ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்

This entry is part 39 of 72 in the series நூறு நூல்கள்

அக்னி: மனித குலத்துக்கும் இறை உலகுக்குமான இணைப்பாக செயல்படும் தன்மை. அக்னி சத்தியத்தின் குறியீடும் கூட. அக்னி நீரில் இருப்பதாகக் கூறும் வேத உருவகத்தை எடுத்துக் கொள்ளலாம். மிக எளிமையாக இது சூரியன் உதித்து வரும் காட்சி எனக் கொள்ள முடியும். இரவில் சூரியன் நீரில் வசிப்பதாக எளிய மனம் உருவகப்படுத்துவதன் விளைவாக இருக்கலாம். ஆனால் நீர் என்பது புராதன தொன்ம உருவாக்கத்தில் ஆதி-ஒழுங்கின்மையின் குறியீடு. ஆதி ஒழுங்கின்மைக்குள் இருக்கும் சிருஷ்டி ஆற்றலினை உருவகப்படுத்த தொல்-கவிகள் பயன்படுத்திய ஒரு உருவகமாக அது வளர்கிறது. அக்னி பிறகு அனைத்து படைப்பாக்க செயலுக்குமான குறியீடாக வளர்கிறது.
ஆழி பெரிது!

anee_visit1

முதன் முதலாக எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனை சந்திக்க ஆயத்தமான போது வந்த வழக்கம் இது. இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். ஒருமுறை பிரும்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் முடியையும் காலையும் பார்ப்பதற்கு முயற்சி செய்தபோது அதில் சிவபெருமானின் தலையை பிரும்மா பார்த்து விட்டதாக பிரம்மாவிற்காக பொய் சாட்சி கூறிய தாழம்பூ கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த மாதிரி தாழம்பூ எதுவும் கிடைக்காததால் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன்.

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பாள் ஔவை. பதினைந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட புறத்திரட்டு நூலில் இறைமாட்சி அதிகாரத்துக்கு அடுத்த இடத்தில் கல்வியை வைத்துள்ளனர். ‘விளக்கை விலை கொடுத்துக் கொள்வார்கள். ஆனால், என்ன பொருளைக் கொடுத்தும் இருளைக் கொள்ளமாட்டார்கள்’ என்கிறது பழமொழி நானூறு. ”கல்வி கரை இல, கற்பவர் நாள் சில” என்பது நாலடியார்.
‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்கிறது புறநானூறு.
எட்டுத்திக்கும் வழிகாட்டி கட்டுரையில் நாஞ்சில் நாடன்

எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதிலும் நேரம் செலவிட ஆரம்பித்தவுடன் ‘கற்றது ஒரு விரலின் நகமே உள்ளது; கல்லாதது இந்த புவனம்’ என்று புரியும் தருணம் வந்தது.
அரவிந்தன் நீலகண்டனுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களையும் கருத்துலக மோதல்களையும் ரத்தபீஜன் எனலாம். தன் மாமன்மார்களைக் கொன்றவர்களைப் பழி தீர்த்தே தீருவேன் என்று பெரும் அசுர சேனையுடன் வந்தவன் இரத்த பீஜன். இன்றைய ரத்தபீஜர்கள் தங்கள் சொந்தங்களை கபளீகரம் செய்ய சீனாவில் இருந்து இறக்குமதியான சித்தாந்தங்களோடும், சவுதியில் இருந்து வரும் பணவளத்துடனும் நம்மை நசுக்க ஊடகபலத்துடனும் விளம்பரவுலகின் பீடங்களுடனும் வருகிறார்கள். சப்தமாதர் படை அவனுடன் போரிட்டது. ஆனால், அவனை அவர்களால் வெல்ல முடியவில்லை. காரணம் அவன் பெற்றிருந்த ஒரு விசித்திரமான வரம்.
வரத்தின்படி ரத்தபீஜன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் பூமியில் சிந்தினாலும் அந்த ரத்தத்திலிருந்து ஆயிரம் ரத்தபீஜரர்கள் தோன்றி அவனுக்குத் துணையாகப் போராடுவார்கள்! இந்த ஆயிரக்கணக்கான குட்டி ரத்தபீஜனை வெட்டவெட்ட அவன் உடலிலிருந்து ரத்தம் வழிந்து பூமியில் சொட்ட, சொட்ட, ஆயிரம் ஆயிரமாய் லட்சக்கணக்கில் ரத்தபீஜன்கள் தோன்றி சப்தமாதர் படைகளை துவம்சம் செய்தனர். அப்போது அம்பிகை வெகுண்டு எழுந்து, பராக்கிரம் பொருந்திய அரவிந்தன் நீலகண்டனைத் விதைத்து ‘ஏ அநீ! நீ சென்று அந்த அநீதி ரத்தபீஜனை வெட்டி சாய். அப்போது அவர்கள் இடமிருந்து வெளிப்படும் ஆயிரக்கணக்கான பொய்களையும் புரட்டுகளையும் போலி வார்த்தைகளையும் துளிக்கூட பூமியில் சிந்தாமல் உன் கைகளால் ஏந்தி மூளையாலும் செயலாற்றாலும் சிந்தனைத் திறமையாலும் வாதவலிமையாலும் குடித்து விடு!’ என்று ஆணையிட்டு இருக்கிறார். அரவிந்தனும் பத்து கரம் கொண்டு தேர்ந்தெடுத்த புத்தகங்களின் சாறு பிழிந்து மொழி வலிமையோடு எல்லா ஊடகங்களிலும், அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஒவ்வொரு அசுரனாய் கட்டுடைக்கிறார்.

