பிறப்பினைக் கொண்டாடும் உலகம்

(தொடரும் முன்பு …… சிறிய விளக்கம்: இந்த உலகவாழ்வு ஒரு திருவிழா, கொண்டாட்டம்; நாம் எல்லாருமே வெவ்வேறு சமயங்களில் விருந்தாளிகளாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறோம் எனும் அடிப்படையில் எழுந்த சிந்தனைகள் இவை! தொடர்பான சிந்தனைகள், விளக்கமான வடிவங்களாக உருப்பெற்றுள்ளன; உலகை, வாழ்க்கையை, அதன் அதிசயங்களுடனும், குறைபாடுகளுடனும் எதிர்கொள்வோம்!!!)

மானிடர்கள் மட்டுமல்ல; எல்லா ஜீவராசிகளும் தமது இனம் அழிந்து விடாமலிருக்க இனவிருத்தி செய்வதனைத் தமது வாழ்வின் தலையாய கடமைகளுள் ஒன்றாகக் கொண்டுள்ளன. 

  தேனீக்களின் கூட்டில் ராணித் தேனி செய்யும் ஒரே வேலை முட்டைகளை ஈனுவது மட்டுமே. மற்றப் பணியாளர் தேனீக்கள் அவற்றை வளர்த்துப் பராமரிக்கும்.

தமது இனம் தொடர்ந்து இந்தப் பிரபஞ்சத்தில் நிலைபெற்றிருக்க, உயிரினங்கள் என்னென்ன வகைமுறைகளைக் கையாண்டு தமது குழந்தைகளைக் காக்கின்றன என்பது இயற்கையின் பேரதிசயம். கொடிய வெப்பத்தில் இருக்கும் சஹாரா பாலைவனத்தில் சாண்ட்க்ரௌஸ் (sandgrouse) எனும் பறவையினம் நீரே கிடைக்காத தொலைதூரத்தில் கூடுகட்டி தன் முட்டைகளைக் குஞ்சு பொரிக்கிறது. தந்தைப்பறவை பல (20) மைல்கள் பறந்து ஒரு நீர்நிலையை அடைந்து, தனது வயிற்றுப்பகுதிச் சிறகுகளை விரித்தபடி அந்நீரில் அமிழ்ந்து அவற்றில் அந்த நீரை அதற்கெனவே இருக்கும் அமைப்புகளில் உறிஞ்சித் தேக்கிக்கொண்டு, விடாமுயற்சியுடன் திரும்பப் பறந்து குஞ்சுகளை அடையும். குஞ்சுகளும் தந்தைப் பறவையின் வயிற்றினடியே அமர்ந்து போட்டிபோட்டுக்கொண்டு நீரை வேண்டியமட்டும் உறிஞ்சிக் கொள்ளும்! இயற்கை எப்படியெல்லாம் உயிரினங்கள் வாழ வகை செய்துவைத்துள்ளது என எண்ணிப் பார்த்தால் வாழ்வே ஒரு நீண்ட கொண்டாட்டம்தான்!

அடுத்த தலைமுறையில், மனித இனம் அழிந்து விடாதிருக்கத் தான் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் வெற்றிபெறும் போது மனிதனும் அதனைக் கொண்டாடுகிறான். கட்டாயம் கொண்டாட வேண்டும்! காலகாலங்களாக அவற்றைப் பல இலக்கியங்களில் பதிவு செய்தும் வைக்கிறான். 

நாம் பெரியாழ்வார் பாடல்களைக் கண்டு மகிழலாமே! நந்தகோபன் – யசோதைக்குப் புதியதாகப் பிறந்த குழந்தையைப் பார்க்கவந்து களிப்பவர்கள் பலர்! ‘இவன் தாயைப் போல இருக்கிறான்’; ‘தந்தையைப் போலக் கண்கள் கொண்டவன்’ எனப்பேசி மகிழ்கின்றனர்.

