kamagra paypal


முகப்பு » அறிவியல், ஆளுமை

தேம்ஸில் தொடங்கி வோல்காவிலிருந்து கங்கை வரை

1975 என்பதை பலரும் இந்திரா காந்தி அரசால் ’அவசரநிலை’ பிரகடனம் கொண்டு வரப்பட்ட நிகழ்வுடனேயேத் தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள். அந்த வருடத்தில் மற்றொரு நிகழ்வொன்றும் நடந்தது. ராய்ஸ் அகமது கல்வியியலாளர். இயற்பியலாளரும் கூட.  புஷ்பா பார்கவா இந்தியாவின் தலை சிறந்த மூலக்கூறு உயிரியியலாளர்.  அன்று கல்வி அமைச்சராக இருந்தவர் பேரா.நூருல் ஹசன்.  அகமது-பார்கவா ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தனர். அறிவியலின் செயல்முறை என்ன என்பதை மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு கலை கண்காட்சியை உருவாக்குவதுதான் அது. ‘அறிவியல் செயல்முறை கண்காட்சி’ (Method of Science Exhibition MOSE) என நாமகரணம் சூட்டப்பட்டு அந்த கண்காட்சி உருவாக்கப்படலாயிற்று. சிறந்த கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது அந்த கண்காட்சி. அந்த கண்காட்சி இறுதியில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் மேற்கோளுடன் முடிவடைகிறது:

“அறிவியல் பூர்வமான சிந்தனை நம் வாழ்க்கையை இருளடையச் செய்யும் மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.”

இந்த கண்காட்சியில் வைக்கப்பட்ட காட்சிப்பாடுகள் [panels] சில விஷயங்களை நமக்குச் சொல்கின்றன.  இக்கண்காட்சியில் ‘அறிவியல் செயல்முறையின் வரலாற்றில் 21 முக்கிய மைல்கற்கள்’ என 21 காட்சிப்பாடுகள் வைக்கப்பட்டிருந்தன. முக்கியமான ஒரு முன்னறிவிப்பு இருந்தது. “இவை அறிவியலின் வரலாற்றின் மைல்கற்கள் அல்ல. அறிவியல் செயல்முறையின் வரலாற்றின் மைல்கற்கள்.” இவற்றில் டார்வின் குறித்தும் காரல் மார்க்ஸ் குறித்தும் வைக்கப்பட்டிருந்த காட்சிப்பாடுகள் அவற்றின் வித்தியாசங்களுக்காகவே கவனிக்கப்பட வேண்டியவை.

panel_Marx

மார்க்ஸின் முகமும் அவருடைய நூலான ‘டாஸ் காபிடல்’ முகப்பும் காட்டப்பட்டிருந்தன. ‘சமூக அரசியல் பொருளாதார பிரச்சனைகளுக்கு அறிவியல் செயல்பாட்டை முதன் முதலில் பயன்படுத்தி ஒருங்கிணைந்த ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது’ மார்க்ஸின் சாதனை என அது கூறியது.  டார்வின் குறித்த காட்சிப்பாட்டில் டார்வினின் முகம் கூட இல்லை. ஏன் அவரது புகழ் பெற்ற ‘உயிரினங்களின் தோற்றம்’ நூலின் முகப்பும் இல்லை. பரிணாமம் ஒரு கோட்பாடாகவும் தத்துவமாகவும் ஊகமாகவும் டார்வினுக்கு முன்பே இருந்தது. ஆனால் டார்வின் தான் பரிணாமம் இயங்கும் விதத்தை அறிவியல் பூர்வமாக அறிந்தார். கூர்ந்த அவதானிப்புகள் மூலமாக அவர் அதை கண்டடைந்தார். பரிணாமத்தின் அந்த இயக்க முறை ‘இயற்கைத் தேர்வு’. அறிவியலின் வரலாற்றில் மட்டுமல்ல அறிவியல் வழிமுறைகளின் வரலாற்றிலும் அது ஒரு மைல்கல். ஆனால் அந்த வார்த்தை கூட இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படவில்லை.  இதைப் போலவே லெனினுக்கும் புகழாரம் சூட்டும் காட்சிப்பாடொன்று அறிவியல் செயல்முறையின் வரலாற்றின் 21 மைல்கல்களில் ஒன்றாகக் காட்டப்படுகிறது.

