ஒன்றரை மாதங்களாக எனக்கு மொட்டை மின்னஞ்சல்கள் வருகின்றன.
எனக்கு என்றால் நேரடியாக என் முகவரிக்கு இல்லை; என்னைப்பற்றி, என் மீது அடுக்கடுக்கான மனத்தாங்கல் கொண்ட ஒருவரிடமிருந்து வருகின்றன. ஆனால், அதை அவர் என்னிடம் நேரடியாகக் காட்டுவதில்லை. என் சக ஊழியர்களுக்கும், என் கீழ் பணிபுரியும் குழு உறுப்பினர்களுக்கும் அனுப்புகிறார். நான் இதை எப்படி அறிகிறேன் என்றால், என் சக ஊழியர்களில் ஓரிருவர் அதை எனக்கு ரகசியமாக முன்னோக்கி (Forward) அனுப்புகிறார்கள். தங்களின் விசுவாசத்தைக் காட்டுவதற்காக அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்று நான் நினைத்துக்கொள்கிறேன். மொட்டை மின்னஞ்சல்கள் என்னுள் எழுப்பும் பாதுகாப்பின்மையை அந்த நினைப்பு சற்று தணிக்கிறது.
இந்த மின்னஞ்சல்கள் chelakov@yahoo.com என்ற முகவரியிலிருந்து வந்து கொண்டிருந்தன. முதலில் அந்த பெயர் என்னை ஒன்றும் செய்யவில்லை. ஒரு கற்பனைப் பெயர், ஒரு முகமூடி — அவ்வளவுதான். நான்காவது நாள் இரவு திடீரென்று தெரிந்தது. Chelakov. Chekhov. செகாவ்.
தூக்கமின்மை சில நேரங்களில் இப்படி செய்யும் — பகலில் கண்டும் காணாமல் போன ஒன்றை இரவில் கொண்டு வந்து முன்னால் நிறுத்தும். என்னை நன்கு அறிந்த ஒருவர் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் — அல்லது தற்செயலாக அமைந்திருக்கிறது. அந்த இரண்டாவது சாத்தியம் இன்னும் அதிகமாக என்னை அலைக்கழிக்கிறது. யாரோ திட்டமிட்டு என்னை குறிவைத்தால் அதில் ஒரு நேர்மை இருக்கிறது — நான் அவருக்கு முக்கியமாக இருக்கிறேன். ஆனால் தற்செயலென்றால், இந்தப் பொருத்தம் வெறும் என் மனம் கட்டிய கோட்டை மட்டுமே.
முதல் மின்னஞ்சலில் அவர் தன்னை “சிங் சி” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். முழுப் பெயர் இல்லை, ஒரு துண்டுப் பெயர். அந்தத் துணிச்சலே போதும் என்று நினைத்திருப்பார் போல. அந்த மின்னஞ்சலை அவர் எங்கள் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிக்கும் அனுப்பியிருந்தார். ஆனால், அங்கேதான் ஒரு கோமாளித்தனம் நடந்தது. அவசரப் பதற்றத்தில் தவறான மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பியிருந்தார். உலகின் மிக முக்கியமான குற்றச்சாட்டு, ஒரு தவறான ‘@’ குறியீட்டால் நடுவழியில் முடங்கிப்போனது. உலகளாவிய முதன்மை அதிகாரி அதை வாசித்தாரா இல்லையா என்பது இன்றும் தெரியாது. ஆனால், அந்த மூடருக்கு இது மட்டும்தான் தெரியும்—”அனுப்பிவிட்டேன், என் கடமையை முடித்துவிட்டேன்.”
இரண்டாவது மின்னஞ்சலில் அந்தச் ‘சிங் சி’ மறைந்துவிட்டார். இம்முறை கையொப்பமே இல்லை; ஒரு பெயரற்ற வெற்றுக்குரல் மட்டுமே எஞ்சியிருந்தது. இருட்டில் நின்று பேசுவதைப் போல, chelakov@yahoo.com என்ற முகவரி மட்டும்தான் அடையாளம்.
