- துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்
- வேர்கள்
- வகுத்துச் செல்வதன் எல்லை ?
- பொருட்களின் இயற்கை
- நியூட்டனும் பிறையும் – 1
- நியூட்டனும் சிறுநிலவும் – 2
- மைக்கேல்: புலங்களும் ஒளியும்
- புரட்சியின் தொடக்கம்
- வதனமுறு பெரும் கொள்கை
- கணிதமா இயற்பியலா?
- துளிமம்
- புலங்களும் துகள்களும் ஒன்றே
- துளிம வெளியும் சார்பான காலமும்
- வெளியின் துளிமம்
- காலம் என்பது இல்லை
- கால வெளிக்கு அப்பால்
- நேர்க்காட்சி நிரூபணங்கள்
- துளிமக் கருந்துளைகள்
- முடிவின்மையின் அந்தம்
- தகவல் – 1
- வெப்பக் காலம்
வெப்பக் காலம் என்னும் சிந்தனையின் மூலத்தில் உள்ள சிக்கல் எளியது. இயற்பியலை விளக்க காலம் என்னும் கருத்தே தேவையில்லை என ஏழாம் பகுதியில் விளக்கியிருந்தேன். காலம் என்பதையே முற்றாக மறந்து விடுவது நல்லது. இயற்பியலின் அடிப்படை நிலைகளில் காலத்தின் பங்களிப்பு என எதுவும் இல்லை. இதை நன்றாகப் புரிந்து கொண்டால், துளிம ஈர்ப்பியலின் சமன்பாடுகளை எழுதுவது எளிதானதாக இருக்கும்.

அண்டத்தின் அடிப்படை சமன்பாடுகளில் இனியும் எந்தவித பங்களிப்பும் இல்லாத பல அன்றாட கருத்துகள் உள்ளன; உதாரணமாக, ‘மேல்’ மற்றும் ‘கீழ்’, அல்லது ‘குளிர்’ மற்றும் ‘வெப்பம்’ என்கிற கருத்துகள் (Notion) – எனவே பரவலாக பயன்பாட்டில் உள்ள இவ்வாறான கருத்துகள் அடிப்படை இயற்பியலில் இருந்து மறைவதில் விந்தை என எதுவும் இல்லை. இதை ஏற்றுக் கொண்ட பிறகு, இரண்டாவதாக ஒரு சிக்கலைத் திறந்து விடுகிறோம். நமது அன்றாட அனுபவங்களிலிருந்து இந்த கருத்துகளை எப்படி மீட்டெடுப்பது? நம்முடைய கண்ணோட்டத்தில் இவை எவ்வாறு உருவெடுக்கின்றன?
உதாரணமாக, ‘மேல்’ மற்றும் ‘கீழ்’ என்கிற கருத்துகள் நியூட்டனின் சமன்பாடுகளுக்குள் நுழைவதில்லை – ஆனால் முழு முற்றான மேல் – கீழ் என எதுவும் இல்லாமலேயே ஒரு வரையறையில் அவற்றை நாம் அறிகிறோம். கிரகம் போன்ற மாபெரும் நிறைகளுக்கு அருகிலேயே மேல் – கீழ் கருத்துகள் அர்த்தமுள்ளதாகின்றன. மாபெரும் ஈர்ப்பு விசையை செலுத்தும் பெருநிறை ஒன்றை நோக்கிச் செல்லும் திசையை குறிப்பது ‘கீழ்’. அதற்கு நேர் எதிரான திசையைக் குறிப்பது ‘மேல்’. குளிர் – வெப்பம் என்பதும் இவ்வாறே. நுண்ணலகில் குளிர்ந்த அல்லது வெப்பமான என எதுவும் இல்லை – ஆனால், மிக அதிக அளவிலான நுண் உறுப்புகளைச் சேர்த்து, சராசரிகளின் மதிப்பாக அவற்றை விளக்குகையில் ‘வெப்பம்’ என்கிற கருத்து தோன்றுகிறது. சூடான பொருள் என்பது அதன் நுண் உறுப்புகளது சராசரி வேகம் அதிகரிக்கப்பட்ட ஒன்று. பெருநிறை ஒன்றின் அருகாமை, பல மூலக்கூறுகளின் சராசரி மதிப்புகளையே நாம் எப்போதும் கையாள்கிறோம் என சில குறிப்பிட்ட சூழலில் ‘மேல்’ அல்லது ‘வெப்பம்’ என்பதைப் புரிந்து கொள்ள நம்மால் இயலுகிறது.
