- துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்
- வேர்கள்
- வகுத்துச் செல்வதன் எல்லை ?
- பொருட்களின் இயற்கை
- நியூட்டனும் பிறையும் – 1
- நியூட்டனும் சிறுநிலவும் – 2
- மைக்கேல்: புலங்களும் ஒளியும்
- புரட்சியின் தொடக்கம்
- வதனமுறு பெரும் கொள்கை
- கணிதமா இயற்பியலா?
- துளிமம்
- புலங்களும் துகள்களும் ஒன்றே
- துளிம வெளியும் சார்பான காலமும்
- வெளியின் துளிமம்
- காலம் என்பது இல்லை
- கால வெளிக்கு அப்பால்
- நேர்க்காட்சி நிரூபணங்கள்
(கார்லோ ரொவெல்லி எழுதிய Reality is not what it seems நூலின் மொழியாக்கம்)
மொழியாக்கம் : சங்கரன் ரவிச்சந்திரன்
பெருவெடிப்பிற்கு அப்பால் என்ன என்பதைப் பற்றிய வசீகரமான கோட்பாட்டு ஊகங்களையும் தாண்டி துளிம பிரபஞ்சவியலின் தாக்கம் நீடிக்கிறது. பெருவெடிப்புக் கொள்கையின் பயன்பாட்டை ஆராய்வதற்கு வேறொரு காரணமும் உள்ளது: இக்கொள்கை உண்மையிலேயே சரியானதா என்பதைக் கண்டறிவதற்கான வாய்ப்பினை கைக்கொள்வது.
ஊகங்கள் மற்றும் விளக்கங்கள் ( reasoning) , உள்ளுணர்வுகள் மற்றும் தரிசனங்கள், சமன்பாடுகள் மற்றும் கணக்கீடுகள் – இவைகளுக்குப் பிறகு நாம் சரியாக முன்வந்திருக்கிறோமா இல்லையா என்பதை பரிசோதித்துக் கொள்ள இயல்வதாலேயே அறிவியல் தடம்புரள்வதில்லை. கொள்கைகளும் கோட்பாடுகளும் நாம் இதுவரை காணாததைப் பற்றிய ஊகங்களை அளிக்கையில் அவை சரியா தவறா என பரிசோதித்து அறிய இயலும். நம்பகத்தன்மையில் வேரூன்றிய அறிவியலின் இந்த வலிமை அதன் மீது உறுதியான நம்பிக்கையை கைக்கொள்ள அனுமதிக்கிறது. ஒரு கொள்கை சரியா தவறா என்று பரிசோதிக்க இயல்வதே அறிவியலை, யார் சரி யார் தவறு என வினவுதே சிக்கலை உண்டாக்கும் மற்ற சிந்தனை முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்னும் சிந்தனையை லுமெத்ரோ வலியுறுத்தினார் – ஐன்ஸ்டைன் அதை ஏற்கவில்லை. இருவரில் ஒருவர் சரி என்றானார். மற்றவர் தவறினார். ஐன்ஸ்டைனது கண்டறிதல்கள், புகழ், அறிவியல் தளத்தில் அவரது செல்வாக்கு, அதிகாரம் – எதுவும் இங்கு செல்லுபடியாகவில்லை. பரிசோதனைகள் அவரை தவறென்று கூறின – அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அடையாளமற்ற பெல்ஜிய துறவி சரியென்றானார். இந்த ஒரு காரணத்திற்காகவே அறிவியல் சிந்தனை வலிவுடன் திகழ்கிறது.
