மாலாம் ஜுமாஆட்

இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஹீம் பாய், மனைவி பாத்திமாவிடம் அடுத்தமாதம் 12-ம் திகதி ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வருவதாகச் சொன்ன அடுத்த விநாடியே அவளின் நெஞ்சம், ஒரு நிம்மதிப் பெருமூச்சில் விம்மித் தணிந்தது. அந்தத் திகதி, அவள் (1)‘தூரமாய் இருந்து’ 10 நாட்கள் ஆகிவிட்டதை உடனே நினைவூட்டி மகிழ்ச்சியுற வைத்தது. தொடர்ந்து, அது என்ன கிழமையென்று கைப்பேசியில் பார்த்தவள், (2)‘மாலாம் ஜுமாஆட்’  என்றறிந்ததும் ஒரு மெல்லியப் புன்னகையில் முகம் மலர்ந்தாள்.

 (3)ஹபிபி, காரியமாகத்தான் மாலாம் ஜுமாஆட் நாளில் வருவதாகப் பாத்திமாவிற்குத் தோன்றியது! மூன்று வருட காத்திருப்பின் விரஹதாபமே அத்தானை அந்த நாளில் வர நிர்ப்பந்தித்திருக்க வேண்டும் என்றெண்ணி, முகம் சிவந்தாள். ‘எனது தவிப்பு அத்தானுக்கும் இருக்காதா என்ன?’ கைப்பேசியில் இருந்த காமிராவை இயக்கி, தலையை இடமும் வலமும் சாய்த்து, முகத்தின் கவர்ச்சியில் திருப்தி கொண்டாள்.

 தினமும் மாலை வேளையில்,  காலனியின் விளையாட்டுத் திடலில் சந்தித்துத்துக்கொள்ளும் பெண்களில் சில முஸ்லீம் பெண்களின் கணவன்மார்கள் மலேசியாவில் வேலைச் செய்துவந்தனர். அவர்களில் ஒருவன், தம்பதிகளைப் பாவங்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு (4)இபாத்தாக இஸ்லாத்தில் கருதப்படும் உடல் உறவிற்கு ஆசீர்வதிக்கப்பட்ட புனித ‘ஜிமாஃ இராவை’ மலேசிய மலாய் முஸ்லீம்கள், தமது மொழியில் ‘மாலாம் ஜுமாஆட்’ என்று சொல்லிக்கொள்ளும் பழக்கத்தை தன் மனைவியிடம் பகிர்ந்துகொண்டதுமில்லாமல், இருவருக்கிடையே ஒரு சங்கேத மொழியாயும் அதைப் பயன்படுத்தி, மகிழ்ந்திருக்கிறான். அந்தரங்க பாஷை! செவிமடுத்த மனைவியால் ரகசியம் காக்க முடியவில்லை. மற்ற பெண்களிடமும் அந்தச் சங்கேத பாஷையைப் பகிர்ந்துகொள்ள, அது அவர்களுக்கிடையேயும் பிரபலமானது.  இப்போதெல்லாம், ஊர் திரும்பும் கணவனுடன் சல்லாபித்துகொள்ளும் எல்லா  இரவுகளையும் அந்தப் பெண்கள் ‘இன்னிக்கி ராத்திரி மாமிக்கு மாலாம் ஜுமாஆட்தான்?’ என்று குறும்பு செய்து, சம்பாஷணைச் சுகம் காண்பது பழக்கமாகிப் போனது. 

* * *

ஒரு நாளா, இரண்டு நாட்களா? மூன்று வருடங்களாயிற்றே! எதிர்பார்த்துக் காத்திருந்த மலேசியா வேலை, மகள் பிறந்த அதிர்ஸ்டத்தாலோ என்னவோ ஒரே வாரத்தில் கிடைத்தது. மூன்று வருட காண்ட்ராக்ட்! விரும்பினால் மேலும் நீட்டித்துக் கொள்ளலாம்.  