கோகுலத்தில் இப்போது எல்லார் வீடுகளிலும் கொண்டாட்டம். கோபிகள், இடையர்கள் அனைவரும் எண்ணெயையும் வண்ணப் பொடிகளையும் ஒருவர் மேல் ஒருவர் தூவி மகிழ்கின்றனர். இதனால் அந்த கோகுலத்தின் தலைவனான நந்தகோபன் வீட்டு முற்றம் சேறாகி விட்டது.

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே
(பெரியாழ்வார் திருமொழி-13)

முற்றம் சேறானால் கிருஷ்ணனைக் காண வருபவர்களும் ஓடியாடுபவர்களும் வழுக்கித்தானே விழ வேண்டும்? விழுகிறார்கள்; பின் எழுந்து, ‘எங்கே அந்தப்பிள்ளை?’ எனத் தாம் காண வந்த நீலக்கண்ணனைக் காணத் தேடிப் பரபரத்து ஓடுகின்றார்கள்; இவ்வாறு ஓடிப் பாடி ஆடுபவர்களால் நந்தகோபனின் திருமாளிகை நிரம்பி விட்டது!

இப்படி மகிழ்ச்சியடைந்தவர்கள் அவனுக்குப் பெயரும் சூட்டுகிறார்கள். ஆத்மாவிற்கு, அது குடிபுகுந்த தற்காலிகமான உடலெனும் உருவிற்குப் பெயர் சூட்டுவது எதற்கு என நாம் (அவர்கள்) சிந்திப்பதில்லை. இதுவே மாயை என்கிறது நாமறிந்த வேதாந்தம்! இங்கு இக்குழந்தைக்குக் ‘கிருஷ்ணன்’ எனும் பெயரைச் சூட்டுகிறார்கள். தற்காலத்தில் ‘நியூமராலஜி’ என்ன, குலதெய்வம் என்ன, குடும்பத்துப் பெரியோர்கள் பெயரென்ன என்று, தாம் விரும்பும் மற்றப் பெயர்கள் அனைத்தையும் தமது குழந்தைக்கு இட்டு மகிழ்வது உலக வழக்கு!! கிருஷ்ணன் எனும் பெயருக்கும் பல பொருத்தமான அர்த்தங்கள் உண்டு. 

இன்னும் பல ஹோமங்கள், வழிபாடுகள் இவற்றைச் செய்து பிறப்பைக் கொண்டாடுகிறோம். நாமாக, நமது எண்ணச் சிதறல்களின் விளைவாகக் கற்பித்துக்கொண்ட செயல்களைச் சம்பிரதாயமாக்கி, குழந்தைக்கு முடியிறக்குவது, கோவிலில் கொண்டு சென்று துலாபாரம் கொடுப்பது என்றெல்லாம் செய்கின்றோம். 

சில குடும்பங்களில் இன்னும் பலவிதமான சடங்குகளையும் செய்வார்கள் என்று பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தரின் பிறப்பினை வருணிக்கும் பாடல்களால் அறியலாம்.

பெரியவர்கள் குழந்தை பிறப்பினைக் கொண்டாட எண்ணெய் நீராடி மகிழ்வார்கள்; மங்கல ஒலிகள் முழங்க சாதகத்தை எழுதுகின்ற சடங்கினைச் செய்வார்கள்; மற்ற சடங்குகளையும் முறையாகச் செய்வார்கள்; நெல்லினைப் பரப்பி அதில் குழந்தையின் பெயரை எழுதுவார்கள்.

காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்;
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்;
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதகம் முறைப்பல சடங்குவினை செய்வார். (பெரியபுராணம்- சேக்கிழார்.)

நெல்முளைகள். முளைகள் நிரம்பிய பாலிகைகள் இவற்றைத் திண்ணையில் வைப்பார்கள்; நறுமண நீர் நிரம்பிய குடங்களை வரிசை வரிசையாக வைப்பார்கள். தங்கக்காசுகளை தானம் செய்வார்கள்; அடியார்களுக்குத் திருவமுது படைப்பார்கள்; வேப்பிலை முதலான காப்புகளை நீண்டநாட்கள் இருக்கும்படி கட்டி வைப்பார்கள். புண்ணியாகவசனம் எனும் சடங்கை நிகழ்த்திப் பெயர் வைப்பார்கள்; தொட்டிலில் குழந்தையை வளர்த்துவார்கள்.
இவையனைத்தும் கொண்டாட்டங்கள் தாமே; எந்நாளும் திருவிழாதான். குழந்தையின் பல வளர்ச்சிப் பருவங்கள் பிள்ளைத்தமிழால் கொண்டாடப்பட்டுள்ளன. இதனைப்பற்றி கீழே விரைவில் காண்போம்.

