துயர்வண்ணம் உறுவது உண்டோ? 

முதல் பகுதி

இரண்டாவது பகுதி

கர்ம பாச மோசகம்

-காலபைரவாஷ்டகம்

ஓட்டுநர் கதையை நிறுத்திய பிறகும் நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன், அவரைப் பார்க்க விருப்பமில்லை என்று நினைத்தபோதுதான் எனக்கு ஒன்று புரியவில்லை என்று அவரிடம் சொல்லிவிட்டேன், அவர் கண்ணாடியில் என்னைப் பார்த்தார், எங்கள் வீட்டில் எதைப் பற்றிப் பேசினாலும் அது முடிவதில்லை என்றேன், மறுநாளும் அதையே பேசுவோம், வேறொன்றைப் பேசினாலும் பழையதெல்லாம் அதற்குள் வந்துவிடும், வைத்த பொருளை மறந்துவிடுவார்கள், ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்ன சொல்லை யாரும் மறப்பதில்லை என்றேன், அவர் சிரித்தார், இவ்வளவு பேசியும் என்ன பயன் என்று கேட்டேன், என்ன தெரிய வேண்டும் என்றார், எது சரி என்று என்றேன், உனக்கா என்றார், எல்லோருக்கும்தான் என்றேன், அவர் சப்தமாகச் சிரித்தார், நான் சிரிப்பதற்காகச் சொல்லவில்லை என்றேன், தெரிகிறது என சொன்னதும் மற்றவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் என்று இருவரும் நினைத்துப் பேசுகிறீர்களா என்றார், அம்மா நான் சொல்வதைக் கேட்பாள் என்றேன், பிறகு என்றார், எங்கே தவறாகச் சொன்னேன் என்று கண்டுபிடிப்பாள் என்றேன், நீ என்றார், அவள் சொல்வதில் தவறு இருந்தால் சொல்வேன் என்றேன், இல்லையென்றால் என்றார், அவள் சொன்ன விதம் பிடிக்கவில்லை என்பேன் என்றேன், அவர் சிரித்தார், எனக்கும் சிரிப்பு வந்தது, அதை அவருக்குக் காட்டாமல் வெளியே பார்த்தேன், பேசுவதற்கு முன்பே நீ சரி என்று தெரிந்திருக்கிறதா என்றார், சில விஷயங்களில் என்றேன், அவளுக்கும் அப்படித் தெரிந்திருந்தால் என்றார், அதனால்தானே பேச வேண்டும் என்றேன், என்ன தெரிய வேண்டும் என்றார், அவள் சொல்வது ஏன் தவறு என்று என்றேன், அவர் அமைதியாக இருந்தார், அப்போதுதான் நான் சொன்னது எனக்குக் கேட்டது, இருவரும் முடிவை வைத்துக்கொண்டு காரணங்களைத் தேடுகிறோமா என்று தோன்றும் பொழுது பேருந்து வளைவில் திரும்பியது, இருக்கையின் ஓரத்தைப் பற்றிக்கொண்டேன், மற்றவரை மறுப்பதற்காக நீ நம்பாத ஒன்றையும் சொல்வாயா என்றார், நான் பொய் சொல்வதில்லை என்றேன், அம்மா முன்பு சொன்னதை அவளுக்கே எதிராக எடுத்துக்கொள்வாயா என்றார், அவள்தானே சொன்னாள் என்றேன், அது சரி என்று உனக்கும் தோன்றுகிறதா என்றார், இல்லை என்றேன், பிறகு எதற்குச் சொல்கிறாய் என்றார், அவளால் பதில் சொல்ல முடியாது என்றேன், இந்த முறை எனக்கே சிரிப்பு வந்தது, அவளும் இப்படித்தான் செய்வாள் என்றேன், அவளைப் பற்றிப் பேசினால் உன்னைப் பற்றிய கேள்வி போய்விடுமா என்றார், நீங்கள் தொந்தரவு தரும் ஆள் என்று சொல்லி முடித்த பொழுது அம்மா பதில் சொல்ல முடியாமல் நின்ற நாட்கள் நினைவுக்கு வந்தன, அறைக்குப் போன பிறகும் இன்னும் நன்றாகச் சொல்லியிருக்கக்கூடிய பதில்களை யோசிப்பேன், அடுத்த சண்டைக்காக வைத்துக்கொள்வேன், அப்போது அவளிடமும் புதிதாக ஏதாவது இருக்கும், இருவரும் இவ்வளவு தயாராக இருந்தும் நிம்மதியாக இருக்க ஏன் தயாராக முடியவில்லை என்று தோன்றியது, பேசுவதற்கு இவ்வளவையும் ஆராய வேண்டுமா என்றேன், பேசிவிட்டுத்தானே இப்போது பார்க்கிறாய் என்றார், எங்கள் பேச்சு ஏன் முடிவதில்லை என்று கேட்டிருந்தேன், இப்போது எதை முடிக்க முயல்கிறோம் என்று தெரியவில்லை, வீட்டில் சண்டை நின்ற பிறகும் எனக்குள் அது நிற்கவில்லை, அம்மா சொல்லாததற்குக்கூட என்னிடம் பதில் இருந்தது என உணர்ந்த பொழுது இவ்வளவு சொற்களை என்ன செய்வது என்றேன், விசோனிலும் இப்படிக் கேட்டவர்கள் இருந்தார்கள் என்றார், அகத்தில் அறிந்ததைச் சொல்ல வந்தார்கள், கேட்டவர்கள் அதைத் தங்களுக்குத் தெரிந்த கதைகளுக்குள் வைத்தார்கள், விளக்குவதற்குச் சொற்கள் பெருகின, பேச்சு நடந்துகொண்டிருந்தது, ஆனால் அறிய வந்தது எங்கோ நின்றுவிட்டது, பிறகு என்றேன், உண்மையை எவ்வாறு சொல்வது என்று உசாவினார்கள், அப்போது தாங்கள் அறிந்ததாக நினைத்ததையும் மீண்டும் பார்க்க வேண்டியிருந்தது என்றார், இருக்கையின் ஓரத்திலிருந்து கையை எடுத்தேன், கண்ணாடியில் அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார், இந்த முறை வெளியே திரும்பவில்லை, கேள் என்றதும், கேட்க ஆரம்பித்தேன்.