அறிவியல் நோக்குமுறையின் சிக்கல்களை அறிவியலின் சமூகவியல் துலக்குகிறது; மற்ற மனித செயல்பாடுகளைப் போலவே இதுவும் அதிகார ஆட்டங்களால் துளைக்கப்பட்டு, முரண்பாடுகளால் சூழப்பட்டு, ஒவ்வொரு சமூக கலாச்சார கூறுகளாலும் பாதிக்கப்படுகிறது. இவையனைத்துடனும், சில பின்நவீனத்துவர்கள் மற்றும் கலாச்சார சார்பாளர்களின் (Cultural Relativist) கூக்குரல்களும் அறிவியல் சிந்தனையின் கோட்பாட்டு மற்றும் பரிசோதனை செயல்திறனை சிறிதளவும் பாதிக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலான சமயங்களில் யார் சரி யார் தவறு என்பதைத் தெளிவாகவே விளக்க இயலுகிறது. மஹா ஐன்ஸ்டைனே “ ஆ.. நான் தவறிழைத்து விட்டேன்” என்று சொல்கிறார். நம்பகத்தன்மையை முக்கியம் என நினைத்தால், அறிவியல் நம்முடைய அதிமுக்கிய வியூகமாக ( strategy) அமைகிறது.
அதற்காக அறிவியல் என்பது வெறும் அளவீட்டு ஊகங்களின் கலை அல்ல. இவ்வாறான சுருக்குதலை சில அறிவியல் தத்துவவியலாளர்கள் செய்கிறார்கள். கருவிகளை இலக்குகளுடன் குழப்பிக் கொள்வதால் நிகழும் பிழை இது. சரிபார்க்கக்கூடிய புறவயமான கணிப்புகளே ஊகங்களை சீர்தூக்கிப் பார்க்க உதவும் கருவிகள். அறிவியல் ஆய்வின் குறிக்கோள் வெறுமனே கணிப்புகளில் வந்து நிற்பதல்ல: உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்வது; அதைப் பற்றிய சிந்தனைகளுக்காக, உலகின் முழுமையான ஒரு கோட்பாட்டு சட்டகத்தை ( structure) – வரைபடத்தை உருவாக்குவது. எப்போதுமே நுட்பங்களுக்குள் செல்வதற்கு முன்னர் அறிவியல் என்பது ஒரு முன்நோக்குநர்(Visionary).
சரிபார்க்கக்கூடிய கணிப்புகள் என்கிற கூர் ஆயுதம் நமது பிழைபுரிதல்களை அகற்றிவிடுகிறது. நேர்க்காட்சி(empirical) உறுதிப்பாடுகள் இல்லாத கொள்கை, தேர்ச்சி அடையாத ஒன்றே. இங்கு தேர்வுகள் முடிவதே இல்லை. வெறுமனே இரண்டு அல்லது மூன்று தேர்ச்சிகளில் ஒரு கொள்கை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. அதன் கணிப்புகள் சரி என்றான பிறகு மெதுவாக ஒவ்வொரு படியாக ஏற்பினை அடைகிறது. பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய பொது சார்பு மற்றும் துளிம இயக்கவியல் கொள்கைகள் இவ்வாறாகவே ஏற்பைப் பெற்றன. அவற்றின் அனைத்து கணிப்புகளும் – மிக விசித்திரமானவை உட்பட – பரிசோதனைகளாலும் கூர்நோக்கினாலும் உறுதி செய்யப்பட்டன.
