நியூட்டனும் பிறையும் – 1

அறிவியல் வளர்ச்சிக்கு பிளேட்டோவும் அரிஸ்டாடிலும் தடையாக இருந்தார்கள்  என சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தால், அதைத் திருத்த விரும்புகிறேன். அரிஸ்டாடிலின் இயற்கை – குறிப்பாக தாவரவியல் மற்றும் விலங்கியல் –  குறித்த எழுத்துக்கள், புறவுலகின் மீதான அவரது நுண் அவதானங்கள் மீது எழுப்பப்பட்ட அற்புதமான படைப்புகள். கருத்துத் தெளிவு, இயற்கையின் பன்மை மீதான அதீத கவனம், நம்மை அப்படியே கவர்ந்துவிடக்கூடிய அறிவாற்றல், பெரும் தத்துவவாதிக்குரிய மனவிரிவு – இவையனைத்தும் அவரை நூற்றாண்டுகளுக்கு முன்னணி வல்லுனராக அமர்த்தியிருந்தது. இயற்பியலின் முறையான முதல் ஆய்வு அரிஸ்டாடிலினுடையதே. அது அவ்வளவு மோசமானதும் அல்ல.

இயற்பியல் என தனது நூலுக்கு சரியாகவே பெயரிட்டிருந்தார். இயற்பியல் என்னும் அறிவுத்துறையின் பெயரை எடுத்து நூலுக்கு வைக்கவில்லை. மாறாக இந்த நூலிருந்தே அறிவுத்துறை தனது பெயரை எடுத்துக் கொண்டது. 

அவரது விளக்கம் பின்வருமாறு: முதலில் விண்ணுலகம் – மண்ணுலகம் என்னும் தெளிவான பிரிவினை அவசியம்.  விண்ணுலகிலுள்ள அனைத்தும் படிகங்களானவை. மையமான கோள வடிவான புவியினை, பொதுவான மைய வட்டப்பாதையில்  நிரந்தரமாக அவை சுற்றி வருகின்றன. இனி, மண்ணுலகில் சாதாரண மற்றும் தூண்டப்பட்ட இயக்கங்கள் என்னும் பிரிவினை அவசியம். ஏதேனும் ஒரு வகையான தள்ளுதலில் தொடங்கும் தூண்டப்பட்ட இயக்கம், அதனுடனேயே தானும் நின்றுவிடும்.  சாதாரண இயக்கம் மேலும் கீழுமாக செங்குத்தான திசையில் – பொருள் மற்றும் இடத்தைப் பொறுத்து இயங்கும்.  ஒவ்வொரு பொருளுக்கும், தான் மீண்டு வந்து சேரும்  சரியான உயரம் – இயல்பான இடம்  என ஒன்றுண்டு : புவிக்கு அது மிகக் கீழே, நீருக்கு புவியுடைய இடத்திற்கு சிறிது மேலே, காற்று அதற்கும் சிறிது மேலே, நெருப்பு இன்னும் மேலே. ஒரு கல்லை எடுத்து விழவிட்டோமானால் அதன் இயல்பான இடம் தேடி கீழ் நோக்கிச் செல்லும்.  நீர்க்குமிழிகள், நெருப்பு, குழந்தைகளின் பலூன் என அவற்றின் இயல்பான இடம் தேடி மேல்நோக்கிச் செல்லும்.