தமிழ் நாட்டுத் தரகர், ரஹிம் பாயுடன் மேலும் ஐந்து பேரை மலேசியாவிற்குச் செட்டிங்கில் அனுப்பிவைத்தார். மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் நாட்டிற்குள் நுழைபவர்களை, கோலாலம்பூரில் காத்திருக்கும் முதலாளிகள், உடனே தமது ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போய் விடுவார்கள். ரெஸ்டாரண்டின் மேல் மாடியிலேயே ஓர் அறையில், ஒரு பாய், ஒரு தலையணை கொடுத்துவிட்டு, – போர்வைத் தரப்படாது –   அவர்களின் அனைத்துலக பாஸ்போர்ட்டை கம்பெனி ரூல்ஸ் என்று சொல்லி, பறித்து வைத்துக்கொள்வார்கள். ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் எல்லா வேலைக்காரர்களுக்கும் அவர்களின் பாயே அவர்களுக்கான இடம். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்யவேண்டும். விடுமுறை உத்தரவாதமெல்லாம் கிடையாது. சுங்கத்துறை அதிகாரிகள் இந்த முதலாளிகளால் (5)‘பாவ்’ செய்யப்பட்டு, மாதாந்திர மாமூல் பெற்றுக்கொண்டிருப்பதால், கால அவகாசத்தையும் தாண்டி, வருடக் கணக்கில் பலரும் நாட்டில் இருப்பதை அந்த அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒப்பந்த காலம் முடிந்து யாராவது ஊருக்குத் திரும்ப விரும்பினால், மாமுல் பெற்றுக்கொண்டிருக்கும் அதிகாரிகளில் ஒருவர்,  சுங்கச் சாவடியில் பணியில் இருக்கும் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அந்நபர் நாட்டிலிருந்து வெளியேற உதவுவார்கள். இந்த ஏற்பாட்டால் டூரிஸ்ட் விசா காலாவதியான எந்தத் தொழிலாளியும் தன் விருப்பத்திற்கு நாட்டை விட்டு வெளியேற முடியாது. 

ஒரு முறை, மகளுக்கு உடல் நலமில்லையென்று ஒரு பத்து நாட்கள் விடுமுறையில் ஊருக்குச் சென்றுவர ரஹீம் பாய் பிரயத்தனப்பட்டார். உம்மாவும் வேண்டிக் கொண்டாள்.  தரகரும், நினைத்த நேரத்தில் ஊருக்கு போய் வருவதில் எந்தச் சிக்கலுமில்லையென்றே காண்ட்ரக்ட் போடும்போது உறுதி கொடுத்திருந்தார்.  ஆனால், ஒப்பந்த காலத்தின் நடுவில் ஊருக்குப் போய் வருவதிலுள்ள பிரச்சினையை அறிய நேர்ந்தபோது, தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். 

எந்த ஆபத்து, அவசரத்திற்கும் -குடும்ப உறவின் மரணமே என்றாலும் – தன்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளியிடம் – சொந்த ஊர்க்காரனாக இருந்தால் இன்னும் உசிதம் – பிணைக் கையெழுத்து உத்தரவாதம் பெற்றுத்தர வேண்டியது நிபந்தனையாக இருந்தது. ஊருக்குப் போனவன் திரும்பி வராது போனால். கையெழுத்துப் போட்டவன், (6)‘1 ரூவா’ பிணைப் பணம் கட்ட வேண்டி இருக்கும்!

* * *

ஹபிபி வர ஏழு நாட்களே இருந்தாலும், நாள் ஒன்று 48 மணி நேரமாக நீண்டுப் போனதுபோல் பாத்திமா உணரலானாள். மூன்று வருடங்களைக் கடக்கக் காணாத ஒரு பரிதவிப்பை இந்த ஏழு நாட்களைக் கடப்பதில் கண்டாள். மலேசியாவிற்கு வேலைக்குப் போன நாளிலிருந்தே ஹபிபியின் அழைப்பு வரும் நாள் நிச்சயமற்றதாகவே இருந்தது. இன்று, அத்தான் அழைப்பார் என்ற அனுமானம் எதுவுமே இல்லாத தருணத்தில் அழைப்பு வரும்!

“உம்மா, இங்க காலீலேர்ந்து ‘அல்லாவோட ரஹ்மத்’ பொழியிறதால வியாபாரம் டல்லடிக்கிதுன்னு எனக்கு லீவு கொடுதுட்டாங்க.” என்று சொல்லி, பேச்சை ஆரம்பிப்பார். மழையை, அல்லாவோட ரஹ்மத் என்று சொன்னதை பீபீ கவனிக்கத் தவறவில்லை. இப்போதெல்லாம் நிறையவே அரபிக் வார்த்தைகள் உரையாடலில் அடிபட்டன. சொந்த பந்தங்களை விட்டு விலகியிருக்கும் தனிமையைப் போக்க, அத்தான் மறைநூல்  வாசிப்பில் மூழ்கியிருக்க வேண்டும் என்று பெருமைப்பட்டுக் கொண்டாள்.    