விசோனில் குலங்கள் தங்கள் பிள்ளைகளைப் பேணின. நோயுற்றவர்களுக்கு உணவு கொண்டுசென்றார்கள். வீடு சரிந்தவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். இறந்தவர்களின் குழந்தைகளை உறவுகள் எடுத்துக்கொண்டன. ஒருவன் வெகுதூரம் சென்று திரும்பியபோது அவனுக்காக ஓர் இடம் இருந்தது. அவன் வராத நாட்களிலும் அவனைப் பற்றிய பேச்சு அங்கே இருந்தது.

கபிலர்களிடம் கற்றவர்களும் அகத்தை உசாவியவர்களும் அந்த வீடுகளிலிருந்தே சென்றார்கள். திரும்பிவந்து தாங்கள் அறிந்ததைச் சொன்னார்கள். குடும்பங்கள் அவர்களுக்காக விளக்கேற்றின. கற்க வந்தவர்களுக்கு உணவு கொடுத்தன. அவர்கள் அடைந்த உயர்வைப் பற்றிப் பேசும்போது, அவர்களைப் பெற்றவர்களுடைய பெயர்களையும் சொன்னார்கள்.

மாலையொன்றில் குலத்தின் முதியவர்கள் பொதுவான முற்றத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடைய உறவில் பிறந்த ஒருவன் நீண்ட அகப்பயிற்சிக்குப் பிறகு திரும்பியிருந்தான். அவனிடம் கற்க வேறு குலங்களிலிருந்தும் வந்தார்கள். அவன் அனைவரையும் ஒரே இடத்தில் அமரச் செய்திருந்தான்.

“அவன் எல்லோருக்கும் உரியவன் என்று சொல்கிறான்,” என்றார் ஒருவர்.

“இருக்கட்டுமே. அவன் நம்மிடம் பிறந்தவன் என்பதும் உண்மைதானே?”

“அவன் அடைந்தது பூரண சுதந்திரம் அல்லவா?”

“அதனால்தானே நம் குலத்திற்குப் பெருமை.”

“பிறகு அவன் சொல்லும் வழியும் எல்லோருக்கும் உரியதுதானே?”

“கற்கட்டும். யார் வேண்டாம் என்றார்கள்? ஆனால் அந்தப் பெருமையை வேறொரு குலத்திற்கு எப்படிக் கொடுப்பது? நாளை நாமும் அவர்களும் ஒன்று என்று சொல்வதில் முடியுமல்லவா?”

முற்றத்திற்குள் குழந்தையொன்று ஓடிவந்தது. இரண்டாமவர் அதைத் தூக்கித் தன் மடியில் அமர்த்தினார். அதன் தலையிலிருந்த உலர்ந்த இலையை எடுத்தார்.

“பூரண சுதந்திரம் எல்லாவற்றையும் விடப் பெரிதல்லவா? நீ சொல்வது எனக்குக் குழப்பமாக இருக்கிறது,” என்றார் முதலாமவர்.

“நீ சொன்னதைவிட நான் சொன்னது உனக்கும் எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் இன்றைக்கு முக்கியம்.”

இரண்டாமவரின் மடியில் இருந்த குழந்தையை பார்த்தார்.

“ஆமாம்,” என்றார்.

மறுநாள் ஆசிரியருக்கென ஓர் இடத்தை அமைத்தார்கள். ஆசிரியரின் தந்தை அமர்ந்திருந்த பழைய இருக்கையைச் சீர்செய்து கொண்டுவந்தார்கள். அதில் ஆசிரியரை அமரச் செய்தார்கள். அவரை சுற்றி தனிவட்டம் ஒன்றை அமைத்தார்கள். வட்டத்திற்கு வெளியே மாணாக்கர்களை அமைத்தார்கள்.

அவரிடம் கற்றவர்கள் பிற ஊர்களுக்குச் சென்றார்கள். அவர் சொன்னதைச் சொன்னார்கள். அவருடைய பெயருடன் குலத்தின் பெயரும் சென்றது. அவர் பிறந்த வீட்டை அறியாதவர்களும் அந்தப் பெயரை அறிந்திருந்தார்கள்.

காலம் சென்றது. முற்றத்தில் அமர்ந்திருந்த முதியவர்கள் மறைந்தார்கள். அவர்களுடைய பேரன்கள் அங்கே அமர்ந்தார்கள். பூரண சுதந்திரத்தை அடைந்தவர் தங்கள் உறவில் பிறந்ததைப் பற்றிப் பேசினார்கள். யாராவது அதன் பொருளைக் கேட்டபோது, அவர் தங்கள் குலத்திற்கு அளித்த பெருமையைச் சொன்னார்கள்.

“ஆமாம்,” என்றார்கள் கேட்டவர்கள்.

நூறு ஆண்டுகள் சென்றன.

பின் வந்த காலத்தில் ஹேமலேகா என்ற இளம்பெண் இருந்தாள். அவள் தாயுடன் காட்டிற்குச் சென்று விறகுகளையும் பழங்களையும் சேகரித்தாள். விழுந்த கிளைகளை எடுத்தபோது அவற்றின் எடையை அறிந்தாள். ஈரமானவற்றைத் தனியே வைத்தாள். பழுத்த பழத்தை நிறத்தால் அறிந்த நாட்களும் இருந்தன. சிலவற்றின் மணத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. சிலவற்றைப் பறித்த பிறகுதான் தவறாக அறிந்ததைத் தெரிந்துகொண்டாள்.