இந்த கொள்கையைக் கண்டு சிரிக்கவோ புறந்தள்ளவோ வேண்டியதில்லை. இதுவே மிகச் சரியான பொதுப்போக்கு இயற்பியல். நீரில் மூழ்கியுள்ள பொருட்களின் இயக்கம் குறித்தான சரியான விளக்கத்தை, அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் ஈர்ப்பு விசை மற்றும் உராய்வு சார்ந்து அளித்துள்ளது.  இது தோராயமானதொரு இயற்பியலே அன்றி பரவலாக சொல்லப்படுவது போல பிழை* அல்ல.  ஐன்ஸ்டைனுடைய இயற்பியலின் தோராயமான ஒன்றே நியூட்டனுடையது. ஒருக்கால் இன்றைய இயற்பியல், நாமறியாத  நாளையதன் தோராயமாக இருக்கலாம். அரிஸ்டாடிலுடைய இயற்பியல் முரட்டுத்தனமான, அளவுத்தன்மையற்றதாக(Quantitative) இருந்தாலும்,  இசைவும் மற்றும் சிந்தனைபூர்வமான அடிப்படையுடன், சரியான பண்பார்ந்த( Qualitative) ஊகங்களை மேற்கொள்ள ஏதுவான ஒன்று. நூற்றாண்டுகள் கழித்து இன்றும் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மிகச் சிறந்த மாதிரியாக  இருப்பது வெறும் தற்செயல் அல்ல. 

ஒருவேளை, அறிவியலின் எதிர்கால வளர்ச்சிக்கு இன்னும் முக்கியமானவர் ப்ளேட்டோவாக இருக்கலாம். மிலீசியர்களைத் தாண்டி முன்செல்ல கணிதமே தேவையானது என்னும் பைதாகரஸ் – பைதாகரஸிஸத்தினுடைய உள்ளுணர்வின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்திருந்தார். 

மிலீதஸிற்கு வெகு அருகிலுள்ள சேமாவ்ஸ் (samos)  என்னும் சிறு தீவில் பைதாகரஸ் பிறந்தார். வயதான அனாக்ஸிமேண்டருக்கு இளம் பைதாகரஸ் எவ்வாறு சீடராக இருந்தார் என்பதை அவரது முதல் வரலாற்றாசிரியர்களான ஐயாம்ப்ளிகஸ் (Iamblichus) மற்றும் பாஃபூரி (Porphyry) விளக்கியுள்ளனர்.  அனைத்தும் மிலீதஸிலிருந்தே தொடங்குகிறது. எகிப்திலும் பிறகு பாபிலோன் வரைக்கும் மிக விரிவான பயணங்களை மேற்கொண்டவர் இறுதியில் தெற்கு இத்தாலியில் க்ரோதோனேவில் (Crotone) அரசியல் – அறிவியல் – சமயம் இவையனைத்தும் கலந்த கொள்கைக்குழு  ஒன்றை நிறுவினார். நகரின் அன்றாட அரசியலில் முக்கியப் பங்காற்றிய இக்குழு,   உருவகங்கள் மற்றும் சிந்தனைகளை வழிநடத்துபவை எண்களே என கோட்பாட்டு ரீதியான கணிதத்தின் ஒருமையை கண்டறிந்ததன் வழியாக விலைமதிப்பற்ற மரபுச் செல்வம் ஒன்றை உலகிற்கு விட்டுச் சென்றது.

பைதாகரஸிஸத்திலிருந்து தேவையற்ற குப்பைகளை  அகற்றிய பிளேட்டோ, உலகை புரிந்து கொண்டு விளக்க கணிதமே சரியான மொழி என்கிற அதன் மைய குறிப்பை கண்டறிந்து வெளிக்கொணர்ந்தார். மேற்கத்திய அறிவியலின் பெருவெற்றிக்கான அடிப்படைகளுள் முக்கியமான ஒன்று இது‌‌.  ‘ வடிவியல் (Geometry ) தெரியாதவர் யாரும் உள்ளே வர வேண்டாம்’ என தனது வீட்டின் கதவில் அவர் எழுதி வைத்திருந்ததாக ஒரு தொன்மம் உண்டு. 

மேற்சொன்ன திடநம்பிக்கையின் விளைவாக பிளேட்டோ எழுப்பிய மகத்தானதொரு கேள்வி, மிக நீண்ட சுற்றுகளுக்குப் பிறகு நவீன அறிவியலின் துவக்கத்திற்கு அடிகோலியது. விண்ணக பொருட்களின் இயக்கம் குறித்தான கணித விதிகளை கண்டறிய இயலுமா என தனது சீடர்களுள்  கணிதம் அறிந்திருந்திருந்தவர்களிடம் கேட்டார்.  வெறும் பார்வைக்கே புலப்படும் வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்கள், பிற விண்மீன்களுக்கிடையே தன்னிச்சையான முன்-பின் நகர்வில் இருப்பதைக் காண முடிகிறது. இந்த நகர்வுகளை விளக்கவும் கணிக்கவும் இயலுமா?