‘என்ன சமைச்ச?.. உம்மாச்சி என்ன செய்றா?.. வாப்பச்சா எப்பிடி இருக்காரு?.. கூப்புட்டு பேசினியா?.. உம்மாச்சா அல்லா கிருபையால நல்லா இருக்காங்க தான?..’ என்று எப்போதும் உப்புப் பெறாத விசாரணைகளாகவே சம்பாஷனை இருக்கும். 

என்றுமே ‘உம்மாவ இப்பியே பாக்கனும்போல இருக்கு!.. இந்த ‘அல்லாவோட ரஹ்மத்’தப்ப நீ பக்கத்துல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?.. ஒனக்கு பரவால்ல, தொணக்கி உம்மாச்சி இருக்கா.. எனக்கு இங்க யாரு இருக்கா?.. ராத்திரியெல்லாம் உன் நெனப்பாவே எப்பிடி கஷ்டப்படறன் தெரியுமா?’ என்று சொல்லி ஏங்கமாட்டாரா என்று பாத்திமா பீபீ தவித்திருக்கிறாள். 

மகள் செய்யும் சேஷ்டைகளையும் மீறி, தனது தனிமையைச் சொல்லி, இரண்டு சொட்டுக் கண்ணீர் வடிக்க வேண்டும் போலிருக்கும். வீட்டிலிருக்கும்போது பீபீ புர்கா அணிவது கிடையாது. இருந்தாலும் மனதில் உள்ளதை சுதந்திரமாகப் பேச அவளால் முடிந்ததேயில்லை. அதனால், ரஹிம் பாயின் அழைப்பிற்காகக் காத்திருக்கும் ஆர்வமெல்லாம் இல்லாமலேயே போய் விட்டது. 

சமயங்களில், காய்கறிகள் நறுக்கும்போது தன்னையும் மீறி முகத்தில் நாணம் படர்வதை அவளால் தவிர்க்க முடிந்ததில்லை. அப்போது, ஹபிபியின் நினைவுகளில் கொஞ்ச நேரம் ஆழ்ந்து போக சுகமாய் இருக்கும். அத்தகைய இரவுகளில் மட்டும் உறக்கம் கொள்ள மிகவும் சங்கடப்பட வேண்டியிருந்தது.

இந்த ஒரு வாரமாக மாலையில், விளையாட்டு மைதானத்தில் சந்தித்துக்கொள்ளும் பெண்களின் கிண்டல் மொழிகளைக் கேட்க, வெட்கமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அவர்களில் பலருடைய அத்தான்களும் மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளில் வேலைச் செய்து வந்ததால், எப்போதும் யாராவது ஒருத்தி பிறரின் குறும்புகளுக்கு ஆளாகிக்கொண்டே இருந்தாள். 

சில வாயாடிப் பெண்கள்,

“என்னா பீபீ, உன்னும் ரெண்டு நாள்ல பாய் மலேசியா ரிட்டர்ன் போல! உனக்கு பரவால்ல, (7)உம்மாணி, காக்கா தொல்லையெல்லாம் கெடையாது. வாச கதவ சாத்துன ஒடனேயே அத்தான், (8) ‘சுன்னத்தான காரியத்துக்கு’ ரெடியாயிருவாரு.” என்று கிண்டல் பேசுவார்கள். 

“நா, எங்கவூட்டு அத்தான் போனதுலேர்ந்து நோன்புல இருக்கன். அடுத்த வருஷம் பாய் வந்தாதான் எனக்கு (9)இப்தார்.” – சிலர் பெருமூச்சு விடுவார்கள். 

“அப்படின்னா ஊருக்கு வர்ற அத்தான் பாடு திண்டாட்டந்தான்னு சொல்லு.” என்று ஒருத்தி சொல்ல, எல்லோரும் துப்பட்டாவால் வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பார்கள்.

கணவன், மனைவி தவிர மூன்றாவது உறவினரின் உபத்திரவம் இல்லாத மனைவிமார்கள், கழுத்தில் சிவந்து தெரியும் முத்த அடையாளங்களை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி சரிந்து, கழுத்தைக் காட்டும் பட்டுத் துப்பட்டா அணிந்து வந்து, சாகசம் செய்வார்கள். ‘அவ்ராத்’ என்று கூந்தலை மறைக்க அணிந்த துப்பட்டா, அவ்வப்போது முத்தக் குறிகளைக் காட்டி, பார்க்கும் பெண்களை ஏக்கமுறச் செய்யும். 