பரிசோதனைச் சான்றுகள் பெற்றுள்ள இந்த முக்கியத்துவம், அவையின்றி முன்செல்லக் கூடாது என்று அர்த்தப்படவில்லை. புதிய பரிசோதனை தரவு இல்லாமல் அறிவியல் முன் செல்லாது என்று பொதுவாக கூறப்படுகிறது. அது உண்மையென்றால், எந்தவொரு புதிய அளவீடும் இல்லாமல் துளிம ஈர்ப்பியல் கொள்கையை நிறைவு செய்ய இயலாது என்றாகிவிடும். ஆனால், நிச்சயமாக, அவ்வாறு அல்ல. கோபநிகஸிற்கு எந்த புதிய தரவு கிடைத்தது? எதுவும் இல்லை. டாலமி வைத்திருந்த அதே தரவுகளைத் தான் அவரும் வைத்திருந்தார். எந்த புதிய தரவுகளை நியூட்டன் கைக்கொண்டிருந்தார்? கிட்டத்தட்ட எதுவுமில்லை. கெப்ளவின் விதிகளும் கலலேயோவவின் பரிசோதனை முடிவுகளுமே அவரது மூலப்பொருட்கள். பொது சார்புக் கொள்கையை கண்டுபிடிக்க எந்த புதிய தரவுகளை ஐன்ஸ்டைன் வைத்திருந்ததார்? நியூட்டனின் கொள்கையும் சிறப்பு சார்புக் கொள்கையுமே அவரது மூலப்பொருள். புதிய தரவுகள் இருந்தால் மட்டுமே இயற்பியல் முன் செல்லும் என்பது மிகத் தவறானது.
கோபநிகஸ், நியூட்டன், ஐன்ஸ்டைன் மற்றும் பலர் செய்தது – இயற்கையின் பரந்த பல பிரிவுகளது நேர்க்காட்சி அறிதலை ஒன்றிணைக்கும் கொள்கைகளின் மீது, உலகம் குறித்த பொதுப்பார்வையினை இன்னமும் மேம்படுத்த அக்கொள்கைகளை இணைத்தும் மறுஆய்வு செய்தும் புதியவற்றை எழுப்புவது மட்டுமே.
மேற்சொன்ன அடிப்படையிலேயே துளிம ஈர்ப்பியலின் மிகச்சிறந்த ஆய்வுகள் நிகழ்கின்றன. அறிவியலில் எப்போதும் இருப்பது போல, நேர்க்காட்சியே அறிதலின் ஊற்று. ஆனால், எந்தவொரு புதிய பரிசோதனை தரவுகளின் மீதும் துளிம ஈர்ப்பியல் எழுப்பப்படவில்லை. மாறாக, உலகம் குறித்த நமது அறிதலை வடிவமைத்த, பகுதியாக மட்டுமே பிறவற்றுடன் இசைந்து போகின்ற, கோட்பாடுகளின் உலைக்கலனில் அது எழுப்பப்படுகிறது. பொது சார்புக் கொள்கையும் துளிம இயக்கவியலுமே துளிம ஈர்ப்பியலின் ‘பரிசோதனைத் தரவு’கள். இவற்றின் மீது அமர்ந்து, துளிமமும் வளைந்த வெளியும் ஒன்றிசைந்து நிகழும் ஒரு உலகை புரிந்து கொள்ள, அறியாதவற்றை நோக்க, முயல்கிறோம்.
இது போன்ற சூழலில் நியூட்டன், ஐன்ஸ்டைன், டிராக் போன்ற பெருமகன்களின் மாபெரும் வெற்றிகளே எங்களை ஊக்கப்படுத்துகிறது. அதற்காக எங்களை அவர்களுக்கு இணை வைக்கவில்லை. ஆனால், அவர்களது தோளில் அமர்ந்து அவர்களை விட தொலைதூரம் காணக்கூடிய சாதகமான நிலை நமக்கு உள்ளது. ஏதோ ஒரு வகையில், நம்மால் முயற்சி செய்ய மட்டுமே இயலும்.
தடயங்களையும் உறுதியான சான்றுகளையும் நாம் தெளிவாக பிரித்துப் பார்க்க வேண்டும். தடயங்கள் ஷெர்லாக் ஹோம்ஸை சரியான பாதையில் செலுத்தி மர்மமான ஒரு வழக்கை தீர்க்க உதவும். குற்றவாளியை தண்டிக்க நீதிபதிக்கு உறுதியான சான்றுகளே உதவும். தடயங்கள் சரியான கொள்கைக்கான சரியான பாதையில் நம்மைச் செலுத்தும். நாம் உருவாக்கிய கொள்கை சரியானதா இல்லையா என்பதை உறுதியான சான்றுகளே தெளிவுபடுத்தும். தடயங்கள் இல்லாமல் தவறான திசைகளில் அலைந்து கொண்டிருப்போம். சான்றுகள் இல்லாத ஒரு கொள்கை நம்பத்தகுந்தது அல்ல.