நெல்முளைகள். முளைகள் நிரம்பிய பாலிகைகள் இவற்றைத் திண்ணையில் வைப்பார்கள்; நறுமண நீர் நிரம்பிய குடங்களை வரிசை வரிசையாக வைப்பார்கள். தங்கக்காசுகளை தானம் செய்வார்கள்; அடியார்களுக்குத் திருவமுது படைப்பார்கள்; வேப்பிலை முதலான காப்புகளை நீண்டநாட்கள் இருக்கும்படி கட்டி வைப்பார்கள். புண்ணியாகவசனம் எனும் சடங்கை நிகழ்த்திப் பெயர் வைப்பார்கள்; தொட்டிலில் குழந்தையை வளர்த்துவார்கள்.

இவையனைத்தும் கொண்டாட்டங்கள் தாமே; எந்நாளும் திருவிழாதான். குழந்தையின் பல வளர்ச்சிப் பருவங்கள் பிள்ளைத்தமிழால் கொண்டாடப்பட்டுள்ளன. இதனைப்பற்றி கீழே விரைவில் காண்போம்.

தாலாட்டு

தனது கனவுகளின் வடிவமான செல்வக் குழந்தைக்குத் தாலாட்டுப்பாடி தாய் உறங்க வைக்கிறாள்.  தாய் – சேய் உளவியலில் இது மிக மிக முக்கியமான ஒரு செயல் எனக் கொள்ளப்படுகிறது. எவ்வாறெனில் தனது ஊனும் உயிருமான அக்குழந்தை உலகில் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும், தாயான தனது கனவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், நன்கு கல்விகற்று ஒழுக்கமானவனாக வாழவேண்டும், இப்படிப்பட்ட பலவிதமான ஆசைகள். ஆகவே இத்தகைய தாலாட்டுப் பாடல்கள் இலக்கியமாகவே உருவெடுத்தன எனில் ஆச்சரியம் கொள்ள ஒன்றுமேயில்லை அல்லவா?

ஆராரோ ஆரிவரோ – என்

கண்ணாரோ ஆரிவரோ! என்று பெரும்பாலும் அமைவன தாலாட்டுகள்.

‘ஆர் ஆரோ’ என்னும் ஒரு தொடர் மட்டுமே நமது வாழ்வியலின் பெருமையை, ஆழத்தை, பொருளைச் சிறப்பாக உரைக்கிறது. குழந்தையாக, பிள்ளையாக இப்போது பிறந்திருக்கும் இந்தச் சிசுவின் ஆன்மா எது? இது முன்பு எங்கிருந்தது? இதற்கும் இந்தத் தாய்க்கும் என்ன தொடர்பு? இந்த அன்னையின் வயிற்றில் ‘இது’ வந்து பிறந்த காரணம் என்ன? இப்படிப்பட்ட எண்ணங்களை இந்த ஆராரோ எனும் பாடலின் முதலிரு சொற்களே திசைதிருப்பி விடுகின்றன. இந்த ‘அது’ செய்த நன்மை தீமைகளின் பயனாக எங்கு, யாரிடம், எந்தத் தாயின் வயிற்றில் பிறக்க வேண்டும் என்பது நிச்சயிக்கப்படுகிறது.

தான் இந்தக் குழந்தைக்காக வேண்டி, நோற்ற நோன்புகளையும், செய்த தவங்களையும் சொல்லிப் பாடி மகிழ்கிறாள் தாய். அவளது அனுபவங்களும் பாடலாக விரிகின்றன.

