பாரதியின் இறுதிக்காலம்

This entry is part 17 of 45 in the series நூறு நூல்கள்

கோவில் யானை சொல்லும் கதை

ய. மணிகண்டன் எழுதிய ஆய்வு நூலுக்கு ஓர் அறிமுகம்

புதுச்சேரியிலிருந்து கிளம்பி கடலூரில் நுழைந்து ஆங்கிலேய போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது பாரதியின் இறுதிக்காலம் தொடங்கியது என நூல் ஆசிரியர் தனது ஆய்வு நூலில் பகுக்கிறார். எட்டயபுரம் சமஸ்தானத்தில் ஆசுகவியாகப் பணியாற்றியது முதல் கட்டம், தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு அத்தையுடன் அடுத்த நான்கைந்தாண்டுகள் காசியில் தங்கியது அடுத்தகட்டம் (பாரதியின் சிந்தனையில் இக்காலகட்டம் செலுத்திய ஆதிக்கத்தை “அருந்தவப்பன்றி” நூல் பேசுகிறது), எட்டயபுரம் திரும்பிய பின்னர் ஜமீனில் நிலைகொள்ளாது மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியர் பணியும், பின்னர் சென்னை சென்று சேர்ந்து பத்திரிகை ஆசிரியர் பொறுப்பில் முழுமையடைந்ததும் அடுத்த கட்டம். வீரனாகச் சென்று, ஞானியாக வெளியேறிய புதுச்சேரி வாழ்க்கை நான்காவது கட்டம். புதுவையில் இருப்புக் கொள்ளாது பத்து வருடங்கள் வாழ்ந்தவர், முதல் உலகப்போர் முடிந்தபின்னர் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்துவதாக எழுதிய அந்த நன்கு அறியப்பட்ட கடிதத்துக்குப் பின்னர் அவரது இறுதிக்காலம் தொடங்கியது எனலாம். அக்கடிதமே கவியோகியின் தலைகுனிவு எனக்கூறும் கருத்தியல் வாதங்களால் அல்ல மனவேகத்துக்கு ஒத்துழைக்க மறுத்த உடல்நசிவை முன்னிட்டு எட்டு வைத்ததில் அவரது இறுதிக்காலம் அவரது பிற காலகட்டங்களை விட சோகமயமானது. ஆனால் பாரதி தனது முழுமையை உணர்ந்த சிலரேனும் இருப்பதைக் கண்டுகொள்ள வாய்ப்பு கிட்டியதும் இக்காலகட்டத்திலேயே எனலாம்.

பாரதியைப் பற்றிய கதைகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கிவிட்டன. பாரதியைப் பற்றி வ.ரா (“மகாகவி பாரதியார்”), செல்லம்மாள் பாரதி (“தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம்”), மகள் சகுந்தலா (“என் தந்தை பாரதி”), பெ.தூரன் (“பாரதி தமிழ்”), ரா.அ.பத்மனாபன் (“சித்திரபாரதி”), ரா.கனகலிங்கம் (“என் குருநாதர்”), சீனி.விசுவநாதன் (“மகாகவி பாரதி வரலாறு”) போன்ற பலரும் வாழ்க்கைக் குறிப்பு எழுதியுள்ளனர். இவற்றில் பல நிகழ்வுகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை நூலாசிரியர் மணிகண்டன் கருத்தில் கொண்டு பாரதி வாழ்க்கைக்குறிப்பு பற்றிய குழப்பங்களைக் களைய முற்பட்டுள்ளார். சீனி.விசுவநாதன் பல்லாண்டுகளாகத் தொகுத்த காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் இம்முயற்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன. சீனி.விசுவநாதன் பாரதி வாழ்வியலில் சரிசெய்த குழப்படிகள் போக, நிரப்பப்படாத பல இடைவெளிகள் இருப்பதையே இந்நூல் நமக்குக் காட்டுகிறது.

பாரதியியலில் முக்கியமான ஆக்கமான “காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்” நூல் தொகுப்பின் பன்னிரெண்டாவது நூலில் சீனி.விசுவநாதன் “கோவில் யானை” பற்றி குறிப்பை எழுதி, சுதேசமித்திரன் இதழ்கள் கிடைக்கப்பெறாததால் இழந்த ஆக்கங்களைப் பட்டியலிட்டுள்ளார். எதிர்கால ஆய்வாளர்கள் அவற்றை தேடும் பணியில் ஈடுபடவேண்டும் எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து ய.மணிகண்டன் இந்த ஆய்வில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

பாரதியின் வாழ்வில் நாம் மறக்கமுடியாதது அவருடைய இறப்பு சம்பவித்தவிதம். திருவல்லிக்கேணி கோயில் யானை தள்ளிவிட்டதனால் பலத்த அடிபட்டு இறந்தார் பாரதி என்பதே நாம் அனைவரும் அறிந்தது. மணிகண்டன் இந்த சம்பவத்தைக் கொண்டு பாரதியின் இறுதிக்காலத்தை நுணுகி ஆராய்ந்திருக்கிறார். வ.ரா முதல் செல்லம்மாள் வரை பலரும் இக்கதையின் பலவித வடிவங்களைத் தங்கள் குறிப்புகளில் எழுதியுள்ளனர். அனைவரும் ஒத்துக்கொள்ளும் இடம் பாரதி அடிபட்டு யானையின் காலடியில் விழுந்தபின்னர் ‘எங்கிருந்தோ வந்தான்’ குவளைக்கண்ணன் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார். அதற்குப் பிற்கு சில வாரங்களில் பாரதியாரின் உயிர் பிரிந்தது. பாரதியின் மகள் சகுந்தலா எழுதிய குறிப்பில் அவளது தந்தை யானை சம்பவத்துக்குப் பிறகு மிகவும் பலகீனமாக ஆனார் என்பது.