துளிம ஈர்ப்பியலுக்கும் இது பொருந்தும். இக்கொள்கை அதன் மழலையில் உள்ளது. இக்கொள்கையின் கோட்பாட்டு கருவி உறுதிப்பட்டு வருகிறது. அடிப்படை சிந்தனைகளும் விளக்கப்பட்டு வருகின்றன. நல்ல தடயங்கள் கிடைத்திருந்தாலும், உறுதியான கணிப்புகள் இதுவரை நிகழவில்லை. இக்கொள்கை தனது தேர்வை இன்னமும் சந்திக்கவில்லை.
இயற்கையிலிருந்து வரும் சமிக்ஞைகள்

பரவலாக ஆராயப்பட்ட இழைக் கொள்கையே (String Theory) இந்நூலில் விவரிக்கப்படும் ஆய்விற்கு மாற்றாக கருதப்படுகிறது. இழைக் கொள்கையிலோ அல்லது அது சார்ந்த கொள்கைகளிலோ ஆய்வு மேற்கொள்ளும் மிகப் பெரும்பாலான இயற்பியலாளர்கள், ஜெனிவாவில் CERN ஆய்வகத்தில் உள்ள புதிய துகள் முடுக்கியை ( particle accelerator) இயங்கும் போது (LHC / Large Hadron Collider) , இதுவரை கண்டிராத, ஆனால் கோட்பாட்டு ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட புதிய வகை துகள்கள் – அதிசீர்மைத்(supersymmetric) துகள்கள் தோன்றும் என எதிர்பார்த்தனர். இத்துகள்கள் நிலைமாறாமல் ( consistent) இருப்பது இழைக் கொள்கைக்குத் தேவையாக இருந்தது: எனவே தான் இழைக் கோட்பாட்டாளர்கள் இத்துகளை ஆவலுடன் எதிர்பார்த்தனர். மறுபக்கம், வளையத் துளிம ஈர்ப்பியல், இந்த அதிசீர்மைத் துகள்கள் இல்லாமலேயே தெளிவாக விளக்கப்பட்டது. உண்மையில், இத்துகள்கள் இருக்காது என்றே வளையக் கோட்பாட்டாளர்கள் எண்ணத் தலைப்பட்டனர்.
பலரது பலத்த ஏமாற்றத்திற்கு இடையே, அதிசீர்மைத் துகள்களை காண இயலவில்லை. இதை மறைக்கவே 2013ல் ஹிக்ஸ் போஸான் துகளின் கண்டுபிடிப்பிற்கு பெரு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இழைக் கோட்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பான – குறிப்பிட்ட ஆற்றல் நிலையில் அதீசீர்மைத் துகள்கள் இருக்கும் – என்பதும் நிகழவில்லை. இந்த முடிவுகள் எதனுடைய அறுதிச் சான்றும் இல்லை – அதற்குத் தொலைவில் கூட இல்லை. ஆனால், வளையக் கொள்கைக்கு ஆதரவாக சிறிய தடயத்தினை இயற்கை அளித்தது.
சமீப வருடங்களில் அடிப்படை இயற்பியலில் மூன்று முக்கியமான பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. முதலாவது, ஜெனிவாவில் ஹிக்ஸ் போஸான் குறித்த அறிவிப்பு ( படம் 9.1) . இரண்டாவது, ப்ளங்க் செயற்கைக்கோள் நிகழ்த்திய அளவீடுகள் ( படம் 9.2). 2013ல் பொதுப் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்ட இந்த அளவீடுகள், பொது பிரபஞ்ச மாதிரியை உறுதி செய்தன. மூன்றாவது, 2016 தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட, ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பு . சமீபத்தில் இயற்கை நமக்கு அளித்த சமிக்ஞைகள் இவை.