கண்ணோ கமலப்பூ, கையிரண்டும் தாமரைப்பூ,
மேனி மகிழம்பூ, மெல்லிநல்லாள் சிற்றடியாள்
சிற்றடியாள் நானுனக்கு செய்ததவம் நீ கேளாய்
எட்டாத கோவிலுக்கு எட்டி விளக்கேற்றி
தூரத்துக் கோவிலுக்குத் தூண்டா விளக்கேற்றி நான்
திங்கள் முழுகி திருத்தணிக்குப் போகையிலே

பாடல் இவ்வாறு செல்கிறது! குழந்தைவரம் வேண்டி தாய் தீர்த்த யாத்திரை செல்கிறாள்; அதனைப் பெருமையாய்ப் பாடுகிறாள்.

ஆறிரண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கமாடித் திருப் பாற்கடலாடி
மதுரை நகராடி மாசிமகம் தானாடி
வரம்பெற்று வந்தவனே கண்வளராய்!

அப்பப்பா! எத்தனை கதைகள், ஆசைகள், வேண்டுதல்கள் இவற்றில் ஒலிக்கின்றன. 

மேற்கொண்டு செல்லுமுன் இன்னொன்று. இயற்கையின் படைப்பில் அத்தனை ஜீவராசிகளும் தங்கள் வம்சத்தைத் தழைக்க வைக்க அடுத்த தலைமுறையாகப் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதனை ஒரு கடமையாகவே கருதி, அதனின்றும் பிறழாமல் செவ்வனே செய்கின்றன. செய்ய வேண்டும். மானிடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!! 

தாய் – சேய் உளவியல் அடிப்படையில் தாயின் குரலைக் கேட்பதனால் அவளுடைய அருகாமையை உணர்ந்து கொள்கிறது அந்த ஓடியாட இயலாத சின்னஞ்சிறு குழந்தை. ஏணி, தூளி என்பது அக்காலத்தில் குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் தனது பழைய புடைவையால் உருவாக்கும் ஊஞ்சல் போன்ற சாதனம். தாயின் அருகாமையை இதனாலும், அந்தத் தொடு உணர்ச்சியினாலும், அவளுடைய வாசம் அதிலிருப்பதாலுமே அக்குழந்தை உணர்ந்துகொள்ளும்.

மொழி எனும் ஒன்று குழந்தைக்கு அறிமுகமாவது இந்தத் தாலாட்டுமூலம் தான். மொழியைப்பற்றி விரைவில் காண்போம். குழந்தைக்குப் புரியுமோ புரியாதோ, தாயும் மற்றோரும் அதனிடம் தங்கள் தாய்மொழியில்தான் இடைவிடாமல் பேசிய வண்ணம் உள்ளனர். ஆகவே, மொழியின் பரிச்சயம் இச்சிறு வயதிலேயே அதற்கு ஏற்பட்டு விடுகிறது.

இதைப் பற்றிப் பார்க்கப்புகுமுன் இன்னும் ஓரிரு செய்திகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மதாலஸா தாலாட்டு

அரசி மதாலஸா பேரழகி; அழகுக்கேற்ற அறிவும், குணமும், ஆன்மீக சிந்தனையும் நிரம்பியவள். அரசன் ரிதுத்வஜனின் மனைவியான அவள் தனது முதல் குழந்தை பிறந்ததும், அவனுக்குப் பெயர் சூட்டுவதனையே பொருளற்ற செயலாகக் கருதுகிறாள்: கணவனிடம் கூறுகிறாள்: “அழிவற்ற, பிறப்பற்ற ஆத்மா ஒரு உடலில் புகுந்து கொண்டுள்ளது. அதற்குப் பெயர் என்பது வேடிக்கையானது. எங்கும் நிறைந்து எதனையும் கடந்து நிற்கும் ஆத்மாவிற்குப் பெயர் எதன் பொருட்டு?”

தத்துவ, வேதாந்தக் கருத்துகள் நிறைந்த தாலாட்டைப்பாடிக் குழந்தையை உறங்க வைக்கிறாள். ‘நான் யார்?’ என உணர வைக்கும் தாலாட்டு.