ஒரு நாள் அவர்கள் தாமரைத் தடாகத்தின் வழியாகத் திரும்பினார்கள். கரையில் பிரபஞ்ச ஒருங்கிணைவினைப் பயிற்சி செய்யும் ஒருவர் அமர்ந்திருந்தார். அருகில் சிலர் இருந்தார்கள். ஹேமலேகா விறகுக் கட்டை இறக்கிவைத்தாள். தாயும் நின்றாள்.

“அறியாமல் ஒன்றைப் பற்றிக்கொள்கிறோம். அதைக் காக்கவும் அடையவும் செய்கிறோம். கிடைக்காதபோது வருந்துகிறோம். கிடைத்தபோது இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறோம்,” என்று ஒருங்கிணைவில் அமர்ந்திருந்தவர் சொன்னார்.

தடாகத்தில் நீர் அசைந்தது. தாமரை இலைகளின் விளிம்பில் துளிகள் உருண்டன.

சிறிது நேரம் கேட்டுவிட்டுத் தாய் விறகுக்கட்டையைத் தூக்க உதவினாள். அவர்கள் நடந்தார்கள்.

“அவர் நம் குலத்தின் பெருமை,” என்றாள் தாய். “அவர் சொல்வது உண்மை.”

ஹேமலேகா திரும்பிப் பார்த்தாள். புதர்களுக்கிடையில் தடாகம் சிறிதாகத் தெரிந்தது.

“அவர் சொல்வது உண்மை என்பதால் நமக்குப் பெருமையா?”

“ஆமாம்.”

“நம்மவர் என்பதால் அவர் சொல்வது உண்மையா?”

தாய் நின்றாள்.

“அவர் எவ்வளவு காலம் பயின்றவர் தெரியுமா?”

“வேறொரு குலத்தில் அப்படிப் பயின்றவர் சொன்னாலும் உண்மைதானே?”

“இவரைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்?”

ஹேமலேகா தோளில் இருந்த கட்டையை நகர்த்தினாள். கிளையொன்றின் முனை கழுத்தில் அழுத்தியது.

“அவர் பற்றை விடச் சொன்னார்.”

“அதற்கும் அவர் நம்மவர் என்பதற்கும் என்ன?”

ஹேமலேகா தோளிலிருந்த கட்டையை நகர்த்தினாள்.

“அவரிடம் நம்மவர் என்று சொல்வது எதை, அம்மா? அவருடைய உடலையா, ஆன்மாவையா?”

“அவர் நம் குலத்தில் பிறந்தவர். அவருடைய தந்தையையும் தாயையும் உனக்குத் தெரியுமே.”

“அப்படியானால் பிறந்த உடலைச் சொல்கிறாயா?”

தாய் அவளைப் பார்த்தாள்.

“அவரைத்தான் சொல்கிறேன். உடலென்றும் ஆன்மாவென்றும் பிரித்து நான் நினைக்கவில்லை.”

“அவர் பூரண சுதந்திரம் அடைந்தவர் என்றாயே. அப்போதும் அவருடைய ஆன்மா நம் குலத்திற்குரியதாக இருக்குமா?”

“சுதந்திரம் அடைந்தால் அவர் பிறந்தது இல்லாமல் போய்விடுமா?”

“பிறந்தது இருக்கட்டும். அவர் அடைந்த சுதந்திரத்தில் நம் குலமும் இருக்கிறதா?”

தாய் தோளிலிருந்த விறகுக்கட்டையைச் சரிசெய்தாள். கீழே விழவிருந்த கிளையை ஹேமலேகா உள்ளே தள்ளினாள்.

“வீட்டிற்கு வா. இதை இறக்கிவிட்டுப் பேசலாம்.”

அவர்கள் நடந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு ஹேமலேகா கேட்டாள்:

“என் ஆன்மாவும் நம் குலத்திற்குரியதா, அம்மா?”

தாய் வியப்புடன் திரும்பிப் பார்த்தாள். “உனக்கு யார் ஆன்மாவெல்லாம் சொல்லிக் கொடுத்தது…அதுவும் இத்தனை கேள்விகள்” 

ஹேமலேகா யோசித்தாள். நதிக்கரையோரத்தில் நீந்த விளையாட செல்கையில் அங்கிருக்கும் மறை காக்கும் குடும்பங்கள் ஓதுவதை கேட்டறிந்தேன் என சொல்ல நினைத்தாள். ஆனால் அம்மாவுக்கு நீந்த போவது தெரியாது என்பதால் தயங்கி “யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்…இந்த உடல் இறப்புக்குரியது. மரணத்தின் பிடியில் உள்ளது. இது அழிவற்ற, உடலற்ற ஆன்மாவின் இருப்பிடம் என சொன்னார்கள். சரிதானே…”  என்றாள்.

அம்மா நின்று திரும்பிப் பார்த்தாள். “அதையெல்லாம் கேள். நான் சொல்வதை கேட்காதே. நீ என் மகள்” என குரலை அழுத்திச் சொன்னாள்.

“இந்த உடல் உன்னிடம் பிறந்தது. ஆன்மா அழிவற்றது என்றால் அதற்குப் பிறப்பும் உண்டா? அது எப்படி நம் குலத்தில் பிறந்ததாகும்?”

அம்மா “ம்ம்ம்…” என முனகி வேகமாக நடக்கத் தொடங்கினாள். ஹேமலேகா விறகுக்கட்டையைச் சரிசெய்துகொண்டு பின்னால் நடந்தாள். சிறிது நேரத்தில் நதிக்கரையில் கேட்ட பாடலை மெதுவாகப் பாடத் தொடங்கினாள்.

மாம்பழம் காம்பினை விட்டிடுமே,
அத்தியும் அரசும் அவ்வாறே,
உடலின் பிடியினை விட்ட உயிர்
மற்றொரு பிறப்பினை நாடிடுமே.

அம்மா திரும்பிப் பார்க்கவில்லை. அவளுடைய நடை மேலும் விரைந்தது.

