அறங்களனைத்தையும் கைவிடுக!

கீதையின் கடைசி அத்தியாயமான மோக்ஷ சன்னியாச யோகம் எழுபத்தெட்டு சுலோகங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட அத்தியாயம் ஆகும். இங்கு புதிதான கருத்து எதுவும் சொல்லப்படவில்லை எனினும், ஏற்கனவே கீதையில் விளக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளின் கூடுதல் விரிவாக்கத்தை காணலாம். ‘வேதங்களின் அர்த்தத்துடன் முழு கீதா-சாஸ்திரத்தின் அர்த்தத்தையும் சுருக்கமாக இந்த அத்தியாயத்தில் சொல்ல வேண்டும். இதற்காக மட்டுமே இந்த அத்தியாயம் தொடங்கப்படுகிறது’, என பதினெட்டாம் அத்தியாயத்தை சங்கரர் அறிமுகப்படுத்துகிறார். கீதையின் உபதேசமானது சுலோகம் 2.11 – ல் ஆரம்பமானது. அதன் மையப்பொருள் துயரத்திலிருந்து விடுபடுதல்(சோக நிவ்ருத்தி) ஆகும். ஞானிகள் துயரப்படுவதில்லை (பண்டிதா: ந அநுசோசந்தி) எனக் கூறி கிருஷ்ணர் தனது உபதேசத்தை அங்கு ஆரம்பித்தார். அது உபக்ரமம் அல்லது ப்ரதிக்ஞா சுலோகம் எனப்படும். ‘ப்ரதிக்ஞா’ எனில் வாக்குறுதி என்று பொருள். அதாவது சோகத்தை நீக்கும் உபாயத்திற்கான உறுதிமொழி அங்கு அளிக்கப்பட்டது. அப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயமானது இங்கு இந்த அத்தியாயத்தில் முடிவுரை செய்யப்படுகிறது. இது நிகமநம் அல்லது உபசம்காரம் எனப்படும்.

இதற்கு முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர் ஒரு இடத்தில், கர்மபலனின் மீதான தனது பற்றுதலை தியாகம் செய்து விட்டு, வேறு எதையும் சார்ந்து இல்லாமல், தன்னில் மகிழ்ச்சியாக இருப்பவனைப் பற்றிப் பேசுகிறார். அதாவது கர்மபலத் தியாகத்தைப் பற்றிப் பேசுகிறார். இன்னொரு இடத்தில் உலகில் உள்ள பொருட்களின் மீதான அனைத்து உரிமையையும் துறந்தவனைப் பற்றி அவர் பேசுகிறார். இங்கு இவர் கர்மங்களைத் துறந்த சன்னியாசியைப் பற்றிப் பேசுகிறார். இன்னும் பல இடங்களில் தியாகம், துறவு என்ற இரண்டைப் பற்றியும் விளக்கமாகப் பேசியிருக்கிறார் கிருஷ்ணர். இவ்விரண்டு விஷயங்கள் குறித்த தெளிவு தனக்கு வேண்டும் என்று அர்ஜூனன் பதினெட்டாவது அத்தியாயத்தின் துவக்கத்தில் கேட்டுக்கொள்கிறான். இதற்கு சுருக்கமான பதிலாக “விருப்பத்தால் செய்யப்படும் செய்கைகளைத் துறப்பது சந்நியாசமென்றும், எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்து விடுதல் தியாகமென்றும்” கூறுகிறார் கிருஷ்ணர்.

சந்யாசம் என்பது உண்மையில் விருப்புக்குரிய செயல்களைத் துறத்தல் என்று கூறப்பட்டாலும், முக்கியமாக அது ஒரு சாதகனுக்குத் தேவையான தரமான காலத்தை உருவாக்கிக் கொடுப்பதைக் குறிக்கிறது. சந்யாசம் இரு நிலைகளில் எடுத்துக் கொள்ளப்படும். 

முதலாவதாக விவிதிஷா சந்யாசம். அறிந்து கொள்ளும் ஆசையினால் எடுக்கப்படுகிற சந்யாசம் இது (வேதிதும் இச்சாமி விவிதிஷா). சாதக நிலையில் இருக்கின்ற இவர்கள், தனக்கு உண்டான வைராக்கியத்தை வளர்க்கும் பொருட்டும், சித்த சுத்திக்காக மனதை பண்படுத்தும் பொருட்டும், நிலையாமையைப் பற்றிய விவேகத்தை அதிகரிக்கும் பொருட்டும், சுருக்கமாக சொல்லப்போனால் ஞானத்தை அடையும் பொருட்டு இவர்கள் சந்யாசத்தை மேற்கொள்கிறார்கள். இரண்டாவது வித்வத் சந்யாசம். இல்லறத்திலேயே தகுதியை அடைந்து, ஞானயோகத்தை மேற்கொண்டு ஞானத்தையும் ஒருவன் அடைந்துவிட்டான். ஆனால் பழைய சம்ஸ்காரத்தினால் அவனால் ஞானத்தில் நிற்க முடியவில்லை. இந்நிலையில் ஞானத்தை ஞானநிஷ்டையாக மாற்ற தேவைப்படுகிற காலத்திற்காக எடுத்துக் கொள்கிற சந்யாசம் வித்வத் சந்யாசம் ஆகும். யாக்ஞவல்கியர் எடுத்துக் கொண்ட சந்யாசம் இவ்வகையைச் சார்ந்தது. 

கிருஷ்ணரின் கூற்றுப்படி சன்யாசமும், தியாகமும் ஒன்றே. கீதை முழுவதும் இவ்விரண்டு சொற்களையும் அவர் எந்த வேற்றுமையுமின்றியே அவர் பயன்படுத்தியுள்ளார். இரு சொற்களுமே துறத்தல் என்ற பொருளைத்தான் குறிக்கின்றன. மூன்று விதமான தியாகங்கள் இருப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார். ஆத்மாவைப் பற்றிய ஞானத்தை இன்னும் அடையாதவர்கள் தியாகங்களின் இந்த வகைகளை அறிந்து கொள்ளுதல் அவசியம். ஆத்ம ஞானத்தை அடைந்தவர்கள் தான் எந்தச் செயலையும் செய்யாதவன், எந்தப் பலனையும் அனுபவிக்காதவன் என்ற போதத்தோடு இருப்பதால் அவர்கள் செயல் செய்துகொண்டிருந்தாலும் செயலைத் தியாகம் செய்தவர்களாகின்றனர். 