மூன்றாவது மின்னஞ்சலில், அவர் தன்னை “A Genuine Employee — உண்மையான ஊழியன்” என்று கம்பீரமாக அழைத்துக் கொண்டார். அதில் ஒரு தனிப் பெருமிதம் இருந்தது. மற்றவர்கள் எல்லாரும் போலியான ஊழியர்களாம், இவர் மட்டும்தான் இந்த நிறுவனத்தின் ஒரே மெய்யான ஆத்மா! இந்த மின்னஞ்சல் வழியே நியாயத்திற்காகக் குரல் கொடுக்கும் உத்தமர்!

அந்த மூன்றாவது மின்னஞ்சலை அவர் யாருக்கெல்லாம் அனுப்பியிருந்தார் தெரியுமா? எங்கள் விற்பனைக் குழுவில் உள்ள கிட்டத்தட்ட அனைவருக்கும், நறுமணப் பிரிவின் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கும், மனிதவளத் துறையின் தலைவருக்கும் அனுப்பியிருந்தார். என்னைப் பற்றிய அந்த ஆவணம்—என் தலைமைத்துவத் தோல்வியின் விரிவான அறிக்கை—இப்போது நிறுவனத்தின் பலருக்கும் ஒரு சுவாரசியமான மதிய நேர வாசிப்புப் பொருளாக மாறியிருக்கிறது.
ஆனால், அந்த மூன்றாவது மின்னஞ்சலில் ஒரு சிறிய கணக்குத் தப்பியது. முதல் இரண்டு கடிதங்களில் என் பெயரை அவர் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் மூன்றாவதில், ஒரு கவனக்குறைவான உணர்ச்சிப் பெருக்கில் அவர் எழுதிவிட்டார்: “அவதூத்-இன் தலைமையின் கீழ் கடந்த 15 மாதங்களாக…”
அவதூத்.
என் பெயர்.
மூன்றாம் மின்னஞ்சல் வரும் முன்னர் வரை போர்வையின் பின்னால் மறைந்திருந்த நபர், ஒரே ஒரு வார்த்தையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டார்—என்னை அல்ல, தன் சுயரூபத்தை. ஏனென்றால் இப்போது எனக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது, இந்த மின்னஞ்சல்களை எழுதியவர் என்னை நன்கு அறிந்தவர், என்னோடு நெருங்கிப் பழகியவர். அதனால்தான் என் பெயர் அவர் விரல்களில் இயல்பாகப் பாய்ந்திருக்கிறது. அதை அவர் கவனித்தாரா? இல்லையெனில், பெயர் குறிப்பிட்டுத் தன் நேர்மையை நிலைநாட்ட நினைத்தாரா? சிங் சி என்பவர் யார்? இந்த உண்மையான ஊழியன் யார்? அல்லது இருவரும் ஒருவர்தானா?
அந்த சிங் சி-க்கு என் மீது என்னதான் குறை என்று கேட்கிறீர்களா? அவர் எழுதிய நஞ்சை கொஞ்சம் வரிசைப்படுத்திச் சொல்கிறேன்.
முதலாவது—நான் என் நெருங்கிய நண்பர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தியிருக்கிறேனாம்; குறிப்பாக மும்பைக் கிளையில். அந்த நியமனத்தால் வணிக ரீதியாக எந்தப் பயனும் இல்லையாம். நான் திறமையைத் தேடாமல், தோழமையைத் தேடினேனாம். இதைப் படிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது—யாரை அங்கே அனுப்பியிருந்தால் இந்த சிங் சி சந்தோஷப்பட்டிருப்பார்? அவரையா? அடடா, அவராகவே என்னிடம் வந்திருந்தால், மும்பை வாய்ப்புக்காக அவரைப் பரிசீலித்திருப்பேனே!
இரண்டாவது – என் தலைமையின் கீழ் பல திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார்களாம், இன்னும் போவார்களாம். “வரும் நாட்களில் மேலும் பல ராஜினாமாக்கள் தொடரும்” என்று தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார். எப்போது, எத்தனை பேர் என்று சொல்லவில்லை, ஆனால் நடப்பது உறுதி என்கிறார். சிங் சி-க்கு அது எப்படித் தெரியும்? அவர் யாரிடமாவது ரகசியமாகப் பேசினாரா? அல்லது அவரே வெளியேறப் போகிறாரா? கடந்த பதினைந்து மாதங்களில் என் அணியில் இருந்து விலகியவர்கள் இருவர் மட்டுமே. அதில் ஒருவரை நான்தான் நேர்காணல் செய்து வேலைக்கு எடுத்திருந்தேன்.