இந்த மூன்று முடிவுகளுக்கும் பொதுவான ஒன்று உள்ளது: முற்றான வியப்பின்மை ( complete absence of surprise) . இவற்றின் முக்கியத்துவம் இதனால் குறைந்து விடுவதில்லை. மாறாக, மேலும் அர்த்தமுள்ளதாக மாறுகிறது. ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு, துளிம இயக்கவியலின் அடிப்படையில் அமைந்த அடிப்படை துகள்களுக்கான பொது மாதிரி கொள்கையின் சிந்தனைகளுக்கு உறுதியான மாற்றமில்லா சான்றாக அமைகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்டிருந்த ஊகத்தின் தற்போதைய சரிபார்த்தலே இது. பிரபஞ்ச மாறிலியுடன் பொது சார்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பொது பிரபஞ்ச மாதிரிக்கான ( Standard Cosmological model ) உறுதியான சான்றே ப்ளங்க் அளவீடுகள். ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பு என்பது நூறாண்டுகள் கடந்த பொது மாதிரி கொள்கைக்கான அபாரமான ஒரு சான்று. மிகக் கடினமான தொழில்நுட்ப உழைப்பையும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் கூட்டு உழைப்பையும் கொண்டு பெறப்பட்ட இம்மூன்று முடிவுகளும் நாம் ஏற்கனவே அறிந்துள்ள பிரபஞ்ச கட்டமைப்பை மீள்-உறுதிப்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எந்தவொரு புதிய வியப்பும் இல்லை.
ஆனால், எந்தவொரு வியப்பும் இல்லை என்பதே ஒரு நோக்கில் வியப்பளிப்பது – இதுவரையிலான கொள்கைகளால் விளக்கப்படாத ‘புதிய இயற்பியலை’ பலர் எதிர்பார்த்தனர். செர்ன் ( CERN) பரிசோதனையில் ஹிக்ஸ் போஸானை அல்ல – அதிசீர்மைத் துகள்களையே எதிர்பார்த்தனர். ப்ளங்க் செயற்கைக்கோள் பொது பிரபஞ்ச மாதிரியின் முரண்பாடுகளை கண்டறியும் எனவும், அதன் வழியாக பொது சார்புக் கொள்கைக்கு மாற்றாக புதிய பிரபஞ்ச கொள்கைகளை கொண்டு வரலாம் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இல்லை. இயற்கையின் விடை எளிதானது: பொது சார்புக் கொள்கை, துளியை இயக்கவியல் மற்றும் அதனுள் பொது மாதிரி கொள்கை.
இப்போது பல கோட்பாட்டு இயற்பியலாளர்கள் தன்னிச்சையான ஊகங்களைக் கொண்டு புதிய கொள்கைகளைத் தேடுகிறார்கள். ‘இப்படி யோசித்துப் பார்ப்போம்……’. அறிவியலில் இந்த போக்கு எந்தவொரு நல்ல விடையையும் அளிக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இதுவரையிலான தடயங்களில் இருந்து இல்லாமல் நேரடியாக உலகம் எப்படி இருக்கும் என்பதை ‘கற்பனை’ செய்ய நமது பகற்கனவுகளால் ஒருபோதும் இயலாது. நம்மிடம் உள்ள தடயங்கள் அனைத்துமே நிரூபிக்கப்பட்ட கொள்கைகள் அல்லது புதிய பரிசோதனைத் தரவுகள் + வேறெதுவும் இல்லை. இந்தத் தரவுகள் மற்றும் கொள்கைகளிலிருந்தே நம்மால் இன்னமும் கற்பனை செய்யாதவற்றை வெளிக்கொணர முடியும். கோபநிகஸ், நியூட்டன், மாக்ஸ்வெல் மற்றும் ஐன்ஸ்டைனும் இவ்வாறு தான் முன்சென்றனர். மிகப் பெரும்பாலான கோட்பாட்டு இயற்பியலாளர்கள் இன்று செய்வதைப் போன்று ஒரு புதிய கொள்கையை அவர்கள் ஒருபோதும் ‘ஊகிக்க’வில்லை.