“ஐம்பூதங்களால் ஆன உடலில் ஆத்மாவான நீ தற்காலிகமாகத் தங்கியிருக்கிறாய். இவ்வுடல், அதற்கான பெயர் எதுவும் உனக்கானதன்று. நிரந்தரமற்ற உடலில் நிரந்தரமான ஆன்மாவைத் தாங்கியவன் நீ! உடலின் தவறான அறிமுகங்களால் ஒருவன் தந்தை என்றோ, மகன் என்றோ, கணவனாகவோ சகோதரனாகவோ அல்லது யாரோ ஒருவனாகவோ அறியப்படுவான். அவை எல்லாம் மாயை. நீ அதில் மூழ்கி விடாதே!” 

இவளுடைய கடைசி மகனான அலார்கா ரகுவம்சத்தின் ஒப்பற்ற அரசனாகத் திகழ்ந்தான். “நான் யார்” எனத் தெரிந்துகொண்டுவிட்டால் அதுவே வாழ்வினை அறிந்து கொண்டதாகும் எனத் தெளிவாக உணர்த்துவது இந்தத் தாலாட்டு.

~o0o~

வளரும் பருவம் – பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ் என்பது தமிழுக்கே உரிய அருமையான இலக்கிய வடிவம். குழந்தைப் பருவத்தை,  தெய்வங்கள், அரசர்கள், பெரியோர்கள் இவர்களின் பெருமையை எடுத்துரைத்து, அவர்களுடைய குழந்தைப் பருவத்தைப் போற்றுவதாகக் கொண்டாடிப் பாடப்பட்ட சிற்றிலக்கியம். 

குழந்தைக்குக் காப்பிட்டு எல்லாக் கடவுள்களையும் அழைத்துக் காக்க வேண்டும் என வேண்டும் காப்புப்பருவம், குழந்தை கை கால்களால் தளதளவென்னும் கீரைப்பயிர் இளங்காற்றில் தலைசாய்த்து ஆடுவது போல ஆடித் தவழும் செங்கீரைப்பருவம், தூளியிலிட்டுத் தாய் பாடும் தாலாட்டினைக் கேட்டுத் துயில்கொள்ளும் தாலப்பருவம், குத்துவிளக்குப்போல அழகாக எழுந்து உட்கார்ந்து கைகளைக் கொட்டி மகிழும் சப்பாணிப் பருவம், தாயும் தந்தையும் குழந்தையைத் தமக்கு முத்தம் அளிக்க வேண்டிடும் முத்தப்பருவம், குழந்தையை நடக்க ஊக்குவித்து நடந்து தம்மிடம் வரவேண்டிடும் வருகைப்பருவம், அம்புலியைக் குழந்தையுடன் விளையாட அழைக்கும் அம்புலிப் பருவம், பெண்குழந்தையானால் அம்மானை எனும் விளையாட்டை விளையாட வேண்டிடும் அம்மானைப்பருவம், நீராட வேண்டும் நீராடல் பருவம், ஊசலில் ஏறி ஆடவேண்டிடும் ஊசல்பருவம், ஆண்குழந்தையானால், சிறுமியர் கட்டி விளையாடும் மண், மணல் வீடுகளைச் சிதைக்காதே என வேண்டும் சிற்றில் பருவம், சிறிய ஒரு பறையைக் கையிலேந்தி முழக்கியபடி சுற்றிவரும் சிறுபறைப்பருவம், சிறியதொரு தேரினை (தற்காலத்து வாகன பொம்மைகள் முதலியன) இழுத்துச் செல்லும் சிறுதேர்ப்பருவம் என பத்தோ, பத்துக்கும் மேபட்ட பருவங்களாலோ இயற்றப்படும் சிற்றிலக்கியம் இது.

இதிலிருந்து ஓரிரு பாடல்களைக் காணாமல் தமிழ் உள்ளங்கள் களிகொள்ளாது. 

முருகப்பெருமான் மீதான குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழிலிருந்து பல பருவங்களிலும் குழந்தை செய்யும் செயல்கள் அனைத்தும் வருமாறு அமைந்த சிற்றில் பருவப்பாடல்; இது தெய்வக்குழந்தையை குழந்தையாக மட்டுமே கண்டு பாடியது எனலாம்.