மூன்றாவது—என் தனிப்பட்ட பாணியும், உள்வட்ட செல்வாக்கும் நிறுவனத்திற்குத் தீங்கு விளைவிக்கிறதாம். “தனிப்பட்ட பாணி” (Personal style)—இந்த வார்த்தையை வாசித்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. என் பாணி என்னவென்று எனக்கே சரியாகத் தெரியாது, ஆனால் சிங் சி-க்குத் தெரிந்திருக்கிறது. என்னை விட அவர் என்னை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார்.
உயர் நிர்வாகம் எனக்குத் தெரியாமல் ஒரு “சுயாதீன மறுஆய்வு” (Independent review) நடத்த வேண்டுமாம். ஊழியர்களிடம் ரகசியக் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டுமாம். என் தலைமைத்துவம் நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளுக்கு உகந்ததுதானா என்பதை “விருப்பு வெறுப்பின்றி மதிப்பிட” (Objectively assess) வேண்டுமாம்.
விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடு.
இந்த வார்த்தைகளில் ஓர் அற்புதம் இருக்கிறது. அவர் தன்னை ஒரு நடுநிலையானவராக நம்புகிறார். முகமூடி அணிந்துகொண்டு நடுநிலையைப் பற்றிப் பேசுகிறார்.
நான் என்ன சொல்வது? அதில் சில உண்மைகள் இருக்கலாம், பல மிகைப்படுத்தல்கள் இருக்கலாம். ஆனால், அந்த மின்னஞ்சல்களில் இருந்த ஒரு வார்த்தை என் தொண்டையை அடைத்தது.
“நற்பெயர்” (Reputation).
அவர் எழுதியிருந்தார்: “இன்றும் கூட, சந்தையிலோ அல்லது இந்தத் துறையிலோ நேர்மையான ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டால், அவருக்கு எதிரான கடுமையான விமர்சனங்களே மிஞ்சும்.”
நான் இந்தத் துறையில் இருபத்தாறு வருடங்களாக வேலை செய்து வருகிறேன். என் பெயர் என் உழைப்பு; என் உழைப்பு என் பெயர். இதுவரை யாரும் என் நற்பெயரின் மீது கை வைத்ததில்லை.
இப்போது இந்த முகவரியற்ற கோழை அதைக் கேள்வி கேட்கிறான்.
நான் புனேக்காரன். புனேயில் பிறந்தேன், புனேயில் படித்தேன், புனேயிலேயே வேலைக்கும் சேர்ந்தேன். இருபத்தாறு வருடங்கள் ஒரே நிறுவனம்—கெம்டெக்ஸ் அரோமாட்டிக்ஸ். சிறிய நிறுவனம்தான், ஆனால் அது என்னுடையது என்ற சொந்த உணர்வுடன் உழைத்தேன். கடைசியில் அதன் பிராந்தியத் தலைவரானேன் (Regional Head). என் அறையின் ஜன்னல் வழியே பார்த்தால் பார்வதி மலை தெரியும். காலையில் காபி குடிக்கும்போது அந்த மலையைப் பார்ப்பது என் வழக்கம். அது ஒரு சிறிய, நிம்மதியான சந்தோஷம்.
அந்த இருபத்தாறு வருடங்களில் நான் பல வித்தைகளைக் கற்றுக்கொண்டேன். எந்த வாடிக்கையாளர் வியாபார மந்தத்தின் போது மட்டும் அழைப்பார் என்று தெரியும். எந்த விநியோகஸ்தர் தன் விலைப் பட்டியலில் கொஞ்சம் கூடுதலாக எண்களைச் சேர்ப்பார் என்று தெரியும். நிர்வாக இயக்குனர் எந்த நாளில் நல்ல மனநிலையில் இருப்பார், எப்போது எரிமலையாய் வெடிப்பார் என்பதும் எனக்கு அத்துபடி. இந்த அறிவு எந்தப் புத்தகத்திலும் இல்லை; இருபத்தாறு வருடக் காலம் என் நரம்புகளில் ஏற்றிய அறிவு.
என் மனைவி சுனிதா அடிக்கடி கேட்பாள்: “இன்னும் எவ்வளவு காலம் இந்த ஒரே நிறுவனத்தில் தேங்கிக் கிடப்பீர்கள்?”