“வேள்வி, தானம், தவம் ஆகிய செயல்களை ஒருவன் துறக்கக்கூடாது, ஏனெனில் இம்மூன்று செயல்களும் ஒருவனுடைய மனதைத் தூய்மைப்படுத்துகின்றன,” என்கிறார் கிருஷ்ணர். இங்கு மீண்டும் கர்மயோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பற்றுதலையும், பலனையும் துறந்தே இக்கர்மங்கள் செய்யப்பட வேண்டும் என்பது என்னுடைய நிச்சயமான கொள்கை என்கிறார். அதாவது இச்செயல்களின் மீதான உரிமையைத் துறக்கிற தன்மையும், கிடைக்கின்ற எந்தவொரு பலனையும் இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்கிற பிரசாத புத்தியும் இருக்கும்போது அச்செயல்கள் மனத்தூய்மைக்கான வழிமுறைகளாக ஆகின்றன. இங்கு கிருஷ்ணர் கர்மங்கள் என்று குறிப்பிடுவதை ஆசையின்பாற்பட்டு செய்யப்படும் கர்மங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறார் சங்கரர். அவை வேள்வி, தானம், தவம் உள்ளிட்ட நித்ய கர்மங்களையே குறிக்கின்றன என்றும் தெளிவுபடுத்துகிறார். ஏனெனில் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் செய்யப்படும் செயல்களின் பலன் (அவை வெற்றிபெறும் பட்சத்தில்) சுகத்தைக் கொண்டுவருவதால், மீண்டும் மீண்டும் அச்செயல்களைச் செய்வதற்கு ஒருவன் தூண்டப்படுகிறான். எனவே இந்தக் கர்மங்களைச் செய்வதன் மூலம் அவனால் மனத்தூய்மையை அடைய முடியாது. பற்றின்றி ஆற்றப்படும் செயல்களே மனத்தூய்மைக்கு வழியாகின்றன.

இந்த நித்ய கர்மங்களை அறிவின்மையின் காரணமாகத் துறந்து விடுதல் தாமச சன்யாசம் எனப்படுகிறது என்று கூறுகிறார் கிருஷ்ணர். உடலின் வருத்தத்துக்கு அஞ்சி, செயல் செய்தல் துக்கமெனக் கருதி இக்கர்மங்களை விட்டு விடுதல் ராஜச சன்யாசம் எனப்படுகிறது. இவர்கள் தியாகத்தின் பலனை அனுபவிப்பதேயில்லை என்கிறார் கிருஷ்ணர். ஒரு பொருளை அனுபவிக்கும்போது வருகிற சுகத்தைக் காட்டிலும் அதை தியாகம் செய்யும்போது உண்டாகிற வைராக்கிய சுகத்தில் 100 மடங்கு அதிக இன்பம் உள்ளது என்று உபநிஷத் கூறுகிறது. ராஜச சந்யாசத்தில் அந்த வைராக்கிய சுகத்தை அவன் பெறுவதில்லை. மேலும் உண்மையான தியாகத்தினால்தான் மனநிறைவு உண்டாகிறது. அதேபோல மனத்தூய்மையையும், இறுதியாக மோட்சத்தையும் அது பலனாக அளிக்கிறது. ஆனால் உடல் துன்பத்தைத் தவிர்ப்பதற்காக, ஒருவன் அனைத்து கர்மங்களையும் கைவிட்டால், அவன் உண்மையில் சந்யாச வாழ்க்கையை வாழவில்லை, சோம்பலை அடிப்படையாகக் கொண்ட இலக்கற்ற வாழ்க்கையையே அவன் மேற்கொள்கிறான் என்பதால் நிச்சயமாக துறவின் பலனை அவன் பெறுவதில்லை. எனவே, “பற்றுதலையும் பலனையும் விட்டு, செய்தற்குரியதென்றே எந்த நித்ய கர்மம் செய்யப்படுகிறதோ, அந்த தியாகம் சாத்விகமானதென்று கருதப்படுகிறது” என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

இச்செயல் என்னால் செய்யப்பட வேண்டும், நான் இச்செயலைச் செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல்களே பற்றின்றி செய்யப்படுகின்றன. இங்கு நம்மை மீறி உள்ள, இந்தப் படைப்பு முழுமையையும் ஒழுங்குடன் நடத்துகின்ற ஓர் ஆற்றலிடம் சரணடைதல் இயல்பாக நிகழ்கிறது. ஒரு செயலைச் செய்வதன் மூலம் வரும் பலனையும் மனம் இறைவனிடமிருந்து வந்த பிரசாதம் என முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. இந்தவிதமான தியாகமே சாத்விகத் தியாகம் ஆகும். விவேக வைராக்கியத்தின் காரணமாக அனைத்து கர்மங்களையும் துறந்து, சந்யாச வாழ்க்கையை எடுத்துக் கொள்வதும் சாத்விக சந்யாசம் ஆகும் (விவேக ஜந்ய வைராக்ய பூர்வக ஸந்யாஸம்). நிலையாமை பற்றிய அறிவினால் உண்டான வைராக்கியத்திலிருந்து செய்யப்படுகிற சந்யாசம் இது. ஒருவன் தனது தகுதி மற்றும் மனப்பக்குவத்தை முழுமையாக உணர்ந்து துறத்தல் வேண்டும்.செயல்களைத் துறந்து விடுவதைவிட, செயல்களின் மீதும், அவற்றின் பலன்களின் மீதுமுள்ள பற்றையும் விட்டுவிடுதலே சிறந்தது என்று மீண்டும் மீண்டும் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். அவ்வாறு சாத்விக தியாகம் செய்தவன், “ சத்வத்தில் நிலைத்தவனாய், பேரறிஞனாய், ஐயங்கள் களைந்தவனாய், துன்பமுற்ற செயலை வெறுப்பதுமில்லை, இன்பச் செயல்களை விரும்புவதுமில்லை,” என்கிறார் கிருஷ்ணர்.