வெளிநாட்டுக் கணவன் ஊர்த் திரும்பும் சமாச்சாரத்தை, சம்பந்தப்பட்ட மனைவி மட்டுமே இல்லாமல் மற்ற மனைவிமார்களும் ஒரு கொண்டாட்டமாகவே உணர்ந்து மகிழ்ந்து போயினர். அத்தகைய இரவுகள், தமது அனுபவங்களை மீட்டெடுத்துக்கொள்ள அவர்களுக்கு உதவுமோ என்னவோ! குறும்பு பேசி, குதூகளித்துப் போவார்கள்!

* * *

வியாழக்கிழமை விடிந்தது! 

மூன்று வருடக் காத்திருப்பு! ஹபிபியின் வரவை எப்படியெல்லாமோ கொண்டாட வேண்டும் என்று பாத்திமாவிடம் ஒரு தீர்மானம் இருந்தது. எத்தனை முறை ஒத்திகை பார்த்து அதை மெருகூட்டி இருந்தாள்! இப்போது, மேலும் ஒரு முறை ஒத்திகை பார்த்துக்கொள்ளத்தான் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

‘ஹபிபி, வீட்டில் நுழைந்த கையோடு லக்கேஜை அப்படியே நடு வீட்டில் போட்டுவிட்டு, இவளை நோக்கி ஓடி வருகிறார். வீட்டில் இருந்ததால் துப்பட்டா போட்டிருக்கவில்லை. துப்பட்டாவில் அழுந்தி படிந்து கிடக்கும் கூந்தல், இப்போது சிலிர்த்தெழுந்து, தனது அழகிய கேசத்தைக் காட்டி மயக்கியது. கூந்தலின் அழகு அத்தானைப் பித்தமுற வைத்திருக்க வேண்டும். பீபீயைக் கட்டியணத்துக்கொண்டு, ரகசியக் குரலில் மகளைக் கேட்கிறார். அவள் நித்திரையில் இருப்பது தெரிந்ததும், ‘இந்த அழகையெல்லாம் அனுபவிக்க முடியாம இந்த மூனு வருஷமா நா பட்ட பாடு இருக்கே, அந்த அல்லாவுக்கே வெளிச்சம்.’ என்று படபடத்து, மனைவியை ஆசை பொங்க முத்தமிடுகிறார். பீபீ, அப்படியே அத்தானின் மேல் சாய்ந்து தன்னை மறந்தாள். மனைவியின் பிருஷ்டம், முதுகு என்று அலைந்துகொண்டிருந்த விரல்களுக்கு ரகசியம் ஒன்று தட்டுப்பட, மறுஉறுதி செய்துகொள்ள அவை என்னமாய் அலைகின்றன! கபடம் வெளிப்பட்டுப்போன கூச்சம் தாங்காமல் பீபீ, ஹபிபியை இன்னும் இறுக அணைத்துக்கொள்கிறாள். ரகசியத்தைத் தெரிந்துகொண்ட விரல்கள், அதை உறுதிசெய்துக்கொள்ளும் அவசரத்துடன் ஆடைக்குள் நுழைந்தவை, அம்மணத்தில் சிக்குண்டு தவிக்கலாயின! கணவனின் அவசரம் அவளுக்குப் புரிகிறது.’ 

‘நாணம் மீதுர, காதிற்குள் ரகசியக் குரலில் பரிந்துரை ஒன்றைப் பிரேரிக்கிறாள்.’

“ஒத்திக மட்டுந்தான் இப்ப. மத்ததெல்லாம் ‘மாலாம் ஜுமாஆட்’ அப்பதான்.”

“மூனு வருஷம் காத்திருந்தது பத்தாதா?” – ஏக்கத்துடன் கேட்டு, அவளது கழுத்துப் பட்டையில் முத்தக்குறியொன்றை அழுத்திப் பதித்து விலகுகிறார்.’ 

‘பீபீ, எதிரே இருந்த கண்ணாடியில் தனது கழுத்தை உயர்த்தி, வலம் இடம் திருப்பிப் பார்க்கிறாள். ரத்தம் கன்றிப்போன குறியைப் பார்த்து மாய்ந்து போகிறாள். இன்னும் ரெண்டு எடத்துல கடிச்சி வெச்சாதான் என்னாவாம்?.’

‘மாலையில், துப்பட்டா தானாகவே சரிந்து போக, காயத்தைக் கண்ட தோழிகள் செய்த பகடிப் பேச்சில் இவள் கிளுகிளுத்துப் போகிறாள்.’ 