ஆனால் பாரதியின் இறுதிக்காலம் அத்தனை சுலபத்தில் முடிந்த ஒன்றா? இக்கேள்வியைத் தொடர்ந்த மணிகண்டன், யானை சம்பவத்துக்குப் பின்னரும் பாரதி இலக்கிய விசாரங்களில் நிறைய ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் கண்டடைந்ததோடு மட்டுமல்லாது “கோவில் யானை” எனும் படைப்பையும் தந்துள்ளதாக அறிகிறார். மணிகண்டனின் ஆய்வுப்படி, தனக்கு நடந்த சம்பவத்தைக் கொண்டு கோவில் யானை எனும் நாடகத்தை எழுதிய பாரதி அதை முதலில் 1920களில் சுதேசமித்திரன் இதழில் வெளியிட்டார். சுதேசமித்திரன் அநுபந்தத்தில் குறிப்பாகக் கிடைக்கும் இந்த நாடகம் இன்றுவரை சீனி.விசுவநாதனின் முழுத்தொகுப்பிலும் இல்லை; பாரதி ஆய்வாளர்களுக்கும் இதுவரை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1951ஆம் ஆண்டு கலைமகள் பத்திரிக்கையில் ஸி.சுப்ரமணிய பாரதி எனும் பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகேனும் இது பாரதி ஆய்வாளர்களுக்குக் கிடைத்ததா என்றால் இல்லை என்கிறார் ய.மணிகண்டன். கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்குப் பிறகு கலைமகள் இதழிலிருந்த நாடகம் இவர் கைக்குக் கிட்டியிருக்கிறது.

பாரதியின் கடைசிக்  காலகட்டத்திற்கு மிக முக்கியமான ஆவணமாகத் திகழும் இந்த படைப்பு இதுவரை பாரதி ஆய்வாளர்களுக்குக் கிடைக்காதது ஆச்சர்யமே. மதம் பிடித்த யானையிடம் சிக்கிக்கொண்ட விதம் குறித்தும், அதில் அவருக்கு ஏற்பட்ட துன்பம் பற்றியும் பலரது குறிப்புகளில் நாம் படித்திருந்தாலும் அவை ஒன்றுக்குகொன்று முரணாகவே இதுவரை இருந்துவந்துள்ளன. இப்போது கிடைத்துள்ள கோவில் யானை நாடகத்தில் பாரதி தனது அனுபவத்தை எழுதியதைக் கொண்டு பார்க்கும்போது வ.ரா எழுதிய குறிப்பே உண்மைக்கு நெருங்கியதாகத் தெரிகிறது. மதம் பிடித்த யானை என்றாலும் பாரதி வருவதைக் கவனிக்காது சட்டென நிமிர்ந்ததில் தள்ளிவிடப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. பல பாரதி அபிமானிகளுக்கும் திருவல்லிக்கேணி யானை மீதிருக்கும் கோபம் குறைய இந்த விளக்கம் உதவலாம்.

கோவில் யானை நாடகம் சொல்லும் கதை என்ன?

கோவில் யானை ஒரு எளிய காதல் கதை. நிறைவேறிய அமரக்காதல் கதை. அமரபுரத்தின் அரசன் சூரியகோடி. அவனது மகன் இளவரசன் வஜ்ரி. வஜ்ரி நாட்டின் பெரும் செல்வந்தனாகிய நித்தியராமனின் மகள் வஜ்ரலேகையைக் காதலிக்கிறான். மன்னனோ அங்க தேசத்து இளவரசியை மணந்து கொள்ளுமாறு தனது மகனுக்குச் சொல்கிறர். அங்க தேசத்து அரசன் மகன் சந்திரவர்மன் வஜ்ரியின் தோழன். ஒரு நாள் இரு தோழர்களும் காளி கோவில் யானைக்கு மதம் ஏறியிருப்பது தெரியாது அருகில் செல்ல, யானையால் தள்ளிவிடப்படுகிறான் வஜ்ரி. வெளியேயிருந்த சந்திரவர்மன் கீழே சித்தம் கலங்கி வீழ்ந்த வஜ்ரியை மீட்டுகிறான். அரசன் அவனது காதலைப் புரிந்துகொண்டு வருண வித்தியாசங்களைப் பாராது வஜ்ரியும் வஜ்ரலேகையும் மணக்க சம்மதம் தெரிவிக்கிறார்.