கிட்டத்தட்ட சமானமான ஒன்றையே ‘காலம்’ என்பதற்கும் விளக்கமாகச் சொல்ல முடியும். அடிப்படை நிலைகளில் காலம் என்கிற கருத்திற்கு எந்தவொரு பங்களிப்பும் இல்லை என்றாலும், நிச்சயமாக நமது அன்றாட வாழ்வில் ‘மேல்’, ‘வெப்பம்’ போல அதுவும் பெரும் பங்களிப்பை அளிக்கிறது. உலகம் குறித்த அடிப்படை விவரணைகளில் காலத்திற்கு எந்தவொரு பங்கும் இல்லையெனில், ‘காலத்தின் போக்கு’ என்பது என்ன?
விடை மிக எளியது. காலத்தின் துவக்கம் என்பது வெப்பத்தினுடையதை துவக்கத்திற்கு இணையான ஒன்றைப் போன்றதே: பல நுண் மாறிகளின் சராசரியிலிருந்தே வருகிறது. சற்று விரிவாக விளக்குகிறேன்.
காலத்திற்கும் வெப்பத்திற்கும் ஓர் இணைப்பு உள்ளது என்பது பழங்காலத்திலிருந்தே மீண்டும் மீண்டும் வரும் ஒரு கருத்து. நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால், கால நகர்வை நாம் உணரும் எந்தவொரு நிகழ்வும் வெப்பநிலையுடனும் தொடர்பு கொண்டிருப்பதைக் காணலாம். காலத்தின் சிறப்பு அது முன்னால் மட்டுமே நகரும், பின்னால் நகராது – அதாவது ஒரு மீள்திரும்பா (Irreversible) நிகழ்வு. வெப்பம் இல்லாத இயக்கவியல் நிகழ்வுகள் மீள்திரும்பக்கூடியவை. அவற்றில் ஒன்றை படம் பிடித்து காணொளியை பின்மாறாக ஓட்டிப் பார்த்தாலும், உண்மையாக நிகழக்கூடிய ஒன்றையே காண்போம். ஊசலாடும் ஊசலியையோ மேலே வீசப்பட்ட கல் கீழே விழுவதையோ படம் பிடித்து அக்காணொளியை பின்மாறாக ஓட்டினால் மீண்டும் ஓர் ஊசலியின் நகர்வையோ மேலே எறியப்பட்ட கல்லையோ காண இயலும்.
தரையை தொட்டவுடன் நின்று விடும் கல்லைப் பார்த்ததும் நீங்கள் ஆட்சேபிக்கலாம்: காணொளியை பின் மாறாகப் பார்த்தால், தரையிலிருந்து தானே எழுந்து மேலே செல்லும் கல்லே தெரியும் – அது சரியாகத் தோன்றவில்லை. ஆனால் மேலிருந்து விழும் கல் தரையைத் தொட்டவுடன் அதன் ஆற்றல் எங்கே செல்கிறது? அது தரையை வெப்பமாக்குகிறது!. வெப்பம் உண்டாகும் துல்லியமான அக்கணத்தில், இந்நிகழ்வு திருப்ப இயலாததாக மாறுகிறது: கடந்தது நிகழப்போவதிலிருந்து மாறுபடுகிறது. வெப்பம் – வெப்பம் மட்டுமே கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் வேறுபடுத்துகிறது.
அண்டமளாவிய உண்மை இது. எரியும் மெழுகுவர்த்தி புகையாக மாறுகிறது – புகை மீண்டும் மெழுகுவர்த்தியாக மாறாது – இங்கு மெழுகுவர்த்தி வெப்பத்தை உண்டாக்குகிறது. ஒரு கோப்பை கொதிக்கும் தேநீர் குளிர்ந்து விடுகிறது – மீண்டும் சூடாவதில்லை. நாம் வாழ்ந்து வயதடைகிறோம்: வெப்பத்தை உண்டாக்குகிறோம். நமது பழைய சைக்கிள் காலப்போக்கில் தேய்ந்து பழையதாகிறது – உராய்வில் வெப்பத்தை உண்டாக்குகிறது. சூரிய மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். முதற் பார்வைக்கு தன்னைத் தானே சமன்படுத்திக் கொள்ளும் ஒரு பேரியக்கமாகத் தெரிகிறது. அது வெப்பத்தை உண்டாக்கவில்லை. பின்மாறாகப் பார்த்தாலும் விசித்திரமாக எதுவும் தெரியவில்லை. ஆனால், சற்று நுணுக்கமான நோக்கில் இங்கும் ஒரு மீள்திரும்பா நிகழ்வைக் காணலாம்: சூரியன் தனது எரியக்கூடிய ஹைட்ரஜனை பயன்படுத்துகிறது.- காலப்போக்கில் அது தீர்ந்ததும் தானாகவே அணைந்து விடும். சூரியனும் வயதடைகிறது, வெப்பத்தை உண்டாக்குகிறது. நிலவு பூமியை மாற்றமின்றி சுய சமன்படுத்தும் நிகழ்வாக வலம் வருகிறது – ஆனால் நடைமுறையில் அது விலகிச் செல்கிறது. ஏனெனில் அது கிளப்பிவிடும் கடலலைகள் கடலை சிறிது சூடாக்குகின்றன – நிலவுடன் ஆற்றல் பரிமாற்றத்தில் இருக்கின்றன. கால நகர்வை உறுதிப்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும், உண்டாகும் வெப்பத்தை வைத்தே அதை நாம் உறுதி செய்கிறோம். வெப்பமில்லாத தனித்த செல்திசை என காலத்திற்கு எதுவும் இல்லை.