ஹேமலேகா “அம்மா உன் உயிர் மற்றொரு பிறப்பினை நாடிடுமே” என்று மீண்டும் பாடினாள்.

“பாதையைப் பார்த்து நட,” என்றாள் அம்மா.

ஹேமலேகா கீழே பார்த்தாள். பாதை தெளிவாகத்தான் இருந்தது. புன்னகையுடன் தாயைப் பின்தொடர்ந்தாள். ஹேமலேகா “அம்மா என் உயிரும் மற்றொரு பிறப்பினை நாடிடுமே” என்று மீண்டும் பாடினாள்.

அம்மா நடையை இன்னும் விரைவாக்கினாள். ஹேமலேகா சிரித்துக்கொண்டே அவளை எட்டிப் பிடிக்க ஓடினாள்.

வீட்டுக்கு வந்ததும் ஹேமலேகா பசியில்,  சமையலறையிலிருந்த பழத்தை எடுத்துக் கடித்தாள்.

“இது இனிப்பாக இருக்கும் என்றாய்.”

“பழுத்திருக்கிறதே.”

“புளிக்கிறது.”

தாய் பழத்தை வாங்கிச் சிறிது கடித்தாள். முகம் சுருங்கியது.

“இதைத் தனியே வை,” என்றாள்.

“உண்மையை எவ்வாறு அறிகிறோம், அம்மா?”

தாய் விதையை வெளியே துப்பிவிட்டு அடுத்த பழத்தை எடுத்தாள். இந்த முறை மகளிடம் கொடுப்பதற்கு முன் தானே சுவைத்தாள்.

ஹேமலேகாவின் நண்பர்கள் சிலர் நெசவு செய்தார்கள். காட்டிலிருந்து திரும்பும்போது அவர்களிடம் பழங்களைக் கொண்டுசெல்வாள். தறிகளின் ஒலிக்கிடையில் பேசுவார்கள். தாயிடம் கேட்ட கேள்வியையும் சொன்னாள்.

“அவர் சொன்னதில் என்ன தவறு?” என்று ஒருத்தி கேட்டாள்.

“தவறு என்று சொல்லவில்லை. உண்மை என்று எப்படித் தெரிந்தது என்று கேட்கிறேன்.”

“அவர் அறிந்தவர்.”

“அதை எப்படித் தெரிந்துகொண்டோம்?”

தறியின் ஒலி நின்றது. நூல் அறுந்திருந்தது. நெசவு செய்தவள் அதன் இரு முனைகளையும் தேடினாள்.

“எங்கள் ஆசிரியரும் இப்படித்தான் சொல்வார்,” என்றாள் இன்னொருத்தி.

“அப்படியானால் இருவரும் அறிந்ததாலா? இருவரும் சொன்னதாலா?”

அறுந்த நூலை இணைத்தவள் தறியை மீண்டும் இயக்கினாள்.

“எல்லாவற்றையும் இப்படிக் கேட்டால் எப்படி வேலை செய்வது?”

ஹேமலேகா சிரித்தாள். ஆனால் அடுத்த முறை வந்தபோது நண்பர்களே அந்தப் பேச்சை எடுத்தார்கள். ஒருத்தி தன் தந்தை நம்பியதைச் சொன்னாள். மற்றொருத்தியின் தந்தை அதை நம்பவில்லை.

“அவரவர் குலத்திற்கு உண்மை வேறாக இருக்குமா?”

“அப்படியானால் அது எப்படி உண்மை?”

தாம் நம்பியவற்றை உடனே விட முடியவில்லை. அவற்றை எதனால் நம்புகிறோம் என்பதையும் உடனே சொல்ல முடியவில்லை. பேசிவிட்டுப் பிரிந்தபோது கேள்வி ஒவ்வொருவருடனும் சென்றது.

ஹேமலேகா வீட்டில் அதைப் பற்றிப் பேசினாள். அவளுடைய கணவன் சிந்தாமணி தானியக் கடை வைத்திருந்தான். சில இரவுகளில் இருவரும் முற்றத்தில் அமர்ந்து பேசினார்கள். அவன் கடையில் நடந்தவற்றைச் சொன்னான். அவள் காட்டில் கண்டவற்றைச் சொன்னாள்.

பின்னர் அவர்களுக்கு மகன் பிறந்தான். அவன் இரவில் அழுதபோது ஹேமலேகா தூக்கிக்கொண்டு நடந்தாள். தாய் சொல்லிக்கொடுத்த தாலாட்டுகளைப் பாடினாள். சில இரவுகளில் அவற்றுக்கிடையில் அவளுடைய கேள்விகளும் வந்தன.

ஆராரோ, ஆரிரரோ,
அறியாத என் கண்மணியே,
பொய்யறிவு நீங்கிவிட்டால்
பற்றும் சினமும் ஓயுமோ?
பற்றும் சினமும் ஓய்ந்துவிட்டால்
வினையின் ஓட்டம் தணியுமோ?
வினையின் ஓட்டம் தணிந்துவிட்டால்
துயரின் தொடரும் அறுமோ?
துயரின் தொடரும் அறுந்துவிட்டால்
விடுதலை வந்து சேருமோ?
இந்த வழியின் முதற்படியாய்
மெய்யை அறிதல் ஆகுமோ?
ஆராரோ, ஆரிரரோ,
மெய்யை எவ்வாறு அறிவோமோ?

குழந்தை உறங்கிவிடும். அவள் இன்னும் சிறிது நேரம் பாடிக்கொண்டிருப்பாள். சிந்தாமணி அருகில் படுத்துக் கேட்பான்.

வீட்டிலொரு கிளி இருந்தது. ஹேமலேகா பழங்களைப் பிரிக்கும்போது அருகே வந்து அமரும். தாயின் இருமலையும் குழந்தையின் அழுகையையும் திருப்பிச் சொல்லும். தாலாட்டில் சில வரிகளும் அதனிடம் தங்கின.