செயல்களின் மீதான பற்றுதலை விடுவதற்கு பதிலாக ஏன் செயல்களையே துறந்து விடக்கூடாது என்ற கேள்வி எழலாம். அதற்குப் பதிலாக கிருஷ்ணர், உடல் மீது பற்று கொண்டவனால் செயல்களை முழுமையாகத் துறந்து வாழ இயலாது என்று கூறுகிறார். உடற்பற்று கொண்டு கர்மபலனைத் தியாகம் செய்ய இயலாதவர்களுக்கு மரணத்துக்குப் பின் இனியது, இன்னாதது, இரண்டும் கலந்தது என்ற மூன்று விதமான வினைப்பயன்கள் உருவாகின்றன. ஆனால் செயல்களின் பலனைத் துறந்த தியாகியான சன்யாசிக்கு இதுபோன்ற எந்தப் பலன்களும் நிகழ்வதில்லை என்கிறார் கிருஷ்ணர்.

வேதத்தின் கர்மகாண்டத்தின் பின் இறுதியாக வரும் சாங்கிய சாஸ்திரம் எனப்படும் வேதாந்தத்தில், எல்லாச் செயல்களும் நிகழ்வதற்கு மூலமாக இருக்கும் ஐந்து காரணங்களாகக் குறிப்பிடப்பட்டவைகளைப் பட்டியலிடுகிறார் கிருஷ்ணர். செயல் நடப்பதற்கு ஆதாரமாக (அதிஷ்டானம்) இருக்கும் உடல், செயலைச் செய்யும் அகங்காரமாகிய கர்த்தா, செயல் செய்யப் பயன்படுத்தப்படும் கருவியான கர்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களும், இக்கருவிகளையும், உடலையும் தனித்து இயக்கும் பிராணன் ஆகியன முதல் நான்கு காரணங்கள். இவையனைத்தும் ஓர் ஒழுங்கான நியதியில் நடப்பதற்கு ஐந்தாவதாக தெய்வம் காரணமாக இருக்கின்றது என்று முடிக்கிறார். அறவழியிலாயினும் சரி, மறவழியிலாயினும் சரி எல்லாச் செயல்களுக்கும் காரணமாக இவ்வைந்துமே இருக்கின்றன.

இவ்வாறு எல்லாச் செயல்களும் இந்த ஐந்து காரணிகளாலேயே நடந்து கொண்டிருக்க, தன்னைச் செயல் செய்பவனாக எண்ணிக் கொள்பவன் அறிவிலியே என்று கூறுகிறார் கிருஷ்ணர். “அக்ருத புத்தி” என்று அவனுடைய புத்தியைக் குறிப்பிடுகிறார். அதாவது அவனது மனம், புத்தி ஆகியன இன்னும் பண்படாமல், தூய்மைப்படுத்தப்படாமல், ஆத்மாவைப் பற்றிய விசாரத்துக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றது. இதனாலேயே அவன் ஆத்மாவைச் செயல் செய்பவனாக எண்ணிக்கொள்கிறான். உடலின் அழிவுக்குப்பின்னும் ஆத்மா தொடர்ந்து இருக்கின்றது என்று நம்பும் பூர்வ மீமாம்சகர்கள்கூட ஆத்மா செயல் செய்பவன் என்றுதான் எண்ணுகிறார்கள். வேதங்களைக் கற்றிருந்தும்கூட அவர்களுக்கு இந்த உண்மை புலப்படுவதில்லை. அவர்களைத்தான் கிருஷ்ணர் “பஸ்யந் அபி ந பஸ்யதி – பார்த்தும் பார்க்காதவர்கள் என்று குறிப்பிடுகிறார். “யாருக்கு நான் செயல்செய்பவன் என்ற அகங்காரம் இல்லையோ, யாருடைய புத்தியில் செயலின் மீதும், அதன் பலன்களின்மீதும் பற்றில்லையோ, அவன் இவ்வுலகத்தாரைக் கொன்றாலும் கொல்லாதவனே; எந்த விதத்திலும் பந்தப்படாதவனே,” என்று ஆத்ம அறிவை உடையவனைப் புகழ்கிறார். ‘நான்’ என்பது எல்லா செயல்களிலிருந்தும் விடுபட்டது ஆகையால் ஆத்மாவுக்கு நல்லது ஏது? கெட்டது ஏது? இதை அறிந்து, இந்த அறிவை தன்னியல்பாக்கியவனது மனம் எவ்வித துயரங்களாலும், குற்றவுணர்வுகளாலும் பாதிக்கப்படுவதில்லை.

இங்கு கிருஷ்ணர் கொடுப்பது கொலைக்கான ஒப்புதல் அல்ல. மிகவும் கடினமான, முறையற்ற செயலை எடுத்துக்காட்டுவதன் மூலம், மற்ற அனைத்து செயல்களும் இங்கு உள்ளடக்கப்பட்டுவிட்டது. இது பிரதம-மல்ல-ந்யாயம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக ஒருவன் குத்துச்சண்டை சாம்பியனாக விரும்பினால், தற்போதைய சாம்பியனை மட்டுமே தோற்கடித்தல் வேண்டும். அதேபோல், இங்கே, கொலை செய்யும் செயலைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், கிருஷ்ணர் மற்ற அனைத்து செயல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆத்மாவை அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்று அறிபவன் எப்படி யாரைக் கொல்வான், யாரைக் கொல்விப்பான்? என்றெல்லாம் இரண்டாம் அத்தியாயத்தில் அவர் குறிப்பிட்டதைத்தான் அவர் இங்கும் குறிப்பிடுகிறார்.