ஆனால், பலநூறு மாறிகளின் சராசரிகளை அடையாளப்படுத்தும் நம்முடைய ஒரு வழியே வெப்பம். வெப்பக் காலம் என்பது இக்கண்ணோட்டத்தை நேர்மாற்றுகிறது. அதாவது, காலம் எவ்வாறு வெப்பப் பரவலை உண்டாக்குகிறது என்பதற்குப் பதிலாக, வெப்பம் எவ்வாறு காலத்தை உண்டாக்குகிறது என வினவுகிறது.
சராசரிகளுடனான நமது உள்வினையில் இருந்தே வெப்பம் என்னும் கருத்து உண்டாகிறது என்பதை அறிந்ததற்காக போல்ஸ்ட்மனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். வெப்பக் காலம் என்பது காலம் என்பதன் மற்றொரு கருத்தும் பல மாறிகளின் சராசரிகளுடனான நமது உள்வினையிலிருந்தே வருகிறது.
ஓர் அமைப்பைப் பற்றிய முழு விவரமும் நம்மிடம் இருக்கையில், அந்த அமைப்பின் அனைத்து மாறிகளும் ஒரே அடிவைப்பில் இருக்கும் – அதில் எந்தவொன்றும் கால மாறி என மாறாது. அதாவது: மீள்திரும்பா நிகழ்விற்கு எதுவும் இடைத்தொடர்பில் இல்லை. ஆனால், அந்த அமைப்பை பல்வேறு மாறிகளின் (Variables) சராசரிகளாக விளக்கும்போது, காலம் என செயல்படும் ஒரு மாறி நமக்குக் கிடைக்கிறது. பரவுகின்ற வெப்பத்துடன் உள்ள காலம். நமது அன்றாட அனுபவத்தின் காலம்.
எனவே, காலம் என்பது உலகின் அடிப்படை பண்பு இல்லை. ஆனால், பிரம்மாண்டமான இந்த உலகில் மிகச் சிறிய அமைப்புகளான நாம், மிக நுண்ணிய மாறிகளின் சராசரிகளான பேரலகு மாறிகள் உடன் மட்டுமே உள்வினை புரிவதால், காலம் மிக அடிப்படையான ஒன்றாகத் தோன்றுகிறது. எந்தவொரு அடிப்படை நுண்துகளையோ வெளியின் துளிமத்தையோ அன்றாட வாழ்வில் நாம் காண்பதில்லை. கற்கள், மலைகள், நமது நண்பர்களின் முகங்கள் – இவையனைத்தும் எண்ணற்ற அடிப்படை உறுப்புகளால் உண்டானவை. எப்போதும் சராசரிகளுடனேயே நமது இடைத் தொடர்புகள் இருக்கின்றன. சராசரிகள் சராசரிகளாகவே நடந்து கொள்கின்றன. அவை வெப்பத்தையும் அதன்வழி மறைமுகமாக காலத்தையும் வெளியிடுகின்றன.
இந்தச் சிந்தனையை உள்வாங்கிக் கொள்வதன் சிக்கல், காலம் இல்லாத ஓர் உலகை நினைப்பது மிகக் கடினமானமாக இருப்பதும், காலம் என்பதே தோராயமாக வெளிப்படுவதுமே. யதார்த்தம் காலத்தில் உள்ளது என்னும் சிந்தனைக்கு அதீதமாகப் பழகிவிட்டோம். காலத்தில் வாழும் உயிரினங்கள் நாம்: காலத்தில் உழன்று அதனால் புரக்கப்படுகிறோம். நுண்ணலகு மாறிகளின் சராசரிகள் உண்டாகும் காலத்துவத்தின் (Temporality) விளைவுகள் நாம். ஆனால் உள்ளுணர்வின் எல்லைகள் நம்மை வழிதவற விடக்கூடாது. பொதுவாக உலகை நன்றாக புரிந்து கொள்வது உள்ளுணர்விற்கு நேர் எதிராகவே செல்லும். இவ்வாறாக இல்லையெனில், புரிந்து கொள்வது எளிதாக இருந்திருக்கும்.
புறத்தின் நுண் நிலைகளை காணாததன் விளைவே காலம். நம்மிடம் இல்லாத தகவலே காலம்.
நமது அறியாமையே காலம்.
Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