panel_Darwin

இவை எல்லாவற்றையும் விட அதிர்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால் இயற்பியலாளர் ஜான் டெஸ்மாண்ட் பெர்னல் (John Desmond Bernal, 1901-1971) இந்த 21 மைல்கற்களில் ஒருவராகக் காட்டப்படுகிறார். பெர்னல் ஒரு அருமையான இயற்பியலாளர் சந்தேகமில்லை.  ஆனால் இங்கே அவர் எவ்விதத்தில் முக்கியமானவராகிறார் என்றால் ’சமூகத்துக்கும் அறிவியலுக்குமான நெருக்கமான உறவை முதன் முதலில் கூறியவர் என்பதால்’ என கண்காட்சியை உருவாக்கியவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு பின்னால் இருக்கும் வரலாறு கொஞ்சம் சங்கடமான ஒன்று. சோவியத் யூனியன் உருவான போது இங்கிலாந்தின் அறிவு ஜீவிகளிடையே ஒரு பெரும் சோஷலிச எதிர்பார்ப்பு இருந்தது. புகழ் பெற்ற உயிரியலாளரும் பல்துறை மேதையுமான ஜேபிஎஸ் ஹால்டேன் மார்க்ஸிசமே அறிவியலின் முன்னேற்றத்தை சமுதாய நலனுக்கு இட்டுச்செல்லும் உந்து சக்தி என எழுதினார். இங்கிலாந்தின் மிகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களுமான ஜூலியன் ஹக்ஸ்லி, பெர்னல் ஹால்டேன் ஆகியோர் சோவியத் யூனியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ‘புது உலகம் கண்டேன்’ என அவர்களுக்குக் காட்டப்பட்ட சோஷலிச சுவர்க்கத்தைக் குறித்து மேற்கத்திய நாடுகளில் பரப்புரை செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் விரைவில் அறிவியலாளர்களுக்கு பெரும் அடி காத்திருந்தது. சோவியத் யூனியனில் அறிவியல் கல்வியும் ஆராய்ச்சியும் பெரும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது. குறிப்பாக மரபணுவியலாளர்கள் வேட்டையாடப்பட்டனர். மரபணுவியல் ஒரு பூர்ஷ்வா அறிவியல் சதி என அறிவிக்கப்பட்டது. லைசன்கோ என்பவரை வைத்து நியோ லமார்க்கியன் மரபணுவியலே சரியானதென்றும் மெண்டல் உருவாக்கிய மரபணுவியல் பூர்ஷ்வா போலி என்றும் கூறப்பட்டது. ஜூலியன் ஹக்ஸ்லி உயிரியலில் ஆழ்ந்த அறிவுடையவர். ஹால்டேன் தீவிரமான மார்க்சியவாதி ஆனால் மரபணுவியலிலும் உயிரியியலிலும் உயர் கணிதத்திலும் தேர்ந்தவர். டார்வினிய பரிணாமத்தையும் மெண்டலின் மரபணுவியலையும் இணைத்து பரிணாம அறிவியலை புத்தாக்கம் செய்த சிற்பிகளில் ஒருவர். இந்த சூழலில் ஹக்ஸ்லி, ஹால்டேன் போன்ற அறிவியலளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். தம் சித்தாந்த நம்பிக்கைகளைவிட அறிவியல் உண்மை முக்கியமானது. ஆனால் இதில் பெர்னல் வித்தியாசமானவராக இருந்தார். அவர் அறிவியலுக்கு எதிராக சோவியத் யூனியனில் நிகழும் சித்தாந்த கொடுஞ் செயல்களை ஆதரித்தார். மேற்கில் இருப்பது முதலாளித்துவ பூர்ஷ்வா அறிவியல் என்றும் சோவியத் யூனியனில் உதயமாவது சோஷலிஸ அறிவியல் என்றும் கூறினார்.

panel_Bernel

நம் கண்காட்சியாளர்கள் பெர்னலை அறிவியலின் செயல்பாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக முன்வைத்தது ஏன் தவறானது என்பது புரிந்திருக்கும். மாறாக ஹால்டேனை விருப்பு வெறுப்புகள் அற்ற அறிவியல் செயல்பாட்டுக்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டாக முன்வைத்திருக்கலாம். ஏனோ அவர்கள் அதை செய்யவில்லை. ஹால்டேன் ஒரு கட்டத்தில் இங்கிலாந்தை விட்டு இந்தியாவுக்கு வந்தார்.