நான் சொல்வேன்: “நான் இங்கிருந்து போகும்போது இயக்குநராகத்தான் (Director) போவேன்.”
அவள் புன்னகைப்பாள். கேலியாக இல்லை, அன்பான நம்பிக்கையுடன். அந்த வித்தியாசத்தை என்னால் உணர முடியும்.
இயக்குநர்.
அந்த வார்த்தையை நான் யாரிடமும் உரக்கச் சொன்னதில்லை. ஆனால், அது என் ஆழ்மனதில் கனன்றுகொண்டே இருந்தது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் ஒரு லட்சியத்தை வைத்திருப்பான்—அது உலகிற்குப் பெரிதாக இல்லாவிட்டாலும், அவனுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். என்னுடைய லட்சியம் அதுதான். ஐம்பத்தைந்து வயதுக்கு முன்பே ஒரு நிறுவனத்தின் இயக்குநராகி, பிறகு ஓய்வு பெறுவது. யாரையும் வெல்ல வேண்டும் என்ற வெறி இல்லை, இங்கே வெல்வதற்கும் யாரும் இல்லை. வாழ்க்கையை நான் நினைத்தபடி வாழ்ந்தேன் என்ற ஒரு திருப்தியோடு எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்—அது மட்டும்தான்.
ஆனால், கெம்டெக்ஸ் நிறுவனத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்று புரிந்தது. நிறுவனம் நல்லதாக இருந்தாலும், அதன் எல்லை சிறியது. இயக்குநர் என்ற பதவிக்கான இடமே அங்கே இல்லை. கனவு இருந்தது, ஆனால் அதற்கான களம் இல்லை.
அப்போதுதான் ‘சொலிடேர் அரோமாஸ்’ கதவு தட்டியது.
சொலிடேர் என்பது சென்னையில் தொடங்கப்பட்டு, பிறகு பெங்களூருவில் ஆலமரமாக வளர்ந்த நிறுவனம். இருபத்திரண்டு வருடப் பாரம்பரியம், அறுபது ஊழியர்கள். நறுமணத் துறையில் அதற்கு நல்ல பெயருண்டு. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன் ரத்தமும் சதையும் கொடுத்துக் கட்டியெழுப்பிய நிறுவனம் அது. அவரின் ஆளுமையின் நிழல் நிறுவனத்தின் ஒவ்வொரு சுவரிலும் படிந்திருந்தது—நல்ல அர்த்தத்திலும், சிக்கலான அர்த்தத்திலும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சர்வதேசக் குழுமம் சொலிடேர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது (Acquisition).கிருஷ்ணமூர்த்தி தலைவர் (Chairman) ஆனார். பெயர் எஞ்சியிருந்தது, ஆனால் நிறுவனத்தின் திசை மாறியது.
அந்த மாற்றத்தின் நடுவேதான் ஒரு வாய்ப்பு வந்தது—விற்பனைப் பிரிவின் தலைவராக (Sales Head) ஒரு ஆள் தேவைப்பட்டார். நிறுவனத்தில் பணிபுரியும் பழைய ஆட்கள் எவரும் அந்தப் பதவிக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படவில்லை. புதிய பார்வையுடன், உள்ளூர்ச் சூழலையும் புரிந்து, உலகளாவிய தரத்தையும் அறிந்த ஒரு புதிய மனிதரைத் தேடினார்கள். என்னை அழைத்தார்கள்.
நான் யோசித்தேன். சுனிதாவிடம் பேசினேன். ஜன்னல் வழியே தெரிந்த பார்வதி மலையைப் பார்த்தேன். இருபத்தாறு வருடங்கள் ஒரே இடம்—இனி மாற வேண்டும் என்று மனசு சொன்னது, வேண்டாம் என்றும் தடுத்தது. இரண்டுமே சரியாகவே தோன்றியது.
இரண்டு நேர்காணல்கள் நடந்தன. இரண்டாவது நேர்காணல் பிரான்ஸிலிருந்து இணைய வழியே நடந்தது; நடத்தியவர் பெல்லெட்டியர் (Pelletier). அவர் நேர்காணலின் இறுதியில் சொன்னார்: “The right person, well positioned for the next restructuring.” (அடுத்தகட்ட மறுசீரமைப்புக்கு மிகச் சரியான மனிதர் நீங்கள்).