மீண்டும் செயல் குறித்தே பேசுகிறார் கிருஷ்ணர். ஒரு செயலுக்கான தூண்டுதல் என்பது அந்தச் செயல் குறித்த அறிவு, செயலின் அறிபடுபொருள், மற்றும் அந்தச் செயலை அறிபவன் என்று மூன்று விதமாக இருக்கின்றது என்கிறார். மேலும் செயலுக்கான இருப்பிடம் என்பது செயல் செய்யும் கருவி, அந்தக் குறிப்பிட்ட செயல், மற்றும் அந்தச் செயலைச் செய்பவன் என்று மூன்று விதம் எனக்கூறுகிறார். செயலிற்கான ஐந்து காரணிகளை முதலில் விளக்கிய அவர் இப்போது வேறு கோணத்தில் செயலுக்கான காரணிகளை விளக்குகிறார். அறிவு, செயல், செயல் செய்பவன் இவை மூன்றும் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று வகை குணங்களாலானவை என்கிறார். 

இந்த குணங்கள் குறித்த விளக்கத்துக்கான பிரமாணத்தை அவர் கபிலரின் சாங்கிய தத்துவத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார். சாங்கியம் ஆறு தத்துவங்களின் வரிசையில் நான்காவது இடம் வகிக்கிறது. சாங்கியர்கள் வேதங்களைப் பிரமாணமாக ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் படைப்புக்குக் காரணமாக இருப்பது பிரதானம் எனப்படும் ஜடதத்துவமான பிரகிருதியைக் குறிப்பிட்டு, புருஷன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் உண்மையான தத்துவங்கள் என்று அவைகளை சமமாகக் கருதுவதால் அவர்களது மதம் த்வைதமாகும். அத்வைதம் சாங்கியத்தின் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை. பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய பாஷ்யத்தில் ஐந்தாவது அதிகாரத்தின் ஐந்தாவது சூத்திரத்திலிருந்து சங்கரர் சாங்கியர்களைக் கடுமையாக எதிர்த்து வாதாடுகிறார். ஆனால் அவர்களது குணப்பாகுபாடு குறித்த தத்துவத்தையும், படைப்பு உருவாகும் விதம் குறித்த கிரமத்தையும் அத்வைத தத்துவம் ஏற்றுக்கொள்கிறது. இதுபோலவே புத்தமதக் கோட்பாடுகளையும், யோக சாஸ்திரம் போன்ற வேறு பலமதங்களின் கோட்பாடுகளையும் அத்வைதம் தன்னுள்ளிழுத்துக் கொண்டு செயல்படுகிறது.

“பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை எதனால் ஒருவன் காண்கிறானோ அதுவே சாத்வீக ஞான”மென்றும், “எந்த ஞானம் வெவ்வேறு விதமான பல இயல்புகளை உயிர்களனைத்திலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறானதென்று அறிகிறதோ அந்த ஞானத்தை ராஜஸ”மென்றும், “ஒரு செயலையே முழுதுமென்று பற்றிக்கொண்டு யுக்திக்குப் பொருந்தாததாயும், உண்மைக்கு ஒவ்வாததாயும், அற்பமாயுமுள்ள ஞானம் எதுவோ அது தாமஸ” மென்றும் கூறுகிறார் கிருஷ்ணர்.

அதேபோல செயலின் மூன்று குணங்களைக் குறிப்பிடுகையில், “பயனில் விருப்பமில்லாதவனால், பற்று இல்லாமல், விருப்பு வெறுப்பின்றி, நியமிக்கப்பட்டுள்ள எந்தச் செயல் செய்யப்படுகிறதோ அது சாத்விகம்” என்றும், “ஆசையின் வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் பெரும் ஆயாசத்துடன் எந்தச் செயல் செய்யப்படுகிறதோ அது ராஜஸம்” என்றும், “செயலின் விளைவையும், அது ஏற்படுத்தப்போகும்இழப்பையும், துன்பத்தையும், தன் திறனையும் எண்ணிப்பாராது மயக்கத்தால் எந்தச் செயல் தொடங்கப்படுகிறதோ அது தாமசம்” என்றும் விவரிக்கிறார்.

இதேபோல் மூன்றுவிதமான கர்த்தாக்களைப் (செயல் செய்பவன்) பற்றியும் குறிப்பிடுகிறார். “பற்று நீங்கியவன், அகங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமுமுடையவன், வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் எவனோ அவன் சாத்விக கர்த்தா” என்றும், “ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன், லோபி, துன்புறுத்தும் தன்மையுடையவன், தூய்மையில்லாதவன், மகிழ்வும், சோர்வும் கொள்பவன், இத்தகையவன் ராஜஸ கர்த்தா” என்றும், “யோகத்துக்கு ஒவ்வாத மனதுடையவன், அறிவு வளரப்பெறாதவன், முரடன், வஞ்சகன், பழிகாரன், சோம்பேறி, துயருறுவோன், காலம் நீட்டிப்பவன் — இத்தகைய கர்த்தா தாமஸன்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பின்னர் மூன்றுவகையான புத்திகளைப் பற்றிக்கூறுகிறார். கர்ம மார்க்கத்தையும், சந்யாச மார்க்கத்தையும், செய்யத் தகுந்ததையும் தகாத காரியத்தையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோட்சத்தையும் அறியும் புத்தி சாத்விகமானது. தர்மத்தையும் அதர்மத்தையும், தகுந்த காரியத்தையும் தகாத காரியத்தையும் தாறுமாறாக எந்த புத்தி அறிகிறதோ அது ராஜஸமானது. அறியாமை இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும், விஷயங்களையெல்லாம் விபரீதமாகவும் நினைக்கிறதோ அது தாமஸமானது. இங்கு மூன்று குணங்களைக்கொண்ட புத்தியைப் பற்றி கிருஷ்ணர் குறிப்பிடுவதற்குக் காரணம் ஒருவன் தனது புத்தியை தாமச மற்றும் ராஜச குணங்களிலிருந்து சாத்விக குணத்துக்கு முயற்சியின் மூலமும், பயிற்சியின் மூலமும் மாற்றிக் கொள்ள முடியும் என்பதை சாதகனுக்கு உணர்த்துவதற்காகவே.