“பாவம் பீபீ! ராத்திரி பூரா தூங்க முடியாம ஒரே கொசு தொல்ல போல.” அவள் எதிர்பார்த்த பகடி செய்து ஒருத்தி, பாத்திமாவைத் திக்குமுக்காடச் செய்கிறாள்.’

* * *

கிராப் வாகனத்திலிருந்து பரபரப்புடன் இறங்கும் ஹபிபியை பீபீ, ஆவல் பொங்க பார்த்தாள்.  ஒரு பெரிய லக்கேஜ் மட்டுமே அவரின் உடைமையாக இருந்தது. சட்டென்று அவரிடம் தெரிந்த மாற்றம் அவளைத் திடுக்கிடச் செய்தது. எப்போதும் சவரம் செய்து பளபளவென்றிருக்கும் முகம் மயிர் வளர்ந்து, மாசு படிந்திருந்தது. தாடையிலிருந்த ஒரு கொத்து ஆட்டுத்தாடி, முகத்தில் ஒருவித இறுக்கத்தைக் காட்டியது. பச்சை நிறத் துணித் தொப்பி அணிந்திருந்தார். வழக்கமாக அணியும் சட்டை, சிலுவாருக்குப் பதில் பச்சை  நிறத்திலேயே ஜுப்பா! வயிறு புடைத்து, முன் தள்ளிக்கொண்டிருப்பது அசிங்கமாகத் தெரிந்தது. முன்பெல்லாம் இந்த மாதிரி எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடைய ஜுப்பாவை ஈத் போன்ற விஷேஷ நாட்களில் மட்டுமே அணிந்து, கண்டாள். தனது ஹபிபி வேறொரு ஆளாக மாறியிருப்பதாகத் தோன்றியது. பேச்சில் நிறைய அரபு வார்த்தைகள் இருப்பதற்குக் காரணம், மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஜாகீர் நாய்க் என்ற தீவிரவாதியின் அனுதாபியாக மாறியிருப்பாரோ என்று அச்சம் கொண்டாள். நெருங்கத் தயக்கமாய் இருந்தது!      

‘என்னை மூன்று வருடங்களுக்கு தனிமைத் தீயில் போட்டு வாட்டி எடுத்து விட்டீர்களே, இது ஞாயமா ஹபிபி?’ என்று கேட்பதுபோல் பாத்திமா, வாசலை மறைத்துக்கொண்டு நின்றாள்.

லக்கேஜை இழுத்துக்கொண்டு வந்து ஹாலில் வைத்துவிட்டு, ‘நமாஸ் ஓதிட்டு வாரேன்’ என்று சொல்லி, (10) ‘உளூ’ செய்துகொள்ள அவசரமாக தண்னீர்த் தொட்டியை நோக்கி ஓடினார்.

பீபீ, கலக்கத்துடன் கணவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.       

அவள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த எதுவுமே நடக்கவில்லை. அதற்கான எல்லா ஆயத்தங்களுடனும் அவள் எவ்வளவு ஆசையோடு காத்திருந்தாள்! 

‘எப்பிடி இருக்க பீபீ? நல்லா இருக்கியா?.’  என்றுகூடக் கேட்கத் தோன்றாத அவசரம், அலட்சியம் அவளைத் திகைக்க வைத்தது. ‘குறைந்தபட்சம் ஒரு விரல் தீண்டுதல்?’ 

கணவன், நாமாஸ் செய்துவிட்டு வருவதற்குள் காப்பி கலக்கி வைக்கவேண்டியது மனைவி லட்சணம்! அத்தான், சோபாவில் அமர்ந்து காப்பி குடித்துக்கொண்டிருந்தார். மகள், அப்பாவின் அருகில் செல்ல பயந்துகொண்டு அம்மாவின் பின்னால் ஒதுங்கினாள். ‘வாப்பாம்மா’ என்று அம்மா செய்த அறிமுகம் போதவில்லை. காப்பியைக் குடித்துக்கொண்டே சலிப்பூட்டும் விஷயங்களைப் பேசிக் கொண்டுடிருந்தார். ‘நீ காப்பி சாப்பிட்டியா பீபீ?’ என்பதைக் கேட்க, அவர் நிறையப் பிரயத்தனம் படவேண்டி இருந்ததோ என்னவோ, அது, கேட்கப்படாமலேயே போனது. பாத்திமா மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகிக் கலங்கினாள். இந்த அருகாமையை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அத்தான் இன்னும் மலேசியாவில் இருப்பதாகவே பீபீ உணரத் தொடங்கினாள்.   