மறுசீரமைப்பு (Restructuring). அந்த ஒற்றைச் சொல்லில் ஒரு மௌனமான வாக்குறுதி மறைந்திருந்தது. நான் அதைக் கவனித்தேன். கேட்கக் கூடாது என்று தெரிந்தும், என் கனவின் உந்துதலால் அதை நம்பினேன்.
பதினெட்டு மாதங்கள். இயக்குநர் பதவி. ஐம்பத்து நான்கு வயது. என் கணக்கு கச்சிதமாகப் பொருந்தியது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
பெல்லெட்டியர் இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் திடீரென்றுதான் வருவார்—ஜெனீவாவிலிருந்து பெங்களூருக்கு வரும்போது. முன்பே சொல்ல மாட்டார், திடீரென என் அறையில் வந்து நிற்பார். என் இருக்கையில் அமர்ந்து, கால்களை நீட்டி, காபி குடித்துக்கொண்டே பேசுவார்—நிறுவனத்தைப் பற்றி, சந்தையைப் பற்றி, உலகப் பொருளாதாரத்தைப் பற்றி. நான் கேட்பேன். அதே சமயம், ஒரு சர்வதேச இயக்குநர் எனக்கு முக்கியத்துவம் தந்து பேசுவது பற்றிய என்னுள்ளிலான பெருமிதத்தை வார்த்தையிலோ அல்லது உடல் மொழியிலோ காட்டிவிடுவேனோ என்ற சம்சயம் என்னை விழிப்புடன் வைத்திருக்கும்.
அன்று, அந்த மூன்றாவது மொட்டை மின்னஞ்சல் வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது.
பெல்லெட்டியர் வந்தார். வழக்கம் போல அமர்ந்தார். காபி வந்தது. பாரிஸில் நடந்த கண்காட்சி, மும்பை வாடிக்கையாளர் சந்திப்பு, போட்டியாளர்களின் புதிய தயாரிப்புகள் எனப் பொதுவான விஷயங்களைப் பேசினோம். நான் பேசினேன், கேட்டேன், சிரித்தேன். ஆனால், என் மனதிற்குள் ஒரு கேள்வி முள்ளாகக் குத்திக்கொண்டே இருந்தது.
அவர் அந்த மின்னஞ்சல்களைப் பற்றிப் பேசுவாரா?
பேசினார். ஆனால், நான் எதிர்பார்த்த கோணத்தில் இல்லை.
“அவதூத், நான் கேள்விப்பட்டேன்… ஏதோ ஒரு அநாமதேயத் தொடர்பு (Anonymous communication) வந்ததாமே?”
அவர் அதைத் ‘தொடர்பு’ என்று சொன்னார். மின்னஞ்சல் என்றோ, குற்றச்சாட்டு என்றோ சொல்லவில்லை. ஒரு நடுநிலையான வார்த்தை.
“ஆமாம்,” என்றேன் சுருக்கமாக.
“இப்படியெல்லாம் நடப்பது இயல்புதான் அவதூத்,” அவர் புன்னகையுடன் சொன்னார். “ஒரு நிறுவனத்தில் பெரிய மாற்றங்கள் நிகழும்போது, சில பழைய ஆட்களுக்குப் புதிய சூழலோடு ஒத்துப்போவது (Adapt) கடினமாக இருக்கும்.”
நான் தலையாட்டினேன். அவர் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றியது. அவர் வாயிலிருந்து இதைக் கேட்கும்போது ஒரு நிம்மதி கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், ஏனோ அந்த நிம்மதி முழுமையாகக் கிடைக்கவில்லை.
“உங்கள் அணி இப்போது எப்படி இருக்கிறது?” அவர் கேட்டார்.
“நல்லவர்கள்தான்,” என்றேன். “புதிய முறைகளுக்கு மாறுவதில் சில தடுமாற்றங்கள் இருக்கின்றன, ஆனால் திறமையானவர்கள்.”
“ம்…” ஒரு சிறிய மௌனம் அந்த அறையை நிரப்பியது. “கிருஷ்ணமூர்த்தியும் என்னிடம் சொன்னார்—பழைய குழு உறுப்பினர்கள் சிலருக்கு உங்களின் வேகம் (Pace) கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறதாம். தவறில்லை, ஆனால் ஏதோ ஒரு சுணக்கம்.”
வித்தியாசம்.