மேலும் மூன்று வகையான திருதிகளைப்பற்றி கிருஷ்ணர் பேசுகிறார். திருதி என்றால் மனத்திட்பம் என்று பொருள். புத்தியில் உள்ள ஸ்திரத்தன்மைக்கு திருதி என்று பெயர். யோகத்தைக்கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்-பிராணன் – இந்திரியங்களின் செயல்களை எவன் ஒருவன் காக்கின்றானோ அந்த உறுதி சாத்விகமானது. சாத்விகமான உறுதியை கிருஷ்ணர் “அவ்யபிசாரிண்யா திருதி” என்று அழைக்கிறார். அசைக்கமுடியாத உறுதி. மனஉறுதி படைத்த யோகியின் மனதும், பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன. அவனுடைய செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன. அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும், கர்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களும் அதனதன் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம் விதவிதமான இறைவழிபாடுகளாகின்றன. எந்த உறுதியினால் அறம் பொருள் இன்பங்களை ஒருவன் காக்கின்றானோ, பற்றுதலால் பயனை விரும்புகின்றவன் ஆகிறானோ அந்த உறுதியானது ராஜஸமானது. தூக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், மனக்கலக்கத்தையும், செருக்கையும் விடாது பிடிக்கும் அறிவிலியின் உறுதியோ தாமஸமானது.

பின்னர் மூன்றுவிதமான சுகங்கள் குறித்து: எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்தத்துக்கு ஒப்பானதுமாகிறதோ அந்த சுகம் சாத்விகமாகும். ஆத்ம நிஷ்டையில் தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது. மோக்ஷம் எனப்படும் சுய-அறிவை ஒருவன் தேடத் தொடங்கும்போது, ​​அவன் தன்னைத்தானே அணுகத் தொடங்குவதால் அங்கு அவன் முதலில் சிரமப்படுகிறான். தனது தேடலைத் தொடங்குவதற்கு முன்பு, அவன் ஏதாவது ஒன்றைச் செய்து மேலோட்டமான சில திருப்திகளை அடைந்திருக்கிறான். உண்மையான பிரச்சினைகளை கவனிக்காமல் பல்வேறு விஷயங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்ததனால், ​​மனநிறைவைத் தேடத் தூண்டும் வழியை அவன் கண்டிருக்கவில்லை. இப்போது கவனத்தை தன் பக்கம் திருப்பும்போது, ​​முன் ஒருபோதும் சிந்திக்காத துக்கங்களும், நினைத்திருக்காத எண்ணங்களும் முன்னிலையில் வருகின்றன. தனது தீய குணங்கள் பார்வைக்குத் தெரிய தொடங்குகின்றன. ஆரம்பத்தில் இது விஷம் போன்றது, ஏனென்றால் அதை சரியாக புரிந்து கொள்வதற்கு வைராக்கியம், மன முதிர்ச்சி, பற்றற்ற தன்மை, புறநிலைத்தன்மை மற்றும் தன் மனதைப் புரிந்துகொள்வது போன்றவை தேவைப்படுகின்றன. மேலும் இவை அனைத்தையும் சரியாகக் கையாளுவதற்கு கடந்த காலத்தை கைவிட வேண்டும். இது ஒரு கடினமான செயல்முறை. 

எனவே ஆரம்ப காலகட்டத்தில் ஆன்மிக நாட்டம் என்பது வலியால் நிறைந்துள்ளது. நற்பண்புகளை அடைதல், ஞானம், பற்றற்ற தன்மை மற்றும் அடைந்த ஞானத்தில் நிலைத்திருக்கும் திறனைப் பெற தொடக்கத்தில் நிறைய பயிற்சியும், முயற்சியும் தேவை. பழகும்வரை அது மிக கடினமானதாக இருக்கிறது. இறுதியில் புரிதல், பற்றின்மை போன்றவற்றினால் உண்டாகும் மனமுதிர்ச்சியிலிருந்து பிறக்கும் ஒரு சுகம் இருக்கிறது என்று சங்கரர் இங்கு விளக்கமளிக்கிறார். அந்த சுகம் சாத்விகமானது. அது அமிர்தத்தை போன்று இனிமையானது, பேரின்பத்தை அளிக்கவல்லது. இந்த சுகம் ஆத்மாவில் நிலைத்த புத்தியில் தோன்றுவது என்பதனால் இது காலம், இடம், பொருள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது. ஆத்மாவில் நிலைத்த மனமானது எது எப்படி இருந்தாலும் அப்படியே இருக்கட்டும் என்று ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் கொண்டது. ஏனெனில் தன்னுடைய ஆனந்தத்துக்காக அது இன்னொரு பொருளைச் சார்ந்திருக்கவில்லை. தானே ஆனந்த சொரூபம் என்பதை அது உணர்ந்திருக்கிறது. 

புலனுறுப்பு அதன் பொருளுடன் தொடர்பு கொள்வதால் முதலில் அமிர்தம் போன்றிருந்து முடிவில் விஷம் போன்றாகும் சுகம் ராஜஸமென்று சொல்லப்படுகிறது. துவக்கத்திலும் முடிவிலும் தன்னை மயக்குவதும், தூக்கம், சோம்பல், தடுமாற்றத்தினின்று பிறப்பதுமாகிய சுகம் தாமஸமென்று கருதப்படுகிறது. 

பிரகிருதியிலிருந்து தோன்றிய இந்த குணங்களிலிருந்து மண்ணுலகில், விண்ணுலகில் யாருக்குமே விடுதலை இல்லை என்று கூறுகிறார் கிருஷ்ணர். பின்னர் குணங்களின் அடிப்படையில் மனிதர்களை பிராம்மணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு வகையாகப் பிரித்து அவர்களைப்பற்றி விளக்குகிறார். நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டியது இந்த நால்வருணப்பாகுபாடு கீதையில் பிறப்பினடிப்படையில் செய்யப்படவில்லை என்பதைத்தான். அது குணத்தினடிப்படையிலேயே செய்யப்பட்டுள்ளது. 

மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, சாஸ்திர ஞானம், புரிந்துகொள்ளப்பட்ட ஞானம், இறை நம்பிக்கை இவையாவும் பிராம்மண இயல்புடைய கர்மங்களாகின்றன. சூரனாக இருப்பது, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டாமை, கொடை, தலைமை பொறுப்பு ஆகியவைகள் இயற்கையில் உண்டாகிய க்ஷத்ரிய கர்மங்களாகும். உழவும், கால்நடை காத்தலும், வாணிகமும் வைசிய கர்மங்களாகும். உடல் உழைப்பு புரிவது சூத்திரனுக்கு இயல்பாக உண்டாகிய கர்மம்.