anee_visit2

அவர் சென்ற வாரம் பாஸ்டன் பக்கம் வந்திருந்தார். ஓட்டுநராக சில மணி நேரம் அவருடன் பயணிக்க முடிந்தது. லட்சோபலட்சம் நூல்கள் குவிந்து இருப்பதில் இருந்து நவரத்தினங்களை கண்டுபிடிப்பதைப் பார்த்து பொறாமைப்பட முடிந்தது. நான் நேம் டிராப்பிங் வித்தகன். ஆனால், அநீ, பெயர்களை மட்டும் சொல்வதில்லை. அந்தந்தப் பெயர்களின் ஆராய்ச்சிகளைச் சொல்கிறார். அவர்களின் போதாமைகளை எவ்வாறு கண்டுணர முடிகிறது என்று விளக்குகிறார். வனூச்சி, ஜே பி எஸ் ஹால்டேன் என்றெல்லாம் பெயர் விழுந்தவுடன் பதின்ம வயதில் ஃபோர்ட்ரான், பாஸ்கல், கோபால், சி++ என்று நிரலி மொழிகளைக் கண்ட அச்சம் எழுந்தது. ‘இதெல்லாம் குறித்து நான் எழுதியிருக்கிறேனே! அதையெல்லாம் நீங்கள் வாசித்ததில்லையா?’ என்றபொழுது ஃபேஸ்புக்கில் வெட்டியாகக் கழித்த நேரங்கள் நிழலாடின.
மிக முக்கியமாக, இந்தப் பெயர்களை இந்தியச் சிந்தனையாளர்களுடன் இணைக்கிறார். மேற்கத்திய தத்துவத்தையும், அயல்நாட்டு புரிதலையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதை ஸ்ரீ அரவிந்தருடனும், அம்பேத்காருடனும், பி.ஸ்ரீ.யுடனும், விவேகானந்தருடனும், காந்தியுடனும், பாரதியுடனும், சித்தர்கள் மரபிலிருந்தும் எவ்வாறு ஒருங்கிணைப்பது, அவர்களின் சிந்தையில் இருந்து எப்படி இதை நோக்குவது என்பதையும் உணர்த்துகிறார். அவருடன் உரையாடியவர்கள் சொன்ன ஆராய்ச்சியாளர்களையும் விவரித்த கருத்தாளர்களையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரைக்கு கொஞ்சம் கனம் கிடைக்கும். அதை விட அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை கர்மசிரத்தையாக வாசித்தால் நம் அறிதல் முறையில் தெளிவு கிடைக்கும்.
நாகர்கோவில்காரர்களின் தமிழை முதல் முதலாகக் கல்லூரியில்தான் கேட்கப் பெற்றேன். அவர்களின் தமிழைக் கேட்டபோது மையை அச்சுத்தாளில் தெறித்தது போல் பரபரப்பு தெரிந்தது. சாலையில் கார்கள் விரைந்து கொண்டிருந்தாலும், எந்தவித அவசரமுமின்றி, தன் பாட்டுக்கு சாலையின் எதிர்ப்பக்கம் செல்லத் துணியும் அணிலைக் கண்டிருப்பீர்கள். அது கொஞ்சம் மெள்ள நடக்கும். இரண்டடி எடுத்துவைத்தபின் பின் வாங்கும். அதன் பின் மீண்டும் நான்கடி தவழும். சாலையைக் கடப்பதற்குள் ஏதோவொரு காரில் அடிபடுவதற்கான சகல விஷயங்களையும் மிக மெதுவாக மேற்கொள்ளும். இதற்கு நாகர்கோவில்காரர்கள் நேர் எதிர். படபடவென்று பாய்வார்கள். வந்த காரியத்தை முடிப்பார்கள். அரவிந்தன் நாகர்கோவில்காரர். இன்க் ஜெட் அச்சுப்பொறி என்பது மைத்தாரையாகக் கொட்டும். இவரின் பேனாவும் கணிவிசைப்பொறியும் சிந்தைகளாகப் பொழிகிறது. மை தெளிப்பு பதிப்பு எத்திரம் எவ்வாறு பல்வேறு நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் மூலமாக அண்டத்தில் உள்ள 64 கோடி வண்ணங்களை உருவாக்குகிறதோ அரவிந்தனும் அவ்வாறே அறிவியலும் வரலாறும் சமூகவியலும் கொண்டு உலகத்தின் அத்தனை விஷயங்களின் வண்ணங்களையும் சுட்டுகிறார். பீடத்தில் இருந்து கொண்டு உரையாடலில் ஈடுபடாமல், இதுதான் என் இறுதி வாக்கு என்று அறைகூவாமல், தன்னோடு பேச அனைவரையும் ஆதுரமாக வரவேற்று தொடர்ச்சியாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தன்னடக்கத்தோடு தன் தரப்பை தெளிவாக சாமனியனுக்கு விளங்க வைத்துக் கொண்டே தடிமனான நூல்களையும் எழுதித் தள்ளுகிறார்.