ஏழெட்டுச் சிறுமியர்; தமது வழக்கமான சிற்றில் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆற்றங்கரையில் மணலால் அழகான சிறிய வீட்டைக் கட்டுகிறாள் ஒரு சிறுமி; மலர்களாலும் கிளிஞ்சல்களாலும் சோடனைசெய்கிறாள் இன்னொரு சிறுமி.  பக்கத்தில் அழகான பள்ளம் ஒன்றினைத் தோண்டி, அதில் நீரைநிரப்பித் தாமரைக்குளம் அமைத்துவிட்டாள் வேறொருத்தி. ஓடோடிச்சென்று பக்கத்துக்குளத்திலிருந்து மலர்ந்த தாமரைமலர்கள் இரண்டினைப் பறித்துவந்து அதில் மிதக்கவும் விட்டுக்களிக்கிறாள். எல்லாரும் தாமிழைத்த இச்சிறு வீட்டைச் சுற்றிநின்று பாடிக்களிக்கிறார்கள்: கைகொட்டி ஆடுகிறார்கள்!

திடீரென்று ஓடோடி வருகிறான் ஒரு குறும்புக்காரச்சிறுவன். உயர்ந்து எழும்பி இவர்கள் சிற்றிலைச்சிதைக்கக் காலைத்தூக்கியபடி தாவுகிறான். எல்லாரிலும் பெரியவளான ஒரு பெண் பின்புறத்திலிருந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் தாவுவதைத் தடுத்துவிடுகிறாள்.

மற்ற சிறுமிகளுக்கெல்லாம் ஒரே ஆத்திரம். அவனை அடிக்காத குறைதான். அவனோ பெரிய இடத்துக்குழந்தை. வயதிலும் மிகச்சிறியவன். ஐந்தே பிராயம் நிரம்பியவன். அதனால்தான் யோசிக்கிறார்கள். சிலகணங்களில் அவர்கள் அழகான சிற்றில் சிதைந்திருக்குமே! காலையிலிருந்து  முதுகெல்லாம் நோகும்படி, மணலைக் கொழித்துப் பார்த்துப்பார்த்து அமைத்த சிற்றிலல்லவோ? 

அவன் சிவனின் குமாரன். அன்னை பராசக்தியின் மைந்தன்; தகப்பன் சாமி!! அவர்கள் அவனிடம் கேட்கிறார்கள்:

“உன்தாய் தவம்செய்து உன்னைப் பெற்றெடுத்தாள் குமரா! எல்லாக் கடவுள்களையும் அழைத்துக் காப்பிட்டு உன்னைத் தொட்டிலில் கண்வளர்த்தினாள்.  நீ தவழ்ந்து உன் திருமுகத்தை நிமிர்த்திச் செங்கீரை மொழிவதனைக்கேட்டும், ஆடுவதனைக்கண்டும் இன்புற்றாள். தாலாட்டுப்பாடி உறங்கவைத்தாள். பின் நீ எழுந்து உட்கார்ந்த பருவத்தில் உன்னை இருகரங்களையும் குவித்துச் சப்பாணி கொட்டவைத்தாள்; உன் சிவந்த கன்னங்களில் முத்தமிட்டும் மகிழ்ந்தாள். நீ நடைபழகும் காலத்தில், “அப்பா வா,” என உன்னை அழைத்து, கொஞ்சிக்குலாவி மகிழ்ந்து எடுத்து அணைத்துக்கொண்டாள். உனக்கென்ன குறைவைத்தாள்? 