அந்த வார்த்தை நான் எதிர்பார்க்காத இடத்தில் என்னை பலமாகத் தாக்கியது. கிருஷ்ணமூர்த்தி பெல்லெட்டியரிடம் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறார்! என் வேகத்தைப் பற்றிக் குறை கூறியிருக்கிறார்! அதைத்தான் பெல்லெட்டியர் இப்போது என்னிடம் மென்மையாக, அன்பாக, ஆனால் ஓர் எச்சரிக்கையாகச் சொல்கிறார்.
“புரிகிறது,” என்றேன், என் தொண்டை வறண்டது.
“உனக்கு புரியும் என்று தெரியும்,” அவர் என் தோளைத் தட்டினார். “அதனால்தான் நீ இந்த நாற்காலியில் இருக்கிறாய்.”
ஒரு நிமிடம் இருவருமே பேசவில்லை. வெளியே அலுவலகத்தின் வழக்கமான சத்தங்கள்—விசைப்பலகையின் தட்டல், யாரோ சிரித்துப் பேசும் குரல். ஒரு சாதாரண மதிய வேலை.
அப்போது பெல்லெட்டியர் தற்செயலாகக் கேட்பது போலக் கேட்டார்.
“உனக்கான அந்தப் பயிற்சி அமர்வுகள் (Coaching sessions) ராமோனாவுடன் சரியாகப் போகிறதா? பயனுள்ளதாக இருக்கிறதா?”
ராமோனா.
என் நிர்வாகப் பயிற்சியாளர் (Executive coach). மென்மையான திறன்கள் (Soft skills) என் பாணியைச் சாணையிட்டு கூர்தீட்டுவதற்காக என்று நம்பினேன். இப்போது புரிகிறது — சாணை படிந்தது என் மீது, என் பாணியின் மீது அல்ல.
“மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பெல்லெட்டியர்,” என்றேன் புன்னகையுடன்
அவர் எழுந்தார். கை குலுக்கினார். கதவு சாத்தியது.
அந்த அறையில் இப்போது நான் மட்டுமே இருந்தேன். பெல்லெட்டியர் குடித்து வைத்து விட்டுச் சென்ற காபி கோப்பை காலியாக இருந்தது. வெளியே பெங்களூருவின் மாலை மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது — அந்த மங்கலான மஞ்சள் வெளிச்சம், தேசியசாலையில் வாகனங்களின் மந்தமான இரைச்சல். புனேவில் இந்த நேரத்தில் பார்வதி மலையின் மீது நிழல் விழத் தொடங்கியிருக்கும். இங்கே பார்க்க மலை இல்லை. ஜன்னலுக்கு வெளியே இன்னொரு கட்டிடம் மட்டுமே.
யாருக்கும் இந்த அறையில் என்ன நடந்தது என்று தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது — நான் நல்ல பிள்ளை வேடமிட்டுக்கொண்டிருக்கிறேன். chelakov@yahoo.com நல்ல பிள்ளை வேடமிட மறுக்கிறான். அவ்வளவுதான் எங்களுக்கிடையிலான வித்தியாசம்.
அன்று இரவு தூக்கம் வரவில்லை. அந்த பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் நான் மட்டுமே இருந்தேன். சுனிதா இன்னும் புனேவில்தான் இருக்கிறாள். பெங்களுருவில் குளிரூட்டி இயந்திரம் தேவைப்படவில்லை. வெளியே எங்கோ சில நாய்கள் குரைத்தன.
chelakov என்ற பெயர் மனதில் மிதந்தது. திடீரென்று மற்றொன்றும் தெரிந்தது. c-h-e-l-a-k-o-v. அதற்குள் மறைந்திருந்த வார்த்தை — l-a-c-h-e. பிரெஞ்சில் lâche என்றால் கோழை.
செகாவின் சிறுகதை “Gooseberries” நினைவுக்கு வந்தது. அதில் வரும் நிகோலாய் என்பவன் வாழ்நாள் முழுதும் ஒரு தோட்டம் வேண்டும் என்று கனவு கண்டான். சேமித்தான், தேய்ந்தான், காத்திருந்தான். கடைசியில் பெற்றான். தன் தோட்டத்தில் விளைந்த நெல்லிக்காய்களை சாப்பிட்டான். கசப்பாக இருந்தன. இனிப்பாக இருந்தன என்று சொன்னான்.