ஒரு நூலின் தரம் என்பது என்னைப் பொருத்த மட்டிலும் இரண்டு விஷயங்களில் அடங்கி இருக்கிறது. ஒருவர் எத்துணை வெளிப்படையாக எங்கேயிருந்து தன் எழுத்திற்கு ஆதாரங்களும் தன்னுடைய நூலுக்கு மேற்கோள்களும் பெறப்பட்டிருக்கின்றன என்பதை வெளிப்படையாக புத்தகத்திலேயே குறிப்பிடுவது அதில் முதன்மையானது. இந்திய அறிதல்முறைகள் நூலின் இறுதிப் பக்கங்களில் நூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட உசாத்துணை புத்தகங்களையும் அந்தப் புத்தகங்களில் எந்த இடங்கள் தன் கருத்திற்கு வலிமை சேர்க்கின்றன என்பது குறித்தும் துணைப்பட்டியலை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இரண்டாவதாக இப்படி 150+ நூல்களை மேற்கோள்களாகச் சொல்லும் எழுத்துக்களில் ஒரு பேராசிரிய அணுக்கமின்மை வந்துவிடும். அத்துணை ஆராய்ச்சிகளை உட்கொண்டதாலோ அல்லது அந்த மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்காக எழுதுவதாலோ, அவர்களின் எழுத்து உட்புக முடியாததாக வாசித்துப் புரிந்துகொள்ளவியலாத நிலையில் வந்து நிற்கும். இந்தப் பிரச்சினை இல்லாமல், அதே சமயம் வாசகனை விகடன் போல் பேதையும் ஆக்காமல், சரிநிகராக வைத்து தோள் மேல் கைபோட்டு விளக்குகிறார் அரவிந்தன். அவரின் எழுத்து உள்வாங்கியதை திறம்படத் தொகுத்து, இந்தியச் சூழலுக்கு அந்தக் கருத்தாக்கத்தை உணர்ந்து விவரிக்கிறது.
சென்ற வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகளுக்கானப் படங்களின் பரிந்துரைப் பட்டியலைப் பார்ப்போம். பிக் ஷார்ட் என்பது பொருளாதாரக் கொள்கை குறித்தும் நிதியியல் குறித்தும் பேசும் படம். பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் என்பது இரண்டாம் உலக்ப் போரின் எச்சங்களாக விளைந்த பனிப்போர் குறித்தும் யூதர்கள் குறித்தும் அவர்களின் அறம் குறித்தும் பேசும் படம். ப்ரூக்ளின் என்பது வந்தேறிகள் குறித்தும் அயல்நாட்டில் குடிபுகும் ஏழைப் பெண்ணின் நிலை குறித்தும் பேசும் படம். இவற்றில் இருந்து மேட் மாக்ஸ் என்பது முற்றிலும் வித்தியாசப்படுகிறது: அது போர் குறித்தும் அறிபுனை கற்பனை குறித்தும் வருங்கால உலகம் குறித்தும் சிந்திக்கிறது. மார்ஷியன் என்பது முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாக நம்பவியலா விஷயங்களை எளிமையாக விளக்கி செவ்வாய் கிரகப் பயணம் குறித்து புனைகிறது. ரிவெனண்ட் என்பது அமெரிக்காவில் மூதாதையரான பழங்குடி இந்தியர் குறித்தும் அவர்களை மேற்கத்தியர் எவ்வாறு ஆக்கிரமித்தனர் என்பது குறித்தும் நிஜத்தை நாடகமாக்குகிறது. ரூம் என்பது சிறைவைக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இறுதியாக ’ஸ்பாட்லைட்’: கிறித்துவ பாதிரியார்கள் எவ்வாறு சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு ஆக்கினார்கள் என்பதையும் அவ்வாறு கீழ்த்தரமான செய்கையில் ஈடுபட்டாலும் சட்டத்தின் பிடியில் இருந்து எவ்வாறு தப்பிக்க வைக்கப்பட்டார்கள் என்பதையும் இதில் வாடிகன் போப்பாண்டவர் எவ்வாறு நேரடியாக சம்பந்தப்பட்டு குழந்தைகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்பதையும் பாஸ்டன் க்ளோப் நாளிதழில் நிஜத்தில் நடந்த துப்புதுலக்கலைச் சொல்கிறது.
இவற்றுக்கும் அரவிந்தன் நீலகண்டனுக்கும் என்ன சம்பந்தம்?
இத்தனை படங்களையும் ஒரே நூலில் ஒரே ஆசிரியர் எழுதிப் படித்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘ஆழி பெரிது’ அல்லது ‘இந்திய அறிதல்முறைகள்’. ஆயிரம் சிந்தை கொண்டிருந்தாலும் கவனம் சிதறாமல் ஒரு தலைப்பில் ஒரு அத்தியாயத்தில் இந்த மாதிரி முக்கியமான பலதரப்பட்ட விஷயங்களை வெறுமனே மொழிபெயர்த்து வாந்தியெடுக்காமல் தன் புரிதலின் மூலமும் தன்னுடைய சுய அறிதலின் மூலமும் பாரதவாசிகளுக்கு ஏற்ற மாதிரி பக்குவமாக எடுத்து எழுதுகிறார். அது வீடியோ கேமாக இருக்கட்டும்; செயற்கை அறிவை கணினியில் நுழைப்பதாக இருக்கட்டும்; முப்பரிமாண அச்சு இயந்திரமாக இருக்கட்டும்; கொல்லும் ரோபோவாக இருக்கட்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகட்டும்; இராட்சத யந்திரம் கொண்டு கண்காணிப்பு ஆகட்டும் – இதெல்லாம் குறித்து உங்களை யோசிக்க வைக்க உங்கள் எண்ணங்களைக் கிளற ஒருவர் தேவை என்றால் மட்டுமே நீங்கள் அரவிந்தனை வாசிக்க வேண்டும்.
’ஒற்றைப் பரிமாண மனிதன்’ என்னும் நூலில் மார்க்சிய அறிஞர் ஹெர்பர்ட் மார்கூஸா இவ்வாறு எழுதுகிறார்:

நாம் அன்னியப்பட்டு இருக்கிறோம். முழுக்க முழுக்க அடிமைத்தனத்தில் மூழுகியிருக்கிறோம். ஒரு பொருளாக மாறிவிட்டோம். கருவியாக செயல்படுகிறோம். நாம் புத்திசாலியாக இருந்தாலும் ஒன்றையும் உணர்வதில்லை. பேருரைக்கும் செயலாற்றலுக்கும் வித்தியாசம் தெரியாமல் நம் சௌகரியங்களில் திளைத்து மூழ்குகிறோம்.

அதில் ஒற்றைப் பரிமாணத்தில் எல்லாவற்றையும் பார்ப்பதை ப்ளாட்டோவின் வழி வந்த மார்க்ஸின் அடிச்சுவட்டில் பயணித்த மார்குஸ் சாடியிருந்தார். இன்று அரவிந்தன் நீலகண்டன், அதே வழியில் அறிவியலின் தத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். மொழியியலின் தத்துவத்தை நுணுக்கி ஆராய்கிறார். தத்துவ ஆராய்ச்சியின் தன்மையையே திறனாய்வு செய்து தருகிறார். சமூக அறிவியலை கண் திறந்து பார்க்க வழிகாட்டுகிறார். முதலியம் ஆகட்டும்; மார்க்ஸியம் ஆகட்டும்; இந்துத்துவம் ஆகட்டும் – குதிரைக்கண் எல்லாபக்கமும் பார்த்து தறிகெட்டு ஓடும்; அரவிந்தன் நீலகண்டனோ குதிரைக்கண் போல் 360 பாகைகள் பார்வையை சுழலவிட்டாலும் தடுமாறாமல், திரைகளை விலக்குகிறார். கலை, கவிதை, இலக்கியம் என எல்லாவற்றையும் திறந்த மனத்தோடு அணுகக் கோருகிறார். உணர்வதை யோசிக்கவும், யோசித்ததை உரையாடவும், உரையாடியதை செயல்படுத்தவும் அழைக்கிறார். கனவுகளைக் கற்பனையாக்கி, கற்பனைகளுக்கு செயல்பாதை அமைக்க வழியமைக்கச் சொல்கிறார். விளம்பரங்களினால் கட்டமைக்கப்படும் உலகு என்பது ஒன்று. நம் மொழியினாலும் பகுத்தறிவினாலும் கட்டமைக்கப்பட வேண்டிய உலகு மற்றொன்றாக இருக்கிறது. நம் புத்திக்கு உரைப்படுமாறு திறம்பட எடுத்துரைக்க ஆயிரம் அரவிந்தன்கள் தோன்ற வேண்டும்.
மேற்கோளோடு ஆரம்பித்த குறிப்பை மேற்கோளோடு முடிக்கிறேன்:
ஃப்ரான்ஸுவா மோரியாக் (François Mauriac) சொல்கிறார்:

ஆள் அரவமற்ற அனாதரவான அரண்மனைகளைப் போன்று பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். அதன் அரசர்கள் மூளையின் ஒருசில அறைகளை மட்டுமே உபயோகிப்பார். அந்த பெரிய அரசவையின் பல்வேறு பாதைகளையும் இருப்பிடங்களையும் மூடிவைத்து தன் இறக்கைகளை விரிக்க துணியார்.

அரவிந்தன் நீலகண்டன் வல்லாளகண்டர். அவர் மூளை என்பது மாட மாளிகை என்றால் சிந்தை என்னும் அரசவை கொண்டு அதன் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆலாலம் உணர்த்தி உங்களுடைய குச்சில் வீட்டை கூட திறக்கவைப்பார்.