நான் இங்கு கூறிய மூன்று பரிசோதனை முடிவுகளும் இயற்கையின் குரலிலேயே பேசுகின்றன : “ புதிய புலங்கள், விசித்திரமான துகள்கள், துணை பரிமாணங்கள், பிற சீர்மைகள், இணை பிரபஞ்சம், இழைகள் மற்ற பிற – கனவு காணாதீர். நம்முன் உள்ள புதிரின் பகுதிகள் எளியவை: பொது சார்புக் கொள்கை, துளிம இயக்கவியல் மற்றும் பொது மாதிரி கொள்கை. நம்முடைய அடுத்த அடிவைப்பு என்பது இம்மூன்றையும் எப்படி சரியாக இணைப்பது மட்டுமே”. வளையத் துளிம ஈர்ப்பியல் குழுமத்திற்கு இது ஒரு மீளுறுதியை அளிக்கிறது. ஏனெனில், இக்கொள்கைகளின் ஊகங்கள் இவை: பொது சார்புக் கொள்கை, துளிம இயக்கவியல் மற்றும் அதனுடன் இசைந்து போகக்கூடிய பொது மாதிரி கொள்கை – அவ்வளவே. அதன் புரட்சிகர விளைவுகள் – வெளியின் துளிமம், காலத்தின் மறைவு – இவையெல்லாம் துணிச்சலான ஊகங்கள் அல்ல – நமது சிறந்த கொள்கைகளின் அடிப்படை சிந்தனைகளை அதன் முழு தீவிரத்துடன் கைக்கொண்டதால் கிடைத்த தெளிவான விடைகள்.
மீண்டும் ஒருமுறை, இவற்றை அறுதிச் சான்று என கூற இயலாது. இதுவரை நாம் செல்லாத நுண் அளவுகளில் அதிசீர்மைத் துகள்கள் இருக்கலாம். வளையத் துளிம ஈர்ப்பியலும் சரி என அமையலாம். எதிர்பார்த்தவாறு அதிசீர்மைத் துகள்கள் தோன்றவில்லை – இழைக் கோட்பாட்டாளர்கள் சிறிது சோர்ந்துவிட்டனர். வளையக் கோட்பாட்டாளர்கள் மிதப்பில் காணப்படுகின்றனர். ஆனால், இவையனைத்தும் இன்னமும் தடையங்களே – இறுதிச் சான்றுகள் அல்ல.
நமது கொள்கைக்கான இன்னமும் உறுதியான சான்றுகளுக்கு நாம் வேறேங்கோ தேட வேண்டியுள்ளது. ஆதிப் பிரபஞ்சம் கிளப்பி விடும் ஊகங்கள் கொள்கையை உறுதிபடுத்தலாம். அதற்கு நீண்ட காலம் தேவைப்படாது என நம்புகிறேன். அல்லது, பிழையாகவும் அதை நிரூபிக்கலாம்.
துளிம ஈர்ப்பியலில் ஒரு சாளரம்
துளிம நிலையில் அண்டத்தின் நிலைமாற்றத்தை விளக்கும் சமன்பாடுகள் நம்மிடம் இருந்தால், காணும் இன்றைய அண்டம் மீதான துளிம நிகழ்வுகளின் தாக்கத்தை கணிக்க இயலும். பிரபஞ்ச கதிர்வீச்சு அண்டம் முழுதும் பரவியுள்ளது: அண்டத்தின் துவக்க அதிவெப்பநிலையின் ஒளிரும் வண்டல் என அமைந்திருக்கும் ஒளிமங்களின் பெருங்கடல் அது.
விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான அடர்வெளியில் பரவியிருக்கும் மின்காந்த புலம், பெரும் புயலுக்குப் பிறகான கடலின் பரப்பு போல அலைகின்றது. அண்டம் முழுவதும் குவிந்து குவிந்து பரவும் இது பிரபஞ்ச பின்புல கதிரியக்கம் எனப்படுகிறது. சில வருடங்களாக COBE, WAMP மற்றும் ப்ளங்க் செயற்கைக்கோள்களால் இது ஆராயப்படுகிறது. இக்கதிர்வீச்சின் நுண்ணிய அலைவுகளை படம் 9.3 காட்டுகிறது. இக்கதிர்வீச்சின் கட்டமைப்பு குறித்த தகவல்கள் அண்டத்தின் வரலாற்றைக் கூறுகின்றன. அந்தத் தகவல்களின் மடிப்புகளுக்குள் அண்டத்தின் துளிமப் பிறப்பு குறித்த தடையங்கள் மறைந்திருக்கலாம்.
வளையத் துளிம ஈர்ப்பியல் ஆய்வுகளுள் மிகத் தீவிரமான பிரிவு என்பது ஆதி அண்டத்தின் துளிம இயக்கநிலை இத்தகவல்களில் எப்படி வெளிப்படுகிறது என்பதைப் பற்றியது. ஆய்வு முடிவுகள் இன்னமும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் நம்பிக்கையளிக்கின்றன. இன்னமும் அதிக கணக்கீடுகள், இன்னமும் துல்லியமான அளவீடுகள் வழியாக வளையக் கொள்கைக்கு ஒரு தேர்வாகவும் அமையக்கூடும்.

2013ம் ஆண்டு அபய் அஷ்டேகர் (Abhay Ashtekar) , இவான் அகூல்யோ( Ivan Agullo) , வில்லியம் நெல்சன் (William Nelson) ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். குறிப்பிட்ட சில ஊகங்களின் அடிப்படையில், இந்த பிரபஞ்ச கதிர்வீச்சினது மூலஊற்றின் அலைவுகளது நுண்தகவல் பரவல் ( Statistical distribution) வழியாக, ஆதி வெடிப்பின் விளைவைக் காட்ட இயலும் என்று கணித்தனர்: விரி-கோண அலைவுகள் , கொள்கையின் துளிமமற்ற கணிப்புகளிலிருந்து வேறாக இருக்கும். கணக்கீடுகளின் தற்போதைய நிலை படம் 9.4ல் கொடுக்கப்பட்டுள்ளது – அஷ்டேகர், அகூல்யோ, நெல்சன் ஆகியோரின் கணிப்பைக் கருப்புக் கோடு குறிக்கிறது; பழுப்புப் புள்ளிகள் அளவீட்டு தரவுகளைக் குறிக்கிறது. கருப்புக் கோட்டின் மேல்நோக்கிய வளைவு சரியா பிழையா என்று நிர்ணயிக்க போதுமான தரவுகள் இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால், அளவீடுகள் மேன்மேலும் கூர்மையாகிக் கொண்டே செல்கின்றன. ஆய்வின் தற்போதயை சூழலில் எவ்வித உறுதியான நிலையும் அமையவில்லை. ஆனால், துளிம வெளியின் ரகசியங்களை வெளிக்கொணர வாழ்நாளையே செலவழிக்கும் என்னைப் போன்றவர்கள், அளவீட்டுத் திறனையும் கணிப்புத் திறனையும் தொடர்ந்து மேம்படுத்தினால் என்றாவது ஒரு நாள் இயற்கை எங்களுக்கு விடையளிக்கும் என்று நம்பிக்கையுடனும் தவிப்புடனும் காத்திருக்கிறோம்.