இன்றைக்கு படிக்கும் யாருக்கும் இக்கதை சொல்லும் கருத்து புரட்சிகரமானதாகவோ கதை சொல்லப்பட்ட பாங்கு புதுமையானதாகவோ தோன்றாது. பாரதி எழுதிய அக்காலகட்டத்திலேயே கூட வ.வே.சு ஐயரின் சிறுகதைகள், வங்கக் கவி ரொபீந்திரநாத் தாகூர் எழுதிய கதைகள் போன்றவை இலக்கிய நயத்திலும், சொல் நேர்த்தியிலும், கருத்து ஆழத்திலும் கோவில் யானை கதையை விடப் பலமடங்கு சிறப்பானதாக இருந்தன எனச் சொல்லத் தேவையும் உண்டா? ஆனால், ஒரு வரலாற்று ஆவணமாகவும், பாரதியின் இறுதிகாலத்தைப் பற்றி நமக்குக் கிடைக்கும் புதிர்களில் ஒன்று விலகியது எனும் வகையிலும் இந்த நாடகம் முக்கியமானதுதான்.

யானை சம்பவம் தவிர பாரதியின் இறுதிக்காலம் எப்படிப்பட்டதாக இருந்தது? அவரது கலை வெளிப்பாடு குன்றாத ஊக்கத்தோடு இருந்தது என்பது தான் மணிகண்டனின் ஆய்வில் தெரிகிறது. அரபிந்தர், வ.வே.சு ஐயர் எனப் பல ஞானியர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தாலும் புதுவை வாழ்வு சிறைபோலத்தான் இருந்திருக்கிறது. அங்கிருந்து வெளியேறியதை அவர் விடுதலையாகக் கருதியிருக்கக்கூடும். ஆனால் போதைப பழக்கம் அவரது உடலை உருக்கிவிட்டதாகப் பலரும் தங்கள் குறிப்புகளில் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, வ.உ.சி அவர்கள் தன் நினைவுக்குறிப்பில் கூடவே சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் அவரது தீய பழக்கங்களைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டனரே என வருத்தப்பட்டுள்ளார்.

“என் தந்தை தமது துன்பத்தை போதை வஸ்துக்கள் மூலம் மறக்க முயன்றார் ” (என் தந்தை பாரதி, ப.88)

“குள்ளச்சாமி அங்கேயே எண்ணெய் தேய்த்துக் குளிக்க, இருவரும் பின்னர் அபின் தின்று களி கொண்டனர். பாரதியைச் சிதைத்த இந்தப் பழக்கத்தையும் அதற்குத் துணை நின்ற குள்ளச்சாமியையும் வ.உ.சி வருத்தத்தோடு எண்ணிப் பதிவு செய்திருக்கின்றார் (வ.உ.சியும் பாரதியும், பக். 36,37)”

இத்தனை இருந்தும் கடைசிக் காலத்தில் பாரதி மிகத் தீவிரமாக இலக்கிய விசாரங்களில் பங்கெடுப்பதையும், சொற்பொழிவாற்றுவதையும் செய்திருக்கிறார் எனத் தெரிகிறது. சொல்லப்போனால் அவர் தன் புகழை கொஞ்சமேனும் அனுபவித்தது அந்த சொற்பக்காலத்திலே தான் எனத் தோன்றுகிறது. இறுதிக் காலத்தில் திருவனந்தபுரத்திற்கு உறவினர் திருமணத்திற்காகச் சென்றதும், கடலூருக்கும் திருவண்ணாமலைக்கும் ஈரோட்டிற்குள் சொற்பொழிவாற்றச் சென்றதும், கடலூரில் மேள தாளங்களோடு “பெரிய ஜனக் கூட்டம்” கூடிப் பாரதியை வரவேற்றுக் கொண்டாடியதும் விதந்து குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும் என எழுதியுள்ளார் மணிகண்டன்.

அதே சமயத்தில், 1919ஆம் ஆண்டு அன்னி பெசண்ட் நடத்திய நியூ இந்தியா இதழில் ஏ.வி. சுப்பிரமணிய ஐயர், உலகக் கவிஞர்களோடு பாரதியை இணைத்து எழுதிய நிகழ்வு நேர்ந்தது.

இப்படிப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட “கோவில் யானை” நாடகம் யானை மிதித்து பட்ட உடல்நலக்குறைவையும் பாரதியின் இலக்கிய ஆர்வம் குன்றாது செயல்பட்டதையே காட்டுகிறது. எப்படியாயினும், இந்த ஆய்வுத் தொடர்ச்சி தமிழ் இலக்கிய ஆய்வில் முக்கியமான நிகழ்வு.

*

கோவில் யானை பற்றி கவிஞர் ஞானகூத்தனின் கட்டுரை இங்கே.

*

பதிப்பு ஆண்டு : 2014
பதிப்பாசிரியர் : மணிகண்டன், ய
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : 60.00
பக்கங்கள் : 64
ISBN : 9789382033936

Series Navigation<< கண்ணனை அழைத்தல்குவெம்புவின் படைப்புலகம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.