வாழ்க்கைக் குறிப்பு

அரவிந்தன் நீலகண்டன், நாகர்கோயிலைச் சேர்ந்தவர். உளவியலிலும் பொருளியலிலும் பட்டம் பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் களப்பணியாளராக சேவை செய்கிறார். நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர். சமூகவியல், அறிவியல், இந்துமதம், வரலாறு, உளவியல், சூழலியல் ஆகிய பன்முகப்பட்ட துறைகளிலும் ஆழ்ந்த வாசிப்பும், புலமையும் கொண்டவர். அரசியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருவதுடன், அறிவியல், தத்துவம், சூழலியல், வரலாறு, சமூகவியல், திரைப்படம், ஆன்மிகம் சார்ந்து நானூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். நாளைய தலைமுறைக்கான தேவைகளை உணர்ந்து தனது எழுத்துகள் மூலம் ஒரு மௌனமான தனிநபர்ப் போராட்டத்தை இடைவிடாது மேற்கொண்டு வருபவர். ராஜீவ் மல்ஹோத்திராவுடன் இணைந்து இவர் எழுதிய “உடையும் இந்தியா?” உலகளாவிய அரசியல் சித்தாந்தங்களால் இந்தியாவிற்கு நேரிடும் அபாயங்களைக் குறித்த ஆதாரபூர்வமான விவாதத்தை முன்வைத்ததது. மனைவி பான்ஷியா நீலகண்டன். மூன்று குழந்தைகள்.

அநீ.யைக் குறித்து பா ராகவன்

ஆழி பெரிது புத்தக முன்னுரையில் இருந்து:
நாகர்கோயிலில் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மாடியில் ஒரு பெரிய ஹாலின் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். மூச்சடைத்துவிட்டது. தமிழகத்தின் எந்த ஒரு அரசு / தனியார் நூலகத்தில் உள்ள சிறந்த நூல்களின் சேகரத்தைக் காட்டிலும் அரவிந்தனின் நூலகம் சிறப்பானது என்று தயங்காமல் சொல்லுவேன். புராதனமான அறிவியல் பத்திரிகைகளின் தொகுப்புகள், என்சைக்ளோபீடியா வால்யூம்கள், ஹிந்துத்துவ, இஸ்லாமிய, கிறித்தவச் சிந்தனையாளர்களின் புத்தகங்கள், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் [நல்லவேளை, கவிதைத் தொகுப்புகள் கண்ணில் படவில்லை], வேளாண்மை தொடர்பான நூல்கள், மானுடவியல், வரலாறு, விஞ்ஞானம் என்று துறை வாரியாகப் புத்தகங்கள். தன் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதையும் ஒருவர் புத்தகங்கள் வாங்க மட்டுமே செலவிட்டாலொழிய அப்படியொரு நூலகம் அமைப்பது அசாத்தியம்.
ஒரு சார்லஸ் பேபேஜ் காலத்து கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு அத்தைப்பாட்டி பாக்கு இடிப்பது மாதிரி டைப் செய்துகொண்டும் வாசித்துக்கொண்டும் இடையிடையே போன் பேசிக்கொண்டும் இருந்தார்.
அரவிந்தன், இந்தத் தலைமுறையின் மிக முக்கியமானதொரு சிந்தனையாளர். புத்தி விருத்தியில் நாட்டமுள்ளவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய எழுத்தாளர்.

அவர் எழுத்துகளை வாசிக்க:

1. சொல்வனம்
2. தமிழ் பேப்பர்
3. வலைப்பதிவுகள்:

4. தினமணி ஜங்ஷன் :: அறிதலின் எல்லையில்
5. ஜெயமோகன் தளம்
6. திண்ணை
7. ஸ்வராஜ்யா (ஆங்கிலம்)
8. சூத்ர ஜர்னல் (ஆங்கிலம்)
9. தமிழ் ஹிந்து
10. ஹிந்துத்துவ சிறுகதைகள்
11. சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி
12. விவேகானந்தம் 150

aravindhan_neelakandan_nilakandan_aravithan_books

நூல்கள்

  1. கடவுளும் நாற்பது ஹெர்ட்ஸும், அறிவியல் கட்டுரைகள், தமிழினி பதிப்பகம், 2004
  2. The Wonder Fern Azolla, டாக்டர். கமலாசனன் பிள்ளையுடன் இணைந்து எழுதிய கையேடு, தமிழ், ஆங்கிலம், இந்தி, விவேகானந்த கேந்திர வெளியீடு, 2009
  3. ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம், இந்துத்துவ பதிப்பகம் 2010
  4. நம்பக்கூடாத கடவுள், கட்டுரைத் தொகுப்பு, கிழக்குப் பதிப்பகம், 2010
  5. சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம், ஜடாயு, பனித்துளி ஆகியோருடன் இணைந்து எழுதியது, இந்துத்துவ பதிப்பகம், 2010
  6. உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அன்னியத் தலையீடுகளும், ராஜீவ் மல்ஹோத்ராவுடன் இணைந்து எழுதியது., கிழக்குப் பதிப்பகம், 2011 (Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines by Rajiv Malhotra, Aravindan Neelakandan):

    இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர்.

  7. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம், கிழக்கு பதிப்பகம், 2012
  8. ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா), மதி நிலையம், 2014
  9. நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர், கிழக்கு பதிப்பகம், 2014
  10. கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம், மதி நிலையம், 2014
  11. இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள; சாந்தினிதேவி ராமசாமியுடன் இணைந்து எழுதியது., கிழக்கு பதிப்பகம், 2016 – ரா.கிரிதரனின் அறிமுகம்
Series Navigation<< அறுபடலின் துயரம் – பூக்குழிதீப்பொறியின் கனவு >>

2 Replies to “ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்”

  1. அறிவார்ந்த அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு ஒரு அற்புதமான அறிமுகம். ஆழமும் விரிவும் கொண்ட அரவிந்தன் அவர்களின் எழுத்துக்களை மிகச்சிறப்பாக அறிமுகம் செய்திருக்கின்றார் கட்டுரையாளர் பாஸ்டன் பாலா.
    அரவிந்தனது சிந்தனைகளை எதிர்க்கின்றவர்களை ரக்தபீஜன் என்பது கொஞ்சம் அதிகமாகத்தான் படுகின்றது. அவர்கள் ஐரோப்பிய மையவாதி அசுரர்கள் என்பது உண்மை. அவர்களுக்கு பாரத அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதால் வளர்ந்தவர்கள் என்பதால்அவர்கள் பீஜம் வலுவாகவில்லை. நீரூற்றாமல் இருந்தால் வாடிவிடும் விஷக்கொடிகள் அவர்கள்.

  2. அரவிந்தன் நீலகண்டன்பற்றி அங்கும் இங்குமாகக் கொஞ்சம் பார்த்தது, கேள்விப்பட்டது எனக் காலத்தைக் கழித்துவந்தேன். என் போன்ற சோம்பேறிகளுக்கு, உங்களது கட்டுரை அநீ-யை விஸ்தாரமாக அறிமுகம் செய்துள்ளது. ஒரு அபூர்வமான சிந்தனையாளர், எழுத்தாளர் நம்மிடையே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவே இத்தனை காலம் பிடித்திருக்கிறது எனக்கு.
    ஜனவரியில் சென்னை செல்ல நேர்ந்தால் புத்தகக்கண்காட்சியில் அநீ-யின் புத்தகத்தை வாங்க முயல்வேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இதர நூல்களும் வழிகாட்டும். பொதுவாகவே, புத்தகங்களை விரட்டிப் படிப்பவன் அல்ல நான். நிதானமாக, செலக்டிவாக, கொஞ்சமாகப் படிப்பவன். எல்லோரும் காரில் பாய்ந்துகொண்டிருக்கையில், ஓரத்தில் நடந்துபோய்க்கொண்டிருக்கும் நாடோடி நான்!

Leave a Reply to கனகராஜ் ஈஸ்வரன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.