இரவு, அத்தானுக்குப் பிடித்த மட்டன் பிரியாணியும், ஆட்டுக்கால் பாயாவும் செய்து வைத்தாள். இருவரும் ஒன்றாகவே சாப்பிட்டனர். ‘அப்பா! இவ்வளவு ருசியான சாப்பட்டை சாப்பிட்டு எவ்வளவு நாளாயிருச்சி?’ என்று பூரித்துப் போனார். பீபீ, அவர் முகத்தைப் பார்த்தாள். ‘மகள் பிறப்பதற்கு முன்னர், தட்டமுடியாத ஈர்ப்பு ஒன்று என்னிடம் இருப்பதாகச் சொல்லிக் கொஞ்சியது இப்போது ஞாபகத்திலேயே இல்லையோ!’ டெலிவிஷன் பார்த்துவிட்டு நள்ளிரவுபோல் வந்து படுத்தவர், உடனே குறட்டை விடவும் தொடங்கினார்.  

பாத்திமா, அவர் பக்கம் திரும்பிப் பார்த்தாள். ‘நான் ஒருத்தி! பீபீ, அதுக்குள்ளியும் தூங்கிட்டியா? என்று கேட்பாரென்று  எதிர்பார்த்து, தூங்குவதுபோல் பாசாங்கு செய்து காத்திருக்கிறேன்?’ அவள் இதயம் குமுறியது.

திடீரென்று, மலேசியாவில் வேறு பெண் தொடர்பு ஏதும் இருக்குமோ என்ற எண்ணம் உதித்தது. ரெஸ்டாரண்டில், நிறைய மலாய் மற்றும் இந்தோனீசிய பெண்கள் பாத்திரம் கழுவுவது, கழிவறைகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்வது பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். 

‘அவர்களும் குடும்பத்தை விட்டு வந்துதானே அங்கே வேலை செய்கிறார்கள்? அந்தத் தனிமைப் போதாதா இருவரையும் இணைத்து வைக்க? ஒரே மார்க்கம் வேறு? மலாய்ப் பெண்களில் கணவனால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அதிகம் என்று சொல்கிறார்களே?’

பாத்திமா, ஏதேதோ எண்ணித் தூக்கம் கெட்டாள். கண்களில் தோன்றிய கண்ணீர் எந்த ஆறுதலையும் கோரி நிற்கவில்லை. 

அது, மாலாம் ஜூமாஆட்! புணர்ச்சிக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரவு!

பாத்திமா, தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த மகளைத் தூக்கி, இருவருக்கும் நடுவில் போட்டுக்கொண்டாள். 

* * *   

மலேசியா வந்ததிலிருந்து ரஹிம் பாய்க்கு தினமும் வெளியில் நிறைய வேலைகள் இருந்தன. காலையில் போனவர் மக்ரிப் தொழுகைக்குப் பின்னரே வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த வாரமே, குடும்பத்தோடு கிராமத்திற்குப் போய் உம்மாவையும், வாப்பாவையும் பார்த்துவிட்டு வந்தோம். 

அன்று, இரண்டாவது வாரம்! மாலையில் வீடு திரும்பிய ஹபிபி, அழகிய அத்தர் போத்தல் ஒன்றை பீபீக்குக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். அதில் மறைந்திருந்த செய்தி அவளுக்குப் புரிந்தது. எனினும், அதிகமாய் எதையும் எதிர்பார்த்துக் கனவு காண விரும்பவில்லை! ஆயினும், அரவணைப்பிற்காக ஏங்கித் தவிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

இரவு, வாங்கி வந்த அத்தரின் சில துளிகளைக் காதுகளின் பின்புறமும், கழுத்திலும் தடவிக்கொண்டாள். படுக்கையறைக்கு வந்த ஹபிபி, ‘மவ தூங்கிட்டாளா?” என்று கேட்டார். அதற்கான பதிலைப் போல் பீபீ, விளக்கை அணைத்தாள். 

‘அத்தான் எப்போது அம்மணமானார்!’

பாத்திமா பீபீ, பொறுமையாய் அந்த அந்தரங்கத்தை அனுபவிக்க விரும்பினாள்! அந்த இருட்டிலும் எதைப் பார்க்க வெட்கப்பட்டு கண்கள் தாமாகவே மூடிகொண்டனவோ தெரியவில்லை? ஹபிபியின் ஆர்வமெல்லாம் பீபீயின் மார்பகங்களிலேயே இருந்தது. அந்த அனுபவத்தை எதிர்காலத்திற்காக தக்கவைத்துக்கொள்வதுபோல் பீபீ, நினைவுகளைச் சேகரித்துக்கொண்டு கண்கள்  கிறங்கிக் கிடந்தாள். 

