புரட்சியின் தொடக்கம் 

இருபதாம் நூற்றாண்டின் இயற்பியல்,  பிரபஞ்சம் குறித்த நியூட்டானிய சித்திரத்தில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வந்தது. அதன் புதிய அடிவைப்புகளே இன்றைய தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக உள்ளன. பொது சார்பு மற்றும் துளிம இயக்கவியல் என்னும் இரண்டு கொள்கைகளை முன்வைத்தே பிரபஞ்சம் பற்றிய நம்முடைய ஆழமான புரிதல் அமைந்துள்ளது. சார்பியல் சார்ந்து வெளி மற்றும் காலம்; துளிம கொள்கை சார்ந்து பொருள் மற்றும் ஆற்றல்‌ என 

இரண்டு கொள்கைகளும் உலகம் குறித்த மரபான சிந்தனைகளில் அப்பட்டமான மறுசீராய்வினை கோரின.

இந்த பகுதியில், இவ்விரண்டு கொள்கைகளைப் பற்றி சற்று விரிவாக, அவற்றின் மையக் கருத்தினை தெளிவுபடுத்தி, அவை கொணர்ந்த கருத்துப் புரட்சியினை கோடிட்டுக் காட்டப் போகிறேன். இருபதாம் நூற்றாண்டு இயற்பியலின் மாயம் இங்கிருந்தே துவங்குகிறது.  அதைப் படித்துப் புரிந்து கொள்வது ஒரு வசீகரிக்கும் சாகசம்.

இன்று நாம் கட்டியெழுப்பும் துளிம ஈர்ப்பியல் கொள்கைக்கான அடித்தளமாக அமர்ந்திருப்பது சார்பியல் மற்றும் துளிம கொள்கைகளே. நமது முன் செல்லும் முயற்சிகளின் ஏவுதளங்கள் இவை.

ஆல்பர்ட் 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் தந்தை இத்தாலியில் மின் உற்பத்தி நிலையங்களை கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆல்பர்ட் ஒரு சிறுவன்;  அதுபோலவே மேக்ஸ்வெல் சமன்பாடுகள் வெளிவந்து சில தசாப்தங்களே ஆகியிருந்தன. தொழிற் புரட்சியின் துவக்கத்திலிருந்த இத்தாலியில் தந்தை கட்டியெழுப்பிய சுழலிகளும் ( Turbine) மின்மாற்றிகளும் (Transformer) மேக்ஸ்வெல் சமன்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. புதிய இயற்பியலின் தாக்கமும் வீச்சும் கண்கூடாகவே தெரிந்தது.

ஆல்பர்ட் கலகக்காரராக இருந்தார். பெற்றோர் பள்ளிப் படிப்பிற்காக அவரை ஜெர்மனியிலேயே விட்டுச் சென்றனர். ஜெர்மானிய கல்விமுறை மிகுந்த இறுக்கமானதாகவும் ராணுவத்திற்கு இணையான கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் கருதியவர், அதன் அதிகாரத்தினை ஏற்க இயலாமல் பள்ளிக் கல்வியையே கைவிட்டார்.  இத்தாலியில் பாவியா நகரில் தன் பெற்றோருடன் மீண்டும் இணைந்த ஆல்பர்ட் ‘வெறுமனே’ பொழுது போக்கிக் கொண்டிருந்தார்.  பின்னர் மீண்டும் கல்விக்காக ஸ்விட்சர்லாந்து சென்றார்; ஆனாலும் எதிர்பார்த்தபடி ஜூரிக் (Zurich) பல்கலையில் இடம் கிடைக்கவில்லை. கல்லூரி படிப்பிற்குப் பிறகு ஆய்வுப்பணி ஏதும் கிடைக்காமல்,  தனது காதலியுடன் வாழ்வதற்காக ஃபேர்ன் (Berne) நகரில் காப்புரிமை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

 ஒரு இயற்பியல் பட்டதாரிக்கு ஏற்ற வேலையாக இல்லையென்றாலும், தனிப்பட்டு செயலாற்றவும் சிந்திக்கவும் ஆல்பர்டிற்கு நேரம் கிடைத்தது. அவர் சிந்தித்து செயலாற்றவும் செய்தார். சொல்லப்போனால், இதைத் தான் சிறு வயது முதல் அவர் தொடர்ந்து செய்து வந்தார் – பள்ளியில் கற்பிப்பதை பற்றி கவலைப்படாமல், யூக்ளிடின்  elements மற்றும் காண்டின் critique of pure reason நூல்களைப் படித்து வந்தார். பழகிய பாதையிலேயே புதிய இடத்திற்கு உங்களால் செல்ல முடியாது.