“ஆராரோ, ஆரிரரோ,” என்று பகலில் பாடியது.

ஒருநாள், “மெய்யை எவ்வாறு அறிவோமோ?” என்றது.

அந்தக் கிளி அவ்வப்பொழுது  சிந்தாமணியின் கடைக்கும் சென்றது. சிதறிய தானியங்களைத் தின்றுவிட்டுக் கூரையின் கீழிருந்த கம்பத்தில் அமரும்.

காலை ஒன்றில் அவன் தானியம் அளந்துகொண்டிருந்தபோது பாடியது. “மெய்யை எவ்வாறு அறிவோமோ?”

அவன் நிமிர்ந்து பார்த்தான்.

“உனக்குத் தானியம் இருக்கிறதா என்று தெரிந்தால் போதாதா?”

வாங்க வந்தவன் சிரித்தான்.

“யார் இதைக் கற்றுக்கொடுத்தது?”

“என் மனைவி.”

கிளி மீண்டும் பாடியது. வீட்டில் குழந்தையை உறங்கச் செய்த வரி, கடையில் இருந்தவர்களைப் பேசச் செய்தது.

அந்தக் காலத்தில் விசோனின் ஊர்களுக்கிடையே அலைந்து திரிந்து மெய்மையைத் தேடும் பலர் இருந்தார்கள். அவர்கள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. குலங்களின் வாழ்வை விட்டு வெளியேறித் தனித்திருந்தார்கள். மனிதர்கள் எதை அறிந்தார்கள் என்பதைவிட, எதனால் அறிந்தார்கள் என்பதைக் கேட்டார்கள். ஒருவர் சொன்னதை இன்னொரு ஊரில் சோதித்துப் பார்த்தார்கள். அவர்களில் சிலர் சிந்தாமணியின் ஊருக்கு அருகே தங்கிப் பள்ளி அமைத்திருந்தார்கள். அவர்களைக் கௌதமர்கள் என்றார்கள்.

அந்த ஊருக்கு வந்த கௌதமர்களில் சிலர் கடையில் தங்கினார்கள். ஹேமலேகாவின் பாடலைக் கிளி பாடியது. அதைக் கேட்டவர்கள் சிந்தாமணியிடம் விசாரித்தார்கள். சிந்தாமணி அதன் வழியாகத் தொடங்கிய பேச்சுகளைச் சொன்னான். ஹேமலேகா தாயிடம் கேட்டதைச் சொன்னாள்.

“அதற்கு முன் என்ன கேட்டாய்?” என்று ஒருவர் கேட்டார்.

அவள் தாமரைத் தடாகத்தில் ஒருங்கிணைவில் அமர்ந்தவர் சொன்னதை நினைவுகூர்ந்தாள். பற்றிலிருந்து அச்சமும் துயரமும் தொடர்வதைச் சொன்னாள். கௌதமர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

அதை அடுத்து வந்த மழைக்காலத்தில் சிந்தாமணி நோயுற்றான். ஹேமலேகா கடையைப் பார்த்துக்கொண்டாள். வீட்டிற்கும் கடைக்கும் மருந்துப் பெண்ணின் வீட்டிற்குமாக நடந்தாள்.

ஒரு நாள் மருந்துப் பெண் கருநுனி இலை கொண்டுவரச் சொன்னாள். ஹேமலேகா அந்தச் செடியைப் பார்த்ததில்லை. மருந்துப் பெண்ணின் வீட்டருகே அதுவும் இல்லை.

முற்றத்தில் வளர்ந்திருந்த ஒரு செடியின் இலையைப் பறித்து அவளிடம் கொடுத்தாள். அந்தச் செடியை ஹேமலேகா அறிந்திருந்தாள்.

“இதுபோல இருக்கும். ஆனால் விளிம்பில் சிறு பற்கள் இருக்கும். இலையின் அடிப்புறத்தில் மெல்லிய மயிர் இருக்கும். நீரோடும் இடத்தில் தேடு.”

ஹேமலேகா இலையை எடுத்துக்கொண்டு காட்டிற்குச் சென்றாள்.

அவள் தாய் பழங்களைப் பிரிக்கும்போது நிறத்தை மட்டும் நம்பமாட்டாள். மணத்தையும் சுவையையும் பார்ப்பாள். ஹேமலேகாவும் ஓடைக்கரையில் கண்ட இலைகளைத் திருப்பிப் பார்த்தாள். சிலவற்றின் வடிவம் கையிலிருந்த இலையை ஒத்திருந்தது. விளிம்புகள் வேறாக இருந்தன. வேறொரு செடியின் இலையில் சிறு பற்கள் இருந்தன. அடிப்புறம் வழவழப்பாக இருந்தது.

ஓடையின் வளைவில் செடியொன்று வளர்ந்திருந்தது. அதன் இலையைப் பறித்துத் தன்னிடம் இருந்ததன் அருகில் வைத்தாள். விளிம்பைப் பார்த்தாள். அடிப்புறத்தில் விரலை மெதுவாக நகர்த்தினாள். மெல்லிய மயிர் விரலில் பட்டது.

கருநுனி இலை இதுதான் என்று அவளுக்குத் தோன்றியது.

மேலும் இலைகளைப் பறிக்கக் கையை நீட்டினாள். பிறகு நிறுத்திக்கொண்டாள். அகப்பயிற்சியில் இருந்தவர்கள் சொல்லியதை நினைத்தாள். சில நேரங்களில் எதிரே இருப்பதைவிட மனத்தில் இருப்பதையே பார்த்துவிடுகிறோம். தேடி வந்ததால் இதையே தேடிய செடியாகக் கொண்டுவிட்டாளா?

மீண்டும் கையிலிருந்த இரு இலைகளையும் பார்த்தாள். சொன்ன அடையாளங்களை ஒவ்வொன்றாகச் சோதித்தாள். சில இலைகளை மட்டும் பறித்து, செடி வளர்ந்த இடத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு திரும்பினாள்.