‘நான் என்பது எனது முலைகள் மட்டுமா? கொஞ்ச நேரம் முத்தத்தில் உறவாடி, பரஸ்பரம் முத்தக் குறியீட்டில், கொண்டாட்டத்தைக் குறித்துக்கொள்ள வேண்டாமோ? உரையாடலுக்கு இடமில்லாத உடலுறவு மனிதர்களுக்கானது தானா? இவரின் திருப்தியே எனது சந்தோஷம் என்று இந்த ஆளுக்கு யார் சொன்னது?’ – கிறக்கத்தினூடே பீபீ ஏதேதோ எண்ண, உடல் மரத்துக்கொண்டிருந்தது.  

மனைவியின் செத்தநிலையில் கணவனுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை! தனது பராக்கிரமத்தில் அவள் மயங்கிக் கிடப்பதாய் எண்ணி, அவர் மேலும் துரிதமுற்றார்.   

ரஹிம் பாயின் அவசரம் பீபீக்கு இன்னும் அதிக எரிச்சலைத் தந்தது! 

கொஞ்ச நேரத்தில், ஏதோ அசிங்கப்பட்டுப் போனதுபோல் அவர் உடனே எழுந்து, (11)‘கடமையான குளியலுக்கு’ அவசரப்பட்டு போனது, பாத்திமாவை மேலும் சங்கடப்படுத்தியது. (12)வலீமா இரவு தொடங்கி மற்ற இரவுகளிலும், இதுவே வழக்கமாக இருந்தாலும், முன் அனுபவம் இல்லாது, பரிசுத்தமானவளாக இருந்த காலத்தில், அத்தானின் ஸ்பரிசமே புணர்ச்சிக்குப் போதுமானதாய் இருந்தது. ஆனால், நாளாக நாளாக நினைப்பையும் தாண்டி, புறத்தூண்டுதல்களுக்காவும் மனசு ஏங்கித் தவிக்கிறதே! மாலையில் கூடும் பெண்கள் சொன்ன சில அந்தரங்க கதைகள் வேறு பல புதியச் சங்கதிகளை அவளுக்குச் சொல்லிக்கொடுத்து, எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டிருந்தன. தனக்கு அந்த அனுபவங்கள் கிட்டாதது, ஏக்கம் கொள்ள வைத்தது.  முன்னெடுப்பைத் தானே தொடங்கி, சமிக்ஞைக் காட்டவும் பயமாக இருந்தது. 

ஒரு நல்ல மனைவிக்கான அச்சில் வார்த்தெடுக்கப்பட்டப் பெண், பாத்திமா! அடங்கிப் போவதும், அதிருப்திக்குப் பழகிப்போவதும்தானே பத்தினிக்கான லட்சணங்கள்! 

முப்பது நாட்களும் கடந்து போன மாயமே தெரியவில்லை! நாட்கள் நெருங்க நெருங்க அத்தானுக்கு ஆசை அதிகமாய் இருந்தது. நல்லவேலையாக, ‘தூரமாய் இருந்து’ ஒரு வாரம் பீபீ தப்பினாள். கடைசி வாரம், ஆசீர்வதிக்கப்பட்ட இரவு என்ற கணக்கெல்லாம் காணாமல் போயின. பல்லைக் கடித்தபடியே ஹபிபியைச் சகித்துக்கொண்டாள்.

* * *

ரஹிம் பாய் மலேசியா புறப்பட்டுப் போகும் நாள்! மாலை எட்டு மணிக்கு விமானம்!