“பின்னர் அந்திப்பொழுதில் வானில் உலாவரும் அம்புலியைக் காட்டிச் சோறும் ஊட்டினாள். நீ சிறிது வளர்ந்து பெரியவனானதும், வெளியே வீதியில்போய் விளையாடி வா அப்பா என்று உன்னை அனுப்பிவைத்து விட்டாள். உன் குறும்புப்புத்தியை அவளறியாது இருப்பாளா என்ன? இவ்வாறு எங்கள் சிற்றிலைச் சிதைக்க நீ முயன்றதனால் உன்னை எதற்காகக் குறைகூறுவது? இவ்வாறு உன்னை வளர்த்த தாயையல்லவோ நாங்கள் நொந்துகொள்ள வேண்டும்? இப்போதாவது கூறுகிறோம். அவள் அன்னை பராசக்தி; அவளிடம் ‘பிள்ளையை வளர்த்த அழகைப்பார்,’ என்று குறைகூறுதல் நன்றாகவா இருக்கும்? குறுக்குத்துறை எனும் இவ்வூரில் வாழும் நிமலனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என வேண்டுகின்றனர்.

முந்தித் தவமே புரிந்துன்னை
முயன்று பெற்றுக் காப்பாற்றி
முகமே தூக்கிச் செங்கீரை
மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
குந்திக் கரத்தால் சப்பாணி
கொட்டச் செய்து முத்தமிட்டுக்
கூவியழைத்து வருகவெனக்
கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
அந்திப் பொழுதைக் கடந்துவரும்
அம்பு லிகாட்டிப் பின்னருனை
ஆடி நீவா எனமறுகில்
அனுப்புந் தாயர் தமைவிடுத்து
நொந்திங் குன்னைக் குறைகூறல்
நேர்மை யாமோ உணர்ந்திதனை
நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
நிமலா சிற்றில் சிதையேலே
(குந்தி- அமர்ந்து; மறுகில்- வீதியில்)

(குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் – வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழல் சிறு பெண்குழந்தைகள் பாவைகளை (பொம்மை) வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டை பிரபஞ்ச தத்துவத்துடன் பொருத்திக் காட்டும் பாடல். 

ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழ்கின்ற ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் மீன், ஆமை முதலிய ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் உலகின் தாயான பராசக்தி அப்பாவைகளைச் செய்கிறாளாம். பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.

எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன.

சிறுகுழந்தைகளின் விளையாட்டும்கூட, இந்தப் பிரபஞ்சத்தில் இயங்கும் வழிமுறைகளிலேயே நடைபெறுகிறது என உணர்ந்துகொள்ளலாம்.

வல்ல தெய்வப் பாவை மானிடப்
பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
மருவு பறவைப் பாவையும்
ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
பாவையும் உறும் தாவரப் பாவையும்
ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
எல்லவே சாக்கிரம் கனவொடு
சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
எண்பத்து நாலுலக்கத்தான கொள்கையினில்
எண்ணிறந்திடும் கோலமும்
பல்லுயிர்ப் பாவை விளையாடு நற்
பூவையே பாவை விளையாடி அருளே!
பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
பொற்பாவை விளையாடி அருளே!

(தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் – நல்லதுக்குடி கிருட்டிணையர்)

எல்லா ஆத்மாக்களும் ஒரு பிறவியில் தாம்செய்த நன்மை தீமைகளுக்கேற்ப அடுத்தமுறை வெவ்வேறு உடல்களைப் பெறுகின்றன என்பது உட்கருத்து. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதன் பொருள் இதுதான்!

பெரும் செய்தி ஒன்று இந்தக் கொண்டாட்டங்களின் மையமாக விளங்குகிறது. தெய்வ வழிபாடு என்பது. எல்லா நாடுகளிலும், எல்லா இனத்தவரிலும், எல்லா உயிரினங்களிலும் அன்றாட நிகழ்ச்சிகளுக்குள் ஊடாடிக் கிடப்பது இந்த தெய்வ வழிபாடு. இதனை இயற்கையின் வழிபாடாகவும் கொள்ளலாம். தெய்வ வழிபாடு என்பது என்ன?

‘நானே அது’ என்று உணர்ந்து கொள்ளும் நிலை; சுலபமாக அடையக்கூடியது அல்ல. ஆழ்ந்த தேடுதல் மூலம் அடையக் கூடியது. நம்மிடையே வாழ்ந்து மறைந்த பகவான் ரமணர் இந்நிலையை அடைந்தவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தனிமையை விரும்புபவர்களால் மட்டுமே பெரும் இலக்கியப்படைப்போ அறிவியல் கண்டுபிடிப்போ நிகழ்த்தப்படுகிறது என்கின்றனர் அறிஞர்கள்.

