் குடும்பத்த்துடன் நடந்துகொண்ட விதமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அவளது தரப்பில் வாதாடும் எதிரணி இவை அனைத்தும் கணவனின் பலகீனத்தை மறைக்கும் ஒரு நாடகம் என வாதிடுகின்றனர். ஆனால் கிராஸ் கேள்விகள் கிடக்கும்போது அப்பெண்ணுக்கு உண்மையில் காமத்தின் அதீதகங்களில் ஆர்வம் இருப்பதை முதல் பிரமாணமாக எடுத்தது வாதிடுகின்றனர்.
தினமும் இந்த கேஸைப் பார்ப்பதற்க்கு பெரும் கூட்டம் வருகிறது. வக்கீல், ஜட்ஜ் முதற்கொண்டு அங்கிருக்கும் கேண்டீன் வேலையாட்கள் வரை இது பிரபலமான கேஸ். பெண்ணின் தந்தை அவளது பிரதிவாதங்களை கேட்க முடியாது கோர்ட் வளாகத்துக்கு வெளியே காத்திருக்கிறார். எவ்விதமான சங்கோஜமும் இல்லாது அப்பெண் கேள்விகளுக்கு பதில் சொல்கிறாள். அதனால் சீனியரின் கேள்விகள் தனிப்படட வாழ்வு குறித்தவை ஆக பல சமயங்கள் மாறுகின்றன. இதனால் அவள் எவ்விதமான சஞ்சலத்தையும் அடையவில்லை. அவள் கேள்விகளை எதிர்கொண்ட விதமே பெரும் பர பரப்புக்கு உள்ளாகிறது. ராஜு இதைக் குறிப்பிட்டு சமீபத்தில் நடந்த நிர்பயா கேஸுடன் இதை தொடர்பு படுத்திப் பேசுகிறார். சமூகத்தில் பெண் எடுக்கும் நிலைப்பாடுகள் மட்டுமல்லாது அவள் எப்படிப்படட நிலையில் அவற்றை எடுக்கிறாள் என்பதும் தொடர் கேள்விக்கு உள்ளாகிறது. அவள் இக்கேள்விகளை எதிர்கொள்ளும் முறையில் அவளது நடத்தை முடிவு செய்யப்படுகிறது. அவளுக்கு என ஒரு தனிப்பட்ட ஆசைகள், அவை எவ்வளவு தான் இயற்கைக்குப் புறம்பானதாக இருந்தாலும், பிறரைத் துன்புறுத்தாத வரை அவற்றில் தவறு கிடையாது என்பதை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததாக எப்போது இது மாறியது எனும் கேள்வி முன் வைக்கப்படுகிறது. நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்படட சிறுவன் முழுமையான வளர்ச்சி அடையாத பாகங்கள் இருந்ததால், அவனால் இக்காரியம் செய்யப்பட்டிருக்காது எனும் முடிவுக்கு அருண் ஜெயிட்லி போன்ற பிரபலமான வழக்கறிஞ்சர் முன்வைக்கிறார். வன்முறையை மறைக்க எந்த எல்லைக்கும் நம் சிந்தனை தயாராகிவிடும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. இக்கேள்விகளை ராஜு கூட்டத்தின் முன் வைக்கிறார். இப்போதும் கூட பெண்களுக்கு எதிரான வன்முறையை எப்படிப் பார்க்க வேண்டும் எனும் எழுதாத சதித்திட்டம் இருக்கிறது. இதை சொல்லும் போது வெறும் கதையாக இருந்தது, நீதியை அப்பா எப்படி அணுகினார் எனும் பார்வை பெண் வித்யாவுக்கு கிடைக்கிறது. கதையின் முக்கியமான திருப்புமுனை இது. கூடவே கூட்டம் நடந்து முடியும் வரை அப்பெண்ணின் பெயரை யாரும் கேட்கவில்லையே என ராஜு ஆதங்கப்படுவதுடன் கதை முடிகிறது.