பிரயாணத்திற்கான  ஆயத்தங்களிலும், மதிய உணவு தயாரிப்பதிலும் பொழுது போனதே தெரியவில்லை. அன்று, சமையலில் ஹபிபிக்கு ஒரு கோரிக்கை இருந்தது. கணவாய் மீன் அவளுக்குப் பிடிக்காத ஒன்று. கணவனுக்காகவே சமைத்தும் வைத்தாள். சாப்பிடும்போது, ‘மேலும் ஐந்து வருடங்களுக்கு காண்ட்ரக்டை நீட்டிக்கச் சொல்லி முதலாளி பாய் கேட்கிறார். நானும் ஒத்துக்கொண்டேன்.’ என்று அவளுக்குச் சம்பந்தமில்லாத ஒரு செய்தியைச் சொல்வதுபோல் ரஹிம் பாய் சொன்னார். பீபீ, மௌனமாக கேட்டுக்கொண்டாள். வருத்தம் ஏதும் இருக்கவில்லை! சாப்பிட்டு முடிந்த கையோடு குளித்துவிட்டு வந்தாள். எப்போதும் வீட்டிலிருக்கும்போது துப்பாட்டாக்கூட அணியாமல் இருப்பவள் அன்று, முதல் முறையாக ஹிஜாப் அணிந்து கொண்டாள்! ‘வீட்ல இருக்கறப்ப எதுக்கு புதுசா ஹிஜாப்?’ என்று அவர், கேட்கவுமில்லை; ஏதும் சொல்லவுமில்லை! 

ரஹிம் பாய், மகளைத் தூக்கி ஆசீர்வதித்துவிட்டு, பாத்திமா பீபீயிடம் வந்தார். அவள் அணிந்திருந்த ஹிஜாபிலிருந்து நெற்றிப் பகுதியில் ஒரு கற்றை மயிர், வெளியில் தெரிவதைப் பார்த்தார். அதை உள்ளே தள்ளி மறைத்து, ஹிஜாப்பைச் சரி செய்தபடி சொன்னார்.

“வீட்லியும் ஹிஜாப்ப அணியறதுன்னு தீர்மானிச்சுட்டா அத ஒழுங்கா அணியனுமில்லியா?” 

ரஹிம் பாய் வலது கையை நீட்டினார். பாத்திமா பீபீ, இரண்டு கரங்களாலும் கணவனின் கையைப் பணிவுடன் பற்றிச் சலாம் சொல்லி, பின்புறத்தை முத்தமிட்டாள்.

வெளியில், வாடகைக் கார் வந்துவிட்ட ஹாரன் ஒலி, ரஹிம் பாயை  அவசரம் கொள்ள வைத்தது.


வட்டாரச் சொல் விளக்கம்

(1)‘தூரமாய் இருந்து’ – மாதவிடாய்க் காலத்தைக் குறிக்கும் ஒரு கண்ணியமான பேச்சு வழக்குச் சொல்

(2)‘மாலாம் ஜுமாஆட்’  – இஸ்லாமிய காலண்டர்படி முதல் நாள் சூரிய அஸ்தமித்த உடனேயே மறு நாள் பிறந்து விடுகிறது. அதனால், வியாழக்கிழமை இரவை வெள்ளிகிழமை இரவு என்று அழைக்கிறார்கள். மலாய் மொழியில், மாலாம் என்றால் இரவு. ஜுமாஆட் என்றால் வெள்ளிக்கிழமை. ஆக,’ (Malam Jumaat) இஸ்லாத்தில், உடல் உறவிற்கு ஆசீர்வதிக்கப்பட்ட புனித ‘ஜிமாஃ இரவு’ என்ற சொல்லின் மலாய் வடிவமே ‘மாலாம் ஜுமாஆட்’(slang). பணியிடங்களில் இந்த வார்த்தையை உபயோகித்து, முஸ்லீம்கள் மட்டுமில்லாமல் மற்ற இனத்தவரும் உடலுறவைச் சுட்டி குறும்பு செய்துக்கொள்வது மலேசியாவில் பரவலாகவே காணக்கூடிய ஒரு செயல்.     

(3)ஹபிபி – அன்பிற்குரியவர்

(4)இபாத்தாக – வணக்க வழிபாடாக 

(5)‘பாவ்’ – மாமூல் கொடுத்து கைக்குள் போட்டுக்கொள்வது

(6)‘1 ரூவா’ – லட்ச  ரூபாய்

(7)உம்மாணி, காக்கா – மாமியார், மாமனார்

(8) ‘சுன்னத்தான காரியத்துக்கு’ – கணவன் மனைவிக்கிடையே நிகழும் முறையான உடலுறவு 

(9)இப்தார் – ரம்லான் மாதத்தில் மக்ரிப் தொழுகை நேரத்தில் நோன்பை முடித்து உணவு உண்ணும் சடங்கு 

(10) ‘உளூ’ – தொழுகைக்கு முன்னர் அங்கத் தூய்மை செய்துக்கொள்வது

(11)‘கடமையான குளியலுக்கு’ – உடலுறவுக்குப் பின்னான குளியல்

(12)வலீமா இரவு – முதலிரவு


Discover more from சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.