தனது இருபத்தி ஐந்தாவது வயதில், Annalen der physik ஆய்வு சஞ்சிகைக்கு மூன்று கட்டுரைகளை அனுப்பினார்.  ஒவ்வொன்றும் நோபல் பரிசுக்கும், அதற்கு மேலுமே தகுதியானவை. நமது உலகம் குறித்த புரிதலுக்கு இந்த மூன்று கட்டுரைகளுமே அடிப்படையானவை‌. அணுக்களின் பரிமாணங்களை கணித்து,  பொருட்கள் மூலக்கூறுகளாலானவை என்னும் டெமாகிரீடஸின் கருத்து சரியென இருபத்து மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிரூபித்த இளம் ஆல்பர்டின் முதல் கட்டுரையைப் பற்றி  முன்னரே சொல்லியிருந்தேன்.

ஐன்ஸ்டைனை மிகப் பிரபலமாக்கிய, சார்பியல் கொள்கையை அறிமுகப்படுத்திய இரண்டாவது கட்டுரைக்காக – குறிப்பாக சார்பியல் கொள்கைக்காகவே இந்த முழு அத்தியாயமும் ஒதுக்கப்பட்டுள்ளது‌.

சொல்லப்போனால், இரு சார்பியல் கொள்கைகள் உள்ளன. இருபத்தி ஐந்து வயது ஐன்ஸ்டைனின் கடித உறையில் இருந்தது முதலாவது கொள்கையின் – இன்று சிறப்பு சார்பியல் என கூறப்படுவதன் – விளக்கவுரை. மிக முக்கியமான பொது சார்பியல் கொள்கைக்கு முன்பாக, காலம் மற்றும் வெளியின் கட்டமைப்பு குறித்த சிறப்பு சார்பியலின் மிக முக்கியமான விளக்கத்தினை இங்கு எடுத்துரைக்கப் போகிறேன்.

சிறப்பு சார்பியல் நுண்ணிய சிக்கலான கொள்கையாகும். புரிந்து ஏற்றுக் கொள்வதற்கு பொது சார்பியல் கொள்கையை விட மிகக் கடினமான ஒன்று.  வாசகரே, அடுத்து வருகின்ற சில பக்கங்கள் சிறிது  கடினமாக இருந்தால் அதற்காக தளர வேண்டியதில்லை. பிரபஞ்சம் குறித்த நியூட்டானிய தரிசனத்தில் ‘ஏதோ’ விடுபட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல – அதை பொதுப் புத்திக்கு நேர் மாறாக புரட்சிகர மாற்றத்திற்கும் உட்படுத்த வேண்டியுள்ளது‌. பிரபஞ்சம் குறித்த நமது உள்ளார்ந்த புரிதலின் உண்மையான முதல் பாய்ச்சல் என்பது இதுவே.