மருந்துப் பெண் அவற்றைப் பார்த்தாள். ஓர் இலையைத் திருப்பி விரலால் தடவினாள்.

“இதுதான்,” என்றாள். பிறகு மருந்து செய்ய எடுத்துக்கொண்டாள்.

அன்றிரவு கணவன் உறங்கிய பின்னும் ஹேமலேகா விழித்திருந்தாள். காட்டில் தான் அறிந்த விதத்தை மீண்டும் நினைத்தாள். மருந்துப் பெண் பெயரைச் சொன்னபோது செடியை அவள் அறிந்திருக்கவில்லை. காட்டில் செடியைப் பார்த்தபோது அதன் பெயர் அதன்மேல் எழுதப்பட்டிருக்கவில்லை. இருந்தும் கருநுனி இதுதான் என்று அறிந்திருந்தாள்.

மறுநாள் கௌதமர்களின் பள்ளிக்குச் சென்றபோது இரண்டு இலைகளையும் எடுத்துச் சென்றாள். மாணவர்கள் அவற்றை அருகருகே வைத்துப் பார்த்தார்கள். ஹேமலேகா தான் தேடிய விதத்தைச் சொன்னாள்.

கௌதமர் ஒருவர் அவளிடம் சொன்னார்: “கபிலர்களிடம் கற்றவர்கள் புலன்களால் நேரில் அறிந்ததையும், அறிந்த தொடர்பிலிருந்து உய்த்தறிந்ததையும், அறிந்தவர் சொல்லிலிருந்து பெற்றதையும் பிரித்துப் பார்த்தார்கள். அகத்தை உசாவியவர்களும் இந்த மூன்று வழிகளை ஏற்றார்கள். அவற்றுடன் பிழையான அறிதலையும் கற்பனையையும் நினைவையும் வேறுபடுத்தினார்கள்.”

ஹேமலேகா காட்டில் தன் கையை நிறுத்தியதைச் சொன்னாள்.

“தேடியதால் இதையே கருநுனி என்று நினைத்துவிட்டேனோ என மீண்டும் பார்த்தேன்.”

“பிறகு பார்த்தறிந்தாய்,” என்றான் மாணவன் ஒருவன்.

“இலையின் வடிவத்தையும் பற்களையும் மயிரையும் பார்த்தறிந்தேன். ஆனால் அதன் பெயரை எதனால் அறிந்தேன்?”

“மருந்துப் பெண் சொன்னாளே,” என்றாள் இன்னொருத்தி.

“அவள் சொன்னபோது இந்த இலை என்னிடம் இல்லை.”

மாணவி இரு இலைகளையும் எடுத்துப் பார்த்தாள்.

“அவள் சொன்னது நினைவிருந்தது.”

“ஆமாம். ஆனால் முன்பு பார்த்திராத செடியை நினைவுகூர முடியுமா?”

மாணவி இலைகளை மீண்டும் கீழே வைத்தாள்.

“அவள் சொன்ன அடையாளங்களிலிருந்து உய்த்தறிந்தாயா?” என்று முதலாமவன் கேட்டான்.

ஹேமலேகா முற்றத்துச் செடியின் இலையை எடுத்தாள்.

“இதையும் எடுத்துச் சென்றேன். காட்டில் கண்டவற்றை இதன் அருகில் வைத்துப் பார்த்தேன். இதைப்போல் இருப்பதையும் அவள் சொன்னபடி வேறுபடுவதையும் கண்டபோதுதான் பெயர் அந்தச் செடியுடன் சேர்ந்தது.”

கௌதமர் இரண்டு இலைகளையும் தன் முன்னால் நகர்த்தினார். ஒன்றின் விளிம்பை விரலால் தடவினார்.

“பெயரைக் கேட்டது சொல்லால் நிகழ்ந்தது. இங்கே இருக்கும் அடையாளங்களை அறிந்தது புலன்களால் நிகழ்ந்தது. ஆனால் அந்தப் பெயருக்கு உரியது இதுதான் என்று அறிந்த இடத்தை இன்னும் தெளிவாக்க வேண்டும்,” என்றார்.

அவள் முதலில் பார்த்துத் தவிர்த்த செடிகளையும் சொல்லச் சொன்னார். மாணவர்கள் அவற்றின் இலைகளை மணலில் வரைந்தார்கள். ஹேமலேகா சில வடிவங்களைத் திருத்தினாள்.

ஒற்றுமை இருந்தும் அவள் ஏற்காத இலைகள் இருந்தன. சில அடையாளங்கள் பொருந்தியும் அவள் கடந்துசென்ற செடிகள் இருந்தன. எதை எதனுடன் ஒப்பிட்டாள், எந்த வேறுபாட்டைக் கவனித்தாள், எப்போது பெயரும் பொருளும் இணைந்தன என்று மீண்டும் பார்த்தார்கள்.

மாணவர்களும் அறிந்த ஒன்றின் உதவியால் அறியாத ஒன்றை அடையாளம் கண்ட நிகழ்வுகளைக் கொண்டுவந்தார்கள். ஒற்றுமையால் தெளிந்த இடங்களையும், ஒற்றுமையையே நம்பிப் பிழைத்த இடங்களையும் பேசினார்கள்.

ஏற்கெனவே அறிந்த மூன்று வழிகளுக்குள் இந்த அறிதலை எங்கே வைப்பது என்று அவர்களுக்கு உடனே தெளிவாகவில்லை. ஹேமலேகா கொண்டுவந்த இரண்டு இலைகளும் அவர்களுக்கு முன்னால் இருந்தன. ஹேமலேகாவுடன் வந்த அவளது கிளி  “மெய்யை எவ்வாறு அறிவோமோ?” எனப் பாடியது.

மாணவர்கள் அமைதியாக கிளியின் குரலில் ஆழ்ந்தனர்.