பிளேட்டோவின் பள்ளியில் யூடாக்ஸஸில் (Eudoxus) தொடங்கிய  நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்து  அரிஸ்டாட்டில் (Aristarchus) , ஹிபகஸ் (hipparchus) முதலான வானியலாளர்களால் கைக்கொள்ளப்பட்ட  இந்த செயல்முறை, பண்டைய வானியலை மிக உயர்ந்த அறிவியல் தரத்திற்கு எடுத்துச் சென்றது‌. இதன் சாதனைகளை, தப்பிப் பிழைத்த ஒரே ஒரு நூலான டாலமியின் (ptolemy) அல்முஜெஸ்ட்டில் (Algamest) இருந்தே அறிய முடிகிறது. அலெக்ஸாண்ட்ரியாவில் டாலமி வாழ்ந்த பொ.யு முதல் நூற்றாண்டு, ரோமப் பேரரசின் கீழ் ஹெலனிச உலகின் தாழ்வு மற்றும் பரவலான கிறிஸ்தவமயமாக்கம் காரணமாக அறிவியல் நோக்கு முற்றாகவே அழியக்கூடிய நிலையில் இருந்தது.

கறாரான, துல்லியமான, மிக ஆழமான டாலமியின் நூல் ஒரு சிறந்த அறிவியல் படைப்பு எனலாம். வானில் நம் பார்வைக்கு புலனாகும் கிரகங்களின் தற்செயல் போன்ற நகர்வுகளை கிட்டத்தட்ட துல்லியமாக கணிக்கக்கூடிய கணிதமுறைகளை வழங்கும் இந்நூல், பைதாகரஸின் உள்ளுணர்வு மிகச் சரியானது என்பதற்கான சான்று.  புறவுலகை சரியாக விளக்கவும் அதன் எதிர்காலத்தை சரியாக ஊகிக்கவும் கணிதமே சிறந்த வழிமுறை. வானியலாளர்களின் நூறாண்டுகால  உழைப்பின் பயனை சரியான, துல்லியமான, சுருக்கமான  கணித சமன்பாடுகளாக டாலமி வழங்கியதை வைத்து, தற்செயலானதும் ஒழுங்கற்றது போல தோன்றும் கிரகங்களின் நகர்வுகளை  கணிக்க இயன்றது. இன்றும் டாலமியின் நூலை சற்று சிரமப்பட்டு வாசித்தால், செவ்வாய் கிரகத்தின் அடுத்த நகர்வினை கணிக்க இயலும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் பிழையின்றி நிகழும் இந்த அதிசயமே நவீன அறிவியலின் அடிப்படை. பிளேட்டோவிற்கும் பைதாகரஸுக்கும் அறிவியலின் கடன் சிறியதன்று.

பண்டைய அறிவியலின் வீழ்ச்சிக்குப் பிறகு டாலமியின் நூலையோ ,  யூக்ளிடின் (Euclid)  elements போன்ற தப்பிப் பிழைத்த பெரும் அறிவியல் நூல்களையோ கற்றுக் கொள்ள தகுதியுடைய எவருமே மத்திய தரைக்கடல் பகுதியில் எவரும் இல்லை. இந்தியாவில், ஏற்கனவே செறிவான வணிக மற்றும் கலாச்சார பரிவர்த்தனைகள் வழியாக வந்தடைந்திருந்த கிரேக்கர்களது கல்விஞானத்தின் அடிப்படையில் இந்நூல்கள் கற்கப்பட்டன.