நீட்டிக்கப்பட்ட நிகழ்காலம் 

நியூட்டனுடையதும் மாக்ஸ்வெலுடையதுமான கொள்கைகள் ஓன்றுடன் ஒன்று மிக மிக நுட்பமாக  முரண்படுவது போல தோன்றும். மாக்ஸ்வெலின் சமன்பாடு திசைவேகம் (velocity ) – குறிப்பாக ஒளியின் திசைவேகத்தினை கணிக்கிறது. நியூட்டனுடைய இயக்கவியலோ அடிப்படை திசைவேகம் என்னும் கோட்பாட்டிற்கே இயைந்து போகாதது. அதன் சமன்பாட்டில் திசைவேகமல்ல, வேக முடுக்கமே (Acceleration) முக்கியமானது.  நியூட்டனின் இயற்பியலில், திசைவேகம் என்பது இன்னொன்றைப் பொறுத்த ஒன்றின் திசைவேகம் மட்டுமே. நம்மால் நேரடியாக உணர முடியாவிட்டாலும் புவியின் நகர்வு சூரியனைப் பொறுத்ததே. ஏனெனில்,  ‘வெறும்’ திசைவேகம் என்பது பொதுவாக புவியைப் பொறுத்ததே. திசைவேகம் என்பது ஒரு ‘சார்பான’ கருதுகோள் – எனவே ஒரு பொருளுக்கு தனி முற்றான , தன்னை மட்டுமே சார்ந்திருக்கும் திசைவேகம் என்பது அர்த்தமற்றது. ஒரு பொருளின் திசைவேகம் இன்னொன்றினைப் பொறுத்ததே. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இன்றும் இயற்பியல் மாணவர்கள் இதையே கற்கிறார்கள். அப்படியென்றால், மாக்ஸ்வெல் சமன்பாடுகள் நிர்ணயித்த ஒளியின் வேகம் எந்த மற்றொன்றின் திசைவேகத்தைப் சார்ந்தது?

 பிரபஞ்சமளாவிய  ‘கீழ் அடித்தளம்’ ஒன்றைப் பொறுத்தே ஒளியின் வேகம் அமையும் என்பது ஒரு சாத்தியக்கூறு. ஆனால் மாக்ஸ்வெல் கோட்பாட்டின் ஊகங்கள் இந்த அடித்தளம் சார்ந்ததாக இல்லை. ஊகரீதியிலான இந்த அடித்தளத்தைப் பொறுத்து பூமியின் வேகத்தை கணிக்க பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

 எந்தவொரு பரிசோதனை முயற்சிகளாலும் அல்லாது, நியூட்டனின் இயக்கவியலுக்கும் மாக்ஸ்வெலின் சமன்பாடுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் மீதான எதிரீடே தன்னை சரியான வழியில் செலுத்தியது என ஐன்ஸ்டைன் கூறுகிறார். நியூட்டன் மற்றும் கலலேயோவின் கண்டறிதல்களையும் மாக்ஸ்வெலின் கோட்பாட்டையும் எப்படியாவது முரண் எதுவும் இல்லாமல் விளக்க ஏதேனும் வழி இருக்குமா எனவும் தன்னையே கேட்டுக் கொண்டிருந்தார்.

தனது இந்த சிந்தனையோட்டத்தில் பெரும் வியப்பளிக்கக்கூடிய கண்டுபிடிப்பினை நிகழ்த்தினார்.  இதை புரிந்து கொள்ள, நமது இந்த நொடி – நாம் இப்போதிருக்கும் இடம் – இவற்றைப் பொறுத்து முக்கால நிகழ்வுகள் கீழ்க்கண்டவாறு பரவியுள்ளதாக எடுத்துக் கொள்வோம்.

ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்பின் படி, கீழ்க்கண்ட படமே சரியானது. மேலே உள்ள படம் தவறு.

கடந்த – எதிர் கால நிகழ்வுகளுக்கு இடையில் , இந்த இரு காலங்களையும் சாராத நடு-மண்டலம்  அல்லது நீட்டிக்கப்பட்ட நிகழ்காலம் என ஒன்றுள்ளது. சிறப்பு சார்பியலுடன் வெளிவந்த கண்டுபிடிப்பு இது.