காலங்கள் சென்ற பின்னர் கௌதமர்கள் அறிதலை திரட்டினர். புலன்கள் பொருளை அணுகி அறிந்ததைப் பிரத்யட்சம் என்றார்கள். அறிந்த தொடர்பின் வழியாக நேரில் காணாததை அறிந்தது அனுமானம் ஆனது. அறிந்த ஒன்றுடன் ஒப்பிட்டு அறியாததை அடையாளம் கண்டதை உபமானம் என்றார்கள். அறிந்தவர் திரிபின்றிச் சொன்ன சொல்லிலிருந்து அறிந்தது சப்தம் ஆனது.

இந்த நான்கையும் உண்மையான அறிதலை அளிக்கும் வழிகளாகப் பிரித்தார்கள். அளவைகள் என்றார்கள். பிரமாணங்கள் என்ற சொல்லும் வழங்கியது.

எவ்வாறு அறிகிறோம் என்று கேட்டபோது, எதை அறிய முயல்கிறோம் என்பதையும் தெளிவாக்க வேண்டியிருந்தது. அது பிரமேயம் ஆனது. இரு வாய்ப்புகளுக்கிடையில் அறிவு ஊசலாடியது சம்சயம் ஆனது.

மாணவனொருவன் கேட்டான்:

“இதைத் தீர்த்தால் என்ன கிடைக்கும்?”

தானியத்தின் நிலையை அறிந்தால் அதை உண்ணவும் விற்கவும் முடிந்தது. பாலத்தின் நிலையை அறிந்தால் பாதுகாப்பாகக் கடக்க முடிந்தது. இவ்வாறு உசாவலைத் தொடங்க வைத்த தேவையைப் பிரயோஜனம் என்றார்கள்.

ஆனால் ஹேமலேகாவின் பாடலில் இன்னொரு தேவை இருந்தது. பொய்யறிவு நீங்கினால் துயரின் தொடரும் அறுமா?

மாணவர்கள் தாம் அறிந்ததாகக் கொண்ட ஒன்றால் அஞ்சியதையும், ஆசைப்பட்டதையும், பிறரைப் புண்படுத்தியதையும் சொன்னார்கள். உண்மை தெளிந்த பிறகும் பழைய பிடி தளராத நாட்களைப் பேசினார்கள். உடல், புலன், மனம், ஆன்மா, செயல், பிறப்பு, துயரம் ஆகியவற்றையும் உசாவலுக்குள் கொண்டுவந்தார்கள்.

அகத்தை நோக்கிய கேள்விக்கு விடை தேடும்போதும், தாம் எவ்வாறு அறிகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டியிருந்தது.

மாணவன் ஒருவன் மலையின் மறுபுறம் நெருப்பு இருப்பதாகச் சொன்னான். புகையைப் பார்த்திருந்தான். மற்றொருவன் அது பனியாக இருக்கலாம் என்றான்.

அவர்கள் புகையின் தோற்றத்தைப் பேசினார்கள். பிறகு புகை என்று அறிந்தால் நெருப்பை எவ்வாறு நிறுவுவது என்று கேட்டார்கள்.

“நம் அடுப்பில் இருப்பதைப்போல்,” என்றான் முதலாமவன்.

இருவரும் அறிந்த எடுத்துக்காட்டு பேச்சிற்கு உதவியது. அத்தகைய எடுத்துக்காட்டுகளைத் திருஷ்டாந்தம் என்றார்கள். ஆராய்ந்து ஏற்றுக்கொண்ட முடிவுகள் அடுத்த உசாவலுக்கு இடம் கொடுத்தன. அவை சித்தாந்தங்கள் ஆயின.

முதலாமவன் மீண்டும் தன் கூற்றைச் சொன்னான். கேட்டவன் அதைத் திரும்பச் சொன்னபோது காரணம் மாறியிருந்தது. ஆசிரியர் இருவரையும் நிறுத்தினார்.

அவர்கள் மீண்டும் தொடங்கினார்கள்.

அங்கே நெருப்பு இருக்கிறது என்று முதலில் முன்வைத்தான். புகை இருப்பதைக் காரணமாகச் சொன்னான். புகைக்கும் நெருப்புக்கும் உள்ள தொடர்பை அடுப்பின் எடுத்துக்காட்டால் விளக்கினான். அந்தத் தொடர்பு இங்கே பொருந்துவதைச் சுட்டினான். பின்னர் முடிவைச் சொன்னான்.

அவன் சென்ற வழியை மற்றவனும் பின்தொடர முடிந்தது. எந்த இடத்தில் ஏற்க முடியவில்லை என்பதையும் தனியே சொல்ல முடிந்தது.

ஒரு கூற்றை நிறுவும் இந்த ஐந்து உறுப்புகளை அவயவங்கள் என்றார்கள்.

அதன்பிறகு பேச்சுகள் அனைத்தும் முடிந்துவிடவில்லை. ஒரு காரணத்தை ஏற்றால் பிற அறிந்தவற்றுடன் முரண்படுமா என்று உசாவினார்கள். தர்க்கம் வளர்ந்தது. ஐயத்தை ஆராய்ந்து தெளிந்த இடம் நிர்ணயம் ஆனது.

சில மாணவர்கள் சேர்ந்து உண்மையை அறியப் பேசினார்கள். சிலர் கூட்டத்தின் முன்னால் தோற்க விரும்பவில்லை. ஒருவர் தாம் ஏற்காத காரணத்தையே எதிராளிக்கு எதிராகப் பயன்படுத்தினார். இன்னொருவர் மறுத்துக்கொண்டே இருந்தார்; தானாக எதையும் நிறுவவில்லை.