பகவத்கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான்: “சாதனையாளன் என்பவன் உள்முகமான சிந்தனையில் தனிமையில் இருந்து, உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து, ஆசைகளையும், தன்னைப் பற்றிய எண்ணங்களையும் மறக்க வேண்டும்.” உபநிஷதங்களும் இதனையே வெவ்வேறு விதமாகக் கூறுகின்றன.

அறிவியலால் பருப்பொருளாக இல்லாத ஒன்றினை ஆராய இயலாது. ஆகவே படைத்தவன் ‘ஒருவன்’ என்று நிலைநிறுத்தாமல் ‘பெரு வெடிப்புக் கோட்பாட்டினை’ (The Big Bang Theory) பிரபஞ்சத்தின் தொடக்கமாக அறிவியல் கூறுகிறது. தன்னால் இனம் கண்டுகொள்ள முடியாத இடி, மழை, மின்னல், வியாதிகள், பிறப்பு, இறப்பு ஆகியவற்றை தன்னையும் மிஞ்சிய ஆற்றல்கொண்ட ‘ஏதோ ஒன்று’ உண்டுபண்ணுகிறது, அந்தக் ‘கண்ணால் காணமுடியாத சக்தி ஒன்றே கடவுள்’ என அமைத்துக்கொண்டது மானிட சமுதாயம். மனித இனங்கள் கூட்டங்களாக வாழ்வதனைத் தொடங்கியதும் சில நடைமுறைக் கட்டுப்பாடுகளை அமைத்துக்கொண்டு நன்மை தீமைகளுக்கு இந்த இயற்கைச் சீற்றங்களையும், செயல்களையும் காரணகர்த்தராக்கி தலைமுறைகளுக்கு அவற்றைப் போதித்து வளர்த்தன.

Stephen Jay Gould என்னும் பிரபல எழுத்தாளர் கூறுவார்: அறிவியலானது உண்மைகளையும் கோட்பாடுகளையும் கூறுகிறது; மதம் (கடவுள் சார்ந்த எண்ணங்கள்) என்பது வெவ்வேறு ஒழுக்கங்களையும் அவற்றின் நடைமுறைச் செயல்பாடுகளையும் விவரிக்கிறது. அவை தனித்தனியாக நிற்கும் கோட்பாடுகளாதலால் அவை ஒன்றோடொன்று முரண்படுவதில்லை. இதனையே Non-Overlapping Magisteria (NOMA) என அவர் விவரித்தார்.

இவை தொடர்பான ஆராய்ச்சிகளும், எண்ணங்களும் விவாதங்களும் இன்னுமே தொடர்ந்துகொண்டுதான் உள்ளன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் தனிமனித உரிமைகள்.

நாம் இதனின்றும் பெறுவது என்னவென்றால் உலகில் கொண்டாட்டங்கள் பல, மதங்கள், கடவுள்கள் தொடர்பாகவும் நிகழ்கின்றன. அறிந்தோ, அறியாமலோ, நாம் அவற்றில் ஆர்வத்துடன் பங்கெடுக்கிறோம். புது வருடக் கொண்டாட்டம், அறுவடைப் பண்டிகை (பொங்கல், Thanks giving) வெவ்வேறு கடவுள்களின் பிறந்த நாட்கள் (விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜன்மாஷ்டமி, கிறிஸ்துமஸ்), மானிடம் அரக்கர்களிடமிருந்து காக்கப்பட்ட விழாவான நவராத்திரி, தீபாவளி இன்னபிற. 

உலகில் பிறந்து வாழ்வதன் பயன் இது எனலாமா?

மொழி

இந்த மானிட உலகில் நாம் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இன்றியமையாதது மொழியே! விரைவில் இதனைப் பற்றிக் காண்போம்.

(தொடர்ந்து காண்போம்)


Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.