ஒரு அடையாளத்தை அழிப்பதை விட அதை வன்முறையாலும் அதிகாரத்தாலும் மறப்பது மிகக் கொடுமையானது. இது பெண்களுக்கு மட்டும் தான் நடக்கிறதா என்றால் இல்லை என உடனடியாக சொல்லிவிட முடியும். வரலாறு நெடுக அடையாளங்கள் அழிக்கப்பட்டு வந்ததற்கான தடையங்கள் பல உள்ளன. அதிகாரத்தை கோருவதற்காக அல்லது அழிப்பதற்காக என குறிப்பிட்ட சட்டகத்துக்குள் அதன் காரணிகளை அடைக்க முடியாது. இந்தக் கதையில் சீனியர் தனது ஆன் எனும் அடையாளத்தை முழுமையாக தனது பெண் வித்யாவுக்குக் காட்டவில்லை. ஒருவிதத்தில் இது அடையாளத்தை மறைப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் நாம் எடுத்டுக கொள்ளலாம்.
அமீரின் நாடக்குறிப்புகள்: கொலைக்களத்து மாலை எனும் சிறுகதை இதன் வேறொரு வடிவைக் காட்டுகிறது. இது ஒரு காதல் கதை, அல்லது சொல்லாமல் போன காதலின் கதை. வெளிப்படையான வன்முறை இல்லாவிட்டாலும் இக்கதையில் மறைமுக அதிகாரம் மதம் வடிவிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டும் டிரைவர் வடிவிலும் வெளிப்படுகிறது. கதையில் ஒரு ஜுனியர் வக்கீல் நடத்தும் ஒரு இழப்பீடு வழக்கு. அதை நடத்தும் வக்கீலும் வழக்கு போடும் பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அப்பெண் காதலித்த அமீர் ஒரு தமிழ் ரசனையுள்ள கவிஞன். அவர்களுக்குள் இருக்கும் அழகான காதல் சொல்லப்படாமலேயே கடத்தப்படுகிறது. நாடக்குறிப்பு எழுதும் பழக்கமுடைய அமீர் சங்ககாலக் கவிஞன் போல காதலில் தோய்ந்து கிடக்கிறான். அவனது வரிகளும் சங்க கால கவிதையைப் போல இருக்கின்றன. அப்பெண்ணுடன் நெருங்கிய நண்பனாகப் பழகினாலும் அமீரால் அவனது காதலைச் சொல்ல முடியவில்லை. அவளுக்கு அவனது காதல் புரிந்தும் மதம் ஒரு தடையாகுமோ என பயந்து அவளும் காதலைப் பகிர அனுமதிக்கவில்லை. ஒரு கோரமான விபத்தில் குடிகாரன் ஒருவனின் தவறால் அமீர் உயிரை இழக்கிறான். அவள் பிழைக்கிறாள். அமீரின் தந்தையுடன் சேர்ந்து நஷ்ட வழக்கு ஒன்று போடுகிறார்கள்.
இக்கதையில் அநீதி பல ரூபங்களில் நடக்கின்றது. குடித்துவிட்டு வண்டி ஒட்டி வந்தவன் தனது தவறை ஒத்துக்கொள்ளாதது ஒரு தவறு என்றால் காவல் துறையிலும் நீதி மன்றத்திலும் பிள்ளையை இழந்தவர்கள் காசில் குறியோடு இருப்பார்கள் எனும் குரூரமான பார்வையை சமூகம் முன்வைப்பது அநீதி மட்டுமல்ல மானுடத் தன்மை அற்ற கொடுஞ் செயல். அமீர் ஆசைப்பட்ட்து போல நஷ்ட ஈடைக் கொண்டு மாணவர்களை படிக்க வைக்கலாம் எனும் அத்தந்தையின் எண்ணத்தின் மீது அத்தனை சந்தேகச் சொற்கள். தவறு செய்த குடிகார மனிதன் மீதான பார்வை சர்வ சாதாரணமாக நியாயப்படுத்தப்படுகிறது. அறமில்லை எனது தெரிந்தும் தவறு செய்தவனுக்கு எவ்வித குற்ற உணர்ச்சசியும் தூண்டாத காவல் துறையும், கோர்ட்டும் வன்முறையின் களமாக மாறிப்போனதில் சந்தேகமென்ன.