கற்றறிந்த அரேபிய மற்றும் பாரசீக விஞ்ஞானிகள் வழியாக இந்த அறிதல் இந்தியாவிலிருந்து மேற்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது.  ஆனாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வானியல் எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. 

லுக்ரீஷஸின் பிரதிகளை போஜோ கண்டறிந்த சமகாலத்தில், இத்தாலிய மனிதநோக்கு மற்றும் பழங்கால பிரதிகளைத் தேடும் போக்கினுடைய போதை, பொலோன்யா நகருக்கும் பிறகு பஜோ (Padua) நகருக்கும் வந்திருந்த  போலந்து இளைஞரை பீடித்தது. லத்தீன் பாணியில் நிகலஸ் கோபனிகஸ் (Nicholas Copernicus) என தன்னை அறிவித்துக் கொண்டார். டாலமியின் அல்முஜெஸ்ட் நூல் அவரை வசீகரித்தது. தன் வாழ்நாளை டாலமியை பின்பற்றி வானியலிலேயே செலவழிக்க முடிவு செய்தார்.

காலம் கனிந்தது. வெறுமனே கற்றும் ஆராய்ந்தும் சிறு திருத்தங்கள் என இல்லாமல்,  டாலமியின் அமைப்பைத் துணிவுடன் அடியாழம் வரை சென்று மேம்படுத்தி, ஆயிரம் ஆண்டுகளாக இந்திய, அரேபிய, பாரசீக வானியலாளர்களால் இயலாத முன்னகர்வை நிகழ்த்திக் காட்டினார். விண்ணக பொருட்கள் புவியை வலம் வருகின்றன என்பதை மாற்றி, சூரியனை மையத்தில் வைத்து புவியும் மற்ற கிரகங்களும் அதைச் சுற்றி வருகின்றன என்று அல்முஜெஸ்ட் நூலுக்கு ‘மேம்பட்ட’ பதிப்பினைக் கொண்டு வந்தார். 

இந்த வழிமுறையில் கணிப்புகள் இன்னமும் சரியாக வருவதாக கோபனிகஸ் நம்பினார். நடைமுறையில் நேர்மாறாகவே – டாலமியின் கணிப்புகளை விட சற்று குறைந்ததாகவே அமைந்தது. ஆயினும் இதன் மையக் கருத்து சரியானது. அடுத்த தலைமுறையில் ஜோஹானாஸ் கெப்ள (Johannes kepler) கோபனிகஸின் அமைப்பு டாலமினுடையதை விட மேம்பட்டது என்பதைக் காட்டினார். புதிய கூர்மையான அவதானங்களை மிகக் கடினமான உழைப்புடன் ஆராய்ந்த கெப்ள, சூரியனை மையமாகக் கொண்டு சுழலும் கிரகங்களின் நகர்வுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் துல்லியமாக கணிக்கக் கூடிய கணித விதிகளை உருவாக்கினார். இது நடந்தது 1600ம் ஆண்டு – அலெக்ஸாண்ட்ரியாவில் நிகழ்ந்த பாய்ச்சலுக்குப் பிறகு சரியாக ஆயிரம் ஆண்டுகளில் மனிதகுலம் நிகழ்த்திய புதிய பாய்ச்சல் இது.

குளிர் வடபிரதேசங்களில் கெப்ள வானத்தின் நகர்வுகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கையில், இத்தாலியில் கலலேயோவிலிருந்து புதிய அறிவியல் முன்னகரத் தொடங்கியது. செழிப்பான, இத்தாலியத்தனமான, குதர்க்கமான, ஓயாமல் விவாதிக்கக் கூடிய, பெருகி வழிந்தோடும் புத்தாக்கத் திறனுடன் இருந்தவர்.  ஹாலந்திலிருந்து பரிசாக‌க் கிடைத்த தொலைநோக்கியை  வானைக் குறிவைத்து திருப்பிய  அவரது புதிய செய்கை மனித வரலாற்றையே மாற்றியது.

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

பொருட்களின் இயற்கை நியூட்டனும் சிறுநிலவும் – 2

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.