ஆசிரியர்கள் இந்தப் பேச்சுகளையும் கவனித்தார்கள். உண்மை தேடும் வாதம், வெற்றி தேடும் ஜல்பம், மறுப்பையே நாடும் விதண்டை என்று வேறுபடுத்தினார்கள். காரணம்போல் தோன்றிய பிழைகளையும், சொல்லின் பொருளைத் திருப்பிய இடங்களையும், பொருந்தாத ஒப்புமைகளால் மறுத்ததையும், வாதம் முறிந்த இடங்களையும் உசாவினார்கள்.

விவாதம் நிகழ்ந்த நாளொன்றில் மாணவன் தன் கூற்றைத் திரும்பப் பெற்றான். அருகில் இருந்தவன் சிரிப்பான் என்று எதிர்பார்த்தான். அவன் காரணத்தை மீண்டும் கேட்டான். இருவரும் சேர்ந்து பார்த்தார்கள்.

வீட்டிற்குத் திரும்பும்போது சொல்லியிருக்க வேண்டிய மறுமொழிகளை அவன் மனத்தில் அடுக்கவில்லை.

பல காலம் கௌதமர்களின் கேள்விகள் என பயணித்தன. ஒரு பள்ளியில் நிலைபெற்ற விளக்கத்திற்கு மற்றொரு பள்ளியிலிருந்து மறுப்பு வந்தது. அந்த மறுப்பைக் கேட்டவர்கள் தாங்கள் சொன்னதை மீண்டும் பார்த்தார்கள். சில சொற்களை மாற்றினார்கள். சில தொடர்புகளைத் தெளிவாக்கினார்கள். சிலவற்றைத் தொடர்ந்து நிறுவினார்கள்.

தலைமுறைகள் சென்றன. ஹேமலேகாவின் மகன் தன் பிள்ளைகளுக்கு அவள் பாடிய பாடலைப் பாடினான். சிந்தாமணியின் கடை வேறொருவரிடம் சென்றது. கிளியின் குரலைக் கேட்டவர்கள் சிலர் அதை நினைவில் வைத்திருந்தார்கள். பாடலின் கேள்வி பல ஊர்களில் பல விதமாகச் சொல்லப்பட்டது.

கௌதமர்களின் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாறினார்கள். ஒருவன் விட்ட இடத்திலிருந்து இன்னொருவன் தொடர்ந்தான். பல பள்ளிகளில் இருந்த எழுத்துகளை ஒப்பிட்டார்கள். அறிதலின் வழிகள், அறியப்படும் பொருள்கள், அவற்றின்மீது எழுந்த ஐயங்கள், நிறுவல்கள், மறுப்புகள் ஆகியவற்றைத் தொகுத்தார்கள்.

அவற்றைக் கற்றவர்கள் எதிரே இருந்த உலகுடன், அதைத் தாம் எவ்வாறு அறிந்தோம் என்பதையும் கவனித்தார்கள். பிறர் சொன்னதை ஆராய்ந்தபோது தங்கள் முடிவுகளையும் உசாவினார்கள். உறவால் ஏற்றதையும், அச்சத்தால் பற்றியதையும், வெல்ல வேண்டும் என்பதற்காகச் சொன்னதையும் வேறுபடுத்த முயன்றார்கள்.

பிழையான அறிதலிலிருந்து குற்றங்கள் எழுந்ததையும், அவற்றிலிருந்து செயல் தொடர்ந்து பிறப்பும் துயரமும் நீண்டதையும் ஆராய்ந்தார்கள். பிழையான அறிதல் நீங்கும்போது அதன் பின்னால் வந்தவற்றின் பிடியும் அடுத்தடுத்து நீங்கும் என்று கண்டார்கள். அந்தத் தொடரிலிருந்து முற்றாக விடுபடுதலை அபவர்க்கம் என்றார்கள்.

பல தலைமுறைகளின் கேள்விகளை ஆழ்மனதின் அடித்தளம் வரை அறிந்தவனும், பிரபஞ்சப் பேரொழுக்கின் பெருங்கருணையை அடைந்தவனும், அக்கருணையின் சாரத்தைத் தொகுத்தறியும் வல்லமை கொண்டவனுமான கௌதமன் ஒருவன், அதனை ஐந்து நூல்களாகத் தொகுத்தான்.

தொகுப்பின் முதல் பாடல் பதினாறு என பிரபஞ்ச பேரொழுக்கினை விசோனியர்களுக்கு அளித்தது.

அறியும் அளவை, அறியப்படும் பொருள்,
ஐயமும் பயனும் எடுத்துக்காட்டும்,
நிலைபெற்ற முடிவும் நிறுவும் உறுப்பும்,
உசாவும் தர்க்கமும் தெளிந்த துணிவும்,
உண்மை தேடும் வாதமும்,
வெற்றி தேடும் பேச்சும்,
மறுப்பையே நாடும் விதண்டையும்,
காரணம்போல் தோன்றும் பிழையும்,
சொல்லைத் திரிக்கும் வஞ்சமும்,
பொருந்தா ஒப்பால் எழும் மறுப்பும்,
வாதம் முறிந்து நிற்கும் இடமும்
இப்பதினாறையும் உள்ளவாறு
வேறுபடுத்தி அறிதலால்,
மேலான நன்மை விளைந்திடுமே,
விடுதலையின் வழி திறந்திடுமே.

உண்மையைச் சொல்லத் தேடிய வழி, உண்மையை அறியும் வழியாகவும், அறிந்ததன் வழியே விடுதலையை நோக்கிச் செல்லும் வழியாகவும் விரிந்திருந்தது. தத் அத்யந்த விமோக்ஷஹ, அபவர்கஹ என அறைகூவல் விடுத்தான்.

அந்தத் தொகுப்பில் ஹேமலேகாவின் தாலாட்டுப் பாடலும் சூத்திரமென வடிவு கண்டு தங்கியதாக விசோனில் அக்காலத்தில் ஐதீகம் இருந்தது. ஹேமலேகா என்னும் பெயர் மறைந்து போனபின்பும் அவள் தேடிய மெய்மையின் குரல் விசோனில் நியாயம் என நீடித்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.