ஹால்டேனின் பங்களிப்பு அறிவியலின் செயல்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல். காரணம் என்ன என்று பார்ப்போம்.

பரிணாமம் உயிரினங்கள் ஒரு பொது மூதாதையிலிருந்து மாற்றங்களுடன் கிளைப்பதைக் கூறுகிறது. மெண்டலின் மரபணுவியலோ ஏன் உயிரினங்கள் (species) தமக்குள் உறவு கொள்ள முடியாது என்பதையும் ஏன் சந்ததிகள் ஒன்று போல இருக்கின்றன என்பதையும் கூறுகிறது. இவை இரண்டுக்கும் மேலோட்டமாக பார்த்தால் ஒரு ஒவ்வாமை உள்ளது. டார்வின் சொன்னது வேத வாக்கு சத்தியம் என சொல்லி மெண்டலிய மரபணுவியலை ஒழித்துக் கட்ட பரிணாம அறிவியலாளர்கள் முயற்சிகள் செய்யவில்லை. மாறாக ஒரு திறந்தத் தன்மையுடன் அவர்கள் அதை அணுகினார்கள். விரைவில் அவர்கள் இவை இரண்டையும் இணைக்கும் சமன்பாடுகளை உருவாக்கினார்கள். இன்று இது நியோ-டார்வினிசம் என அறியப்படுகிறது. இதனை உருவாக்கிய பிதாமகன்கள் ஆர்.ஏ.ஃபிஷரும் (R.A. Fisher)  எஸ்.ஜி.வ்ரைட்டும் ஹால்டேனும் (S G. Wright) ஆவர்.

அறிவியலின் திறந்தத் தன்மை (openness) அது உயிருடன் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஒரு சித்தாந்தம் இந்த திறந்தத் தன்மையை இழக்கும் போது அது அந்த அளவுக்குக் குறுகிய மூடிய நம்பிக்கையாக உறைந்துவிடுகிறது. எனவே டார்வினிய உயிரியலாளர்களும் ஹால்டேனும் புதிய அறிவியலாக உதயமான மெண்டலிய மரபணுவியலை எதிர்கொண்ட விதத்தை கண்காட்சியாளர்கள் அறிவியலின் செயல்பாட்டு மைல்கற்களில் ஒன்றாகக் காட்டியிருக்கலாம். இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு அது அவசியமானதும் கூட.

ஹால்டேனும் சமூக அறிவியலும்

vbk-04-HALDANE_2232294g

ஹால்டேன்

ஹால்டேனுக்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கிறது. விடுதலை அடைந்த இந்தியாவில் அறிவியல் அமைப்புகள் உருவான விதத்தைக் கூர்ந்து கவனித்தவர் ஹால்டேன். அதில் அவர் கண்ட சில விரும்பத்தகாத போக்குகளைக் கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை. ’இந்திய அறிவியலை சுகவீனமாக்குவது எது?’ எனும் தலைப்பில் அவர் ஆற்றிய உரையில் அவர் ஒரு புதிய சாதி அமைப்பு உருவாகுவதாகக் குறிப்பிட்டார். அதை பழைய சாதி அமைப்புடன் ஒப்பிட்டார். பழைய சாதி அமைப்பில் பல சீர்கேடுகளும் எதிர்க்கப்பட வேண்டிய அநியாயங்களும் உள்ளன எனக் கூறிய ஹால்டேன் ஆனால் அங்கு அறிவு அதிகாரத்தையும் செல்வத்தையும் காட்டிலும் உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் இன்று பல்கலைக்கழகங்களில் காணப்படும் புதிய சாதி அமைப்பு பல்கலைக்கழக அதிகாரிகளாலும் அரசு  அதிகாரிகளாலும் உருவாக்கப்படுவது. இதுவும் பழைய சாதி அமைப்பைப் போலவே இந்தியாவை செயலின்மைக்கு இட்டுச்செல்லும் என்றும் அதற்கு முன்னால் இந்த தீய விளைவைத் தடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இத்தனைக்கும் அவரது இளம் மார்க்சிய காலகட்டத்தில் அவருக்கு இந்திய சாதி அமைப்பு என்பதே தற்பெருமை-தம்பட்டம் ஆகியவற்றினை மகிமைப்படுத்தவென்றே உலகில் உருவாக்கப்பட்ட அமைப்பு என்று கருதியவர். இந்தியாவின் சமுதாய அமைப்பையும் அதைக் குறித்த அறிதல் முறையையும் குறித்த அவரது கருத்துகள் மாறின என்றுதான் சொல்ல வேண்டும்.  இந்தியாவின் முற்போக்காளர்களிடம் அவர் பழகியிருந்தார். நேருவின் ஐந்தாண்டு திட்டங்கள் வெல்ல வேண்டுமென அவர் நினைத்தார். சோஷலிச சமுதாயத்தை ஜனநாயக முறையில் அடைய முடியுமென அவர் நம்பினார்.  

Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issue1956 இல் அவர் ஹக்ஸ்லி நினைவு பேருரையாற்ற அழைக்கப்பட்டார். மானுட பண்பாட்டுக் கூறுகள் குறித்த பேருரை அது.  இங்கு அவர் ஐரோப்பிய அமெரிக்க முறைகளுக்குப் பதிலாக ‘இந்து வகைப்படுத்துதலை’ பயன்படுத்தப் போவதாகக் கூறினார். இதற்கு அவர் கூறிய காரணம் அது ஒரு காலனிய அறிதல் முறை என்பதுதான்.  ’ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் வலிமையால் தம் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட பண்பாடுகளை தம் பார்வையிலிருந்து நோக்கி உருவாக்கிய’ அறிதல் புலம் அது. அவர் இந்த பார்வைகள் அனைத்துமே குறுகிய காலகட்டங்களில் மட்டுமே இயங்கியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார். ”காலனிய மானுடவியல் முறை என்பது உருவாகி நானூறு ஆண்டுகளே ஆகியுள்ளது. அதற்கு மேல் அது வாழ முடியவில்லை. சோவியத் மானுடவியல் முறையோ உருவாகி  நாற்பதாண்டுகளே ஆகியுள்ளது.  அது எத்தனை ஆண்டுகள் இன்னும் தாக்குப்பிடிக்குமென்பது தெரியாது.” என்று சொல்லும் ஹால்டேன் மார்க்சிய மானுடவியலில் காலனியக் கூறுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்திய மானுடவியல் இவற்றுக்கு மாறாக குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகள் உயிருடன் இருக்கிறது என்பதைக் கூறிய ஹால்டேன், ஆனால் சாதி அடிப்படையிலான இந்திய மானுடவியல் இப்போது ஒரு முடிவுக்கு வருகிறது என கூறினார். எனவே இவ்வளவு பழமையான பண்பாட்டின் மானுட அறிதல் முறைகள் மேற்கத்திய மானுடவியலால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தாம் இந்து மானுடவியலின் பதங்களை பயன்படுத்துவதாகக் கூறினார். இவ்வாறு இந்திய மனுடவியல் சார்ந்து தாம் பேசுவது ‘மேற்கத்திய, சோவியத் மானுடவியலாளருக்கு மட்டுமல்ல பெரும்பாலான இந்தியர்களுக்கும் சங்கடம் உண்டாக்குமெனத்’ தமக்கு தெரியுமென்றும். இத்தகைய பதங்களை பயன்படுத்துவது இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்குமென்கிற அவர்களுக்கு நியாயமெனப்படும் ஒரு அச்சத்தாலே அவர்கள் அப்படி எதிர்ப்பு தெரிவிக்கக் கூடுமென்றும் ஹால்டேன் குறிப்பிட்டார்.  என்ற போதிலும் இந்து அறிதல் சட்டகத்தையே பயன்படுத்தி மானுட பண்பாட்டுக் கூறுகளை புரிந்து கொள்ளும் முயற்சியை அவர் முன்வைத்தார்.