இருபது வருடங்களுக்கு முன் அந்தக் கதையை படித்தபோது நிகோலாய் மீது பரிதாபப்பட்டேன். அவன் மூடன் என்று நினைத்தேன். தன்னை தானே ஏமாற்றிக்கொள்கிறான் என்று நினைத்தேன்.
நெல்லிக்காய்களை இன்னும் நான் அறுவடை செய்யவில்லை. இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.
இரண்டு மாதங்கள் என்பது பெரிய கால அளவல்ல. ஆனால், காத்திருப்பின் கணங்களில் அது ஒவ்வொரு நாளும் ஒரு தனி அத்தியாயமென நீண்டு கொண்டே செல்கிறது.
மூன்றாவது மின்னஞ்சலுக்குப் பிறகு நான்காவது ஒன்று வரவில்லை. ஒருவேளை chelakov சோர்ந்துபோயிருக்கலாம், அல்லது தன் பணி நிறைவுற்றுவிட்டதாக எண்ணியிருக்கலாம்; அறியேன். ஆனால், அந்த மௌனம் எனக்கு விடுதலையை அளிக்கவில்லை — மாறாக, அது இன்னும் ஆழமானதொரு தவிப்பாகவே உருவெடுத்தது. அவன் இனி எழுதப்போவதில்லை என்றால், அவனது காரியம் முடிந்துவிட்டது என்றுதானே பொருள்?
செகாவின் “Gooseberries” கதையை இணையத்தில் தேடி மீண்டும் வாசித்தேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் வாசிப்பு. முதல் முறை வாசித்தபோது நிகோலாயின் மூடநம்பிக்கை மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தது — அந்தப் புளிக்கும் நெல்லிக்காயை இனிப்பென்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் அவனது அறியாமை. இம்முறை வேறொருவன் என் கவனத்தை ஈர்த்தான்; இவான் இவானவிச். நிகோலாயின் சகோதரன். சகோதரனின் அந்தச் சிறிய, போலித் திருப்தியைக் கண்டு சினம் கொள்பவன். “இவ்வளவு எளிய விஷயங்களில் மனிதன் திருப்தியடைந்துவிடக் கூடாது” என்று வாதிட்டபடியே, தானும் எதிலும் அமைதிகொள்ள முடியாமல் இரவு முழுவதும் தூக்கமின்றித் தவிப்பவன். இருபது வருடங்களுக்கு முன்பு நிகோலாயைப் பார்த்துப் பரிதாபப்பட்டேன்; இன்று இவான் இவானவிச்சைக் கண்டு அச்சமடைகிறேன்.
அடுத்த வார இறுதியில், முன்னறிவிப்பின்றி புனே சென்றேன். சுனிதா கதவைத் திறந்தபோது எந்த வியப்பையும் வெளிப்படுத்தவில்லை — ஒரு சிறிய புன்னகை மட்டுமே, “வா” என்ற சொல்லைத் தவிர வேறு வார்த்தைகளற்ற, தயக்கமில்லாத ஒரு புன்னகை.
மாலையில் பால்கனியில் அமர்ந்திருந்தோம். கோப்பையில் காபி ஆறிக்கொண்டிருந்தது. எதிரே மற்றுமொரு கட்டிடத்தின் வெற்றுச் சுவர், துணி காயப்போடப்பட்ட கம்பிகள், கீழே மங்கலாகச் சுடரும் ஒரு தெருவிளக்கு. மலையோ, தொலைதூரக் காட்சியோ எதுவும் அங்கில்லை.
இம்முறை சுனிதா வழக்கமான வினாவைக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, “கீழே பார்க்கிங்கில் அந்தத் தெருநாய் நேற்று குட்டிகள் போட்டிருக்கிறது தெரியுமா?” என்றாள்.
நான் மெல்லச் சிரித்தேன். “இல்லை, தெரியாது.”
“நாளைக் காலையில் போய்ப் பார். ஐந்து குட்டிகள்… அதில் ஒன்று இன்னும் நடக்கக் கூடப் பழகவில்லை.”
‘இயக்குநர்’ என்ற அந்தச் சொல் அன்று இரவு எங்கள் உரையாடல்களிலோ, சிந்தனையிலோ நுழையவே இல்லை. அது ஏதோவொரு பெரிய முடிவாகவோ, அல்லது துறவறத்தைப் போன்றதொரு விலகலாகவோ எனக்குத் தோன்றவில்லை. வெறுமனே, அந்த மாலையின் அமைதியில் அந்த வார்த்தைக்கான இடம் அற்றுப்போயிருந்தது.