இனி, ஒருவனின் சுபாவத்தைப் பொறுத்து அமைந்த அந்த செயல்பாடு எதுவாக இருந்தாலும், அது ஒரு கடமையாக மாற்றப்பட வேண்டும் என்றும், தனக்கு இயல்பாக அமைந்த கர்மத்தையே யோகமாக மாற்றுவது எப்படி என்பது பற்றியும் பேசுகிறார் கிருஷ்ணர். “தனக்குரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான்.” என்று துவங்குகிறார். ஒருவன் தன்னுடைய செயல்களை சரியான பாவனையுடன் செய்துவருதலே மிகச்சிறந்த இறைவழிபாடு என்கிறார் கிருஷ்ணர். இவ்வாறு தொடர்ந்து நமது தன்னறத்தைப் பற்றின்றி செய்துவரும்போது நமது விருப்பு வெறுப்புகள் குறைகின்றன. மனம் தூய்மையடைகின்றது. தூய்மையடைந்த மனதில் தன்னைப்பற்றிய அறிவை அடையும் ஒருவன் செயல்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைகிறான். பிறர்க்குரியஅறத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய அறத்தை குணக்குறைகளோடு செய்தலும் நன்று. தீயைப் புகை சூழ்ந்திருப்பதுபோல எல்லாச் செயல்களையும் குறைகள் சூழ்ந்துள்ளன. அக்குறைகளைக் காரணம் காட்டி ஒருவன் செயல்புரிவதை விட்டுவிடக்கூடாது. 

தன்னறத்தைப் பற்றி மிக விளக்கமாகப் பேசிய கிருஷ்ணர் பின்னர் ஞானயோகத்தின் சாரத்தை அளிக்கிறார். ஞானயோகத்தைப் பயின்று அதன் பலனை அனுபவிப்பதற்கு ஒருவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாக மூன்றைக் குறிப்பிடுகிறார். எதிலும் பற்றற்றிருத்தல், ஆசையற்றிருத்தல், மற்றும் தன் மனத்தின் விருப்பு வெறுப்புகளை வென்றிருத்தல் ஆகியன அம்மூன்றும். இம்மூன்றும் கொண்ட ஒருவன் சன்யாசத்தினால் விடுதலையை அடைகிறான் என்று குறிப்பிடுகிறார். சன்யாசம் என்று கிருஷ்ணர் குறிப்பிடுவது ஞானகர்ம சன்யாசத்தை. அதாவது “நான் செயல் செய்பவனில்லை” என்ற அறிவினால் எல்லாச் செயல்களின் மீதுள்ள பற்றையும், அவற்றைச் செய்து கொண்டிருக்கும்போதே துறந்து விடுதல். “தூய்மையான புத்தியுடையவன் உறுதியுடன் தன்னையடக்கியும், சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களைத் துறந்தும், விருப்பு வெறுப்பை விட்டொழித்தும், தனித்திருந்து, குறைத்து உண்டு, மனம், மொழி, மெய்யை அடக்கி, எப்பொழுதும் தியானயோகத்தில் திளைத்திருந்து, வைராக்கியம் பூண்டவனாய், அகங்காரம், வன்மை, செருக்கு, காமம், குரோதம், உடைமை ஆகியவைகளை விட்டுவிட்டு, மமகாரமற்று சாந்தமாயிருப்பவன் பிரம்மமாவதற்கு தகுந்தவன்,” என்று கூறுகிறார்.

“பிரம்மமயமாகித் தெளிந்த மனமுடையவன் துயருறுவதில்லை; ஏக்கமடைவதில்லை. எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருப்பவன் என்மீதான மேலான பக்தியை பெறுகிறான்” என்கிறார். இங்கு அவர் பக்தி எனக்குறிப்பிடுவது இறைவனும், நானும் வேறல்ல என்று உணர்ந்திருக்கிற ஞானியின் பக்தியை. மேலும் இவ்வாறு இறைவனை அறியும் அறிவு பக்தியன்றி வேறில்லை என்று விளக்குகிறார். “என்னை உள்ளபடி அறிந்தவன் என்னுள் நுழைகிறான்” என்கிறார். இங்கு நுழைகிறான் என்பதை அவன் இறைவனாகவே தன்னை அறிந்து நிறைவு கொள்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் மீண்டும் கர்மயோகத்தைப் புகழ்ந்தபடியேயிருக்கிறார் கிருஷ்ணர். “எப்பொழுதும் எல்லாக் கர்மங்களையும் செய்தபோதிலும் என்னை சரணடைகிறவன் எனதருளால் நித்தியமாயிருப்பதும் அழியாததுமாகிய பதமடைகிறான்,” என்கிறார். இது கர்மயோகத்தையே குறிக்கிறது. செயல் செய்துகொண்டிருக்கும்போதே எல்லாவற்றையும் மேலான இறையிடம் விட்டுவிடும் பாவனையே கர்மயோகம் எனப்படுகிறது. “அறிவினால் செயல்களைத் துறந்து விடு. என்னையே இலக்காகக் கொள். எப்போதும் சித்தத்தை என்பால் வைத்திருப்பாயாக.” என்று அர்ஜூனனுக்கு அறிவுறுத்துகிறார். இவ்வாறு வாழ்வை நடத்துவதால் ஒரு சாதகன் தன் ஆன்மிகப்பாதைக்கு வரும் தடைகளை எளிதில் கடந்து விடமுடியும். ஏனெனில் இறைவனாகிய ஈஸ்வரனே அனைத்துயிர்களின் மனதிற்குள்ளும் வீற்றிருந்து மாயையினால் எல்லா உயிர்களையும் இயந்திரத்தைப்போல் ஆட்டிப்படைகிறான். “எனவே எல்லா விஷயங்களிலும் ஈஸ்வரனையே சரணடைவாக. அவனருளால்தான் நீ மேலான அமைதியும், வீடுபேறும் அடைவாய்” என்கிறார். இங்கு மேலான அமைதி எனப்படுவது மனதின் ஒரு குறிப்பிட்ட நிலையல்ல. அமைதி என்பது சுயத்தின் இயல்பு. இறைவனைச் சரணடைவதால் கிடைக்கும் எளிய அமைதியிலிருந்து இது மேம்பட்டது. ஆனால் இந்த மேலான அமைதி முதலில் இறைவனைச் சரணடைந்து அவன் அருளைப் பெற்றோருக்கு மட்டுமே கிட்டுகிறது.