விஜயன்: பகை பாவம் அச்சம் பழி என நான்கும் கதை ஒரு கச்சிதமான சிறுகதை எனலாம். குற்றமும் தண்டனையும் நாவலின் குற்ற உணர்வையும் உணர்வு நிலையையும் தொட்டு விடும் படியான சிறப்பாக எழுதப்பட்ட கதை. இரு நண்பர்களுக்கு இடையே நடக்கும் ஒரு துவந்த யுத்தம். முறை மீறிய காதலில் எழும் பகை ஒரு புறம். அதை கொலை மூலம் மட்டுமே நிரந்தர உருவாக்க முடியும் என நினைத்து கணவனின் கொலைக்குத் தூண்டுதல் கொடுக்கும் மனைவி. அதை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் கொலை செய்த்தாக நினைத்த நண்பன் நடந்து வரும்போது உருவாகும் அச்சம். குற்றம் நடப்பதற்கு முன்னரே பாவத்தை கற்பனை செய்து புழுங்கும் நண்பன் கிட்டத்தட்ட அமீரின் தந்தை போல ஒரு கதாபாத்திரம். ஆனால் அவன் கொலை செய்கிறான். செய்த கையேடு நண்பனின் மனைவியிடம் விஷயத்தைச் சொல்லி உடல் உறவு கொள்கிறான். அவள் மனம் நிதானத்துக்கு வந்தவுடன் பயம் பிடித்துக் கொள்கிறது. ஒரு விதத்தில் உடலுறவு மூலம் அவனது பாவ உணர்ச்சி அவளுக்கு கடத்தப்படுகிறது எனலாம். வழுக்கு கூடிய விரையில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அவனது நண்பன் உயிரோடு வந்து அடிபட்ட உடலோடு கெஞ்சசும் போது அச்சத்தில் மண்டையில் அடித்து கொல்கிறான்.
ஒரு விதத்தில் மிக்க கச்சிதமான உளச் சித்தரிப்புகளை மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்ட மிக நல்ல கதை எனலாம். ஓடிடி தளத்தில் திரைக்கதையாக்கம் செய்யத்தக்க நல்ல கதாபாத்திர வார்ப்பு, உளச் சிக்கல்கள், உறவுக்குள் நடக்கும் சிடுக்கான அதிகார மோதல்கள். நன்றாக எழுதப்பட்ட இந்த கதையில் கொலை செய்பவனின் மன ஊசல்கள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட்ட தேவிபாரதி எழுதிய ‘நிழலின் தனிமை’ நாவலை நினைவுக்கு கொண்டு வந்து துல்லியமான சித்தரிப்புகள்.
மிகச் செடுக்கான உள் அடுக்குகள் கொண்ட இத்தொகுப்பில் comic relief என இரு கதைகளையும் எழுதி உள்ளார் பாவெல் சக்தி. பொச்சுக் கிளி : இன்முகம் காணும் அளவு அதில் மிக நன்றான ஒரு பிளாக் ஹுயூமர் வகைக்கதை.
இக்கதைகளின் ஒரு சிறப்பு அம்சம் என எதைச் சொல்ல முடியும்? எனக்கு உடனடியாகத் தோன்றியது – கதை படிக்கும் வாசகர்களை குற்றத்தின் சாத்தியத்திலிருந்து நூலிழையில் தப்பித்தவர்கள் என நம்ப வைக்கும் உணர்வைத் சொல்லலாம். சிறுகதை என்ன என்பதை பல விதங்களில் விவரித்தாலும், பிறருக்கு நடந்ததை தனக்கு நடந்தது போல கதையோடு ஒன்றி, கதாபாத்திரங்களோடு பொருந்திப் பார்க்கும் தன்மையின் கலை எனலாம். கிட்டத்தட்ட யுவன் சந்திரசேகர் சொல்லும் ஏமாற்றும் கலை இந்த இலக்கிய சிறுகதை எனலாம். அதன் பல சாத்தியங்களை உருவாக்கித் தந்துள்ளார் பாவெல் சக்தி. அவர் மேலும் பல கதைகளை எழுத வேண்டும் எனவும் இதுவரை வந்த கதைகள் பெரும்பான்மையினரின் கவனத்துக்குச் செல்ல வேண்டும் என்பதும் நம் ஆசை.
வெளியீடு – எதிர் வெளியீடு
வருடம் – செப்டம்பர் 2021