இந்த நடு-மண்டலத்தின் ஆயுட்காலம் மிகச் சிறியது மற்றும் நமது இடத்தைப் பொறுத்து அது நிகழும் இடத்தின் தொலைவைச் சார்ந்தது. எவ்வளவிற்கு இந்த தொலைவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவிற்கு நடு-மண்டலத்தின் ஆயுளும் இருக்கும். நமது மூக்கிற்கு சில மீட்டர்கள் தூரத்தில் இந்த நடு-மண்டலத்தின் ஆயுள்,  இன்மைக்கு மிக நெருங்கிய சில நானோ நொடிகள் மட்டுமே. ( ஒரு விநாடியில் நானோ நொடிகள் என்பது முப்பது ஆண்டுகளில் சில நொடிகள் என்பதற்கு சமானம்). நம்மால் கவனிக்க முடிவதற்கும் மிகக் குறைந்த கால அளவு இது. இனி இந்தத் தொலைவு சமுத்திரத்திற்கு அப்பால் எனில், நடு-மண்டலத்தின் ஆயுள்,  நொடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு. இதுவும் நமது புலன் எல்லைக்கு அப்பால் உள்ளது. ஆனால் இதுவே நிலவு  என்றால் சில நொடிகள், செவ்வாய் கிரகம் என்றால் கால் மணிநேரம். அதாவது, இந்த கணத்தில், செவ்வாய் கிரகத்தில், ஏற்கனவே நிகழ்ந்த மற்றும் நிகழப் போகும் நிகழ்வுகளுடன், கடந்த மற்றும் எதிர்காலம் ஏதும் இல்லாத கால் மணிநேரம் என ஒன்றுள்ளது.

இந்த நடு-மண்டலங்களை வேறெங்கொன்று எனலாம். நமக்கு மிக அருகாமையில் இந்த வேறெங்கொன்று மிகமிக குறுகியதாக இருப்பதால் இதுவரையிலும் அவற்றை அறிய முடியவில்லை. ஆனால் அவை உள்ளன, அவற்றின் இருப்பும் உண்மையானது.

இனி, புவியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கான சுமூகமான தொலைத்தொடர்பு என்பதில் உள்ள பெரும் சிக்கல் இதுவே. உதாரணத்திற்கு, நான் செவ்வாயிலும் நீங்கள் இங்கும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டு, அக்கேள்வி உங்களை வந்தடைந்தவுடன் நீங்கள் பதிலளிக்கிறீர்கள். உங்களது பதில் என்னை வந்தடைய கால்மணி நேரமாகிறது. இந்த கால் மணிநேரம் என்பது, நீங்கள் எனக்கு பதிலளித்த கணத்தில் கடந்தகாலமோ எதிர்காலமோ இல்லாத ஒன்று. இயற்கை குறித்த ஐன்ஸ்டைனின் புரிதலில் இந்த ‘கால்மணி நேரம்’ என்பது தவிர்க்கவோ – குறைக்கவோ முடியாத ஒன்று, கால-வெளி நிகழ்வுகளின் நெசவில் ஊடுபாவியது. அதை சுருக்குவது கடந்தகாலத்திற்கு செய்தி அனுப்புவதற்கு நிகரானது ( முடியாதது).

எப்படி புவியின் கீழ்ப்பகுதியில் சிட்னி நகரத்து மக்கள் தலைகீழாக நின்று வாழ்வது விசித்திரமாக ஆனால் உண்மையாக உள்ளதோ அது போலவே இந்த கருத்தும் மிக விசித்திரமானது. ஆனாலும் உலகம் இப்படித்தான் அமைந்திருக்கிறது. எனவே சிறிது காலத்திற்குப் பிறகு ஆச்சரியம் நீங்கி இந்த புதிய கருத்து இயல்பானதாக மாறிவிடும். கால-வெளியின் கட்டமைப்பே இந்த விசித்திரங்களுக்கான காரணமாக உள்ளது.

செவ்வாயில் ‘இப்போது’ நடந்தது என்று சொல்வது எவ்வளவு பொருளற்றது என்பது இனி விளங்கும், ஏனெனில் ‘இப்போது’ என எதுவும் இல்லை.

இயற்பியல் கலைச்சொற்களில் கூறினால், ஐன்ஸ்டைன்  ‘ பூரண உடனிகழ்வு’ ( absolute simultaneity) என எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.  பிரபஞ்சத்தில் இப்போது நடக்கும் நிகழ்வுகளோ நிகழ்வுத் தொகுப்பு என்றோ எதுவும் இல்லை.  பிரபஞ்ச நிகழ்வுகளின் தொகுப்பை இப்போதைய – நிகழ்காலத்தின் ஒன்றையொன்று தொடரும் தொடர்ச்சி என எளிதாகக் கூற முடியாது. மாறாக அது படம் 3.2ல் காட்டியபடி மிகச் சிக்கலான கட்டமைப்பை கொண்டுள்ளது.  கடந்த மற்றும் எதிர்காலங்களுடன் இவ்விரண்டு காலங்களும் இல்லாத ஒன்றையும் உள்ளடக்கிய தொகுப்பையே இயற்பியலில் காலவெளி என்று கூறுகிறோம். மேற்சொன்ன படமும் அதையே விளக்குகிறது கடந்த – எதிர்காலமற்ற அந்த ஒன்று எந்தவொரு தருணத்தையும் தனியாக உருவாக்குவதில்லை. தனக்கானதொரு தனி கால அளவினை அது கொண்டிருக்கிறது.