இரவு படுக்கச் சென்றபோது, பல வாரங்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தூக்கம் விரைவில் தழுவியது. காலையில் விழித்தபோதுதான் நினைவுக்கு வந்தது — நேற்று நாள் முழுவதும் மொபைல் போனைக் கூட நான் எடுத்திருக்கவில்லை. chelakov இன்னமும் இருக்கிறானா, அல்லது மறைந்துவிட்டானா என்பது பற்றியும் யோசிக்கவில்லை.
கீழே பார்க்கிங்கில், தள்ளாடும் கால்களுடன் அந்தச் சிறிய குட்டி நின்று கொண்டிருந்தது — முதல்முறையாக தரையில் நிமிர்ந்து நிற்கக் கற்றுக்கொண்டபடி.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு முடிவு ஒரு பெரிய அறிவிப்பாக வெளிவரவில்லை. ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கூட்டத்திற்குப் பிறகு (Global town hall), பெல்லெட்டியரிடமிருந்து ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் வந்தது. வெறும் ஐந்து வரிகள் மட்டுமே: “Effective April 1st, Avadhoot will assume the role of Director — India & South Asia.” அதன் கீழே, ஒரு புதிய அதிகார படிநிலை வரைபடம் (Org chart) இணைக்கப்பட்டிருந்தது.
நான் அந்தப் படத்தைப் பலமுறை உற்றுப்பார்த்தேன்.
என் பெயர் “Director” எனும் சதுரப் பெட்டிக்குள் பொறிக்கப்பட்டிருந்தது. அது உண்மைதான். ஆனால், அந்தப் பெட்டிக்கு மேலே புதிதாக மற்றொரு பெட்டி முளைத்திருந்தது — “Global Commercial Head — South & South East Asia,” ஜெனீவாவில் அமர்ந்திருக்கும் ஒருவர். விநியோகஸ்தர் ஒப்பந்தங்கள், விலை நிர்ணயம், முக்கிய வாடிக்கையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் — இவை அனைத்துமே இனி அந்தப் புதிய பெட்டியின் ஒப்புதலுக்குப் பிறகே நகரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்குக் கீழ் இயங்கி வந்த மும்பைக் கிளையும் இனி நேரடியாக எனக்குப் புகாரளிக்காது; வரைபடத்தில் ஒரு “dotted line” மட்டுமே மிச்சமிருந்தது.
இயக்குநர். அந்தப் பதவி இறுதியாக வந்துவிட்டது.
அன்று மாலை அறையில் தனியாக இருந்தேன். மேசையிலிருந்த சில பழைய தாள்களை அமைதியாக ஒதுக்கிவைத்துவிட்டு, ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். அந்த மாலை வெளிச்சத்தில் நகரம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது.
அந்த வார இறுதியில் புனே சென்றேன். சுனிதா வாசலில் நின்று, “இயக்குநரா? வாழ்த்துகள்!” என்றபடி என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவள் குரலில் உண்மையான அகமகிழ்ச்சி நிரம்பியிருந்தது. நானும் புன்னகைத்தேன்; அவளது மகிழ்ச்சியில் என் மனமும் சற்றே இயைந்துபோனது.
மறுநாள் காலையில், கீழே பார்க்கிங்கிற்குச் சென்றேன். அந்த மூலை வெறிச்சோடிப் போயிருந்தது. நாயோ, குட்டிகளோ அங்கு இல்லை. வாட்ச்மேன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார்.
“அந்தக் குட்டிகளையெல்லாம் காணோமே?” என்று கேட்டேன்.
அவர் நாளிதழிலிருந்து கண்ணை எடுக்காமலேயே, “அப்பார்ட்மென்ட் செக்ரட்டரி கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணி கூப்பிட்டு தாயையும் குட்டிகளையும் அப்பவே எடுத்துட்டுப் போக வச்சிட்டாரு சார்” என்றார்.
அந்த சிமெண்ட் தரையின் காலி மூலையைச் சிறிது நேரம் அமைதியாகப் பார்த்துவிட்டு மெதுவாக மேலே ஏறிச் சென்றேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026
Subscribe to get the latest posts sent to your email.