மஹா ஆதி வெப்பத்தின் தடயம் ஈர்ப்புப் புலத்திலும் இருந்தாக வேண்டும். கடலின் மேற்பரப்பு போலவே ஈர்ப்புப் புலம் – அதாவது வெளி – நடுக்கத்தில் இருக்கும். எனவே பிரபஞ்ச ஈர்ப்புப் பின்புல கதிரியக்கமும் இருந்தாக வேண்டும் – அது ஒருவேளை மின்காந்த பின்புல கதிரியக்கத்தை விடவும் பழையதாக இருக்கலாம். ஏனெனில், மின்காந்த அலைகளை விட குறைவாகவே ஈர்ப்பு அலைகள் பொருட்களால் பாதிப்படைகின்றன. மேலும், மின்காந்த அலைகள் பரவ இயலாத அடர்நிலையில் அண்டம் இருந்தபோதும் அவை எவ்விதத் தடைகளுமின்றி பரவின.
LIGO உணர்வுக்கருவி வழியாக ஈர்ப்பு அலைகளை இப்போது நாம் நேரடியாகவே அறிகிறோம். சில மைல்கள் தொலைவில் 90o பாகையில் ( right angle) வைக்கப்பட்ட இரு இயந்திரக் கைகள் இடையே லேசர் ஒளிக்கற்றை முன்று நிரந்தர புள்ளிகளுக்கு இடையேயுள்ள தொலைவை கணக்கிட்டுக் கொண்டிருக்கும். ஈர்ப்பு அலை கடந்து செல்கையில், வெளி மீச்சிறு அளவில் விரிந்தும் சுருங்கவும் செய்யும். அந்த மீச்சிறு வித்தியாசத்தை இந்த லேசர் அளவீடுகள் காட்டிவிடும்அ45. இந்த ஈர்ப்பு அலைகள் ஒரு விண் நிகழ்வினால் – கருந்துளைகளின் மோதலினால் – உண்டானவை. இந்த நிகழ்வு – கருந்துளைகளின் மோதல் – துளிம ஈர்ப்பியலின் உதவியில்லாமலேயே பொது சார்புக் கொள்கையால் விளக்கப்பட்டுள்ளது. இதே அளவீட்டை இன்னமும் பெரிய அளவில் செய்ய விழையும் மற்றொரு பரிசோதனை – LISA. பூமியை அல்ல சூரியனை மையப்படுத்தி – விண்ணில் மூன்று செயற்கைக்கோள்களை நிறுவி – பூமியை போன்ற சிறு கிரகம் என்றே உருவகித்து அளவீடுகளை மேற்கொள்ள பூர்வாங்க ஆய்வுகள் நடக்கின்றன. லேசர் ஒளிக்கற்றையால் இணைக்கப்படும் இம்மூன்று செயற்கைக்கோள்களும் தமக்கு இடையேயுள்ள தொலைவினை – அல்லது – ஈர்ப்பு அலைகள் கடந்து செல்லும் போது தொலைவின் ‘மாற்றத்தை’க் கணிக்கக்கூடியவை. LISA செலுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் போது, விண்மீன்களும் கருந்துளைகளும் உருவாக்கும் ஈர்ப்பு அலைகள் மட்டுமல்ல, பெருவெடிப்பின் போது உண்டான ஆதி ஈர்ப்பு அலைகளின் நீர்த்த பின்புலங்களையும் அறிய முடியும். ஆதி துளிமப் பாய்ச்சல்களைக் குறித்து இந்த அலைகள் நமக்கு ஏதேனும் சொல்லக் கூடும். ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளின் தடயங்களையும், காலம் மற்றும் வெளியின் இயல்பு குறித்த நமது புரிதல்களுக்கான உறுதிப்பாடுகளையும் வெளியின் நுண்ணிய ஒழுங்கின்மைகளுள் காணலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.