முன்சொன்ன செவ்வாய் கிரகத்திற்கு பதிலாக ஆண்ட்ரோமீடா விண்மீன் மண்டலத்தை எடுத்துக் கொண்டால், இங்கு நீட்டிக்கப்பட்ட நிகழ்காலம் இரண்டு மில்லியன் ஆண்டுகள் என்னும் அளவிற்கு வரும். இந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளில் நடந்தவை நம்மைப் பொறுத்தவரை கடந்த – எதிர் காலம் எதுவும் இல்லாதது. ஒருவேளை நட்பார்ந்த ஆண்ட்ரோமீடா நாகரீகம் ஒன்று நம்மை பார்ப்பதற்கு விண்கலத்தினை அனுப்பினால்,  அந்த விண்கலம் ‘இப்போது’ கிளம்பிவிட்டதா அல்லது இன்னமும் கிளம்பிக் கொண்டிருக்கிறதா என்று கேட்பது அர்ததமில்லாதது.  இங்கு சரியான கேள்வி என்பது – விண்கலத்திலிருந்து முதல் சமிக்ஞை எப்போது நம்மை வந்தடையும் என்பதே.  அந்த நேரத்தில் இருந்தே – அதற்கு முன்னால் அல்ல – விண்கலத்தின் பயணம் தொடங்கியது.

1905ல் காலவெளியின் கட்டமைப்பு குறித்த ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்பு தீர்க்கமான விளைவுகளை உண்டாக்கியது. காலமும் வெளியும் மிக நெருக்கமான தொடர்புடையன என்னும் கருதுகோள் நியூட்டானிய இயக்கவியலில் மிக நுட்பமான மறுகட்டமைப்பிற்கு வழிவகுத்தது – ஐன்ஸ்டைன் அதை 1905-06ல் அதிவேகமாக நிறைவேற்றினார். இந்த மறு கட்டமைப்பின் முதல் விளைவு, எப்படி காலமும் வெளியும் இணைந்து காலவெளி என்னும் புதிய இருப்பு கண்டறியப்பட்டதோ , அது போலவே மின் மற்றும் காந்த புலங்கள் இணைந்து மின்காந்த புலம் என்னும் புதிய வஸ்து கண்டுபிடிக்கப் பட்டது.  இரு புலங்களுக்கும் தனித்தனியாக மாக்ஸ்வெல் எழுதிய சிக்கலான சமன்பாடுகள் இப்போது ஒற்றைப் புலத்தின் பிண்ணனியில் எளிதாகின.

ஐன்ஸ்டைனது கண்டுபிடிப்பு இன்னொரு அச்சமூட்டும் பெரும் பின்விளைவுகளுக்கு வழி வகுத்தது.  கால-வெளி மற்றும் மின்-காந்த புலங்களின் இணைவு போல,  ஆற்றல் ( Energy ) மற்றும் நிறை (Mass) கருதுகோள்கள்இணைந்து புதியதொரு இயக்கவியலை உண்டாக்கியது. 1905ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு கொள்கைகள் உறுதியாக நிலைகொண்டிருப்பதாகத் தோன்றியது – நிறை அழிவின்மை ( Conservation of Mass) , ஆற்றல் அழிவின்மை ( Conservation of energy).  முதல் கொள்கை வேதியியலாளர்களால் பலமுறை சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வேதிவினையிலும் நிறை என்பது மாறாதது.  இரண்டாவது – ஆற்றல் அறிவின்மை விதி – நியூட்டனது சமன்பாடுகளில் தோன்றி , விதிகளுள் அமரத்துவம் பெற்றது என்றே கருதப்பட்டது. ஆனால் நிறையும் ஆற்றலும் ஒரே வஸ்துவின் வெவ்வேறு முகங்களே என ஐன்ஸ்டைன் கண்டுணர்ந்தார். அதன்படி, நிறையும் ஆற்றலும் தன்னளவிலேயே தனித்தனியாக அழிவற்றது அல்ல. ஒன்று மற்றொன்றாக மாறலாம். உண்மையில் இருப்பது இரண்டு அழிவின்மை கொள்கைகள் அல்ல – ஒன்று மட்டுமே. அழிவின்றி இருப்பது நிறை மற்றும் ஆற்றலின் கூட்டில் மட்டுமே- தனித்தனியாக அல்ல. ஆற்றலை நிறையாகவும் அதற்கு நேர் எதிராக நிறையை ஆற்றலாகவும் மாற்றக்கூடிய செயல்முறைகளும் இருந்தாக வேண்டும்.