ஹிந்து செவ்விலக்கியங்களின் பார்வையில் மானுட விழைவுகளை பொருள் சார்ந்தும், இன்பம் சார்ந்தும் வீடுபேறு சார்ந்தும் வகைப்படுத்தியுள்ளார்கள். இவற்றுடன் இணைந்து இருப்பது அறம். அது அழகு (சுந்தரம்) என்பதுடன் இணைந்ததாக உள்ளது. ஒரு பண்பாடு என்பது இந்த விழைவுகளை பல்வேறு அளவைகளில்   நிறைவேற்றும் பல்வேறு அறங்களை தம்மில் கொண்டதாக அமைகிறது. ஒவ்வொரு அறமும் இயங்க வஸ்து, கிரியை , சமுதாய அமைப்பு,  விசார மூலக தத்துவம் (அதாவது பகுத்தறிவின் மூலம் கிடைக்கும் அறிதல்), விசுவாச மூலக தத்துவம் (நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் அறிதல்) என்கிற ஐந்து விஷயங்கள் தேவை. இவை அனைத்தும் ஸ்வதர்மம் (தன்னறம்) என்பதுடன் இணைந்தியங்குகின்றன. இது ஓரளவு ஜீனோடைப் (genotype) போன்றது. நான் சொன்னது மட்டுமல்லாமல் இன்னும் பலவிதமாக வாழ்க்கையும் பண்பாடும் அணுகப்படுகிறது. மானுடவியலாளர்கள் இந்த ஐந்து விஷயங்களையும் உலகமெங்கும் பண்பாடுகளில் ஆராய்கின்றனர். மானுட பண்பாடுகளுக்கிடையே இருகும் வேறுபாடுகளெல்லாம் அந்தந்த பாரம்பரியங்களில் ஏற்படும் வேறுபாடுகள்தானே தவிர மரபணு வேறுபாடுகள் சார்ந்தவை அல்ல. ஒரு பண்பாட்டில் வளர்ந்த ஒருவருக்கு மற்றொரு பண்பாட்டைச் சார்ந்தக் கூறுகளை ஏற்றெடுப்பது கடினமாக இருக்க்கலாம்.  ஆனால் வீடு பேறு அடைந்த/ அடைவதற்கு அருகாமையில் இருக்கும் ஒருவரால் அதை எளிதாக செய்ய இயலலாம்.

துரதிர்ஷ்டவசமாக, ஹால்டேன் முன்வைத்த இந்த இந்து மானுடவியல் பார்வை ஒரு முழு அறிதல் சட்டகமாக முன்னெடுக்கப்படவே இல்லை. அறம், பொருள், இன்பம், வீடுபேறு, தன்னறம், தன்னியற்கை ஆகிய அனைத்துமே மானுடவியலிலும் சமூக – தனிமனித உளவியலிலும் பெரும் பார்வை மாற்றங்களை ஏற்படுத்தும் திறனுடையவை. நம் பண்பாட்டு சமூக நிகழ்வுகளை அறிந்து கொள்ள நமக்கு உதவுபவை. ஆனால் இன்றும் நாம் காலனிய இனக்கோட்பாட்டு சட்டகங்களையும் ப்ராய்டிய, மார்க்சிய கோட்பாட்டு சட்டகங்களையும் பயன்படுத்துகிறோம். அறம் பொருள் இன்பம் என்பது ஏதோ திருக்குறளில் உறைய வைக்கப்பட்டு வழிபாட்டு அறைகளில் மட்டுமே இருக்க வேண்டிய விஷயம் என்றோ இல்லாவிட்டால் அதை விட மோசமாக, இவையெல்லாம் பொருளற்றுப் போனவை என்றும் நேற்றைய நினைவாக அருங்காட்சியகங்களில் வைக்கப்பட வேண்டியவை என்றும் நினைக்கிறோம். இதை அறிவியல் பூர்வமான சிந்தனை என்றும் நினைத்து பெருமைப் பட்டுக்கொள்கிறோம். உண்மையான அறிவியல் செயல்பாடு நம் அறிதல் முறையை மீட்டெடுத்து நம் சமூக நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதில் இருக்கிறது.

உசாத்துணை:

  • J.B.S.Haldane, The Argument from Animals to Men: An Examination of its Validity for Anthropology, The Journal of the Royal Anthropological Institute of Great Britain and Ireland, Vol. 86, No. 2, (Jul. – Dec.,1956)
  • J.B.S.Haldane, What ails Indian science, in Science and Indian Culture (New Age Publ., Calcutta 1965): url: http://www.iisc.ernet.in/currsci/jul25/articles30.htm

One Comment »

  • Ramiah Ariya said:

    அரவிந்தன், இந்த சப்ஜக்ட் பற்றிய உங்கள் தொடர்ந்த எழுத்துக்கள் மூலமாக ஒரு தனி style, vocabulary மற்றும் சிந்திக்கும் தன்மையை உருவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    # 3 June 2016 at 1:38 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.