இறுதியாக தன்னுடைய உபதேசத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறார் கிருஷ்ணர். “மறை பொருள்களுளெல்லாம் மறைபொருளாகிய ஞானம் இங்ஙனம் உனக்கு இயம்பப்பட்டது. இதை முழுதும் ஆராய்ந்து விரும்பியதைச் செய்,” என்று அர்ஜூனனிடம் கூறுகிறார். ஏன் இது மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான ஞானம் எனில், இதன் ரகசியத்தை அவ்வளவு எளிதில் யாரும் நாடுவதில்லை. அவ்வாறே நாடினாலும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்வதில்லை. “ஸ்ருண்வந்த: அபி பஹவ: யம் ந வித்யு:” (ஆத்மாவைப் பற்றித் தொடர்ச்சியாகக் கேட்டபோதிலும் கூட, பலராலும் அதை உணர்ந்து அறிய முடிவதில்லை), என கடோபநிஷத் கூறுகிறது. கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலும் “கேட்டாலும் இந்த ஆத்மாவை யாரும் அறிகிறதில்லை” என்று கூறப்பட்டுள்ளது. ‘யாரை ஆத்மா தேர்ந்தெடுக்கிறதோ, அவரால் அது அறியப்படுகிறது. “யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய:,” என கடோபநிஷத், மற்றும் முண்டகோபநிஷத் கூறுகிறது. ஆத்மா என்பது அதை அறிய தேர்ந்தெடுக்கும் மனிதருக்கே கிடைக்கக்கூடியது; வேறு யாருக்கும் கிடைக்காது. அது ஒரு பொருள் அல்ல என்பதால் ஆத்மாவை தற்செயலாக அடையமுடியாது. அது ஒருவனின் சொந்த இயல்பாகவே இருப்பதால் அதை அறிய தேர்வு செய்ய வேண்டும்; மேலும், ‘இது நினைவாற்றலால் அடையப்படுவதில்லை, பல சாஸ்திரங்களைக் கேட்பதாலோ, வேதத்தை ஓதுவதாலோ அடையப்படுவதில்லை — நாயமாத்மா ப்ரவசநேந லப்ய: ந மேதயா ந பஹுநா ச்ருதேந’, என்கிறது கடோபநிஷத். அதை அறியும் முயற்சியை அவன் தொடங்க வேண்டும். இதுவே முமுக்ஷுத்வம்(மோக்ஷத்தை விரும்பும் மனப்பாங்கு) என்றழைக்கப்படுகிறது. இதுவே பின்னர் ஜிக்ஞாஸாவாக(அறிய வேண்டுமென்ற தீவிர விருப்பம்) மாறுகிறது. ஜிக்ஞாஸா இந்த ஞானத்திற்கான மிக அத்தியாவசியமான தகுதியாகும்.

இவை அனைத்தையும் முழுமையாகப் பகுப்பாய்வு செய்த பிறகு, நீ எதை இச்சிக்கிறாயோ அதை செய்வாயாக — யதா இச்சஸி ததா குரு, என்று கிருஷ்ணர் கூறுகிறார். இது ஒரு ஆசிரியருக்கு மாணவனின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. அர்ஜுனனுக்குச் சொல்லவேண்டிய அனைத்தையும் தான் ஏற்கனவே சொல்லிவிட்டோம் என்பதை அவர் உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போதும் அர்ஜுனன் போர் புரியாமல் இருக்கத் தீர்மானித்தால், அவனது அந்த முடிவு பொய்யானது(மித்யா) என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு மேல் எதையும் சொல்லிவிட முடியாது. தனது உபதேசத்தின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் அர்ஜுனனின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக இறுதிமுடிவை அர்ஜுனனிடமே விட்டுவிடுகிறார் கிருஷ்ணர்.

பின்னர் ஞானயோகப்பாதையில் இறைவனைச் சரணடைதலின் முக்கியத்துவத்தைப் புகழ்கிறார். இறைவனைச் சரணடைதல் என்பது உண்மையை அறிவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பது. உண்மையை அறிதல் என்பது இறைவனை அடைதலே. எனவே இறைவனைச் சரணடைதல் என்பது அவனை அடைவதற்காக பிற எல்லாவற்றையும் இழக்கத் தயாராயிருப்பது. “உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே,” என்கிறார். எனக்காகவே எல்லாச் செயல்களையும் செய் என்று கிருஷ்ணர் கூறுவதன் மூலம் அர்ஜூனனைக் கர்மயோகம் செய்ய வலியுறுத்துகிறார். பின்னர் பதினெட்டாவது அத்தியாயத்தின் 66 ஆம் சுலோகத்தில், “எல்லா அறங்களையும் கைவிடுக. என்னையே சரணடைக. எல்லாப் பாவங்களிலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன். நீ துயரப்படாதே,” என்று கூறுகிறார்.