ஒரு கிராம் நிறையை எவ்வளவு ஆற்றலாக மாற்ற இயலும் என்பதை ஒரு  துரிதமாக கணிப்பு ஐன்ஸ்டைனுக்கு கற்பித்தது. மிகப் புகழ்பெற்ற E = mc2 சமன்பாடே அதிலிருந்து உருவானது. ஒளியின் வேகமான  C மிகப் பெரியது, C2 இன்னமும் பெரியது. எனவே ஒரு கிராம் நிறையுள்ள பொருளை ஆற்றலாக மாற்றினால் அது பேராற்றலாக – உலகின் அனைத்து நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மாதக்கணக்கிற்கு தேவையான அளவு  ஆற்றலாகவோ , ஹிரோஷிமா போன்று நொடியில் பலநூறு கோடி மக்களை கொன்றழித்து பேரழிவினை உருவாக்கும் ஆற்றலாகவோ மாறும்.

அணு சக்தியும் எண்ணற்ற சாத்தியக் கூறுகளும், இணையாகவே புதிய பேராபத்துகளையும் கொண்டுள்ள புதிய யுகத்திற்கு இளம் ஐன்ஸ்டைனது கோட்பாடு ஊகங்கள்  மானுடத்தினை முன்னெடுத்துச் சென்றன‌.  கட்டுப்பாடுகளுக்கு அடங்காத அந்த கலகக்கார இளைஞனது அறிவுத்திறனின் பயனாக ஆயிரம் கோடி மக்களுக்கு அவர்களது வீட்டிற்கே ஒளியை கொண்டுவரும் கருவிகளையும்,  விண்மீண்களை நோக்கிய பிரபஞ்ச பயணத்திற்கான வழிகளையும் – அல்லது – ஒருவரையொருவர் மிச்சமின்றி அழித்துக் கொள்ளவும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளோம். இதில் தேர்வு என்பது நம்முடையது அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுடையது.

ஐன்ஸ்டைன் முன்மொழிந்த காலவெளி கட்டமைப்பு இன்று மிக நன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டு,  ஆய்வகங்களில் மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, நிறுவப்பட்ட ஒரு உண்மையாகத் திகழ்கிறது. காலமும் வெளியும் நியூட்டனிலிருந்து முற்றிலும் புதியதாக உள்வாங்கப்பட்டன. வெளி காலத்திலிருந்து முற்றாக பிரிந்திருக்கவில்லை. படம் 3.2ல் காட்டப்பட்ட  மிக விரிவான வெளியில், ‘இன்றைய வெளி’ என தனியாக எதுவும் இல்லை. பிரபஞ்சத்தில் ‘இப்போது’ நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்கிய, பொதுவாக நிகழ்காலம் என நாம் கருதுவது, உண்மையில் மிகக் குறுகிய கால இடைவெளிகளை‌ (temporal intervals) காண‌ முடியாத நமது பார்வையின்மையின் விளைவு மட்டுமே – நமது குழி அனுபவத்தின் விளைவான மிகப் பிழையான கருத்துருவாக்கமேயன்றி வேறல்ல.

நிகழ்காலம் என்பது ‘தட்டையான பூமி’ என்பதற்கு  நிகரான மாயத் தோற்றம். நமது நாசியைத் தாண்டி கிட்டத்தட்ட எதையுமே பார்க்க இயலாததால் தான் பூமி தட்டையானது என நினைத்திருந்தோம். ஒருவேளை சிலநூறு கிமீ விட்டமுள்ள விண்கல்லில் வாழ்ந்திருந்தால் அது தட்டையல்ல , மாறாக உருளை என எளிதாக கண்டறிந்திருப்போம்.  அது போலவே, நானோ நொடிகளை உணருமளவிற்கு நமது புலன்கள் கூர்மையானதாக இருந்திருந்தால் , எங்கும் திகழும் எதிர்காலம் என ஒன்றை கருதியிருக்க மாட்டோம். முன்சொன்ன மிகச் சிறிய கால இடைவெளிகளை எளிதாக உணர்ந்திருப்போம்.  இங்கு – இப்பொழுது என் கூறுவது கூட சரியாக இருந்தாலும் பிரபஞ்சமெங்கும் ‘நடைபெற்றுக்’ கொண்டிருக்கும் நிகழ்வுகளை , இப்பொழுது நடப்பதாக கூறுவது சிறிதும் அர்த்தமற்றது என்பதையும் உணர்ந்திருப்போம்.  இது ஆண்ட்ரோமீடா  மண்டலம் பால்வெளி மண்டலத்திற்கு மேலே உள்ளதா அல்லது கீழே உள்ளதா என்று கேட்பதற்கு ஒப்பானது. மேல் – கீழ் என்பது பூமியின் தரையில் இருந்து மட்டுமே அர்த்தப்படக்கூடிய ஒன்று ‌. பிரபஞ்ச வெளியில் மேல் – கீழ் என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை.   அது போலவே , இரு நிகழ்விற்கு இடையே ‘முன்’ – ‘பின்’ என எதுவும் இல்லை. படம் 3.4 இயற்பியலாளர்களின் புதிய காலவெளி கட்டமைப்பை விளக்குகிறது.

Annalen der Physik இதழில் வெளிவந்த ஐன்ஸ்டைனின் கட்டுரை

மேற்சொன்ன விஷயங்களை தெளிவாக விளக்கியது இயற்பியல் அகிலத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.   பரலவலாக அறியப்பட்ட நியூட்டன் மற்றும் மேக்ஸ்வெல் சமன்பாடுகளுக்கு இடையேயான மைய முரண்பாட்டினை தீர்க்கும் வழிதான் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஐன்ஸ்டைனது பிரமிப்பூட்டும் அதியற்புத தீர்வு அனைவரிடத்தும் பேராச்சரியத்தை உண்டாக்கியது.  க்ராகவ் பல்கலையின் புராதன அரங்கிலிருந்து மங்கிய வெளிச்சத்தில் வெளிவந்த பெரும் ஆசிரியர் ஒருவர், ஐன்ஸ்டைனது கட்டுரையை வேகமாக ஆட்டியபடி ‘ ஆர்க்கிமிடீஸ் மீண்டும் பிறந்து விட்டார்’ என கூவியதாக ஒரு தொன்மம் உள்ளது.

ஐன்ஸ்டைனது முன்வைப்பு பேரலையை உண்டாக்கினாலும், அவரது மகத்தான படைப்பை நாம் இன்னும் காணவில்லை. ஐன்ஸ்டைனது பெருவெற்றி, மேலும் பத்து வருடங்களுக்குப் பிறகு , அவரது முப்பத்தைந்து வயதில் வெளிவந்த பொது சார்புக் கொள்கையில் தான் இருக்கிறது.

பொது சார்புக் கொள்கை – இதுவரையிலான இயற்பியல் கொள்கைகளிலேயே மிக அழகானது – துளிம ஈர்ப்பியலின் முதற்றூணும் கூட. இந்த நூலின் மைய கருத்தாக்கமும் அதுவே.  இருபதாம் நூற்றாண்டின் உண்மையான மாயாஜாலம் இங்கிருந்து தொடங்குகிறது.

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

மைக்கேல்:  புலங்களும் ஒளியும் வதனமுறு பெரும் கொள்கை

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.