கீதையின் இந்த சுலோகம் உபதேசம் இத்துடன் முடிவடைகிறது என்பதைக் குறிக்கிறது. இதற்கு உபசம்கார சுலோகம் என்று பெயர். முகவுரை மற்றும் முடிவுரை இரண்டும் ஒரே கருத்தாக இருக்கவேண்டுமென்பது ஒரு நியதி. கீதையின் முகவுரை சுலோகம்(2.11), துயரப்படத் தகாத ஒன்றைக் குறித்து நீ துயருறுகிறாய் — அசோச்யாந் அந்வசோசஸ்த்வம், என்று தொடங்கியது. துயருறாதே — மா சுச:, என்ற போதனையுடன் இங்கு நிறைவை அடைகிறது. அதாவது, துயரப்பட வேண்டிய அவசியமில்லை எனத் தொடங்கி, அந்த துயரத்தை நீக்குவதற்கான அறிவு கொடுக்கப்பட்டு, இதை அறிந்தால் நீ துயரப்படத் தேவையில்லை, எனவே துயரப்படாதே என்று முடிவடைகிறது. எனவே, துயரத்தைப் போக்குவதே கீதையின் முழுமுதற் குறிக்கோள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

“சர்வதர்மான் பரித்யஜ்ய -அனைத்து அறங்களையும் கைவிடுக” என்பதன் பொருள் ஞானத்தின் வாயிலாக அனைத்துச் செயல்களையும் துறத்தலாகும். எனவே தர்மம் என்பது இங்கு நேரடியாக கர்மத்தைக் குறிக்கிறது. இந்த முழு சுலோகத்தையும் நாம் கூர்ந்து ஆராயும்போது ​​இங்கு ஞான நிஷ்டையே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறியலாம். ஏனெனில் ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி ஆகிய இரு நூற்பிரிவுகளும் ‘நைஷ்கர்ம்யம்’ எனப்படும் கர்மத்திலிருந்து விடுதலை பெறுவதையே உட்கருத்தாகக் கொண்டுள்ளது. ஒருவன் கர்மங்களுக்கு உட்பட்டிருக்கும்வரை, அவன் சம்சாரச் சுழலிலேயே சிக்கியிருப்பான். சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமாயின், அவன் அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபட வேண்டும். பகவத் கீதை ஒரு ‘மோக்ஷ சாஸ்திரம்’ என்றால், அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரு வழியை அது நிச்சயம் வழங்கியிருக்க வேண்டும். எல்லா கர்மங்களையும் அனுபவித்துத் தீர்ப்பதன் மூலம் அவற்றை முழுமையாக ஒழித்துவிடுவது இயலாத காரியம்; ஏனெனில் அக்கர்மங்கள் எண்ணற்றவை. அதுமட்டுமின்றி, ஒரு நொடியும் செயல் செய்யாமல் இருப்பது எவராலும் இயலாது — ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டதி அகர்மக்ருத், என கீதை கூறுகிறது. எனவே இதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது, ஞானத்தின் வாயிலாகவே செயல்களைத் துறத்தல். இதுவே ஞான-கர்ம-சந்யாசம் எனப்படும். ஆத்மா கர்த்தா(செயல் செய்பவன்) அல்ல; அது எந்த செயலின் கர்மப் பொருளும் அல்ல; மேலும், எந்த வகையிலும் எந்தச் செயலுடனும் அதற்குத் தொடர்பில்லை. அதுவே ஆத்மாவின் இயல்பு. ஆகையினால் அது இயற்கையாகவே அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபட்ட நிலையில் உள்ளது. ஆக, தான் எந்தச் செயலோடும் தொடர்பில்லாதவன் என்று உணர்வதே மோக்ஷம் அல்லது அகவிடுதலை என்று கூறப்படுகிறது. 

“என்னைச் சரணடைக” என்பதன் பொருள் என்ன? கிருஷ்ணர் பாதங்களில் சரணடைவதையா? சரணடைதல் என்பது ஆத்மாவாகிய ‘நான்’, இறைவனின் சொரூபத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டவன் அல்ல என்பதை அறிந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் ஆகும். ஆத்மாவிற்கும் இறைவனுக்கும் இடையே எவ்விதப் பிரிவும் இல்லை. உண்மையில் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை; மேலும் அந்த ஈஸ்வரன் ஆத்மாவிலிருந்து வேறானவன் அல்ல. இதையே வேதாந்தம் ‘தத் த்வம் அஸி — நீ அதுவாகவே இருக்கிறாய்’ எனும் மகாவாக்கியத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறது. அனைத்தின் இயல்பாக(ஸ்வரூப) இருப்பவரும், அனைத்தின் ஆத்மாவாகத் (ஸர்வாத்ம) திகழ்பவரும், அனைத்திலும் வியாபித்திருப்பவரும் (ஸர்வ-பூதஸ்த:), சமமானவரும் (ஸம), அழிவற்றவரும் (அச்யுத), பிறப்பு-இறப்பு முதலானவற்றிலிருந்து விடுபட்டவருமான அந்த ஈஸ்வரனிடம் சரணடைவது என்பது, அந்த ஈஸ்வரனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வதே ஆகும். ‘சரணடைதல்’ என்பதற்கு இந்த விளக்கத்தையே சங்கரர் அளிக்கிறார். உண்மையில் இது மட்டுமே தர்க்கரீதியாக சரியான பொருளாக இருக்கமுடியும்.

கிருஷ்ணர், ‘நான் உன்னை சகல பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன்’ என்று கூறுவதன் பொருள் என்ன? அனைத்து தர்மங்களையும் துறந்து, என்னை சரணடையும்போது உங்களின் அனைத்துப் பாபங்களிலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார், என்கிறாரா? கவலைப்படாது பாவச்செயல் புரியுங்கள், நான் பார்த்துக்கொள்ளுகிறேன் என்கிறாரா? இல்லை. இங்கு பாவம் என்பது முக்கியமாக தன்னைக் குறித்த அறியாமையையும், அதனால் உண்மைக்கும், மித்யாவுக்கும் இடையிலான விஷயங்களில் ஒருவனுக்கு ஏற்படுகின்ற மோகத்தையுமே குறிக்கிறது. என்னைச் சரணடையும்போது நான் அவற்றை நீக்குவேன். ஆகவே துயரப்படாதே என்கிறார். தன்னைக் குறித்த அறியாமையினால் மனதில் ஏற்படுகின்ற துயரத்திலிருந்து விடுபடுதலே உண்மையான அகவிடுதலை என்பதும், கீதையின் நோக்கமே ஒருவனைத் துயரத்திலிருந்து விடுவிப்பதுதான் என்பதும் கிருஷ்ணரின் இந்த உபசம்கார சுலோகத்திலிருந்து தெரியவருகிறது.

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

மேலே வேருள்ள அஸ்வத்தம்

Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.